உண்ணாநிலைப் போராட்டத்தில் உயிர்த் தியாகம்: முதல் தோழன்

பகத்சிங்கும் அவனது தோழர்களும் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட போது, இந்தியாவே காந்திக்கும் காங்கிரசிற்கும் எதிராகக் கொந்தளித்ததற்கு அவனது உயிர்த்தியாகம் ஊக்கச் சக்தியாக இருந்தது.

திடீரென அவனது நினைவு வந்துவிட்டது.

அவனைப் பற்றி பெரிதாக பலரும் பேசுவதில்லை.
ஆகையால், அவனைப் பற்றி நாம் பேசுவோம்.

உயிர்த் தியாகம் செய்யப் புறப்பட்டவர்களில் அவனும் ஒருவன்.
ஆம், பகத்சிங், இராஜகுரு, சுகதேவ் தோழர்களைப் போல.

அவன் ஒரு சோசலிஸ்ட், ஆகையால், அவன் ஒரு கம்யூனிஸ்ட்.

பிரிட்டிஷ் இந்தியாவில் விடுதலைக்காக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த
அனுசீலன் சமிதியில் இணைந்த இளந்தோழர்களில் அவனும் ஒருவன்.

1921-இல் ஒத்துழையாமை இயக்கம் மேற்கொள்ளப்பட்ட போது,
அதில் ஊக்கமாக அவன் பங்கேற்றான், சிறை சென்றான்.
அப்போது அவனுக்கு வயது, 17.

இதுபோல, ஒத்துழையாமை இயக்கத்தின் போது மட்டும்,
ஒரு மாதம், மூன்று மாதங்கள் என
அவன் பலமுறை கைது செய்யப்பட்டு, சிறைவைக்கப்பட்டான்.

ஒத்துழையாமை இயக்கம் தள்ளிவைக்கப்பட்டபோது, அவன் கல்லூரியில் சேர்ந்தான்.

1924, ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக் அசோசியேசன் (எச்.எஸ்.ஆர்.ஏ.)
புரட்சிகரக் கட்சியின் உறுப்பினராக சேர்ந்தான்.

அப்போது அவனுக்கு வயது, 20.

1925-இல் அவன் கைது செய்யப்பட்டு,
இன்றைய பங்களாதேஷில் இருக்கும் மைமென்சிங்-கில் சிறை வைக்கப்பட்டான்.
அப்போது அவனுக்கு வயது, 21.

சிறையிலும் அவன் ஓயவில்லை.
சிறைக் கைதிகளை மிருகத்தனமாக நடத்தும்
பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கெதிராக குரல் கொடுத்தான்.
அதற்கு அவன் கடைப்பிடித்த போராட்டம்தான்
சிறையில் உண்ணாநிலைப் போராட்டமாகும்.

இருபது நாட்கள் நீடித்த உண்ணாநிலைப் போராட்டத்திற்குப் பிறகு
சிறைக் கண்காணிப்பாளர் அவனிடம் மன்னிப்புக் கேட்டான்.
இது அவனது மன உறுதிக்கும் போராட்டத்திற்கும் கிடைத்த முதல் வெற்றி!

1926 நவம்பர் 7, ரசியப் புரட்சிநாள்தான். ஆனால், இந்தியாவுக்கு இதில் வேறொரு சிறப்புள்ளது.

அது காகோரி ரயில் கொள்ளை. புரட்சியாளர்கள், ஆயுதங்களை வாங்க, பிரிட்டிஷ் கஜானாவைக் கொள்ளையடித்த புரட்சிகர நடவடிக்கை.

இந்தக் கொள்ளையில் ஈடுபட்டதாக, அவன் கைது செய்யப்பட்டான்.
அப்போது, அவனுக்கு வயது, 22.

குற்றம் உறுதியாகவில்லை, இருப்பினும் சிறையே அவனது வாசமாகியது.

கட்சிக்குப் பணம் சேர்ப்பதில் அவன் படுகில்லாடி.
இந்தோ-பர்மா பெட்ரோலியம் கம்பெனியின் பணத்தைக் கொள்ளையடித்தது இவனது குறிப்பிடத்தக்க சிறப்பாகும். அந்தப் பணத்தைக் கொள்ளையடித்த சாகசமே பெரும் சாகசம்.

அதுமட்டுமா, புரட்சியின் ஊழியருக்கு வெடிகுண்டு தயாரிக்கும் தொழில் தெரியவேண்டும். அதிலும் இவன் கைதேர்ச்சிப் பெற்றவன்.

புரட்சியின் ஊழியர் பிரச்சாரத்தின் முன்னோடி அல்லவா?

இதோ, கட்சியின் கொள்கை அறிக்கையான, “புரட்சியாளனை” (தி ரெவெல்யுஷனரி)
வங்கத்தின் வீதிகள் எங்கும் பரப்பினான்.

அப்படியானால், அவன் முரட்டு குணம் கொண்டவன் என்று நீங்கள் கருதினால், அது தவறு.

அவன் கம்பீரமாக தோற்றமளிப்பான், அமைதியாக இருப்பான்,

குறைவாகப் பேசினாலும் இனிமையாகப் பேசுவான்,

மற்றவர்களை தன் பக்கம் கவர்ந்திழுக்கும் அற்புதச் சக்தி அவனது பேச்சில் இருக்கும்.

1928 கல்கத்தா காங்கிரசு மாநாடு. பகத்சிங் கல்கத்தா சென்றிருந்தார்.
அப்போதுதான், சில நாட்களுக்கு முன்பு அவன் விடுதலை செய்யப்பட்டதை பகத்சிங் அறிந்து அவனை சந்தித்தார். கட்டிப்பிடித்து, ஆரத்தழுவினார்.
புரட்சியின் விடாப்பிடியான தோழனல்லவா, அவன்.

1929 ஜூன் 14, இப்போது அவனுக்கு வயது 24.

அவன் இப்போது பகத்சிங், படுகேஷ்வர் தத் ஆகியோருடன் கைது செய்யப்பட்டான்.
அவன் மீது சுமத்தப்பட்ட குற்றம்,
நாடாளுமன்றத்தில் வீசுவதற்கான குண்டைத் தயாரித்துக் கொடுத்தான் என்பதாகும்.


படிக்க: தலித் மாணவன் ரோகித் வெமுலாவைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்! | மீள்பதிவு


அதே, பிரிட்டிஷ் சிறைதான், சித்திரவதைக்கு ஒன்றும் குறையில்லை.
ஐரோப்பிய அரசியல் கைதிகளைவிட இழிவாக நடத்தப்பட்டனர் இந்திய அரசியல் கைதிகள்.
இந்தியக் கைதிகள் உடுத்திக் கொள்வதற்கு வழங்கப்பட்ட சாக்குத் துணியைத் துவைக்கக் கூடாது;
கரப்பான் பூச்சிகளும் எலிகளும் விளையாடும் மோசமான உணவு;
செய்தித்தாள் படிக்க அனுமதி இல்லை என்ற அந்த அடக்குமுறைகளின் பட்டியல் நீளமானவை.

இந்த சிறை சித்திரவதைகளுக்கெதிராக
அவனும் அவனது தோழர்களும் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினர்,
இது அவனுக்கு இரண்டாவது முறை.

1929, ஜூலை 13, தொடங்கியது உண்ணாநிலைப் போராட்டம்.

உண்ணாநிலைப் போராட்டம் என்பது ஒரு அரசியல் போராட்டம். இது தோழர்களின் புரிதல்.
அதனால், அனுபவம் இல்லாதவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட அனுமதிக்கப்படவில்லை.
அதனால்தான், அவன் இந்தப் போராட்டத்தில் முன்னிலையில் இருந்தான்.

போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்தது.

தோழர்கள் நடமாடுவதை நிறுத்திய செய்தி ஊடகங்களில் வெளியானது.
படுக்கையிலிருந்தவர்கள் பலமுறை நினைவு தப்பிய செய்திகள் நாட்டையே திடுக்கிட வைத்தது.

மருந்து ஊற்றியும் குடிக்கவில்லை, அடுத்த செய்தி.

தோழர்களின் வாயில் குழாயைச் செறுகி பலமுறை உணவு ஊற்றப்பட்டது.
ஆனால், அவன் உண்ணவில்லை,
அந்த உணவு வாயில் ஊற்றிய சிறை மருத்துவர்களின் முகத்திற்கே சென்றது.

செய்தி மக்களைக் கொந்தளிக்கச் செய்தது.

உண்ணாநிலைப் போராட்டத்தில் அவன், 63 நாட்கள் தொடர்ந்தான்.
போராட்டத்தில் வெற்றியடைந்தான், அதற்காக அவன் உயிரைத் தியாகம் செய்தான்.

அவன் பிறந்தது, 1904 அக்டோபர் 27,
உயிர்த்தியாகம் செய்யும் போது அவனுக்கு வயது, 24.

லாகூர் சிறை வாயிலில் பெருந்திரளாக மக்கள் கூடினர்.
லாகூரில் இருந்து கல்கத்தா வரை இரயிலில் அவனது உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
1,700 கிலோமிட்டர். ஒவ்வொரு இரயில் நிலையத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது,
மண்ணின் மைந்தனுக்கு அஞ்சலி செலுத்த.

இந்திய வரலாற்றில் இணையற்ற நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.

கல்கத்தாவில் அவனுக்கு இறுதி ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஐந்து லட்சம் மக்கள் கூடியதாக, வைஸ்ராய் அலறினான்.
மக்கள் அலை அலையாக வந்து கொண்டே இருந்தார்கள்.
தோழர்களில் ஒருவரான துர்காவதி தேவி, அவனது இறுதி ஊர்வலத்திற்கு தலைமை தாங்கினார்.
இந்தியா முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் பிரிட்டிஷ் அரசுக்கெதிராகப் போராட்டங்களில் இறங்கினர்.


படிக்க: அதிகம் நினைவுகூரப்படாத ஆற்றல்மிகு போராளி – மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்


செப்டம்பர் 14, அவனது உயிர்த்தியாகத்திற்கு சட்டமன்றத்தில் (அன்றைய நாடாளுமன்றம்) அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரிட்டிஷ் அரசை சபிக்கும் வகையில் முகமது அலி ஜின்னா ஆற்றிய உரையில் கூறியதாவது:

“இது போர்ப் பிரகடனமாகும். அவர்கள் தம் உயிரைத் துறக்கவும் தயாராகின்றனர் என்பது உங்களுக்குத் தெரியும். இது ஒன்றும் விளையாட்டல்ல. எல்லோரும் சாகும்வரை உண்ணாநிலை இருக்க முடியாது. உண்ணாநிலை இருப்பவனுக்கு உள்ளம் என்று ஒன்றிருக்கும். தான் மேற்கொண்டுள்ள உண்ணாநிலை நியாயமானதென்பதிலே அவனுக்கு முழுநிறைவான நம்பிக்கை இருக்கும். அப்படிப்பட்டவன் சாதாரண மனிதனாக இருக்க முடியாது; அவன் கொலை செய்யும் குற்றவாளியாகவும் இருக்க மாட்டான். வெறுக்கத்தக்க இந்த அரசுக் கொள்கையை பொதுமக்கள் எதிர்க்கின்றனர்; வெளியிலே ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்!”

இதே குரலில், சனாதனவாதிகளும் உரையாற்றினர்.

அவை, பிரிட்ஷ் அரசுக்கெதிரான கண்டனங்கள் அல்ல, அச்சத்தின் வெளிப்பாடு.

அவனது உயிர்த்தியாகம் மக்களைப் பற்றிக்கொண்டால் புரட்சி வெடித்துவிடும் என்ற அவர்களின் உணர்வாகும்.

எச்.எஸ்.ஆர்.ஏ. தோழர்களின் சிறைப் போராட்டங்கள் குறித்த
வீர தீர செய்திகளில் இவனது உயிர்த் தியாகம் முக்கியத்துவமுடையது.
பின்னாளில், பகத்சிங்கும் அவனது தோழர்களும் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட போது,
இந்தியாவே காந்திக்கும் காங்கிரசிற்கும் எதிராகக் கொந்தளித்ததற்கு
அவனது உயிர்த்தியாகம் ஊக்கச் சக்தியாக இருந்தது.

ஆம், அவனது உயிர்த் தியாகம், கோடிக்கணக்கான மக்களை உயிர்ப்பெறச் செய்தது!

அவன் பெயர், ஜிதேந்திர நாத் தாஸ்.

இவன் கதை இத்துடன் முடிந்துவிட்டதா…?

நீங்கள் நாட்டுப்பற்றுடன் இருக்கிறீர்கள் என்றால்,
உங்கள் மனதிலிருந்து இவன் பெயர் இனி நீங்காது அல்லவா?

உங்களுக்குள் இருக்கும் நாட்டுப்பற்றையும் கொள்கை உறுதியையும் இவன் சோதிப்பான் அல்லவா?
சோதிக்கட்டும்!


பரமேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க