இரண்டு தற்கொலை சம்பவங்கள் – உணர்த்தும் உண்மைகள்!

இளம் தலைமுறை இந்தப் பிற்போக்குத்தனங்களைக் கடப்பதற்குத் துணியும்போது, இன்னொரு பக்கம் அதற்கான எதிர்ப்புகளும் வலுவாகத் தோன்றவே செய்கின்றன. அத்தகைய பிற்போக்குத்தனங்களுக்கு இடம் கொடுப்பதுதான் இத்தகைய துயரங்களுக்கு அடிப்படையாக உள்ளது.

திருப்பூரைச் சேர்ந்த இளம்பெண் ரிதன்யா வரதட்சணைக் கொடுமையால் திருமணமான 78 நாட்களில் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தன்னுடைய தந்தை அண்ணாதுரைக்கு அனுப்பிய குரல் செய்தியில் தனக்கு நேர்ந்த துயரங்களைச் சொல்லியுள்ளார். ஆனால், அவருடைய தந்தையின் அறிவுரையோ ‘புகுந்த வீட்டிற்கு கொஞ்சம் வளைந்து கொடுத்துப் போ’ என்பதாகவே இருந்துள்ளது.

ஒருநிலையில் கொடுமை தாளாமல் ரிதன்யா தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் கணவர் வீட்டினர் வந்து சமாதானம் பேசி அழைத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து அவருடைய தந்தை அண்ணாதுரை கூறும்போது, தன்னுடைய மகளிடம் கூடுதல் நகை கேட்டு கொடுமை செய்துள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார். கணவர் உடல்ரீதியாகச் செய்த கொடுமைகளை தந்தையிடம் கூறி ரிதன்யா கதறியுள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய மகளின் மரணம் குறித்து தந்தை அண்ணாதுரை கூறியது கடும் கண்டனத்தை உருவாக்கியது. “மாற்று வாழ்க்கை அமைத்துக் கொள்வதெல்லாம் அவரவர் விருப்பம். என் மகள் ஒருவனுக்கு ஒருத்தி என்று நினைத்து இறந்து விட்டாள். அதனால் என் பெண்ணை இழந்தால் கூட எனக்குப் பெருமையாகத்தான் இருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.

தனது மகளின் நிலைமையை உணர்ந்து, அவருக்கு ஆதரவாக நடந்து கொள்ளாமல், குடும்ப கௌரவம், சாதி கௌரவத்திற்காக ரிதன்யாவை தற்கொலைக்குத் தள்ளியதில் அவருடைய தந்தை, தாய்க்கும் பங்குண்டு என்பதைத்தான் அவருடைய தந்தையின் கூற்று நிரூபிக்கிறது.

இத்தகைய உளவியலே சாதி ஆணவப்படுகொலையிலும் முதன்மையாக உள்ளது. அந்தவகையில், ரிதன்யாவின் மரணம் என்பது ஒருவகையில், சாதி கௌரவம், குடும்ப கௌரவத்திற்காக நடந்த ஆணவப் படுகொலைதான்.


படிக்க: மயிலாடுதுறை: தாழ்த்தப்பட்டவர் வீடு கட்டியதைச் சகித்துக்கொள்ளாத சாதிவெறியர்கள்!


இரண்டாவது சம்பவம், நாமக்கல்லில் சுப்பிரமணியன், மிருதுளா என்ற கணவனும், மனைவியும் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது. இவர்களுடைய மகள் வேறொரு சாதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்து அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கூறியதுதான் இந்த தற்கொலைக்குக் காரணம் என்று தெரிகிறது. குறிப்பிட்ட சாதி சங்கத்தின் பெயரில் வெளியிடப்பட்ட போஸ்டர் இதை உறுதிப்படுத்துகிறது.

இறந்த பெற்றோர்கள் இருவருமே அரசுப்பணியில் இருப்பவர்கள். சுப்பிரமணியன் திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலராக பணிபுரிந்து வந்தவர். பிரமிளா அரசுப் பள்ளி ஆசிரியர்.

சொந்த சாதியில் திருமணம் செய்தாலும், புகுந்த வீட்டின் ஆணாதிக்கக் கொடுமையும் சாதி கௌரவம், குடும்ப கௌரவத்தைப் பாதுகாப்பது என்ற பெற்றோரின் நிர்ப்பந்தமும் இணைந்தே ரிதன்யாவை தற்கொலைக்குத் தள்ளின.

இன்னொரு பக்கம் அதே சாதி கௌரவத்தால் தனது பெண்ணின் சாதி கடந்த காதலை ஏற்க மறுத்து பெற்றோர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உண்மையில், பொருளாதார ரீதியாக நல்ல நிலையிலிருந்தும், சாதி கௌரவத்திற்கு அஞ்சி, தோற்றுப் போன பெற்றோரின் தற்கொலையாகத்தான் இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.

இடம், பொருள் வேறுபாட்டைத் தாண்டி ரிதன்யாவின் மரணமும், அப்பெற்றோரின் மரணமும் ஒரே காரணத்தைக் கொண்டுள்ளன.


படிக்க: இராமநாதபுரம்: தலித் இளைஞரைத் தாக்கிய அகமுடையார் சாதி வெறியர்கள்


மாறிக் கொண்டு வரும் சமூக நிலைமைகள், இளம் தலைமுறையினரிடம் ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக, சில சூழல்களில் சாதியையும், ஆணாதிக்கத்தையும் கடந்தே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது. இதனை நேர்மறையாகப் புரிந்து கொண்டு அணுகுவதே இத்தகைய துயரங்களைத் தடுத்து நிறுத்தும்.

இளம் தலைமுறை இந்தப் பிற்போக்குத்தனங்களைக் கடப்பதற்குத் துணியும்போது, இன்னொரு பக்கம் அதற்கான எதிர்ப்புகளும் வலுவாகத் தோன்றவே செய்கின்றன. அத்தகைய பிற்போக்குத்தனங்களுக்கு இடம் கொடுப்பதுதான் இத்தகைய துயரங்களுக்கு அடிப்படையாக உள்ளது. தற்போது ரிதன்யாவின் பெற்றோருக்கு இந்த உண்மை ஓரளவு புரிந்திருக்கும் என்றே கருத வேண்டியுள்ளது.

சமூக வளர்ச்சியைப் புரிந்து கொண்டு, வெற்றுப் பெருமைகளைத் தூக்கியெறிந்துவிட்டு, அதற்கேற்ப உறவுகளை ஜனநாயகரீதியாக அணுகுவதை நோக்கி சமூகம் நகர வேண்டும் என்பதே யதார்த்தம்.

அதேசமயம், இதற்கு வெளியில் சாதி கடந்த, சமத்துவ சிந்தனைகளை, ஜனநாயக உணர்வுகளை வளர்த்தெடுப்பதற்கான போராட்டம் சமூகத் தளத்தில் வளர்த்தெடுக்கப்பட வேண்டியதும் காலத்தின் தேவையாக உள்ளது.


அய்யனார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க