Thursday, May 1, 2025
முகப்புபார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்உ.பி : போலீசு அதிகாரியை செருப்பால் அடித்த பாஜக கவுன்சிலர் || நாளை தமிழகத்தில் ??

உ.பி : போலீசு அதிகாரியை செருப்பால் அடித்த பாஜக கவுன்சிலர் || நாளை தமிழகத்தில் ??

இந்து ராஷ்டிரத்தின் சோதனைச் சாலையான உத்தரப் பிரதேசத்தில் இன்று நடந்திருப்பது நாளை ஆர்.எஸ்.எஸ். - பாஜக-வின் இந்து ராஷ்டிர ஆட்சியில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.

-

ரு காணொலிக் காட்சியில் ஒரு பெண்ணிடமும் போலீசு அதிகாரி ஒருவர் பேசிக் கொண்டிருக்கிறார். வாதத்தின் இடையே சட்டென தனது கால் செருப்பைக் கழட்டி அந்த போலீசின் கன்னத்தில் அறைகிறார் அந்தப் பெண். கூட்டத்தை ஒழுங்கு செய்யும் மற்றொரு போலீசோ எவ்வித அதிர்ச்சியையும் காட்டாமல், தனது கடமையை செவ்வனே செய்து கொண்டிருக்கிறார்.

மற்றொரு காணொலிக் காட்சியில் ஒரு போலீசு அதிகாரியை பத்து பதினைந்து பேர் கொண்ட ஒரு கூட்டம் சுற்றி வளைத்துத் தாக்குகிறது. ஒருவன் போலீசு அதிகாரியின் கையைப் பிடித்து தன்னை அடிக்குமாறு இழுக்கிறான். அவனோடு அந்த அதிகாரி பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கையில், மற்றொருவனோ ஹெல்மெட்டைக் கொண்டு அந்த போலீசு அதிகாரியின் பின்புறத்தில் தாக்குகிறான். திரும்பிப் பார்க்கும் அந்த அதிகாரியை மீண்டும் முன்னால் வந்து ஹெல்மெட்டால் தாக்குகிறான். தப்பி ஓடும் அதிகாரியின் மீது ஹெல்மெட்டை வீசி எறிகிறான்.

காணொலிக் காட்சியைக் காண இங்கே அழுத்தவும்

இந்த இரண்டு சம்பவங்களும் கடந்த சனிக்கிழமை (27-03-2021) அன்று உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா நகரில் நடந்தவை. போலீசு அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரத்தில், போலீசை தாக்கிய ‘கயவர்களை’ யோகி ஆதித்யநாத் அரசு உடனடியாக என்கவுண்டரில் போட்டுத் தள்ளியிருக்கும் என்று எண்ண வேண்டாம். ஏனெனில் தாக்கியவர்களே பாஜக-வைச் சேர்ந்த சங்க பரிவாரக் கும்பல்தான்.

கடந்த சனிக்கிழமை அன்று மதுராவில் உள்ள யமுனை ஆற்றின் கரையில் உள்ள தேவ்ரஹா பாபா காட் எனும் இடத்தில் குளித்துக் கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாவட்டத் தலைவரான மனோஜ்குமார் மற்றும் அவரது அடிபொடுகளுக்கும் அங்கு வந்த போலீசு துணை ஆய்வாளருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில், அந்த போலீசு அதிகாரி ஆர்.எஸ்.எஸ். மாவட்டத் தலைவரை அடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

தமிழகம் மட்டுமல்லாமல், உலகம் முழுவதுமே போலீசின் நடைமுறைக்கு எழுதப்படாத விதி என்பது என்ன ? போலீசுக்கு தவறு செய்தவர்களை அடிக்கும் உரிமை இருக்கிறது என்பதுதானே? உலகம் முழுவதும் நடத்தப்படும் என்கவுண்டர்கள், லாக் அப் சித்திரவதைகள், படுகொலைகள் எல்லாமே இந்தப் பெயரால் தான் நியாயப்படுத்தப்பட்டன. போதாத குறைக்கு தமிழ் சினிமாக்களில் புல்லரிக்கச் செய்யும் டயலாக்குகள் மூலமும் இந்த ‘நியாய உரிமை’ போலீசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

படிக்க :
♦ பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு சக்தி
♦ உத்திரப் பிரதேசம் : இந்து ராஷ்டிரத்தின் புதிய சோதனைச் சாலை !

அப்படிப்பட்ட ‘நியாய உரிமையை’ ஒரு ஆர்.எஸ்.எஸ். மாவட்டத் தலைவரிடம் அந்த உதவி ஆய்வாளர் காட்டியிருக்கிறார். அவ்வளவுதான். சாதாரண மனிதர்களிடம் அப்படி நடந்திருந்தால் அந்த போலீசு அதிகாரிக்கு உயர்பதவி கிடைத்திருக்கும். ஆனால் அவர் தனது நியாய உரிமையை காட்டியது ஒரு ஆர்.எஸ்.எஸ். மாவட்டத் தலைவரிடம்.

அதனைத் தொடர்ந்து அந்த ஆர்.எஸ்.எஸ் மாவட்டத் தலைவர் மனோஜ்குமார் போலீசு நிலையத்தில் தன்னை அடித்த உதவி ஆய்வாளர் உபாத்யாயா மீதும் அவருடன் இருந்த இரு போலீசார் மீதும் புகார் அளித்துள்ளார்.

இந்த மூவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 307-ன் கீழ் கொலை முயற்சி வழக்கு மற்றும் முறைமீறி நடந்து கொள்ளுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதோடு, உடனடியாக இரண்டு கீழ் நிலை போலீசாரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

சாத்தான்குளத்தில் லாக்கப் கொலையே செய்த அந்த போலீசு அதிகாரிகள் மீது பல நாட்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது நினைவிருக்கலாம். இங்கு ‘சும்மா’ அடித்ததற்கே தற்காலிக பணிநீக்கம். ஏனெனில் உத்தரப் பிரதேசம், இந்து ராஷ்டிரத்தின் சோதனைச் சாலை அல்லவா ?

புகார் கொடுத்த கையோடு ஆர்.எஸ்.எஸ். மாவட்டத் தலைவர் மதுரா நகர் முழுவதும் உள்ள பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்க பரிவாரக் கும்பலின் காலிகளுக்கு தகவல் சொல்லி, நகரில் பல இடங்களில் போராட்டங்களையும் வன்முறையையும் தூண்டியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பாஜக, சங்க பரிவாரக் கும்பலைச் சேர்ந்த பொறுக்கிகள் போலிசை தாக்கிய சம்பவங்கள் நடந்துள்ளன.

அப்படிப்பட்ட சம்பவங்கள் தான் இந்தப் பதிவின் துவக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டு காணொலிக் காட்சிகள். அந்த முதல் சம்பவத்தில் போலீசை செருப்பால் அடித்த அந்தப் பெண்மணி வேறு யாருமல்ல, பாஜகவைச் சேர்ந்த கவுன்சிலர் ரஷ்மி சர்மா என்பவ்ர்தான்.

ஒரு போலீசு அதிகாரியை பொது இடத்தில் செருப்பால் வைத்து அடிப்பது என்பது உத்தரப் பிரதேசத்தில் தற்போது நடைபெற்ற புதிய சம்பவம் அல்ல.

போலீசை செருப்பால் அடிக்கும் பாஜக கவுன்சிலர் ரஷ்மி சர்மா

கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மீரட் நகரில் ஒரு போலீசு அதிகாரியை லோக்கல் பாஜக தலைவர் ஒருவர் போய் விடாமல் அடித்த வீடியோ காட்சி வைரல் ஆனது.

கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு அரசு ஊழியரை நடுத்தெருவில் வைத்து கிரிக்கெட் மட்டையால் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் இந்தூரில் அடித்த சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உத்தரப் பிரதேச பாஜக எம்.எல்.ஏ. – கிசான் லால் ராஜ்பூட் என்பவர் போலீசு ஒருவரை செருப்பால் அடித்து, சிறுநீரைக் குடிக்கச் செய்துள்ளார்.

இவையெல்லாம் மீடியா வெளிச்சத்திற்கு வந்த செய்திகள் மட்டும்தான். இன்னும் வராத செய்திகள் எத்தனையோ? பாஜக – சங்க பரிவாரக் கும்பலால் போலீசு அதிகாரிகள் அசிங்கப்படுத்தப்படுவது மற்றும் தாக்கப்படுவது அனைத்தும் சங்க பரிவாரக் கும்பலின் கனவான இந்துராஷ்டிரத்தின் ஒரு முன்னோட்டமே ஆகும்.

போலீசு உள்ளிட்டஅதிகாரவர்க்கத்தை மக்களை ஒடுக்க பயன்படுத்திக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக தலைமையிலான சங்க பரிவாரக் கும்பல், நடைமுறைப்படுத்தப் போகும் சனாதன தர்ம ஆட்சியில், சத்திரிய – வைசிய – சூத்திர – பஞ்சம சமூகத்தைச் சேர்ந்த போலீசாருக்கு கிடைக்கப் போகும் மரியாதையும் சிறப்பும் இப்போதே நம் கண்முன்னே தெரிகின்றன !!


சரண்
செய்தி ஆதாரம் :
The Wire

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க