எஸ்.ஐ.ஆர்.: பா.ஜ.க.-வின் சதியை அம்பலப்படுத்தும் பா.ஜ.க. எம்.பி.!

மேற்கு வங்க நாடாளுமன்ற உறுப்பினர் நாகேந்திர ராய், வாக்காளர் பட்டியலிலிருந்து மக்களின் பெயர்களை நீக்கும் நடவடிக்கை என்பது அவர்களது வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கும் சமூகநல திட்டங்களில் பெறும் நலன்களை நிறுத்துவதற்கும் வழிவகுக்கும் எனக் கூறினார்.

0

பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நகேந்திர ராய் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் மேற்குவங்க ஆளுநர் ஆனந்த போஸ் ஆகியோர் “பாகிஸ்தானி” என்றும் “பங்களாதேசி” என்றும் கூறியுள்ளார். கூச்பெஹார் (Coochbehar) மாவட்டம் சிதாய் பகுதியில் டிசம்பர் 27 அன்று நடைபெற்ற அவரது ஆதரவாளர்களின் கூட்டத்தில் இந்த கருத்தைத் தெரிவித்தார். பீகாரில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராகவும் பேசியுள்ளார்.

மேற்கு வங்க நாடாளுமன்ற உறுப்பினர் நாகேந்திர ராய், வாக்காளர் பட்டியலிலிருந்து மக்களின் பெயர்களை நீக்கும் நடவடிக்கை என்பது அவர்களது வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கும் சமூகநல திட்டங்களில் பெறும் நலன்களை நிறுத்துவதற்கும் வழிவகுக்கும் எனக் கூறினார். மேலும், மக்களின் பூர்வீகத்தை ஆய்வுசெய்வதன் மூலம் “வெளிநாட்டார்” என அடையாளப்படுத்தி தடுப்பு முகாம்களை அமைப்பதற்கும் வழிவகுக்கும் எனவும் கூறினார்.

மேற்கு வங்கத்தின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் சமீக் பட்டாச்சாரியா ராயின் கருத்திற்கு பதில் ஏதும் சொல்லவில்லை. ஆனால், சிறப்பு தீவிர திருத்தத்திற்கும் தடுப்பு முகாம்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என மட்டும் கூறினார்.

ராயின் கருத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குனால் கோஷ், எஸ்.ஐ.ஆர் திட்டத்தின் ஒரு பகுதியாக அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்களை நீக்குவதற்காக, பா.ஜ.க. ஒரு பெரும் சதியைத் தீட்டி வருவதாகக் குற்றம் சாட்டினார்.

பா.ஜ.க.-வின் கைப்பாவையான தேர்தல் ஆணையத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட எஸ்.ஐ.ஆர் அறிவிக்கப்பட்டதிலிருந்தே கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி என்பது இஸ்லாமியர், பெண்கள், தலித்துகளின் வாக்குரிமையைப் பறித்து அவர்களது குடியுரிமையையும் பறிக்கும் சதி திட்டமாகும்.

இப்பாசிச திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் மீது கொடுக்கப்பட்ட அழுத்தத்தால் மன உளைச்சல் ஏற்பட்டு பலர் தற்கொலை செய்து கொண்டனர். சமீபத்தில் வெளிவந்த ஸ்பெக்ட் ஃபவுண்டேசன் (SPECT Foundation) அறிக்கை, ஆறு மாநிலங்களிலிருந்து 33 வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகக் கூறியுள்ளது. இந்த அறிக்கை மேற்கு வங்கத்தில் இறந்த அதிகாரிகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறைந்தது 40 அரசு அதிகாரிகள் இறந்திருப்பதாகத் தெரிவித்தார்.

பா.ஜ.க. ஆளும் மாநிலமான அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தி சுமார் 19 இலட்சம் மக்கள் “வெளிநாட்டினர்” என முத்திரை குத்தப்பட்டு நீக்கப்பட்டனர். தங்களது குடியுரிமையை நிரூபிக்க வெளிநாட்டுத் தீர்ப்பாயங்களில் வழக்கு நடத்திக் கொண்டிருப்பவர்களையும் வழக்கு தீர்ப்பானவர்களையும் தடுப்பு முகாம்களில் அடைத்து சித்திரவதை செய்து வருகிறது பா.ஜ.க. அரசு. மோசமான சுகாதாரமற்ற வகையில் அடைத்து வைத்திருப்பதால் எளிதில் நோய்வாய்ப்பட்டு மக்கள் மடிந்து வருகின்றனர். நாஜி ஹிட்லரின் வதை முகாம்களை இவை நினைவுபடுத்துகின்றன. நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர் மூலம் வாக்குரிமையுடன் கூடவே குடியுரிமையைப் பறித்து தடுப்பு முகாம்களில் அடைப்பதே பாசிச மோடி அரசின் நோக்கமாகும். இந்நிலையில், இப்பாசிச திட்டத்தை அம்பலப்படுத்தும் விதமாகவே நகேந்திர ராயின் கருத்து அமைந்துள்ளது.


உமர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க