ஒளிபரப்பு சேவை (ஒழுங்குமுறை) மசோதா 2023: கருத்து சுதந்திரத்திற்கு கட்டப்படும் கல்லறை!

இம்மசோதா சட்டமாக்கப்பட்டால் அரசை விமர்சிக்கும் கருத்துகளும், தளங்களும் மொத்தமாக துடைத்தெறியப்படும் அபாயம் உள்ளது. பொதுவெளியில் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எதிரான கருத்துகள் வடிக்கட்டப்பட்டு, இந்துத்துவ பாசிச கருத்துக்கள் மட்டுமே பேசுபொருளாக்கப்படும்.

டந்த பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி, “தி கேரவன்”(The Caravan) பத்திரிகையின் பிப்ரவரி மாத இதழில் “இராணுவ நிலையத்திலிருந்து அலறல்கள்” (Screams from the Army Post) என்ற தலைப்பில் காஷ்மீரில் நடக்கும் ராணுவ அட்டூழியங்கள் குறித்தான ஒரு கட்டுரை வெளியானது. 24 மணி நேரத்திற்குள் இணையதளத்திலிருந்து அக்கட்டுரையை நீக்கவேண்டும் என்றும் நீக்கத் தவறினால் முழு இணையதளமும் தடை செய்யப்படும் என்றும் தி கேரவன் பத்திரிகைக்கு மிரட்டல் விடுத்திருந்தது ஒன்றிய பாசிச மோடி அரசு. அதே மாதத்தில் 22-ஆம் தேதி விவசாயிகள் போரட்டம் குறித்து செய்திகள் வெளியிடும் சில குறிப்பிட்ட கணக்குகள் மற்றும் பதிவுகளை முடக்குமாறு எக்ஸ் தளத்திற்கு (ட்விட்டர்) மோடி அரசால் உத்தரவிடப்பட்டதும் அம்பலமாகியது. இதுபோன்று மோடி அரசு ஊடகங்கள் மீதும் கருத்து சுதந்திரத்தின் மீதும் ஒடுக்குமுறையை ஏவுவது முதன்முறையல்ல.

மோடி அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பெயரளவில் நிலவும் ஜனநாயகக் கட்டமைப்பை ஒழித்துவிட்டு பாசிச சர்வாதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கியமானது கருத்து சுதந்திரத்தை ஒழித்துக்கட்டுவது. பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் செயல்பாட்டளர்கள், பத்திரிகையாளர்கள் மீது ஊபா போடுவது; காவி பயங்கரவாதிகளை வைத்து அவர்களை படுகொலை செய்வது; தனக்கு பணியாத ஊடக நிறுவனங்களில் ரெய்டு நடத்துவது; அதானி – அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் மூலம் ஊடக நிறுவனங்களை கைப்பற்றுவது என மோடி அரசு பல பாசிச ஒடுக்குமுறைகளை செலுத்தி வருகிறது. பத்திரிகை முதல் டிஜிட்டல் ஊடகங்கள் வரை எல்லா தளங்களையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு பல்வேறு பாசிச சட்டத்திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது.

இதன் உச்சக்கட்டமாக இனி மோடி அரசின் கண்காணிப்பிற்கு உட்படாமல் எந்தவொரு கருத்தும், செய்தியும் வெளியே வராது என்ற நிலையை உருவாக்கும் விதமாக ஒளிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) மசோதா 2023 (Broadcasting Services (Regulation) Bill) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு நவம்பர் 10-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இம்மசோதாவின் வரைவு அறிக்கை மீது கருத்துகளை தெரிவிக்க அளித்திருந்த காலவரம்பு இந்தாண்டு ஜனவரி 27-ஆம் தேதியோடு நிறைவடைந்துள்ளது. இம்மசோதாவிற்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பத்திரிகையாளர்களின் தேசியக் கூட்டமைப்பு, டெல்லி பத்திரிகையாளர்கள் சங்கம், எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா போன்ற பல்வேறு ஊடக அமைப்புகள் இந்த ஒளிபரப்பு சேவை மசோதாவை “தணிக்கைக்கான நுழைவாயில்” (Gateway to Censorship) என விமர்சித்துள்ளன.


படிக்க: தி கேரவன் பத்திரிகையின் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் பாசிச மோடி அரசை கண்டிக்கின்றோம்!


ஏனெனில், இதுவரை நடைமுறையில் இருந்துவந்த கேபிள் நெட்வொர்க்குகள் (ஒழுங்குமுறை) சட்டம் 1995-க்கு பதிலாகத் தான் தற்போது ஒளிபரப்பு சேவை (ஒழுங்குமுறை) மசோதா 2023 முன்வைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நடைமுறையில் இருந்த சட்டப்படி கேபிள் டிவி, செயற்கைக்கோள், இணைய ஒளிபரப்பு, வானொலி ஒலிபரப்பு முதலியவைதான் “ஒளிபரப்பு நெட்வொர்க்” என்ற வரம்பிற்குள் இருந்தது. தற்போது புதிய மசோதாவில், நெட்ஃபிளிக்ஸ், அமேசான், டிஸ்னி+ஹாட்ஸ்டார் போன்ற ஓ.டி.டி. தளங்கள் (OTT- Over The Top), டிஜிட்டல் செய்தி ஊடகங்கள் என அனைத்து தளங்களும் ஒளிபரப்பு நெட்வொர்க் என்ற வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் நிகழ்ச்சி (Programme) என்பதற்கு இம்மசோதாவில் தெளிவான வரையறை கொடுக்கப்படவில்லை. ஒளிபரப்பு நெட்வொர்க்கை பயன்படுத்தி அனுப்பப்படும் ஆடியோ, வீடியோ அல்லது ஆடியோ வீடியோ உள்ளடக்கம், அடையாளம் (Sign), சமிக்ஞைகள் (Signals), எழுத்து (Text), படங்கள் என அனைத்தும் உள்ளடங்கும் என்று மிகவும் பொதுவாக குறிப்படப்பட்டுள்ளது. அதாவது, ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள், கதைகள், நாடகங்கள், ஆவணப்படங்கள், விளம்பரங்கள் மற்றும் தொடர்கள், நேரலைகள் இணைய தளங்களில் எழுதப்படும் கட்டுரைகள், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் வெளியாகும் வீடியோக்கள் என அனைத்தையும் இனி மோடி அரசு தணிக்கை செய்யப்போகிறது.

பாசிசக் கும்பிலின் பிடியில் டிஜிட்டல் ஊடகங்கள்

தற்போது முன்வைக்கப்பட்ட ஒளிபரப்பு சேவை மசோதாவின்படி, ஒளிபரப்பு நெட்வொர்க் ஆப்ரேட்டர்கள் ஒன்றிய அரசிடம் பதிவு செய்திருந்தால் மட்டுமே சேவையை வழங்க முடியும். ஓ.டி.டி. தளத்தைப் பொறுத்தவரை, தளத்தின் பார்வையாளர்கள், சந்தாதாரர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் இருக்கவேண்டும்; அதுகுறித்து ஒன்றிய அரசுக்கு தரவுகளை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இம்மசோதாவில், “ஒளிபரப்பாளர்கள் மற்றும் நெட்வொர்க் ஆப்ரேட்டர்களால் சுய ஒழுங்குமுறை” (Self-regulation by broadcasters and broadcasting network operators), “சுய ஒழுங்குமுறை நிறுவனங்கள்” (Self-regulatory Organisations), “ஒளிபரப்பு ஆலோசனைக் குழு” (Broadcast Advisory Council) என மூன்று ஒழுங்குமுறை கட்டமைப்புகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த மூன்று கட்டமைப்பிலும் ஒன்றிய அரசுதான் முடிவெடுக்கும் இடத்தில் உள்ளது.

முதலாவதாக, சுய ஒழுங்குமுறையின்படி, ஒவ்வொரு ஒளிபரப்பாளரும் அல்லது ஆப்ரேட்டரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட “உள்ளடக்க மதிப்பீட்டுக் கமிட்டியை” (Content Evaluation Committee) நிறுவ வேண்டும். இந்த கமிட்டியில் எத்தனை பேர் இருக்க வேண்டும், அதன் செயல்பாட்டு விவரங்கள் என அனைத்தும் ஒன்றிய அரசால் தீர்மானிக்கப்படும். இதன்படி இனி “உள்ளடக்க மதிப்பீட்டுக் கமிட்டி”யால் சான்றளிக்கப்பட்ட நிகழ்ச்சிகளை மட்டுமே ஒளிபரப்பாளர்கள் ஒளிபரப்ப முடியும்.

செய்தி ஊடகங்களை பொறுத்தவரை, இந்த விதிமுறையால் ஆசிரியர் குழுக்கள் செல்லாக் காசாக்கப்படும். இதுகுறித்து பேசிய “தி குயிண்ட்” இணையதளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான ரிது கபூர், “செய்தி ஊடகங்களை பொறுத்தவரை ஒவ்வொரு நிறுவனங்களும் என்ன செய்தி எப்படி வெளியிட வேண்டும் என தங்களுக்கென வரையறை வகுத்து செயல்பட்டு கொண்டிருக்கும். இதற்கென ஆசிரியர் குழு இருக்கும். ஆனால் அதையும் மீறி உள்ளடக்க மதிப்பீட்டுக் குழு எதற்கு?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


படிக்க: கருத்துச் சுதந்திரத்திற்கு கல்லறை கட்டிவரும் பாசிச மோடி அரசு!


கூடுதலாக, இந்தக் கமிட்டியால் சான்றளிக்கப்படாத நிகழ்ச்சிகளை பரிந்துரைக்கவும் ஒன்றிய அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆக, இனி என்ன சேனலில் என்ன நிகழ்ச்சி வெளியிடப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்போவது பா.ஜ.க. அரசுதான். ஏற்கெனவே, தொலைக்காட்சி சேனல்களில் முற்போக்கு நிகழ்ச்சிகளை ஒழித்துக்கட்டி பல சேனல்களில் இந்துத்துவத்துக்கு தோதான புராணக் குப்பைகள் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இனி ஓ.டி.டி. மற்றும் டிஜிட்டல் ஊடகங்களுக்கும் இதே நிலைதான் ஏற்படப்போகிறது. பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எதிரான கருத்துகளையோ, ஏன் முற்போக்கு கருத்துகளையோ கூட இனி எந்த இடத்திலும் ஒளிபரப்ப முடியாது.

இரண்டாவதாக, இந்த மசோதாவின்படி சுய ஒழுங்குமுறை நிறுவனங்களில் அனைத்து ஒளிபரப்பாளர்கள்/ ஆப்ரேட்டர்கள் இணைய வேண்டும். இந்த நிறுவனம் அனைத்து குறைகள், முறையீடுகள், தனிப்பட்ட ஒளிபரப்பாளர்களால் கவனிக்கப்படாத பிற விஷயங்களை நிவர்த்தி செய்து வழிகாட்டுதல்களை வெளியிடுவது, அரசால் தீர்மானிக்கப்பட்ட “விதிமுறைகள்” (codes)- இன்னும் பொதுவெளியில் அறிவிக்கவில்லை, அடிப்படையில் செயல்படுவதை உறுதி செய்வது முதலியவற்றை செய்யும். இந்த விதிமுறைகளுக்கு உடன்படாத ஒளிபரப்பாளர்கள்/ ஆப்ரேட்டர்களை தற்காலிகமாக இடைநீக்கம் செய்வது, உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவது, எச்சரிக்கை அல்லது 5 லட்சம் வரையிலான அபராதம் விதிப்பது போன்ற அதிகாரங்கள் இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

அதாவது, மேலே குறிப்பிட்டிருந்த கமிட்டியின் தணிக்கையை மீறி பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எதிரான அல்லது முற்போக்கு கருத்து கொண்ட நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டால், அதற்கு எதிராக இந்த சுய ஒழுங்குமுறை நிறுவனத்தில் புகாரளிக்கலாம். இந்த புகார்கள் மீது இந்நிறுவனம் விசாரணை நடத்தி தண்டனை வழங்கும். சான்றாக, சமீபத்தில் “நெட் ஃபிளிக்ஸ்” தளத்தில் வெளியான அன்னபூரணி படத்திற்கு சங்கிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அத்தளத்தில் இருந்து அப்படம் நீக்கப்பட்டது. இம்மசோதா நடைமுறைக்கு வந்தால் பாசிச மோடி அரசுக்கு அடங்க மறுக்கும் தளங்கள் முற்றிலுமாக முடக்கப்படும்.

மூன்றாவதாக, ஒளிபரப்பு ஆலோசனைக் குழு (Broadcasting Advisory Council) ஒன்று அமைக்கப்படும். இத்தகைய குழுவின் தலைவராக, ஊடகத்துறையில் 25 வருட அனுபவம் கொண்ட ஒருவர் நியமிக்கப்படுவார். மேலும், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், வெளிவிவகாரத்துறை அமைச்சகம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து அதிகாரப்பூர்வ அதிகாரிகளும், அவர்களுடன் ஊடகம், பொழுதுபோக்கு, ஒளிபரப்பு, குழந்தைகள் மற்றும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், மனித உரிமை, சட்டம் போன்ற துறைகளில் அனுபவம் கொண்ட ஐந்து ‘சுயாதீன நபர்கள்’(independent persons) இக்குழுவில் நியமிக்கப்படுவார்கள். இதில் கேலிக்கூத்து என்னவென்றால் இவர்கள் அனைவரையும் ஒன்றிய அரசுதான் நியமிக்கும்.


படிக்க: “தி காஷ்மீர் வாலா” சுதந்திர ஊடகம் முடக்கம்: கருத்துச் சுதந்திரத்தின் மீதான மோடி அரசின் கொலைவெறித் தாக்குதல்!


சுய ஒழுங்குமுறை நிறுவனங்களில் அளிக்கப்பட்ட புகார்கள் மீதான மேல்முறையீடுகளை இந்த ஆலோசனைக்குழு விசாரிக்கும். ஆனால் ஆலோசனைக்குழுவால், பரிந்துரைகளை மட்டுமே வழங்க முடியுமே ஒழிய முடிவெடுக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்குதான் உள்ளது. ஆக, ஒளிபரப்பு சேவை மீதான அனைத்து அதிகாரங்களும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கப்போகிறது. வெறும் கண்துடைப்பிற்காகத்தான் இத்தனைக் குழுக்கள், நிறுவனங்கள் அமைக்கப்படுகின்றன.

மேலும், இவ்வரைவு மசோதா பிரிவு 31-இன் படி, ஒளிபரப்பு நெட்வொர்க்குகள் மற்றும் சேவைகளின் உபகரணங்களை ஆய்வு செய்ய, இடைமறிக்க, கண்காணிக்க மற்றும் பறிமுதல் செய்ய ஒன்றிய அரசிற்கு அதிகாரம் உள்ளது. மேலும் பிரிவு 35-இன் படி, எந்தவொரு ஒளிபரப்பு நெட்வொர்க்கின் நிகழ்ச்சி அல்லது விளம்பரத்தை நீக்க அல்லது மாற்றியமைக்க ஒன்றிய அரசு உத்தரவிட முடியும். விதிமுறைகளை மீறும் ஒளிபரப்பு நெட்வொர்க்குகளுக்கு, குறிப்பிட்ட மணிநேரங்களுக்கு சேனலில் எந்த நிகழ்ச்சியும் ஒளிபரப்பப்படாமல் நிறுத்திவைக்கவும் அதிகாரமளிக்கிறது. இது டிஜிட்டல் ஊடகம் (இ-பேப்பர்ஸ், நியூஸ் போர்ட்டல், இணையதளம், சமூக ஊடகம்) போன்று செய்தி மற்றும் நடப்பு விவகார நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் எந்தவொரு நிறுவனத்திற்கும் அல்லது நபருக்கும்  பொருந்தும்.

மேலும், பாசிச அரசு‘பொது நலன் கருதி’ அவசியம் என்று கருதும்பட்சத்தில், ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் எந்த ஒளிபரப்பு சேவைகளும் வழங்காதவாறு நிறுத்தி வைக்கவும், ஒளிபரப்பு நெட்வொர்க் ஆப்ரேட்டர்கள் செயல்படுவதை தடை செய்யவும் இம்மசோதா ஒன்றிய அரசுக்கு அதிகாரத்தை வழங்குகிறது. அதாவது மோடி அரசுக்கு எதிரான விஷயங்கள் பேசுபொருளாவது, பாசிசக் கும்பலுக்கு எதிரான போராட்டங்கள் வலுபெறுவது போன்றவற்றை தடுக்க இப்பாசிச நடவடிக்கையை மோடி அரசு மேற்கொள்ளும். இதன் மூலம், மிச்சமீதமிருந்த கருத்து சுதந்திரத்தையும் துடைத்தெறிந்து மொத்தமாக காவி, இந்துத்துவ கருத்தை திணிக்கவல்லதாக ஒளிபரப்பு சேவையை மாற்றியமைக்க இச்சட்டத்தை கொண்டு வந்துள்ளது மோடி கும்பல்.

பாசிஸ்டுகளின் ஆட்சியில், கருத்துரிமைக்கு இடமில்லை

ஏற்கெனவே டிஜிட்டல் ஊடகங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு மோடி அரசு தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ஐ (IT Rules) கொண்டுவந்திருந்தது. தற்போது ஓ.டி.டி., சமூக ஊடக நிறுவனங்கள் என எந்தெந்த தளங்களில் எல்லாம் கருத்து தெரிவிக்க முடியுமோ அவை அனைத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கேற்ப இந்த ஒளிபரப்பு சேவை மசோதாவை பாசிச மோடி அரசு கொண்டுவந்துள்ளது.

இவ்வாறு டிஜிட்டல் ஊடகங்களை கட்டுப்படுத்துவதில் மோடி அரசு தீவிரமாக இருப்பதற்கு காரணம், பிரதான ஊடகங்கள் (Mainstream) பெரும்பாலானவை மோடி அரசின் ஊதுகுழலாக மாறிவிட்டன. தற்போது டிஜிட்டல் ஊடகங்கள்தான் இதற்கு மாற்றாக பார்க்கப்படுகின்றன. இன்று மக்கள்விரோத திட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கு எதிராக யூடியூப் சேனல்கள் போன்ற சமூக ஊடகங்களில்தான் பெரும் விவாதங்கள் கிளம்புகின்றன. இது மோடி அரசிற்கு நன்கு தெரியும்.

பா.ஜ.க. அரசின் ஒடுக்குமுறையால் ஊடகங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பத்திரிகையாளர்கள், கார்ப்பரேட் ஊடகங்களில் தங்கள் கருத்துகளை சொல்ல முடியாத பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள் என பலரும் யூடியூப் சேனல்களில் தங்களுக்கென செய்தி ஊடகத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். குறிப்பிடத்தக்க அளவில் மோடி அரசுக்கு எதிராக வினையாற்றும் தளமாக இருக்கக்கூடிய இந்த யூடியூப் தளத்தை, இனி “உள்ளடக்க மதிப்பீட்டு குழுவால்” கண்காணிப்புக்குட்படுத்தி தணிக்கை செய்து ஒடுக்க முடியும்.

பத்திரிகையாளர்கள், செயற்பாட்டளர்கள் மட்டுமின்றி, மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் போன்றவர்களும் முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக பக்கங்களில் மீம்கள், ட்ரோல் வீடியோக்கள் மூலமாக சமூக அநீதிகளுக்கு எதிராக வினையாற்றி வருகின்றனர். சான்றாக மணிப்பூர் கலவரத்தின்போது, இணையத்தடை மற்றும் இந்திய ஊடகங்களின் கள்ளமௌனத்தால் குக்கி பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல்கள் மூடிமறைக்கப்பட்டபோது சமூக ஊடகங்களின் வழியாகத்தான் அவை வெளியுலகிற்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், இம்மசோதா சட்டமாக்கப்பட்டால் அரசை விமர்சிக்கும் கருத்துகளும், தளங்களும் மொத்தமாக துடைத்தெறியப்படும் அபாயம் உள்ளது. பொதுவெளியில் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எதிரான கருத்துகள் வடிக்கட்டப்பட்டு, இந்துத்துவ பாசிச கருத்துக்கள் மட்டுமே பேசுபொருளாக்கப்படும்.

கடந்தாண்டு, “தொலைத்தொடர்பு மசோதா 2023”, “டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் 2023”, “அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு சட்டம் 2023”, “தகவல் தொழில்நுட்ப விதிகள் திருத்தம் 2023” என கருத்துரிமையை பறிக்கும், ஊடகங்களை ஒடுக்கும், மக்களின் தனியுரிமையை கேள்விக்குள்ளாக்கும் பல பாசிச சட்டங்களை மோடி அரசு கொண்டு வந்தது. தற்போது கருத்து சுதந்திரத்தை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டி, பாசிச சர்வாதிகாரத்தை செப்பனிடும் வகையில் ஒளிபரப்பு மசோதாவை கொண்டுவரத் துடிக்கிறது.


வெண்பா

(புதிய ஜனநாயகம் – மார்ச் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க