புதிய ஜனநாயகம் – புதிய பதிப்பகம் தொடக்கம்

புரட்சிகர, முற்போக்கு நூல்களைப் பதிப்பித்து வருகின்ற எல்லா பதிப்பகத்தாருடனும் "புதிய ஜனநாயகம் பதிப்பகம்" நட்புறவை வளர்த்தெடுக்கும்; பதிப்புத் துறையின் வளர்ச்சிக்கும் பாடுபடும்.

முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. இதோ, டிசம்பர் 26, தோழர் மாசேதுங்கின் 130-ஆம் ஆண்டு பிறந்த நாளில் “புதிய ஜனநாயகம் பதிப்பகம்” உதயமாகிறது!

எமது பதிப்பகப் பணி என்பது கால் நூற்றாண்டுக்கும் மேலான வரலாறு கொண்டது. எமது தோழமை அமைப்பாக, 1994 மார்ச் மாதம் தொடங்கப்பட்ட “கீழைக்காற்று” பதிப்பகம் 2020 தொடக்கம் வரை ஊக்கமாக செயல்பட்டது. அதன் பங்களிப்புகள் தமிழ்நாட்டின் பதிப்புத்துறை வரலாற்றில் தனி இடம் பதித்தவை.

2020-இல் எமது அரசியல் அமைப்பில் ஏற்பட்ட நெருக்கடி, பிளவு புரட்சிகர அரசியலை முன்னெடுத்துச் செல்வதில் பெரும் பின்னடைவையும் பல பாதிப்புகளையும் ஏற்படுத்தியது. அதிலொன்று, பதிப்பகம் கலைப்புவாதிகளால் அபகரிக்கப்பட்டதாகும். அதே காலத்தில், 2021-இல், “புதிய ஜனநாயகம் அரசியல் ஏடும்” முடங்கி விட்டது. எல்லாம் புதிதாக தொடங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

அதன் பின்னர், புரட்சிகர அரசியலை புதிய திசைவழியில் முன்முயற்சியுடன் மக்களிடம் கொண்டு சென்ற வகையில், 2021 ஆகஸ்ட் முதலாக “புதிய ஜனநாயகம் அரசியல் ஏடு” மீண்டும் புதுப்பொலிவுடன் ஒரு மாதம் கூட இடைவெளியின்றி தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

பாசிசம் அரங்கேறி வரும் இன்றைய சூழலில், பெயரளவிலான நாடாளுமன்ற ஜனநாயக உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு அவை, அவற்றின் அந்திமக் கட்டத்தை நெருங்கிவிட்டன. ஆகையால், மக்கள் போராட்டங்களே பாசிசத்தை வீழ்த்தும்; மேலும், இது, இந்த அரசியல் கட்டமைப்பிற்கு வெளியே, பாசிசத்திற்கு எதிரான மாற்று அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்குவதுடன் இணைந்தது என்பதை “புதிய ஜனநாயகம்” தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

பாசிசத்திற்கு எதிரான “புதிய ஜனநாயக”த்தின் சரியான பார்வையும் அதன் தொடர்ச்சியான செயல்பாடுகளும் ஜனநாயக சக்திகளுக்கு நம்பிக்கையூட்டுவது மட்டுமின்றி, “புதிய ஜனநாயக”த்திற்கான அவர்களது ஆதரவையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

இவ்வளர்ச்சியின் தொடர்ச்சியாக பதிப்பகம் உருவாக்கும் நிலைக்கு முன்னேறியுள்ளோம்.

000

பதிப்புச் சூழல் இன்று பெரிதும் மாற்றமடைந்துள்ளது. டிஜிட்டல் மீடியாக்களின் ஆதிக்கம் இருந்தாலும், வாசிப்புப் பழக்கமும் அதிகரிக்கவே செய்துள்ளது. இளந்தலைமுறையினருக்கு மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் போன்ற முற்போக்கு நூல்கள் மீதான ஈடுபாடும் அதிகரித்துள்ளது. மக்களின் தேவைகளை சரியாக அடையாளப்படுத்தும் பதிப்புகள் நிறைய வரவேற்பைப் பெறுகின்றன. சரியான முறையில், முற்போக்கு கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்லும் போது மக்கள் பெரிதும் வரவேற்கின்றனர் என்பதே எமது அனுபவமாகும். அவற்றை “புதிய ஜனநாயகம் பதிப்பகம்” சரியாக பிரதிபலிக்கும்.

இக்கால் நூற்றாண்டில், இடதுசாரி நூல்களைப் பதிப்பித்து வந்த சில பதிப்பகங்களின் வேகம் குறைந்துள்ளது; இயக்கம் சார்ந்த சில இடதுசாரி பதிப்பகங்கள் உருவாகியுள்ளன. இருப்பினும், மார்க்சிய-லெனினிய கண்ணோட்டத்தில் நடப்பு காலப் பிரச்சினைகளை ஒட்டி வருகின்ற நூல்கள் அரிதே. இந்தத் தேவைக்கு “புதிய ஜனநாயகம் பதிப்பகம்” முகங்கொடுக்கும்.

மேலும், புரட்சிகர, முற்போக்கு நூல்களைப் பதிப்பித்து வருகின்ற எல்லா பதிப்பகத்தாருடனும் “புதிய ஜனநாயகம் பதிப்பகம்” நட்புறவை வளர்த்தெடுக்கும்; பதிப்புத் துறையின் வளர்ச்சிக்கும் பாடுபடும்.

பாசிச சக்திகளால் கருத்துரிமை நசுக்கப்பட்டு வருவது, கார்ப்பரேட் முதலாளித்துவத்தின் ஆதிக்கம் மேலோங்கி வருவது, டிஜிட்டல் ஊடகங்களின் ஆதிக்கம் வளர்ந்து வருவது போன்ற சமகாலச் சூழலில், பதிப்புத்துறை பணி என்பது மிகவும் கடுமையானது. அதிலும், முற்போக்குக் கருத்துகளைப் பரப்புவது என்பது செங்குத்தான மலை மீது ஏறும் பணியாகும்.

புரட்சிகர அரசியலும் புரட்சிகர ஜனநாயக சக்திகளின் ஆதரவும் இப்பணியை செவ்வனே நிறைவேற்றுவதில் புதிய பாதையைப் படைக்கும்! வாருங்கள், இணைந்து முன்னேறுவோம்!

தொடர்புக்கு:

தொடர்பு எண்: 9791559223
மின்னஞ்சல்: puthiyajananayagampublication@gmail.com

சமூக வலைத்தளப் பக்கங்கள்:

முகநூல்: புதிய ஜனநாயகம் பதிப்பகம்
எக்ஸ் (டிவிட்டர்): புதிய ஜனநாயகம் பதிப்பகம்
இன்ஸ்டாகிராம்: புதிய ஜனநாயகம் பதிப்பகம்

தோழமையுடன்,
தோழர் ஆகாஷ்,
நிர்வாகி,
புதிய ஜனநாயகம் பதிப்பகம்,
9791559223.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



3 மறுமொழிகள்

  1. ஆகச் சிறந்த இப்பணி சிறக்கவும், தொடரவும், வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்…

    புதிய ஜனநாயகம்
    புதியதோர் உலகம் படைக்கட்டும்..

  2. பதிப்புத்துறையில் புதிய வரலாறு படைக்க வரும் ” புதிய ஜனநாயகம் பதிப்பகம் ” வெற்றி மேல் வெற்றி பெற வரவேற்று வாழ்த்துகிறேன்.”கலை ,இலக்கியம் யாவும் மக்களுக்கே” என முழங்கிய தோழர் மாவோ வின் 130 ம் பிறந்த நாளில் துவக்குவது மேலும் சிறப்பு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க