கர்நாடகா: ஆணவப் படுகொலை தடுப்பு சிறப்புச் சட்ட மசோதா

இந்தியாவில் நடக்கும் சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடியினர், பெண்கள் மீதான தாக்குதல்களுக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. போன்ற சங்கப் பரிவாரங்கள், ஆதிக்கச் சாதிவெறி சங்கங்கள் இருக்கின்றன. நடைபெறும் ஆணவப் படுகொலைகளுக்கு பெரும்பாலும் இந்தக் கும்பல் காரணமாக இருக்கிறது. இந்த சங்கப்பரிவாரக் கும்பலைத் தடை செய்வது ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதில் குறிப்பான அம்சமாகும்.

0

ர்நாடகாவில் சாதி மறுப்பு திருமணங்கள் மற்றும் சுய விருப்பத்தின் அடிப்படையில் இணையும் இணையர்களைப் பாதுகாக்கவும், ஆணவப் படுகொலைகளைத் தடுக்கவும் ஆளும் காங்கிரசு அரசு சிறப்புச் சட்டத்தைக் கொண்டு வரவுள்ளது. இது வரவேற்கத்தக்கதாகும்.

இதற்காக, கர்நாடக அரசு “கர்நாடாக திருமணத் தேர்வு சுதந்திரம் மற்றும் கெளரவத்தின் பெயரிலான குற்றங்கள் தடுப்பு மசோதா 2025” (Karnataka Freedom of Choice in Marriage and Prevention and Prohibition of Crimes in the Name of Honour and Tradition Bill, 2026) என்ற வரைவைத் தயார் செய்துள்ளது. நடப்பு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே கர்நாடகாவில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட இணையர்கள் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அண்மையில், கடந்த டிசம்பர் 21, 2025 அன்று தாரவாடு மாவட்டத்தில் (Dharwad) மான்யா என்கிற 20 வயது லிங்காயத் சமூகப் பெண், பட்டியலின இளைஞரைத் திருமணம் செய்து கொண்டதற்காக கர்ப்பிணி என்றும் பாராமல் அவரது தந்தையாலேயே படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முற்போக்கு அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இச்சம்பவங்களைத் தடுக்கும் வகையில் சிறப்புச் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினர்.

இச்சம்பத்திற்குப் பிறகு பேசிய முதல்வர் சித்தராமையா, “எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதற்கும், சட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், ஒரு சிறப்புச் சட்டம் கொண்டுவரப்படும். இந்த விசயம் சட்டமன்றத்தின் வரவிருக்கும் கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்டு, பொருத்தமான முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இதற்கான வரைவு மசோதாவைத் தயாரித்து தற்போது வெளியிட்டுள்ளது காங்கிரசு அரசு.

இந்த மசோதா 12-ஆம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதி பசவண்ணாவின் “இவ நம்மவ இவ நம்மவ” (இவர் நம்மவர்) என்ற தத்துவத்தின் பெயராலும் அழைக்கப்படுகிறது. சாதிப் பாகுபாடற்ற, அனைவரும் சமம் என்கிற பசவண்ணாவின் விழுமியங்களை உயர்த்திப் பிடிக்கும் வகையில் இச்சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போதைய பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டங்கள், “சாதி கெளரவம்” என்கிற பெயரில் நடக்கும் வன்கொடுமைகளை முழுமையாகத் தடுக்கவில்லை என்று இம்மசோதா குறிப்பிடுவதோடு சாதியப் படிநிலையை ஒழிப்பதற்கான ஒரு வழிமுறையாக சாதி மறுப்பு திருமணங்களை ஆதரித்த பசவண்ணா மற்றும் அம்பேத்கர் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளின் தொலைநோக்குப் பார்வையையும் சிதைக்கின்றன என்கிறது.


படிக்க: ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான… பண்பாட்டுப் போர் || நூல்


இந்த வரைவு மசோதா, பி.என்.எஸ் (BNS)-இன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட தண்டனைகளுடன் கூடுதலாக, ஆணவப் படுகொலைக்கு குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையைப் பரிந்துரைக்கிறது; கொடுங்காயத்திற்கு பத்து ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை மற்றும் ரூ. 3 லட்சம் வரை அபராதம்; சாதாரண காயத்திற்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ. 2 லட்சம் வரை அபராதம்; மேலும் பிற ‘கௌரவக் குற்றங்கள்’ அல்லது தனிநபர்கள் தங்கள் உரிமைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் செயல்களுக்கு இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்க பரிந்துரைக்கிறது.

குற்றவியல் மிரட்டலுக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும், இது தீவிரமான மிரட்டல்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம், மேலும் ரூ. 2 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

திருமணம் செய்வதாகப் பொய்யான வாக்குறுதி அளித்து பாலியல் உறவு கொள்வதை இந்த மசோதா ஒரு தனி மற்றும் கடுமையான குற்றமாக அறிமுகப்படுத்துகிறது. சாதிக் காரணங்களுக்காகத் திருமண உறுதிமொழி திரும்பப் பெறப்பட்டால், அந்தப் பாலியல் உறவிற்கான ஒப்புதல் (Consent) வஞ்சகமாகப் பெறப்பட்டதாகக் கருதப்படும். இதற்குக் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும், இது ஆயுள் தண்டனை வரை நீட்டிக்கப்படலாம்; அத்துடன் அபராதமும் விதிக்கப்படும்.

இந்த மசோதாவின் கீழ் உள்ள அனைத்துக் குற்றங்களும் போலீசு வாரண்ட் இன்றி கைது செய்யக்கூடிய (Cognisable) மற்றும் பிணையில் வெளிவர முடியாத (Non-bailable) குற்றங்களாகும்.

“வயது வந்த இருவர் திருமணம் செய்ய முடிவெடுத்தால், அதற்குப் பெற்றோர் அல்லது சாதி அமைப்புகளின் அனுமதி தேவையில்லை” என்று இந்த மசோதா திட்டவட்டமாகக் கூறுகிறது.

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இணையர்களுக்கு அரசு சார்பில் பாதுகாப்பான தங்குமிடங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் போலீசு அதிகாரிகளைக் கொண்ட “இவ நம்மவ வேதிகே” என்கிற அமைப்பு உருவாக்கப்படும். இது அத்தகைய இணையர்களுக்கு ஆலோசனைகளையும் பாதுகாப்பையும் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரசு கொண்டுவந்துள்ள இந்த ஆணவப் படுகொலை தடுப்பு மசோதா வரவேற்கத்தக்கது என்றாலும், ஆணவப் படுகொலைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று விரும்பினால் இச்சட்டத்தில் முக்கியமான, குறிப்பான பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டியுள்ளது.

ஆணவப் படுகொலைகள் என்பது வளர்ந்துவரும், மாறிவரும் இச்சமூகத்திற்கு எதிராக, ஜனநாயக, சமத்துவ சமூக நீதிக்கு எதிரான, தோற்றுப்போன, ஆதிக்கச் சாதி சங்கங்கள், கட்சிகள், சங்கப் பரிவார அமைப்புகள் போன்ற பிற்போக்கு சக்திகளின் கோழைத்தனத்தின் வெளிப்பாடுகளாகும். இந்தியாவில் நடக்கும் சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடியினர், பெண்கள் மீதான தாக்குதல்களுக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. போன்ற சங்கப் பரிவாரங்கள், ஆதிக்கச் சாதிவெறி சங்கங்கள் இருக்கின்றன. நடைபெறும் ஆணவப் படுகொலைகளுக்கு பெரும்பாலும் இந்தக் கும்பல் காரணமாக இருக்கிறது. இந்த சங்கப்பரிவாரக் கும்பலைத் தடை செய்வது ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதில் குறிப்பான அம்சமாகும். ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. சங்கப் பரிவார அமைப்புகள், ஆதிக்கச் சாதிவெறி சங்கங்கள் தடை செய்யப்பட வேண்டும். அவற்றின் பெயர்ப் பலகைகள், சமூக ஊடக செயலிகள், பிற பெயர்களில் இயங்கும் அமைப்புகள் போன்ற வடிவங்களில் செயல்படும் அதன் நடவடிக்கைகளும் நிறுவனக் கட்டமைப்புகளும் கலைக்கப்பட வேண்டும், அழிக்கப்பட வேண்டும்.

அதேபோல், ஆணவப் படுகொலைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபடுகின்ற சக்திகளின் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டு அவற்றிலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஆணவப் படுகொலைக்குப் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

வேலைவாய்ப்புக்கும் உத்தரவாதமான வாழ்க்கைக்கும் ஏற்பாடு செய்துத்தரப்பட வேண்டும். சாதி, மதம், தவிர்த்து தங்களை சாதியற்றவர்களாகவும் மதமற்றவர்களாகவும் பதிவு செய்து கொள்வதற்கும் பள்ளி, கல்லூரிகளில் போதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு பதிவு செய்து கொள்பவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

சாதிக் கயிறுகள், சாதி அடிப்படையிலான திருமண ஏற்பாடு நிறுவனங்கள் ஆகியவை தடை செய்யப்பட வேண்டும். சாதி போதிக்கின்ற, சாதி ஆதிக்கத்தை நியாயப்படுத்துகின்ற கலை – இலக்கிய வடிவில் உள்ள இலக்கியங்கள், திரைப்படங்கள் தடை செய்யப்பட வேண்டும்.

இந்த சட்டத்தை முழுமையாக நடைமுறைக்குக் கொண்டுசெல்ல வேண்டுமென்று விரும்பினால், நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் அரசுப் பணிகளில் சேரும்போது அவர்கள் சாதி, மத, இன வெறி நடவடிக்கைகளில் ஈடுபடாதவர்கள் சமூகச் சேவை ஜனநாயக, சமத்துவ உணர்வு கொண்டவர்கள் என்பது உறுதி செய்யப்பட வேண்டும். தற்போது அரசுப் பணியில் இருக்கின்ற அரசு ஊழியர்கள், அரசுத் திட்டங்களை மேற்கொள்கின்ற ஒப்பந்ததாரர்களில், சாதி, மத, இனவெறி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் பின்னணி ஆராயப்பட்டு அவர்கள் செய்துவரும் பணிகளிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

மேற்கூறிய அம்சங்களையும் உள்ளடக்கி இச்சட்டத்தை நிறைவேற்றினால் மட்டுமே ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதை நோக்கி நகர முடியும். ஆனால், பஜ்ரங் தள் அமைப்பைத் தடை செய்வோம் என காங்கிரசு கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்தது. ஆனால், சங்கப் பரிவாரங்களின் பிரச்சாரம், எதிர்ப்பிற்குப் பிறகு பின்வாங்கியது என்பது அதன் உறுதியில்லாத் தன்மையையே வெளிப்படுத்துகிறது.

கர்நாடகாவைப் போல தமிழ்நாட்டிலும் ஆணவப் படுகொலைகள் தீவிரமடைந்து வருகின்றன. ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. சங்கப் பரிவாரக் கும்பலின் முக்கிய இலக்காக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் மத ரீதியாகக் காலூன்ற முடியாத நிலையில் சாதி ரீதியான கலவரத்தைத் தூண்டி அடித்தளத்தைப் பெருக்கிக் கொள்ளலாம் எனத் துடிக்கிறது காவி கும்பல். இதற்கேற்ப, தென்மாவட்டங்களில் இலக்கு வைத்து அங்குள்ள ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களில் ஊடுருவி வேலை செய்து வருகிறது. தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் சாதியத் தாக்குதல்கள், ஆணவப் படுகொலைகள் நமக்கு இதையே உணர்த்துகின்றன. ஆனால், ஆளும் தி.மு.க. அரசோ தேர்தல் அறிக்கையில் அளித்த “ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்றுவோம்” என்கிற வாக்குறுதியை நிறைவேற்றாமல் சந்தர்ப்பவாதமாகச் செயல்பட்டு வருகிறது. தி.மு-கவின் இந்த போக்கு என்பது சங்கப் பரிவாரக் கும்பலுக்கு ஆதரவாகவே முடியும்.


உமர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க