மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லீஸிங் அண்ட் ஃபைனான்சியல் சர்வீசஸ் (ஐ.எல்.எஃப்.எஸ்.) என்ற தனியார் கார்ப்பரேட் நிறுவனம் திவாலாகக்கூடிய நிலையில் இருக்கும் உண்மை அம்பலமானதையடுத்து, செப்டம்பர் மாத இறுதியில் மும்பய்ப் பங்குச் சந்தையும் தேசியப் பங்குச் சந்தையும் சரிவைச் சந்தித்தன.

“வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை (Non Banking Financial Companies) நாங்கள் கைவிடமாட்டோம்” என மைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வாக்குறுதி அளித்த பிறகுதான், அப்பங்குச் சந்தைகளில் படுத்த வியாபாரம் சற்றே நிமிர்ந்தது.

ஐ.எல். அண்ட் எஃப்.எஸ். தலைமையகம் : பளபளப்பின் பின்னே மறைந்திருக்கும் மோசடிகள்.

இந்தியாவில் ஐ.எல்.எஃப்.எஸ். போன்று 11,174 வங்கி சாராத நிதி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அவற்றுள் ஒரேயொரு நிறுவனம் திவாலாகப் போகிறது என்ற செய்தி வெளிவந்தவுடன் பங்குச் சந்தை ஏன் சரிவடைகிறது? நிதியமைச்சர் அருண் ஜெட்லி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களையும் பங்குச் சந்தையையும் கைதூக்கிவிட ஏன் துடிக்கிறார்?

ஐ.எல்.எஃப்.எஸ். உள்ளிட்ட பல்வேறு வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்குப் பொதுத்துறை வங்கிகள் மட்டும் 4,73,500 கோடி ரூபாயைக் கடனாகக் கொடுத்திருக்கின்றன. இதில் ஐ.எல்.எஃப்.எஸ்.-இன் பங்கு மட்டும் 40,000 கோடி ரூபாய். ஐ.எல்.எஃப்.எஸ்.- ஐத் திவாலாக அனுமதித்தால், அது தனியொரு நிறுவனத்தின் சரிவாக இருக்காது, இருக்கவும் போவதில்லை. அந்நிறுவனத்திற்குக் கடன் கொடுத்த பொதுத்துறை வங்கிகள் மற்றும் அந்நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் எல்.ஐ.சி., உள்ளிட்ட காப்பீடு நிறுவனங்கள், ஓய்வூதிய மற்றும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் அனைத்தும் நட்டம் என்ற கருந்துளைக்குள் புதைந்து போகும்; ஐ.எல்.எஃப்.எஸ். போன்ற மற்ற மிகப்பெரிய நிதி நிறுவனங்களின் யோக்கியதையும் அம்பலப்பட்டு போகும் என அஞ்சுவதால்தான், அதனைக் காப்பாற்றிவிடத் துடிக்கிறது, மோடி அரசு.

‘‘அமெரிக்க நிதி நிறுவனமான லேமேன் பிரதர்ஸின் வீழ்ச்சி உலகப் பொருளாதார நெருக்கடியின் தொடக்கப் புள்ளியாக அமைந்ததைப் போல, ஐ.எல்.எஃப்.எஸ். – இன் வீழ்ச்சி இந்தியப் பொருளாதாரத்திற்கு அமையக் கூடும்” என ஒப்பிடுகிறார், பொருளாதாரப் பத்திரிகையாளர் ஆண்டி முகர்ஜி.

ஐ.எல்.எஃப்.எஸ். – இன் வீக்கத்தையும், வீழ்ச்சியையும் அறிந்தவர்களுக்கு இந்த ஒப்பீடு அதிர்ச்சி அளிப்பதாக அமையாது. மேலும், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் திறமை, நேர்மை, நிபுணத்துவம் பற்றிப் பொதுவெளியில் சிலாகித்துப் பேசப்படுவதெல்லாம் வெறும் கட்டுக்கதைகள் என்பதையும் அம்பலப்படுத்துகிறது, ஐ.எல்.எஃப்.எஸ். – இன் வீழ்ச்சி.

