அதிகம் நினைவுகூரப்படாத ஆற்றல்மிகு போராளி – மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

ஆணாதிக்கத்தின் அடிமைகளாய், பிள்ளை பெறும் இயந்திரங்களாய், அடக்கி வைக்கப்பட்டிருந்த பெண்ணினத்தைத் தட்டி எழுப்பியவர்! ஆணுக்குப் பெண் அடிமை இல்லை என்று ஆர்ப்பித்தவர்! ஆணும், பெண்ணும் சமம் என்ற விழிப்புணர்வை ஊட்டியவர்!

ரலாற்றில் அளப்பரிய பங்களிப்பு செலுத்திய சில தலைவர்களின் பிறந்த நாளோ நினைவுநாளோ தெரியாமல் போவது, அவர்களை சரியாக நினைவுகூருவதற்கான வாய்ப்புகளைக் குறைத்துவிடுகிறது. அந்தத் தலைவர்கள் அவர்களது உண்மையான மக்கள் தொண்டு, நாட்டுப்பற்றுக்கான அரும் பணிகளால், தியாகங்களால் மட்டுமே நினைவுகூரப்படுகின்றனர். அந்தவகையில், தமிழ்நாட்டின் முக்கியமான ஒரு பெண் போராளி என்றால், அவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் ஆவார்.

அவருக்கு முன்பு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த, பெண்களின் உரிமைக்காகப் போராடிய, சாவித்திரிபாய் பூலேயின் பிறந்த நாளை நம்மால் நினைவுகூர முடிகிறது. ஆனால், ஒடுக்கப்பட்டு கீழ் நிலையிலிருந்த ராமாமிர்தம் அம்மையாரின் சமூகப் பின்னணி காரணமாக, அவரது பிறந்த நாளும் இறந்த நாளும் பொதுவெளியில் பெரிதும் அறியப்படாமல் உள்ளது.

தி.மு.க. ஆட்சியின் போது அவரது பெயரை நினைவுகூரும் வகையில் பெண் கல்விக்கான திட்டங்களுக்கு அவரது பெயர் இரண்டு முறை சூட்டப்பட்டுள்ளது. 1989-ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசு குறைந்தது எட்டாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு ரூ.5,000 திருமண நிதி உதவித்திட்டத்திற்கு அவரது பெயரைச் சூட்டியது.

தற்போதைய தி.மு.க. அரசு, கருணாநிதி அரசு கொண்டுவந்த, திருமண உதவித் திட்டத்தை உயர்கல்வித் திட்டமாக மாற்றியமைத்து, அதனை, 2022 செப்டம்பரில் தொடங்கி வைத்தது. அதாவது, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை கிடைக்க வழி ஏற்படுத்தித் தந்துள்ள அத்திட்டத்திற்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்று பெயரிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் தொடக்கவிழாவிற்கு அன்றைய டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கேஜ்ரிவாலை அழைத்ததும், முக்கியமான அம்சமாகும்.

இவற்றிற்கப்பால், மார்ச் 8 பெண்கள் தினத்தன்று திராவிட இயக்கத்தின் தோழர்கள் யாராவது இராமாமிர்தம் அம்மையாரை நினைவுகூர்ந்தால் உண்டு என்ற அளவிற்குத்தான் இவர் தமிழ்நாட்டில் நினைவுகூரப்படுகிறார். இவரது வரலாற்றுப் பங்களிப்பு குறித்து திராவிடர் கழகம் சார்பாக சில நூல்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றைத் தாண்டி தமிழ்நாட்டின் பெண் உரிமைப் போராளிகளில் ஒருவராக இவரது பங்களிப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு கொண்டு சென்று சேர்க்கும் நோக்கத்தில், இந்தக் கட்டுரையை வினவு இணைய தளத்தில் பதிவிடுகிறோம்.

“மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரும் வாழ்க்கையும், தேவதாசி முறை ஒழிப்பும்” என்ற தலைப்பில், முனைவர் தி.பாலசுப்ரமணியன், முனைவர் என்.தனலட்சுமி, முனைவர் ஏ.ஆர்.சரவணகுமார் ஆகிய காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக பேராசிரியர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வுக்கட்டுரையைத்தான் இங்கு கொடுத்துள்ளோம்.

***

மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரும் வாழ்க்கையும்,
தேவதாசி முறை ஒழிப்பும்

முனைவர் தி. பாலசுப்பிரமணியன் கௌரவ விரிவுரையாளர்,
வரலாற்றுத்துறை,
அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி, தமிழ்நாடு, இந்தியா

Dr. N. DHANALAKSHMI,
Associate Professor,
School of History and Tourism Studies,
Tamilnadu Open University,
577, Annavalai, Saidapet, Chorusai.

Dr. AR. SARAVANAKUMAR,
Head i/c, Department of History,
Alagappa University, Karaikudi.

முன்னுரை:

1883 ஆம் வருடம் நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூர் என்ற கிராமத்தில் கிருஷ்ணசாமி, சின்னம்மாள் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார், ராமாமிர்தம். பின் நாட்களில் மூவலூர் மூதாட்டி, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் என்றும் அன்புடன் அழைக்கப்பட்டவர். இவர்களது குடும்பம் இசைவேளாளர் குடும்பம் ஆகும்.

தேவதாசிமுறை நடைமுறையில் இருந்த காலகட்டம் அது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களை மிகச் சிறு வயதிலேயே கடவுளுக்குக் காணிக்கையாக்குகிறோம் என்கிற பெயரில், கோயில்களுக்கு நேர்ந்து விட்டுவிடுவார்கள் அவர்களுக்கு சிறு வயதிலேயே நாட்டியம் பாட்டு போன்றவைகள் கற்றுத்தரப்படும். அவர்கள் நாட்டியமும் இசையும் மட்டுமல்லாது இலக்கியம் கவிதை போனறவற்றில் சிறந்தவர்களாகவும் பயிற்றுவிக்கப்படுவர். சகலவிதத்திலும் தேர்ந்து தங்களது அழகாலும் அறிவாலும் மற்றவர் மனதை கொள்ளை கொள்ளும் விதத்தில் பயிற்றுவிக்கப்படுவார்கள்.

தேவதாசி என்பவர்கள் பெரும் கோயில்களில் திருப்பணிக்காகவும் சேவைக்காகவும் சிறுவயதில் நேர்த்து விடப்பட்ட பெண்கள் ஆவர். பிற்காலச் சோழர்களின் காலத்தில் தான் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த பெண்களுக்கு “பொட்டுக்கட்டி” விட்டு, ஆலயங்களில் சதிராட வைத்தனர். அப்பெண்டிர்க்குத் திருமண வாழ்க்கையை மறுக்கும் வழக்கமும் ரச நியதியாக மாறியது. சோழப்பேரரசின் கோயில்கள் அனைத்துமே சனாதன பிராமணர்களின் வேத ஆகம ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களுக்குத் “தேவதானம்” என்ற பெயரில் வழங்கப்பட்ட ஏராளமான ‘இனாம்’ நிலங்களுக்கு அவர்கள் நில உடைமையாளர்களார்கள் (குட்டி ஜமீன்தார்கள்).

பெயர்க் காரணம்

இச்சொல் தேவன் (இறைவன்) தாசி (அடிமை) இறைவயின் அடிமை என்ற பொருள்படும்.

மூவலூர் ராமாமிர்தம் இளமை காலம்

பின்னாளில், தன்னை மனமார விரும்பியவரும், ஆடல் பாடல்களைக் கற்றுத் தத்தவரும், சங்கீத ஆசிரியருமான சுயம்புப் பிள்ளையைக் கணவராக ஏற்றுக்கொண்டார்.

தன்னை வளர்த்து ஆளாக்கிய வளர்ப்புத் தாய் ஆச்சிக்கண்ணு ஒரு தேவதாசிப் பெண்ணாக இருந்தபோதும் நன்றி மறவாமல் “ஆ” என்னும் தலைப்பெழுத்துடன் தனது பெயரை “ஆ” இராமாமிர்தம் என்றே வைத்துக்கொண்டார்.

பிற்காலச் சோழர்களின் காலத்தில் தான் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த பெண்களுக்கு “பொட்டுக்கட்டி” விட்டு ஆயங்களில் சதிராட வைத்தனர். அப்பெண்டிர்க்குத் திருமண வாழ்க்கையை மறுக்கும் வழக்கமும் ரச நியதியாக மாறியது. சோழப்பேரரசின் கோயில்கள் அனைத்துமே சனாதன பிராமணர்களின் வேத ஆகம ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களுக்குத் ”தேவதானம்” என்ற பெயரில் வழங்கப்பட்ட ஏராளமான ‘இனாம்’ நிலங்களுக்கு அவர்கள் நில உடைமையாளர்கணர்கள் (குட்டி ஜமீந்தார்கள்).

தேவதாசி முறை நடைமுறையில் இருந்த காலகட்டம் அது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களை மிகச் சிறு வயதிலேயே கடவுளுக்குக் காணிக்கையாக்குகிறோம் என்கிற பெயரில் கோயில்களுக்கு நேர்ந்து வீட்டுவிடுவார்கள். அவர்களுக்கு சிறு வயதிலேயே நாட்டியம், பாட்டு போன்றவைகள் கற்றுத் தரப்படும். அவர்கள் நாட்டியமும் இசையும் மட்டுமல்லாது இலக்கியம் போன்றவற்றில் சிறந்தவர்களாகவும் பயிற்றுவிக்கப்படுவர். சகலவிதத்திலும் தேர்ந்து தங்களது அழகாலும் அறிவாலும் மற்றவர் மனதை கொள்ளை கொள்ளும் விதத்தில் பயிற்றுவிக்கப்படுவார்கள்.

பருவ வயது வந்ததும் அவர்களை ஊர்ப் பெரிய மனிதர்களின் ஆசை நாயகிகளாகவும், ஊராரை மகிழ்விக்கும் நடனப் பெண்மணிகளாகவும் ஆக்கியிருந்தது சமூகம். அவர்கள் ‘பொட்டு கட்டப்பட்டவர்களாகவும்’ ‘தேவரடியார்களாகவும்’ இழிவாகப் பேசப்படும் பிரிவினராகவும் வைக்கப்பட்டிருந்தார்கள். அச்சமூகத்தில் பிறந்திருந்தாலும் தங்களது மகளை அவ்வாறு சிறுமைப்படுத்த விரும்பவில்லை ராமாமிர்தத்தின் பெற்றோர்கள். அதனால் தன் மகளை நாட்டியம் இசை போன்றவற்றை கற்றுக் கொடுக்காமல் வளர்க்க ஆசைப்பட்டனர். மற்றவர்கள் எவ்வளவோ சொல்லியும் தன் முடிவிலிருந்து மாறாமல் இருந்தனர். அதனால் ஊரின் பகைமையை சம்பாத்தித்துக் கொண்டனர். அவர்களை அவர்கள் சமூகமும் விலக்கி வைத்துவிட்டது.

