காஷ்மீர் : பயங்கரவாதத்தையும் போர் சூழலையும் வளர்க்கும் இந்தியா !

அமெரிக்கா ஆப்கானில் இருந்து வெளியேறுவது குறித்த அறிவிப்பும், அமித்ஷாவின் அறிவிப்பும் அடுத்தடுத்து வெளி வந்துள்ளது தற்செயலானதல்ல.

2

காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த பெயரளவு சிறப்புரிமை சட்டத்தை ரத்து செய்து, அம்மாநிலத்தை உடைத்து நாசப்படுத்திய மத்திய பாஜக அரசின் நடவடிக்கைக்கு சர்வதேச அரசியல் தட்பவெட்பம் உதவியிருப்பது அம்பலமாகி உள்ளது.

அரசியலமைப்பு சட்டத்தின் 370 மற்றும் 35 (A) பிரிவுகள் நீக்கப்பட்டதற்கு பின்பு தெற்காசியாவிலிருந்து அமெரிக்காவின் விலகல் பின்னணி ஒரு முக்கியக் காரணமாக அனுமானிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து நிரந்தரமாக வெளியேற முடிவெடுத்துள்ளதன் மூலம் 20 வருடகாலமாக அழுந்தி கொண்டிருந்த ஒரு பிரச்சினைக்கு அமெரிக்கா விரைவில் விடை காணப்போகிறது. அதே நேரம் இந்தியா புதிய சிக்கலில் அகப்படப் போகிறதோ என்ற எண்ணம் காஷ்மீர் விவகாரத்தை நீண்டகாலமாக கவனித்து வருகின்ற அறிவுத்துறையினரிடம் ஏற்பட்டிருக்கிறது.

U.S. President Donald Trump meets with Afghan President Ashraf Ghani during the U.N. General Assembly in New York, U.S., September 21, 2017. REUTERS/Kevin Lamarque - RC1669EEDC30
கடந்த 2017 செப்டம்பரில் அமெரிக்க மற்றும் ஆஃப்கானிஸ்தான் அதிபர்கள் சந்தித்த நிகழ்வு. (கோப்புப் படம்)

தாலிபான்களுடனான பேச்சுவார்த்தையை  வெற்றிகரமாக நடத்தி முடித்த திருப்தியில் இருக்கிறது அமெரிக்கா. கத்தார் தலைநகரான தோஹாவில் கடந்த சில மாதங்களாக இதற்காக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை முடிவை எட்டியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் விளைவாக தாலிபான்கள் மறுபடியும் பாராளுமன்றம் செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எந்த தாலிபான் அரசை 2001-ல் கவிழ்த்தார்களோ அதே தாலிபான்கள்களுடன் சமரசத்தை ஏற்படுத்தி விட்டு சப்தமில்லாமல் நகர அமெரிக்கா முடிவெடுத்து இருக்கிறது. எவ்வித  நிபந்தனையும் இல்லாமல் அமெரிக்கா வெளியேறுவது முக்கியமானது. தனது தோல்வியை மறைக்க புதிதாக எந்த பயங்கரவாதக் குழுவும் உருவாகாமல் பார்த்துக் கொள்ள தாலிபானை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. ‘ஒரு பொய்யாவது சொல் கண்ணே… அந்த சொல்லில் ஓடிப் போய் விடுவேன்’ என்று‌ மண்டியிடாத குறையாக அமெரிக்காவின் சமரசம் இருக்கிறது.

செப்டம்பர் 1-ம் தேதி அமெரிக்கா மற்றும் நேட்டோ ராணுவ வீரர்கள் 20,000 பேர் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுகிறார்கள். அமெரிக்காவின் இந்த விலகல் பின்னணி 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்த இந்திய அரசின் தடாலடி தீர்மானத்தை புரிந்து கொள்வதற்கு மிகவும் முக்கியமானது. அமெரிக்காவின் அறிவிப்பும், அமித்ஷாவின் அறிவிப்பும் அடுத்தடுத்து வெளி வந்துள்ளது தற்செயலானதல்ல.

படிக்க:
காஷ்மீர் மண்ணையும் பெண்களையும் அபகரிக்கத் துடிக்கும் பாஜக !
♦ தமிழகத்தை நாசமாக்காதே ! சென்னையில் மக்கள் அதிகாரம் கருத்தரங்கம்

அமெரிக்கா உடனடியாக எப்பக்கமும் சாயக் கூடிய நிலையில் தற்போது இல்லை; அல்லது புதிய சூழலில் அமெரிக்க நலன் என்பது என்னவென்று, தெற்காசியாவில் முடிவு செய்ய வேண்டி இருக்கிறது. 2020-ல் நடைபெற இருக்கின்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் அரசியல் பிரச்சார முழக்கத்தை உடனடியாகக் கண்டுபிடிக்க வேண்டிய இடத்தில் டொனால்ட் டிரம்ப் இருக்கிறார். ஜூனியர் புஷ், மற்றும் ஓபாமா ஆகியோரால் இயலாத ஒன்றை தீர்த்து வைத்த பெருமையுடன் களமிறங்க டிரம்ப் விரும்புகிறார். அதற்கான துருப்புச் சீட்டாக தாலிபான்களுடனான பேச்சுவார்த்தை முடிவை பயன்படுத்த நினைக்கிறார்.

இந்த சந்தர்ப்பத்தைதான் பாஜக அரசு உளவுத்துறை ஆலோசனையின் பேரில் பயன்படுத்தி உள்ளது. ஊரில் பெரிய ரவுடி வெளியேறினால் பேட்டை ரவுடி புரியும்  அட்டகாசம் போன்றது இது. 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை ஒரு வகையில் பயங்கரவாதத்துக்கான அழைப்பாகவும் பார்க்க முடியும். அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது ஆப்கானிஸ்தான் அரசுடன் அல்ல; மாறாக தாலிபான்களுடன். புத்துயிர்ப்பு கொண்ட தாலிபான் என்பது புத்துயிர்ப்பு கொண்ட அல் கொய்தாவை குறிப்பது. தாலிபான்களின் நிழலில் உருவானது அல் கொய்தா. காஷ்மீரின் குழப்ப நிலைமையில் அல் கொய்தா தலையிடுவதன் மூலம் புதிய ஏற்பை அது இழந்த ஆதரவு சக்திகளிடம் மறுபடியும் பெறக்கூடும்.

அடுத்த சில வருடங்களில் புதிது புதிதாக மேலும் பல பயங்கரவாதக் குழுக்கள் காஷ்மீரை மையப்படுத்தி உருவாக வாய்ப்புள்ளது. அவை இந்தியாவுக்கு மிகுந்த தொல்லை கொடுக்கலாம். 90-களுக்கு பிறகு லஷ்கர்-இ-தொய்பா உருவானது போல. மத்திய அரசின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைக்கு நாம் கொடுக்கக் கூடிய விலை என்னவென்று தெரியவில்லை. தொடர்ந்து இந்திய மக்கள் ஒரு போர்ச் சூழலில் ஆழ்ந்திருக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இராணுவத்தை குவிப்பது, ஆயுதங்களை வாங்குவது என்று இந்திய மக்கள் கவனம் ஒரு போர்ச் சூழலுக்கு தகவமைக்கப்படுகிறது.

ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஏ.கே. 203 ரக துப்பாக்கிகளை ராணுவத்துக்கு வாங்க ரஷ்ய நிறுவனம் ஒன்றுடன் இந்தியா சமீபத்தில் ஒப்பந்தம் போட்டுள்ளது. 7, 50,000 ஏ.கே 203 துப்பாக்கிகள் முதற்கட்டமாக இந்திய தரைப்படைக்கு வாங்கப்படுகிறது. முதலில் ராணுவத்துக்கும், பின்னர் துணை ராணுவம் மற்றும் போலீசுக்கும் இதை வழங்க இருக்கிறார்கள். தற்போது பயன்பாட்டில் இருக்கும் INSAS (Indian Small Arms System)  துப்பாக்கி சிறிது கனமாகவும், சற்றே பழைய ரகம் என்பதாலும் புதிய ஆயுதங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இது போக சிக் சாவர் என்ற அமெரிக்க ஆயுத வியாபார நிறுவனத்துடன் 7.69 mm மற்றும் 59 துளை விட்டம் கொண்ட அதிநவீன துப்பாக்கிகளையும் வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.

இவற்றை தற்போது வாங்குவதற்கான காரணத்தை நாம் உணர வேண்டும். ஒரு நிரந்தர போர்மேகத்தை இந்திய துணைக்கண்டத்தில் நிலைப்படுத்த எண்ணியுள்ளார்கள். புதிய ரக துப்பாக்கிகள் போராட்டங்களை நசுக்க மட்டுமல்ல; பீதியை மக்களின் மனதில் விதைத்து ஒரு அடக்க உணர்வை உடனடியாகக் கோரும் தன்மை கொண்டு இருப்பவை. காஷ்மீர் பிரச்சினையோடு தொடர்புடைய அறிவுத்துறையினர் தொடர்ந்து சொல்லி வருவது என்னவென்றால் ராணுவத் தீர்வு பலன் தராது;  எனவே பேச்சுவார்த்தை மூலமான ஒரு அரசியல் தீர்வை வலியுறுத்துகிறார்கள். ஆனால் அதனை குறைந்த அரச ஒழுக்கமாக கருதும்போக்கு தற்போதைய ஆட்சியாளர்களிடம் உருவாகி உள்ளது. அது காஷ்மீர் நிலைமையை மேலும் சிக்கலாக்கி உள்ளது.

படிக்க:
டெல்லிக்கு காஷ்மீர்தான் வேண்டும் – காஷ்மீரிகள் தேவையில்லை
♦ காஷ்மீர் : மக்கள் விரோத நடவடிக்கையை அனுமதிக்க முடியாது | மக்கள் அதிகாரம்

தாலிபான்களுடனான அமெரிக்க அனுபவம் நமக்கு பாடம். அடக்குமுறை ஒரு தீர்வை வழங்காது என்ற அரசியல் பெறுமானத்தை அது நமக்கு அளித்து உள்ளது. ஒரு பக்கம் மக்களுக்கு எதிராக அநீதிகளை இழைத்துக் கொண்டே பயங்கரவாத ஒழிப்பு என்பது போலியானதொரு நடவடிக்கை. அது சொல்லப்பட்ட நோக்கத்துக்கு முற்றிலும் மாறாக சுழல் தடியாக சுழன்று ஏவியவரை தாக்கும் தன்மை கொண்டது.

தெற்காசியாவிலிருந்து அமெரிக்கா வெளியேறும் சூழலை ஒரு பரந்த ஜனநாயக வெளியின் திறப்புக்கு பயன்படுத்தும் திறனற்ற ஒரு அரசியல் தலைமையை நாம் பெற்றிருப்பது துர்பாக்கியமானது.

ராஜ்