பாலஸ்தீனம்: மேற்கு கரையில் 500-க்கும் மேற்பட்டோரை இனப்படுகொலை செய்துள்ள இஸ்ரேல் அரசு
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது யூத இனவெறி பிடித்த பாசிச இஸ்ரேல் அரசு இன அழிப்புப் போரைத் தொடங்கியது. 200 நாட்களுக்கும் மேலாக மிகக் கொடூரமான முறையில் இப்போரை நடத்திவரும் இரத்தவெறிப் பிடித்த இஸ்ரேல் அரசு 35,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களை படுகொலை செய்துள்ளது. படுகொலை செய்யப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகளும் பெண்களும். இந்நிலையில், காசா மீதான போர் தொடங்கியதிலிருந்து பாலஸ்தீனத்தின் மற்றொரு பகுதியான ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையிலும் பாசிச இஸ்ரேல் அரசு தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்தாண்டு மே 16-ஆம் தேதி நிலவரப்படி, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் 124 குழந்தைகள் உட்பட 502 பாலஸ்தீன மக்கள் இஸ்ரேல் இராணுவத்தாலும் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் தாக்குதலாலும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அல்ஜசீரா(Aljazeera) செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. கடந்த 9-ஆம் தேதியன்று முகமது யூசுப் நஸ்ர் அல்லா (27), அய்மன் அகமது முபாரக் (26), ஹொசாம் எமத் டீபஸ் (22) ஆகிய மூன்று இளைஞர்கள் இஸ்ரேலியப் படைகளால் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டுள்ளனர்.
படிக்க : பாலஸ்தீனம்: போராட்டக் களம் காண்போம்? | கவிதை
மேலும், இத்தாக்குதல்களால் இதுவரை 4,950 பாலஸ்தீனர்கள் படுகாயமடைந்துள்ளனர்; 3,895 பேர் தாங்கள் குடியிருந்த வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டுள்ளனர். 8,088 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 648 பாலஸ்தீன மக்களின் குடியிருப்பு கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன என்ற செய்தியையும் அல்ஜசீரா வெளியிட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் இந்த எண்ணிக்கையானது 2022-ஆம் ஆண்டின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாகும். 2022-ஆம் ஆண்டு இறுதியில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான தீவிர வலதுசாரி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, மேற்கு கரையில் பாலஸ்தீனர்களின் மீதான தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. தற்போது இஸ்ரேல் அரசானது காசா மீதான போரைப் பயன்படுத்தி மேற்கு கரையில் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
அக்டோபர் 7 முதல் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேலியப் படைகள் கொடூரமான வன்முறையை கட்டவிழ்த்துவிட்டன என்றும், சட்டவிரோதக் கொலைகளை நடத்துவது; ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கைது சோதனைகளின் போது கடும் அடக்குமுறைகளைச் செலுத்துவது; காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி மறுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் “அம்னஸ்டி இண்டர்நேஷனல் (Amnesty International)” என்ற அமைப்பு கடந்த பிப்ரவரியில் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் அரசானது, மேற்கு கரையில் நடத்திவரும் தாக்குதல்கள், பாலஸ்தீன ஆயுதக் குழுக்களை குறிவைத்து மேற்கொள்ளப்படுவதாக கூறுகிறது. ஆனால் அது அப்பட்டமான பொய்யாகும். மாறாக, இஸ்ரேலின் நடவடிக்கையானது மேற்கு கரையில் வாழும் பாலஸ்தீன மக்களையும் இன அழிப்பு செய்யும் நடவடிக்கையாகும். காசா பகுதியில் ஹமாஸ் குழுவினரை அழிப்பதாக கூறிக்கொண்டு அப்பாவி பாலஸ்தீன மக்களை இன அழிப்பு செய்து வருவதைப் போல, மேற்கு கரையிலும் ஈடுபட்டு வருகிறது.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், இஸ்ரேலிய இராணுவத்தினரால் மட்டுமின்றி, இஸ்ரேலிய அரசின் உதவியுடன் குடியேற்றப்பட்டுள்ள இஸ்ரேலியர்களாலும் பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன. இஸ்ரேலிய குடியிருப்பாளர்கள் பாலஸ்தீன நகரங்கள் மற்றும் கிராமங்களில் வாழும் பாலஸ்தீன மக்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி, அம்மக்களை அவர்கள் வாழும் பகுதியில் இருந்து வெளியேற்றி அகதிகளாக்கி வருகின்றனர்.
அதன் விளைவாக, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் வாழும் பாலஸ்தீனர்கள் காசா பகுதி மக்கள் எதிர்கொண்டுவரும் கொடூரத் தாக்குதல்களை தாங்களும் எதிர்கொள்ள நேரிடுமோ என்ற அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். கடந்த மாதத்தில் ரமல்லா நகரத்தில் இஸ்ரேலிய குடியிருப்பாளர்கள் பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை தொடுத்தப்பிறகு, “நாங்கள் பயப்படுகிறோம். பெரும்பாலான மக்கள் நகரத்தை விட்டு வெளியேற முயற்சிக்கிறார்கள் அல்லது பிற நாடுகளின் குடியுரிமை இருந்தால் அந்நாடுகளுக்குச் செல்ல முயற்சிக்கிறார்கள்” என்று அல்ஜசீரா ஊடகத்திடம் பாலஸ்தீனர் ஒருவர் கூறியுள்ளார்.
படிக்க : அமித்ஷாவின் பேரணியில் பத்திரிகையாளர் மீது தாக்குதல்!
மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் கட்டப்பட்டுள்ள இஸ்ரேலிய குடியிருப்பு பகுதிகளுக்குள் பாலஸ்தீன மக்கள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. இஸ்ரேலியர்கள் பயணிப்பதற்காக சாலைகள் கட்டப்பட்டுள்ளன. அந்த சாலைகளில் பாலஸ்தீன மக்கள் பயணம் செய்வதற்கு அனுமதியில்லை. மேற்குக் கரையில் இஸ்ரேலிய அரசு கடைபிடித்துவரும் இந்த இனவெறி கொள்கையானது பாலஸ்தீனர்களாலும் உலகெங்கிலும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.
இவ்வாறு, யூத இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசானது காசா மட்டுமின்றி, இஸ்ரேலிய இராணுவப் படைகள் மற்றும் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் வாழும் பாலஸ்தீன மக்களையும் இனப்படுகொலை செய்து அப்பகுதியையும் முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.
ஹமாஸ் படையினரை அழிப்பதற்கான போர் என்ற பெயரில் இஸ்ரேல் அரசு தொடங்கிய இப்போரானது பாலஸ்தீன மக்களை அழித்தொழிப்பதற்கான நடவடிக்கை என்பதை மேற்கு கரையில் நடத்தப்படும் தாக்குதல்கள் நிரூபிக்கின்றன.
ஆதி