Saturday, July 13, 2024
முகப்புசெய்திஇந்தியாCAA எதிர்ப்புப் போராளிகள் பாலியல் வன்முறையாளர்களாம் ! பாஜக எம்பி பேச்சு !

CAA எதிர்ப்புப் போராளிகள் பாலியல் வன்முறையாளர்களாம் ! பாஜக எம்பி பேச்சு !

பாஜக ஆட்சிக்கு வருவதற்கு டெல்லி மக்கள் வாக்களித்தால் ஷாஹீன் பாக்-இன் போராட்டக்காரர்கள் யாருமே இனி அங்கு இருக்கமாட்டார்கள் என்று இதற்கு முந்தைய நாள் அவர் கூறியிருந்தார்.

-

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து ஷாஹீன் பாக்கில் போராட்டங்கள் தொடர்ந்தால் “காஷ்மீர் போன்ற சூழ்நிலையை” டெல்லி எதிர்கொள்ளும் என்று மேற்கு தில்லி பாராளுமன்ற உறுப்பினர் பிரவேஷ் வர்மா செவ்வாய்க்கிழமை (28.01.2020) எச்சரித்திருக்கிறார்.

“வீடுகளுக்குள் நுழைந்து நம்முடைய சகோதரிகள் மற்றும் மகள்களை ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள் பாலியல் பலாத்காரம் செய்வார்கள்” என்றும் வர்மா கூறியிருக்கிறார். பாஜக ஆட்சிக்கு வருவதற்கு டெல்லி மக்கள் வாக்களித்தால் ஷாஹீன் பாக் நகரில் போராட்டக்காரர்கள் யாருமே இனி அங்கு இருக்கமாட்டார்கள் என்று இதற்கு முந்தைய நாள் அவர் கூறியிருந்தார்.

பிரவேஷ் வர்மா.

ஆனால் ஷாஹீன் பாக்கிலுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருப்பதுதான் அந்த போராட்டத்தின் சிறப்பம்சம். 2019, டிசம்பர் 15-ம் தேதி முதல் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு முதல், ஜாமியா பல்கலைகழக தாக்குதல் எதிர்ப்பு, பா.ஜ.க எதிர்ப்பு வரை பெண்களே தலைமை தாங்கி நடத்தும் அமைதி வழியிலான ஷாஹீன் பாக் போராட்டத்திற்கு இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பு மக்களிடமிருந்து ஆதரவு குவிந்திருக்கிறது. மேலும் அதே வடிவிலான போராட்டங்களை மும்பை, பெங்களூரூ உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் முன்னெடுத்து காட்டியிருக்கின்றனர்.

“காஷ்மீரில் நம்முடைய பண்டிட்டுகளின் மகள்கள் மற்றும் சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை டெல்லி மக்கள் அறிவார்கள். இதே போன்ற நிகழ்வுகள் உத்தரப்பிரதேசம், ஹைதராபாத், கேரளாவில் தொடர்ந்தன. இன்று, இதேபோன்ற நிலைமை டெல்லியில் (ஷாஹீன் பாக்) எழுந்துள்ளது. இலட்சக்கணக்கான மக்கள் அங்கு கூடுகிறார்கள். டெல்லி மக்கள் சிந்தித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும். அவர்கள் உங்கள் வீடுகளுக்குள் நுழைந்து, உங்கள் சகோதரிகளையும் மகள்களையும் கற்பழித்து அவர்களைக் கொல்லலாம். இப்போது நேரம் இருக்கிறது. ஆனால் உங்களை காப்பாற்ற மோடிஜியும் அமித் ஷாவும் நாளைக்கு வரமாட்டார்கள். நரேந்திர மோடி பிரதமராக இருக்கும் வரை மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். வேறு யாராவது பொறுப்பேற்றால் இங்கு யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது” என்றார் வர்மா.

படிக்க:
♦ எம்புள்ளைய விரட்டிட்டீங்களே | குழந்தைகளை விரட்டும் பொதுத்தேர்வு !
♦ CAA-வை எதிர்த்ததால் கோவா கலாச்சார விழாவிலிருந்து பத்திரிகையாளர் ஃபாயே டிசோசா நீக்கம் !

“எங்கள் அரசாங்கம் அமைக்கப்பட்டால், பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு எனக்கு ஒரு மாதம் நேரம் கொடுங்கள். என்னுடைய தொகுதியில் (மேற்கு டெல்லி) அரசு நிலத்தில் கட்டப்பட்ட அனைத்து பள்ளி வாசல்களையும் அகற்றுவேன்” என்று மேலும் அவர் கூறியுள்ளார்.

டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் அமித்ஷா மற்றும் பிரவேஷ் வர்மா.

சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்துக்களுக்கு ஏற்ப வர்மாவின் கருத்துக்கள் உள்ளதை பார்க்கலாம். “பிப்ரவரி 8, காலை 10 மணிக்கு முன்னதாகவே தாமரை சின்னத்தை உங்கள் குடும்பத்தினருடன் அழுத்துவீர்களா… மற்றும் நண்பர்களே, பொத்தானை மிகவும் வலுவாக அழுத்தங்கள். அது ஷாஹீன் பாக் எதிர்ப்பாளர்களை அந்த இடத்தை விட்டு மாலையில் அகற்றிவிடும்” என்று மூன்று நாட்களுக்கு முன்பு ஜவஹர்லால் நேரு அரங்கத்தில் பாஜக-வின் சமூக ஊடக தன்னார்வலர்கள் கூட்டத்தில் உரையாற்றிய ஷா கூறினார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு எதிர்ப்பு போராட்டக்காரர்களை தேச துரோகிகளாக கட்டங்கட்டும் வேலையை பா.ஜ.கவினர் தொடர்ந்து சதித்தனமாக செய்கின்றனர். “இந்த தேசத்திற்கு யாரெல்லாம் துரோகிகளாக இருக்கிறார்களோ” என்று ரிதாலாவில் நடந்த ஒரு பேரணியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஒவ்வொரு முறை முழங்கும் போதும், “அவர்களை சுட்டுக் கொல்லுங்கள்” என்ற அந்த முழக்கத்தை பாஜக ஆதரவு கூட்டத்தினர் நிறைவு செய்தனர்.

நாடே பொருளாதாரச் சிக்கலில் சிக்கி சிதிலமடைந்து வரும் நிலையில், “எரிகிற வீட்டில் பிடுங்கும் வரை இலாபம்” என்பது போல தன்னுடைய இந்துத்துவக் கனவை இரத்தக் களறியுடன் நிறைவேற்றிட தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் முயன்று வருகிறது.

சுகுமார்
நன்றி :  இந்தியன் எக்ஸ்பிரஸ். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க