தேங்கிக்கிடக்கும் கார்கள் ! வேலையிழக்கும் தொழிலாளர்கள் ! காரணம் என்ன ?

வாகனச் சந்தை எதிர் கொள்ளும் நெருக்கடி, பிற தொழில்களுக்கும் மெல்ல மெல்ல பரவி ஒரு பெரும் பொருளாதார நெருக்கடியை நோக்கி இந்தியா மெல்ல மெல்ல நகர்ந்து வருகின்றது.

0

ந்திய மோட்டார் வாகனச் சந்தை கடும் தேக்கத்தை எதிர்நோக்கி உள்ளது. வாகனச் சந்தை எதிர் கொள்ளும் நெருக்கடி, பிற தொழில்களுக்கும் மெல்ல மெல்ல பரவி ஒரு பெரும் பொருளாதார நெருக்கடியை நோக்கி இந்தியா மெல்ல மெல்ல நகர்ந்து வருகின்றது. இதன் விளைவாக உற்பத்தி நிறுத்தம்  உள்ளிட்ட நடவடிக்கைகளை நிறுவனங்கள் மேற்கொண்டு வருவதால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பைச் சந்தித்து வருகின்றனர். உற்பத்தி ஆலைகளில் நடந்து வரும் வேலையிழப்புகளை விட, உதிரி பாகங்களைத் தயாரிக்கும் சிறு பட்டறைகளில் ஏற்பட்டு வரும் வேலை இழப்பு பன்மடங்கு அதிகம். சில இலட்சம் வேலைகளை இப்போதைய பொருளாதார காவு வாங்கியுள்ளது.

நெருங்கி வரும் பொருளாதார நெருக்கடிக்கு மோட்டார் வாகனச் சீர்திருத்தங்களில் துவங்கி இதர எண்ணற்ற காரணங்களை முதலாளிய பொருளாதார அறிஞர்கள் பட்டியலிட்டு வருகின்றனர். தி வயர் இணைய தளத்தில் வெளியாகி உள்ள இந்தக் கட்டுரை வேறு ஒரு கோணத்தை முன் வைக்கிறது.

”கார்கள் தாமாக விற்றுப் போவதில்லை; அவற்றுக்கு கிடைத்து வந்த கடனுதவி தான் கார்களை விற்றது” என்கிறார் மும்பையைச் சேர்ந்த மாருதி கார் விற்பனை நிறுவனத்தில் பணிபுரியும் மூத்த சந்தை மேலாளரான ஆர்.விஜயராகவன். மேலும், “இன்றைய நிலையில் கடனுதவி கிடைப்பதில் சிக்கல் என்பதால் தான் கார்களும் விற்பனை ஆவதில்லை” என்கிறார். அதே நிறுவனத்தின் பொது மேலாளர் கார்புரே, “முன்பெல்லாம் ஒவ்வொரு நாளும் 15-ல் இருந்து 20 கார்கள் விற்பனை ஆகும். இப்போதெல்லாம் 3-ல் இருந்து 5 கார்கள் விற்றாலே பெரிய விசயமாக இருக்கிறது” என்கிறார்.

இது அந்த குறிப்பிட்ட விற்பனை நிறுவனத்தின் பிரச்சினை மட்டுமல்ல. இந்தியா முழுவதும் கடந்த மே மாதம் கார்கள் விற்பனையில் 20.55 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த எட்டு மாதங்களாக நீடிக்கும் இந்த விற்பனைத் தேக்கம் சுமார் 19 ஆண்டுகளில் காணாத ஒரு சூழலாகும். கடந்த ஜூலை மாதம் ஏறத்தாழ 30 சதவீத அளவுக்கு விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பூர்வாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஒருபுறம் இந்தியச் சந்தையின் வீழ்ச்சி என்றால் இன்னொரு புறம் சீனச் சந்தையும் வீழ்ச்சியில் உள்ளது. மற்றொருபுறம் கடுமையான புகை உமிழ்வு கட்டுப்பாடுகளால் மின்வாகனங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நெருக்கடி. ஏற்கெனவே பெட்ரோலிய பொருட்களில் இயங்கும் வாகனங்களை உற்பத்தி செய்து வரும் நிறுவனங்கள் மின்வாகன உற்பத்தியில் ஈடுபட அதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும். இதற்கு நிறைய செலவிடவும் வேண்டும் – எனினும், விற்பனை வீழ்ச்சியின் விளைவாக அவ்வாறான ஆராய்ச்சிப் பணிகளும் மந்தகதியிலேயே நடந்து வருகின்றன.

சீனாவின் வாகனச் சந்தையின் தேக்கத்திற்கு காரணமாக கடுமையாக்கப்பட்டுள்ள புகை உமிழ்வு கட்டுப்பாட்டு சட்டங்களையே பெரும்பாலான சந்தை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்தியாவில் அதோடு சேர்த்து வேறு சில காரணிகளும் உள்ளன. இந்திய நுகர்பொருள் சந்தை 2016-ம் ஆண்டு மோடி அறிவித்த இழிபுகழ் பெற்ற பணமதிப்பழிப்பு நடவடிக்கையில் துவங்கி வீழ்ச்சிப் பாதையில் நுழைந்தது. அதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட புதிய சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டி. இந்தியப் பொருளாதாரத்தை சவப்பெட்டியினுள் கிடத்தி அதன் மேல் மூடியைச் சாத்தியது.

