
27.09.2025
ஓசூர்: தூய்மைப் பணியாளர்களின் அடிப்படை உரிமையைக் கூட மறுக்கும்
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்!
பத்திரிகை செய்தி
ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தூய்மைப் பணியாளர்கள் அடிப்படை வசதி, நிரந்தரப் பணி, சம்பள உயர்வு ஆகியவற்றைக் கோரி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம், நாகமங்கலம் அருகே டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் நான்காண்டுகளாக இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் 24 ஒப்பந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பல ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
கடந்த 22 ஆம் தேதி, டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலைக்கு அருகில், அங்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 700க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் (தொழிலாளர்கள்) பணியைப் புறக்கணித்து இரண்டு நாட்களாக அங்கேயே தங்கி, சமைத்து சாப்பிட்டு, போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இவர்களிடம் ஓய்வே கொடுக்காமல் மிகக் கடுமையான வேலை வாங்கிக்கொண்டு மாதச் சம்பளம் வெறும் ₹13,000 வரை மட்டுமே ஊதியமாக வழங்கி வந்திருக்கிறது ஒப்பந்த நிறுவனம். ஆண்டுக்கு ஒரே யூனிபார்ம் மட்டுமே அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனை தினந்தோறும் அணிந்து வரும்படி கட்டாயப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
மூன்று தொழிலாளர்கள் செய்ய வேண்டிய வேலையை ஒருவரே செய்யச் சொல்லி நிர்ப்பந்தம் செய்யப்படுகின்றனர். டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பேருந்துகளில் தூய்மைப் பணியாளர்களை ஏற்றுவதில்லை. தூய்மைப் பணியைச் செய்யும் பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வறை கூட இல்லை. அடிப்படை மருத்துவ வசதி கூட செய்து கொடுப்பதில்லை.
இ.எஸ்.ஐ மருத்துவமனை 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. காய்ச்சல், தலைவலி என்றால் கூட பராமரிப்பதற்கு பெரிதும் கடினமான சூழல்தான் இவர்களுக்கு உள்ளது.
தூய்மைப்பணியில் ஈடுபடும் ஒப்பந்த தொழிலாளர்கள் அவசரத் தேவைகளுக்காக விடுமுறை எடுத்தால் ஒரு நாள் வேலைக்கு 1,000 ரூபாய் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில் அடிப்படை வசதி, நிரந்தரப் பணி, சம்பள உயர்வு ஆகிய உரிமைகளைக் கோரி இப்போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிர்வாகம், ஒப்பந்த நிறுவனம், தூய்மைப் பணியாளர்கள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அதில் பேருந்தில் மட்டும் வந்து செல்ல அனுமதி கொடுத்துள்ளது, ஆலை நிர்வாகம். மற்ற கோரிக்கைகள் எதையும் கண்டு கொள்ளவில்லை.
இதேபோன்று, தொடர் வேலை நிறுத்தப் போராட்டம், கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று முறை தூய்மைப் பணியாளர்களால் நடத்தப்பட்டுள்ளது. ஒப்பந்த நிறுவனமோ இனி இது போன்று போராட்டம் செய்தால் அனைவரையும் வேலையை விட்டு விரட்டி விடுவோம் என தொடர்ந்து மிரட்டி வருகிறது.
நாகமங்கலம் அருகே விவசாயிகளுடைய பட்டா நிலங்களும் விளைநிலங்களும் 1,600 ஏக்கருக்கு மேல் வளர்ச்சி என்ற பெயரில் கட்டாயப்படுத்தி அடிமாட்டு விலைக்கு வாங்கி தொழில் வளர்ச்சி என்ற பெயரில் கையகப்படுத்தித்தான் இந்த டாடா ஆலை துவங்கப்பட்டது.
ஓசூர் வளர்ச்சி அடைகிறது, தொழில் நிறுவனங்கள் படையெடுக்கின்றன என்று ஆட்சியாளர்கள் பெருமை பேசுவதெல்லாம் தொழிலாளர்களின் வளர்ச்சியையோ, உரிமைகளையோ உள்ளடக்கியதல்ல. கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சியைத்தான் இவர்கள் கூறுகிறார்கள் என்பதற்கு இச்சம்பவமே ஆதாரம்.
ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களை கொத்தடிமையாக, அடிப்படை வசதி கூட செய்து தராமல் ஆலை நிர்வாகமும் ஒப்பந்த நிறுவனமும் நடத்துவதை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள்:
தூய்மைப் பணியில் ஈடுபடும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.
வருடம் இரண்டு சீருடை தர வேண்டும்.
விடுமுறை எடுக்கும் போது ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்யக்கூடாது.
தொழிற்சாலை பேருந்தில் ஆலைக்கு சென்று வர அனுமதிக்க வேண்டும்.
பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வு அறை ஒதுக்க வேண்டும்.
தொழிலாளர் ஆணையமே!
டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலையில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிலைமைகளை ஆய்வு செய்து உடனடியாக தீர்வு காண்!
தூய்மைப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதி கூட செய்து தராத ஆலை நிர்வாகத்தின் மீதும், ஒப்பந்த நிறுவனத்தின் மீதும் உரிய நடவடிக்கை எடு!
தொழிலாளர்களே!
கார்ப்பரேட்மயமாக்கல், காண்ட்ராக்ட்மயமாக்கலை ஒழித்துக் கட்டாமல் நமக்கு வாழ்வு இல்லை!
நமது உரிமைகளைப் பாதுகாக்க அமைப்பாய் ஒன்றிணைந்து போராடுவோம்!
![]()
தோழர் இரஞ்சித்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram





