Friday, January 17, 2025
முகப்புசெய்திஇந்தியாபாபர் மசூதி இடிப்பு வழக்கு : முரண் நிறைந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு !

பாபர் மசூதி இடிப்பு வழக்கு : முரண் நிறைந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு !

பாபர் மசூதி இருந்தது உண்மைதான், ஆனாலும் அங்கு ராமனுக்கு கோவில் கட்டிக் கொள்ளலாம் என வெளியிடப்பட்ட தீர்ப்பில் முரண்கள் நிறைந்து கிடக்கின்றன.

-

“பாபர் மசூதியில் தான் இராமன் பிறந்தான்” என்ற ஆர்.எஸ்.எஸ்.-ஸின் ஒற்றை வரிக்கு 1,045 பக்கங்களுக்கு பொழிப்புரை ஒன்றை எழுதி ஒரு தீர்ப்பையும் உச்ச நீதிமன்றம் வழங்கி விட்டது.

அதன் சாரம் – 500 ஆண்டுகளாக நேரடி வரலாற்று சாட்சியாக பாபர் மசூதி அயோத்தியில் வீற்றிருக்க, அது கட்டப்பட்ட 1528-ல் இருந்து அயோத்திய கலவரத்தை ஒட்டி காலனிய சட்டம் நடைமுறைக்கு வந்த 1857 வரை, மசூதியில் தொழுகை நடத்தியதற்கான எந்த ஒரு சான்றையும் முஸ்லிம் தரப்பு முன் வைக்கவில்லை எனவே பாபர் மசூதியை விஸ்வ ஹிந்து பரிஷத்திடம் வழங்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

தீர்ப்பின் முதன்மையான கூறுகள் 786, 797 மற்றும் 798-ம் பத்திகளில் உள்ளன:

786 பத்தி: 1528-ம் ஆண்டில் பாபரின் உத்தரவின் பேரில் மசூதி கட்டப்பட்டது என்பதுதான் [முஸ்லீம்] தரப்பின் வழக்கு… ஆனால் கட்டுமான தேதிக்கும் 1856 – 57-க்கும் இடையில் மசூதியில் தொழுகை நடத்தியது குறித்து அவர்களிடம் சான்றுகள் எதுவும் இல்லை. மசூதி கட்டப்பட்ட நாளிலிருந்து பிரிட்டிஷாரால் கிரில்-செங்கல் சுவர் அமைக்கும் வரை கடந்த 325 ஆண்டுகளுக்கும் மேலாக, சர்ச்சைக்குரிய தளத்தின் மீதான உரிமையை பறைசாற்ற எவ்வித சான்றையும் முஸ்லிம்கள் முன் வைக்கவில்லை. அதே போல இந்த காலகட்டத்தில் மசூதியில் தொழுகை செய்யப்பட்டதற்கான சான்றுகள் எதுவும் இல்லை……

797 பத்தி: பெரும்பங்கு சான்றுகளின் (preponderance of probabilities) அடிப்படையில், 1857-ம் ஆண்டில் கிரில்-செங்கல் சுவர் அமைக்கப்பட்டிருந்த போதிலும், வெளி முற்றத்தில் இந்துக்கள் வழிபாடு தடையின்றி தொடர்ந்தது என்பதற்கான தெளிவான சான்றுகள் உள்ளன. வெளிப்புற முற்றத்தை அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததை பார்க்கும் போது அது தெரிய வருகிறது.

798 பத்தி: உள் முற்றத்தைப் பொறுத்தவரை, 1857-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் அயோத்தி இணைக்கப்படுவதற்கு முன்னர் இந்துக்கள் அங்கு வழிபாடு செய்ததை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. பதினாறாம் நூற்றாண்டில் மசூதி கட்டப்பட்ட தேதியிலிருந்து 1857-ம் ஆண்டு வரை உள் முற்றத்தை தங்களது கட்டுப்பாட்டில் முஸ்லிம்கள் வைத்திருந்ததை குறிக்க எந்த சான்றையும் அவர்கள் வழங்கவில்லை. கிரில்-செங்ல் சுவர் அமைக்கப்பட்ட பின்னர், மசூதியின் கட்டமைப்பு தொடர்ந்து இருந்தது. மேலும் அதன் எல்லைக்குள் தொழுகை நடததப்பட்டது என்பதற்கான சான்றுகள் உள்ளன. (அழுத்தம் சேர்க்கப்பட்டது)

படிக்க:
அயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து !
♦ காஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் !

ஆர்வமூட்டும் வகையில், அதே 798 பத்தியில் கீழ்வருமாறு நீதிமன்றம் குறிப்பிடுகிறது:

1949-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22/23 தேதிகளின் இடைப்பட்ட இரவில் இந்து சிலைகளை நிறுவி மசூதியின் புனித தன்மை சேதப்படுத்தப்பட்டதன் மூலமாக அதாவது, சட்டபூர்வமாக அல்ல மாறாக ஒரு திட்டமிட்ட நடவடிக்கை மூலமாகவே வழிபாட்டிலிருந்தும் உடைமைகளிலிருந்தும் முஸ்லிம்களை வெளியேற்றுவது நடந்தேறியது. சிஆர்பிசி (CrPC) 1898-ன் பிரிவு 145-ன் கீழ் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு, உள் முற்றத்தை இணைத்ததைத் தொடர்ந்து இந்து சிலைகளை வழிபடுவது அனுமதிக்கப்பட்டது. வழக்குகளின் நிலுவையின் போது, முஸ்லிம்களின் பொது வழிபாட்டுத் தலத்தை அழிக்கும் திட்டமிட்ட செயலில் மசூதியின் முழு அமைப்பும் வீழ்த்தப்பட்டது. 450 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட ஒரு மசூதியை முஸ்லிம்கள் முறைகேடாக இழந்துவிட்டனர். (அழுத்தம் சேர்க்கப்பட்டது)

வேறு வார்த்தைகளில் நீதிமன்றம் கூறுவது என்னவெனில்,

1) 450 ஆண்டுகளுக்கு முன்பு மசூதி கட்டப்பட்டது உண்மைதான்.
2) முஸ்லிம்கள் முறைகேடாக வழிபாட்டு தளத்திலிருந்து வெளியேற்றப்படும் வரை அதாவது 1857 முதல் 1949 வரை அவர்கள் வழிபாடு செய்ததற்கு சான்று இருக்கிறது.
3) ஆனால் மசூதி கட்டப்பட்டதிலிருந்து உள் முற்றத்தை தங்களது முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்ததற்கான எந்தவிதமான சான்றுகளும் முஸ்லிம்களிடம் இல்லை அதே சமயம் சர்ச்சைக்குரிய இடத்தில் முஸ்லிம் தரப்பு கூற்றுகளை விட இந்துக்கள் முன்வைக்கும் கூற்றுகளுக்கு சான்றுகள் பொருத்தமாக உள்ளன.

ஆனால் மசூதி கட்டப்பட்ட 1528-ம் ஆண்டு மற்றும் 1857-க்கு இடைப்பட்ட காலத்தில் மசூதி எதற்கு பயன்பட்டது என்பதை நீதிமன்றம் கவனிக்காமல் விட்டுவிட்டது. உள்ளூர் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே உள் மற்றும் வெளி முற்றங்கள் பயன்படுத்தப்பட்ட விதம் குறித்து ஒரு சிக்கல் 1856-ம் ஆண்டில் எழுந்தால் அதற்கு முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் இருவரும் முன்பிருந்தே அங்கு வழிபாடுகள் செய்து கொண்டிருந்தனர் என்பதே காரணம்.

“450 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட ஒரு மசூதியை முஸ்லிம்கள் தவறாக இழந்துவிட்டனர்” என்று நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறும்போது, காலம் முழுவதும் அது ஒரு மசூதியாகவே இருந்தது என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. எனவே அயோத்தி முஸ்லீம்களுக்கே அது சொந்தமாக இருக்கும்.

ஆயினும் கூட, அது தங்களது முழுமையான உடைமை என்பதற்கோ அல்லது 300 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு நமாஸ் செய்யப்பட்டது என்பதற்கோ எவ்வித சான்றையும் முஸ்லீம் தரப்பினால் வழங்க முடியவில்லை எனவே நீதிமன்றம் அந்த இடத்தை இந்து தரப்பிடம் ஒப்படைத்தது.

நீதிமன்றம் நிராகரித்த நிர்மோஹி அகாராவைத் (Nirmohi Akhara) தவிர அந்த இடத்தின் முழு உரிமைக்கு சான்றளிக்கும்படி வேறு எங்கும் இந்து தரப்பினரால் கேட்கப்படவில்லை. மசூதியின் குவிமாட கட்டமைப்பிற்கு வெளியே ராம் சபுத்ராவில் (Ram Chabutra) இந்துக்கள் வழிபாடு செய்தது மற்றும் 18-ம் நூற்றாண்டின் ஐரோப்பிய பயணி ஜோசப் டிஃபென்டாலரின் (Jozef Tieffenthaler) குறிப்பின் படி ‘பேடி’ அல்லது சபுத்ரா / தொட்டில் வழிபாடு (‘bedi’ or chabutra/cradle) இருந்தது பற்றிய விவரங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. ஆனால் உள் முற்றத்தில் இந்துக்கள் வழிபட்டார்கள் என்ற கூற்றுக்கு இது ஒரு தெளிவற்ற சான்றாக இருந்தாலும் இதனடிப்படையில்தான் முரண்பட்ட தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


தமிழாக்கம் : சுகுமார்
நன்றி : தி வயர். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க