Saturday, September 14, 2024
முகப்புசெய்திஇந்தியாஅமித்ஷாவின் பேரணியில் பத்திரிகையாளர் மீது தாக்குதல்!

அமித்ஷாவின் பேரணியில் பத்திரிகையாளர் மீது தாக்குதல்!

கார்ப்பரேட் ஊடங்களுக்கு மாற்றாக மோடி ஆட்சியின் பாசிசத் தன்மைகளையும் உண்மை நிலவரங்களையும் துணிச்சலாக அம்பலப்படுத்திவரும் சுதந்திர ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் தொடர்ந்து பாசிசத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது தொடர்கதையாகியுள்ளது.

-

ண்மையில், உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் நடந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேரணியில் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த “மோலிடிக்ஸ்” (Molitics) செய்தி இணையத்தளப் பத்திரிகையாளர் ராகவ் திரிவேதி பா.ஜ.க. குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

அமித்ஷாவின் பேரணியில் செய்தி சேகரிக்க சென்றிருந்த ராகவ் திரிவேதி, பேரணியில் கலந்துகொண்ட பெண்களிடம் பேசியபோது, பேரணியில் கலந்துகொள்ள தங்களுக்கு ரூ.100 வழங்கப்பட்டதாகவும் அமித்ஷா யார் என்றே தங்களுக்குத் தெரியாது என்றும் அவர்கள் கூறினர். இதனை காணொளியாக பதிவு செய்துகொண்ட ராகவ் திரிவேதி, பெண்கள் கூறியது குறித்து பேரணியில் கலந்துகொண்ட பா.ஜ.க-வினரிடம் கேள்வி எழுப்பினார். முதலில் பணம் கொடுத்து பெண்களை பேரணிக்கு அழைத்து வந்ததை மறுத்த பா.ஜ.க. குண்டர்கள், பெண்கள் பேசியது காணொளியில் ஆதாரமாக பதியப்பட்டுள்ளதைக் கேட்டதும் அக்காணொளிகளை நீக்குமாறு திரிவேதியை தாக்கத் தொடங்கினர். மேலும், திரிவேதி தாக்கப்படும்போது அருகிலிருந்த போலீசுப் படையினர் அதனை தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர்.

படிக்க: உ.பி: தொடரும் பத்திரிகையாளர்கள் படுகொலை!

இதுகுறித்து பேசிய ராகவ் திரிவேதி “ஆரம்பத்தில், அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்று மறுத்தார்கள். ஆனால் நான் பெண்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாக அவர்களுக்குத் தெரிவித்தபோது, ஒரு குழு என்னை வலுக்கட்டாயமாக ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று பதிவை நீக்குமாறு கோரியது. நான் மறுத்தபோது, அவர்கள் என்னைத் தாக்கத் தொடங்கினர். நான் காவல்துறை மற்றும் அருகில் இருந்தவர்களிடம் உதவிக்காக கெஞ்சினேன். ஆனால் யாரும் தலையிடவில்லை. நான் சுயநினைவை இழந்தேன். சுயநினைவு திரும்பியபோது, நான் மருத்துவமனையில் இருப்பதைக் கண்டேன்” என்று கூறினார்.

மேலும், தாக்கப்பட்ட பத்திரிகையாளருக்கு எதிராக காவி குண்டர்கள் இஸ்லாமிய வெறுப்பையும் தூண்டிவிட்டுள்ளனர். இதுகுறித்து பேசிய திரிவேதி, “நான் மக்களை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டேன். 40-50 போலீஸ்காரர்களும் இருந்தனர். ஆனால் அவர்கள் என்னை ‘முல்லா’ மற்றும் ‘அட்டாங்கி’ என்று அழைத்து 150-200 முறை குத்தியதால் யாரும் என்னைக் காப்பாற்ற வரவில்லை” என்று தனக்கு நேர்ந்த அநீதியை விவரிக்கிறார்.

இந்நிலையில், திரிவேதியின் சக ஊழியர் மற்றும் ஒளிப்பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில் ஐ.பி.சி. பிரிவு 147 (கலவரம்), 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), மற்றும் 504 (அமைதியை கெடுக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதித்தல்) ஆகியவற்றின் கீழ் ஆறு பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் ராகவ் திரிவேதி மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். “பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா” வெளியிட்ட அறிக்கையில், “பத்திரிகையாளர்கள் தங்கள் அன்றாட செய்தி சேகரிப்பு பணியில் உடல்ரீதியான மிரட்டல், துன்புறுத்தல் மற்றும் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். ஊடகம், ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் இந்தியாவில் இதுபோன்ற விஷயங்கள் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் ஆணையமும் உள்ளூர் அதிகாரிகளும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவ்வறிக்கை வலியுறுத்துகிறது.

படிக்க: மோடி வெறுப்புப் பேச்சு – நடவடிக்கை எடுக்காதது ஏன்? | தோழர் மருது

காங்கிரஸ் கட்சியின் “எக்ஸ்” தள பக்கத்தில், “தோல்வியால் பா.ஜ.க-வினர் விரக்தியடைந்துள்ளனர் என்பதற்கு இந்த சம்பவங்கள் அடையாளம். இப்போது அநீதி முடிவுக்கு வரப்போகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014-ஆம் ஆண்டு மோடி ஆட்சியைப் பிடித்தது முதலாக பெரும்பான்மையான இந்திய ஊடகங்கள் மோடி அரசின் ஊதுகுழலாக மாறியுள்ளன. மோடி அரசுக்கு ஆதரவான செய்திகளை மட்டுமே வெளியிடுவது, எதிரான செய்திகளை திட்டமிட்டு மூடி மறைப்பது என துளியும் ஊடக நேர்மை, ஊடக அறமின்றி இவ்வூடகங்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. டெல்லி எல்லைகளில் தற்போது நடந்துகொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டமும் அண்மையில் வெற்றிகரமாக நடந்துமுடிந்த விவசாயிகளின் ரயில் மறியலும் பெரும்பான்மை இந்திய ஊடகங்களால் திட்டமிட்டு மூடிமறைக்கப்பட்டதே அதற்கு சாட்சி.

ஆனால் இன்னொருபுறம், கார்ப்பரேட் ஊடங்களுக்கு மாற்றாக மோடி ஆட்சியின் பாசிசத் தன்மைகளையும் உண்மை நிலவரங்களையும் துணிச்சலாக அம்பலப்படுத்திவரும் சுதந்திர ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் தொடர்ந்து பாசிசத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது தொடர்கதையாகியுள்ளது.

சோபியா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க