மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரைக் கிளையின் பொதுக்குழு கடந்த செப்-29 அன்று மதுரையில் நடைபெற்றது. இப்பொதுக்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
பொதுக்குழு தீர்மானங்கள்
1. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் இளநிலை, முதுநிலை பொறியியல் பட்டப்படிப்புகளில் தத்துவப் பாடப் பிரிவைக் கட்டாயமாக்கி அதில் பகவத் கீதை மற்றும் உபநிசத்துக்களை பாடமாகியுள்ளது மத்திய பா.ஜ.க. அரசு. பார்ப்பன வைதீக சனாதனத்தை தோலுரித்துக் காட்டிய அண்ணாவின் பெயரிலான பல்கலைக் கழகத்தில் அதை இழிவுபடுத்தும் நோக்கில் இந்தப் பாடத் திட்டத்தை திணித்துள்ளது பா.ஜ.க.அரசு. சாதி, மத, பால், இன, நிற வேறுபாடுகள் அற்ற அறிவியல் அடிப்படையிலான குடியரசைப் படைப்பதை நமது அரசியல் சாசனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் அதற்கு நேர் எதிரான, சாதி ஏற்றத் தாழ்வுகளை நானே உருவாக்கினேன் என்று சொல்லும் கிருஷ்ணனை படிப்பதன் மூலம் பொறியியல் மாணவன் மேல்சாதி ஆணவத்தைத் தவிர கற்றுக்கொள்ள வேறு என்ன இருக்கிறது ? மோடி அரசின் இந்த திட்டமிட்ட கயமையை இப்பொதுக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
2. மோடி அரசு திட்டமிட்டுத் திணிக்கும் தேசிய கல்விக் கொள்கை-2019 எளிய மக்களுக்கான கல்வி உரிமையை மறுக்கிறது. அவர்களை பழையபடி குலத் தொழிலுக்கு விரட்டுகிறது. கல்வியை கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்த்து பணக்காரனுக்கு மட்டுமே கல்வி என்ற நிலையை உருவாக்குகிறது. இன்னொரு புறம் கல்வியில் புராண இதிகாச குபைகளையும், பழமை, பிற்போக்கு கருத்துக்களையும், காம சூத்திரா போன்ற ஆபாச கூத்துக்களையும் கலை என்ற பெயரால் கற்றுக்கொடுக்கத் திட்டமிட்டுள்ளது. தகுதி என்ற பெயரால் ஆசிரியர் – மாணவர் இரண்டு தரப்பையுமே கழித்துக்கட்ட வழி வகுத்துள்ளது. மக்கள் விரோத தேசிய கல்விக் கொள்கை-2019ஐ கைவிட இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

3. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு நமது அரசியல் சட்டம் வழங்கியுள்ள சிறப்புத் தகுதி பிரிவு 370, 35ஏ ஆகியவற்றை மோடி அரசு மோசடியாக நீக்கி அந்த மக்களுக்கு மாபெரும் அநீதி இழைத்துள்ளது. அதன்மூலம் தம்மை மாவீரர்களாகச் சித்தரித்துக் கொள்கின்றனர் அமித்ஷா – மோடி ஜோடி. ஆனால் விடுதலை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு போராடும் காஷ்மீர் மக்கள் தங்கள் இனமே அழிந்தாலும் விடுதலையை விட்டுக்கொடுக்க முடியாது என்று வீரஞ் செறிந்த போராட்டத்தை நடத்திவருகின்றனர். உரிமைக்காகப் போராடும் அனைத்து மக்களுக்கும் ஆதர்சமாய்த் திகழும் காஷ்மீர் மக்களைப் போற்றுகின்ற அதே போது மோடி – அமித்ஷா கும்பலின் கோழைத் தனத்தை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
4. நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தேசிய புலனாய்வு முகமை (NIA) திருத்தச் சட்டம், சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டத் (UAPA) திருத்தம், தகவல் உரிமைச் சட்டத்(RTI) திருத்தம், தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்கள், மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம் மற்றும் முத்தலாக் தடைச் சட்டம் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட சட்டத் திருத்தங்களைக் கொண்டுவந்து அறிவிக்கப்படாத அவசர நிலையை மோடி அரசு அமல்படுத்தியுள்ளது. சட்டத்தின் பெயரால் பாசிசம் விரைவாக அரங்கேறுகிறது என்று இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.
5. மோடி ஆட்சியில் இந்தியாவின் பொருளாதார நிலை அதல பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மோட்டர் வாகன உற்பத்தி, கட்டுமானத் துறை, ஜவுளித் துறை போன்ற உள் நாட்டு உற்பத்தி விகிதம் 3.5 % அளவிற்குத் தாழ்ந்துவிட்டதை மறைத்து அவர், மக்களின் வரிப்பணத்தில் படித்து அமெரிக்காவில் சொகுசாக வாழும் இந்திய பக்தாள்ஸ்களின் ”நலந்தானா மோடி” (ஹவுடி மோடி) கொண்டாட்டத்தில் திளைத்துக் கொண்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
படிக்க:
♦ சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சிதான் கீழடி நாகரிகம் !
♦ தமிழகத்தில் தொடரும் டெங்கு மரணங்கள் : இயற்கையின் சதியா ?
6. கீழடி தொல்லியல் அகழாய்வு கண்டெடுப்புகள் தமிழர் நாகரிகம் 2600 ஆண்டுகளுக்கு முன்பே நகர நாகரிகமாக இருந்துள்ளதை வேதியல் ஆய்வுகள் பறைசாற்றுகின்றன. தமிழ் பிராமி எழுத்துக்கள் பானை ஓடுகளில் காணக்கிடைக்கின்றன. எளிய மக்களும் அப்போதே எழுத்தறிவு பெற்றிருந்ததற்கான ஆதாரம் அது. அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பொருட்களில் கடவுள், சாதி, மத, மூட நம்பிக்கைகளுக்கான அடையாளங்கள் எதுவும் கிடைக்கவில்லை. சிந்து சமவெளி நாகரிகத்தை ஒத்திருக்கிறது. எனவே இந்திய துணைக் கண்டத்தின் பூர்வ தொல் குடிகள் திராவிடர்களே என்பது கேள்விக்கிடமின்றி நிருபணமாகிறது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில் தான் இந்தி சமஸ்கிருத திணிப்பை வேகப்படுத்தி திசைதிருப்பும் சதித் திட்டத்தில் சங்கப் பரிவாரங்கள் இறங்கியுள்ளன. நீ ஆரியக் கூத்தாடினாலும் அழிவு நிச்சயம் என்பதை இப்பொதுக் குழு சுட்டிக்காட்டுகிறது.

தகவல்:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரைக் கிளை.