Thursday, July 3, 2025
முகப்புசெய்திஇந்தியா”வாட்ஸ் ஆப்”பிற்கு மோடி அரசு நெருக்கடி – கருத்து சுதந்திரத்தை நசுக்கும் பாசிச நடவடிக்கை

”வாட்ஸ் ஆப்”பிற்கு மோடி அரசு நெருக்கடி – கருத்து சுதந்திரத்தை நசுக்கும் பாசிச நடவடிக்கை

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்டம், இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 14, 19 மற்றும் 21, மக்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ள மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது.

-

ண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன்” என்பது ஒரு வகை பாதுகாப்பு வசதி. இந்த எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் இருந்தால் ஒரு மெசேஜை அனுப்பியவர் மற்றும் பெறுபவர் மட்டுமே அதைப் பார்க்க முடியும். சம்பந்தப்பட்ட நிறுவனமே நினைத்தாலும் அந்த மெசேஜை படிக்க முடியாது. அவ்வாறிருக்கையில், அந்த ‘எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன்’ என்ற பாதுகாப்பு அம்சத்தை நீக்க வேண்டும் என்று புதிய தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளைக் காட்டி, ‘வாட்ஸ் ஆப்’ நிறுவனத்திற்கு ஒன்றிய பாஜக அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது.

இதனால், அதிருப்தி அடைந்துள்ள ‘வாட்ஸ் ஆப்’ நிறுவனம், பயனர்களின் தனிப்பட்ட உரிமையை, அவர்களின் சுதந்திரத்தைப் பறிக்க முயன்றால், இந்தியாவை விட்டே நாங்கள் வெளியேறுவோம் என்று அறிவித்துள்ளது. ஒன்றிய பாஜக கடந்த 2021-ஆம் ஆண்டு ‘தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள்-2021’ஐ கொண்டு வந்தது. இதன்கீழ் வாட்ஸ் ஆப், முக நூல் போன்ற சமூக வலைதள நிறுவனங்கள் அவர்களது பயனர்களின் உரையாடல்களைக் கவனிக்க வேண்டும்.

அவர்களை அடையாளம் காண வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வாட்ஸ் ஆப், முகநூலின் தாய் நிறுவனமான ‘மெட்டா’ நிறுவனம் தில்லி  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை தில்லி உயர் நீதிமன்றத்தில் வியாழனன்று நடைபெற்றது. அப்போது, ‘வாட்ஸ் ஆப்’ நிறுவனம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் தேஜஸ் கரியா, “‘வாட்ஸ் ஆப்’ நிறுவனத்தைப் பொறுத்தவரைத் தனியுரிமை தான் எங்களின் முக்கிய கொள்கை. இந்த தனியுரிமையைப் பயனாளர்களுக்குத் தர ‘எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷன்’ ரொம்பவே முக்கியம்.  வாட்ஸ்அப்பில் எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் (end-to-end encryption) இருப்பதால், அதாவது வாட்ஸ் ஆப்பில் செய்திகளை அனுப்பியவரும், அதைப் பெறுபவரும் மட்டுமே தாங்கள் அனுப்பிய செய்திகளை பார்க்க முடியும் என்ற அம்சத்தால், இந்த தனியுரிமைக்காக (Privacy) மக்கள் அதிகளவில் இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.


படிக்க: ஒளிபரப்பு சேவை (ஒழுங்குமுறை) மசோதா 2023: கருத்து சுதந்திரத்திற்கு கட்டப்படும் கல்லறை!


இந்தியாவில் 400 மில்லியன் மக்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள தகவல் தொழில்நுட்ப (இடை நிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள் 2021 ஆனது, பயனர்களின் தனியுரிமையை குறைத்து மதிப்பிடுகிறது. ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்டம், இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 14, 19 மற்றும் 21, மக்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ள மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது. இதுபோன்ற விதி, மற்ற நாடுகள் எதிலும் இல்லை. ஏன், பிரேசிலில் கூட இல்லை. எந்த செய்திகளை டிகிரிப்ட் (decrypted) செய்யச் சொல்வார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது.

இந்த சட்டத்திற்கு இணங்குவது என்பது என்க்ரிப்ஷன் பிராசஸை அர்த்தம் இல்லாமல் செய்துவிடும். எனவே, அதில் சமரசம் செய்து கொள்ள முடியாது. எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்-ஐ உடைக்க ஒன்றிய அரசு எங்களைக் கட்டாயப்படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேற நேரிடும்” என்று கூறினார். ஆனால், ஒன்றிய அரசு வழக்கறிஞரோ, “இன்றைய காலகட்டத்துக்கு இத்தகைய செயல்முறையும் சட்டமும் அவசியம்” என்று அரசு கொண்டு வந்துள்ள விதிகளை ஆதரித்து வாதிட்டார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ஒரு சமநிலை தேவை என்றனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

கடந்த பத்தாண்டு கால மோடி ஆட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் எதிர்ப்புணர்வு மேலோங்கியுள்ளது. விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் மோடி அரசுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். மக்களின் இப்போராட்டங்களை கண்டு அஞ்சி நடுங்குகிறது பாசிச கும்பல். இந்த அச்ச உணர்வின் காரணமாக, மக்கள் அனைவரையும் கண்காணிக்கும் பொருட்டு ‘எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன்’ என்ற பாதுகாப்பு அம்சத்தை நீக்கப்பார்க்கிறது.

செய்தி ஆதாரம் – தீக்கதிர்


ஆதன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க