இதைத் தொடர்ந்து விவசாயப் பொருளாதாரத்தின் வீழ்ச்சி ஊரகப்பகுதிகளில் ஒரு நெருக்கடியைத் தோற்றுவித்தது. இறுதியாக வங்கியில்லா நிதிநிறுவனங்களின் வீழ்ச்சி, சவப்பெட்டியின் கடைசி ஆணியை அடித்து இறக்கியுள்ளது. வங்கியல்லாத நிதிநிறுவனங்களிலேயே மிக முக்கியமானது ஐ.எல். & எப்.எஸ். இந்நிறுவனம் தான் அரசு மற்றும் தனியார் கார்ப்பரேட்டுகளின் பல்வேறு உள்கட்டுமானத் திட்டங்களுக்கு நிதி உதவி செய்து வந்தது. ஐ.எல். & எஃப்.எஸ். வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து வீட்டுக்கடன் வழங்கி வந்த டி.ஹெச்.எப்.எல். செய்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.  டி.ஹெச்.எப்.எல். செய்த மோசடி ஊடகங்களில் பரபரப்பான விவாதப் பொருளான நிலையில் வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் கணக்கு விவரங்களைக் கேட்டு மத்திய ரிசர்வ் வங்கி நெருக்கடி கொடுத்தது.

ஒருபுறம் தமது கணக்குப் புத்தகங்களை உடனடியாக “சுத்தமாக்க” வேண்டிய கட்டாயமும் இன்னொரு புறம் பணமதிப்பழிப்பு நடவடிக்கையில் துவங்கி மோடி அரசு பொருளாதாரத்தின் மீது நடத்திய “சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்குகளால்” ஏற்பட்டு வந்த பணப்புழக்கமின்மையும் (liquidity crisis) வங்கியல்லாத நிதிநிறுவனங்களை நெருக்கிப் பிடித்தன. எனவே, இந்நிறுவனங்கள் தமது கடன் கொடுக்கும் ”வெறியை” கட்டுக்குள் கொண்டு வர வேண்டிய கட்டாயம் உருவானது.

இந்தியாவில் விற்பனையாகும் வர்த்தக கார்களில் (மஞ்சள் போர்டு) சுமார் 55-60 சதவீதம் வங்கியல்லாத நிதிநிறுனவங்களின் கடனுதவி வழங்கி வந்தன. அதே போல் தனியார் நுகர்வோர்களுக்கான கார்களில் (வெள்ளை போர்டு) 30 சதவீதமும், இரு சக்கர வாகனங்களில் 65 சதவீதத்திற்கும் வங்கியல்லாத நிதிநிறுவனங்களே நிதி உதவி செய்து வந்தன.

உற்பத்தியான கார்கள் தேங்கி நிற்பதால் ஏற்படும் பராமரிப்பு செலவுகளைக் கட்டுப்படுத்த மாருதி, டாடா, ஹூண்டாய், மகிந்திரா போன்ற நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்துள்ளன. ஒரு சில நிறுவனங்கள் சில உற்பத்தி ஆலைகளையே மூடி விடுவது என்கிற முடிவை நோக்கிச் சென்று கொண்டுள்ளன.

வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன்கள் பாதிக்கும் மேல் குறைந்துள்ள நிலையில் வங்கிகளோ தங்களது கணக்குப் புத்தகங்களை “சுத்தமாக” வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் கடன் பெறும் நுகர்வோரை முடிந்த வரை சலித்து கழித்துக் கட்டுகின்றன. இதன் விளைவாக புதிதாக வாகனங்கள் வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

படிக்க:
காஷ்மீர் துண்டாடப்பட்ட நாளின் முதல் பலி – 17 வயது சிறுவன் !
வாகன விற்பனையில் மந்த நிலை :  32000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் !

இந்த சூழல் எப்போது விடியும் என பல்வேறு முதலாளிய சந்தை நிபுணர்களும் வெவ்வேறு விதமான ஆருடங்களைச் சொல்லி வருகின்றனர். ஆனால், சிக்கல் என்னவென்றால் இந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பு அதன் அடித்தளத்தில் இருந்தே ஆட்டம் கண்டுள்ளது என்பது தான். இதைத் தீர்ப்பதற்கான யோசனையோ விருப்பமோ ஆட்சியாளர்களுக்கு இல்லை என்பதால் கூடிய விரையில் விடிவு ஏற்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தனது சமீபத்திய ட்வீட் ஒன்றில் ராகுல் காந்தி இவ்வாறாக கூறியிருந்தார் “தூரத்தில் தெரிவது வெளிச்சப் புள்ளியல்ல – அது வெகு வேகமாக நெருங்கி வரும் பொருளாதார நெருக்கடி என்கிற ட்ரெயினின் முக விளக்கு” – அரிதான சந்தர்ப்பங்களில் காங்கிரசுப் பெருச்சாளிகளும் உண்மையைப் பேசி விடுகின்றனர்.

வினவு செய்திப் பிரிவு
சாக்கியன்
மேலும் வாசிக்க : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க