ஒடிசா: விவசாயத் தலைவர்களைத் தாக்கிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. குண்டர் படை

உருக்காலை திட்டத்திற்கு விவசாய நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று பொதுமக்கள் உறுதியாக இருக்கின்றனர். இந்த உறுதியைக் குலைக்க போலீசும் காவி குண்டர் படையும் இணைந்து பலமுறை கிராம மக்களைத் தாக்கியுள்ளன.

0

டிசா மாநிலத்தின் கியோஞ்சர் மாவட்டத்தில் ஜிண்டால் நிறுவனமும் தென் கொரியாவின் போஸ்கோ நிறுவனமும் இணைந்து உருக்காலை அமைக்க உள்ளன. இந்த உருக்காலை அமைய உள்ள இடம் வளமான விவசாய நிலமாகும்.

இந்த விவசாய நிலங்களை விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி ஒடிசா பா.ஜ.க. அரசு ஜிண்டால் – போஸ்கோ நிறுவனங்களுக்குத் தாரைவார்த்துவிட்டது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக நிலம் பறிக்கப்படுவதை எதிர்த்து விவசாயிகள் “ஜிண்டால் – போஸ்கோ புரோதிரோத் மன்ச்” (Jindal POSCO Protirodh Manch) என்கிற அமைப்பைத் தொடங்கிப் போராடி வருகின்றனர். இந்த இயக்கத்தின் மூலம் கியோஞ்சர் மாவட்டத்திற்குட்பட்ட கிராம விவசாயிகள், பொதுமக்கள் இணைந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி கியோஞ்சர் மாவட்டத்தின் ஜமுனாபோசி கிராமத்தில் ஜிண்டால் – போஸ்கோ புரோதிரோத் மன்ச் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி (எஸ்.கே.எம் – சம்யுக்த கிசான் மோர்ச்சா) தேசிய தலைவரும், அகில இந்திய விவசாயிகள் கூட்டுறவுச் சங்கங்களின் கூட்டமைப்பின் (AIKKMS) தலைவருமான சத்யவான் மற்றும் பிற விவசாயத் தலைவர்கள் உரையாற்றினர். இவர்கள் கூட்டத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் சத்யவான் மற்றும் பிற தலைவர்களைத் தாக்கியதோடு, அவர்களைக் கடத்திச் சென்று கியோஞ்சர் மாவட்டத்தின் துருமங்கா போலீசு நிலையத்தில் குற்றவாளிகளைப் போல ஒப்படைத்துள்ளது.

குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. குண்டர் படை விவசாயிகளை லத்தி மற்றும் ஆயுதங்களை கொண்டு கொடூரமாகத் தாக்கியுள்ளது. இதில் சத்யவானின் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்காமல் பல மணிநேரம் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்துள்ளனர்.  போலீசு நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தலைவர்களின் கைப்பேசிகளை அராஜகமாகப் பிடுங்குவதற்குக் குண்டர்கள் பலமுறை முயன்றுள்ளனர்.  இவையனைத்தும் போலீசு முன்னிலையிலே நடந்தது. அடைத்து வைக்கப்பட்ட தலைவர்களைத் தொடர்பு கொள்ளவும் போலீசு அனுமதிக்கவில்லை. பல மணி நேரத்திற்கு பிறகே சத்யவான் உள்ளிட்ட தலைவர்களை விடுவித்துள்ளனர்.


படிக்க: பஞ்சாப்: கார்ப்பரேட் ஆதரவு வரைவு மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்!


உருக்காலை திட்டத்திற்கு விவசாய நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று பொதுமக்கள் உறுதியாக இருக்கின்றனர். இந்த உறுதியைக் குலைக்க போலீசும் காவி குண்டர் படையும் இணைந்து பலமுறை கிராம மக்களைத் தாக்கியுள்ளன. குறிப்பாக, நவம்பர் 26-ஆம் தேதி நள்ளிரவில் ஒரு பெரும் போலீசு படை கிராமங்களைச் சுற்றிவளைத்து ஜிண்டால் – போஸ்கோ புரோதிரோத் மன்ச் இயக்கத்தின் செயலாளர் தோழர் பெனூதர் சர்தார் மற்றும் பிற ஐந்து தலைவர்களை போலி வழக்கில் அடவாடிய கைது செய்தது. அவர்கள் இன்றுவரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த அச்சுறுத்தலுக்கு எல்லாம் மக்கள் அடிபணியாமல் உறுதியாகப் போராடுகின்றனர்.

அதானி, அம்பானி, டாடா, ஜிண்டால் போன்ற பார்ப்பன, பனியா, குஜராத்தி, மார்வாரி கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக இந்தியாவின் இயற்கை வளங்களையும் வளமான விவசாயப் பகுதிகளையும் வாரிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க கும்பல். சத்தீஸ்கரில் மவோயிஸ்ட், காஷ்மீரில் பயங்கரவாதிகள் பூச்சாண்டி காட்டி அங்குள்ள இயற்கை வளங்களை, இராணுவப்படைகளின் பாதுகாப்புடன் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கத் துடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு எதிராகப் போராடுபவர்களைத் தனது இந்துத்துவ குண்டர் படைகளைக் கொண்டும் போலீசைக் கொண்டும் தாக்குதல் நடத்தி அச்சுறுத்துகிறது. இதேபோன்று, தற்போது ஒடிசாவில் போராடும் விவசாய தலைவர்களைத் தாக்கி பயமுறுத்துகிறது.

ஆனால், இந்த அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் பணியாமல் மக்களும் விவசாயத் தலைவர்களும் போராடி வருகின்றனர். இப்போராட்டத்திற்கு ஆதரவாக இந்தியா முழுவதுமிருந்து குரல் எழுப்பப்பட வேண்டும். மேலும், இப்போராட்டங்கள் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.; அம்பானி – அதானி பாசிச கும்பலுக்கு எதிரான போராட்டமாகவும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

செய்தி ஆதாரம்: தீக்கதிர்


உமர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க