Monday, August 10, 2020
முகப்பு செய்தி இந்தியா அமித் ஷாவின் குடியுரிமை மசோதா இந்து ராஷ்டிரத்துக்கானது !

அமித் ஷாவின் குடியுரிமை மசோதா இந்து ராஷ்டிரத்துக்கானது !

குடியுரிமை மசோதா நிற்வேற்றப்பட்டதன் மூலம் மில்லியன்கணக்கான இந்திய முஸ்லிம்களை, குடியுரிமை இழந்துவிடுமோ என்கிற அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது அரசு.

-

திங்கள்கிழமை இரவு மக்களவையில் பேசிய அமித் ஷாவின் உரையில் ஒரு வார்த்தை ஆதிக்கம் செலுத்தியது: இந்தியில் அகதிகளைக் குறிக்கும் ‘ஷரனார்த்தி’ என்ற வார்த்தை அது. அகதிகளின் மீதுள்ள மனிதாபிமானம் காரணமாக, மோடி தலைமையிலான அரசாங்கம் இந்தியாவின் குடியுரிமைச் சட்டம் மாற்றப்பட முடிவு செய்ததாக அமித் ஷா கூறினார். மக்களவையில் நிறைவேற்றப்பட்டு புதன்கிழமை மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது இந்தச் சட்டம்.

இந்த அக்கறை எல்லோருக்குமானதல்ல: ஒரு முஸ்லீம் பெரும்பான்மை நாட்டில் மதத் துன்புறுத்தல்களில் இருந்து தப்பியவர்கள் மட்டுமே ஷாவின் புத்தகத்தில் ‘அகதிகள்’ என்ற தகுதிக்கு உரியவர்கள். மற்றவர்கள் அனைவரும் – உதாரணமாக, பவுத்தர்கள் பெரும்பான்மையாக உள்ள மியான்மரில் இனப்படுகொலையில் இருந்து தப்பிக்கும் ரோகிங்கியாக்கள் – ‘குஸ்பெதி’ அல்லது ஊடுருவியவர்கள்.

இந்த பிளவு விளக்குவது என்ன?

அரசாங்கத்தின் பார்வையில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு என்ன தேவை என்பது குறித்து மக்களவையில் ஷா வெளிப்படுத்தியிருக்காவிட்டால், பதில் ஒரு அனுமானமாகவே இருந்திருக்கும்: இந்தியப் பிரிவினைக்கு அது சற்றும் குறைவில்லாதது.

இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு 1947 இல் துல்லியமாக என்ன நடந்ததோ அது 2019-ல் இந்திய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு வழிகாட்டுகிறது. ஷாவின் தர்க்கத்தில் கவனம் செலுத்துங்கள்: பிரிட்டிஷ் இந்தியா 1947-இல் இரு நாடுகளாக பிரிக்கப்பட்டது. பாகிஸ்தான் (பின்னர் பங்களாதேஷ்) மத சிறுபான்மையினரை மோசமாக நடத்தியது; அந்த சிறுபான்மையினருக்கு அடைக்கலம் தருவதற்கு இந்தியா ஒரு சிறப்புப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது – ஆனால் அந்த சிறுபான்மையினருக்கு மட்டுமே.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பங்களாதேஷிலிருந்து தப்பி வரும் இந்து வங்காளிகளுக்கு இந்தியா தஞ்சம் அளிக்க வேண்டும், ஆனால் மியான்மரில் இருந்து தப்பிக்கும் முஸ்லிம் ரோகிங்கியாக்களுக்கு அல்ல. ஏனென்றால், ஷாவின் கற்பனையில், பாகிஸ்தான் ஒரு முஸ்லீம் தேசமாக இருப்பதைப் போலவே, இந்தியா ஒரு இந்து தேசமாகும். இது பகுத்தறிவில் ஆழமான குறைபாடுடையது.

ஒன்று, சுதந்திர இந்தியாவின் தலைவர்கள் பாக்கிஸ்தானின் நிறுவனர்களின் இரு நாடு கோட்பாட்டை தீர்மானமாக நிராகரித்து, இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற குடியரசாக மாற்றிய ஒரு அரசியலமைப்பை அங்கீகரித்தனர்.

படிக்க:
குடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் !
♦ குடியுரிமை சட்ட திருத்த மசோதா : பரவும் போராட்டம் – கொதிப்பில் வடகிழக்கு !

பல ஆண்டுகளாக, இந்த மதச்சார்பற்ற குடியரசு, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து வந்த அகதிகளுக்கு மட்டுமல்லாமல், திபெத்தியர்கள் தங்கள் தாயகத்தை சீனா கையகப்படுத்தியதில் இருந்து தப்பித்து வந்தவர்கள், சிங்களவர்களின் வன்முறையிலிருந்து தப்பித்து வந்த தமிழர்கள் ஆகியோரும் இந்தியா வருகின்றனர். சில அகதிகள் இந்திய குடிமக்களாக இயல்பாக்கப்பட்டாலும், பலர் இன்னும் ஒடுக்கப்பட்ட மக்களாகவே வாழ்கின்றனர். அகதிகளுக்கான நிலையான சட்ட கட்டமைப்பை இந்தியா கொண்டிருக்கவில்லை என்பது உண்மைதான், இந்த இடைவெளி நிரப்பப்பட வேண்டும். ஆனால், மோடி அரசாங்கத்தின் குடியுரிமை மசோதாவில் அதற்கு பதில் இல்லை.

மாறாக, முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மீது மட்டுமே கவனம் செலுத்துவதன் மூலம், அவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள். குடியுரிமை மசோதா மோடி அரசாங்கத்தின் உண்மையான நிகழ்ச்சி நிரலைக் காட்டிக் கொடுக்கிறது. அதாவது, இந்தியாவை – ஒரு மதச்சார்பற்ற நாடாக உள்ள இந்தியாவை – கலைத்து, அதற்கு பதிலாக ஒரு இந்து ராஷ்டிரமாக அதை மாற்ற வேண்டும் என்பதே அந்த நிகழ்ச்சி நிரல்!

மக்களவையில் ஷா, அகதிகளுக்கு இடமளிப்பதில் மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால் இந்திய முசுலீம்கள் பயப்பட தேவையில்லை என்று உறுதியளித்தார். ஆனால், அதேநேரத்தில் அவர் குடிமக்களின் தேசிய பதிவேட்டை இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தும் அச்சுறுத்தலை மீண்டும் உறுதியாகக் கூறினார். இந்த ஆண்டு அசாமில் ‘ஊடுருவல்காரர்களை’ தூய்மைப்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட தேசிய பதிவேடு, பரவலான அதிர்ச்சி மற்றும் தன்னிச்சையான விலக்குகளை மட்டுமே ஏற்படுத்தியது.

முஸ்லீம் புலம்பெயர்ந்தோரை வெளிப்படையாக விலக்கும் வகையில் குடியுரிமைச் சட்டத்தை மாற்றிய பின்னர், நாடு முழுவதிலும் இதுபோன்ற ஒரு திட்டத்தை மேற்கொள்வதாக அச்சுறுத்தியதன் மூலம் அரசாங்கம் மில்லியன்கணக்கான இந்திய முஸ்லிம்களை, குடியுரிமை இழந்துவிடுமோ என்கிற அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த அச்சத்தை மட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, இந்தியாவின் “மூல் நிவாசி” அல்லது அசல் குடியிருப்பாளர்கள் என்.ஆர்.சி பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று ஷா மக்களவையில் சாதாரணமாகக் குறிப்பிட்டார். ஒரு இந்து தேசியவாத கட்சியின் கற்பனையில் இந்தியாவின் அசல் குடியிருப்பாளர் யார்?

மத சிறுபான்மையினரை நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளுவது என்பது ஒரு இந்து ராஷ்டிரத்தை உருவாக்கும் மோடி அரசாங்கத்தின் லட்சியத்திற்கு முற்றிலும் பொருந்திப் போகிறது!

வினவு செய்திப் பிரிவு
கட்டுரை : சுப்ரியா சர்மா
கலைமதி
நன்றி : ஸ்க்ரால்.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க