டகிழக்கு பருவ மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை ஒரே வாரத்தில் 13 ஆகவும், தற்போது அவை 17 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுவரை தமிழக அரசு டெங்குவை தடுப்பதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. அதன் வெளிப்பாடுதான் 17 உயிர்கள் பலியாகியுள்ளது.

டெங்கு காய்ச்சலுக்கு பலியான இரட்டை குழந்தைகள் தக்ஷன், தீக்ஷா (படம் – நன்றி : தினகரன்)

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாதவரத்தை சேர்ந்த இரட்டை குழந்தைகளான தக்ஷன், தீக்ஷா ஆகியோர் டெங்கு காய்ச்சலால் கடந்த அக்டோபர் 21 -ம் தேதி உயிரிழந்தனர்.

சென்னை எண்ணூர் சேர்ந்த சாதிக்கின் மூன்று வயது மகன் சபிக் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தது. மேலும் கடந்த வாரங்களில் புளியந்தோப்பை சேர்ந்த அஸ்லாம், பெரம்பூரை சேர்ந்த ரிஸ்வான், மணலியை சேர்ந்த கவியரசன் உள்பட 5 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் இன்று நேற்று அல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. கடந்த  2017-ல்  மத்திய அரசின் அறிக்கையில் “தேசிய அளவில் டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் 23 ஆயிரத்து 35 பேர் பாதிக்கப்பட்டனர் என்றும் 63 பேர் உயிரிழந்தனர் என்றும் மாநில அளவில் தமிழகம்தான் முதலிடம்” எனவும் குறிப்பிட்டு இருந்தது. அதேபோல், கடந்த ஆண்டு மூவாயிரத்து 315 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அவர்களில் 17 பேர் உயிரிழந்ததாக தெரிவித்து இருந்தது.

மேலும் :
டெங்கு ஒழிப்பு : விடை மறுக்கப்படும் கேள்விகள் !
டெங்கு : செயலிழந்த எடப்பாடி அரசும் மாநகராட்சியுமே குற்றவாளிகள் !

அரசின் இந்த அறிக்கை ஒரு கடைந்தெடுத்த பொய் என்பது சமகாலத்தில் வாழும் அனைவருக்கும் தெரிந்ததே. கடந்த ஆண்டு டெங்குக் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பலரை ‘டெங்கு காய்ச்சல்’ என்று பதிவு செய்யாமல் ‘மர்மக் காய்ச்சல்’ என்றே பதிவு செய்து மக்களின் உயிரோடு விளையாடியது இந்த அரசு.

அரசு மருத்துவமனையின் மீது நம்பிக்கை இழந்து தனியார் மருத்துவமனையை மக்கள் நாடியதும், அவர்களிடம் முடிந்த அளவிற்கு காசையும் பிடுங்கிக் கொண்டு ‘டெங்குக் காய்ச்சல்’ என்று தெரிந்தவுடன் அரசு மருத்துவமனைக்கே திருப்பி அனுப்பிய கொடூரமும் அரங்கேறியது.

மற்றொருபுறம் டெங்கு காய்ச்சல் என்று பதியக் கூடாது என மறைமுகமாக தனியார் மருத்துவமனைகளுக்கு மிரட்டல் விட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த அய்யோக்கியத்தனங்களை எல்லாம் எளிதல் மறந்து விட முடியாது. “சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடும்” பாணியில் செயல்பட்டுவிட்டு,  அரசின் சாமர்த்தியத்தால் டெங்கு காய்ச்சலைத் தடுத்து விட்டோமென்று வெட்கமில்லாமல் பொய் பேசியது அதிமுக கிரிமினல் அரசு.

அதேபாணியை இந்த ஆண்டும் செயல்படுத்துகிறது. பருவமழை தொடங்கிய அக்டோபர் முதற்கொண்டு தமிழகத்தில் டெங்கு நோய் பரவுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன என்பதை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. அதேபோல “அக்டோபர் 1ம் தேதி முதல் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு இருக்கிறது” என்று அரசு சுகாதாரத்துறை செயலாளர் எச்சரித்தும் சுகாதார நடவடிக்கையை துரித்தப்படுத்தாமல், சின்னசிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 17 பேரை பலிகொடுத்துவிட்டு, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார்களாம்.

பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,  “உள்ளாட்சி துறை மூலம் மொத்தம் 9,388 கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்கள் வாகனங்களில் பொருத்தப்பட்டு கொசு மருந்து அடிக்கப்படும் என்றும்,  தமிழகம் முழுவதும் மொத்தம் 1,81,859 பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் சுகாதாரத் துறையுடன் இணைந்து வேகமாக பணியாற்ற  அறிவுறுத்தியுள்ளதாகவும், 50 வீட்டுக்கு ஒரு ஆள் என ஒவ்வொருவரும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மேலும், கடந்த ஆண்டில் 100 சதவீத அறிகுறி இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 10 சதவீதம் மட்டுமே உள்ளது. ஆரம்பத்திலேயே இதை கட்டுப்படுத்தி எங்கேயும் இறப்பு வரக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம். டெங்கு நோயை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்கள், பஸ் ஸ்டாண்ட்கள், பள்ளிகள், கல்லூரிகளில் நிலவேம்பு கசாயம் இலவசமாக கொடுக்க சொல்லியுள்ளோம்” என்று அலட்சியமாகவும், முரணாகவும் சொல்லுகிறார்.

வடகிழக்கு பருவமழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே ஆறு பேர் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானார்கள். சுகாதாரத்தில் பின் தங்கிய மாவட்டமான திருவள்ளூரில் இந்த ஆண்டு  மட்டும் 4000 பேர்  மர்மக் காய்ய்சல் காரணமாக தினந்தோறும் மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வந்திருக்கின்றனர். அப்பொழுதே அதுகுறித்த நடவடிக்கை எடுக்கவில்லை அரசு.

அதன் விளைவு தற்பொழுது 105 பேர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 17 பேருக்கு டெங்கு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு போதிய வசதிகள் இல்லாததால் 12 பேர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுதான் தமிழகம் முழுவதும் உள்ள யதார்த்தம்.

படிக்க :
♦ டெங்கு : ஒழிப்பது எப்படி? 
♦ டெங்கு காய்ச்சல் : மாயையும் உண்மையும் – வீடியோ !

தமிழகத்தில் அடிக்கடி மக்களை பாதிக்கக் கூடிய திடீர்க் காய்ச்சலில் இருந்து காப்பற்ற போதிய மருத்துவர்களோ, மருந்துகளோ இல்லை. கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதர நிலையம் மற்றும் துணை  சுகாதார நிலையங்களில் ஒரெயொரு செவிலியர் மட்டும் சிகிச்சை அளிக்கும் அவல நிலைதான் உள்ளது.

இதனால் மாவட்டத்தில் இருக்கும் தலைமை மருத்துவமனைக்கு மக்கள் படையெடுக்கிறார்கள். இதனால் போதிய மருத்துவர்கள் இல்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாவதோடு, சிகிச்சை அளிக்கவும் திணறுகிறார்கள்.

“ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட எந்த மருத்துவமனைகளும் கொடிய இந்த காய்ச்சலை தடுப்பதற்கு உரிய முறையில் தயார் நிலையில் இல்லை. அரசின் சார்பில் மருத்துவ முகாம்கள் கூட பெருமளவில் நடத்தப்படவில்லை” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இதனைப் பற்றியெல்லாம் கடுகளவும் கவலை இல்லாமல் மாநகராட்சி முதற்கொண்டு உள்ளாட்சி வரை அனைத்து பணிகளையும் தனியாருக்கு டெண்டர் விடுவது, அதன் மூலம் கொள்ளையடித்து கொழுத்து வாழ்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது இந்த பார்ப்பன அடியாள் கிரிமினல் அரசு.

கடந்த ஆண்டு மக்கள் டெங்குவால் மடிந்து கொண்டிருந்த பொழுது தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை விமரிசையாக கொண்டாடினர். இப்பொழுது அதிமுகவின் 47-ம் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் இருக்கிறது.

வினவு செய்திப் பிரிவுவக்கிர மனம் படைத்த இந்த அரசு எந்த அளவிற்கு மக்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த சாட்சி ஒன்றே போதுமானது! மக்கள் பிணத்தின் மீதமர்ந்து அதிகாரத்தை சுவைக்கும் இந்த எடப்பாடி அரசு டெங்கு கொசுவை விட ஆபத்தானது!

 

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க