Tuesday, December 10, 2024
முகப்புசெய்திதமிழ்நாடுதேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள சொனப்பாடி மக்கள்

தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள சொனப்பாடி மக்கள்

சொனப்பாடியில் குடிநீர் பிரச்சினை இருக்கிறது, குடிநீருக்காக அமைத்த ஆழ்துளை கிணற்றிலும் நீர் கிடைக்கவில்லை. மேலும், அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்வதற்கு முறையான சாலை வசதி கிடையாது.

-

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே, பட்டப்பாடி ஊராட்சிக்கு உட்பட்டது சொனப்பாடி கிராமம். இங்கு மலைவாழ் மக்கள் பலர் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இந்நிலையில் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள மக்கள், தங்களது வீடு மற்றும் வீதிகளில் கருப்பு கொடியை பறக்க வைத்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். மேலும் தங்கள் பிரச்சனையை கூறும் விதமாக சுவரொட்டிகளை ஆங்காங்கே மக்கள் ஒட்டி வைத்துள்ளனர்.

சொனப்பாடியில் குடிநீர் பிரச்சினை இருக்கிறது, குடிநீருக்காக அமைத்த ஆழ்துளை கிணற்றிலும் நீர் கிடைக்கவில்லை. மேலும், அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்வதற்கு முறையான சாலை வசதி கிடையாது. இதனால் மக்கள் மிகப் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எவருக்கேனும் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு எந்த வசதியும் இல்லை. ஆம்புலன்ஸ் வருவதற்கு வழி கிடையாது. போதிய தெருவிளக்கு வசதி கிடையாது.

சாலை வசதி இல்லாமல் கரடு முரடான மண் பாதையில் தினமும் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று வரும் மாணவர்கள் கால் வலியால் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் எங்களின் பிரச்சனைகளுக்கு பல ஆண்டுகளாகியும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே, அடிப்படை வசதிகளை அரசு நிர்வாகம் செய்து தரும் வரையிலும் தேர்தலை புறக்கணிப்பது என்று முடிவு செய்துள்ளோம். குறிப்பாக, வருகின்ற மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கவும் தீர்மானித்துள்ளோம் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் தமிழகத்தில் பல இடங்களில் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு என்ற போராட்ட வடிவத்தை கையிலெடுத்து வருகின்றனர். தேர்தலையொட்டி தங்களது கோரிக்கைகளை முன்வைத்தால் தான் கட்சிகள் செவி சாய்க்கும் என்பதை உணர்ந்து தேர்தல் புறகணிப்பை கையிலெடுத்துள்ளனர். ஆகையால், மக்களது பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்காமல் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி. யை வீழ்த்த முடியாது என்பதே எதார்த்தம்.


அபி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க