*****

ந்தியாவில் தனியார்மயம் – தாராளமயத்தின் தொடக்கமும், ஐ.எல்.எஃப்.எஸ். நிறுவப்பட்டதும் ஏறத்தாழ ஒரே சமயத்தில் நடந்தன. சாலைகள், துறைமுகங்கள், மேம்பாலங்கள், மின்சாரக் கட்டமைப்பு, தொலைத் தொடர்பு, சுரங்கங்கள் உள்ளிட்ட அடிக்கட்டுமான திட்டங்களில் முதலீடு செய்வதுதான் இந்த நிறுவனத்தின் வர்த்தகக் கொள்கை.

ஐ.எல்.எஃப்.எஸ். தனியார் நிறுவனம் என்றபோதும், இந்த நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரர் எல்.ஐ.சி.தான். ஐ.எல்.எஃப்.எஸ். – இன் 25.34 சதவீதப் பங்குகளை எல்.ஐ.சி. வைத்திருக்கிறது. எல்.ஐ.சி.யைத் தொடர்ந்து ஜப்பானைச் சேர்ந்த ஓரிக்ஸ் கார்ப்பரேஷன் 23.54 சதவீதப் பங்குகளையும், அபுதாபி நிதி ஆணையம் 12.56 சதவீதப் பங்குகளையும் ஹெச்.டி.எஃப்.சி., சென்ட்ரல் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆகியவை முறையே 9.02, 7.67, 6.42 சதவீதப் பங்குகளையும் வைத்திருக்கின்றன.

இந்நிறுவனத்தின் மூலதனத்தை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அளித்திருந்தாலும், திட்டங்களில் முதலீடு செய்வதற்கான நிதியைப் பொதுத்துறை வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள், பரஸ்பர நிதி நிறுவனங்கள், ஓய்வூதிய நிறுவனங்கள் ஆகியவற்றிடமிருந்துதான் கடனாகப் பெற்றிருக்கிறது. இந்த வகையில், கடந்த மார்ச் 2018 நிலவரப்படி ஐ.எல்.எஃப்.எஸ். நிறுவனத்தின் மொத்த கடன் பாக்கி 1,250 கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாயில் தோராயமாக 91,000 கோடி).

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தனியொரு நிறுவனமாகத் தொடங்கப்பட்ட ஐ.எல்.எஃப்.எஸ்., இன்று 23 நேரடி சார்பு நிறுவனங்கள், 141 மறைமுக சார்பு நிறுவனங்கள், ஆறு கூட்டு நிறுவனங்கள், நான்கு இணை நிறுவனங்களைக் கொண்ட கார்ப்பரேட் குழுமமாக வளர்ந்திருக்கிறது. இந்தப் பிரம்மாண்டமான வளர்ச்சியைக் காட்டியே, வீழ்ச்சியைச் சந்திக்க வாய்ப்பில்லாத நிறுவனமாக (too big to fail) ஐ.எல்.எஃப்.எஸ்.இன் தரம் (rating) நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது.

நிலம் மற்றும் கனிம வளங்களை அடிமாட்டு விலைக்கு கார்ப்பரேட் முதலாளிகள் அபகரித்துக் கொள்ளவும்; வங்கி, காப்பீடு மற்றும் ஓய்வூதிய நிறுவனங்களில் சேமிப்பாக இருக்கும் பொதுமக்களின் பணத்தை கார்ப்பரேட் முதலாளிகள் கடன் என்ற பெயரில் சூறையாடவும் அளிக்கப்பட்ட தாராள அனுமதிதான் 2004-க்கும் 2008-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் எட்டு சதவீத வளர்ச்சியை எட்டிப்பிடிக்க முடிந்ததற்குக் காரணம். ஐ.எல்.எஃப்.எஸ்.-இன் வளர்ச்சிக்கும் இவைதான் – இந்தக் கொள்ளையும் சூறையாடலும்தான் காரணம்.

ஐ.எல்.எஃப்.எஸ். பகற்கொள்ளையடிப்பதில் எந்தளவிற்கு இரக்கமற்ற நிறுவனம் என்பதற்கு ஒரேயொரு உதாரணம், டெல்லி – நொய்டா விரைவுச் சாலை. இச்சாலையில் சுங்கக் கட்டணம் என்ற பெயரில் வழிப்பறியை நடத்தி வந்தது ஐ.எல்.எஃப்.எஸ். இந்த அநியாய கட்டணக் கொள்ளைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், இந்தச் சாலையைச் சுங்கக் கட்டணமில்லா சாலையாக அறிவித்தது, உச்ச நீதிமன்றம்.

ஐ.எல்.எஃப்.எஸ். நிறுவனத்தின் பகற்கொள்ளைக்கு உதாரணமான டெல்லி-நொய்டா விரைவுச்சாலை (கோப்புப் படம்)

தனியார்மயத்தை ஆதரிக்கத் தயங்காத உச்ச நீதிமன்ற நீதிபதிகளாலேயே ஐ.எல்.எஃப்.எஸ்.-இன் அடாவடித்தனத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றால், ஐ.எல்.எஃப்.எஸ். எந்தளவிற்கு அச்சாலையைப் பயன்படுத்தும் பொதுமக்களைக் கொள்ளையடித்திருக்கும் என்பதை வாசகர்களின் கற்பனைக்கே விட்டுவிடுவோம்.

வளர்ச்சி, வளர்ச்சி என மெச்சிக் கொள்ளப்பட்ட இந்த வீக்கம் 2008-க்குப் பின் உடைந்து போனதையடுத்து, ஐ.எல்.எஃப்.எஸ்.-ம் சரியத் தொடங்கியது. ஆனாலும், கடந்த செப்டம்பர் மாதம் வரை தன்னை மீசையில் மண் ஒட்டாத வீரனாகவே நிதிச் சந்தையில் காட்டி வந்தது, ஐ.எல்.எஃப்.எஸ். குறிப்பாக, நட்டமனைத்தையும் சார்பு நிறுவனங்கள் மற்றும் துணை நிறுவனங்களில் வரவு-செலவு அறிக்கையில் காட்டிவிட்டு, இலாபத்தைத் தாய் நிறுவனத்தின் வரவு-செலவு அறிக்கையில் காட்டும் மோசடியை நடத்தி வந்தது. இம்மோசடிக்கு ஐ.சி.ஆர்.ஏ., கேர் ரேட்டிங்ஸ் ஆகிய இந்தியத் தர நிர்ணய நிறுவனங்களும் ஒத்தூதி, கடந்த செப்டம்பருக்கு முன்பு வரை அதனின் நிதி நிலை நன்றாக இருப்பதைக் குறிக்கும் “ஏஏஏ” தரச் சான்றிதழை ஐ.எல். எஃப்.எஸ்.-க்கு வழங்கி வந்தன.

ஐ.எல். எஃப்.எஸ். நிறுவனத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்திருக்க வேண்டிய ரிசர்வ் வங்கியோ, ஐ.எல். எஃப்.எஸ். – ஐ இந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பின் முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாகவே மெச்சி வந்தது.

எனினும், இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கியிடமிருந்து பெற்றிருந்த 1,000 கோடி ரூபாய் பெறுமான கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவணை கேட்ட பின், ஐ.எல்.எஃப்.எஸ்.-ஐ ஜாக்கி கொடுத்துத் தூக்கி நிறுத்தும் மோசடியைத் தர நிர்ணய நிறுவனங்களால் கடந்த செப்டம்பருக்குப் பிறகு தொடர முடியாமல் போனது. மேலும், அடுத்த ஆறு மாதங்களில் 50 கோடி அமெரிக்க டாலர் பெறுமான கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்திலுள்ள இந்நிறுவனத்திடம் வெறும் 2.7 கோடி அமெரிக்க டாலர்கள் மட்டுமே பெட்டியில் இருப்பதாகவும், இதனின் சொத்துக்களை விற்றால்கூடக் கடனைத் திருப்பிச் செலுத்தும் அளவிற்குப் பணத்தைத் திரட்ட முடியாதென்றும் வணிகப் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன.

*****

டந்த முப்பது ஆண்டுகளாக ஐ.எல்.எஃப்.எஸ்.-ஐ நிர்வகித்து வந்த தலைகள் யாரும் அரசியல்வாதிகளின் சிபாரிசால் பதவியில் திணிக்கப்பட்டவர்கள் கிடையாது. அமெரிக்காவைச் சேர்ந்த தேசங்கடந்த வர்த்தக வங்கியான சிட்டி பேங்கில் பணியாற்றிய அனுபவமிக்க ரவி பார்த்தசாரதி, ஐ.எல். எஃப்.எஸ். தொடங்கப்பட்டபொழுதே, அதன் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 1989-இல் ஐ.எல்.எஃப்.எஸ்.இன் மேலாண் இயக்குநராகவும், 1994-இல் துணைத் தலைவராகவும், 2004-இல் தலைவராகவும் பதவி உயர்வு பெற்றார். ஓய்வு பெற்ற பிறகும்கூட, அந்நிறுவனத்தின் இயக்குநர்களுள் ஒருவராகப் பதவி வகித்தார்.

1987-இல் இந்த நிறுவனத்தில் இணைந்த ரவி பார்த்தசாரதி, 2018-இல் ஜூலையில், அதாவது இந்த நிறுவனம் திவாலாகிவிட்ட செய்தி வெளியாவதற்கு இரண்டு மாதங்கள் முன்புதான், உடல் நலக்குறைவைக் காரணம்காட்டி நிறுவனத்திலிருந்து வெளியேறினார்.

இந்நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் மேலாண் இயக்குநராகவும் உள்ள ஹரி சங்கரன், கடந்த 28 ஆண்டுகளாக இதே நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தலைமைச் செயல் அதிகாரியாகவும் இணை மேலாண் இயக்குநராகவும் பணியாற்றி வரும் அருண்குமார் ஸாஹா 1988-ஆம் ஆண்டிலிருந்தே இந்நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இம்முழுநேர அதிகாரிகளுக்கு அப்பால், மாருதி சுசுகி நிறுவனத்தின் தலைவராக உள்ள ஆர்.சி.பார்கவா, ஐ.எல்.எஃப்.எஸ்.-இல் நிறுவனம் சாராத இயக்குநராக (Independent Director) 1990-ஆம் ஆண்டிலிருந்தே பணியாற்றி வருகிறார். முன்னாள் அரசு அதிகாரியான மைக்கேல் பிண்டோ ஜூலை 2004-ஆம் ஆண்டிலும், முன்னாள் எல்.ஐ.சி. தலைவரான சுனில் மாத்தூர் 2005-ஆம் ஆண்டிலும், சிட்டி பேங்கின் முன்னாள் அதிகாரியான ஜெய்தீர்த்த ராவ் 2012-ஆம் ஆண்டிலும் இயக்குநர் குழுவில் இணைந்தார்கள்.

பொருளாதாரத்திலும் வர்த்தகத்திலும் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் என மெச்சப்படும் இத்துணை பேர் இருந்தும் ஐ.எல்.எஃப்.எஸ்.-இன் வீழ்ச்சியைத் தடுக்க முடியவில்லை என்பதோடு, நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு இந்த இயக்குநர் கும்பலும் முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளாக இந்த நிறுவனத்தின் மூளையாகவும் இதயமாகவும் செயல்பட்ட ரவி பார்த்தசாரதி, நிறுவனத்திலிருந்து வெளியேறிய இரண்டாவது மாதத்திலேயே நிறுவனம் திவால் நிலையில் இருப்பது அம்பலமாகிறது என்றால், இயக்குநர் குழு மொத்தமுமே கூட்டுக் களவாணிகளாகச் செயல்பட்டிருக்கிறார்கள் என்றுதான் கூற முடியும்.

உதாரணமாக, ஒவ்வொரு வங்கியல்லாத நிதி நிறுவனத்திலும் அதன் நிதி ஆதாரங்களையும், முதலீடுகளையும், அம்முதலீடுகளின் வருவாயையும், சந்தையின் ஏற்ற இறக்கங்களையும் தொடர்ந்து கண்காணித்து ஒழுங்குபடுத்துவதற்கு ஒரு சுதந்திரமான கண்காணிப்புக் குழு இருக்க வேண்டும் என்று கார்ப்பரேட் நிறுவனச் சட்ட விதி கூறுகிறது. ஐ.எல்.எஃப்.எஸ்.-இலும் இப்படிப்பட்ட கண்காணிப்புக் குழு இருக்கிறது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாகவே அக்குழு சோளக்காட்டு பொம்மையைப் போலக்கூட இயங்கவில்லை.

குறிப்பாக, இந்தக் குழு கடந்த நான்காண்டுகளில் ஒருமுறைகூட கூடவேயில்லை. இந்த நான்காண்டுகளாகத்தான் ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரமும் கடுமையான தேக்கத்தில் சிக்கியிருக்கிறது என்பதோடு இணைத்துப் பார்த்தால்தான், ஐ.எல்.எஃப்.எஸ்.கண்காணிப்புக் குழுவின் கிரிமினல்தனத்தை (Criminal negligence) புரிந்துகொள்ள முடியும்.

இதுவொருபுறமிருக்க, ஐ.எல்.எஃப்.எஸ்.இன் இயக்குநர் குழுமத்தில் செயல்பட்டு வந்த ஆர்.சி.பார்கவா, மைக்கேல் பிண்டோ, அருண்குமார் ஸாஹா ஆகியோர் கண்காணிப்புக் குழுவிலும் இடம் பெற்றிருக்கிறார்கள். எனில், இதன் பொருள், பாலுக்குப் பூனை காவல் என்பது தவிர வேறென்ன?

நிறுவனத்தின் தலைவர் தொடங்கி அதன் இயக்குநர்கள் ஈறாக உள்ள உயர்மட்ட அதிகாரிகளை நியமிப்பதற்கும், அவர்களது செயல்திறனை மதிப்பிடுவதற்கும் நியமனம் மற்றும் சம்பள நிர்ணயக் குழு என்றொரு கமிட்டியும் செயல்பட்டு வந்திருக்கிறது. இந்தக் குழு நிர்வாக இயக்குநர்களின் செயல்திறனை மதிப்பிட்டதோ இல்லையோ, வருடம் தவறாமல் இயக்குநர்களின் சம்பளத்தையும் சலுகைகளையும் பல மடங்கு உயர்த்திக் கொடுக்கும் காரியத்தை மட்டும் திறம்படச் செய்துவந்திருக்கிறது.

கம்பெனியின் இயக்குநர் குழுவைச் சேர்ந்த மைக்கேல் பிண்டோவும், சுனில் மாத்தூரும், ஹரி சங்கரனும் செயல்திறன் மதிப்பீடு மற்றும் சம்பள நிர்ணயக் கமிட்டியிலும் இடம் பிடித்திருக்கிறார்கள். எனில், இதன் பொருள், திருடனும் நானே, போலீசும் நானே, நீதிபதியும் நானே என்பது தவிர வேறென்னவாக இருக்க முடியும்?
கம்பெனி இயக்குநர்களின் இந்த மூன்று முகம் காரணமாக, கம்பெனி நட்டத்தை நோக்கிச் சரிந்துகொண்டிருந்த வேளையில், அவர்களின் சம்பளங்களும் சலுகைகளும் விண்ணை நோக்கிப் பாய்ந்தன.

2015 ஆம் ஆண்டில் 7.28 கோடி ரூபாயாக இருந்த ரவி பார்த்தசாரதியின் ஆண்டு சம்பளம், 2017 ஆம் ஆண்டில் 10.8 கோடி ரூபாயாக உயர்ந்தது. 2018-ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் ரவி பார்த்தசாரதி தனது உடல் நலத்தைக் காரணமாக வைத்து முழுமையாக நிறுவனத்திலிருந்து விலகிக் கொண்டார். அந்த ஏழு மாதங்களில் அவருக்கு அளிக்கப்பட்ட சம்பளம், இதர சலுகைகள் மற்றும் ஓய்வுகால நிதி ஆகியவற்றின் மொத்த மதிப்பு 20.4 கோடி ரூபாய்.

ஐ.எல்.எஃப்.எஸ்.-இன் துணைத் தலைவராகவும் மேலாண் இயக்குநராகவும் பணியாற்றிய ஹரி சங்கரின் மொத்த சம்பளம் கடந்த நான்காண்டுகளில் 4.8 கோடி ரூபாயிலிருந்து 7.7 கோடி ரூபாயாக அதிகரித்தது. இது போல நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் மேலாண் இயக்குநராகவும் பணியாற்றிய அருண்குமார் ஸாஹாவின் மொத்த சம்பளம் 5.8 கோடி ரூபாயிலிருந்து 6.9 கோடி ரூபாயாக அதிகரித்தது.

இதேகாலக்கட்டத்தில் ஐ.எல்.எஃப்.எஸ்.-இன் நிதிநிலையும், அதனின் செயல்பாடும் எப்படி இருந்தன? 2015- ஆம் ஆண்டில் 80 கோடி ரூபாய் இலாபம் ஈட்டியதாகக் கூறப்பட்ட அந்நிறுவனம் அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்குள்ளேயே 2,000 கோடி ரூபாய் நட்டமடைந்தது. 2015-ஆம் ஆண்டில் 68,000 கோடி ரூபாயாக இருந்த அந்நிறுவனத்தின் மொத்தக் கடன், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் 90,000 கோடி ரூபாயைத் தொட்டது.

ஐ.எல்.எஃப்.எஸ்.-இன் இயக்குநர் குழு ஒட்டுண்ணிக் கும்பலாக நடந்து கொண்டிருப்பதை இந்த விவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இது மட்டுமின்றி, திட்டங்களுக்குத் தேவைப்படும் மூலதனத்தை ஊதிப் பெருக்கிக் காட்டியே (Gold plating) கடனை வாங்கிக் குவித்து நிறுவனத்தைத் திவாலாக்கிவிட்டதாகப் பழைய இயக்குநர் குழு மீது குற்றஞ்சுமத்தப்பட்டிருக்கிறது. அதாவது, அதீதமாகப் பெற்ற கடன்களைத் தின்று தீர்த்த ஊழல் பெருச்சாளியாக இயக்குநர் குழு இயங்கி வந்திருக்கிறது என்பதுதான் இதன் பொருள்.

மேலும், அரசியல் சார்ந்த நியமனமாக அல்லாமல், நிபுணர்களைக் கொண்டு நிறுவனங்களை நடத்தினால், அவை நட்டமடையாது, அதில் மோசடிகள், ஊழல்கள் நடைபெறாது என்றொரு மாற்றை முதலாளித்துவவாதிகள் பரப்பி வருகிறார்களே, அதுவொரு மூடநம்பிக்கை என்பதையும் அம்பலப்படுத்திவிட்டது, ஐ.எல்.எஃப்.எஸ். இயக்குநர் குழு.

நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அம்மாநிலத்தில் ஒரு புதிய முதலீட்டு நகரை உருவாக்கும் திட்டத்தை ஐ.எல்.எஃப்.எஸ். – இடம் ஒப்படைத்து, அதற்காக ஒரு ஏக்கர் நிலத்தை இரண்டு ரூபாய் விலையில் விற்று, இச்சலுகையின் மூலம் அந்நிறுவனத்திற்கு 440 கோடி ரூபாய் அரசுப் பணத்தை மொய்யாகத் தூக்கிக் கொடுத்தார். அதே மோடி இப்பொழுது பிரதமர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி, பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யிலிருந்து 4,000 கோடி ரூபாயை ஐ.எல்.எஃப்.எஸ்.-க்குக் கொடுத்து, அதனைக் காப்பாற்றிவிடத் திட்டமிட்டிருக்கிறார்.

ஜப்பான், அபுதாபி மற்றும் இந்தியாவைச் சேர்ந்த தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஐ.எல்.எஃப்.எஸ்.-இல் பங்குதாரர்களாக இருந்தாலும், அவைகளெல்லாம் தப்ப வைக்கப்பட்டு, எல்.ஐ.சி. மட்டும் பலியிடப்படுகிறது. இலாபத்தைத் தனியார் பங்கு போட்டுக் கொள்ள, நட்டத்தை இந்திய மக்களின் மீது சுமத்தும் அயோக்கியத்தனம் இது.

மேலும், கார்ப்பரேட் அதிபர்கள், அதிகாரிகளைக் கொண்ட புதிய இயக்குநர் குழுவை அமைத்து, ஐ.எல்.எஃப்.எஸ்.-இல் இனி எல்லாம் ஒழுங்காக நடக்கும் என்பது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது, மைய அரசு. பழைய பெருச்சாளிகளுக்குப் பதில் புதிய பெருச்சாளிகள் என்பதைத் தாண்டி, இந்த மாற்றத்திற்கு வேறு பொருள் கொள்ள முடியாது.

*****

‘‘நான் உமி கொண்டு வருகிறேன், நீ அவல் கொண்டு வா” என்ற சூதுதான் அடிக்கட்டுமான வளர்ச்சித் திட்டங்களில் நடைபெற்று வருகிறது. பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்டுப் பல்வேறு முதலீட்டு நிறுவனங்களிடமிருந்து 90,000 கோடி ரூபாய் அளவிற்குக் கடன் வாங்கியிருக்கும் ஐ.எல்.எஃப்.எஸ். மட்டுமல்ல, அடிக்கட்டுமானத் திட்டங்களைக் குத்தகைக்கு எடுக்கும் எந்தவொரு கார்ப்பரேட் நிறுவனமும் தமது மடியிலிருந்து மூலதனத்தைப் போடுவதில்லை. மாறாக, அடிமாட்டு விலையில் நிலம் உள்ளிட்ட இயற்கை வளங்கள், குறைந்த வட்டியில் கடன், வரிச் சலுகைகள் அளித்து, கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்துக்கும் நிபுணர் கூட்டத்துக்கும் அரசு ஏற்பாடு செய்து கொடுக்கும் கறி விருந்துதான் வளர்ச்சித் திட்டங்கள்.

பொருளாதார மந்தம் நிலவும் நேரங்களில், கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் தொழிலையும் இலாபத்தையும் காப்பாற்றிக் கைதூக்கிவிடும் நோக்கில்தான் வளர்ச்சித் திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு என்ற பெயர்களில் இந்தச் சூதும் திருட்டும் மூடிமறைக்கப்படுகிறது.

இன்று பொதுத்துறை வங்கிகள் எதிர்கொள்ளும் வாராக் கடன் சுமையும், அவை திவாலாகிவிடும் அபாயமும் அடிக்கட்டுமானத் திட்டங்களுக்குக் கோடிகோடியாய்க் கடனாகக் கொடுத்ததன் விளைவுதான் என்பது தெரியவந்துள்ள நிலையில், ஐ.எல்.எஃப்.எஸ். இல் நடந்துள்ள தில்லுமுல்லுகள் அம்பலமாகி வருகின்றன. இதற்குக் காரணமான கனவான்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக, மேலும் மேலும் பொதுப்பணத்தை வாரியிறைத்து ஐ.எல்.எஃப்.எஸ். ஐக் காப்பாற்றிவிடத் துடிக்கிறது, மோடி அரசு. நட்டத்தில் நடக்கும் பொதுத்துறை நிறுவனங்களை மூடிவிட வேண்டும் எனக் கறாராக வாதிட்டு வரும் நிபுணர் கூட்டமோ, ஐ.எல்.எஃப்.எஸ். விவகாரத்தில் தட்டைத் திருப்பிப் போட்டுத் தட்டுகிறது.

மேலும், 2013-இல் இயற்றப்பட்ட விவசாயிகளுக்குச் சாதகமான நிலம் கையகப்படுத்தும் சட்டத்தினால்தான், ஐ.எல்.எஃப்.எஸ். -இன் திட்டங்கள் அனைத்தும் சிக்கலுக்குள்ளாகி, அது நட்டத்தைச் சந்திக்க நேர்ந்தது என்ற சாக்கைச் சொல்லி, ஐ.எல்.எஃப்.எஸ்.-ஐச் சேர்ந்த அதிகார வர்க்கத்தைத் தப்பிக்க வைக்க முயலுகிறார்கள்.

குறிப்பாக, ரிசர்வ் வங்கியின் இயக்குநர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தி, “ஐ.எல்.எஃப்.எஸ்.-இன் பிரச்சினை வாராக் கடனுக்குள் வராது” என ஒரேபோடாகப் போட்டு, ஐ.எல்.எஃப்.எஸ்.-க்குக் கடன் கொடுத்த பொதுத்துறை வங்கிகள் எதிர்கொண்டுள்ள அபாயத்தைப் பூசிமெழுகிவிட முயலுகிறார்.

இத்தகைய கும்பலிடமிருந்து பொதுத்துறை வங்கிகளையும் எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிதி நிறுவனங்களையும் காப்பாற்றுவதுதான் இப்பொழுது நம்முன் உள்ள மிகப்பெரிய சவால்.

-செல்வம்
புதிய ஜனநாயகம், நவம்பர் 2018

மின்னூல்:

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart

சந்தா செலுத்துங்கள்

மக்கள் பங்களிப்பின்றி ஒரு மக்கள் ஊடகம் இயங்க முடியுமா? வினவு தளத்திற்குப் பங்களிப்பு செய்யுங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க