காதிபத்திய எதிர்ப்பு போராளிகள் பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் துக்கிலிடப்பட்டு 90 ஆண்டுகாலம் நிறைவடைந்துவிட்டது. சோவியத் யூனியனின் தலைவர் தோழர் ஜோசப் ஸ்டாலின் பகத்சிங்கை சோவியத் யூனியனுக்கு வருகைதர அழைப்பு விடுத்த வரலாற்றில் பலருக்கும் தெரியாத ஒன்று !
பகத்சிங் மற்றும் ஸ்டாலினை வரலாற்றில் இணைக்கும் நபர் ஷாக்கத் உஸ்மானி. தாஷ்கண்டில் நிறுவப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான இவர், எம்.என்.ராய் அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் இந்திய புரட்சியாளர்களுடன் தொடர்பு கொள்வதற்காக அனுப்பப்பட்டவர்.
இந்தியாவில் பகத்சிங் மற்றும் அவர்களது தோழர்களுடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பு உஸ்மானிக்கு கிடைத்தது. அவர் 1928-ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஆறாவது மாநாட்டிற்கு புறப்படவிருந்தபோது, பகத்சிங் மற்றும் அவரது நெருங்கிய தோழர் பிஜோய் குமார் சின்ஹா ஆகிய இருவரையும், சோவியத் யூனியனுக்கு வருமாறு அழைத்துள்ளார்.
படிக்க :
♦ இதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் ?
♦ மாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்
ஆனால், சிங்ஹாவும் பகத்சிங்கும் விவாதித்து, தமது செயல்திட்டங்களை நிறைவேற்றிவிட்டு மாஸ்கோவிற்கு செல்வதாக முடிவெடுத்து உஸ்மானியின் அழைப்பிற்கு மறுப்பு தெரிவித்தனர்.
தமது திட்டமிட்டபடி 1928-ஆம் ஆண்டு சோவியத் யூனியனுக்கு உஸ்மானி செல்கிறார். அங்கு காலனி ஆதிக்கம் குறித்த பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்கும்போது, இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் தோல்விகளைப் பற்றியும், அதற்கு நேர் எதிராக செயல்படும் புரட்சிகர இயக்கமான HRA-வின் செயல்பாடுகளை அங்கீகரிக்கும் வகையிலும் விவாதம் இருந்தது.
மேலும், HRA-வை HSRA-வாக பகத்சிங் மாற்றியது பற்றியும், சோசலிசத்தின் லட்சியத்திற்காக, இந்திய புரட்சியாளர்களும் பகத்சிங்-கும் வேலை செய்வது பற்றியும் உஸ்மானியா மூலம் அறிந்து கொள்ளும் ஸ்டாலினுக்கு பகத்சிங் மீதான ஆர்வம் மேலும் அதிகரிக்கிறது.
இந்த நேரத்தில், பகத்சிங் மற்றும் அவரது தோழர்களும் 1928, டிசம்பரில் ஜான் சாண்டர்ஸை சுட்டுக்கொன்றுவிட்டு தலைமறைவாகினர். இதன்பிறகு தலைமறைவாக இருக்கும் பகத்சிங்கை, உடனே சோவியத் யூனியனுக்கு அனுப்ப வேண்டும் என HSRA-வின் தலைவர்கள் கருதினர்.
வேறுசில புரட்சியாளர்களைக் கொண்டு பாராளுமன்றத்தில் குண்டு வீசும் செயல்திட்டத்தை நிறைவேற்றலாம் என்றும் எண்ணினர். ஆனால், சுக்தேவ் மற்றும் பகத்சிங்-ன் நீண்ட விவாதத்திற்கு பிறகு பகத்சிங் நீதிமன்றத்திற்கு சென்றால்தான் நம் கட்சியின் செயல்பாடுகளை தெளிவாக முன்வைக்க முடியும் என்று கருதி பகத்சிங், பட்டுகேஸ்வர் தத் ஆகிய இருவரும் பாராளுமன்றத்தில் குண்டு வீச HSRA தோழர்களால் தேர்வு செய்யப்பட்டனர்.
மீரட் சதி வழக்கு துவங்கிய பிறகு, திட்டமிட்டபடி, பகத்சிங் மற்றும் பட்டுகேஸ்வர் தத் HSRA-வின் சார்பாக தொழிலாளர் விரோத மற்றும் தொழில் தகராறு மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு குண்டுகளை பாராளுமன்றத்தில் ஆள் இல்லா இடங்களில் வீசி கைதாகினர்.
உஸ்மானி மாஸ்கோவிலிருந்து திரும்பியவுடன், 1929-ம் ஆண்டும் மார்ச் மாத துவக்கத்தில் மீரட் சதி வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனால், சோவியத் யூனியனில் இருந்து உஸ்மானி எடுத்து வந்த செய்தியை HSRA-வின் உறுப்பினர்கள் அறிந்துக் கொள்ள முடியவில்லை.
இதைப்பற்றி, பின்னாட்களில் உஸ்மானி புதுதில்லியிலிருந்து வெளியான ‘நை ஜமீன்’ இதழின் ஒரு கட்டுரையில், பகத்சிங்கை சோவியத் யூனியனுக்கு வரும்படி, ஸ்டாலின் கேட்டார் என்று எழுதியிருக்கிறார். உஸ்மானியின் கூற்றுப்படி, ஸ்டாலினின் வார்த்தைகள் “பகத்சிங்கை மாஸ்கோவுக்கு வரச் சொல்லுங்கள்” என்பதுதான்.
லாகூர் சதி வழக்கில் சின்ஹா கைது செய்யப்பட்ட பிறகு, HSRA தலைவர்கள் சந்திரசேகர் ஆசாத்தை சிந்தாந்த மற்றும் இராணுவப் பயிற்சிக்காக சோவியத் யூனியனுக்கு அனுப்ப முடிவு செய்தனர். ஆசாத் செல்ல முடியாததால் சுரேந்திர பாண்டே மற்றும் யாஷ்பால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இருப்பினும், பிப்ரவரி 1931-ல் ஆசாத்தின் திடீர் மரணம் அந்த திட்டத்தை நிறுத்தும்படி செய்தது. அதன்பின் சில மாதங்களில் யாஷ்பால், பாண்டே இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். எனவே, சோவியத் யூனியனுக்கு HSRA-வின் தோழர்கள் செல்லும் திட்டம் நிறைவேறாமலேயே போனது.
இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் வெளியேறிய பிறகுதான் பிஜோய் குமார் சின்ஹா சோவியத் யூனியனுக்கு ஒரு பயணமாக செல்ல முடிந்தது.
ஒருவேளை சோவியத் யூனியனுக்கு பகத்சிங் முன் கூட்டியே சென்றிருந்தால், இந்திய புரட்சியின் திசை வேறு கோணத்திற்கு சென்றிருக்கலாம்.

சந்துரு
செய்தி ஆதாரம் : நியூஸ்கிளிக்