ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தின் பாலஸ்தீனப் பொறுப்பாளர் பிரான்சிஸ்கா அல்பனேஸ் அமெரிக்க அரசால் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் அமெரிக்காவில் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
“இஸ்ரேலும் அமெரிக்காவும் காசாவில் நடத்திக் கொண்டிருக்கின்ற போர், புதிதாக உருவாக்கப்பட்ட ஆயுதங்களையும், AI தொழில்நுட்பத்தையும் பரிசோதித்துப் பார்ப்பதற்காக நடத்தப்படுகின்ற போர்தான். வேறு எந்தக் காரணங்களும் அல்ல” என்று பிரான்சிஸ்கா அல்பனேஸ் அம்பலப்படுத்தியுள்ளார்.
இஸ்ரேலின் போரானது, AI தொழில்நுட்பத்தை ஆதாரமாக வைத்து, காசாவை 2,400 சிறுசிறு அலகுகளாகப் பிரித்து, ஏறத்தாழ ஒவ்வொன்றும் உதைபத்தாந்தட்ட மைதானம் அளவில் பிரித்து, AI தொழில்நுட்பத்தின் கண்காணிப்பில் நடத்தப்பட்ட போர் என்பதை பிரான்சிஸ்கோ அல்பனேஸ் தனது அறிக்கையில் அம்பலப்படுத்தியுள்ளார்.
காசாவின் மீதான கொடூரமான போரின் மூலம் அமெரிக்க – இஸ்ரேல் ஓநாய்கள் உலகளாவிய அளவில் அம்பலப்பட்டுள்ள நிலையில், அல்பனேஸின் அறிக்கையானது, ஏகாதிபத்திய ஆயுத வியாபாரிகளின் இலாபவெறியையும் போர்வெறியையும் அமெரிக்க – இஸ்ரேல் கும்பலின் நோக்கத்தையும் பட்டவர்த்தனமாக வெளிக்கொண்டு வந்துள்ளது.
இதற்கு முன்பு, கடந்த மார்ச் 26, 2024 அன்று, காசாவில் இஸ்ரேல் நடத்தும் போரானது, இனப்படுகொலைக்குச் சமமானது என்று ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அறிக்கை அளித்திருந்தார் அல்பனேஸ். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை போர்க்குற்றவாளி என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அறிவித்ததற்குப் பிரதானக் காரணமாக இருந்தவரும் பிரான்சிஸ்கா அல்பனேஸ் தான்.
உண்மை வெளிப்பட்ட ஆத்திரத்தில், பாசிச ட்ரம்ப் நிர்வாகம், அல்பனேஸை யூத வெறுப்பாளர், பயங்கரவாத ஆதரவாளர் என்று அவதூறுகளை அள்ளி வீசியுள்ளது.
படிக்க: காசா: இனவெறி இஸ்ரேலின் அறிவிக்கப்படாத வதைமுகாம்
அல்பனேஸ் மீதான நடவடிக்கையை, “சர்வதேச நீதிக்கு அவமானகரமான செயல்” என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கண்டித்துள்ளது.
அதேசமயம் அமெரிக்க ஏகாதிபத்திய கார்ப்பரேட் கும்பலின் ஊதுகுழலான வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் ஆசிரியர் குழு ட்ரம்ப் கும்பலின் நடவடிக்கையைப் பாராட்டியுள்ளதிலிருந்து, பிரான்சிஸ்கா அல்பனேஸ் வெளியிட்ட அறிக்கையின் தாக்கத்தை உணர முடிகிறது.
”நீங்கள் அமெரிக்காவின் கருப்புப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளீர்களே, என்ன செய்யப் போகிறீர்கள்?” என்ற கேள்விக்கு, “இந்தத் தடை அசிங்கமானது. நீதியின் பக்கம் நின்றதற்காக நான் தண்டிக்கப்பட்டுள்ளேன். பாலஸ்தீனத்திலும் வாழக்கூடியவள் நான். இந்த சலசலப்புகளுக்கு அஞ்சமாட்டேன். அமெரிக்காவும், இஸ்ரேலும் மாஃபியா கும்பலின் வேலைகளைத்தான் செய்கின்றனர். எனக்கு ஆதரவாக உலகம் முழுவதிலும் எத்தனையோ நாடுகள் இருக்கின்றன” என்று தோளில் விழுந்த தூசியைத் தட்டிவிடுவதைப் போல, தன் மீதான கருப்புப்பட்டியல் தடையை தட்டிவிட்டுச் சென்றுள்ளார் அல்பனேஸ்.
அய்யனார்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram