
13.09.2025
“அந்தமான்-நிகோபார் தீவுகள் உள்கட்டமைப்பு வளர்ச்சி” எனும் பெயரில்
சுற்றுச்சூழல் மற்றும் பழங்குடி மக்களை காவு கொடுக்கும் பாசிச மோடி அரசை
தூத்துக்குடி மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
கண்டன அறிக்கை
அந்தமான் உள்கட்டமைப்பு வளர்ச்சி எனும் பெயரில் பாசிச மோடி அரசு கொண்டுவரத் திட்டமிட்டிருக்கும் ‘கிரேட் நிகோபார் திட்டத்தை’ தூத்துக்குடி மாவட்ட மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிப்பதோடு, இத்திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.
166 சதுர கி.மீ. பரப்பில் ரூ.92 ஆயிரம் கோடி மதிப்பில் துறைமுகம், பன்னாட்டு விமான நிலையம், அனல் மின்நிலையம், நகரியம் (Township) முதலானவற்றைக் கட்டமைக்கும் இந்தத் திட்டத்தால், அந்தமானில் வசிக்கும் பழங்குடியினருக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என அரசியல் தலைவர்கள், அறிவியலாளர்கள், பழங்குடி உரிமைச் செயல்பாட்டாளர்கள் எனப் பலரும் எதிர்ப்புக் குரல்களை எழுப்பியுள்ளனர்.
மேலும், அந்தமான்-நிகோபார் யூனியன் பிரதேசத்தில் உள்ள கிரேட் நிகோபார் தீவு வளம் மிக்க வெப்பமண்டல மழைக்காடுகள், அரியவகைப் பல்லுயிர்களின் குடிலாகும். இந்தக் காடுகள் பூமியின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உயிர்நாடியாகத் திகழ்கின்றன. இம்மண்ணின் மைந்தர்களான ஷோம்பென், நிகோபார் ஆதிக்குடிகள் அங்கு வசிக்கின்றனர்.
குறிப்பாக, “பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், பிற பாரம்பரிய வனவாசிகள் (வன உரிமைகள் அங்கீகாரம்) சட்டம் 2006”, “வனப் பாதுகாப்புச் சட்டம் 1980”, “புதிய திட்டங்களுக்குச் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதைக் கட்டாயமாக்கும் அறிவிப்பு 2006”, “கடலோர ஒழுங்காற்று மண்டலங்களை வகைப்படுத்தி, பாதுகாத்து, மேம்படுத்தும் அறிவிப்பு 2011” உள்ளிட்ட சட்டங்கள் நிகோபார் தீவின் சுற்றுச்சூழல், சூழலியல், பூர்வகுடி மக்களின் குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றன. இவற்றையெல்லாம் மீறித் தற்போது ஷோம்பென், நிகோபார் பழங்குடியினரிடமிருந்து 130 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட காடுகளும் வாழ்விடமும் பறிக்கப்படுகின்றன.
முன்னதாக, ஆகஸ்ட் 18, 2022 தேதியிட்ட அறிக்கையில் ஷோம்பென், நிகோபார் மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டு, அவர்களிடம் ஒப்புதல் பெற்ற பிறகே இத்திட்டத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதுபோல் எந்த ஒப்புதலும் பெறப்படவில்லை என “லிட்டில்-கிரேட் நிகோபார் பூர்வகுடிகள் மன்றம்” தெரிவிக்கிறது. அத்துடன் மத்திய அரசின் இந்தச் செயல் சட்ட ரீதியிலானதா எனச் சட்ட வல்லுநர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஏனெனில், ஷோம்பென் இன மக்கள் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நிகோபார் தீவில் வசித்துவரும் பூர்வகுடி மக்கள். இன்றளவும் வேட்டையாடி உணவு சேகரிக்கும் மரபின்வழி வாழ்ந்துவரும் இம்மக்கள், புற உலகுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாதவர்கள்; வனப் பாதுகாப்புச் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள். எந்தச் சட்டத்தாலும் இவர்களைக் காட்டிலிருந்து அப்புறப்படுத்த முடியாது.
தவிர, இந்தத் திட்டத்துக்காக அங்குள்ள புலிகள் காப்பகத்தின் முக்கியப் பகுதிகளில் உள்ள கிராம மக்களைத் துரிதமாக இடம் மாற்ற தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டிருப்பதும் பேசுபொருளாகியிருக்கிறது.
மறுபுறம், ‘கிரேட் நிகோபார்’ திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக, ஏறத்தாழ ஒரு கோடி மரங்கள் வெட்டப்பட்டு, வேரோடு அகற்றப்படும் அபாயம் உள்ளது. அதிலும் அகற்றப்படும் மரங்களின் அடிக்கட்டைகளை எரித்து எரிபொருள் உற்பத்தி செய்யவிருப்பதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிரேட் நிகோபார் தீவின் கிழக்குக் கடற்கரை நெடுகிலும் பவளத்திட்டுகள் விரவியிருப்பதால் அங்கு துறைமுகம், கப்பல் கட்டுமானப் பணிகளைக் கொண்டுவரும் பட்சத்தில், புவியின் நுரையீரலை அழித்தொழிப்பதாக மாறிப்போகும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, இத்தகைய பிரம்மாண்டமான திட்டத்தை மேற்கொள்ளவிருக்கும் “அந்தமான் – நிகோபார் தீவுகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக் கழகம்” (ANIIDCO) எந்த வகையிலும் உள்கட்டமைப்பு, கட்டுமானப் பணிகளோடு தொடர்புடைய நிறுவனம் அல்ல. கடந்த 35 ஆண்டுகளில் இந்நிறுவனம் மதுபான விற்பனை, பால் உற்பத்தி – விநியோகம், பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் வியாபாரம் உள்ளிட்ட தொழில்களில் மட்டுமே ஈடுபட்டுள்ளது.
ஆகவே, மோடி அரசின் ‘கிரேட் நிகோபார் திட்டம்’ மூலம் பழங்குடியினரிடமிருந்து நிலம் பறிக்கப்படுவது அவர்களுடைய உரிமைகளை நசுக்கி, இயற்கையைச் சுரண்டும் செயலாகும்.
நக்சல் ஒழிப்பு எனும் பெயரில் சத்தீஸ்கரின் பஸ்தர், ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம், மகாராஷ்டிராவின் கட்சிரோலி உள்ளிட்ட பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள் மோடி அரசின் தாக்குதலுக்கு இரையாகி வருகின்றனர். குறிப்பாக, சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆபரேஷன் ககர் எனும் பெயரில் அப்பாவி பழங்குடி மக்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். தங்கள் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர். காடுகளில் இருக்கும் கனிம வளங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரைவார்க்க பழங்குடி மக்களை அப்புறப்படுத்துவது, கொன்றொழிப்பது பாசிச மோடி அரசின் திட்டமாகும்.
கார்ப்பரேட்டுகள் கொள்ளைக்காக மணிப்பூர் மாநிலத்தையே சுடுகாடாக்கியது பாசிச கும்பல். கலவரம் நடந்து இரண்டு ஆண்டுகள் கழித்து மணிப்பூருக்கு செல்லும் பாசிச மோடி, மணிப்பூரின் அமைதியை அழித்துவிட்டு ரூ.8,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவிருக்கிறார்.
இதுபோல் சமீபத்தில் தமிழ்நாட்டில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை மோடி கும்பல் கொண்டு வந்தபோது அரிட்டாபட்டி சுற்றியுள்ள மக்கள் போராடி அதை தடுத்து நிறுத்தினர்.
வளர்ச்சி என்ற பெயரில் நாட்டின் இயற்கை வளங்கள், காடு, மலைகளை கார்ப்பரேட்டுகளுக்கு படையிலிடுவதே மோடி அரசின் கொள்கை. இதற்காக சட்டங்களை திருத்துவதையும், ஒவ்வொரு துறையிலும் பாசிசத்தை அமல்படுத்துவதையும் பாசிச கும்பல் தொடர்ச்சியாக செய்து வருகிறது. இதை முறியடிக்க இயற்கை வளங்களை பாதுகாக்க போராடும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பழங்குடி மக்களுக்கு ஆதரவாக நிற்பதுடன், மணிப்பூர் உட்பட வட கிழக்கு மாநிலங்கள் தொடங்கி பீகார், சத்தீஸ்கர் என நாட்டில் பல மாநிலங்களிலும் இயற்கை வளங்களை பாதுகாக்க போராடும் பழங்குடியின மக்களுக்கு ஆதரவாகவும் களத்தில் இறங்க வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.
மேலும், பாசிசத்தை வீழ்த்தி, பாசிசத்திற்கு எதிரான மாற்று அரசியல் – பொருளாதார கட்டமைப்பை நிறுவும் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு அமைக்க வேண்டியதும் அவசியமானதாகும். இதற்காக அனைவரும் ஒன்றிணைந்து போராட அணிதிரள வேண்டும் என தூத்துக்குடி மக்கள் அதிகாரக் கழகம் அறைகூவி அழைக்கிறது.
![]()
பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
தூத்துக்குடி-நெல்லை மாவட்டங்கள்.
9385353605
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram





