கடந்த 8 ஆண்டுகளாக ஜி.எஸ்.டி. எனும் சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Service Tax) வசூல் முறையின் மூலம் இந்திய நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் இரத்தத்தை ஒட்டச்சுரண்டிக் கொண்டிருந்த மோடி அரசானது, பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி விகிதங்களில் சில திருத்தங்களை மேற்கொண்டிருக்கிறது. இதனை “அடுத்த தலைமுறைக்கான ஜி.எஸ்.டி”, “ஜி.எஸ்.டி. 2.0” என்ற பெயர்களில் ஆரவாரத்துடன் பிரச்சாரம் செய்து வருகிறது.
2017-இல் நள்ளிரவில் ஜி.எஸ்.டி-யை அறிமுகப்படுத்திய மோடிக் கும்பல், “இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு. ஜி.எஸ்.டி. வரி விலைகளை குறைக்கும், ஏற்றுமதியை அதிகரிக்கும், வரி ஏய்ப்பைத் தடுக்கும், வரி முறையை எளிதாக்கும், வருவாயை அதிகரிக்கும், வளர்ச்சியை துரிதப்படுத்தும், வேலைவாய்ப்பை உருவாக்கும்” என்று வாய்ச்சவடால் அடித்தது. தற்போது ஜி.எஸ்.டி. 2.0-வை அறிவிக்கும் போதும் அதே பொய் வாக்குறுதிகளையே மீண்டும் கூறுகிறது. இதிலிருந்தே மோடிக் கும்பலின் பொய் மோசடிகளை புரிந்துகொள்ள முடியும்.
உண்மையில், அமெரிக்க டிரம்ப் அரசின் அடாவடித்தனமான வரிவிதிப்பினால் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை, உள்நாட்டு வணிகத்தை ஊக்குவிப்பதன் மூலம் தற்காலிகமாக நிவர்த்தி செய்வதற்காகவே மோடி அரசு இத்திருத்தங்களை மேற்கொண்டிருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக அந்நிய முதலீடுகள் இந்தியாவை விட்டு வெளியேறி வந்தது; கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய தயங்கிக் கொண்டிருந்தது உள்ளிட்டவை ஏற்கெனவே மோடி அரசிற்கு நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.
மறுபுறம், கார்ப்பரேட்டுகள் உற்பத்தி செய்யும் பொருட்கள் விற்பனையாகாமல் சந்தையில் தேங்கி நிற்கின்றன. சான்றாக, கடந்த 2024-ஆம் ஆண்டில் ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட கார்கள் விற்பனையாகாமல் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே, இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தரப்பிலிருந்தும் வரிகளை குறைக்க வேண்டுமென மோடி அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஜி.எஸ்.டி-யில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று மோடி அரசு திட்டமிட்டு வந்தது.
இந்நிலையில், அமெரிக்க வரிவிதிப்பானது இந்நெருக்கடியை மேலும் தீவிரமாக்கும் விதமாக அமைந்தது. எனவேதான், மோடி அரசு ஜி.எஸ்.டி-யில் திருத்தம் செய்து நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இதனைப் பயன்படுத்திக்கொண்டு, பீகார், மேற்குவங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் மக்களின் வாக்குகளை கவர்வதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது.
ஜி.எஸ்.டி. 2.0: ஓர் அறிமுகம்
டெல்லியில் செப்டம்பர் மூன்றாம் தேதி நடைபெற்ற 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி. 2.0 இந்தியாவில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, ஏற்கெனவே 5, 12, 18, 28 என நான்கு வரி விகிதங்களில் அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி-யானது தற்போது 5, 18, 40 என மூன்று வரி விகிதங்களாக மாற்றப்பட்டுள்ளது. இதன் விளைவாக, 375 பொருட்களின் விலை குறையும் என்று மோடி அரசுத் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொலைக்காட்சி, ஏசி, குளிர்சாதனப் பெட்டி, இரு சக்கர வாகனம், கார் உள்ளிட்ட பொருட்களுக்கான வரி 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகவும், தலைமுடி எண்ணெய், பற்பசை, சோப், ஷாம்பு, ஷேவிங் கிரீம் உள்ளிட்ட பொருட்களுக்கான வரி 18 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகவும், நெய், பன்னீர், நாப்கின், பாத்திரம் உள்ளிட்ட பொருட்களுக்கான வரி 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பொருட்களுக்கான வரிக் குறைக்கப்பட்டுள்ளதை மட்டுமே பிரச்சாரம் செய்யும் மோடி ஆதரவு ஊடகங்கள், சில பொருட்களுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளதை திட்டமிட்டு மறைக்கின்றன. சான்றாக, அச்சிடப்படாத காகிதங்களுக்கான வரி 12 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகவும், ரூ.2,500 மேல் உள்ள ஆடைகளுக்கான வரி 12 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
உழைக்கும் மக்களுக்கு பலனில்லை
ஜி.எஸ்.டி. வரிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் மோடி, சுதந்திர தின உரையில் கூறியதிலிருந்து 28 சதவிகித வரி விதிக்கப்படும் பொருட்களின் (வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடம்பரப் பொருட்கள்) உற்பத்தியில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுக்கு வரிக் குறைப்பு அதிகமாக இருக்கும் என்பதை உணர்ந்திருந்தன. ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வரிக் குறைப்பு பற்றி அறிவிக்கப்பட்டவுடன் பல்வேறு சலுகைகளை அளித்து தேங்கியிருந்த தங்கள் பொருட்களை விற்பனை செய்து வருகின்றன.
இதன்விளைவாக, பொலிரோ, தார், ஸ்கார்பியோ போன்ற கார்களின் விலை ரூ.2.56 லட்சம் வரை குறைந்துள்ளது; யெமகா நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களின் விலை ரூ.7,759 முதல் ரூ.17,581 வரை குறைந்துள்ளது; எல்.ஜி. தொலைக்காட்சிகளின் விலை ரூ.2,500-யிலிருந்து ரூ.85,000 வரை குறைந்துள்ளது என செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
மேலும், இந்தியாவில் சிமெண்ட் விற்பனையில் ஈடுபடும் பாரதி சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட், மருந்து விற்பனையில் ஈடுபடும் “போஹ்ரிங்கர் இங்கெல்ஹெய்ம்” (Boehringer Ingelheim) எனும் ஜெர்மனியைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனம் ஆகியவை தங்களுடைய உற்பத்தி பொருள்களுக்கு வரிக் குறைக்கப்பட்டுள்ளதை வரவேற்றிருக்கின்றன. இத்தகைய நிகழ்வுகளிலிருந்தே ஜி.எஸ்.டி. 2.0 என்பது கார்ப்பரேட்டுகளின் நலனுக்கானது என்பது தெளிவாகிறது.
அதேபோல, தலைமுடி எண்ணெய், சோப்,பாத்திரம், பன்னீர் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள், உணவுப் பொருட்களுக்கு வரிக் குறைக்கப்பட்டாலும் அதன் பலன் மக்களுக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறியே ஆகும்.
ஏனென்றால், கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் அதிகபட்ச விற்பனை விலையின் (MRP) அடிப்படையிலேயே விற்பனை செய்யப்படுகின்றன. அதிகபட்ச விற்பனை விலை என்பது பொருட்களின் அடிப்படை விலை மற்றும் ஜி.எஸ்.டி-யின் கூட்டுத்தொகையாகும். எனவே, ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டால் பொருட்களின் அதிகபட்ச விற்பனை விலை குறைய வேண்டும்.
ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஜி.எஸ்.டி. வரிக் குறைப்புக்கு ஏற்ப பொருட்களின் அடிப்படை விலையை உயர்த்தி அதிகபட்ச விற்பனை விலையை குறையாமல் வைத்துக் கொள்கின்றனர். மேலும், ஜி.எஸ்.டி. வரிக் குறைப்பிற்கேற்ப பொருட்களின் எடையை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளின் மூலம் ஜி.எஸ்.டி. வரிக் குறைப்பின் சிறு பலன்களையும் கார்ப்பரேட் நிறுவனங்களே அபகரித்துக் கொள்வதற்கான வாய்ப்புகளே உள்ளன.
திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி-யினால் கார்கள், இரு சக்கர வாகங்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதை கார்ப்பரேட் நிறுவனங்கள் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், பற்பசை, தலைமுடி எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் விலை குறைப்பை பற்றி பெரியளவில் செய்திகள் வெளிவராமல் இருப்பதும் அதனை உறுதிப்படுத்துகின்றன.
தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவினும் நெய், பன்னீர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கான அடிப்படை விலையை உயர்த்தி பொருட்களின் விலையைக் குறைக்க மறுத்திருக்கிறது. தற்போது, விழாக்கால சலுகை என்ற பெயரில் விலையை குறைத்திருந்தாலும் நவம்பர் 31-க்குப் பிறகு அதுவும் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படும்.
மேலும், வரிக் குறைக்கப்பட்டுள்ள ஒரு சில பொருட்களும் கார்ப்பரேட் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பிராண்டட் (Branded) பொருட்களாக இருப்பதால், பிராண்டட் அல்லாத பொருட்களையே பிரதானமாக பயன்படுத்தும் கிராமப்புற மக்கள் வரிக் குறைப்பால் பலனடைய வாய்ப்பில்லை. இவ்வாறாக, நாட்டின் மக்கள்தொகையில் 65 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோரான கிராமப்புற மக்கள், மோடி அரசு சொல்லும் வரிக் குறைப்பு பலனிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.
மேலும், ஜி.எஸ்.டி. 2.0-வில் கடைகளில் விற்பனை செய்யப்படும் சப்பாத்திக்கு வரி இல்லை என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் சப்பாத்தி மாவிற்கு வரி நீக்கப்படவில்லை, 5 சதவிகித வரி நீடிக்கவே செய்கிறது. அரிசி, பால் பவுடர் போன்ற பல அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. நீக்கப்படவில்லை.
அதாவது, நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் தங்களின் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குக் கூட வரி விதித்து அம்மக்களை ஒட்டச்சுரண்ட வேண்டும் என்ற பாசிச மோடி அரசின் கொள்கை, ஜி.எஸ்.டி. 2.0-விலும் தொடர்கிறது என்பதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
அதேபோல, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தும் ஏடு, புத்தகங்களுக்கான வரியை குறைத்துள்ளதாக மோடி அரசு பிரச்சாரம் செய்கிறது. ஆனால், அவற்றை தயாரிப்பதற்கு மூலப்பொருளாக பயன்படுத்தப்படும் அச்சிடப்படாத காகிதங்களுக்கான ஜி.எஸ்.டி-யை 12 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக அதிகரித்திருப்பதன் மூலம் அதனை ஈடுகட்டும் நடவடிக்கையிலும் மோடி அரசு ஈடுபட்டுள்ளது.
ஆகவே, மோடி அரசின் ஜி.எஸ்.டி. 2.0-வினால் நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் எந்த ஆதாயமும் அடையப் போவதில்லை. அம்மக்கள் மீதான வரிச் சுரண்டல் வழக்கம் போலத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
எதிர்க்கட்சி மாநிலங்களின்
வரி வருவாய்க்கு வேட்டு!
திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி-யினால் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் எட்டு மாநிலங்கள் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூட்டாக அறிவித்திருக்கின்றன. குறிப்பாக, தமிழ்நாடு அரசுக்கு ரூ.6,000 கோடி வரையிலும், கேரள அரசுக்கு ரூ.10,000 கோடி வரையிலும் வருவாய் இழப்பு ஏற்படும் என்று அந்தந்த மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.
அதாவது, கடந்த எட்டு ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி-யினால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் அனுபவித்துவரும் நிதிப் பற்றாக்குறையை ஜி.எஸ்.டி. 2.0-வானது மேலும் அதிகரித்திருக்கிறது. மோடி அரசும் தன்னுடைய நெருக்கடியை தற்காலிகமாக நிவர்த்தி செய்வதற்காக, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் வரி வருவாயில் கை வைத்திருக்கிறது.
ஜி.எஸ்.டி. 2.0-வினால் நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களின் வரி வருவாயும் பாதிக்கப்படும் என்றாலும், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை மோடி அரசு ஈடு செய்துவிடும்.
ஏற்கெனவே, ஜி.எஸ்.டி. வரி பங்கீடு என்பது வரி வசூல் அதிகமாக உள்ள எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு குறைவான தொகையையும், வரி வசூல் குறைவாக உள்ள பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு அதிகமான தொகையையும் வழங்குவது என்ற பாசிச முறையிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல், ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் பல திட்டங்களை பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கே அறிவித்து அதிகப்படியான பணத்தை வாரி இறைக்கிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரணத் தொகையைக் கூட வழங்காமல் வஞ்சித்து வருகிறது.
இந்நிலையில், ஜி.எஸ்.டி. 2.0-வினால் ஏற்படும் வருவாய் இழப்புகளை ஈடுகட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மோடி அரசிடம் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கின்றன. 2024-25 நிதியாண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு ஐந்து ஆண்டுகளுக்கு வருவாய் இழப்பு வழங்குதல், 40 சதவிகித வரி விதிக்கப்பட்ட பொருட்களின் மீது விதிக்கப்படும் கூடுதல் வரிகளை மாநிலங்களுக்கு முழுமையாக வழங்குதல் ஆகிய இரண்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
ஆனால், இக்கோரிக்கைகள் குறித்து 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை சரி செய்வது குறித்தும் எந்த அறிவிப்புகளும் வெளியிடவில்லை.
“தீபாவளி பரிசு, வருவாய் இழப்பு”
மோடி கும்பலின் பொய் பித்தலாட்டங்கள்
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் கடந்த எட்டு ஆண்டுகளாக உழைக்கும் மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். சிறு, குறு வணிகர்கள் முற்றிலும் நொடிந்துபோய் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகினர். பலர் ‘தற்கொலை’ செய்துக் கொண்டுள்ளனர். ஜி.எஸ்.டி-க்கு எதிராக மக்களின் போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் வளர்ந்துள்ளன.
இத்தகைய பொருளாதார பயங்கரவாதத் தாக்குதலை நாட்டு மக்கள் மீது தொடுத்த மோடிக் கும்பல் இன்று ஜி.எஸ்.டி. திருத்தம் மூலம் மக்களுக்கு ‘தீபாவளி பரிசு’ அளிக்கிறோம் என்று கூறுவது எவ்வளவு வக்கிரமானது?
அதேபோல், திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி-யினால் ஆண்டிற்கு ரூ.2 லட்சம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்று மோடி அரசு பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால், ஆண்டிற்கு ரூ.48,000 கோடி மட்டுமே வருவாய் இழப்பு ஏற்படும் என்பதை ஒன்றிய அரசின் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தன்னுடைய ஆராய்ச்சி அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் மோடி அரசின் பொய்ப் பிரச்சாரம் அம்பலப்பட்டுள்ளது.
மேலும், 2024-2025-ஆம் ஆண்டிற்கான ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.22.08 லட்சம் கோடியுடன் ஒப்பிடும் போது மோடி அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு மிகவும் சொற்பமானது. ஆனால், இந்த வருவாய் இழப்பைக் கூட மோடி அரசு எவ்வாறு ஈடு செய்யும்? கார்ப்பரேட் மற்றும் மேட்டுக்குடி வர்க்கத்தினருக்கான நேரடி வரிகளை மோடி அரசு நிச்சயம் அதிகரிக்காது.
மாறாக, கல்வி, சுகாதாரம், நலத்திட்டங்களுக்கான நிதியை வெட்டிச் சுருக்குவதன் மூலம் இதனை ஈடுகட்ட பார்க்கும். ஏற்கெனவே, நிதிநிலை அறிக்கையில் கல்வி, சுகாதாரம் மற்றும் நலத்திட்டங்கள் ஆகியவற்றின் பங்கு 16.2 சதவிகிதத்திலிருந்து (2021–2022) 14.2 சதவிகிதமாக (2025–2026) குறைந்துள்ளது. இந்த நிதி மேலும் வெட்டிச் சுருக்கப்பட்டால் நெருக்கடி இன்னும் தீவிரமாகும்.
ஜி.எஸ்.டி. 2.0: இந்தியப் பொருளாதாரத்தை
நெருக்கடியிலிருந்து மீட்குமா?
திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி-யினால் உள்நாட்டில் பொருட்களின் விற்பனை அதிகரித்து அமெரிக்க வரி விதிப்பினால் ஏற்பட்ட நெருக்கடி தணிந்துவிடப் போவதில்லை என்பது தெரிந்திருந்தும் மோடி அரசானது மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
ஏனென்றால், கார், இரு சக்கர வாகனம், தொலைக்காட்சி உள்ளிட்ட பொருட்களை பண்டிகை நாட்களில் வாங்கும் பழக்கம் இந்திய மக்களிடையே உள்ளது. அனைத்து ஆண்டுகளிலும் இப்பொருட்கள் பண்டிகைக் காலங்களில் குறிப்பிட்ட அளவு விற்பனையாகின்றன. இந்த ஆண்டு, திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி-யினால் இப்பொருட்களின் விற்பனை கடந்த ஆண்டை விட சிறிதளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. நவம்பருக்குப் பிறகு அதுவும் குறைந்துவிடும்.
மேலும், மோடி அரசின் பாசிச பொருளாதாரக் கொள்கையால் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினரின் வாங்கும் சக்தியும் படிப்படியாக குறைந்துகொண்டே செல்கிறது. வேலையின்மை தலைவிரித்தாடுகிறது. அரசின் சலுகைகளும் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினரை குறிவைத்து வழங்கப்படுவதால் பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டே இருக்கிறது.
அதேபோல, இந்தியப் பொருளாதாரம் அதன் இயல்பிலேயே உள்நாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து, உற்பத்தி மிகுதியை ஏற்றுமதி செய்யும் சுயசார்பு பொருளாதாரமாக கட்டியமைக்கப் படவில்லை. மாறாக, அம்பானி, அதானி உள்ளிட்ட இந்திய கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட அந்நிய கார்பப்ரேட் முதலாளிகளின் நலனிலிருந்தே கட்டியமைக்கப்பட்டுள்ளது.
ஆத்ம நிர்பார் பாரத் (சுயசார்பு இந்தியா) என்று மோடி அரசு பிரச்சாரம் செய்தாலும் அனைத்துத் துறைகளிலும் அம்பானி, அதானிகளின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது; அதில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலைமைகள் இந்தியப் பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தவே செய்யும்.
மாற்று வரி வசூல் முறையே தீர்வு!
இந்தியாவில் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டது என்பது நாட்டின் பெரும்பான்மை மக்களை வரிப் போட்டு ஒட்டச்சுரண்டி அப்பணத்தை அம்பானி-அதானி வகையறா கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரியிறைக்க வேண்டும் என்ற நோக்கத்திலிருந்தே ஆகும். அதாவது, மக்களின் மீதான மறைமுக வரி அதிகரிப்பு; கார்ப்பரேட் முதலாளிகள் மீதான நேரடி வரிக் குறைப்பு என்ற மறுகாலனியாக்கக் கொள்கையின் தொடர்ச்சியே ஆகும்.
அதன் அடிப்படையில்தான், 2018-19-ஆம் ஆண்டில் ரூ.11.22 லட்சம் கோடியாக இருந்த ஜி.எஸ்.டி. வசூலை நாட்டு மக்களை ஒட்டச்சுரண்டி 2024-25 நிதியாண்டில் ரூ.22.08 லட்சம் கோடியாக மோடி அரசு அதிகரித்திருக்கிறது. மறுபுறம், 2023-24-ஆம் ஆண்டில் மட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட வரி சலுகைகளால் ரூ.99,000 கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஒன்றிய அரசே தெரிவித்திருக்கிறது.
தற்போது, ஜி.எஸ்.டி-யின் வரி விகிதங்களில் திருத்தங்களை மேற்கொண்டிருந்தாலும் பாசிச கும்பலின் இந்துராஷ்டிரக் கொள்ளை தொடரவே போகிறது.
மேலும், ஜி.எஸ்.டி. என்பது பல்வேறு தேசிய இனங்களின் பொருளாதாரத்தை சிதைத்து குஜராத்தி – மார்வாரி – பார்ப்பன – பனியா வகையறா கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை என்ற பாசிச பொருளாதாரக் கொள்கை. மாநிலங்களின் வரி வசூலிக்கும் அதிகாரங்களை பறித்து, மாநிலங்களை இந்துராஷ்டிரத்திற்கு கப்பம் கட்டும் காலனிகளாக மாற்ற வேண்டும் என்பதே பாசிச கும்பலின் நோக்கம். ஜி.எஸ்.டி. 2.0 அந்த நோக்கத்திலிருந்து துளியும் விலகாமல் உள்ளது.
இத்தகைய கொடிய, பாசிச தன்மைகளைக் கொண்ட ஜி.எஸ்.டி. 2.0-வை எதிர்த்துக் குரல் எழுப்ப வேண்டிய எதிர்க்கட்சிகளோ அதனை வரவேற்றுக் கொண்டிருக்கின்றன. “நாங்கள்தான் ஜி.எஸ்.டி-யை மாற்றக் கூறினோம்” என்று பா.ஜ.க. அரசுடன் போட்டி போடுகின்றன. மாநில உரிமைகளை ஒழித்துக்கட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி-யை இரத்துச் செய் என்று வலியுறுத்துவதற்கு பதிலாக மோடி கும்பலிடம் கோரிக்கை வைத்து கொண்டிருக்கின்றன.
ஜி.எஸ்.டி. என்பது மூன்று குற்றவியல் சட்டங்கள், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர மறு ஆய்வு, தொகுதி மறுவரையறை போன்று இந்துராஷ்டிர அடிக்கட்டுமானங்களில் ஒன்றாகும். இதன் மூலம் நாட்டின் வரி வசூலிக்கும் கட்டமைப்பையே மோடி அரசானது இந்துராஷ்டிரத்திற்கேற்ப, அம்பானி-அதானிகளின் பொருளாதார ஆதிக்கத்தை நிறுவுவதற்கேற்ப மறுவார்ப்பு செய்து கொண்டிருக்கிறது.
எனவே, ஜி.எஸ்.டி. வரி வசூல் முறையை முற்றிலுமாக இரத்து செய்து மாற்று வரி வசூல் முறையை நிலைநாட்டுவதன் மூலமே நாட்டின் பெரும்பான்மை மக்கள் மீதான வரிச் சுரண்டலை தடுத்து நிறுத்த முடியும். அதனை அம்பானி-அதானிகளின் பொருளாதார ஆதிக்கத்திற்கு தடை விதிக்கின்ற, அக்கும்பலின் சொத்துகளை பறிமுதல் செய்கின்ற பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு என்ற மாற்று அரசுக் கட்டமைப்பிலேயே நிலைநாட்ட முடியும்.
ஆகவே, ஜி.எஸ்.டி. வரி சுரண்டலால் பாதிக்கப்படுகின்ற சிறு, குறு தொழில் நிறுவனங்கள், வணிகர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினருடன் ஒன்றிணைந்து ஜி.எஸ்.டி-யை இரத்து செய்வதற்கான போராட்டத்தை புரட்சிகர, ஜனநாயக சக்திகள் கட்டியமைக்க வேண்டும். மேலும், அப்போராட்டங்களை மாற்று அரசுக் கட்டமைப்பையும் மாற்று வரி வசூல் முறையையும் நிலைநாட்டும் வகையில் வளர்த்தெடுக்க வேண்டும்.
அமீர்
(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram