
23.11.2025
நான்கு தொழிலாளர் சட்டங்களைத் திரும்பப்பெறு!
ம.அ.க. கண்டனம்
பத்திரிகைச் செய்தி
பாசிச மோடி அரசு, நடப்பிலிருந்த 29 தொழிலாளர் சட்டங்களை நீக்கிவிட்டு, அதனை நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளாக மாற்றும் மசோதாவை கொரோனா ஊரடங்கு காலத்தில் எந்தவித விவாதமுமின்றி பாசிச முறையில் நிறைவேற்றியது.
தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தையும் பறித்து – தொழிலாளர்களை நவீன கொத்தடிமையாக்கும் இச்சட்டத்திருத்தத்தை இரத்து செய்ய வேண்டுமென்று இந்தியா முழுவதுமுள்ள தொழிற்சங்கங்களும் புரட்சிகர – ஜனநாயக சக்திகளும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வந்தனர். ஆனால், அந்த எதிர்ப்பையெல்லாம் புறக்கணித்துவிட்டு நவம்பர் 22 அன்று நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை பாசிச மோடி அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.
இப்புதிய சட்டங்களின்படி தொழிலாளர்கள் சங்கம் வைப்பதற்கும் தங்களது உரிமைகளைப் பெறுவதற்குமான அனைத்து வாய்ப்புகளும் சட்டப்பூர்வமாகவே தடுக்கப்பட்டுவிடும். தொழிலாளர்கள் சட்டப்பூர்வமாகவே ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வரை சுரண்டப்படுவர். அதிலும், பெண்கள் மீதான உழைப்புச் சுரண்டல் மேலும் தீவிரப்படுத்தப்படும்.
தொழிலாளர்களை, கார்ப்பரேட் முதலாளிகள், காண்ட்ராக்ட் முதலாளிகள், போலீசு கொண்ட ஒரு கும்பலின் அதிகாரத்தின் கீழ் கொத்தடிமைகளாக்கும் இச்சட்டங்களை எதிர்ப்பை மீறி நடைமுறைப்படுத்திய பாசிச மோடி அரசை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மறுபுறம், தொழிலாளர் சட்டம் ஒத்திசைவுப் பட்டியலில் (Concurrent List) இருப்பதால் இச்சட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு, மாநில அரசுகள் இச்சட்டங்களை ஏற்றுக்கொள்வதும் இதற்கான விதிகளை உருவாக்குவதும் அவசியம். இந்தியாவில் உள்ள ஆகப் பெரும்பான்மையான மாநில அரசுகள் இச்சட்டங்களுக்கான வரைவு விதிகளை உருவாக்கியதையடுத்தே தற்போது இச்சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. பாசிச மோடி அரசை எதிர்ப்பதாகச் சொல்லிக்கொள்ளும் தி.மு.க., சி.பி.எம்., காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களும் இப்பாசிச சட்டங்களை ஏற்று வரைவு விதிகளை உருவாக்கியிருப்பதன் மூலம் தொழிலாளர்கள் மீதான பாசிச தாக்குதலுக்கு அப்பட்டமாகத் துணைபோயுள்ளன.
இந்நிலையில், புதிய தொழிலாளர் சட்டங்களை இரத்து செய்ய வலியுறுத்தி வரும் நவம்பர் 26-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு (Joint Platform of Central Trade Unions) அறிவித்துள்ளது. இப்போராட்டத்தில் தொழிலாளர்கள், ஜனநாயக சக்திகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு போராட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டுமென்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது. மேலும், எட்டுமணி நேர வேலை, சங்கம் சேரும் உரிமை உள்ளிட்ட தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற பல்வேறு உரிமைகள் சட்டப்பூர்வமாகவே பறிக்கப்படுவதற்கு எதிராக தொழிலாளர் வர்க்கம் ஓரணியில் திரண்டு போராட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
![]()
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram





