ஜார்கண்ட் மற்றும் பீகாரை சேர்ந்த 6 முதல் 14 வயதிற்குட்பட்ட சுமார் 5,000-க்கும் மேலான குழந்தைகள் மைக்கா சுரங்கங்களில் வேலை செய்வதற்காக தங்களது கல்வியை கைவிட்டுள்ளனர். அவர்களில் ஒரு பகுதியினர் தங்களது குடும்ப பொருளாதார சிக்கல்களை சமாளிக்க நிரந்தர குழந்தை தொழிலாளர்களாகவும் வேலை செய்ய தொடங்கியுள்ளதாக அரசாங்க ஆய்வு ஒன்று கூறுகிறது.
ஜார்க்கண்ட் மற்றும் பீகாரின் மைக்கா சுரங்கப்பகுதிகளில் 22,000-க்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர் என்று இந்தியாவில் பணிபுரியும் சர்வதேச குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனமான டெர்ரே டெஸ் ஹோம்ஸ் (Terre Des Hommes) கடந்த ஆண்டு தன்னுடைய அறிக்கையில் கூறியிருந்தது. அதன் பின்னர் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) இந்த ஆய்வை நடத்தியது.
மைக்கா சுரங்கப் பகுதிகளில் உள்ள குழந்தைகளில் ஒரு பகுதியினருக்கு [கல்வி கற்கும்] வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களது குடும்ப வருமானத்திற்காக தொழிலாளர்களாக பணியாற்றத் தொடங்கியுள்ளதாகவும் என்.சி.பி.சி.ஆர். தன்னுடைய அறிக்கையில், தெரிவித்துள்ளது. ஜார்கண்டில் உள்ள கோடெர்மா மற்றும் கிரிடிஹ் மற்றும் பீகாரில் நவாடா மாவட்டங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
“ஆய்வின்படி, ஜார்கண்ட் பகுதியில் ஆறு முதல் 14 வயதுக்குட்பட்ட 4,545 குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை” என்று என்.சி.பி.சி.ஆர் கூறியது. ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களில் உள்ள மைக்கா சுரங்கப் பகுதிகளில் ’குழந்தைகளின் கல்வி மற்றும் நல்வாழ்வு’ குறித்த நடத்தப்பட்ட ஆய்வில், பீகார் மாநிலத்தின் நவாடா மாவட்டத்தில் ஒரே வயதுக்குட்பட்ட 649 குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
மைக்கா துண்டுகளை சேகரித்தல் மற்றும் ஆர்வமின்மை ஆகியவை குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாததற்கான காரணங்களில் சில என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடர்மாவின் 45 பகுதிகள் மற்றும் கிரிடிஹின் 40 பகுதிகள் மற்றும் நவாடாவின் 15 பகுதிகளில் ஆறு முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் மைக்கா துண்டுகள் சேகரிப்புக்குச் செல்வதும் கண்டறியப்பட்டது.
இப்பகுதிகளில் உள்ள பல குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு மைக்கா துண்டுகளை விற்பனை செய்வது இன்றியமையாததாக உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
”குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதன் பயன் பல குடும்பங்களுக்கு தெரிவதில்லை. அதற்கு பதிலாக குழந்தைகள் மைக்கா துண்டுகள் சேகரித்து விற்பனை செய்வதையே விரும்புகிறார்கள்” என்று ஒரு அதிகாரி கூறினார்.
உலகின் மிகப்பெரிய மைக்கா உற்பத்தியாளர்களில் இந்தியாவும் ஒன்று. மைக்கா உற்பத்தி செய்யும் முதன்மையான மாநிலங்களாக ஜார்க்கண்ட் மற்றும் பீகார் உள்ளன. கட்டிடங்கள் மற்றும் மின்னணுவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வண்ணப்பூச்சு உற்பத்தியிலும் மைக்கா பயன்படுத்தப்படுகிறது.
மைக்கா சுரங்கப் பகுதிகளில் உள்ள குழந்தைகளின் கல்வி நிலை, பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தைகள் மைக்கா துண்டுகள் சேகரிப்பதில் ஈடுபடுகிறதா, இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறதா மற்றும் அப்பகுதிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றனவா என்பதை கண்டறிவது தான் என்.சி.பி.சி.ஆர் நடத்திய ஆய்வின் அடிப்படையான நோக்கங்கள் என்று கூறப்பட்டுள்ளன.
தன்னுடைய ஆய்வின் அடிப்படையில் பல பரிந்துரைகளை என்.சி.பி.சி.ஆர் வழங்கியது. மைக்கா சுரங்க தொழில்துறையின் பகிர்மான சங்கிலியில் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்று அது வலியுறுத்தியது.
“மைக்கா சுரங்க செயல்முறை மற்றும் மைக்கா துண்டுகள் சேகரிப்பது என எதிலும் குழந்தைகள் ஈடுபடக்கூடாது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் / மேம்பாட்டு நிறுவனங்கள், உள்ளூர் மற்றும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழில்துறையுடன் இணைந்து மைக்கா சுரங்க பகிர்மான சங்கிலிப்பிணைப்பில் இருந்து குழந்தைத் தொழிலாளர்களை விடுவிப்பதற்கான ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும்” என்று என்.சி.பி.சி.ஆர் கூறியது.
குழந்தைகளிடமிருந்து மைக்கா துண்டுகள் வாங்குபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கலாம் என்றும், ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களில் உள்ள மைக்கா சுரங்கப் பகுதிகளில் குழந்தைத் தொழிலாளர்களை ஒழிப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகள் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அது கூறியது.
பென்சில் திட்டத்தை செயல்படுத்தவும் இது பரிந்துரைத்தது. “பென்சில் திட்டத்தை (குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பை திறம்பட அமல்படுத்துவதற்கான தளம் – PENCIL) கோடெர்மா மற்றும் கிரிடிஹ் மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு குழந்தை தொழிலாளார்கள் இல்லா பகுதிகளாக மாற்ற முயற்சி செய்யலாம் ” என்று என்சிபிசிஆர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் தங்குவதற்கு மைக்கா சுரங்கப் பகுதிகளில் குடியிருப்புப் பள்ளிகள் மற்றும் விடுதி வசதிகள் செய்யப்பட வேண்டும் என்று அது மேலும் கூறுகிறது.
“இது பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளின் கல்வியை உறுதி செய்ய உதவும். கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயாஸ் (KGBVs) மற்றும் ஆசிரம பள்ளிகள் போன்ற திட்டங்களின் கீழ் இப்பகுதிகளில் குடியிருப்புப் பள்ளிகள் நிறுவப்படலாம்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பகுதிகளில் உள்ள குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு குறித்த சிக்கலையும் என்.சி.பி.சி.ஆர். கோடிட்டு காட்டியது.
ஆய்வு நடத்தப்பட்ட கிரிடிஹ் மற்றும் கோடெர்மாவில் முறையே 14 விழுக்காடு மற்றும் 19 விழுக்காடு பகுதிகளில் ஊட்டச்சத்து குறைபாடு சிக்கல்கள் பதிவாகியுள்ளன. நவாடாவைப் பொறுத்தவரையில் 69 விழுக்காட்டு பகுதிகளில் சில குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக தெரிவித்துள்ளனர்”என்று அது கூறியுள்ளது.
படிக்க:
♦ காஷ்மீர் வெளிமாநில தொழிலாளர்கள் முதல் பீகார் குழந்தைத் தொழிலாளர்கள் வரை !
♦ மூடப்படும் அரசுப் பள்ளிகள் – யார் காரணம் ?
அதே நேரத்தில், ஊட்டச்சத்து குறைபாட்டு சிக்கலுக்கு தீர்வு காண போஷன் அபியான் (Poshan Abhiyaan) திட்டத்தின் கீழ், மழலையர் பள்ளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் ஆணையம் குறிப்பிட்டது.
பொருளாதாரரீதியாகப் பின்தங்கியும், பார்ப்பனியத்தால் தொடர்ச்சியாக சுரண்டப்படும் மாநிலங்களான ஜார்கண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களின் அவலநிலைக்கான கண்கூடான சான்று இது. ஏகாதிபத்திய, தரகு முதலாளித்துவ வர்க்கத்துக்கு லாபமே இலக்காக இருக்கும்போது, குழந்தைகள் கல்வியைக் கைவிட்டு இது போன்று சுரங்கங்களுக்கு அடிமாட்டுக் கூலிக்குப் பணிக்கு செல்வதை, கார்ப்பரேட்டுகளின் கைக்கூலியான மோடி அரசு தடுத்து நிறுத்திவிடுமா என்ன ?.
சுகுமார்
நன்றி : தி வயர்