பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் போராட்டங்கள், தற்போது ஐரோப்பாவிற்கும் பரவியுள்ளது.
நெதர்லாந்து
- (07-05-2024) அன்று பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்மாணவர்களின் மீது தடியடி நடத்தி போராட்டத்தை கலைத்த போலீசு, அவர்களின் போராட்ட மேடை மற்றும் பந்தல் அமைப்புகளை அடித்து நொறுக்கியது. போலீசின் அடக்குமுறைக்கு எதிராக அம்மாணவர்கள் அதேநாள் இரவு மீண்டும் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
- நெதர்லாந்தின் உட்ரெக்ட் பல்கலைக்கழக மாணவர்கள் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான போராட்டத்தை (07-05-2024) அன்று நடத்தினார்கள்.
- நெதர்லாந்தின் டெல்ஃப்ட்டின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஜெர்மனி
- கிழக்கு ஜெர்மானிய நகரமான லீப்ஜிக்கில் போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள், “இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராக மாணவர்களாகிய நாங்கள் பல்கலைக்கழகத்தை ஆக்கிரமிப்பு செய்கிறோம்” என்று எழுதப்பட்ட பதாகைகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்ரேலுக்கு எதிரான இம்மாணவர்களின் போராட்ட உணர்வைக்கண்டு நடுங்கிய ஜெர்மன் போலீசு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
- ஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள ஃப்ரீ பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை போலீசு தடுத்து நிறுத்தியுள்ளது. வெறுப்பைத் தூண்டியதாகவும், அத்துமீறி போராட்டம் நடத்தியுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட அம்மாணவர்களை கைது செய்துள்ளது பெர்லின் போலீசு.
பிரான்ஸ்
- பிரான்ஸ் தலைநகரில் உள்ள பாரிஸ் இன்ஸ்டிடியூட் ஆப் பொலிட்டிகல் ஸ்டடீஸில் (அறிவியல் போ) முற்றுகையில் ஈடுபட்ட மாணவர்களை இருமுறை போலீசு தலையிட்டு கலைத்துள்ளது.
- அருகிலுள்ள இன்னொரு பல்கலைகழகமான சோர்போன் பல்கலைக்கழக கட்டிடத்தில், செவ்வாய்கிழமையன்று (07-05-2024), போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசு கைதுசெய்துள்ளது.சுவிட்சர்லாந்து
- சுவிட்சர்லாந்தில் உள்ள லொசேன், ஜெனிவா மற்றும் சூரிச் பல்கலைக்கழகங்களில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
- கடந்த வியாழன் கிழமை (09-05-2024) ஆஸ்திரியாவில் உள்ள வியன்னா பல்கலைக்கழக மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழக வளாகத்தில் முகாமிட்டும், போராட்ட பந்தல்களை அமைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆதன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube