13.08.2025

தனியார் மருத்துவமனைகளின் சிறுநீரகத் திருட்டு!
தி.மு.க  அரசே நடவடிக்கை எடு!

பத்திரிகை செய்தி

நாமக்கல் மாவட்டம் பன்னியம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று சிகிச்சை முறைகேடுகள்  நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து டாக்டர் வினித் ஐ.ஏ.எஸ் தலைமையிலான விசாரணைக் குழு அமைக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் சொல்லியவற்றை நடைமுறைப்படுத்தாமல் தனியார் மருத்துவமனைகளின் முறைகேடுகளைப் பாதுகாக்கும் வேலையில் இறங்கியுள்ளது மக்கள் நல்வாழ்வுத்துறை.

பொதுவாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது மூளைச் சாவு அடைந்தவர்களின் உறுப்புகள் பலருக்கும் தானமாக வழங்கப்படுகின்றன. இதை யாருக்கு வழங்குவது என்பதை கட்டுப்படுத்த ஆணையங்கள் இருக்கிறது. பதிவு செய்தவர்களின் வரிசைப் பட்டியலில் வழங்குவார்கள் என்பது நடைமுறை.

இதே போல சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் சிறுநீரகத்தை வழங்குபவர்கள் ரத்த சொந்தங்களாக இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன.

ஆனால் ரத்த சொந்தம் இல்லாதவர்களை போலி ஆவணங்கள் மூலம் ரத்த சொந்தங்களாக மாற்றி அவர்களுக்கு அற்ப தொகையை வழங்கி விட்டு இடைத்தரகர்களும் மருத்துவமனைகளும் கோடிகளைக் குவிக்கிறார்கள்.

இந்த முறைகேடுகளை விசாரித்த டாக்டர் வினித் ஐ.ஏ.எஸ் தலைமையிலான குழு  அறிக்கையில் திருச்சி சிதார் மருத்துவமனை, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன்  மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போன்றவற்றில்  சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை முறைகேடுகள் நடைபெற்றது அம்பலமாகியுள்ளது.

ஆனால் மக்கள் நல்வாழ்வுத் துறையோ இந்த மருத்துவமனைகளில் நடைபெறும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை மொத்தமாக நிறுத்தி வைக்காமல் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையை மட்டும் தடுத்து நிறுத்தியுள்ளார்கள். மேலும் போலி ஆவணங்களைத் தயார் செய்த  இடைத்தரகர்கள், மருத்துவமனை ஊழியர்கள், அதை சரி பார்த்த அதிகாரிகள் உட்பட யார் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்த விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என டாக்டர் வினித் ஐ.ஏ.எஸ் ஆய்வுக் குழு  குறிப்பிட்ட போதும் மக்கள் நல்வாழ்வுத்துறை இது சம்பந்தமான எந்த நடவடிக்கையும் எடுக்கத் தயாராக இல்லை.

மக்கள் நல்வாழ்வுத் துறையின் இத்தகைய நடவடிக்கைகளை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிப்பதுடன் இதற்காக ஜனநாயக சக்திகள் அனைவரும் குரல் எழுப்ப முன்வருமாறு கேட்டுக்கொள்கிறது.

மேலும் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறைகேடுகளை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும், இப்போது முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் மருத்துவமனைகளை உடனடியாக இழுத்து மூடி, அதன் முதலாளிகள், மருத்துவர்கள், புரோக்கர்கள், அரசு அதிகாரிகள் உட்பட அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க