வருமானத்துக்கும் வாழ்வாதாரத்துக்கும் மிகுந்த பிரச்சனை ஏற்பட்டது. ஓரளவுக்கு மேல் சமாளிக்க இயலாத கிருஷ்ணசாமி வெறுப்பு மேலிட தன் குடும்பத்தை விட்டு விலகி எங்கோ போய்விட்டார். கணவனும் இன்றி உதவியும் இல்லாமல் தனியொரு பெண்ணாக ஐந்து வயது பெண் குழந்தையையும் வைத்துக் கொண்டு வாழ்க்கையுடன் போராடினார் சின்னம்மாள். ஓரளவுக்கு மேல் அவரால் சமூகத்துடன் போராட முடியவில்லை. வேறு வழியின்றி தன் ஐந்து வயது மகளை ஒரு தேவதாசியிடம் பத்து ரூபாய் பணத்துக்கும் ஒரு பழம் புடவைக்கும் விற்றுவிட்டார்.

அந்த தேவதாசியிடம்தான் வளர்ந்தார் ராமாமிர்தம். அவர்களின் குல வழக்கமாக ஆடல் பாடல் இசை என இளவயது முதல் கற்றுத் தேர்ந்தாலும் அவரின் மனதில் தாய் தந்தைக்கு இருந்த எண்ண ஓட்டமே இருந்தது. என்ன நடந்தாலும் தான் இந்த தேவதாசி முறைக்கு அடிமையாகக் கூடாது என்பதில் மிகுந்த மன உறுதியோடு இருந்தார். குழந்தை குமரி ஆனதும் ஆரம்பித்தது வாழ்க்கையில் போராட்டம். தேவதாசி முறைக்கு ஒத்துழைக்க மாட்டேன் என அடம்பிடித்த ராமாமிர்தத்தை பெரும் பணத்திற்காக 80 வயது முதியவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்துவிட்டாள் அவரை வளர்த்த தாசி.

அங்கே ஆரம்பித்தது ராமாமிர்தத்தின் போராட்டம். உயிரே போனாலும் தாசியாகவும் மாட்டேன் பாட்டன் வயதில் இருக்கும் கிழவனையும் மணக்க மாட்டேன் என்று சொல்லி வீட்டை விட்டு வெளியேறினார். தனக்கு இசையும் நாட்டியமும் சொல்லிக் கொடுத்த இளம் வயதினரான சுயம்பு பிள்ளையுடன் தன் வாழ்வை இணைத்துக் கொண்டார். அப்படியும் சமூகம் அவரை நிம்மதியாக வாழவிடவில்லை. அவரின் மேல் கொலைப்பழி சுமத்தியது. ஒரு இளம் பெண்ணை ராமாமிர்தம் கொலை செய்துவிட்டதாகச் சொல்லி ராமாமிர்தத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டது. ராமாமிர்தம் எதற்கும் கலங்கலில்லை. கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்ட அதே பெண்ணை, உயிருடன் அரும்பாடுபட்டுக் கண்டு பிடித்து நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தினார். யாரெல்லாம் அந்தச் சதிக்கு உடந்தை என்பதை அம்பலப்படுத்தி, அவர்களுக்கு தண்டனையும் வாங்கிக் கொடுத்தார்.

தேவதாசி முறை ஒழிப்பு

நீதிக்கட்சியின் ஆட்சியில் பெரியாரின் ஆலோசனையின் பேரில் அப்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த மருத்துவர் முத்துலட்சுமி தேவதாசி தடுப்புச் சட்டத்தை முன்மொழிந்தார். அவரது சட்டமன்ற உரையில் தேவதாசி முறை ஒழிப்பு குறித்து பேசிய போது “தேவதாசிகள் புனிதமானவர்கள். அவர்கள் கடவுளுக்குச் சேவை செய்யப் பிறந்தவர்கள். அவர்கள் அடுத்த பிறப்பில் சொர்க்கத்தில் பிறப்பார்கள்” என்று சத்தியமூர்த்தி பேசினார். அதற்குப் பதிலளித்த முத்துலட்சுமி, “தேவதாசிகள் சொர்க்கத்திற்குச் செல்வதாக இருந்தால் இனிமேல் சத்தியமூர்த்தி அவர்கள் தங்களது வீட்டுப்பெண்களைத் தேவதாசிகள் ஆக்கி அவர்கள் அடுத்த பிறவியில் சொர்க்கத்தில் பிறக்கலாமே” என்று பதிலுரை கூறியிருந்தார்.

தேவதாசி முறை 1930களுக்கு முன்பு வழமையாக இருந்தது. இந்த முறை கோயில் பணிகளுக்காக ஏற்படுத்தப்பட்டதாக இருந்தாலும், பின்னாட்களில் அவர்கள் கோயில்களை நிர்வகித்த அரசர், செல்வந்தர், நிலக்கிழார் உள்ளிட்ட மேல் வர்க்கத்தினர் முன்பு நடனமாட வைக்கப்பட்டதுடன் அவர்களுடைய பாலியல் இச்சைகளுக்கு அடிமைகளாகவும் பயன்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக இவ்வழக்கத்துக்கு 1920 முதல் இந்தியாவில் கடும் எதிர்ப்பு நிலவியது. இதன் காரணமாக 1947 ஆம் ஆண்டில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

விடுதலை போராட்டமும் தேவதாசி முறையும்

அதன்பின் கணவரின் துணையுடன் தேவதாசி முறையை ஒழிக்க போராட்டங்களில் ஈடுபட்டார். 1917-ல் மயிலாடுதுறையில் தனது முதல் போராட்டத்தைத் துவங்கினார். தேவதாசி குலப்பெண்களை அழைத்து பேசி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனால் பலரையும் பகைத்துக் கொண்டார். ஊர் பெரிய மனிதர்களில் இருந்து பணக்காரர், ரவுடிகள் அரசியல்வாதிகள் வரை பலரும் அவருக்கு ஏதிரியாகினர். பல இன்னல்களும் துன்பங்களும் அம்மையாருக்கு ஏற்பட்டன. அவர் கூந்தலைப் பிடித்து இழுத்து அறுந்து விட்டனர். ஒரு பெண்ணை எந்த விதத்தில் எல்லாம் அவமானம் செய்ய முடியுமோ அத்தனை விதத்திலும் செய்தனர். இருப்பினும் அவர் கலங்கி நின்று விடவில்லை. எதிர்ப்புகள் வளர வளர அவரது நிடமும் வளர்ந்து மேலும் உத்வேகம் பெற்றது.

காந்தியத்தின் மீது மிகவும் பற்று கொண்டவர் அம்மையார். விடுதலை போராட்டங்களின் போது ஆங்கிலேயர் மேடையில் யாரும் பேசக் கூடாது கூட்டம் நடத்தக் கூடாது என்றெல்லாம் கடும் சட்டம் போட்டிருந்தனர். அப்படியா சரி உன் சட்டத்தை நான் மதிக்கிறேன் என்ற பாவணையில் அம்மையார் மேடையில் பேசாமல் தான் சொல்ல வந்த கருத்துக்களை எல்லாம் கரும்பலகையில் எழுதி மக்களைப் படிக்கச் செய்தார். மகாத்மாவை கைது செய்த போது அதை எதிர்த்து மூவர்ணக் கொடியையே ஆடையாக அணிந்து போராடினார்.

1925-ஆம் ஆண்டு காங்கிரஸ்ஸில் இருந்த பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். பெண்களின் மீதான அடக்குமுறைக்கும், கைம்மை நோன்பு, பால்ய விவாகம், தேவதாசி முறை, தீண்டாமை ஆகிய பல கொடுமைகளுக்கு எதிராக ராமாமிர்த அம்மையார் போராடினார். காங்கிரஸில் இருந்த சிலர் தேவதாசி முறைக்கு ஆதரவாக இருந்ததால் அக்கட்சியில் இருந்து பெரியார் வெளியேறிய போது தானும் அவருடன் வெளியேறினார்.

தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் கொண்டு வருவதற்காக சட்டமன்றத்தில் வாதாடிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கும் நல்ல நட்பு இருந்தது. தேவதாசி முறை ஒழிப்புச் சட்ட தீர்மானத்தை காங்கிரசில் இருந்த மூத்த தலைவர்கள் சிலர் கடுமையாக எதிர்த்தனர். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அந்த சட்டத்தைக் கொண்டு வரத் தீர்மானம் இயற்றியபோது, ‘தேவதாசி முறை தொடர்ந்து நடக்க வேண்டும். இல்லாவிட்டால் பாரம்பரியம் மிக்க இந்தியக் கலாசாரம் சீரழிந்து விடும்’ என்று ஆவேசப்பட்டனர். அப்போது ராமாமிர்த அம்மையார் இவ்வாறு கூறும் படி முத்துலட்சுமியிடம் கூறினார். ‘அவர்கள் தேவதாசி முறை தொடர வேண்டும் என விரும்பினால், இதுவரை எங்கள் வீட்டுப் பெண்கள் தேவதாசிகளாக இருந்து விட்டனர். இந்தியப் பண்பாட்டைக் காக்க, இனிமேல் உங்கள் வீட்டுப் பெண்கள் தேவதாசிகளாக இருக்கட்டும்’ என்றார். அதைக் கேட்ட தலைவர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றனர். பல போராட்டங்களுக்குப் பிறகு, 1947-ம் வருடம், உலக அரங்கில் இந்தியாவுக்கு அவமானமாய் விளங்கிய தேவதாசி முறையை ஒழிக்க சட்டம் நிறைவேற்றப்பட்டது.

கலை உலகில் இராமாமிர்தம்

இவரது போராட்ட காலங்களில் இவர் மீது கொலைக் குற்றங்களும் அபவாதங்களும் சுமத்தப்பட்டன. விஷம் கொடுத்து கொல்லும் வரை கூட எதிரிகள் போயினர். ஆனால் தன் உயிரையும் துச்சமாக நினைத்து தாய் நினைத்ததை சாதிக்க போராடினார் அம்மையார். 1936ல் தன்னுடைய சுயசரிதை நூலான ‘தாசிகளின் மோசவலை (அ) மதிபெற்ற மைனர்” என்ற புதினத்தை எழுதி சிவகிரி ஜமீந்தாரிணி வெள்ளத்துரை நாச்சியார் அவர்களின் உதவியுடன் தாமே வெளியிட்டார். மீண்டும் 65 ஆண்டுகள் கழித்துநான் அந்த நாவல் மறுபதிப்புக் கண்டது. அதில் தாசிகளின் பரிதாபமான வாழ்க்கை முறையும் தன் சொந்த அனுபவங்களையும் முன்னிருத்தி எழுதியிருந்தார். இது பற்றி ‘புழுங்கிய மனதில் தோன்றிய எனது உணர்ச்சியின் பயனாக எழுந்தது இந்நாவல்”, என்று கூறினார்.

மேலும் ‘தாசிகளுக்குப் பத்திசாலித்தனமாக ஆராய்ந்து அறியும் திறன் கிடையாது. பொருள் தேடும் ஆராய்ச்சியும் தாசிகளுக்குக் கிடையாது. பொருள் தேடும் பேராசையால் யார் எப்படிச் சொன்னாலும், அப்படியே நடப்பார்கள். ஆனால், எவ்வளவு சாமர்த்தியமாக அவர்கள் பொருள் தேடினாலும் கடைசி காலத்தில் இளிச்சவாய்த்தனமாய் யாரிடத்திலாவது கொடுத்துவிட்டுக் கஷ்டப்படுவார்கள். எந்தத் தாசியாவது கடைசி காலத்தில் சுகமாயிருக்கிறாளா’ என்று தனது நாவலில் ஓரிடத்தில் வேதனையோடு சொல்கிறார் ராமாமிர்தம் அவர்கள்.

சுயமரியாதை இயக்க முன்னோடிகளில் ஒருவர். தேவதாசி சமூகத்திலே பிறந்து, அதனால் பாதிப்படைந்து, அந்தத் தளைகளை அறுத்து எறிந்து, அந்தக் கேடுகெட்டப் பழக்கத்தையே ஒழித்துக் கட்டும் வரை ஓயாமல் உழைத்தவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். பெண்கள் வீட்டைவிட்டு கூட வெளியே வர முடியாதிருந்த காலத்தில் வாழ்ந்திருந்தாலும் தன் தைரியத்தாலும், சமூகத்துக்கு தொண்டாற்ற வேண்டும் என்ற உத்வேகத்தாலும் ஆண்களுக்கு இணையாகப் பிரச்சாரம் போராட்டம் என நிகழ்த்தி வெற்றியடைந்து காட்டியவர் மூவலூர் முதாட்டி.

அம்மையாரைப் பற்றி சுருக்கமாக சில குறிப்புகள்:

  • மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பிறந்த ஆண்டு 1883.
  • 1925-ம் ஆண்டு பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார்.
  • 1930-ல் சென்னை மாகாணத்தில் தேவதாசிமுறை ஒழிப்பை சட்டமாக்க டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டியுடன் துணை நின்று போராடினார்.
  • 1936-ல் தாசிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர் என்ற சுயசரிதப் புதினம் வெளிவந்தது.
  • 1937 முதல் 1940 வரை நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டார். அதற்காக நவம்பர் 1938 சிறையில் அடைக்கப்பட்டார்.
  • சி.என்.அண்ணாதுரை ஆரம்பித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளராக இருந்தார்.
  • தமிழக அரசு மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் நினைவாக ஏற்படுத்திய சமூகநலத் திட்டம் – திருமண நிதியுதவித் திட்டம்
  • அறிஞர் அண்ணா அவர்களால் தமிழகத்தின் அன்னிபெசன்ட் எனப் புகழப்பட்டவர் – மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்.
  • பெண் உரிமைக்காக பாடுபட்ட விடிவெள்ளியாக நிகழ்த்தவர், தமிழகத்தைச் சேர்ந்த, ஒரு பெண் சீர்திருத்தவாதியாக இருந்தவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்.
  • அம்மையார் இறந்த ஆண்டு – 1962.

முதல் பெண் விடுதலைப் போராளி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

ஆணாதிக்கத்தின் அடிமைகளாய், பிள்ளை பெறும் இயந்திரங்களாய், அடக்கி வைக்கப்பட்டிருந்த பெண்ணினத்தைத் தட்டி எழுப்பியவர்! ஆணுக்குப் பெண் அடிமை இல்லை என்று ஆர்ப்பித்தவர்! ஆணும், பெண்ணும் சமம் என்ற விழிப்புணர்வை ஊட்டியவர்!

“தேவதாசிகள் முறை என்னும் அரிய வழக்கை அடியோடு ஒழித்திட நீதிக்கட்சியின் ஆட்சியில் சட்டம் இயற்றப் போராடியவர். அவரே முதல் பெண் போராளியான மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்”

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் “தேவதாசிகள்” என்ற சமூக இழிவு தமிழகத்தில் பரவியிருந்தது. இந்தியப் பண்பாட்டிற்கும், நாகரிகத்திற்கும் விடுத்த ஒரு சவாலாக, பெண்களுக்குப் பொட்டுக்கட்டும் “புன்மை” கொடிகட்டிப் பறந்தது. பாவையாரைத் “தேவரடியார்”களாக்கும் கொடுமை கோலோச்சியது. மாதர் தம்மை இழிவுபடுத்தும் இந்த முறையை ஆழிப்பதற்கான போராட்டம் இங்கு 1920 களில் தீவிரமடைந்தது.

சமுதாயத் தளைகளிலிருந்து விடுவிக்கப்படுவதோடு இணைந்தது பெண் விடுதலை என்பதை உணர்ந்தார் அம்மையார். ஆடம்பரத் திருமணங்களை ஆவேசத்தோடு எதிர்த்தார். வரதட்சணைக் கொடுமைகளை ஒழிக்க மேடைதோறும் முழங்கினார். சுயமரியாதைத் திருமணங்களை, சாதி மறுப்பு திருமணம் மற்றும் விதவை மறுமணங்களை ஆதரித்துச் செயல்பட்டார். மத மூட நம்பிக்கைகளே பெண்களின் இழிநிலைக்கும், அடிமைத்தனத்திற்கும் மூல காரணம் என்பதை பகிரங்கமாக மகளிர் மத்தியில் பிரச்சாரம் செய்தார்! சுமார் தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்துமத சனாதனத்தை எதிர்த்து எதிர்த்து தெருக்களில் முழங்கிய முதல் பெண் விடுதலைப் பேராளியானார். இதனால், சனாதனக் கும்பல் ஆத்திரமடைந்தது. அவர் பேசிக் கொண்டிருந்த மேடையில் ஏறி அவரது கூந்தலை அறுத்த அவலமும் அரங்கேறியது. ஆத்திரக்காரர்கள் தங்கள் வெறியைத் தீர்த்து கொண்டாலும் அம்மையாரின் சுயமரியாதை இயக்கப் பரப்புரை சூறாவளியாக எழுச்சி கொண்டது! ஆம்.

இந்நிலையில் ‘இசைவேளாளர்’ என்னும் பிரிவைச் சேர்ந்த பெண்கள் ‘பொட்டுக்கட்டி’ விடப்பட்னர். பெண், பருவம் அடையும் முன்பே. தேவதாசியாக்குவதற்குரிய சடங்கு கோயில் பிராமணர்களால் நடத்தி வைக்கப்பட்டது. அப்பொழுது கடவுளின் சார்பாக கோயியில் பூசை செய்யும் பிராமணக்குருக்கள் தேவதாசிப் பெண்ணுக்குத் தாலி கட்டுவார். பெரிய ஜமீன்தார்களுக்கும் இந்த “குட்டி” ஜமீன்தார்களும் பொட்டுக்கட்டியோர்க்கு “புரவலர்கள்” ஆனார்கள்.

தேவதாசிக்கும், அவரது புரவலருக்கும் இடையே இருக்கும் பாலியல் உறவு எந்த வகையிலும் அப்பெண்ணுக்கு மனைவி என்ற உரிமையைத்தராது கோயில் மூலம் வழங்கப்பட்ட பொருளாதாரப் பலன்களைப் பெற வேண்டுமானால், தேவதாசிப் பெண்கள் கோயில் அடிமைகளாக இருந்தால் மட்டும் போதாது நில உடைமையாளர்களின் ஆசை நாயகிகளாகப் பரம்பரை பரம்பரையாக வாழவேண்டும்.

பிறப்பின் அடிப்படையில் தேவதாசிகளாக பெண்களை ஆக்குகிற சாதி இழிவிலிருந்து மீள்வதற்கென, இசை வேளாளரின் முதல் மாநாட்டை 1925 ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் முன்னின்று நடத்தினார். அம்மாநாட்டில், “நம்மை நாமே இழிவு செய்துகொள்ளும் பொட்டு கட்டும் பழக்கத்திலிருந்து நமது சாதி வெளியே வர வேண்டும்” என்பதை வலியுறுத்தினார். அந்த மாநாட்டில் தமிழ்த் தென்றல் திரு.வி.க, தந்தை பெரியார், எஸ். ராமநாதன் ஆகியோர் உரையாற்றினார்கள். தேவதாசிகளுக்காக ‘யுவதி சரணாலயம்’ என்ற அமைப்பை நடத்தி வந்த யமுனா பூரண திலகம்மா என்ற தெலுங்குப் பெண், மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்.

இந்த மாநாட்டுக்குப் பின், மூவலூர் ராமாமர்தம் அம்மையார் பல ஊர்களில் பொட்டறுப்பு சங்கங்களைத் தொடங்கினார். மேடையில் தேவதாசிப் பெண்கள் வந்து, தாங்கள் கோயிலுக்குக் கட்டிய பொட்டு எனப்படும் தாலியை அறுத்து எறிந்த நிகழ்ச்சிகளை துணிச்சலுடன் நடத்தினார். கொலை மிரட்டல்கள், கூட்ட மேடை ஏரிப்புகள், கூட்டத்தில் கலவரங்கள் போன்ற எதிர்ப்புகளுக்கெல்லாம் அஞ்சாமல் செயற்பட்டார்.

பெண்களின் விடிவெள்ளி

மூவலூர் இராமாமிர்தம் தேவதாசிப் பெண்களின் அடிமை நிலையை ஒழிக்கப்புறப்பட்ட விடிவெள்ளியாக விளங்கினார்.

ஊர்தோறும், தெருக்கள் தோறும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து பெண்களை விழிப்படையைச் செய்தார்.

இதனால் சமூக ரீதியான ஒதுக்குதல்களையும். அதிகமான மிரட்டல்களையும் எதிர்கொண்டார். இம்முறையை ஒழிப்பதற்குத் தேவதாசி சமூகத்திலிருந்தே கூடப் பலமான எதிர்ப்புக் கிளம்பியது. பெரிய நிலப்பரப்புக்கள், ஜமீன்தார்கள், சாஸ்திரிகள் எனப் பலரும் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் கொதிப்படைந்தனர். இச்சமூக விரோதிகள் அனைவரையும் எதிர்கொண்டு, தனது போராட்டத்தை மேலும் ஆவேசத்துடன் தொடர்ந்தார் மூவலூர் அம்மையார். அவர் தேவதாசிகள் வீட்டுக்கே சென்றார். அங்கு, பொட்டுக்கட்டி விடப்பட்ட இளம்பெண்களை இரகசியமாகச் சந்தித்தார். இந்தக் கொடிய வழக்கத்திலிருந்து விலகும்படி எடுத்தரைத்தார். அவ்வாறு விலகி வெளியேறிய பல பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்தார். ‘தேவதாசி’ முறையிலிருந்து வெளியேறிய பெண்களைக் கொண்டு, ‘நாகபாசத்தர் சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கினார்.

தேவதாசி முறைக்கு எதிராக பெரியாரின் பிரச்சாரம்

தமிழக காங்கிரஸ் கட்சியில் தந்தை பெரியார், திருவிக போன்ற தலைவர்கள் தேவதாசி முறைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தனர். இதனால் ஈர்க்கப்பட்டு, தமது இலட்சியத்துக்கு ஆதரவு திரட்ட மூவலூர் அம்மையார் காங்கிரஸ் பேரியக்கத்துடன் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டார். தேவதாசி முறையை ஒழிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு பாடுபட்டதை அறிந்து காந்தியடிகள் மூவலூர் அம்மையாருக்கு பாராட்டுக்கடிதம் எழுதினார்.

அந்தக்காலத்தில் பெண் இதுபோன்ற சமூக மறுமலர்ச்சிக்கானப் பிரச்சாரத்தில் நேரடியாக ஈடுபடுவது மிகவும் அபூர்வமாகும். அதிலும், ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்த பெண்ணே தமது சமூகத்தின் இழி நிலையை எதிர்த்துப் போராட முன்வந்தது காந்தியடிகளைக் கவர்ந்தது.

“தேவதாசி”களை மணக்க, ஆடவர்க்கு அஞ்சாநெஞ்சம் வேண்டும். இப்பெண்களை ஏற்று மணப்பது சமூகச் சீர்திருத்தக்காரர்களின் கடமையாகும் என்பதை அம்மையார் வலியுறுத்தினார்.

காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவராக விளங்கிய பெரியாரின் வேண்டுகோளை ஏற்று, கதராடையைச் சுமந்து தெருத்தெருவாக விற்பனை செய்தார். தேவதாசிப் பெண்களையும் கதராடை அணியச்செய்தார்.

காக்கிநாடாவில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் கொடி பிடித்துச்செல்லக்கூடாது எனத் தடுத்தனர் பிரிட்டிஷார். “கொடி பிடித்தால் தானே தடை செய்வாய், நான் கொடியையே புடவையாக உடுத்திக்கொள்கிறேன் பார்” எனக்கொடியைப் புடவையாக அணிந்து கொண்டார்.

மற்றொரு முறை காங்கிரஸ் மேடையில் பேசக்கூடாது என்று வாய்ப்பூட்டுச் சட்டம் போடப்பட்டது. அப்போதும், அம்மையார் தன் பாணியில் மேடையில் ஒரு கரும்பலகையை வைத்து, அதில் தான் பேச வேண்டியவைகளை எழுதிக்காட்டியே பிரச்சாரம் செய்து காவல் துறையினருக்குத் தலைவலியை உண்டாக்கினார்.

பண்ணை அடிமை முறை ஒழிப்பு

மூவலூர் அம்மையார் தான் சுயமரியதை இயக்கத்தின் முதல் பெண் பேச்சாளராகத் தமிழகம் முழுவதும் வலம் வந்தார். காந்தியடிகளின் தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரத்தில் தீவிரமாகப் பங்குகொண்டார். அந்தக் காலத்தில் தலித் ஆண்கள் இடுப்பில் வேட்டி கட்ட அனுமதியில்லை. கோவணம் மட்டுமே கட்ட வேண்டும் என்பது நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறை. தலித் ஆண்களுக்கு ஆடை கொடுத்து, இடுப்பு வேட்டியோடு நடமாடச் செய்து பண்ணையடிமை முறைக்கு முதல் சாவு மணி அடித்தவர் அம்மையார்.

காங்கிரஸ் கட்சியில் சனாதனவாதிகள் இருந்து கொண்டு உண்மையாகப் போராடியவர்களை இருட்டடிப்புச் செய்தனர்.

சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு கோரி தந்தை பெரியார் தீர்மானம் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானம் முறியடிக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து தந்தை பெரியார் வெளியேறினார். அவருடன் சேர்ந்து மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரும் வெளியேறினார்.

தமிழகம் முழுவதும் பட்டித்தொட்டியெங்கும் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை மக்களிடம் பரப்புரை செய்த முதல் பெண் மூவலூர் அம்மையார்தான்.

தமிழகத்தில் சுயமரியதைத் திருமணங்கள் அதிக அளவில் நடைபெற அரும்பாடுபட்டார்.

