கல்குவாரிகளுக்குள்
புதைக்கப்படும் அப்பாவி உழைப்பாளி மக்கள்!
கந்தகத் துகள்களுக்குள்
சிதறிய உடல்களை பார்க்கும்
குடும்ப உறவுகளின் கண்ணீரும், கதறல்களும்
தொடர்ந்து கொண்டுத்தான் இருக்கின்றன.
அரசு அதிகாரிகளும், கல்குவாரி முதலாளிகளும்
இணைந்து அடிக்கும் கொட்டமும்
நீண்டு கொண்டுத்தான் இருக்கிறது.
முதலாளிகள் சொத்துகள் சேர்த்து உடல் வளர்க்க,
அற்ப கூலிக்காக உடல் சிதறி
அப்பாவி உழைக்கும் மக்கள் மட்டும்
மாண்டு போவது என்ன நீதி?
வெடித்த சத்தம் பல மைல் தொலைவில் இருக்கும்
ஊர் மக்களின் காதில் கேட்டு ஓடி வர…
இதுவரை நவ துவாரங்களையும் அடக்கிக் கொண்டு இருந்த போலீசு
போராடும் மக்களை தடுக்கவும், கலைக்கவும் ஓடி வருகிறது.
“எத்தனை உயிர்கள் பிரிந்தது?” என்று கணக்கெடுப்பு நடத்த
விஜயம் செய்யும் அரசு அதிகாரிகளே,
உங்களின் கேளாத செவிகளை கேட்க
இன்னும் எத்தனை பெண்களின் தாலி அறுபட வேண்டும்?
இன்னும் எத்தனை குழந்தைகள் அப்பாக்கள்
இழந்தவர்களாய் மாற்றப்பட வேண்டும்?
எப்போது உங்கள் செவிகளில் கேட்கும்?
பட்டாசு ஆலையோ, கல் குவாரியோ
தினம் தினம் கந்தகத் துகள்களுக்குள்ளேயே
கரைந்து போகும் மனிதர்களாய், அப்பாவி உழைக்கும் மக்கள்.
செந்தாழன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube