பிரான்சிஸ்கா அல்பனேஸ்: போர்க்குற்றங்களுக்கெதிரான போர்க்குரல்

அமெரிக்க அரசை மட்டுமல்ல, அமெரிக்காவின் கார்ப்பரேட் நிறுவனங்கள், முக்கிய அதிகாரிகள் ஆகியோரையும் போர்க்குற்றவாளிகள் என நிரூபிப்பதற்கான முயற்சிகளை பிரான்சிஸ்கா எடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

க்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தின் பாலஸ்தீனப் பொறுப்பாளர் பிரான்சிஸ்கா அல்பனேஸ் வெளியிட்ட அறிக்கை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, அவர் அமெரிக்க அரசால் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டு, அமெரிக்காவில் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதானது சர்வதேச அளவில் விவாதங்களை எழுப்பியுள்ளது.

தங்களை அவமானப்படுத்தி, வெட்கக்கேடான செயலைச் செய்த பிரான்சிஸ்கா அல்பனேஸ் உடன் சேர்ந்து இயங்க முடியாது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ அலறியுள்ளார். “எங்களைப் பாதுகாக்க வேண்டியது எங்களின் கடமை” என்றும் மார்க்கோ ரூபியோ கூறியுள்ளார்.

தற்போது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உலகளாவிய அளவில் பலரைப் போர்க்குற்றவாளிகளாக அறிவித்து, கைது செய்ய ஆணை பிறப்பித்துள்ளது. நேற்று முன்தினம் (09-07-2025) தாலிபான் அமைப்பின் தலைவர்களை போர்க்குற்றவாளிகள் என அறிவித்தது. ரசிய அதிபர் புடினும், இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகுவும் போர்க்குற்றவாளிகளாக சர்வதேச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கத் தலைவர்கள் போர்க்குற்றவாளிகளாக அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. ஏனெனில், ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் தவறானது. சர்வதேச சட்டங்களை மீறுவது என்று அல்பனேஸின் அறிக்கை தெரிவிக்கிறது.

சர்வதேச நீதிமன்றத்தின் அறிவிப்பின் காரணமாக, கைதுக்கு அஞ்சியே, பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டுக்கு ரசிய அதிபர் புடின் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதும் பிரான்சிஸ்கா அல்பனேஸ் குற்றம் சாட்டியுள்ளார். இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்காவுக்கு சென்றபோது ஐரோப்பாவின் வான்பரப்பின் ஊடாகத்தான் அவரின் விமானம் பறந்தது. கிரீஸ், இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் தங்கள் நாட்டின் வான்பரப்பின் மீது ஒரு போர்க்குற்றவாளி சுதந்திரமாகச் செல்வதற்கு அனுமதித்தது தவறு என குற்றஞ்சாட்டியுள்ளார்.


படிக்க: காசா: நவீன ஆயுத சோதனைச்சாலை


”ஒன்று போர்க்குற்றவாளி நெதன்யாகு முன் அனுமதி பெற்றுத்தான் ஐரோப்பாவின் வான்பரப்பில் பறக்க வேண்டும். அப்படியான அனுமதியை ஐரோப்பிய நாடுகள் தரக்கூடாது. அப்படி ஒருவேளை தடையை மீறிப் பறந்தால், போர் விமானங்களை அனுப்பி, அவரைக் கீழே இறக்கிக் கைது செய்ய வேண்டும். ஆனால் ஐரோப்பியத் தலைவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“ஐரோப்பியத் தலைவர்களை மக்கள் தெரிவு செய்தார்கள். மக்கள் தேர்வு செய்த ஆணையை வைத்துக் கொண்டு எப்படி நீங்கள் சர்வதேச சட்டங்களை மீற முடியும்? அப்படி மீறினால் மக்களை சர்வதேச சட்டங்களை மீறுபவர்களாக மாற்றுகின்றீர்கள் என்று புரிந்து கொள்ளுங்கள்” என்று ஐரோப்பியத் தலைவர்களின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தினார் பிரான்சிஸ்கா அல்பனேஸ்.

மேலும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் காங்கிரசில் அனுமதி பெறாமலே ஈரான் மீதான தாக்குதலை நடத்தினார் என்று அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியைச் சார்ந்த பெர்னி சான்டர்ஸ் குற்றம் சாட்டியிருந்தது கவனிக்கத்தக்கது.

மேலும் பிரான்சிஸ்கா அல்பனேஸ், “காசாவில் நடைபெறும் போரைப் பற்றி, பிரான்ஸ் அதிபர் உள்ளிட்ட தலைவர்கள் கூறும்போது ‘இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள உரிமை உண்டு’ என்று கூறினார்கள். ஆனால், இஸ்ரேலும் அமெரிக்காவும் புதிய ஆயுதங்களை காசாவில் பரிசோதித்துக் கொண்டிருக்கின்றன. இந்த ஆயுதங்களை வீசியதன் மூலமாக ஆயுதச் சந்தையில் அவற்றை உறுதி செய்வதற்கான முயற்சியை எடுத்துள்ளனர். இந்தப் போர் தற்பாதுகாப்புப் போர் அல்ல, அழிவுப் போர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கருத்தின் அடிப்படையில்தான் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிரான்சிஸ்கா அல்பனேஸுடன் இணைந்து செயல்பட முடியாது என்று கூறியுள்ளார்.


படிக்க: காசா: இனவெறி இஸ்ரேலின் அறிவிக்கப்படாத வதைமுகாம்


அமெரிக்க அரசை மட்டுமல்ல, அமெரிக்காவின் கார்ப்பரேட் நிறுவனங்கள், முக்கிய அதிகாரிகள் ஆகியோரையும் போர்க்குற்றவாளிகள் என நிரூபிப்பதற்கான முயற்சிகளை பிரான்சிஸ்கா எடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. போர்க்குற்றவாளியான இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குகின்ற நிறுவனங்கள், நவீன கருவிகளை வழங்குகின்ற நிறுவனங்கள் எல்லாம் போர்க்குற்றவாளிகள்தான் என்பதை நோக்கி பிரான்சிஸ்கா-வின் அறிக்கை செல்கிறது.

”இஸ்ரேல், அமெரிக்கா எனக்கு முக்கியம் அல்ல. போர்க்குற்றங்களைத் தடுப்பது எனது கடமை. அதுகுறித்து அறிக்கை வெளியிடுவது மற்றொரு கடமை. குற்றவாளிகளைத் தண்டிக்க முயற்சிகளை எடுப்பது மற்றுமொரு கடமை. மாஃபியாக்கள் போன்று செயல்படும் அமெரிக்க, இஸ்ரேல் அரசுகளுக்கு பதில் கொடுக்க வேண்டிய தேவையில்லை” என்று கூறி தன் மீதான தடையை முற்றாக நிராகரித்துள்ளார் பிரான்சிஸ்கா.

கடந்த 2014 ஆம் ஆண்டு, “அமெரிக்காவின் அரசியல் செயல்பாடு என்பது இஸ்ரேலிய யூதர்களின் லாபிதான்” என்று பகிரங்கமாக பிரான்சிஸ்கா குற்றம் சுமத்தியிருந்தார். மேலும், பிரிட்டனின் பி.பி.சி நிறுவனம் மத்திய கிழக்கில் செயல்படும்போது, அதன் நரம்பில் ஓடுவது இஸ்ரேலிய இரத்தம்தான் என்று கூறி, பி.பி.சி-யின் முகமூடியையும் கிழித்தெறிந்தவர் பிரான்சிஸ்கா. பெஞ்சமின் நெதன்யாகு ஒரு நவீன ஹிட்லர் என்றும், இஸ்ரேல்தான் இன்றைய நவீன நாஜிகளின் நாடு என்றும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார் அவர்.

ஜூலை 2025 ல் வெளியிட்ட அவரின் அறிக்கையில், ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல், சர்வதேச சட்டங்களின்படி குற்றச் செயல் என்று கூறியுள்ளார். மேலும், பல சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களையும் அறிக்கையில் பட்டியலிட்டுள்ளார்.

உலக ரவுடியான அமெரிக்காவை போர்க்குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் பிரான்சிஸ்கா அல்பனேஸின் தீரமிக்க முயற்சிக்கு ஆதரவாகவும், அவர் மீதான அமெரிக்க அரசின் தடைக்கு எதிராகவும் குரல் கொடுப்பது சர்வதேச உழைக்கும் மக்கள் அனைவரின் கடமையாகும்.


அய்யனார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க