privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்TNPSC மோசடி : இது வெறும் ஊழல் அல்ல ! உங்கள் உழைப்பை அழிப்பது !

TNPSC மோசடி : இது வெறும் ஊழல் அல்ல ! உங்கள் உழைப்பை அழிப்பது !

தங்களின் வேலை வாய்ப்புகளை கொள்ளையடிக்கும் முயற்சி என்பதை மக்கள் உணர வேண்டும். அதே போல் களத்தில் இறங்கிப் போராட வேண்டும்.

-

மிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வுகளில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து ஊடகங்களில் தொடர்ந்து வெளியாகி வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

தமிழக அரசுப் பணிகளுக்குத் தேவையானவர்களை குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 3 மற்றும் குரூப் 4 ஆகிய போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்வதற்காக தமிழ்நாடு தேர்வாணையம் ஏற்படுத்தப்பட்டது.  இந்தத் தேர்வுகளில் வெல்பவர்கள் அரசு அலுவலகங்களில் உதவியாளர் முதல் வருவாய்க் கோட்டாட்சியர், வட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர் உள்ளிட்ட பதவிகளில் அமர்த்தப்படுவர்.

கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் குரூப் 4 எனும் நான்காம் நிலை அரசுப் பணியாளர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் நவம்பர் மாதம் வெளியானது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், சர்வேயர், தட்டச்சர் போன்ற பணிகளுக்காக நடத்தப்பட்ட இந்தத் தேர்வு 5,575 மையங்களில் நடந்தது; மொத்தம் 16,29,865 பேர் தேர்வெழுதினர். தேர்வு முடிவுகள் வெளியாக அதன் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட போது அதில் முதல் 100 இடங்களில் இருந்தவர்களில் 35 பேர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய இரண்டு இடங்களில் இருந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களாக இருந்தனர். இவர்களில் பலர் வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

இவ்வாறு வேறு மாவட்டத்தில் இருந்து ராமநாதபுரம் வந்து தேர்வெழுதியவர்கள் அதற்காக சொன்ன காரணமும் ஒரே போல் இருக்கவே, இதில் முறைகேடு இருப்பதாக மற்ற போட்டியாளர்கள் கூறினர். இதையடுத்து, தேர்வாணையம் சிபிசிஐடி விசாரணை கோரியது. போலீசார் நடத்திய விசாரணையில் 99 தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்தது.

படிக்க :
♦ நீட் தேர்வு ஆள் மாறாட்டம் : பாஜகவின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது !
♦ வியாபம் ஊழல் : பார்ப்பன கிரிமினல்தனம் !

முறைகேடுகளில் ஈடுபட்டவர்களின் மேல் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி போலீசார்,  இதுவரை தேர்வர்கள் உட்பட 14 பேரை கைது செய்துள்ளனர். மேலும், கீழக்கரை வட்டாட்சியர் வீரராஜ், ராமேஸ்வரம் வட்டாட்சியர் பார்த்தசாரதி ஆகியோர் விசாரணை செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குற்றம் எவ்வாறு நடந்தது என்பதற்கு சிபிசிஐடி போலீசார் எழுதியுள்ள திரைக்கதை நமது சந்தேகத்தை மேலும் அதிகரிப்பதாக உள்ளது.

முதலிடம் பெற்ற 100 பேரின் தேர்வுத் தாள்கள் சோதிக்கப்பட்டபோது, அதில் 52 பேரின் தேர்வுத் தாள்கள் மாயமாகும் மையால் முதலில் நிரப்பப்பட்டு, பிறகு திருத்தம் செய்யப்பட்டது என்பது தெரியவந்தாம். அதாவது முதலில் மாயமாகும் மையால் எழுதி, அந்த விடைத்தாள்கள் திருத்தும் மையத்திற்கு வந்து சேரும் இடைவெளியில் நல்ல மையால் எழுதப்பட்டது என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதில் ஓம் கந்தன் என்பரே மூளை என்பதாகச் சொல்லி கைதுள்ளனர் போலீசார். ஓம் கந்தனும், சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்கிற இடைத்தரகரும் சேர்ந்துதான் இந்த முறைகேட்டை நடத்தியுள்ளனர்.

மாதிரி படம்
மாதிரி படம்

ராமேஸ்வரம், கீழக்கரை பகுதி தேர்வு மையத்தில் தனக்கு பணம் கொடுத்தவர்களை தேர்வெழுதச் செய்த ஜெயக்குமார், தன்னிடம் பணம் கொடுத்தவர்களுக்கு, எழுதி சிறிது நேரத்தில் மாயமாகும் பேனாக்களைக் கொடுத்துள்ளார். ‘மேஜிக்’ பேனாக்களால் நிரப்பப்பட்ட விடைத்தாள்கள் தேர்வு முடிந்த பின் ராமநாதபுரம் மாவட்ட கருவூலத்தில் பத்திரமாக வைக்கப்பட்டன. விடைத்தாள்களை அங்கிருந்து சென்னை தேர்வாணையத்திற்கு கொண்டு செல்லும் பணியில் உள்ள மாணிக்கவேலு என்பவரின் உதவியாளர்தான் ஓம் கந்தன்.

குறிப்பிட்ட நாளில் விடைத்தாள் பண்டல்கள் ஒரு தனியார் சரக்கு வாகனத்தில் ஏற்றி போலீசு பாதுகாப்புடன் சென்னைக்குப் அனுப்பப்பட்டன. உடன் மாணிக்க வேலுவும், ஓம் கந்தனும் சென்றுள்ளனர். சென்னை வரும் வழியில் சிவகங்கையில் தேர்வெழுதியவர்களின் விடைத்தாள்களும் அதே வாகனத்தில் ஏற்றப்பட்டன. இந்த வாகனத்தை ஜெயக்குமார் தனது காரில் பின் தொடர்ந்தார். விடைத்தாள்களை ஏற்றிவந்த வாகனம் சிவகங்கையைத் தாண்டிய பிறகு, சிறிது தூரத்தில் உணவிற்கென நிறுத்தினார் ஓம் கந்தன்.

மற்றவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வண்டிக்கு திரும்பிய ஓம் கந்தன், குறிப்பிட்ட பண்டல்களை எடுத்து ஜெயக்குமாரிடம் கொடுத்துள்ளார். அந்த விடைத்தாள்கள் மேஜிக் மையால் எழுதப்பட்டு அழிந்து போனவை; அதில் ஜெயக்குமார் சரியான பதிலை எழுதியுள்ளார். எப்படி? சென்னை வரும் வழியில் ஓடும் காரில் வைத்தே எழுதியுள்ளார். பின்னர் மீண்டும் அதிகாலை விழுப்புரம் அருகில் உள்ள விக்ரவாண்டியில் விடைத்தாள்களின் வாகனம் மீண்டும் தேனீர் கடை ஒன்றில் நிறுத்தப்பட்டது. அப்போது ஜெயக்குமாரிடமிருந்து திருத்தப்பட்ட விடைத்தாள்களை ஓம் கந்தன் பெற்று மற்ற பண்டில்களோடு சேர்த்துள்ளார்.

ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தை விஞ்சும் இந்த சாகசத்தில் ஈடுபட்டதற்காக தேர்வாணையத்தில் எழுத்தராக பணிபுரியும் ஓம் கந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பிறரும் இதே போல் கடை நிலை ஊழியர்களும், இடைத்தரகர்களும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

o0o

இதற்கிடையே கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி நடந்த குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேற்படி தேர்வில் தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 56 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். கடந்த 2018-ம் ஆண்டு குரூப்-2ஏ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் வெற்றி பெற்றவர்கள் தற்போது தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர்.

2017-ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வில் சுமார் 42 பேர் முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் வடிவு, சென்னை பட்டினப்பாக்கம் பதிவுத் துறை தலைவர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் ஞானசம்பந்தம், செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் ஆனந்தன் ஆகியோர் குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டில் கைதாகி உள்ளனனர்.

இந்த முறைகேட்டிலும் குரூப்-4 தேர்வில் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் மற்றும் போலீஸ்காரர் சித்தாண்டி ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. குரூப்-2ஏ தேர்வு எழுதியவர்களிடம் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டு மோசடியை அரங்கேற்றி இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குரூப்-4 விடைத்தாள்கள் ஓடும் வாகனத்தில் திருத்தப்பட்டது போன்றே குரூப்-2ஏ தேர்வு விடைத்தாள்களும் ஓடும் வாகனத்தில் திருத்தப்பட்டுள்ளன. இதில் “மேஜிக்” மை உபயோகப்படுத்தப்படவில்லை. மாறாக, தெரியாத கேள்விகளுக்கான பதில்களை எழுதாமல் விட்டுள்ளனர். நம் ஜெயக்குமார், ஓடும் காரில் வைத்து அந்த வினாக்களுக்கான பதிலை நிரப்பியுள்ளார்.

o0o

கைது செய்யப்பட்டிருப்பவர்கள் அனைவரும் கடைநிலை ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும். அரசுப் பணியிடங்கள் நிரப்புவதில் லஞ்சம் விளையாடும் என்பது யாருக்கும் தெரியாத இரகசியம் அல்ல. பாமர மக்களுக்கே இந்த விசயம் தெரியும். மேலும், கொடுக்கப்படும் லஞ்சம் யார் வழியாக யார் யாரையெல்லாம் சென்றடையும் என்பதும் தெரிந்த விசயங்கள்தான். இந்த முறை ஒருபடி மேல் சென்று தேர்விலேயே முறைகேடுகள் செய்துள்ளார்கள் என்பதுதான் வேறுபாடு.

மத்தியபிரதேச மாநில தேர்வாணையமான “வியாபம்” நடத்திய தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் வெளியாகி நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை நாம் மறந்திருக்க மாட்டோம். ஏறக்குறைய இங்கும் அதே பாணியில்தான் முறைகேடுகள் நடந்துள்ளன. இந்தளவுக்கு துணிகரமாக முறைகேடுகளும், மோசடிகளும் நடைபெறுகிறது என்றால் அதை வெறுமனே கடைநிலை ஊழியர்கள் மட்டும் திட்டமிட்டு செயல்படுத்தி விட முடியாது. விடைத்தாள் பண்டில்களின் பாதுகாப்புக்கு போலீசார் இருக்கும் போது அதை இடையே “தேனீர் இடைவெளியின்” போது கைப்பற்றுவதோ மீண்டும் இன்னொரு ”தேனீர் இடைவெளியின்” போது மாற்றி வைப்பதோ சாத்தியமல்ல.

படிக்க :
♦ ஆர்.எஸ்.எஸ் ஹெட்கேவாரா – சுயமரியாதை பெரியாரா ? யாரை தெரிவு செய்வது ?
♦ வெடியோசையில் உயிர்த்தெழும் காந்தி | மனுஷ்ய புத்திரன் கவிதை

இந்த விவகாரத்தை நியாயமாக விசாரித்தால் இதில் சம்பந்தப்பட்ட பெரிய தலைகளின் பெயர்கள் அம்பலமாகும். ஆனால் நடந்து கொண்டிருக்கும் ஆட்சி புரட்சித்தலைவின் ஆசியும், மத்திய அரசின் ஆதரவும் பெற்றது என்பதை வைத்துப் பார்க்கும்போது இந்த வழக்கும் மத்திய பிரதேசத்தின் வியாபம் ஊழல் விசாரணை சென்ற திசையில் தான் செல்லும் என்பதை சொல்லத் தேவையில்லை.

இது வெறுமனே ஊழல் அல்ல; தங்களின் வேலை வாய்ப்புகளை கொள்ளையடிக்கும் முயற்சி என்பதை மக்கள் உணர வேண்டும். அதே போல் இப்படி முறைகேடான வழிகளில் அரசு பதவிக்கு வருபவர்கள்தான் அரசு திட்டங்களை செயல்படுத்தப் போகிறார்கள் என்றால், அந்த திட்டங்கள் எந்தளவுக்கு நியாயமாக செயல்படுத்தப்படும் என்பதையும் மக்கள் புரிந்து கொண்டு களத்தில் இறங்கிப் போராட வேண்டும்.

மித்ரன்