Wednesday, October 16, 2024
முகப்புகலைகவிதைமார்க்சியம் என்று முழங்கு - நின்று! | கவிதை

மார்க்சியம் என்று முழங்கு – நின்று! | கவிதை

போதும், போதும், போதும், இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை வாழ்வதற்கு இடமும்மில்லை வாருங்கள் தோழரே

-

மார்க்சியம்..!

சுரண்டல்கள்
சூரையாடிய போது
சுகமில்லாமல்
தொழிலாளி ஏங்கித் தவிக்கும் போது!

வர்க்க பிரச்சினை
வாழ்க்கை முழுவதும்
நிரம்பிய போது!

முதலாளித்துவத்தின் கோரப்பிடிகள்
மூச்சு விடாமல்
தொழிலாளி வர்க்கத்தை
இறுக்கியபோது!

மொழி, இனம், சாதி, மதம்
சூழ்ந்து நின்று
அடித்தபோது!

மக்களின் வலிசொல்ல
வழியில்லாமல்
நிர்க்கதையாய்
நின்றபோது!

ஒடுக்கப்பட்டு
ஓரங்கட்டி
கேவலமாய் திட்டி
ஒதுக்கி வைக்கும்
சாதிய படிநிலை போது!

இருப்பவன்
இல்லாதவன் என்ற
பிரிவினை தோன்றும் போது!

கூலிக்கு மாரடிக்கும்
கும்பல்கள் ஏன்
இன்னும் குனிந்தே கிடக்கிறது
என்று நினைக்கும் போது!

வானம், காற்று, நிலம், நீர்
பொதுவாக இருந்தும்
தனியுடைமை ஆனது எப்படி
என்று கேள்வி எழும்போது!

எல்லோரையும்
பாதாள குழியில் தள்ளிப்
புதைக்கும் இந்த அரசை
ஏன் ஆதரிக்க வேண்டும்
என்ற எண்ணம் எழும் போது!

காதல் மறுப்பு திருமணங்கள்
காலமெல்லாம் மறுப்பது ஏன்
என வினவும்போது!

ஊர் ஊராய் ஏன் இன்னும்
சாதி கலவரங்கள்
தீயிட்டு எரித்துக் கொள்கின்றன
என்று தோளை நிமிர்த்தி
கேள்வி கேட்கும் போது!

பாலியல் தொல்லையால்
பலியாகிப் போன
பச்சிளம் பெண்களுக்கு
ஏன் இந்த நிலைமை என்று
கோபப்படும் போது!

உழைத்த செல்வங்கள்
வேறொரு பக்கம்
சேர்ந்த போது!

அரசியல்வாதியின் ஊழல்களும்
கார்ப்பரேட்டின் திருட்டுத்தனமும்
காலூன்றி, கால் வயிற்றுக்
கஞ்சி குடிக்கும் தொழிலாளியின்
உரிமையை ஏன் தட்டிப் பறக்கிறது
என்ற சிந்தனை நிலவும் போது!

போதும், போதும், போதும்,
இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை
வாழ்வதற்கு இடமும்மில்லை
வாருங்கள் தோழரே

நம்மின் இத்தனை பிரச்சினைக்கு
மாற்றம் மார்க்சியம் என்று
முழங்கு – நின்று!

மணிவண்ணன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க