Friday, September 20, 2024
முகப்புசெய்திஇந்தியாதாஜ் கடற்கரை விடுதியில் குப்பை பொறுக்கிய மோடி !

தாஜ் கடற்கரை விடுதியில் குப்பை பொறுக்கிய மோடி !

இங்கே முதலில் குப்பையைப் போட வேண்டும், அதன் பிறகே பேரரசர் படத்தின் ஷூட்டிங்கிற்காக குப்பை எடுக்க முடியும். இப்படித்தான் இந்த ஏமாற்றுக்காரர் கடந்த ஆறாண்டுகளாக இந்தியர்களை முட்டாளாக்கி வருகிறார்.

-

சீன அதிபருடன் இரண்டு நாள் சந்திப்பு நடத்திய மோடி, கடந்த சனிக்கிழமை தான் தங்கிருந்த தனியார் விடுதியின் கடற்கரையில் இருந்த குப்பைகளை பொறுக்கி சுத்தம் செய்தார்.  காலை நேரத்தில்  வராத வேர்வையை வந்ததாகக் காட்டி தண்ணீரை சட்டையில் தெளித்துக்கொண்டும், ஆங்காங்கே ஏற்கெனவே போட்டு வைக்கப்பட்டிருந்த குப்பைகளை பொறுக்கிக் கொண்டும் கடற்கரையில் நடந்து சென்ற மோடியை நான்கைந்து கேமராக்கள் பின் தொடர்ந்து படம் பிடித்தன.

இந்தப் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின.  மோடி தங்கியிருந்த தாஜ் ஃபிஷர்மேன் கோவ் விடுதியின் டிவிட்டர்  பக்கத்தில் வெளியான பதிவில்,

“பிரதமர் மோடிக்கு நாங்கள் சேவகம் செய்தது குறித்து பெருமையடைகிறோம்.  பிளாஸ்டிக்கிற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்ததற்கு நன்றி சொல்கிறோம். எதிர்காலத்தின் நலன் கருதி எங்களது வளாகங்களில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை வெளியேற்ற உறுதி பூண்டுள்ளோம்” எனக் கூறி, அன்று காலை பிரதமர் பகிர்ந்துகொண்டிருந்த கடற்கரையை தூய்மையாக்கும் வீடியோவை பகிர்ந்திருந்தனர்.

மோடியின் குப்பை பொறுக்கும் படம், திட்டமிட்ட திரைக்கதையால் உருவாக்கப்பட்டது என்பதை சமூக ஊடகவாசிகள் கண்டறிந்துவிட்டனர். வார இறுதி நாட்களில் மோடியின் குப்பை பொறுக்கும் நாடகத்தை சமூக ஊடகங்கள் கேலி பேசியும் விமர்சித்தும் தள்ளினர்.

படிக்க:
சிரியாவிற்குள் நுழைந்த துருக்கிப் படைகள் | படக்கட்டுரை
டிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் !

ஐந்து நட்சத்திர விடுதியான ஃபிஷர்மேன் கோவ் தன்னுடைய வளாகத்துக்குட்பட்ட இடத்தைக்கூட சுத்தமாக வைத்துக்கொள்ள முடியவில்லையா என பலரும் ட்விட்டரில் கேள்வி எழுப்பினர்.

“தாஜ் ஹோட்டல்களை நாம் தரக்குறைவானதாகப் பார்க்க வேண்டும்.  பிரதமர் கடற்கரையை சுத்தம் செய்யும் வீடியோ உண்மையெனில் மிக மோசமான பராமரிப்பு அவர்களுடையது” எனத் தெரிவித்துள்ளார் விஷ்ணு.

சூரஜ்: ஐந்து நட்சத்திர விடுதிகள் தங்களுடைய வளாகங்களை சுத்தமாக வைத்துக்கொள்வதில்லை என்பது வருத்தத்துக்குரியது. சுற்றுலா பயணிகள் வந்துதான் சுத்தம் செய்ய வேண்டியிருக்கிறது. தயவு செய்து உங்கள் விடுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

நந்தினி : நம்மால் ஐந்து நட்சத்திர விடுதிகள்கூட அழுக்காகி விடுகின்றன.

ராகுல் :  தகவலுக்காக சொல்கிறேன். தாஜ் ஃபிஷர்மேன் கோவ், ஒரு ஐந்து நட்சத்திர விடுதி. இது ஒரு தனியார் கடற்கரை, இங்கே ஒரே ஒரு குப்பையைக்கூடக் காண முடியாது. இங்கே முதலில் குப்பையைப் போட வேண்டும், அதன் பிறகே பேரரசர் படத்தின் ஷூட்டிங்கிற்காக குப்பை எடுக்க முடியும். இப்படித்தான் இந்த ஏமாற்றுக்காரர் கடந்த ஆறாண்டுகளாக இந்தியர்களை முட்டாளாக்கி வருகிறார்.

ஜவஹர் : என்னவொரு நடிப்பு! மோடி ஆஸ்கர் விருது பெற தகுதி பெற்றவர்.

தனியார் விடுதிக்கு சொந்தமான கடற்கரையை சுத்தம் செய்தது போதும், எங்கள் ஊருக்கு வாருங்கள் என ஒரு சிலர் மோடி அழைப்பும் விடுத்திருந்தனர்…

கஃபீல் கான் :  அன்புள்ள நரேந்திர மோடி, பட்னாவுக்கும் நீங்கள் தேவை சார்…

நிகில் : மகாபலிபுரத்தை சுத்தம் செய்த உண்மையான ஹீரோக்களான இவர்களுக்கு ஒரு மாதமாக சம்பளம் அளிக்கப்படவில்லை. மோடியின் நாடகத்தை ட்விட் செய்து பகிர்ந்துகொண்ட ஊடக தொகுப்பாளர்கள் இது குறித்து பேசுவார்களா?

நாட்டின் முக்கியமான பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் எங்கு போனாலும் கேமராக்களை வைத்து விளம்பரப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார் மோடி. நாடு பற்றி எரியும்போது கேமராவைப் பார்த்து சிரிக்கும் நாட்டின் தலைவர் கடைந்தெடுத்த மக்கள் விரோதியாகத்தான் இருக்க முடியும்.


கலைமதி
நன்றி : டெலிகிராப் இந்தியா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க