21.08.2025
தங்கச்சிமடம் நாட்டுப் படகு மீனவர்களின்
தொடர் போராட்டம் வெல்லட்டும்!
பத்திரிகை செய்தி
பாம்பனில் இருந்து கடந்த ஜூலை 27ம் தேதி கடலுக்குச் சென்ற 9 மீனவர்களை, நாட்டுப் படகுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இலங்கையில் காவல் வைக்கப்பட்டிருந்த 9 மீனவர்களுக்கும் இந்திய மதிப்பில் ரூ.9 கோடியே 10 லட்சம் அபராதம் விதித்தும், அபராதம் செலுத்த தவறும்பட்சத்தில் 3 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இதைக் கண்டித்து கடந்த பதினோராம் தேதியிலிருந்து தொடர் போராட்டங்களை பாம்பன் தங்கச்சிமடம் மீனவர்கள் நடத்தி வருகின்றனர்.
சமீப காலமாக இலங்கை அரசு தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளைப் பிடித்துச் சென்று அடித்து நொறுக்கி கடலில் மூழ்கடிக்கிறது. தற்போது ஒவ்வொரு மீனவர்க்கும் ஒரு கோடி ரூபாய் அபராதம் என்ற அளவில் விதித்து மிகப்பெரும் அடாவடியில் ஈடுபட்டுள்ளது இலங்கை அரசு.
இவ்வளவு மோசமான அடாவடியான வேலையை இலங்கை அரசு மேலும் மேலும் செய்யும் போதும் ஒன்றிய மோடி அரசு கைக்கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு ”நாங்கள்தான் மீனவர் நலன் காக்கிறோம்” என வாய் சவடால் அடித்துக் கொண்டிருக்கிறது.
மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும்; அபராத தொகையைத் திரும்பப் பெற வேண்டும்; மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் எட்டு நாட்களாக உண்ணாவிரதம் இருந்தும் ஒன்றிய மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் 19.08.2025 அன்று தங்கச்சி மடத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றிய மோடி அரசோ இலங்கையில் தொழில் நடத்தும் அம்பானி அதானிகளின் கைப்பாவையாக இருந்து கொண்டு மீனவர்களைத் தொடர்ச்சியாகப் புறக்கணித்து வருகிறது.
மேலும் கடலுக்கடியில் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் போன்ற வாயுக்களையும் கனிம வளங்களையும் கொள்ளையிட தயாராகி வருகிறது ஒன்றிய மோடி அரசு. மீனவர்களைக் கடலிலிருந்து விரட்ட வேண்டும் கடலையும் கடல் வளங்களையும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் ஒன்றிய மோடி அரசின் திட்டமாக உள்ளது. ஒரு பக்கம் அம்பானி அதானிகளின் நலன்களுக்காக இலங்கை அரசுடன் கொஞ்சி குலாவி மீனவர்களை ஒழித்துக் கட்டுவது; மற்றொருபுறம் இயற்கை எரிவாயுவில் கனிமவள கொள்ளைக்கு மீனவர்களை விரட்டி அடிப்பது என்ற இரண்டு வகையிலும் தாக்குதல் தொடுத்து வருகிறது ஒன்றிய மோடி அரசு.
இதற்கு எதிரான வலுவான போராட்டங்களைத் தொடங்கியுள்ள நாட்டுப் படகு விசைப்படகு மீனவர்களுக்கு எமது மக்கள் அதிகாரக் கழகத்தின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம்.
ஒன்றிய மோடி அரசு மீனவர்களை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகளை எமது மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மேலும் மீனவர்களின் தொடர் போராட்டத்திற்கு ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஆதரவு தெரிவித்து உடன் நிற்க வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
மக்கள் அதிகாரக் கழகம்,
மதுரை கிழக்கு மாவட்டம்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram