26.09.2025

லடாக்கில் மாநில அந்தஸ்து கோரியும்
அரசியலமைப்புச் சட்டத்தின் ஆறாவது அட்டவணையில் லடாக்கை சேர்க்க கோரியும்
நடைபெறும் மக்கள் போராட்டம் வெல்லட்டும்!

பத்திரிகை செய்தி

நேற்று முந்தைய தினம் (24.09.2025) லடாக்கின் மக்கள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து கோரியும், அரசியலமைப்பு சட்டம் அட்டவணை ஆறில் லடாக்கை இணைக்கக் கோரியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் இரண்டு வார காலமாக உண்ணாவிரதம் இருந்தார். இது மக்களிடம் பெரிய ஆதரவை பெற்றது. இதைத் தொடர்ந்து நேற்றைய முன் தினம் (24.09.2025) “லெ அபெக்ஸ் பாடி” என்ற லடாக் மக்கள் கூட்டமைப்பு முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது. இதுதான் மாபெரும் மக்கள் போராட்டமாக வெடித்துள்ளது.

இந்தப் போராட்டத்தின் மீது போலீசு நடத்திய தாக்குதலில் இதுவரை நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டு 60 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

இந்தப் போராட்டத்தில் லடாக் மலை பகுதி மேம்பாட்டு தன்னாட்சி ஆணைய அலுவலகம் மற்றும் பி.ஜே.பி அலுவலகம் சூறையாடப்பட்டு, தீ வைக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தை வன்முறை என்று ஆளும் வர்க்க ஊடகங்கள் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது ஒரு வரலாற்று மோசடி.

கடந்த 2019-ல் ஜம்மு காஷ்மீரின் 370வது சட்டப்பிரிவை நீக்கி சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது பாசிச மோடி அரசு. இதன் விளைவாக ஜம்மு காஷ்மீரில் இருந்து பிரிக்கப்பட்டு லடாக் தனியாக யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. லடாக் தனியாக பிரிக்கப்பட்டதை லடாக் மக்கள் அப்போது வரவேற்றார்கள்.

ஆனால் ஒன்றிய மோடி அரசின் அதிகாரிகளால், ராணுவத்தினால் ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டு உரிமைகள் பறிக்கப்படுவதை கண்முன்னே கண்டனர். அதன் பிறகு 2021 இல் இருந்தே தங்களின் உரிமைகளை பாதுகாக்கவும், வெளி மாநிலத்தவர்கள் யாரும் லடாக்கில் நிலம் வாங்காத வண்ணம் தங்களுடைய இயற்கை வளங்களை பாதுகாக்க கோரியும் தொடர்ந்து போராடி வருகின்றனர். மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பு சட்டம் அட்டவணை ஆறில் சேர்க்க கோருவதன் மூலம் 370வது பிரிவுக்கு நிகராக தங்கள் உரிமைகளை பாதுகாக்க முடியும் என்ற அடிப்படையில் லடாக் மக்கள் போராடுகின்றனர்.

அம்பானி அதானி கார்ப்பரேட் கும்பலுக்கு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் நிலங்களை வாரிக் கொடுப்பதற்காக மாநில அந்தஸ்து கொடுக்காமலும் அரசியலமைப்பு சட்டம் அட்டவணை ஆறில் சேர்க்காமலும் ஒன்றிய மோடி அரசு ஒடுக்கு முறைகளை தொடர்ச்சியாக ஏவி வருகிறது. மோடி அமித்ஷா கும்பலின் இத்தகைய பாசிச ஒடுக்கு முறைகளை உறுதியான மக்கள் போராட்டங்களின் மூலமாகத்தான் முடிவுக்கு கொண்டு வர முடியும் என்ற உண்மை நம் கண் முன்னே உள்ளது.

லடாக் மக்களின் உரிமைக்கான கோரிக்கைகள் வெற்றி அடைய மக்கள் அதிகாரக் கழகம் ஆதரவு தெரிவிப்பதுடன், லடாக் மக்களின் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்திய ஒன்றிய மோடி அரசை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

லடாக் மக்கள் மீது ஏவப்பட்டுள்ள பாசிச ஒடுக்குமுறையை எதிர்த்து அனைத்து ஜனநாயக சக்திகளும் குரல் எழுப்ப வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க