நாடு முழுவதும் டெங்குக் காய்ச்சலால் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் டெங்கு காய்ச்சலால் இரட்டை இலக்க எண்ணிக்கையில் மக்கள் மடிந்து வருகிறார்கள். இந்த ஆண்டு தமிழகத்தில் தீவிரமாகப் பரவிய டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 6 பேர் பலியாகி இருக்கிறார்கள். அரசின் புள்ளி விவரங்களே இதை மறுக்க முடியாமல் ஒத்துக்கொள்கின்றது. மேலும் வைரஸ் காய்ச்சலைத் தவிர மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாத மர்மக்காய்ச்சல் என்று சொல்லி மரணமடைந்தவர்களின் பட்டியலில் பலரை அடைத்திருப்பதால் டெங்குவின் எண்ணிக்கை குறைத்துக் காண்பிக்கப்படுகிறது.

இது ஒவ்வொரு ஆண்டும் ஒரு சீசன் நோய் போல வந்து மக்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. எத்தனை உயிர்கள் மடிந்தாலும் சமாளிப்பதற்கு ஒரு காரணத்தை எப்போதும் கைவசம் வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் காய்ச்சலால் மருத்துவமனையை நோக்கி ஓடி வரும் ஏழைகளின் உயிரைக் காக்க போதிய மருத்துகள்தான் இந்த அரசிடம் இல்லை.

நடப்பு ஆண்டில் கடந்த இரண்டு மாதமாக டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலால் மக்கள் அவதிப்பட்டு வருகிறர்கள் என்ற செய்தி ஊடகங்களில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு துரிதப்படுத்தவில்லை. கொசுக்களால் ஏற்படும் நோய்களைத் தடுக்க கொசு ஒழிப்பு மருந்துகள் தெளிக்கப்படவில்லை. அதுகுறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தவில்லை. தினந்தோறும் அரசு மருத்துவமனையை நோக்கி பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை படையெடுத்து வருகிறார்கள். ஆனால் இதுவரை தமிழக அரசு இதுகுறித்து எந்த பதிலும் சொல்லாமல் மவுனம் காக்கிறது.

படிக்க:
ஹவ்டி மோடியை களத்தில் எதிர்த்த அமெரிக்க – இந்திய செயல்பாட்டாளர்கள் | புகைப்படங்கள் !
♦ டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி ? | மரு. ஃபரூக் அப்துல்லா

சென்னை முகப்பேரை சேர்ந்த 6 வயது சிறுமி மகாலட்சுமி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மர்ம காய்ச்சல் என்று அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்திருக்கிறார். அதற்கு முந்தைய தினம் 3 வயது குழந்தை ஒன்று இறந்திருக்கிறது. மதுரவாயிலைச் சேர்ந்த லோகித் என்ற 8 வயது சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் இறந்திருக்கிறான். சென்னை மாங்காட்டைச் சேர்ந்த பிரித்திகா என்ற 12 வயது சிறுமியும் இறந்திருக்கிறார். மேலும் காஞ்சிபுரத்தை சேர்ந்த 26 வயதான ஜோதிலட்சுமி என்ற பெண்ணும் இறந்துள்ளார். தொடர்ந்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் இறப்பதாக தகவல்கள் வருகின்றன.

மருத்துவ வசதி முழுமை பெறாத காலத்தில் அம்மை நோய் தாக்கி கொத்துக் கொத்தாக இறந்ததைபோல் மருத்துவம் வளர்ந்திருக்கும் இந்த நூற்றாண்டிலும் குழந்தைகள் இறப்பது தற்செயலா? அல்லது சதியா?

டெங்குவிற்கான தடுப்பூசிகள் ஆராய்ச்சியில் உள்ளது என்பது உண்மை என்றாலும், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பல நூற்றுக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய பின்னரும் டெங்குவைப் பரப்பும் கொசுக்களை ஒழிப்பதற்கும், நோய்க்கான மருத்துவத்தை துரிதப்படுத்தி பரவலாக்குவதற்கும் அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன என்பதே கேள்வி?

கொள்ளை நோய்கள் தாக்கும் காலங்களில் அவற்றை தடுப்பதற்கான ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்கான திட்டமே இந்த அரசிடம் இல்லை. சென்னையை சுற்றியுள்ள எல்லா புறநகர் பகுதிகளிலும் ஒருநாள் மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாத அளவிற்கு குட்டையாக தண்ணீர் தேங்கி விடுகின்றது. மெட்ரோ ரயில் முதல் கேபிள் வயர்களை புதைப்பது வரை எங்கு காணினும் மரணக்குழிகள்… இதுவே அதிகப்படியான கொசுக்களை உற்பத்தி செய்வதற்கான முதல் வாய்ப்பாகிறது. மாநகராட்சியின் கொசு ஒழிப்புப் பணியும் வி.ஐ.பி-க்களின் ஏரியாவோடு சுருங்கி விடுகிறது.  இவர்களின் இந்த அலட்சியத்தால் பாதிக்கப்படுபவர்கள் ஏழ்மையில் உழலும் மக்கள்தான்.  அதிலும் குறிப்பாக 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்.

படிக்க:
டெங்கு குறித்த உண்மைகளும் மூடநம்பிக்கைகளும் !
♦ மீண்டும் தலையெடுக்கும் டெங்கு ! அனந்த சயனத்தில் அடிமை அரசு !

கிராமப்புற பகுதிகளில், அங்குள்ள ஆரம்ப  சுகாதார மையத்திலோ போதிய மருந்துகள் இல்லையெனக் கூறி அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை மட்டும் அளித்து மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஆனால் அங்கும் நோய் தீர்ந்தபாடில்லை. கேட்டால் “மர்மக் காய்ச்சல்” என்று கூறப்படுகிறது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 10 பேர், கீழ்பாக்கம் மருத்துவமனையில் 3 பேர், ராயப்பேட்டை மருத்துவமனையில் 7 பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் 4 குழந்தைகள் உட்பட 8 பேர், எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 107 குழந்தைகள் என டெங்கு காய்ச்சலுக்கு மொத்தம் 135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு டெங்கு காய்ச்சல் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தமிழக அரசு தெரிவிக்கிறது. இதன் லட்சணம் தினந்தோறும் அரசு மருத்துவமனைகளுக்கு மக்கள் வந்து குவிவதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

தற்போதைய நிலவரப்படி மருத்துவமனைகளில் உள்ள மருந்து கையிருப்பு போதுமானதாக இல்லாததால், நோய் கட்டுப்படுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள்.  சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் டெல்லிக்கு சென்று சுகாதாரத்துறை மத்திய அமைச்சர் ஹர்ஸ் வர்த்தனை சந்தித்து மருந்துகளை உடனே வழங்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இனி எப்போது மருந்து வந்து… எப்போது மக்களைக் காப்பாற்றுவது ?

பருவ மழைக்காலம் தொடங்கி மாதங்கள் பல கடந்தும் உயிர்க் கொல்லிகளாகிவிட்ட டெங்கு உள்ளிட்ட திடீர் வைரஸ் காய்ச்சலில் இருந்து மக்களை காப்பற்ற போதிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவில்லை. இதன் விளைவுதான் தமிழகத்தில் பல பச்சிளம் குழந்தைகளின் உயிரைப் பறித்துள்ளது.

– வினவு செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க