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியும் தேவதாசிமுறை ஒழிப்பு சட்டமும்

தேவதாசிமுறை ஒழிப்புச்சட்டத்தை நிறைவேற்றிட டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால், காங்கிரஸ் சனாதனவாதிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். தீரர் சத்தியமூர்த்தி சட்ட மன்றத்தில் தேவதாசி முறையை ஆதரித்தார். “இந்த முறை தொடர்ந்து நீடிக்க வேண்டும். இல்லாவிட்டால் பாரம்பரியம் மிக்க இந்தியப் பண்பாடு சீரழிந்துவிடும்” என்று பேசினார். “இதுவரை எங்கள் வீட்டுப் பெண்கள் தேவதாசிகளாக இருந்து விட்டனர். இந்தியப் பண்பாட்டைக் காக்க இனிமேல், உங்கள் வீட்டுப் பெண்களைச் சிறிது காலம் தேவதாசிகளாக இருக்கச் செய்யுங்கள்” என்று அவருக்குப் பதில் சொல்லும்படி டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டிக்கு அம்மையார் ஆலோசனை அளித்தார். டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியும் அவ்வாறு சட்டமன்றத்தில் பேசிய பிறகே காங்கிரஸ் சனாதனவாதிகளின் வாய் அடைக்கப்பட்டது. நீதிக்கட்சியினரும், சுயமரியாதை இயக்கத்தினரும் தேவதாசி முறை ஒழிப்புச்சட்டம் அக்டேபர் 9ல் 1947ம் ஆண்டு நிறைவேற முக்கியய் பங்காற்றினர்.

தேவதாசி முறை குறித்து ‘தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்’ என்ற நாவலை 1936 ஆம் ஆண்டும் அம்மையார் எழுதினார். அந்த நாவல் தேவதாசிகள் விழிப்புணர்விற்காக எழுதப்பட்டது. 1938 இல் தமிழகத்தில் நடைபெற்ற இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டார். திருச்சி உறையூர் முதல் சென்னை வரை 42 நாட்கள் நடைபெற்ற பேரணியில் அம்மையார் நடந்தே சென்று பிரச்சாரம் செய்தார். சென்னையில் 13.12.1938 ஆம் நாள் நடைபெற்ற இந்தித் திணிப்பு எதிர்ப்பு மறியல் போரில் கலந்துகொண்டு கைதானார். ஆறு மாதங்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

1949 ஆம் ஆண்டு திராவிடர் கழகத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது. அண்ணாவுடன் தி.க.விலிருந்து வெளியேறித் தி.மு.க.வின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக 70 வயதிலும் சுறுசுறுப்பாய் செயல்பட்டார்.

தேவதாசி முறை, தீண்டாமை, குழந்தைத் திருமணம் போன்ற சமூக இழிவுகளை எதிர்த்துப் போராடிய மூவலூர் அம்மையார் 27.06.1962 ல் காலமானார். மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் 50 ஆண்டு பொதுவாழ்க்கைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் 1956 ஆம் ஆண்டு தி.மு.க சார்பில் அறிஞர் அண்ணாவால் விருது வழங்கப்பட்டது. மூவலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்’ பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவரது பெயரில் தமிழக அரசால் ‘ஏழைப்பெண்கள் திருமண உதவித் திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது.

முதல் பெண் விடுதலைப் போராளியான, ‘சமூகச்சீர்திருத்தச்சுடர்’ ராமாமிர்தம் அம்மையார் மூவலூரில் வாழ்ந்த வீட்டை அரசு ஏற்று, அங்கு அவருக்கு நினைவு இல்லம் அமைக்க வேண்டும். இது தமிழக மக்களின் பெருவிருப்பமாகும்!

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் தேவதாசி முறை, தீண்டாமை, குழந்தை திருமணம், போன்ற அடிமைத்தனத்திலிருந்து பெண்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்க தன்னை அற்பணித்த முதல் பெண் விடுதலை போராளி ஆவார்.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்களின் நினைவுதினத்தை கருதி ஏழை பெண்களுக்கு திருமண உதவி நிதி திட்டம் அரசால் வகுக்கப்பட்டு வருகிறது. தேவதாசி முறையை ஒழித்து காட்டி இன்றைய சமுதாயத்தில் பெண்கள் வாழ வழி செய்தவர் ஆவார்.

முடிவுரை

சுதந்திரப் போராட்டம், பெண்கள் விடுதலைக்காவும் சக விடுதலைக்காகவும் போராடியவர், ராமாமிர்தம் அம்மையார் ஆவார். பெண்களின் நலனுக்காக போராடியவர் ஆவார். இதனால் பல சித்தரவதைக்கும் ஆளானார். ஆனால் உயிரை ஒரு பொருட்டாக கருதாமல் அனைத்து சதிவலைகளையும் முறியடித்தால்தான் இன்றைய சமுகத்தில் அனைத்து பெண்களும் சமமாக வாழ வழி செய்தவர் அம்மையார் ஆவார். இன்றயை காலத்தில் பெண்கள் மதிப்பும் மரியாதையுமாக வாழ வழி செய்தவர் ஆவர். பெண்களை கண்ணியமாக பார்க்க வேண்டும் என்று முன்மொழிந்தவர். இவரது சேவைகளையும், தியாகங்களையும் கவுரவிக்கும் விதமாகதான் தமிழக முதல்வர் கருணாநிதி தான் அறிவித்த ஏழை பெண்கள் திருமண உதவித்திட்டத்துக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் ஏழைப் பெண்கள் திருமண உதவி திட்டம் என சூட்டியுள்ளார். இத்திட்டம் இன்றைய ஏழை பெண்களுக்கு மிகவும் உதவியாகவும் அவர்கள் வாழ்க்கையின் ஒளி விளக்காக திகழ்கிறது.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க