Thursday, May 1, 2025
முகப்புசெய்திஇந்தியாArticle 370 நீக்கம் : காஷ்மீர் பண்டிட்டுகள், டோக்ராக்கள், சீக்கியர்கள் கண்டனம் !

Article 370 நீக்கம் : காஷ்மீர் பண்டிட்டுகள், டோக்ராக்கள், சீக்கியர்கள் கண்டனம் !

ஜம்மு - காஷ்மீரில் வாழும் முசுலீம்கள் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள், பழங்குடிகள் இந்தியாவுடன் இணைவதையே விரும்புகின்றனர் என்ற பிரச்சாரத்தில் துளியளவும் உண்மையில்லை.

-

த்திய அரசு காஷ்மீருக்கு சிறப்பு மாநில தகுதியை வழங்கிய பிரிவு 370-ஐ கடந்த வாரம் நீக்கி, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப் போவதாக அறிவித்தது.  நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இம்முடிவு குறித்து காஷ்மீர் பண்டிட்டுகள், டோக்ராக்கள், சீக்கியர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

காஷ்மீரில் வசிக்கும் சமூகத்தின் முக்கிய நபர்களாக உள்ள பண்டிட்டுகள், டோக்ராக்கள், சீக்கியர்கள் 64 பேர் இணைந்து இந்த கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.  அவர்கள் மத்திய அரசின் முடிவை கண்டித்துள்ளதோடு, உடனடியாக பிரிவு 370-ஐ மீண்டும் அமலாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

மத்திய அரசின் முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் ஜனநாயகமற்றது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதயநோய் நிபுணர் உபேந்திர கவுல், ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி கபில் கக், பத்திரிகையாளர் பிரதீப் மேகசின், சர்தா உக்ரா, அனுராதா பாசின் உள்ளிட்ட பிரபலங்களும் கல்வியாளர்கள், நாடக கலைஞர்கள், மாணவர்கள் மற்றும் பலர் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

படிக்க:
காஷ்மீர் : பயங்கரவாதத்தையும் போர் சூழலையும் வளர்க்கும் இந்தியா !
டெல்லிக்கு காஷ்மீர்தான் வேண்டும் – காஷ்மீரிகள் தேவையில்லை

மத்திய அரசின் முடிவு, கட்டாயத்தின் பேரில் எடுக்கப்பட்ட கள்ளத்தனமான முடிவு என்றும் ஜம்மு காஷ்மீரை முற்றுகை நிலையில் வைத்திருப்பதை உடனடியாக நீக்க வேண்டும் எனவும்  அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆகஸ்டு 2-ம் தேதி முதல் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டதோடு தகவல் தொடர்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை ஓரிரு இடங்களில் தடை நீக்கப்பட்டது. ஆனால், பக்ரீத்தை ஒட்டி மீண்டும் தடை அமலாக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த கூட்டறிக்கையில், ஒருங்கிணைந்த இந்தியா, ஜம்மு காஷ்மீருக்கு அளித்த வரலாற்று வாக்குறுதிகளை தற்போதுள்ள அரசின் நடவடிக்கை மீறுவதாக உள்ளது எனவும் 1947-ம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்த முந்தைய காஷ்மீர் அரசர் விதித்த விதிமுறைகளின்படியே பிரிவு 370 உருவாக்கப்பட்டது எனவும் அவர்கள் நினைவுகூர்ந்துள்ளனர்.

370-வது பிரிவு காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகளை வழங்கியதோடு, அம்மாநிலத்துக்கென்றே பிரத்யேக கொடி, பிரத்யேக அரசியலமைப்பையும் கொண்டிருந்தது. இவை அனைத்தையும் நீக்கி, இந்தியாவின் மற்ற அனைத்து மாநிலங்களிலும் உள்ள சட்டம் ஜம்மு காஷ்மீரிலும் அமலாக்கப்படும் என அறிவித்தது மோடி அரசு. அக்டோபர் 31-ம் தேதி முதல் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவது அமலாகும் எனவும் இந்திய அரசு அறிவித்திருந்தது.

“இந்திய மேலாதிக்கத்தின் மதச்சார்பற்ற, ஜனநாயக பண்புகளுக்காகத்தான் ஜம்மு – காஷ்மீர் இணைய ஒப்புக்கொண்டது என்பதை இந்திய குடிமக்களுக்கு நினைவூட்ட கடமைப்பட்டுள்ளோம். 1949-ம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பு சபையின் நடவடிக்கையின் போது, ஜம்மு – காஷ்மீர் மாநிலம் மட்டுமே தன்னை இணைத்துக்கொள்ள பேச்சுவார்த்தை நடத்திய ஒரே மாநிலமாகும்.

இதன் விளைவாகவே 370-வது பிரிவு எந்தவொரு எதிர்ப்பும் இல்லாமல் நடைமுறைக்கு வந்தது” என குறிப்பிட்டுள்ள அவர்கள், “இந்த விவகாரத்தில் இந்திய அரசு இரகசியமாக, ஜம்மு – காஷ்மீர் மாநில சட்டசபையின் கருத்தையோ கலந்தாய்வையோ செய்யாமல் சர்வாதிகார முறையில் ஜனநாயகத்தின் அனைத்து நெறிமுறைகளையும் தூக்கியெறிந்துவிட்டு, இந்த முடிவை எடுத்துள்ளது. ஜம்மு – காஷ்மீர் மக்களான நாங்கள் கலந்தாலோசிக்கப்படவில்லை. எங்கள் அனுமதியின்றி எடுக்கப்பட்ட எங்களுடைய எதிர்காலம் குறித்த எந்த முடிவும் முறையானது என எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.” என கூறியுள்ளனர்.

படிக்க:
ரவுடித்தனமே ஆளும் உத்தியாக மாறியிருக்கிறது ! | சஞ்சீவ் பட் கடிதம் !
குஜராத் : இந்து ராஷ்டிரத்தின் சோதனைச்சாலை !

“ஜம்மு-காஷ்மீர் மக்கள் மீது ஏவப்பட்டிருக்கும் தகவல் தொடர்பு முற்றுகை உடனடியாக நீக்கப்பட்ட வேண்டும். மேலும், நாங்கள் அனைத்து அரசியல் பிரதிநிதிகள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதும் நீக்கப்பட வேண்டும்.  எங்கள் தாய் நிலத்தின் மீதான பிரிவினை எங்களுக்கு வலியை உண்டாக்கியிருக்கிறது. இன, கலாச்சார, மதரீதியாக பிரிக்க நடக்கும் நடவடிக்கைகளை நாங்கள் எதிர்த்து நிற்போம்” எனவும் அவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.

ஜம்மு – காஷ்மீரில் வாழும் முசுலீம்கள் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள், பழங்குடிகள் இந்தியாவுடன் இணைவதையே விரும்புகின்றனர் என காவிகள் பிரச்சாரம் செய்துவருகின்றனர். அதில் துளியளவும் உண்மையில்லை என சொல்கிறது மேற்கண்ட கூட்டறிக்கை.

அனிதா
நன்றி: ஸ்க்ரால்