04.01.2026

வெனிசுலா அதிபர் கைது!

பாசிச ட்ரம்ப்-இன் மேலாதிக்க வெறி!

கண்டன அறிக்கை

வெனிசுலாவின் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப், வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மாதுரோவையும் அவரது துணைவியாரையும் நாடு கடத்தியுள்ளார். மேலும் மதுரோவும் அவரது துணைவியாரும் நியூயார்க் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளார். இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து வெனிசுலா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் இராணுவத் தடைகளையும் அமெரிக்கா விதித்திருந்தது. சில வாரங்களுக்கு முன்பு வெனிசுலாவை சட்ட விரோத அரசாங்கம் என்று அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வெனிசுலாவிலிருந்து சென்ற வணிக கப்பல்கள் எண்ணெய் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தார்.

அமெரிக்கா தொடர்ந்து பொருளாதாரத்தில் சரிந்து கொண்டு அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வெனிசுலாவில் இருக்கக்கூடிய எண்ணெய் வளங்களை கொள்ளை அடித்து அதன் மூலம் தன்னுடைய பொருளாதாரத்தை தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்கிறது பாசிச ட்ரம்ப் அரசு. இப்பொழுது இனி வெனிசுலாவை அமெரிக்கா வழி நடத்தும் என்றும் தெரிவித்திருப்பது மிகவும் ஆபத்தானதாகும். அதுமட்டுமின்றி இன்னொரு உலகப்போருக்கு வித்திடும் அபாயகரமான செயலை பாசிச ட்ரம்பின் அரசு மேற்கொண்டுள்ளது.

பாசிஸ்ட் ட்ரம்ப் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் அமெரிக்க மக்களுக்கு எதிராகவும் புலம்பெயர் மக்களுக்கு எதிரானதாகவே இருந்தை நடைமுறை நிரூபிக்கிறது.

அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடியும் குரல் கொடுத்தும் வந்த வெனிசுலா மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் உலக மக்கள் அனைவரின் மீதும் நடத்தப்பட்டத் தாக்குதல் ஆகும்.

இதற்கு எதிராக அமெரிக்காவின் மக்கள் மட்டும் அல்ல; உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் பாசிஸ்ட் ட்ரம்ப் வீழ்த்தப்படும் வரை போராட வேண்டும்.

பாசிச ட்ரம்பின் கூட்டாளியான மோடி அரசு வெனிசுலாவின் மீதான நடவடிக்கையை இதுவரை கண்டிக்கவில்லை. அதனை மக்கள் அதிகார கழகம் வன்மையாக கண்டிப்பதுடன் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் இணைந்து அமெரிக்க மேலாதிக்க போர் வெறியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க