டெங்கு, மரணம், மெளனம்.. பேச மறுக்கிற விசயமும் திசைமாறும் விவாதமும்

1. டெங்கு காய்ச்சல், மரணங்களை நாம் எந்தச்சூழலின் பின்னணியில் ஆய்வு செய்யவேண்டும்? நிதி ஆயோக்கின் சமீபத்திய அறிக்கையின் பின்புலத்திலும், தனியார்மயமாக்கல், பொது சுகாதாரத்தை தனியாருக்கு தாரைவார்த்துக் கொண்டிருக்கும் சூழலில் வெகுசன மக்கள் நிலை மிகவும் vulnerable- ஆக இருக்கும் சூழலில் ஆய்வு செய்யப்படாமல் இருப்பதன் காரணம் என்ன?

2. கிருமி – நோய் – சிகிச்சை என்ற குறுகியல் கோட்பாட்டு சட்டகத்தின் வழியே நம்முடைய ஆய்வு முறையும் தொற்று நோய் பற்றிய புரிதலும், அதன் மீதான அணுகுமுறையும் சரியா? அந்த அணுகுமுறையால் சிக்கலை மேலும் அதிகமாக்கியுள்ளதா? தொற்று நோய்க்கான புரிதலும், அணுகுமுறையும், செயல்திட்டமும் எந்த சட்டகத்தின் வழியே இருக்கவேண்டும்?

3. உலகில் ஏதாவதொரு நாட்டில் டெங்கு நோய் தடுப்புமுறைகளுக்கு முன்மாதிரி செயல்திட்டம் உள்ளதா? அப்படி உள்ளதெனில் ஏன் அதை இந்திய அளவில் செயல்படுத்தப்படவில்லை? தமிழகத்தில் ஏன் அது நடைமுறையில் இல்லை?

4. கியூபாவில் 36 ஆண்டுகளுக்கு மேலாக டெங்கு தடுப்பு, ஒழிப்பு சிகிச்சை குறித்த ஆராய்ச்சியும் ஏடிஸ் கொசு ஒழிப்பு குறித்த செயல்திட்டத்தின் வெற்றியும் நம் கண்முன்னே உள்ளது. அதை நாம் ஏன் ஆய்வு செய்யாமல் இருக்கிறோம்? அப்படி ஆய்வு செய்தல் அவசியமில்லையா?

5. டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் எத்தனை முறை தாக்கியுள்ளது? அந்ததந்த வருடம் என்ன வகை டெங்கு சீரோடைப் ( serotype) வந்துள்ளது என்ற வரலாற்று பூர்வமான ஆய்வுகள் உள்ளனவா? இப்போது காய்ச்சலில் அவதியுற்ற மக்களின் ரத்தமாதிரிகளில் எந்த வகை டெங்கு வைரஸ் கிருமி தாக்கியது என்றும், இறந்தவர்களின் பரிசோதனைகளில் எந்த வகை டெங்கு கிருமி தாக்கியது என்று பதிவுகளில் உள்ளதா? இந்த ரத்த பரிசோதனை முடிவுகள் நோய் தடுப்புக்கு முக்கியமானதல்லவா?

படிக்க :
டெங்கு காய்ச்சல் : மாயையும் உண்மையும் – வீடியோ !
திருச்சி இனியாவை பலி கொண்டது டெங்கு மட்டுமா ?

6. டெங்கு காய்ச்சல் அதிகமாகியுள்ளதென்றதும் ஒருங்கிணைந்த ஒரு குழு நோய்பரப்பியல் நிபுணர், வெப்பமண்டல் நோய் வல்லுனரான மருத்துவர், பூச்சியியல் நிபுணர், வைரஸ் ஆராய்ச்சியாளர் ஏன் நாம் அமைக்கவில்லை. மருத்துவ ஆராய்ச்சிக்கும் நோய் தடுப்பிற்கும் அது முக்கியமானதல்லவா?

7. காய்ச்சலில் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளின் ஊர், சமூகப் பொருளாதார நிலை, வாழும்சூழல், ஒடுக்கப்பட்ட வகுப்பினரா, ஊட்டசத்தின் அலகீட்டளவு, அவர் கிராமத்திலிருந்து மருத்துவமனை எவ்வளவு தூரத்தில் உள்ளது என்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதா? இறந்தவர்களின் குறித்த ஆய்வுகள் கிராம அளவில் வீட்டிற்கு சென்று மேற்கொள்ளப்பட்டதா? அதற்கான காரணம் கண்டறியப்பட்டதா? மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ளும் போது மேற்கூறப்பட்ட தரவுகள் தொற்று நோய் தடுப்பு செயல்திட்டம் வகுக்க மிக முக்கியமானது அது நம்மிடம் உள்ளதா?

8. டெங்கு நோயால் ரத்த அழுத்தம் குறைவாகி இறப்பவர்களுக்கான நோய் இடர் காரணிகளாக கியூப நாட்டு ஆய்வுகளில் சர்கரை நோய், ஆஸ்த்துமா தொந்தரவு குறிப்பிடப்பட்டுளது. தமிழக டெங்கு மரணங்களில் அந்த இடர்க் காரணிகள் எது என்பது நம்மிடம் உள்ளதா?

9. தடுப்பூசி தான் தீர்வு என்று பேசிவருகிறோம். டெங்கு தடுப்பூசி எல்லோருக்கும் போட முடியுமா? தடுப்பூசி போவாற்கு முன் நிபந்தனை என்ன? அதன் செயல் திறன் எந்த அளவு இருக்கும்? ஒரு முறை போட்டால் மீண்டும் டெங்கு வராதா? தடுப்பூசியினால் என்ன மாதிரியான பக்கவிளைவுகள் வரும், அதை எப்படி தடுப்பது? சுகாதார பொருளாதாரம் குறித்து பேசுபவர்கள் ஒரு தடுப்பூசியில் எத்தனை டாலர் முதலீடு செய்தால் டெங்கு நோயினால் ஏற்படும் நோய்ச்சுமையின் அளவு எவ்வளவு குறையும் ? டெங்கு பொருளாதாரத்தில் என்ன மாற்றம் வரும் என்ற ஆய்வுகள் செய்தோமா?

10. அதிவேக தீவிர நகரமயமாக்கல், பருவ நிலை மாற்றம் , சூழல் சிதைக்கப்படுவது, கொசுக்களின் பெருக்கம் அதிகமாகியுள்ள நிலை, கொசுக்களை கொசுப்புழுக்களை இயற்கையாகவே இரையாக உட்கொள்ளும் பூச்சிகள் ஏன் அழிந்தது? எப்படி பூச்சிக் கொல்லியினால் கொசுக்களுக்கு எதிர்ப்பு சக்தியும், மற்ற பூச்சிகள் மடிந்து போவதால் ஏற்படும் சமநிலைப்பிறழ்வு டெங்குவிற்கு ஏதுவாகவுள்ளது என்ற கோணத்தில் ஆய்வு செய்ய சூழலியலாளர்கள் உயிரியல் நிபுணர்கள், புவியியல் நிபுணர்களோடு இணைந்து மருத்துவர்கள் குழு செயல்பட தயாராக உள்ளனரா?

11. கொசு பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கைகளும் டெங்கு குறித்த நோய் சுமையும் பொருளாதார சுமையும் என்ன, அதற்கு பின்னால் பயனைடைபவர்கள் யார்? பாதிக்கப்படுபவர் யார்? சுகாதரத்தைப்பற்றி பேசும் போதும், நோய் தௌப்பு குறித்து நாம் பேசும் போது வர்க்கப்புள்ளியிலிருந்து தானே நாம் பேச வேண்டும் ? அதை தவிர்த்த நாம் பேசிடமுடியுமா?

நாம் விவாதிக்க வேண்டியவை நிறைய இருக்கிறது, நம்முடைய சட்டகம் அணுகுமுறை, உலக வங்கியின் தலையீடு, கொள்கை முடிவுகள், ஆய்வு முடிவுகள், கொள்கை முடிவுகள் அடுக்கி கொண்டே போகலாம்.

இதை விவாதிப்பதற்கான அறிவை மக்கள் நமக்கு கொடுத்திருக்கிறார்கள். நாம் யாருக்காக, எதை பேசப்போகிறோம், எவரின் குரலாக இருக்கப்போகிறோம் யாருக்கான வழக்குரைஞராக இருக்கப்போகிறோம் என்பது முக்கியம்.

நன்றி : முகநூலில் மருத்துவர். அரவிந்தன் சிவக்குமார்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க