நடந்து முடிந்த புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்றத் தேர்தலில், என்.ஆர். காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 18-இல் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி ஆறு தொகுதிகளிலும், த.வெ.க – நே.ம.க கூட்டணி மூன்று தொகுதிகளிலும், சுயேச்சை வேட்பாளர்கள் மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம், என்.ஆர். காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி புதுச்சேரியில் இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க உள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலில், “புதுச்சேரியில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சிப் பொறுப்பேற்றால், அங்கு ‘இரட்டை என்ஜின்’ வளர்ச்சி ஏற்படும்” என்று கூறி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க – ரங்கசாமி கூட்டணி, கடந்த ஐந்தாண்டுகளில் மக்கள் குறித்து எந்தக் கவலையுமின்றி கொள்ளையடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தியது. புதுச்சேரியை “பெஸ்ட் புதுச்சேரியாக” (BEST – Business, Education, Spirituality, Tourism) மாற்றுவோம் எனப் பீற்றிக்கொண்டார்கள். ஆனால், இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் குடிநீர், சுகாதாரம், மருத்துவமனை, கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை வசதிகள் கூட மேம்படுத்தப்படவில்லை. சாலைகள் தரம் குறைந்தும், வடிகால் கால்வாய்கள் தூர்வாரப்படாமலும், காற்று மாசு அதிகரித்தும், குடிப்பதற்குப் பாதுகாப்பான நீர் இன்றியும் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) விதிகளின்படி, குடிநீரின் டி.டி.எஸ் (TDS – Total Dissolved Solids) அளவு 500 பி.பி.எம்-க்கு (ppm) கீழ் இருக்க வேண்டும். ஆனால், புதுச்சேரியில் இது 1,000 முதல் 4,000 பி.பி.எம் வரை உயர்ந்து, நீர் குடிப்பதற்கே தகுதியற்ற நிலையில் உள்ளது. பாதுகாப்பான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் தொடர்ச்சியாகக் கோரிக்கையை முன்வைத்துவரும் போதிலும், அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில்தான், காரைக்கால் கோவில்பத்து பகுதியில் 2023 செப்டம்பரில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதால் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான நிவாரணம் கூட வழங்க மறுத்த ரங்கசாமி அரசு, “சுத்திகரிப்பு நிலையங்களில் மக்கள் குடும்ப அட்டை மூலம் இலவசமாக நீரைப் பெற்றுக்கொள்ளலாம்” எனத் திமிர்த்தனமாகக் கூறித் தனது பொறுப்பைத் தட்டிக்கழித்தது.
இதேபோல், சுமார் 500 கோடி ரூபாய் செலவில் கொண்டு வரப்பட்ட பாதாளச் சாக்கடைத் திட்டம், முறையான சேகரிப்பு மையங்கள் (Sucking points) அமைக்கப்படாமல் அரைகுறையாகச் செயல்படுத்தப்பட்டதால், வீடுகளுக்குள் நச்சுவாயு கசிவு ஏற்படும் அபாயம் நேர்ந்துள்ளது. இதன் விளைவாக, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில், கழிப்பறையிலிருந்து வெளியேறிய நச்சுவாயுவைச் சுவாசித்ததால் ஒரு சிறுமி உட்பட மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தன் மகளின் மரணத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் வீட்டை விட்டு வெளியேறிய அந்தச் சிறுமியின் தந்தை, இன்னும் வீடு திரும்பவில்லை என்பது நெஞ்சைப் பிளக்கும் சோகமாகும். தற்போதும் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் நச்சுவாயுவின் நெடி வீசுவதால், புதுச்சேரி மக்கள் எந்நேரமும் அச்சத்துடன் வசிக்கும் அவலநிலையே நீடிக்கிறது.
மழைக்காலங்களில் புதுச்சேரியின் ரெயின்போ நகர் மற்றும் கிருஷ்ணா நகர் போன்ற பகுதிகளில், மழைநீருடன் சாக்கடை நீர் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்து பெரும் பொருட்சேதத்தை ஏற்படுத்துகிறது. ஒருபுறம் அடிப்படை வசதிகள் இவ்வாறிருக்க, மறுபுறம் மதுக்கடைகள், பார்கள் மற்றும் போதைப்பொருட்களின் விற்பனை கடந்த ஐந்து ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் பெருகியுள்ளது.
மறுபுறம், புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதையும், ரங்கசாமியின் அடிமை ஆட்சியைப் பயன்படுத்திக்கொண்டும், பாசிச பா.ஜ.க கும்பல் தனது பாசிச திட்டங்களைத் தீவிரமாக நிறைவேற்றி வருகிறது. புதுச்சேரியில் தேசியக் கல்விக் கொள்கை (NEP) அப்பட்டமாகத் திணிக்கப்படுகிறது. சி.பி.எஸ்.இ (CBSE) பள்ளிகளில் மூன்றாம் மொழியாக இந்தி அல்லது சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களில் ஏ.பி.வி.பி (ABVP) போன்ற காவி குண்டர் படைகளின் அட்டூழியம் அதிகரிப்பதோடு, கல்வி வளாகங்களின் ஜனநாயகம் வெட்டிச் சுருக்கப்படுகிறது.
சமீபத்தில் கூட புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது அம்பலமானது. குற்றஞ்சாட்டப்பட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தைக் கூட, காவல்துறையை ஏவி மிகக் கொடூரமாக ஒடுக்கியது இந்த அரசு. அதேபோல், ஜிப்மர் (JIPMER) போன்ற ஒன்றிய அரசின் நிறுவனங்களில் இந்தி மொழி திணிக்கப்படுகிறது. மின்சாரத் துறை கார்ப்பரேட்மயமாக்கப்படுவதும் அதற்கு எதிரான மின்சாரத்தொழிலாளர்கள் போராட்டமும் நடந்து வருகின்றன.
ஆனால், இதுபோன்ற முக்கியமான மக்கள் பிரச்சினைகளும் கோரிக்கைகளும் நடந்து முடிந்த புதுச்சேரி தேர்தலில் பேசுபொருளாகவே மாறவில்லை என்பதே அம்மக்களின் அவநிலை. குறிப்பாக, நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வரும் “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்” என்ற கோரிக்கை கூட இத்தேர்தலில் விவாதிக்கப்படவில்லை. புதுச்சேரியை இந்திய ஒன்றிய அரசின் காலனியைப் போலப் பாவிக்கும் போக்கிற்கும், பாசிச கும்பலின் ஆதிக்கத்திற்கும் எதிரான இக்கோரிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
மாறாக, இத்தேர்தலில் ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் இழிந்த கலாச்சாரம் புதுச்சேரியில் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. குறிப்பாக, ‘லாட்டரி கிங்’ என அழைக்கப்படும் சாண்டியாகோ மார்ட்டினின் மகன் ஜோசப் சார்லஸ் மார்ட்டின், டிசம்பர் 2025-இல் ”லட்சிய ஜனநாயகக் கட்சி” என்ற ஒன்றைத் தொடங்கி, தேர்தலுக்கு முன்னதாகவே ஆளும் என்.ஆர். காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் (MLA) ஆகியுள்ளார். இவரும், மதுக்கடை உரிமையாளர்களும், ரியல் எஸ்டேட் முதலாளிகளும் இத்தேர்தலில் வாக்காளர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.10,000 வரை பணத்தை வாரி இறைத்துள்ளனர்.
மொத்தத்தில் புதுச்சேரித் தேர்தல் முடிவுகள் காட்டுவது பணபலம் மற்றும் அதிகார பலத்தின் மூலம் மக்களின் ஜனநாயக உரிமைகள் எவ்வாறெல்லாம் நசுக்கப்படுகின்றன என்பதையே. மக்களின் அடிப்படை வாழ்வாதாரக் கோரிக்கைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் இக்கோரிக்கைகளின் கீழ் மக்களை அணித்திரட்டி பா.ஜ.க கும்பலுக்கு எதிரான போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.
கேரளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த சி.பி.எம். தலைமையிலான “இடது ஜனநாயக முன்னணி” (LDF) நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. பினராயி விஜயனின் ஆட்சியை “நவகேரளம்” என்று வானளாவப் புகழ்ந்த இ.ஜ.மு-யினர், இந்தத் தோல்வியால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
140 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்தில் காங்கிரசு தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) 102 இடங்களிலும் சி.பி.எம். தலைமையிலான இ.ஜ.மு. 35 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆட்சியில் இருந்த 21 அமைச்சர்கள் தோல்வியைத் தழுவினர்.
“1970-களின் பிற்பகுதியில் மூன்று மாநிலங்களில் சி.பி.ஐ., சி.பி.எம்-இன் ஆட்சி” என்கிற நிலைமையில் இருந்து சரிந்து, தற்போது கையில் இருந்த ஒரேயொரு மாநில ஆட்சியும் பறிபோயிருப்பதை, இடதுசாரிக் கட்சிகளின் தேர்தல் அரசியலின் “அந்திமக் காலம்” என்று ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன.
மேற்குவங்கம், திரிபுரா போன்ற மாநிலங்களின் அரசியல் சூழல் கேரளத்தில் இல்லை; நீண்ட காலமாகவே சி.பி.எம். மற்றும் காங்கிரசு தலைமையிலான கூட்டணிகள் அங்கு மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளன; ஆகையால், இ.ஜ.மு-யின் இத்தோல்வி நிரந்தரமானதல்ல, “மீண்டும் வருவோம்” என சி.பி.எம். கட்சியினர் தங்களுக்குத் தாங்களே ஆறுதல் கூறிக் கொள்கின்றனர்.
மேலோட்டமாகப் பார்க்கும் போது இது உண்மையாகத் தெரிந்தாலும், 2014-இல் பாசிச பா.ஜ.க. நாடாளுமன்றத்தில் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு பிந்தைய தற்போதைய அரசியல் சூழலுக்கு இந்த வாதம் பொருந்தாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இன்னொருபுறம், நீண்ட காலம் ஆட்சி செய்த மேற்குவங்கம், திரிபுராவிலேயே ஆட்சியை இழந்த பிறகு மீண்டும் அதைக் கைப்பற்ற முடியாமல் சி.பி.எம். மென்மேலும் பின்னடைந்து வருகிறது. இச்சூழலில், கேரளத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என சி.பி.எம். கூறுவது, தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதாகாதா?
மேலும், சி.பி.எம். கூட்டணியின் தேர்தல் தோல்வி என்பது, முதலாளித்துவக் கட்சிகளின் மோசடி, பா.ஜ.க-வின் சதி போன்றவற்றால் ஏற்பட்டுவிட்டது என்று கூறுகின்றனர்.
அப்படியெனில், கடந்த 10 ஆண்டுகளில் கேரளத்தில் சி.பி.எம். மேற்கொண்ட “நவகேரள” ஆட்சி என்பது என்ன? அது கார்ப்பரேட் திட்டங்கள் அற்ற, மக்கள் நலனை முன்னிறுத்திய ஆட்சியா, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்கப் பரிவாரக் கும்பலின் மதவாதத்தை உறுதியாக எதிர்த்த ஆட்சியா போன்ற கேள்விகளை எழுப்பினால், “இல்லை” என்பதே விடையாகக் கிடைக்கிறது.
சி.பி.எம்-இன் “நவகேரளம்” என்பதே, கார்ப்பரேட் கும்பலின் கொள்ளைக்கான, இந்துத்துவத்துடன் சமரசம் செய்துகொண்ட, பிழைப்புவாதக் கட்சிகளை ஒத்தக் கவர்ச்சிவாத ஆட்சிதான். அதனால்தான், சி.பி.எம்-இன் 10 ஆண்டுகால, நவகேரள ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
மக்களுக்கு எதிரான கார்ப்பரேட் சேவை
2022-2023-ஆம் ஆண்டுக்கான, “காலமுறை தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பின்”படி (PLFS), கேரளத்தில் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பின்மை 42.3 சதவிகிதமாக உள்ளது. இதன் விளைவாக, கேரள பட்டதாரிகள் வேலை தேடி நாட்டின் பிற மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் புலம்பெயர்கின்றனர்.
ஏறக்குறைய 30 இலட்சம் மலையாளிகள், “வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில்” (GCC) நாடுகளில் வசித்து, பணியாற்றி வருகின்றனர். அங்கு உயிருக்கு உத்தரவாதமற்ற, பாதுகாப்பற்ற வேலைச்சூழல், கொடிய உழைப்புச் சுரண்டலின் கீழ் வேலை செய்து வருகின்றனர். இதனால் கேரளத்திலேயே போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது அம்மாநில மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். எனினும், சி.பி.எம். ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் இந்தக் கோரிக்கையில் சிறு முன்னேற்றம் கூட ஏற்படவில்லை. மாறாக, அடக்குமுறைகளை ஏவி, கொஞ்சநஞ்ச வேலைவாய்ப்புகளையும் பறிக்கும் கார்ப்பரேட் திட்டங்களை நிறைவேற்றுவதில்தான் முனைப்பாக இருந்தது.
கேரளத்தில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீன்பிடித் தொழிலைச் சார்ந்துள்ளனர். “வளர்ச்சி” என்ற பெயரில் அதானிக்கான மேற்கொள்ளப்படும் விழிஞ்சம் துறைமுகப் பணிகளையும் அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மீது சி.பி.எம். அரசு ஏவிய அடக்குமுறைகளையும் நாம் அறிவோம். இதுபோன்ற கார்ப்பரேட் கட்டமைப்புத் திட்டங்களால் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை இரப்பரில் 90 சதவிகிதம் கேரள விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்துறை 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளையும் ஐந்து இலட்சம் தொழிலாளர்களையும் சார்ந்துள்ளது. விவசாயிகளிடமிருந்து இயற்கை இரப்பரை கொள்முதல் செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுக்குள் கூட்டாக சேர்ந்து சதிசெய்து இரப்பர் கொள்முதலை நிறுத்தி அதன் விலையை குறைக்கின்றன. இதனால், விவசாயிகள் பெரியளவில் நட்டமடைகின்றனர். பலர் இரப்பர் விவசாயத்தை விட்டே வெளியேறுகின்றனர். இந்த ”நவகேரள” மாடல் ஆட்சி இந்த சுரண்டலைத் தடுக்கவில்லை.
கடந்த செப்டம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் கொல்லத்தில் “இரு கரைகள், ஒரே தொலைநோக்கு” என்ற கருப்பொருளின் கீழ், “நீல அலைகள் கேரளா – ஐரோப்பிய ஒன்றிய மாநாடு” என்று தலைப்பிட்ட நீலப் பொருளாதார மாநாட்டை சி.பி.எம். அரசு நடத்தியது. இதில் 18 ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளும் முதலீட்டாளர்களும் கலந்துகொண்டனர். ரூ.7,288 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. கேரளக் கடற்கரையை கார்ப்பரேட்டுகளுக்குத் திறந்துவிடும் இந்நடவடிக்கை, மோடி அரசின் “சாகர்மாலா” திட்டத்தின் நீட்சியே ஆகும்.
மேலும், மேற்கு தொடர்ச்சி மலைகளைச் சிதைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அதன் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளையும் கார்ப்பரேட்டுகளுக்குத் திறந்துவிடும் பணியில் சி.பி.எம். அரசு ஈடுபட்டது. கேரளத்தில் ஆட்சிக்கு வந்த அடுத்த ஆண்டிலேயே கேரள சிறு கனிமச் சலுகை விதிகள், 2015-யில் திருத்தங்களை மேற்கொண்டது. வெடிபொருட்களை பயன்படுத்தி இயங்கும் கல்குவாரிகளுக்கும் வெடிபொருள் பயன்படுத்தாமல் இயங்கும் கல்குவாரிகளுக்கும் உள்ள வேறுபாட்டை இரத்து செய்தது. குடியிருப்புகள், ஆறுகள், குளங்கள் போன்ற பொது இடங்களிலிருந்து குவாரிகள் இயங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த தூர வரம்பை 100 மீட்டரிலிருந்து 50 மீட்டர் ஆக குறைத்தது. இதன்விளைவாக, மேற்கு தொடர்ச்சி மலைகள் கிராணைட், கருங்கல் குவாரிகளால் சிதைக்கப்படுவது புதிய உச்சத்தை அடைந்தது.
2018-ஆம் ஆண்டில் கேரள வன ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் டி.ஜே.அலெக்ஸ் மற்றும் சஜீவ் மேற்கொண்ட ஆய்வு, கேரளத்தில் மொத்தம் 5,924 குவாரிகள் உள்ளதையும், அவற்றில் 3,332 குவாரிகள் சூழலியல் உணர்திறன்மிக்க மண்டலங்களில் அமைந்திருக்கின்றன என்ற அதிர்ச்சியூட்டும் களநிலவரத்தையும் கண்டறிந்தது. இந்த பத்தாண்டுகளில் சூழலியல் உணர்திறன்மிக்க பகுதிகளில் செயல்படும் குவாரிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும்.
வயநாட்டில் மிகப்பெரும் நிலச்சரிவைச் சந்தித்தப் பின்னரும் இயற்கையை அழிக்கும் மேற்கண்ட திட்டங்களையும் சுற்றுலாப் பொருளாதாரம் என்கிற சீரழிவையும் சி.பி.எம். ஆட்சியானது தீவிரமாக மேற்கொண்டது. எந்தவகையிலும் மக்களுக்கு எதிரான கார்ப்பரேட் கொள்கைகளைக் கைவிடாமல், ஆளும் வர்க்கத்திற்கு தனது விசுவாசத்தைக் காட்டியது.
குறிப்பாக, அதானி துறைமுகத்திற்காகக் கடலுக்குள் 3 கி.மீ. தூரத்திற்கு அலைத் தடுப்பரண்கள் அமைக்கத் தேவையான கற்களும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலிருந்தே வெட்டி எடுக்கப்படுகின்றன. பத்தினம்திட்டா மாவட்டத்தின் களஞ்சூர் மலைத்தொடர்களில் ஐந்து குவாரிகள் அமைத்து, 30 லட்சம் டன் கற்களை வெட்டியெடுக்க அதானி குழுமத்திற்கு 2023-2027 காலக்கட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்குள்ள 18 குவாரிகளால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், மக்களின் எதிர்ப்பைப் புறக்கணித்து அதானிக்கு கார்ப்பரேட் சேவை புரிவதில் சி.பி.எம். அரசு மும்முரமாக செயல்பட்டு வந்தது.
“நவகேரள” ஆட்சியில் தலித்துகள், பெண்கள் மீதான தாக்குதல்கள்
“நவகேரள” ஆட்சி, பெண்களுக்கான உரிமைகளைப் பறிப்பதும் அவர்களுக்கான பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தத் தவறியதுமான ஓர் ஆட்சியாக விளங்கியது.
வரதட்சணைக் கொடுமைகளினால் அதிக எண்ணிக்கையில் பெண் படுகொலைகள் நிகழும் மாநிலங்களில் கேரளமும் ஒன்றாகும். 2016 முதலான ஐந்து ஆண்டுகளில் 66 படுகொலைகளும் 15,143 துன்புறுத்தல் வழக்குகளும் பதிவாகியுள்ளன. ஆனால், உண்மை நிலவரங்கள் இதை விட அதிகமாகவே உள்ளன. இக்கொடுமைகளைக் கட்டுப்படுத்த உதவி எண்களை அறிமுகப்படுத்துவது போன்ற பெயரளவிலான நடவடிக்கைகளுடன் சி.பி.எம். அரசு தனது கடமையை முடித்துக்கொண்டது.
மேலும், 2024-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட “ஹேமா கமிட்டி அறிக்கை”, கேரளத் திரைத்துறையில் பெண் கலைஞர்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகளை அம்பலப்படுத்தியது. இதற்கு திரைத்துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியிலிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பிய போதிலும், குற்றஞ்சாட்டப்பட்ட பாலியல் பொறுக்கிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் சி.பி.எம். அரசு அவர்களைப் பாதுகாத்தது.
குறிப்பாக, தனது கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் முகேஷ் மீது பாலியல் புகார்கள் எழுந்த போதிலும், அவரைப் பதவியிலிருந்தோ அல்லது கட்சியிலிருந்தோ நீக்காமல் காப்பாற்றியது. சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறிக்கொண்டு, வழக்கை இழுத்தடித்துப் பிரச்சினையை நீர்த்துப்போகச் செய்யும் வேலையையே அரசு பார்த்தது. கடந்த ஜூன் 2025-இல் கூட, “உரிய ஆதாரங்கள் இல்லை, பாதிக்கப்பட்டவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை” எனக் கூறி 35 வழக்குகளைக் கைவிட சி.பி.எம். அரசு முடிவு செய்திருப்பதாகச் செய்திகள் வெளியாகின.
சி.பி.எம். அரசின் அதானி சேவை.
அதுமட்டுமின்றி, சி.பி.எம். ஆட்சியில் அரசுத் துறைகளில் கார்ப்பரேட்-காண்ட்ராக்ட்-டிஜிட்டல்மயக் கொள்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டன. சான்றாக, குறைந்தபட்ச தினக்கூலியை ரூ.700 ஆக உயர்த்துதல், பணியை நிரந்தரப்படுத்துதல், ஓய்வூதியத் தொகையாக ரூ.5 இலட்சத்தை ஒரே தவணையில் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆஷா (ASHA) பெண் சுகாதாரப் பணியாளர்கள் 250 நாட்களுக்கும் மேலாகப் போராடினர். ஆனால், அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமல் போராட்டத்தை ஒடுக்குவதிலேயே அரசு குறியாக இருந்தது. “இடதுசாரிகளின் ஆட்சி” என்று கூறிக்கொண்டு, அப்பட்டமான கார்ப்பரேட் ஆட்சியையே கேரள சி.பி.எம். நடந்தி வந்தது.
மறுபுறம், கல்வி நிலையங்களில் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் மீதான சாதியத் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் கூட கண்ணூர் பல் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் நிதின் ராஜ், சாதிவெறி பிடித்த பேராசிரியர்களின் வன்கொடுமைகளைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது கேரளத்தையே உலுக்கியது. இத்தகைய சாதிய வன்கொடுமைகளுக்குக் கல்வி நிலையங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவல் அதிகரிப்பதே முக்கியக் காரணமாகும். அப்படியிருந்த போதிலும், ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலைத் தடுப்பதற்கான எந்தவொரு உரிய நடவடிக்கையையும் சி.பி.எம். அரசு எடுக்கவில்லை.
இந்துத்துவத்துடனான சமரசம் காங்கிரசுக்கே சாதகம்
2024 நாடாளுமன்றத் தேர்தலில் சி.பி.எம். தலைமையிலான இ.ஜ.மு. கேரளத்தில் உள்ள 20 தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. தமது இஸ்லாமிய மற்றும் கிறித்தவ சிறுபான்மை மக்களின் வாக்குகள் காங்கிரசு தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும், ஈழவ மக்களின் வாக்குவங்கி பா.ஜ.க-வை நோக்கியும் நகர்ந்திருந்ததை அப்போதே சி.பி.எம். உணர்ந்திருந்தது.
குறிப்பாக, ஈழவ சமுதாய மக்கள் பாரம்பரியமாகச் சி.பி.எம். கட்சியின் அடித்தளமாக இருந்து வந்துள்ளனர். நிலப்பிரபுத்துவம் மற்றும் சாதி ஆதிக்கத்திற்கு எதிரான இடதுசாரிகளின் போராட்டங்களில் அவர்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். சி.பி.எம். தலைவர்களான வி.எஸ்.அச்சுதானந்தன், பினராயி விஜயன் போன்றோரும் இச்சமூகத்தைச் சேர்ந்தவர்களே. ஆனால், சி.பி.எம். அரசின் மக்கள் விரோதத் திட்டங்களாலும் ஆர்.எஸ்.எஸ்-இன் இந்துத்துவ அரசியலாலும் சி.பி.எம். கட்சிக்கு இருந்து வந்த ஈழவ சமுதாய அடித்தளம் சரிந்து வருகிறது.
அடித்தளத்தைச் சீரமைக்க மக்களின் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, இந்துத்துவத்துடன் சமரசம் செய்துகொண்டு சாதி அடையாள அரசியல் மூலம் அம்மக்களைக் கவர இடது முன்னணி முயன்றது.
ஈழவ மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் “எஸ்.என்.டி.பி. யோகம்” (SNDP Yogam) அமைப்பின் பொதுச்செயலாளர் வெள்ளப்பள்ளி நடேசன், ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்; வெளிப்படையாக இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரங்களை முன்னெடுப்பவர். கடந்த ஆண்டு ஏப்ரலில் மலப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், “மலப்புரம் ஒரு தனிநாடு; இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னரும் அங்குள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினரால் சுதந்திரத்தின் பலன்களை அனுபவிக்க இயலவில்லை” என்று வெறுப்பைக் கக்கினார்.
நடேசனின் இத்தகைய வெறுப்புப் பேச்சைக் கண்டிக்க வேண்டிய பினராயி விஜயன், அதற்கு மாறாக ஆலப்புழாவில் நடந்த ஒரு நிகழ்வில், “வெள்ளப்பள்ளி நடேசனை உண்மையாக அறிந்தவர்கள், அவர் எந்தவொரு குறிப்பிட்ட மதத்திற்கும் எதிரானவர் அல்ல என்பதை அறிவார்கள்” என்று அவருக்கு நற்சான்றிதழ் வழங்கினார். மேலும், அவரை ஸ்ரீ நாராயண குருவின் போதனைகளில் வேரூன்றிய ஒரு மதச்சார்பற்ற ஆளுமையாக முன்னிறுத்தினார்.
2015-ஆம் ஆண்டில் இதே நடேசனை இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சிற்காக “கேரளாவின் தொகாடியா” என்று விமர்சித்த பினராயி விஜயன், தற்போது ஈழவ மக்களின் வாக்குகளை கவர்வதற்காக நடேசனை மதச்சார்பற்ற ஆளுமை என்று புகழும் நிலைக்கு இறங்கினார்.
இதன் உச்சமாக, சி.பி.எம். இந்துக்களுக்கு ஆதரவான கட்சி என்ற பிம்பத்தைக் கட்டமைக்க, செப்டம்பர் 20, 2025 அன்று, உலகளாவிய “ஐயப்ப சங்கமம்” என்ற ஐயப்ப பக்தர்களுக்கான ஒரு நாள் மாநாட்டை கேரள அரசு நடத்தியது. பினராயி விஜயன், வெள்ளப்பள்ளி நடேசனுடன் ஒரே காரில் வந்து இம்மாநாட்டில் கலந்துகொண்டதுடன், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுப்பி வைத்த வாழ்த்துக் கடிதம் மாநாட்டில் வாசிக்கப்பட்டதும் பெரும் விமர்சனத்திற்குள்ளானது.
இந்துத்துவத்துடன் சமரசம் செய்துகொள்ளும் சி.பி.எம். கட்சியின் இந்நடவடிக்கைகள் அக்கட்சி எதிர்பார்த்தபடி, ஈழவ, நாயர் போன்ற இந்து மக்களின் வாக்குகளை அதனை நோக்கி திரட்டவில்லை. மாறாக, மிதவாத இந்துத்துவக் கட்சியான காங்கிரசுக்கு ஆதரவாக திரளவே வழிவகுத்தன.
அத்துடன், சி.பி.எம். கட்சியில் உள்ள தலைவர்களே இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரங்களில் ஈடுபடும் போதும், அவற்றிற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுத்து வெறுப்புப் பிரச்சாரங்களை அக்கட்சி கட்டுப்படுத்த தவறியதும் இஸ்லாமிய மக்களின் வாக்குகள் காங்கிரசை நோக்கி அணிதிரண்டதற்கு முக்கிய காரணமாகும். இதன் விளைவாக, டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சி.பி.எம். கட்சி படுதோல்வியடைந்தது.
மேலும், சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் நுழையலாம் என்ற முந்தைய தீர்ப்பை உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு மீண்டும் ஆய்வு செய்யத் தொடங்கிய போது, கேரள அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. அனைத்து வயதுப் பெண்களும் நுழைய வேண்டும் என்ற தனது முந்தைய முற்போக்கு நிலைப்பாட்டைக் கைவிட்டு, கோயிலின் “மரபுகளையும் பழக்க வழக்கங்களையும் பாதுகாப்பதாக” நீதிமன்றத்தில் தெரிவித்தது. உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்குப் பின்னரும், சி.பி.எம். தனது இந்துத்துவச் சமரசக் கொள்கையைக் கைவிடத் தயாராக இல்லை என்பதையே இந்நடவடிக்கை உணர்த்தியது. இத்தகைய போக்குதான் சட்டமன்றத் தேர்தலிலும் அக்கூட்டணியின் வீழ்ச்சிக்கு அடிகோலியது.
கவர்ச்சிவாத அரசியலில் மூழ்கிய “நவகேரளம்” படுபாதாளத்தில் வீழ்ந்தது
சாதி மற்றும் மத அடையாள அரசியலுக்கு அடுத்தபடியாக, மக்களின் வாக்குகளைக் கவர கவர்ச்சிவாதத் திட்டங்களையே சி.பி.எம். பெரிதும் நம்பியது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, 18-35 வயதுடைய வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஓர் ஆண்டிற்கு மாதம் ரூ.1,000 வழங்கும் “கனெக்ட் டு வொர்க்” (Connect to work) திட்டத்தை ஜனவரி 19-ஆம் தேதியிலிருந்து செயல்படுத்தியது.
அதேபோல், 35 முதல் 60 வயது வரை உள்ள வேலைவாய்ப்பற்ற பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் “ஸ்திரீ சுரக்ஷா திட்டம்” (Sthree Suraksha Scheme) பிப்ரவரி 11-ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக, 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு இத்திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்பட்டது.
மேலும், 60 இலட்சத்திற்கும் மேற்பட்ட முதியோர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் தொகை ரூ.1,600-லிருந்து ரூ.2,000-ஆக உயர்த்தப்பட்டது. மீண்டும் வெற்றி பெற்றால் இத்தொகை ரூ.3,000 ஆக அதிகரிக்கப்படும் என சி.பி.எம். தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இருப்பினும், இத்தகைய பணப்பலன் வழங்கும் கவர்ச்சித் திட்டங்கள் மக்கள் மத்தியில் எந்த ஆதரவையும் பெறவில்லை.
மேலும், கடந்த மார்ச் 1-ஆம் தேதி, வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கேரள அரசின் சார்பில் 178 வீடுகள் வழங்கப்பட்டன. இதைத் தேர்தல் ஆதாயத்திற்காக ஒரு சாதனையாகச் சி.பி.எம். அரசு விளம்பரப்படுத்தியது.
வயநாடு நிலச்சரிவு போன்ற பேரிடர்கள் மீண்டும் நிகழாமல் இருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் எடுக்காமல், நிலச்சரிவுகளுக்குக் காரணமான மேற்குத் தொடர்ச்சி மலைகளைக் கல்குவாரிகள் மற்றும் கட்டுமானங்கள் மூலம் சிதைப்பதையே கொள்கையாகக் கொண்டிருந்தது சி.பி.எம். அரசு. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சில வீடுகளை வழங்கிவிட்டு அதையே பெரிய சாதனையாகப் பரப்புரை செய்தது அதன் கவர்ச்சிவாத அரசியலின் அருவருப்பின் உச்சமாகும்.
அதேபோல், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, இந்தியாவில் “தீவிர வறுமை”யை ஒழித்த முதல் மாநிலம் கேரளம் என்று சி.பி.எம். அரசும் அக்கட்சியினரும் விளம்பரப்படுத்திக் கொண்டனர். ஆனால், இவர்களது ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட கார்ப்பரேட் திட்டங்களாலும் இயற்கைப் பேரிடர்களாலும் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதே எதார்த்த நிலை. ஆனால், அதைப் பற்றி கவலையின்றி, எந்தவித கூச்சமுமின்றி தீவிர வறுமையை ஒழித்துவிட்டதாகப் பொய்யுரைத்த மோசடியை, ஆஷா தொழிலாளர்கள் திரைக்கிழித்தனர்.
மொத்தத்தில், சி.பி.எம். கட்சியின் 10 ஆண்டுகால “நவகேரள” ஆட்சியானது கார்ப்பரேட் சேவை, மக்கள் மீதான அடக்குமுறை, வேலைவாய்ப்புப் பறிப்பு, வாழ்வாதாரப் பறிப்பு மற்றும் இந்துத்துவத்துடனான சமரசம் ஆகியவற்றின் கலவையாகவே இருந்தது. இந்த மக்கள் விரோதத் தன்மையே இடது ஜனநாயக முன்னணியின் படுதோல்விக்கு அடிப்படையாக அமைந்தது.
இத்துடன், மக்கள் விரோதத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதால், மக்கள் அடித்தளத்தை உருவாக்கும் முயற்சிகள் காலங்கடந்துவிட்டன; கட்சிக் கட்டமைப்பும் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுவிட்டது. இதனால், பிழைப்புவாதக் கட்சிகளைப் போல, கவர்ச்சித் திட்டங்கள் என்ற சீரழிவு அரசியலை சி.பி.எம். கூட்டணி தேர்வு செய்தது. விளைவு, “நவகேரளம்” எனும் இடதுசாரி போர்வையிலான இந்துத்துவ சமரசம் – கார்ப்பரேட் சேவை – கவர்ச்சிவாத ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்துவிட்டனர்.
***
பெட்டிச் செய்தி:
கேரளத்தில் பாசிச கும்பலின் ஊடுருவல்
பா.ஜ.க. பெற்ற வாக்குச் சதவிகிதத்தில் பெரிய முன்னேற்றம் இல்லையென்றாலும், அடுத்தடுத்த தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று கேரள அரசியலில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பிடித்துள்ளதை எச்சரிக்கையுடன் பார்க்க வேண்டும். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பெற்ற வெற்றி, 2025 உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றியது ஆகியவற்றின் தொடர்ச்சியாக, தற்போதைய சட்டமன்றத் தேர்தலிலும் மூன்று இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.
சாதிய மற்றும் மத முனைவாக்க அரசியல், தேர்தல் ஆணையத்தின் துணையுடன் செய்யப்படும் முறைகேடுகள், குண்டர்களைக் கொண்டு கலவரங்களை அரங்கேற்றுவது போன்ற வன்முறை சார்ந்த அரசியல் வழிமுறைகளையே பா.ஜ.க. முன்னெடுத்து வருகிறது. இத்தகைய முறைகேடுகளால் பெற்ற வெற்றியை நாம் தார்மீக ரீதியாக நிராகரித்தாலும், பாசிச அரசியல் வழிமுறைகள் அங்கு நிலைநாட்டப்பட்டு வருவதையே இந்தத் தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்துகின்றன.
மேலும், இந்த பத்தாண்டுகால சி.பி.எம். ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பலின் அங்கமான அதானிக்காக கேரளத்தில் பல்வேறு கார்ப்பரேட் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாசிச சட்டமான நான்கு தொழிலாளர் சட்டத்தொகுப்பை சி.பி.எம். அரசு ஏற்றுக்கொண்டது. தேசிய கல்வி கொள்கையை பள்ளிக்கல்வித்துறையில் திணிக்கின்ற “பி.எம்.ஸ்ரீ” (PM SHRI) திட்டத்தை ஏற்றுக்கொண்டு, எதிர்ப்பு கிளம்பியதால் நடைமுறைப்படுத்தாமல் நிறுத்தி வைத்தது. ஆர்.எஸ்.எஸ். கும்பல் அம்மாநிலத்தில் வேகமாக வளர்ந்து வருவதைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்த்தது. இவ்வாறு சி.பி.எம். அரசு பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டே, பாசிச சக்திகளுடன் சமரசம் செய்துகொண்டு அதன் சட்டத்திட்டங்களை நிறைவேற்றி மக்களுக்கு துரோகம் இழைத்ததன் விளைவையே இன்று நாம் காண்கிறோம்.
இந்நிலையில், தற்போது கேரளாவில் பதவியேற்க உள்ள காங்கிரசு தலைமையிலான ஆட்சியில் பாசிச சக்திகளின் வளர்ச்சி அதிகரிப்பதற்கான வாய்ப்பே உள்ளது. கேரளாவின் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் இதனை அனுமதிக்கக் கூடாது. ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கில் புரட்சிகர மற்றும் ஜனநாயக சக்திகள் செயல்பட வேண்டியுள்ளது.
மே 4, 2026 அன்று வெளியான தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய நான்கு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் பாசிச எதிர்ப்பு அரசியலில் முக்கியமான பரிசீலினைக்குரிய விடயமாக மாறியிருக்கிறது.
இஸ்லாமிய மக்கள் இனப்படுகொலையின் விளிம்பில் நிறுத்தப்பட்டிருக்கும் அசாமில் பாசிச பா.ஜ.க. மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரசு தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. மேற்குவங்கத்தில் 15 ஆண்டுகால திரிணாமுல் காங்கிரசு ஆட்சியை வீழ்த்தி, வரலாற்றில் முதன்முறையாக பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. கேரளாவில் சி.பி.எம்-இன் பத்தாண்டுகால ஆட்சியை வீழ்த்தி காங்கிரசு தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் 59 ஆண்டுகளாக மாறிமாறி ஆட்சி செய்து வந்த தி.மு.க. மற்றும் அ.தி.மு.க-வை ஓரங்கட்டிவிட்டு, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது.
இந்தத் தேர்தல் முடிவுகளை “வரலாற்றுச் சாதனை” என்றும், “கங்கோத்ரி முதல் கங்கா சாகர் வரை எல்லா இடங்களிலும் தாமரை மலர்ந்துள்ளது” என்றும் பிரதமர் மோடி உச்சிமுகர்கிறார்.
பா.ஜ.க. ஆதரவு கார்ப்பரேட் ஊடகங்களோ, இந்தியா பலமுனை அரசியல் சூழலில் இருந்து மாறி, பா.ஜ.க-வை மையமாகக் கொண்ட தேசிய அரசியல் ஒழுங்கிற்கு மாறிவிட்டது என்றும் அதற்கு மோடியே நிகரற்ற தலைவர் என்றும் கூவி வருகின்றன. குறிப்பாக, மேற்குவங்கத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு மோடி மேஜிக், மோடி அலை போன்றவைதான் காரணம் என்றும் “மாநில அரசியல் வீழ்ந்துவிட்டது, தேசிய அரசியலே வென்றுள்ளது” என்றும் குதூகலித்து வருகின்றன.
எச்.ராஜா போன்ற சங்கிகள் சனாதன தர்மத்தை அழிக்கத் துடித்த தி.மு.க., திரிணாமுல் காங்கிரசு, சி.பி.எம். அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டிருக்கிறது என்று கொக்கரிக்கின்றனர்.
பாசிச கும்பலும் மோடி ஊடகங்களும் இவ்வாறு கொக்கரிப்பதற்கு பின்னாலிருக்கும் சதியை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. மோடி அலை மீண்டும் வந்துவிட்டது; இனி பா.ஜ.க-வை எதிர்ப்பதற்கு யாருமில்லை என்ற பொய் பிம்பத்தை உருவாக்குவதற்கே இக்கும்பல் தீவிரமாக முயன்று வருகிறது.
அதற்காக, இம்முடிவுகள் பா.ஜ.க-விற்கு சாதகமானதல்ல என்று நாம் கூறவில்லை. பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். பாசிச கும்பல் தனது இந்துராஷ்டிரக் கனவை நிறைவேற்றுவதற்கும், 2029-இல் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு இவ்வெற்றிகள் பா.ஜ.க-விற்கு உதவும். ஆனால், மோடி கூறுவது போல் இவ்வெற்றி ஒரு வரலாற்றுச் சாதனையா அல்லது அப்பட்டமான வரலாற்று மோசடியா; மோடி அலை மீண்டும் வந்துவிட்டது என்பது உண்மைதானா என்பது போன்ற கேள்விகளிலிருந்தே நமது பரிசீலனையைத் தொடங்க வேண்டியுள்ளது.
000
அசாம், மேற்குவங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பொய், இந்து மதவெறி – இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரங்கள், தேர்தல் ஆணையம், மத்திய புலனாய்வு அமைப்புகள் உள்ளிட்ட அதிகார வர்க்கத்தின் பலம், குதிரை பேரம், தேர்தல் மோசடி, சங்கப் பரிவாரங்களின் துணையுடனே பா.ஜ.க. கும்பல் இவ்வெற்றியை சாதகமாக்கியுள்ளது. மாறாக, பா.ஜ.க-வை மக்கள் விரும்பி தேர்வு செய்யவில்லை.
மேற்குவங்கத்தில் பா.ஜ.க. பெற்றுள்ள வெற்றி என்பது அப்பட்டமாக திருடப்பட்ட வெற்றி. எஸ்.ஐ.ஆர். எனும் பாசிச நடவடிக்கை மூலம் இலட்சக்கணக்கான இஸ்லாமிய மக்களின் வாக்குரிமையை பறித்து, தேர்தல் ஆணையம், மத்திய புலனாய்வு அமைப்புகள், நீதித்துறை உள்ளிட்ட அதிகார வர்க்கத்தின் துணையுடன், இலட்சக்கணக்கான துணை இராணுவப் படையை குவித்து, மக்கள் போராட்டங்கள் மீது கடுமையான ஒடுக்குமுறையை செலுத்திதான் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.
அதைப்போல், தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க-வையும் அடிமைக் கூட்டமான அ.தி.மு.க-வையும் புறக்கணித்திருக்கிறார்கள். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் நான்கு இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க., இத்தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் பா.ஜ.க. போட்டியிட்ட தொகுதிகளுடன் ஒப்பிடும்போது கடந்த தேர்தலை காட்டிலும் இத்தேர்தலில் பா.ஜ.க-வின் வாக்கு விகிதம் குறைந்துள்ளது. இது தமிழ்நாட்டு மக்களின் பார்ப்பனிய எதிர்ப்புணர்வைக் காட்டுகிறது.
ஆனால், ஆர்.எஸ்.எஸ்-இன் “ஆர்கனைசர்” இதழில், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதிக்காததால்தான் தி.மு.க. வெற்றி பெறவில்லை என்று பாசிச திமிருடன் எழுதியுள்ளது. ஆனால், அதே திருப்பரங்குன்றத்தில் பா.ஜ.க. வேட்பாளர் ஏன் வெற்றிபெறவில்லை என்பது குறித்து வாய்திறக்கவில்லை. உண்மையில், களத்தில் தமிழ்நாட்டின் புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் உறுதியான போராட்டம், மதுரை மக்களின் மதநல்லிணக்க மரபு, தமிழ்நாட்டு மக்களின் பார்ப்பனிய எதிர்ப்புணர்வால் திருப்பரங்குன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் கலவர முயற்சிகள் மண்ணைக் கவ்வின என்பதே எதார்த்தநிலையாகும்.
புதுச்சேரியிலும் பா.ஜ.க சரிவையே சந்தித்திருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் அவர்களின் வாக்கு சதவிதமும் தொகுதிகளின் எண்ணிக்கையும் ஒருசேரக் குறைந்துள்ளன. எனினும், கேரளாவில் இம்முறை மூன்று தொகுதிகளில் பா.ஜ.க. வென்றிருப்பது எச்சரிக்கையுடன் அணுகப்பட வேண்டியதாகும்.
ஒட்டுமொத்தத்தில், தென்னிந்தியா மீண்டும் ஒருமுறை பா.ஜ.க-வை புறக்கணித்துள்ளது; பலத்த அடி கொடுத்துள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
தொடரும் பாசிச கும்பலின் தோல்வி முகம்!
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. சந்தித்த பின்னடைவிலிருந்து அது மீண்டுவிட்டதாக ஆளும் வர்க்க ஊடகங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால், களத்தில் பாசிச கும்பலுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்தே வருகின்றன.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல், மோடியின் அமெரிக்க அடிமைத்தனம் மக்கள் மத்தியில் அம்பலமாகி, மோடி அரசுக்கு எதிரான எதிர்ப்புணர்வு அதிகரித்து வருகிறது. ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேலின் அநீதியான போரால், உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடும் பொருளாதார நெருக்கடியும் தீவிரமடைந்துள்ளன. இந்தியாவிலும் இந்நெருக்கடி கொதிநிலையை எட்டியுள்ளது. நாடு முழுவதும் வணிக மற்றும் வீட்டு உபயோக எரிவாயு உருளைகளின் தட்டுப்பாடு நிலவுவதுடன், சிறு-குறு தொழில்களும் உணவகங்களும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய தீவிரமான நெருக்கடியைத் தீர்க்க வக்கற்றுப் போயிருக்கும் மோடி அரசுக்கு எதிராக மக்களின் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.
டிரம்பின் கட்டளைக்கு அடிபணிந்து மோடி அரசு கையெழுத்திடும் அடிமை ஒப்பந்தங்களுக்கு எதிராக விவசாயிகள் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேபோல், சமீபத்தில் டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது.
பா.ஜ.க. ஆளும் ஒடிசா மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கொலைகார வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக பழங்குடியின மக்கள் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தனர். போராட்டத்தை ஒடுக்குவதற்காக போராடிய பழங்குடியின மக்கள் மீது போலீசு துப்பாக்கிச்சூடு நடத்தியது.
முக்கியமாக, மணிப்பூரில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் இனக்கலவரத்தைக் கட்டவிழ்த்துவிட்டு மூன்றாண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இன்றுவரை அங்கு அமைதி திரும்பவில்லை. மக்கள் போராட்டமும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
இவ்வாறு நாடு முழுவதுமே பாசிச மோடிக் கும்பலுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. மோடியின் வளர்ச்சி நாயகன் பிம்பம், விஸ்வகுரு பிம்பத்தை எல்லாம் நம்பி ஏமாறுவதற்கு மக்கள் தயாராக இல்லை. அதனால்தான் மக்களின் அடித்தளத்தை இழந்துவரும் பாசிச கும்பல் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அதிகார வர்க்கத்தின் துணையுடனும், சங்கப் பரிவாரக் கும்பலுடன் இணைந்து மோசடிகள், பொய் பிரச்சாரங்கள் மூலம் தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்கிறது. தொகுதி மறுவரையறை போன்ற இந்துராஷ்டிர அடிக்கட்டுமானங்களை நிறுவுவதற்கு துடிக்கிறது.
எதார்த்தத்திற்கு முகங்கொடுப்போம்!
ஒருபுறம், பாசிச கும்பல் பொய் மற்றும் மோசடிகள் மூலம் பெற்ற இவ்வெற்றியைப் ஊதிப்பெருக்கிக் காட்டி மக்களை அச்சுறுத்துகிறது. மறுபுறம், பா.ஜ.க. எதிர்ப்பாளர்களும் அறிவுத்துறையினரும் இத்தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், எல்லாம் முடிந்துவிட்டதைப் போன்ற அவநம்பிக்கைக் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இனி இந்தியா கூட்டணியின் நிலை என்னவாகும்? பா.ஜ.க-வை எதிர்ப்பதற்கான முகமாக இருந்தவர்கள் எல்லாம் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்களே எனப் புலம்புகின்றனர். சிலர், தி.மு.க. மற்றும் சி.பி.எம். உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தோற்கடிக்கப்பட்டதற்காக மக்களைத் தூற்றவும் செய்கின்றனர்.
ஆனால், இவர்களுக்குக் களத்தில் பாசிச கும்பலுக்கு எதிராகத் தீவிரமாக மக்கள் போராட்டங்கள் நடந்துவருவது கண்ணுக்குத் தெரிவதில்லை. மக்களுக்குப் பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என்பதுதான் நோக்கம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் போராட்டங்களால் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையைக் கூடப் பெற முடியாமல் பலத்த அடி வாங்கியது. அதன் பிறகு, பா.ஜ.க. மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தாலும், மக்கள் போராட்டங்களுக்குப் பணிந்து பல்வேறு சட்டத்திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் “யூ-டர்ன்” (U-turn) அடித்தது.
ஆனால், இன்றைய நிலை என்ன? 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இதுவரை மொத்தம் 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இவற்றில், ஜம்மு & காஷ்மீர், ஜார்க்கண்ட், கேரளா, தமிழ்நாடு ஆகியவற்றைத் தவிர இதர 11 மாநிலங்களில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே ஆட்சியைக் கைப்பற்றியுள்ளன. இந்த ஒவ்வொரு தேர்தல் குறித்தும் பாசிச எதிர்ப்பு என்ற அடிப்படையில், ஆழமான பரிசீலனைகளை மேற்கொண்டு “புதிய ஜனநாயகம்” இதழ் தொடர்ச்சியாகக் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. இவ்வாறு பரிசீலித்து அதனடிப்படையில் முன்னேறுவது பாசிச எதிர்ப்பு சக்திகளின் கடமையாகும்.
ஆனால், பாசிசத்தை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் எதிர்க்கட்சிகள் இந்தத் தொடர் தோல்விகள் குறித்து மேற்கொண்ட பரிசீலனை என்ன? எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணி ஏறக்குறையச் செயலற்றுக் கிடக்கிறது. இந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதன் நிலை மேலும் மோசமடையும்.
உண்மையில், எதிர்க்கட்சிகளின் மக்கள் விரோதத் தன்மை, சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம், மாற்றுத் திட்டத்தை முன்வைத்துப் போராடத் தயாராக இல்லாதது ஆகியவையே பாசிச கும்பல் வளர்வதற்கு அடித்தளமிடுகின்றன. ஆனால், இது எதையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமல், எதிர்க்கட்சிகள் மீண்டும் மீண்டும் மக்களைப் பாசிசத்திற்குப் பலியிட விழைகின்றனவே தவிர, பாசிசத்தை வீழ்த்துவதை நோக்கிச் சிந்திப்பதில்லை என்பதே எதார்த்த நிலை. அதனால்தான், தேர்தல் கட்டமைப்பிற்கு வெளியே நடக்கும் மக்கள் போராட்டங்கள் இவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக இருப்பதில்லை.
ஆகவே, மக்களின் கோரிக்கைகளிலும் போராட்டங்களிலும் தங்களை நிலைநிறுத்திக்கொண்டு பாசிச கும்பலை நேரடியாக எதிர்ப்பதன் மூலமே பாசிச எதிர்ப்பு சக்திகள் பலமடையும்; பாசிசத்தை வீழ்த்துவதை நோக்கி முன்னேறும்.
புதிய ஜனநாயகம் மே 2026 – 2026 ஐந்து மாநிலத் தேர்தல் சிறப்பிதழ் – மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசகர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.
ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561
தொடர்பு விவரங்கள் : தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
மின்னிதழ் விலை : ரூ.30
G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561
வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444
புதிய ஜனநாயகத்தின் மே 2026 மாத அச்சு இதழ் – 2026 ஐந்து மாநிலத் தேர்தல் சிறப்பிதழ் – வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..
கூனிக் கிடந்த
தொழிலாளி வர்க்கம்
முதுகெலும்பின் கூர்முனையால்,
முதலாளித்துவத்தின் மார்பில்
செங்குருதி கொண்டு செதுக்கிய
மாபெரும் விடுதலை வரலாறு,
இன்னும் முற்றுப் பெறவில்லை!
மே தினத்தை முன்னிட்டு மே 1, 2014 அன்று வினவு தளத்தில் பதிவிடப்பட்ட இப்பதிவைத் தற்போது மீள்பதிவு செய்கிறோம்.
***
குறைந்த வேலை நேரத்துக்காக நடத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக்கை மிகப்பெரிய அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. அமெரிக்காவில் தொழிற்துறை ஒரு அமைப்பாக வளர்ந்த பொழுது இப்போராட்டம் வெளிப்பட்டது.
1856-ல் ஆஸ்திரேலிய தொழிலாளரின் 8 மணி நேரம வேலை கோரிக்கை
இந்நாட்டில் (அமெரிக்காவில்) ஆரம்ப நாட்களில் பல வேலை நிறுத்தங்கள் நிகழ்ந்தன. ‘அதிக ஊதியம் வேண்டும்’ என்பதுதான் இந்த வேலைநிறுத்தங்களில் முக்கிய கோரிக்கையாக எழுப்பப்பட்டது. இருந்த போதிலும் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வகுத்த போதெல்லாம் குறைந்த வேலை நேரம், சங்கம் சேரும் உரிமை போன்ற பிரச்சினைகளை முன்வைத்தனர். தொழிலாளர்கள் வெகுவாக சுரண்டப்பட்ட காலகட்டம் அது. நீண்ட வேலை நேரங்கள் அவர்களை மேலும் துன்பப்படுத்தின. எனவே வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும் என்பது கோரிக்கையாக எழுப்பப்பட்டது.
‘அதிகாலை முதல் அந்திசாயும் வரை’ என்பதுதான் அப்போதெல்லாம் வேலைநாள். இதனால் ஏற்பட்ட மனக்குமுறல்களை அமெரிக்கத் தொழிலாளர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே வெளிக்காட்டினர். பதினாறு, பதினேழு ஏன் பதினெட்டு மணிநேர வேலை என்பதெல்லாம் அப்போது சாதாரண விஷயங்கள், 1806-ம் ஆண்டு பிலடெல்பியா நகரத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்களின் தலைவர்கள் மீது சதி வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது தொழிலாளர்கள் பத்தொன்பது, இருபது மணி நேரங்கள் வேலை வாங்கப்பட்டார்கள் என்ற விஷயம் வெளியே வந்தது.
1820 மற்றும் 30-களில் வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும் என்று பற்பல வேலைநிறுத்தங்கள் நிகழ்ந்தன. பத்து மணி நேர வேலைநாள் என்ற கோரிக்கை பல தொழில் மையங்களில் முன் வைக்கப்பட்டது. பிலடெல்பியா நகர இயந்திரத் தொழிலாளர்களின் சங்கம்தான் உலகின் முதற் தொழிற்சங்கமாக கருதப்படுகிறது. இந்த தொழிற்சங்கம் உருவான இரு ஆண்டுகளுக்குப் பின்புதான் இங்கிலாந்தில் தொழிற்சங்கங்கள் உருவாகத் துவங்கின. பத்து மணி நேர வேலை நாள் என்ற கோரிக்கையை முதன் முதலாக வைத்த பெருமை இச்சங்கத்துக்கே உண்டு. 1827-ல் பிலடெல்பியாவில் கட்டிடங்கட்டும் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தத்தில்தான் இந்தக் கோரிக்கை பிரதானமாக வைக்கப்பட்டது. 1834-ல் நியுயார்க்கில் ரொட்டி தொழிலாளர்கள் எகிப்திய அடிமைகளைக் காட்டிலும் அதிகம் துன்புற்றனர். நாளொன்றுக்கு அவர்கள் பதினெட்டிலிருந்து இருபது மணி நேரம் வேலை செய்ய வேண்டி வந்தது என்ற செய்தியை அப்போது வெளியான ‘தொழிலாளருக்காக வாதிடுபவன்’ (Workingmen’s Advocate) என்ற பத்திரிகை வெளியிட்டது. பத்துமணி நேர வேலை நாளுக்கான இப்போராட்டங்கள் விரைவிலேயே ஒரு இயக்கமாக உருவெடுத்தன். 1837-ல் ஏற்பட்ட நெருக்கடி ஒரு தடையாக இருந்தபோதிலும் வேன் பியுரன் தலைமையிலான அரசாங்கம், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பத்து மணி நேர வேலைநாள் அறிவித்தது. எல்லோருக்கும் பத்து மணி நேர வேலை நாள் என்பதற்காக போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. பல தொழிற்சாலைகளில் இக்கோரிக்கை வெற்றியடைய, உடனேயே தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை நாள் என்ற கோஷத்தை எழுப்பினர்.
தொழிற்சங்க இயக்கத்தின் அதிவேக வளர்ச்சியால் 1850-களில் இக்கோரிக்கை புதிய உத்வேகத்தை அடைந்தது. 1857-ல் ஏற்பட்ட நெருக்கடி இந்த உத்வேகத்திற்கு ஒரு தடையானது. இருந்தபோதிலும் நன்கு வளர்ச்சி பெற்ற தொழிற்சங்கங்கள் அதற்கு முன்பே இக்கோரிக்கையை அடைந்தன. இவ்வாறு குறைந்த வேலை நேரத்துக்கான போராட்டம் அமெரிக்காவில் மட்டும் நிகழவில்லை. முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளர்கள் சுரண்டப்பட்ட எல்லா வளரும் நாடுகளிலும் இப்போராட்டங்கள் நிகழ்ந்தன. உதாரணமாக வெகு தூரத்தில் இருந்த ஆஸ்திரேலியாவில் கட்டிடத் தொழிலாளர்கள் ‘8 மணி நேர வேலை, 8 மணி நேர பொழுதுபோக்கு, 8 மணி நேர ஓய்வு’ என்ற கோரிக்கையை முன் வைத்து 1858-ல் அதை அடைவதில் வெற்றியும் பெற்றனர்.
எட்டு மணி நேர இயக்கம் அமெரிக்காவில் துவங்கியது.
1884-ல் அமெரிக்காவில் 8 மணி நேர இயக்கத்தின் போது வெடித்த போராட்டங்கள்தான் மே தினம் உருவாவதற்கு நேரடியான காரணமாய் அமைந்தன. ஆனாலும் இதற்கு ஒரு தலைமுறை முன்பே ‘தேசிய தொழிற்சங்கம்’ குறைந்த வேலை நேரத்துக்கான கோரிக்கையை முன்வைத்து பரந்த இயக்கத்தையே நடத்தியது. ‘தேசிய தொழிற் சங்கம்’ அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் போர்க்குணமிக்க ஸ்தாபனமாக அப்போது விளங்கியது.
1861-62-ல் உள்நாட்டுப் போர் துவங்கியது. இதற்கு சற்று முன்பே துவங்கப்பட்ட வார்ப்பட அச்சு தொழிலாளர் சங்கம், இயந்திர தொழிலாளர்கள் சங்கம், கொல்லர்கள் சங்கம் போன்ற தேசிய தொழிற்சங்கங்கள் அப்போது மறையத் துவங்கின. ஆனபோதிலும் அதற்கடுத்த சில ஆண்டுகளில் பல உள்ளூர் தேசிய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டிய அவசியமும் எழுச்சியும் உருவானது. இவ்வாறு பல தொழிற்சங்க பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து 1866, ஆகஸ்டு 20-ஆம் நாள் பால்டிமோர் என்னுமிடத்தில் தேசிய தொழிற்சங்கத்தை உருவாக்கினார்கள். இதன் தலைவராக வில்லியம் எச. சில்விஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மாற்றியமைக்கப்பட்ட வார்ப்பட அச்சு தொழிலாளர் சங்கத்தின் தலைவராவார். தொழிற்சங்க இயக்கத்தில் முக்கியமானவராய் கருதப்பட்ட இவர் ஒரு இளைஞர். இவர் லண்டனில் இருந்த முதலாவது இனடர் நேஷனல் தலைவர்களோடு தொடர்பு கொண்டிருந்தார். இதன் காரணமாக தேசிய தொழிற்சங்கத்துக்கும் இன்டர்நேஷனலின் பொதுக்குழுவுக்கும் இடையே உறவை ஏற்படுத்த அவரால் முடிந்தது.
2013-ம் ஆண்டு வங்கதேசத்தில் நடந்த மே தினப் பேரணியில் பெண் தொழிலாளர்கள்
தேசிய தொழிற்சங்கத்தின் முதல் மாநாடு 1866-ல் நடைபெற்றது. அதில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
“அமெரிக்கா முழுமைக்கும் 8 மணி நேர வேலைநாள் என்பதை சட்டமாக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே முதலாளித்துவ அடிமைத்தனத்திலிருந்து இந்நாட்டின் உழைப்பை விடுவிக்க முடியும். இந்த மாபெரும் பலனையடைய நாம் நம்முடைய சக்தி அனைத்தையும் ஒன்று திரட்ட தீர்மானிக்கிறோம்”.
மேலும் இம்மாநாட்டில் 8 மணி நேர வேலை நாளை சட்டபூர்வமாக்க சுயேச்சையான அரசியல் நடவடிக்கை வேண்டும் மற்றும் தொழிலாளர் நலனில் உண்மையான அக்கறை கொண்டவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் போன்ற முடிவுகளும் எடுக்கப்பட்டன. தேசிய தொழிற்சங்க போராட்டங்களினால் எட்டு மணி நேர குழுக்கள் ஏற்பட்டன. மேலும் இச்சங்கத்தின் அரசியல் நடவடிக்கைகளினால் பல மாநில அரசுகள் அரசு வேலைகளில் எட்டு மணி நேர வேலை நாளை அமுல்படுத்தின. 1868-ல் அமெரிக்க காங்கிரசும் இதே போன்ற ஒரு சட்டத்தை இயற்றியது. போஸ்டனைச் சேர்ந்த இயந்திர தொழிலாளியான ‘ஐராஸ் டூவர்டு’ என்பவர்தான் இந்த எட்டு மணி நேர இயக்கத்தின் எழுச்சியூட்டும் தலைவராக விளங்கினார். ஆரம்பத்தில் தொழிலாளர் இயக்கத்தின் கொள்கைகள், திட்டங்கள் பழமையானதாக இருந்தன. இவை எல்லா நேரங்களிலும் சரியாக இருந்தன என்றும் சொல்ல முடியாது. ஆனாலும் அடிப்படியில் இந்த இயக்கம் பாட்டாளி வர்க்கத்தின் வலுவான அடிப்படைகளைக் கொண்டிருந்தது. மேலும் திருத்தல்வாத தலைவர்கள், முதலாளித்துவ அரசியல்வாதிகள் இந்த இயக்கத்தில் ஊடுருவாமல் இருந்திருப்பார்களேயானால் இந்த இயக்கம் போர்க்குணமிக்க தொழிலாளர் இயக்கத்தின் ஆரம்ப கட்டமாக இருந்திருக்கும். இவ்வாறு நான்கு தலைமுறைகளுக்குப் பின் தேசிய தோழிற்சங்கமானது முதலாளித்துவ அடிமைத்தனத்திற்கெதிராகவும் சுயேச்சையான அரசியல் நடவடிக்கைக்காகவும் தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொண்டது.
சில்விஸ் தொடர்ந்து லண்டனிலுள்ள இன்டர்நேஷனலோடு தொடர்பு கொண்டிருந்தார். இவரைத் தலைவராகக் கொண்ட 1967-ல் நடைபெற்ற தேசிய தொழிற்சங்க மாநாடு சர்வதேச தொழிலாளி வர்க்க இயக்கத்தோடு ஒத்துழைக்க வேண்டும் என முடிவு செய்தது. 1869-ல் இன்டர்நேஷனலின் பொதுக்குழுவின் அழைப்பிற்கிணங்க பேஸிலில் நடைபெற்ற இண்டர்நேஷனல் காங்கிரசுக்கு ஒரு பிரதிநிதியை அனுப்ப முடிவு செயதது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மாநாட்டிற்குச் சற்று முன்பு சில்விஸ் மரணமடைந்தார். எனவே சிக்காகோவிலிருந்து வெளிவந்த ‘வொர்க்கிங்மென்ஸ் அட்வகேட்’ பத்திரிகையின் ஆசிரியரான ஏ.சி.காமெரான் பிரதிநிதியாக அனுப்பப்பட்டார்.
மாநாட்டில் பொதுக்குழு அந்த நம்பிக்கையூட்டும் இளம் அமெரிக்க தொழிலாளர் தலைவனுக்கு ஒரு விஷேச தீர்மானத்தில் அஞ்சலி செலுத்தியது. ”பாட்டாளி வர்க்க ராணுவத்தின் தளபதியாக பத்தாண்டு காலம் மாபெரும் திறமையோடு பணியாற்றிய சில்விஸ், எல்லோருடைய கவனமும் திரும்பும் வகையில் செயல்பட்டவர். ஆம் அந்த சில்விஸ்தான் இறந்து விட்டான்” என்றது அஞ்சலி தீர்மானம். சில்விஸின் மறைவு தேசிய தொழிற்சங்கத்தின் அழிவுக்கு ஒரு காரணமாகி பின்னால் அது மறையவும் காரணமாயிற்று.
எட்டு மணி நேர இயக்கம் குறித்து மார்க்ஸ்
1866-ம் ஆண்டு எட்டு மணி நேர வேலை நாள் என்ற முடிவை தேசிய தொழிற்சங்கம் எடுத்தது. அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெனிவாவில் கூடிய இன்டர்நேஷனலின் காங்கிரசும் இதே கோரிக்கையைப் பின்வருமாறு முழங்கியது.
இன்டர்நேஷனல் கூட்டத்தில் மார்க்ஸ்
”வேலை நாளுக்கு சட்டபூர்வமான அளவு முதலாவது தேவையாகும். இது இல்லாமல் தொழிலாளி வர்க்க முன்னேற்றம் மற்றும் விடுதலைக்கு எடுக்கப்படும் எந்த முயற்சியும் முழுமையாக இருக்காது…. வேலை நாளுக்கான சட்டபூர்வ அளவு எட்டு மணி நேரமாக இருக்க வேண்டும் என்று இம்மாநாடு முன் மொழிகிறது.” தேசிய தொழிற்சங்கத்தின் இந்த எட்டுமணி நேர இயக்கத்தைக் குறித்து மார்க்ஸ் 1867-ல் வெளியான மூலதனம் புத்தகத்தில் ‘வேலை நாள் குறித்து’ எனும் தலைப்பின் கீழ் குறிப்பிடுகிறார். கறுப்பு மற்றும் வெள்ளை தொழிலாளர்கள் வர்க்க ஒற்றுமையைப் பற்றிய அந்த புகழ்பெற்ற பத்தியில் பின்வருமாறு எழுதுகிறார். ”அமெரிக்க ஐக்கிய குடியரசின் ஒரு பகுதியை அடிமைத்தனம் பிடித்திருக்கும் வரையில் எந்த விதமான சுயேச்சையான தொழிலாளர் இயக்கமும் முடக்கப்பட்டே இருந்தது. தொழிலாளர்களில் ஒரு பகுதி கறுப்பு இனத்தவர் என்று முத்திரையிடப்பட்டிருக்கும் வரையில் வெள்ளைத் தொழிலாளர்கள் தங்களுக்குத் தாங்களே விடுதலை தேடிக் கொள்ள முடியாது. ஆனால் அடிமைத்தனத்தின் அழிவிலிருந்துதான் புதிய உத்வேகமுள்ள வாழ்க்கை பிறந்தது. உள்நாட்டுப் போரின் முதல் பலனே 8 மணி நேர வேலை நாளுக்கான போராட்டமாகும். இது ஒரு இயக்கமாக அதிவேகத்துடன் அட்லாண்டிக் முதல் பசிபிக் வரையிலும், நியூ இங்கிலாந்து முதல் கலிபோர்னியா வரையிலும் பரவியது.”
இருவார வித்தியாசத்தில் நடைபெற்ற பால்டிமோர் தொழிலாளர் மாநாடும், ஜெனிவா இன்டர்நேஷ்னல் காங்கிரசும் ஒரே சமயத்தில் எட்டு மணி நேர வேலை நாளை முன் மொழிந்தன என்பதை மார்க்ஸ் சுட்டிக் காட்டுகிறார். இவ்வாறு அட்லாண்டிக்கின் இருபுறமும் உற்பத்தி முறை நிலைமையால் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் இயல்பாக ஏற்பட்ட வளர்ச்சி ஒரே விதமான இயக்கத்தை அதாவது எட்டு மணி நேர வேலை நாளுக்கான இயக்கத்தை உருவாக்கியது.
ஜெனிவா காங்கிரஸ் முடிவு எவ்வாறு அமெரிக்க முடிவோடு ஒத்துப் போகிறது என்பதை தீர்மானத்தின் பின்வரும் பகுதி காட்டுகிறது. ”வட அமெரிக்க ஐக்கிய நாட்டு தொழிலாளர்களின் பொதுவான கோரிக்கையாக இந்த அளவு இருப்பதால், இந்த காங்கிரஸ் இந்தக் கோரிக்கையை உலகத்தின் அனைத்து தொழிலாளர்களுக்குமான பொது மேடையில் முன் வைக்கிறது.”
அமெரிக்க தொழிலாளர் இயக்கத்தின் இந்த செல்வாக்கு 23 ஆண்டுகளுக்குப் பிறகு இதே போன்ற காரணங்களுக்காக இன்னும் வேகமாக சர்வதேச காங்கிரசில் செலுத்தப்பட்டது.
அமெரிக்காவில் மே தினம் பிறந்தது
முதல் இன்டர்நேஷனல் 1872-ல் தன் தலைமையகத்தை லண்டனிலிருந்து நியூயார்க்கிற்கு மாற்றியது. அது அப்போது சர்வதேச ஸ்தாபனமாக விளங்கவில்லை. பின் 1876-ல் இது அதிகாரபூர்வமாக கலைக்கப்பட்டது. பின் இது மாற்றியமைக்கப்பட்டு இரண்டாவது இன்டர்நேஷனல் என்று அழைக்கப்பட்டது. இதன் முதல் மாநாடு 1889-ல் பாரிஸில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தான் மே முதல் நாள் என்பது உலகத் தொழிலாளர்கள் தங்கள் அரசியல் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் கீழ் மிக முக்கிய அரசியல் கோரிக்கையாக 8 மணி நேர வேலைநாளுக்கு போர்க்குரல் கொடுக்க வேண்டிய தினம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் 1884, அக்டோபர் 7-ம் நாள் சிக்காகோவில் அமெரிக்க தொழிலாளர் சம்மேளனம் என்ற அமைப்பின் மாநாடு முடிவுக்கு அடிகோலாக விளங்கியது. அம்மாநாட்டில் அமெரிக்கா மற்றும் கனடா தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அவர்கள் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றினர்.
2013-ம் ஆண்டு பெலாருஸில் நடந்த மே தின பேரணி
”1886 மே முதல் நாள் முதல் சட்டபூர்வமான வேலைநாள் என்பது எட்டு மணி நேரம்தான் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு தீர்மானிக்கிறது. எனவே எல்லா தொழிலாளர் அமைப்புகளும் தங்கள் அதிகார வரம்பிற்குரிய இடத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இத்தீர்மானத்திற்கு ஏற்ப தங்கள் சங்க விதிகளை அமைத்துக் கொள்ளுமாறு இம்மாநாடு பரிந்துரைக்கிறது.”
எட்டு மணி நேர வேலை நேரத்தை எப்படி கொண்டு வருவது என்பது பற்றி கூட்டமைப்பு தீர்மானத்தில் ஏதும் சொல்லப்படவில்லை. இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 50,000-க்கு உட்பட்டது. தங்கள் உறுப்பினர்கள் வேலை செய்யும் கடை, ஆலை, சுரங்கங்களில் போராடி இன்னும் அதிகமான தொழிலாளர்களைத் திரட்ட வேண்டும் என்பதை அது அறிந்திருந்தது. அப்போதுதான் எட்டு மணி நேர வேலை நாளை சட்டபூர்வமாக்க வேண்டும் என்பதை அறிவிக்க முடியும் என்பதையும் உணர்ந்திருந்தது. 1886, மே முதல் நாள் 8 மணி நேர வேலைக்காக போராடும் தொழிலாளர்களுக்கு உதவும் பொருட்டே “தீர்மானத்திற்கேற்ப சங்க விதிகள் அமைய வேண்டும்” என அறிவித்திருந்தது. வேலை நிறுத்தத்தின் போது வெகு நாட்கள் வெளியே தங்க நேரிடலாம். அப்போது சங்கத்தின் உதவி தேவைப்படும். மேலும் இவ்வேலை நிறுத்தம் தேசிய அளவில் நடைபெறுவதாலும் இணைக்கப்பட்டுள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் அமைப்புகளும் கலந்து கொள்வதாலும் அவர்கள் விதிப்படி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு தங்கள் உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியமாகிறது. இங்கு ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இந்த கூட்டமைப்பானது தற்போது உள்ள அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பை போலவே சுயேச்சையாக கூட்டமைப்பு முறையில் ஏற்பட்டது. எனவே கூட்டமைப்பில் இணைந்த தொழிற்சங்கங்கள் ஒப்புதல் அளித்தால்தான் தேசிய மாநாட்டின் முடிவுகள் அவைகளைக் கட்டுப்படுத்தும்.
மே தின வேலை நிறுத்தத்திற்கான தயாரிப்புகள்
1877-ல் மிகப் பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் பத்தாயிரக்கணக்கில் சாலை, ரெயில்வே, மற்றும் உருக்குத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அரசாங்கத்தையும் நகராட்சியையும் எதிர்த்து தீவிர போர்க்குணத்தோடு போரிட்டனர். இவர்களுக்கெதிராக ராணுவம் ஏவப்பட்டது. தொழிலாளர்கள் தொடர்ந்து போராடினர். இப்போராட்டம் தொழிலாளர் இயக்கம் முழுமைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் முதல் மாபெரும் தேசிய அளவிலான வெகுஜன இயக்கமாக விளங்கியது. அரசு மற்றும் முதலாளிகளின் கூட்டுச் சதி காரணமாக இவ்வியக்கம் தோற்கடிக்கப்பட்டது.
இப்போராட்டங்களின் விளைவாக அமெரிக்க தொழிலாளி வர்க்கம் தன் வர்க்க நிலைப்பாடு குறித்து மேலும் தெளிவை அடைந்தது. அதன் போர்குணமும் ஒழுக்கநெறியும் மேலும் செழுமையடைந்தன. இப்போராட்டங்கள் பென்சில்வேனியா சுரங்க அதிபர்களுக்கு ஒரு வகையான பதிலடியாக அமைந்தன.
ஏனெனில் இரண்டாண்டுகளுக்கு முன்புதான் 1875-ம் ஆண்டு சுரங்க தொழிலாளர் சங்கங்களை அழிக்கும் பொருட்டு தீவிர போர்க்குணமுள்ள பத்து தொழிலாளர்களை சுரங்க அதிபர்கள் தூக்குமரத்திலேற்றினார்கள்.
அமெரிக்க தொழிற்துறை மற்றும் உள்நாட்டு சந்தை 1880-90-க்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் தீவிர வளர்ச்சியடைந்தது. ஆனபோதிலும் 1884-85-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ஒரு மந்த நிலை நிலவியது. இந்நிலை 1873-ல் ஏற்பட்ட நெருக்கடியின் தொடர்ச்சியாகும். அப்போது வேலையில்லா திண்டாட்டமும் மக்கள் துன்பமும் பெருகியது. இது குறைவான வேலை நாளுக்கான இயக்கத்திற்கு உந்துதல் சக்தியை தந்தது.
கூட்டமைப்பு அப்போதுதான் உருவானது. நைட்ஸ் ஆப் லேபர் என்ற தொழிலாளர் ஸ்தாபனம் அதற்கு முன்பே இருந்தது. அது தொடர்ந்து வளர்ந்து வந்தது. எட்டு மணி நேர வேலை என்ற கோஷத்தின் கீழ் இவ்விரு அமைப்புகளுக்கும் வெளியே உள்ள தொழிலாளர்களை திரட்ட முடியும் என்று கூட்டமைப்பு உணர்ந்தது. 8 மணி நேர வேலை நாள் இயக்கத்துக்கு ஆதரவு தருமாறு ‘நைட்ஸ் ஆப் லேபர்’ ஸ்தாபனத்தை கூட்டமைப்பு கேட்டுக் கொண்டது. அனைத்து தொழிலாளர்களும் பொதுவாக ஒரு நடவடிக்கையில் இறங்கினால்தான் தனக்கு சார்பான பலனை பெற முடியும் என்று கூட்டமைப்பு உண்ரந்திருந்தது.
பால்டிமோரில் மறியல் செய்த தொழிலாளர் மீது கொடூரத் தாக்குதல்
1885-ல் கூட்டமைப்பு மாநாடு அடுத்த ஆண்டு மே முதல் நாள் வேலை நிறுத்தம் செய்வது பற்றி மீண்டும் எடுத்துரைத்தது. பல தேசிய சங்கங்கள் போராட்டத்துக்கான தயாரிப்புகளில் இறங்கின. குறிப்பாக மரவேலை மற்றும் சிகரெட் தொழிலாளர்கள் தயாரிப்புகளில் இறங்கினார். இந்த போராட்டத்தின் காரணமாக அப்போதிருந்த தொழிற்சங்க உறுப்பினர் எண்ணிக்கை வேகமாக வளர்ந்தது. கூட்டமைப்பைக் காட்டிலும் பிரபலமாக விளங்கிய ‘நைட்ஸ் ஆப் லேபரி’ன் உறுப்பினர் எண்ணிக்கை 20 லட்சத்திலிருந்து 70 லட்சத்திற்கு உயர்ந்தது. அதே நேரத்தில் 8 மணி நேர இயக்கத்தையும் அதற்கான நாளையும் நிர்ணயித்த கூட்டமைப்பின் மதிப்பும் உயர்ந்தது. அதன் உறுப்பினர் எண்ணிக்கையும் பெருமளவு உயர்ந்தது. வேலை நிறுத்தத்திற்கான நாள் நெருங்க நெருங்க ‘நைட்ஸ் ஆப் லேபர்’ அமைப்பின் தலைமை, குறிப்பாக, டெரன்ஸ் பெளடர்லி என்பவன் நாச வேலைகளில் இறங்கினான். தன்னுடன் இணைந்துள்ள தொழிற்சங்கங்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டாமென ரகசியமாக அறிவுறுத்தினான். இந்த விஷயம் வெளியானதும் கூட்டமைப்பின் புகழ் மேலும் உயர்ந்தது. இரு ஸ்தாபன ஊழியர்களும் போராட்டத் தயாரிப்புகளில் உற்சாகத்தோடு இறங்கினர். எட்டு மணி நேர வேலை நாள் குழுக்களும் சங்கங்களும் பல நகரங்களில் எழுந்தன. தொழிலாளர் இயக்கம் முழுவதும் போர்க்குணத்தின் தன்மை மேலிட்டது. திரட்டப்படாத தொழிலாளர்களையும் இது பற்றிக் கொண்டது. அமெரிக்க தொழிலாளி வர்க்கத்திற்கு ஒரு புதிய நாள் அப்போது விடிந்து கொண்டிருந்தது.
தொழிலாளர்களின் அப்போதைய மனநிலையை அறிய சிறந்த வழி அவர்களின் போராட்ட அளவையும், ஆழத்தையும் ஆராய்வதே ஆகும். அப்போது நிகழ்ந்த பல வேலை நிறுத்தங்கள் தொழிலாளர்களின் போராட்ட குணத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கின. முந்திய ஆண்டைக் காட்டிலும் 1886 மே முதல் நாளுக்கான வேலை நிறுத்தங்களின் எண்ணிக்கையும் ஏற்கனவே பெருகியது. 1881-84-ல் நிகழ்ந்த வேலை நிறுத்தம் மற்றும் கதவடைப்பின் எண்ணிக்கை 500. வேலை நிறுத்ததில் பங்கு கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 1,50,000. ஆனால் 1885-ல் வேலை நிறுத்தம் மற்றும் கதவடைப்பின் எண்ணிக்கை 700 ஆகவும், பங்கு கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 2,50,000 ஆகவும் உயர்ந்தது. 1886-ல் நடைபெற்றது. கிட்டத்தட்ட 1,572 வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 6 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டார்கள். 1885-ல் 2,467-ஆக இருந்த பாதிக்கப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 1886-ல் 11,562-ஆக உயர்ந்ததிலிருந்து வேலை நிறுத்தங்கள் பரவிய வேகத்தை தெரிந்து கொள்ளலாம். ‘நைட்ஸ் ஆப் லேபர்’ ஸ்தாபனத்தின் நாசவேலை இருந்த போதிலும் 8 மணி நேர வேலை நாளுக்கான போராட்டத்தில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் கலந்து கொண்டார்கள் என கணக்கிடப்படுகிறது.
இவ்வேலை நிறுத்தத்தின் மையமாக விளங்கியது சிக்காகோ நகரமாகும். இங்கு தான் வேலை நிறுத்த இயக்கம் மிகப் பரவலாக பரவி இருந்தது. மேலும் பல நகரங்களில் மே முதல் நாள் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. நியூயார்க், பால்டிமோர், வாஷிங்டன், மில்வாக்கி, சின்சிநாட்டி, செயின்ட் லூயிஸ், பிட்ஸ்பர்க், டிட்ராய்ட் ஆகிய நகரங்களில் வேலை நிறுத்தங்கள் சிறப்பாக நடைபெற்றன. உதிரி மற்றும் பயிற்சி பெறாத தொழிலாளர்களின் எண்ணிக்கை அப்போது அதிக அளவிலிருந்தது. இவர்களும் இப்போராட்டத்தால் கவரப்பட்டது இவ்வியக்கத்தின் சிறப்பம்சமாகும். ஒரு புரட்சிகரமான உணர்வு நாடு முழுவதும் நிலவியிருந்தது. முதலாளித்துவ வரலாற்று ஆசிரியர்கள் இதை சமூகப் போர் என்றார்கள். மூலதனத்தின் மீதான வெறுப்பு என்றார்கள். அப்போது கீழ்மட்ட ஊழியர்களிடையே நிலவியிருந்த அற்புதமான உற்சாகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். மே முதல் தின வேலை நிறுத்தத்தில் பங்கு கொண்ட தொழிலாளர்களில் பாதிப்பேர் வெற்றிகண்டதாக சொல்லப்படுகிறது. மற்ற இடங்களிலும் 8 மணி நேர வேலை நாளை அடைய முடியாவிட்டாலும் ஏற்கனவே இருந்த வேலை நேரத்தில் கணிசமான அளவு குறைக்கப்பட்டது.
சிக்காகோ வேலை நிறுத்தமும் ‘ஹே’ சந்தையும்
சிக்காகோவில் மே முதல் நாள் வேலை நிறுத்தம் மிகத் தீவிரமாக இருந்தது. அப்போது இடதுசாரி தொழிலாளர்கள் இயக்கத்தின் ஒரு மையமாக சிக்காகோ திகழ்ந்தது. தொழிலாளர் இயக்கத்தின் அரசியல் ரீதியான பல்வேறு பிரச்சினைகள் குறித்து போதுமான தெளிவு இல்லாவிட்டாலும் அது ஒரு போராட்ட இயக்கமாக விளங்கியது. தொழிலாளர் வாழ்க்கை மற்றும் வேலை நிலைமைகளை விருத்தி செய்யும் பொருட்டு எந்த நேரத்திலும் தொழிலாளர்களை போராட்டத்தில் இறங்க வைப்பதாயும், அவர்கள் போராட்ட உணர்வைக் கூர்மைப்படுத்துவதாகவும் அவ்வியக்கம் விளங்கியது.
போர்குணமுள்ள தொழிலாளர் குழுக்களால் சிக்காகோவின் வேலை நிறுத்தம் பெருமளவுக்கு பிரகாசித்தது. வேலை நிறுத்ததிற்கு வெகுமுன்பே அதற்கான தயாரிப்புகளைச் செய்ய 8 மணி நேர சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த 8 மணி நேர சங்கம் என்பது கூட்டமைப்பு, ‘நைட்ஸ் ஆப் லேபர்’ சோஷலிஸ்ட் தொழிலாளர் கட்சி (அமெரிக்க தொழிலாளர் வர்க்கத்தின் முதல் அரசியல் சோஷலிஸ்ட் கட்சி) போன்ற ஸ்தாபனங்களில் இணைந்துள்ள தொழிற்சங்கங்களைக் கொண்ட ஒரு ஐக்கிய முன்னணி ஸ்தாபனமாக விளங்கியது. இந்த 8 மணி நேர சங்கத்துக்கு இடதுசாரி தொழிற்சங்கங்களைக் கொண்ட மத்திய தொழிற்சங்கமும் முழு ஆதரவு அளித்தது. மே முதல் தினத்துக்கு முந்திய நாளான ஞாயிற்றுக் கிழமையன்று மத்திய தொழிற் சங்கம் ஏற்பாடு செய்த தொழிலாளர்களைத் திரட்டும் ஆர்ப்பாட்டத்தில் கிட்டத்தட்ட 25,000 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
மே முதல் நாள் சிக்காகோ, நகரத் தொழிலாளர் இயக்க ஸ்தாபனம் அழைப்பு கொடுத்ததின் பேரில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் கருவிகளை கீழே வைத்துவிட்டு தெருவுக்கு இறங்கிய மாபெரும் காட்சியைக் கண்டது. இந்த ஆர்ப்பாட்டம் முன் எப்போதுமில்லாத வகையில் மாபெரும் வர்க்க ஒற்றுமையாக விளங்கியது. எட்டு மணி நேர வேலை நாள் கோரிக்கையின் முக்கியத்துவமும், வேலை நிறுத்தத்தின் பரந்த மற்றும் தீவிரத்தன்மையும் இந்த இயக்கத்திற்கு குறிப்பிடத்தக்க அரசியல் முக்கியத்துவத்தைத் தந்தது. அடுத்த சில நாட்களில் ஏற்பட்ட சில மாற்றங்களால் இந்த முக்கியத்துவம் மேலும் தீவிரமானது. 1886 மே முதல் தினம் உச்சக் கட்டத்தையடைந்த 8 மணி நேர இயக்கமானது, அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட வரலாற்றில் ஒரு மகோன்னத அத்தியாயத்தை உருவாக்கியது.
ஹே மார்க்கெட் சம்பவம் குறித்த ஓவியம்
அதே நேரத்தில் தொழிலாளர்களின் விரோதிகள் வெறுமனே இருக்கவில்லை. முதலாளிகள் மற்றும் அரசின் இணைந்த சக்தி, ஊர்வலம் சென்ற சிக்காகோ தொழிலாளர்களைக் கைது செய்தது. போர்குணமிக்க தலைவர்களை அழித்தொழிப்பதன் மூலம் சிக்காகோ நகரின் தொழிலாளர் இயக்கத்தையே நசுக்கி விடலாம் என கண்டார்கள். மே 3, 4 தேதிகளில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் ‘வைக்கோல் சந்தை (ஹே சந்தை) விவகாரம்’ என்றழைக்கப்படும் நிகழ்ச்சிக்கு வழி வகுத்தன. மே 3-ம் நாள் வேலை நிறுத்தம் செய்த மெக்கார்மிக் ரீப்பர் வொர்க்ஸ் தொழிலாளர்களின் கூட்டத்தில் நிகழ்ந்த போலிஸின் காட்டு மிராண்டித்தனமான அடக்கு முறையை எதிர்த்து மே 4-ஆம் நாள் வைக்கோல் சந்தை சதுக்கம் என்றழைக்கப்படும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த கூட்டம் அமைதியாக நடந்தது. போலீசு மீண்டும் கூடியிருந்த தொழிலாளர் மீது தாக்குதலைத் தொடுக்க ஆரம்பிக்கும் போது கூட்டம் தள்ளிவைக்கப்பட இருந்தது. கூட்டத்தில் எறியப்பட்ட ஒரு குண்டு ராணுவ அதிகாரி ஒருவனைக் கொன்றது. இதன் விளைவாக எழுந்த ஒரு மோதலில் ஏழு போலீஸ்காரர்களும் நான்கு தொழிலாளர்களும் கொல்லப்பட்டனர். வைக்கோல் சந்தை சதுக்கத்தில் ஏற்பட்ட ரத்த ஆறும், போர்க்குணமிக்க சிக்காகோ தொழிலாளர் தலைவர்களை சிறைக்கும், தூக்கு மேடைக்கும் அனுப்பியதும்தான் சிக்காகோ நகர முதலாளிகளின் பதிலாயிருந்தன. நாடெங்கிலுமுள்ள முதலாளிகளுக்கு ஆதரவு தந்தனர்.
1886 ஆண்டின் பிற்பாதி முழுவதும் முதலாளிகளின் திட்டமிட்ட கொடூரத் தாக்குதல் தொடர்ந்தது. இதன் மூலம் வேலை நிறுத்த இயக்கத்தின் போது இழந்த தங்கள் பழைய நிலையை மீண்டும் அடைய அந்த முதலாளிகள் தீர்மானித்தனர்.
சிக்காகோ தொழிலாளர் தலைவர்கள் தூக்கிலிடப்பட்ட ஒரு ஆண்டுக்கு பிறகு 1888-ல் செயின்டி லூயிஸில் கூட்டமைப்பு கூடியது. (தற்போது அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்று அழைக்கப்படுகிறது). அப்போது 8 மணி நேர இயக்கத்திற்கு மீண்டும் புத்துயிர் அளிக்க தீர்மானித்தது. இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு வர்க்க அரசியல் பிரச்சினையை அடிப்படையாக வைத்து, ஒரு மாபெரும் இயக்கத்தை நடத்திய மே முதல் நாளையே மீண்டும் 8 மணி நேர இயக்கத்தை துவக்குவதற்கான நாளாக அறிவித்தார்கள். 1889-ம் ஆண்டு சாமுவேல் கோம்பர்ஸ் தலைமையில் நடந்த அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பின் மாநாடு வேலை நிறுத்த இயக்கத்தை முறைப்படுத்துவதில் வெற்றிகண்டது. வலுவான முறையில் தயாரிப்புகளோடு விளங்கிய மரவேலைத் தொழிலாளர் சங்கம் முதலில் வேலை நிறுத்தத்தில் இறங்குவது என்றும் அது வெற்றி பெற்ற பின் மற்ற சங்கங்கள் இறங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மே தினம் உலக தினமாக மாறியது
சாமுவேல் கோம்பர்ஸ் அவர்கள் தனது சுயசரிதையில் அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு எங்ஙனம் மே தினம் ஒரு உலகத் தொழிலாளர் விடுமுறை தினமாக மாறுவதற்கு வழி செய்தது என்பது குறித்து கூறுகிறார். எட்டு மணி நேர இயக்கத்துக்கான தயாரிப்புகள் தீவிரமாகிக் கொண்டிருந்தன. நாங்கள் தொடர்ந்து எங்கள் நோக்கத்தை பரவலாக்குவது குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தோம். பாரிஸில் சர்வதேச தொழிலாளர் காங்கிரசுக்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்து. இந்த காங்கிரசின் மூலம் உலகளாவிய ஆதரவைப் பெறுவதின் மூலம் எங்கள் இயக்கம் பயனடைய முடியும் என்று நான் நினைத்தேன்.”கோம்பர்ஸ் தனது சந்தர்ப்பவாதத்தையும், சீர்திருத்த வாதத்தையும் ஏற்கனவே வெளிக்காட்டியுள்ளார். பின்னர் அது அவரின் வர்க்க சமரசக் கொள்கையில் முழுமையாக வெளிப்பட்டது. முன்பு தீவிரமாக எதிர்த்து போராடிய சோஷலிஸ்டு தொழிலாளர்களின் ஆதரவை பெறுவதற்கும் அவர் தயாராய் இருந்தார்.
1889-ம் ஆண்டு 14-ம் நாள் பாஸ்டில் வீழ்ச்சியின் நூற்றாண்டு விழா பாரிஸில் நடந்தது. இதற்கான உலகெங்கிலுமிருந்து சோஷலிச இயக்க தலைவர்கள் ஒன்று கூடியிருந்தனர். 25 ஆண்டுகளுக்கு முன் அவர்களின் மாபெரும் ஆசான்களான மார்க்ஸும், எங்கெல்சும் உருவாக்கிய அகிலத்தை போன்ற ஒன்றை உருவாக்கவே அவர்கள் அங்கு கூடினர். பின்னர் அதுவே இரண்டாவது அகிலம் என்று அழைக்கப்பட்டது. அங்கு கூடியிருந்தவர்கள் அமெரிக்க பிரதிநிதிகளிடமிருந்து 8 மணி நேர இயக்கப் போராட்டத்தைப் பற்றியும், சமீபத்தில் அதற்கு புத்துயிர்ப்பு அளிக்கப்பட்டது பற்றியும் தெரிந்து கொண்டார்கள். அதன் விளைவாக பாரிஸ் மாநாடு கீழ்க் கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியது.
1886 மே 4 : ஹே மார்க்கெட் கூட்டத்திற்கான சுவரொட்டி
‘’எல்லா நாடுகளிலும் எல்லா நகரங்களிலுமுள்ள உழைக்கும் மக்கள் 8 மணி நேரத்தை சட்டபூர்வமாக்கக் கோரி அரசாங்கத்திடமும், நிர்வாகத்திடமும் போராட வேண்டும். இதை உலகம் தழுவிய ஆர்ப்பாட்டமாக நடத்தவும், பாரிஸ் மாநாட்டு முடிவுகளை நிறைவேற்றக் கோரியும் இம்மாநாடு தீர்மானிக்கிறது. 1888 டிசம்பரில் செயிண்ட் லூயிஸில் கூடிய அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு இத்தகைய ஆர்ப்பாட்டத்திற்கு 1890 மே முதல் நாளை ஏற்கனவே தேர்ந்தெடுத்து விட்டதால் அதே நாள் சர்வதேச அளவிலான ஆர்ப்பாட்டம் செய்யவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே அந்த குறிப்பிட நாளில் எல்லா நாட்டு தொழிலாளர்களும் அவர்களின் நாட்டு சூழ்நிலைக்கேற்ப இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்று மாநாடு அறிவிக்கிறது.’’
1890-ம் ஆண்டு பல ஐரோப்பிய நாடுகளில் மே தினம் கொண்டாடப்பட்டது. அமெரிக்காவில் மரவேலைத் தொழிலாளர்களும் கட்டிட வேலை தொழிலாளர்களும் சோஷலிஸ்ட்டான பீட்டர் மெக்கியூரி தலைமையில் 8 மணி நேர வேலை நாளுக்காக பொது வேலை நிறுத்தத்தில் இறங்கினர். ஜெர்மனியில் சோஷலிஸ்டுகளுக்கு எதிராக பல விசேஷ சட்டங்கள் இருந்த போதிலும் பல தொழில் நகரங்களில் தொழிலாளர்கள் மே தினத்தை கொண்டாடினார்கள். அதேபோல் மற்ற ஐரோப்பிய தலைநகரங்களிலும் அதிகாரவர்க்கத்தின் எச்சரிக்கையையும் ஒழுங்கு முறையையும் மீறி தொழிலாளர்கள் மே தினத்தை கொண்டாடினர். அமெரிக்காவில் சிக்காகோவிலும், நியூயாக்கிலும் நடந்த ஆர்ப்பாட்டங்கள் குறிப்பிடத்தக்கவையாய் இருந்தது. ஆயிரக்கணக்கானவர் தெருக்களில் 8 மணி நேர கோரிக்கையை வலியுறுத்தி அணிவகுத்தனர். முடிவில் முக்கிய மையங்களில் திறந்த வெளிக் கூட்டங்கள் நடைபெற்றன.
1891-ல் அகிலத்தின் அடுத்த மாநாடு பிரான்ஸில் நடந்தது. மே முதல் நாளின் உண்மையான நோக்கம் 8 மணி நேர வேலை நாள் என்பதை மீண்டும் எடுத்துரைத்தது. பொதுவான வேலை நிலைமைகளை சீர் செய்ய வேண்டும் நாடுகளிடையே அமைதி நிலவ வேண்டும் போன்ற கோரிக்கைகளுக்காகவும் அத்தோடு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றது. மாற்றியமைக்கப்பட்ட தீர்மானம் குறிப்பாக 8 மணி நேர வேலை நாள் மே தின ஆர்ப்பாட்டத்தின் வர்க்கத் தன்மையை வலியுறுத்துவதாக இருந்தது. எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் வேலை நிறுத்தம் நடைபெற வேண்டும் என்று தீர்மானம் சொன்னது. அதே நேரத்தில் மே தின ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தவும் ஸ்தூலப்படுத்தவும் அகிலம் முயற்சி எடுத்தது. பிரிட்டிஷ் தொழிலாளர் தலைமையொ ஜெர்மன் சமூக ஜனநாயகவாதிகளோடு சேர்ந்து கொண்டு, மே முதல் நாள் வேலை நிறுத்தத்தை ஏற்க மறுத்து அதை அடுத்து வரும் ஞாயிற்றுக் கிழமைக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று வாக்களித்தது. இதன் மூலம் அது தன் சந்தர்ப்பவாதத்தை வெளிக்காட்டியது.
உலக மே தினம் குறித்து எங்கெல்ஸ்
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஜெர்மன் நான்காவது பதிப்புக்கு 1890, மே 1 -ம் தேதி எங்கெல்ஸ் முகவுரை எழுதுகிறார். அதில் உலக பாட்டாளி வர்க்க ஸ்தலங்களை விமர்சிக்கும் போது முதலாவது உலக மே தினம் குறித்த முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். ‘’நான் இந்த வரிகளை எழுதிக் கொண்டிருக்கும் இதே நேரத்தில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பாட்டாளி வர்க்கம் தனது பலத்தை ஆய்வு செய்து கொண்டிருக்கிறது. அது முதன் முறையாக ஒரே கொடியின் கீழ் ஒரு படையாக 8 மணி நேர வேலை நாள் சட்டமாக வேண்டும் என்ற ஒரே உடனடியான நோக்கத்திற்காகத் திரண்டிருக்கிறது. நாம் பார்க்கக் கூடிய இந்த அற்புதமான காட்சி உலகெங்கிலுமுள்ள முதலாளிகளையும் நிலப்பிரபுக்களையும் எல்லா நாடுகளிலுமுள்ள பாட்டாளிகளும் இணைந்து விட்டனர் என்ற உண்மையை உணரச் செய்யும். மார்க்ஸ் மட்டும் இந்த காட்சியைப் பார்ப்பதற்கு என்னுடன் இன்று உயிரோடிருந்தால்…’’
தொழிலாளர் பேரணி 1882
உலகம் முழுவதும் இப்போராட்டம் ஒரே சமயத்தில் நிகழ்ந்தது. இது உலகத் தொழிலாளர்களின் புரட்சிகர உணர்வையும் சிந்தனையையும் ஆழமாகத் தொட்டது. பின்னர் ஒவ்வொரு ஆண்டும் மேலும் மேலும் அதிகமான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
1893 அகிலத்தின் மாநாடு ஜுரிச்சில் நடைபெற்றது. அதில் எங்கெல்ஸ் கலந்துக் கொண்டார். அப்போது நிறைவேற்றப்பட்ட மே முதல் நாள் தீர்மானத்தில் சேர்க்கப்பட்ட சேர்க்கை தொழிலாளர்களின் ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.
‘’உழைக்கும் வர்க்கத்தின் பிரதான விருப்பம் சமூக மாற்றத்தின் மூலம் வர்க்கப் பாகுபாடுகளை அழித்தொழிப்பது, மற்றும் உலகம் முழுவதும் எல்லா மக்களுக்கும் அமைதியை ஏற்படுத்துவது ஆகும். மே தின ஆர்ப்பாட்டங்கள் எட்டு மணி நேர வேலைநாளுக்காக மட்டுமல்லாமல் மேற்கூறிய விஷயங்களுக்கும் பயன்பட வேண்டும்’’.
மே தினத்தை போராட்ட தினமாக அனுஷ்டிப்பதற்கு பதிலாக கேளிக்கை மற்றும் ஓய்வு தினமாக மாற்றுவதன் மூலம் பல கட்சிகளின் சீர்திருத்த தலைவர்கள் மே தினத்தின் முக்கியத்துவத்தை சீர்குலைக்க முயற்சித்தார்கள். இதற்காக மே தினத்தை அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை தள்ளி வைக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஞாயிற்றுக் கிழமை ஏற்கனவே விடுமுறை நாள். எனவே அவர்கள் வேலை நிறுத்தம் செய்ய வேண்டாம். சீர்திருத்த தலைவர்களுக்கு மே தினம் பார்க்கில் விளையாடுவதற்கும், கலை நிகழ்ச்சிக்குமான உலக விடுமுறை நாளாகும். ஜூரிச் மாநாடு மே தினம் முதலாளித்துவச் சுரண்டல், அடிமைத்தனம் வர்க்க வேறுபாடுகள் ஆகியவற்றை அழித்தொழிப்பதற்காக போராடும் நாள் என்று தீர்மானித்தது. இந்த தீர்மானம் இந்த தலைவர்களை ஒரு சிறிதும் பாதிக்கவில்லை. ஏனெனில் அகிலத்தின் முடிவுகள் தாங்களை கட்டுப்படுத்தும் என்பதையே அவர்கள் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. சர்வதேச சோஷலிச மாநாடு என்பது அவர்களை பொறுத்தவரை போருக்கு முன்பு ஐரோப்பிய தலைநகரங்களில் நடந்த பல்வேறு மாநாடுகளைப் போல சர்வதேச நட்பு மற்றும் நல்லெண்ணத்திற்கான ஒரு கூட்டமாகவே இருந்தது. பாட்டாளி வர்க்க நடவடிக்கைகளை அவர்கள் முறியடிக்கவும் அலட்சியப்படுத்தவும் எல்லா வேலைகளையும் செய்தார்கள். தங்களுக்கு ஒத்துவராத மாநாட்டுத் தீர்மானங்களைக் கிடப்பிலே போட்டார்கள். இருபதாண்டுகளுக்குப் பின் இந்த சீர்திருத்தவாத தலைவர்களின் சோஷலிஸமும் சர்வதேசியமும் நிர்வாணமாக்கப்பட்டு அம்பலப்படுத்தப் பட்டது. 1914-ல் இந்த சர்வதேச மேடை சீர்குலைந்தது. காரணம் இது தோன்றிய நாளிலிருந்தே இதன் அழிவு சக்தியாக தவறான பாதையில் அழைத்துச் செல்லக்கூடிய சீர்திருத்தவாத தலைவர்கள் இதனுள்ளே இருந்து வந்தார்கள்.
1900-ம் ஆண்டு நடைபெற்ற அகிலத்தின் பாரிஸ் மாநாட்டில், முந்திய மாநாட்டில் நிறைவேறிய தீர்மானம் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. மேலும் தீர்மானத்தை வலுப்படுத்தும் வகையில், மே முதல் நாள் வேலை நிறுத்தம் மே தின ஆர்ப்பாட்டத்தை மேலும் பயனுள்ளதாக்கும் என்ற வாக்கியமும் சேர்க்கப்பட்டது. அடுத்து வந்த மே தின ஆர்ப்பாட்டங்கள் மேலும் பலத்தோடு திகழ்ந்தன. ஆர்ப்பாட்டத்திலும் வேலை நிறுத்தத்திலும் கலந்து கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வந்தது. உலகெங்கிலுமுள்ள ஆளும் பிற்போக்கு சக்திகளுக்கு ஒரு எச்சரிக்கையாக வரக்கூடிய மே தினங்கள் ஒரு சிவப்பு தினமாக மாறியது.
மே தினம் குறித்து லெனின்
மே தினத்தை ஒரு ஆர்ப்பாட்ட, போராட்ட தினமாக ரஷ்ய தொழிலாளர்களுக்கு லெனின் தன்னுடைய ஆரம்பகால ரஷ்ய புரட்சி இயக்க நடவடிக்கையின் போதே அறியச் செய்தார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் தொழிலாளர் விடுதலைப் போராட்ட சங்கம் ரஷ்யாவில் இருந்த ஒரு மார்க்சிய அரசியல் குழு. இந்த சங்கத்துக்காக 1896-ம் ஆண்டு லெனின் சிறையில் இருந்த போது மே தின துண்டு பிரசுரம் ஒன்றை எழுதினார். அந்த பிரசுரம் சிறையிலிருந்து கடத்தப்பட்டு 200 பிரதிகள் எடுக்கப்பட்டு 40 தொழிற்சாலைகளில் தொழிலாளர்களிடையே விநியோகிக்கப்பட்டது. அந்தப் பிரசுரம் மிகவும் சுருக்கமாக, லெனினுக்கே உரிய நேரிடையான மற்றும் எளிமையான முறையில் சாதாரண தொழிலாளியும் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதப்பட்டது. “பிரசுரம் வெளிவந்த ஒரு மாதத்திற்குப்பின் வெடித்தெழுந்த பஞ்சாலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின் போது, எங்களுக்கு இந்த வேலை நிறுத்தத்துக்கான ஆரம்ப உத்வேகத்தை தந்ததே அந்த சிறிய மே தின பிரசுரம் தான்’’ என்று தொழிலாளர்கள் சொன்னதாக அந்த பிரசுரத்தை விநியோகித்த லெனினின் சமகாலத்தவர் ஒருவர் கூறியுள்ளார். தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யும் முதலாளிகளின் நலனுக்காக எங்ஙனம் சுரண்டப்படுகிறார்கள் என்பதையும், தங்களின் நிலையில் முன்னேற்றத்தை கோருபவர்கள் எவ்வாறு அரசாங்கத்தால் தண்டிக்கப் படுகிறார்கள் என்பதையும் சொல்லிய பிறகு மே தினத்தின் முக்கியத்துவம் குறித்து லெனின் எழுதுகிறார்.
‘’பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மன் நாட்டுத் தொழிலாளர்கள் ஏற்கனவே வலுவான சங்கங்களின் கீழ் அணிதிரண்டு தங்களின் பல உரிமைகளை அடைந்திருக்கிறார்கள். அவர்கள் ஏப்ரல் 19 (மே 1 ரஷ்ய நாட்காட்டி மேற்கு ஐரோப்பிய நாட்காட்டியை விட 13 நாட்கள் பிந்தியது) அன்று பொது வேலை நிறுத்த நாளாக அனுஷ்டித்தார்கள். காற்று வசதியற்ற தங்கள் தொழிற்சாலைகளை விட்டு, விரிந்த பதாகைகளுடன் தொழிலாளர்கள் தெருவிலே இறங்கினர். முதலாளிகளுக்கும் அவர்களின் வளர்ந்து வரும் சக்திக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இசைக்கு ஏற்ப நகரங்களின் முக்கிய வீதிகள் வழியே அணிவகுத்து சென்றனர். மாபெரும் வெகுஜன ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஒன்று கூடினார்கள். அங்கே அவர்கள் முதலாளிகளுக்கு எதிராக கடந்த ஆண்டு தாங்கள் பெற்ற வெற்றிகளையும், வருங்கால போராட்டத்திற்கான திட்டங்களை குறித்தும் பேசினார்கள். இந்த வேலை நிறுத்தத்தின் அச்சுறுத்தல் காரணமாக, தொழிலாளர்களுக்கு அவர்கள் தொழிற்சாலைகளுக்கு அன்று வராததற்காக அபராதம் விதிக்கக்கூடிய துணிவு அவர்களின் முதலாளிகளுக்கு இல்லை. அந்த நாளில் தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளிடம் தங்களின் முக்கிய கோரிக்கையான 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர பொழுது போக்கு என்பதை நினைவுப்படுத்தவும் தவறவில்லை. இதைத்தான் மற்ற நாட்டு தொழிலாளர்களும் தற்போது கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்’’
ரஷ்ய புரட்சி இயக்கம் மே தினத்தை பெருமளவில் பயன்படுத்திக் கொண்டது. 1900-ம் ஆண்டு நவம்பரில் புதிப்பிக்கப்பட்ட ‘கார்கோவில் மே தினம்’ என்ற பிரசுரத்தில் முன்னுரையில் லெனின் பின்வருமாறு எழுதுகிறார். ‘’இன்னும் ஆறு மாதத்தில் ரஷ்ய தொழிலாளர்கள் தங்களின் புதிய நூற்றாண்டின் முதலாண்டு மே நாளை கொண்டாடுவார்கள். எத்தனை இடங்களில் முடியுமோ அத்தனை இடங்களில் மே தினத்தை சிறப்பாக, விரிவாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்ய இதுதான் நேரம். மே தின நிகழ்ச்சியில் பங்கு கொள்வது எத்தனை பேர் என்பது முக்கியமல்ல. பங்கு கொள்பவர்கள் வெளிக்காட்டும் ஸ்தாபன கட்டுப்பாட்டு உணர்வும், வர்க்க உணர்வும், ரஷ்ய மக்களின் அரசியல் விடுதலைக்கான ஒடுக்க முடியாத போராட்டத்திற்கு அவர்கள் காட்டும் உறுதியும்தான் முக்கியமானது. இதன் விளைவாக பாட்டாளி வர்க்க வளர்ச்சிக்கான வசதியாக சந்தர்ப்பமும், சோஷலிஸத்திற்கான வெளிப்படையான போராட்டமும் வளரும்.”
மே தின ஆர்ப்பாட்டங்கள் குறித்து ஆறுமாதங்கள் முன்னமேயே கவனத்தை இழுத்திருக்கிறாரென்றால், அதை லெனின் எவ்வளவு முக்கியமாய் கருதியிருக்கிறார் என்பது தெளிவாய் தெரிகிறது. லெனினுக்கு மே தினம் என்பது “ரஷ்ய மக்களின் அரசியல் விடுதலைக்கான அடக்கமுடியாத போராட்டத்திற்கும், பாட்டாளி வர்க்க மேம்பாட்டிற்கும், சோஷலிஸத்திற்கான வெளிப்படையான போராட்டத்திற்கும் மக்களை அணி திரளச் செய்வதற்கான ஒரு சந்தர்ப்பம் ஆகும்”.
மே தின விழாக்கள் எங்ஙனம் ஒரு மாபெரும் அரசியல் ஆர்ப்பாட்டமாக மாறும் என்று பேசுகையில், 1900-ம் ஆண்டு கார்கோவ் மே தின விழா எப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக மாறியது என்ற கேள்விக்கு லெனின் பின்வருமாறு பதிலளிக்கிறார். “வேலை நிறுத்தத்தில் பங்கு கொண்ட பெருந்திரளான தொழிலாளர்கள், தெருக்களிலே நடந்த மாபெரும் வெகு ஜனக்கூட்டங்கள், செங்கொடிகளின் பதாகை, கோரிக்கைகள் அடங்கிய பிரசுரங்கள், அவற்றின் புரட்சித்தன்மை, எட்டு மணி நேர வேலைநாள், அரசியல் விடுதலை இவைகள்தான்”.
கார்கோவ் கட்சித் தலைவர்கள் 8 மணி நேர வேலை நாள் கோரிக்கையோடு சாதாரண, வெறும் பொருளாதார கோரிக்கைகளையும் சேர்த்துக் கொண்டதை லெனின் சினந்து கொண்டார். காரணம் மே தினத்தின் அரசியல் தன்மை எந்த விதத்திலும் மங்கக் கூடாது என்று விரும்பினார். அவர் இந்த முன்னுரையில் பின்வருமாறு எழுதுகிறார்.
“8 மணி நேர வேலைதான் இந்த முதல் கோரிக்கையானது உலகெங்கிலுமுள்ள பாட்டாளி மக்கள் வைத்துள்ள பொதுவான கோரிக்கையாகும். இந்த கோரிக்கையை முன் வைத்ததிலுருந்து கார்கோவின் வளர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் சர்வதேச சோசலிஸ தொழிலாளர் இயக்கத்தோடு தங்கள் ஐக்கியத்தை உணருகிறார்கள் என்பது தெரிகிறது.
குறிப்பாக இந்த ஒரு காரணத்திற்காகவே, இது போன்ற ஒரு கோரிக்கையை, மேஸ்திரி ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும், பத்து ஸென்ட் ஊதிய உயர்வு வேண்டும் போன்ற சாதாரண கோரிக்கைகளுடன் சேர்த்துது வைக்கக் கூடாது. எட்டு மணி நேர வேலை நாள், பாட்டாளி வர்க்க முழுமைக்குமான ஒரு கோரிக்கையாகும். அது சமர்ப்பிக்கப்படுவது தனிப்பட்ட முதலாளிகளிடத்தில் அல்ல. உற்பத்திக் கருவிகளின் சொந்தக்காரர்களான முதலாளித்துவ வர்க்கத்திடம் தற்போதைய அரசியல், பொருளாதார அமைப்பின் பிரதிநிதியாக இருந்து சமர்ப்பிக்கப்படுவதாகும்.
மே தின அரசியல் முழக்கங்கள்
உலகெங்கிலுமுள்ள பாட்டாளி மக்களுக்கு மே தினம் ஒரு ஈர்க்கும் முனையாக மாறியது. மே தின ஆர்ப்பாட்டங்களின் போது 8 மணி நேர வேலை நாள் என்ற பிரதான கோரிக்கையோடு மற்ற முக்கியமான கோரிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்துமாறும் தொழிலாளர்கள் அழைக்கப்பட்டார்கள். உலகத்தொழிலாளர் ஒற்றுமை; எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஓட்டுரிமை; ஏகாதிபத்திய போர் மற்றும் காலனி ஆதிக்க எதிர்ப்பு; தெருக்களில் ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமை; அரசியல் மற்றும் பொருளாதார ஸ்தாபனம் கட்டும் உரிமை; போன்றவை அந்தக் கோரிக்கைகளில் சிலவாகும்.
2013-ம் ஆண்டு ஜகார்தாவில் மே தின ஆர்ப்பாட்டம்
1904-ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் மாநாட்டில்தான் பழைய அகிலம் மே தினத்தைப் பற்றி கடைசியாக பேசியது. ஆர்ப்பாட்டத்தின் போது முழங்கப்படும் பல்வேறு கோரிக்கைகளை விமர்சனம் செய்த பின்பு ஒரு முக்கியமான உண்மை கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இன்னும் சில நாடுகளில் மே தினம் மே முதல் நாளுக்கு பதிலாக ஞாயிற்றுக் கிழமை நடத்தப்படுகிறது என்பதுதான் அந்த உண்மை. அந்த தீர்மானம் பின்வருமாறு முடிகிறது.
“ஆம்ஸ்டர்டாமில் நடைபெறும் இந்த சர்வதேச சோசலிஸ்டு மாநாடு அமைத்து சமூக ஜனநாயக ஸ்தாபனங்களையும், எல்லா நாடுகளிலுமுள்ள தொழிற்சங்கங்களையும் மே முதல் நாள் அன்று எட்டு மணி நேர வேலைநாளை சட்டமாக்கவும், பாட்டாளி வர்க்க கோரிக்கைகளுக்காகவும், உலக அமைதிக்காகவும் முழுமையான சக்தியோடு போராடுமாறு கேட்டுக் கொள்கிறது.
மே முதல் நாள் ஆர்ப்பாட்டத்திற்கு வேலை நிறுத்தமே சிறந்த வழியாகும். எனவே மாநாடு எல்லா பாட்டாளிவர்க்க ஸ்தாபனங்களுக்கும், எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தொழிலாளர்களை பாதிக்காத வண்ணம் மே முதல் நாள் வேலை நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என்பதை கட்டளையாக சொல்கிறது.
1912 ஏப்ரல் சைபீரியாவில் வேலை நிறுத்தம் செய்த தங்க வயல் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்போது பாட்டாளி வர்க்க வெகுஜன புரட்சிகர நடவடிக்கை என்பது மீண்டும் ஒரு பிரச்சினையாக இருந்தது. ஆனால் அந்த ஆண்டு மே தினத்தின் போது ஆயிரக்கணக்கான ரஷ்ய தொழிலாளர்கள் தொழிற்சாலையை விட்டு வீதிக்கு இறங்கி ஜாராட்சிக்கு எதிராக சவால் விட்டனர். 1905 நிகழ்ந்த புரட்சியின் தோல்விக்குப் பின் நடந்த இந்த மே தினம் பற்றி லெனின் பின்வருமாறு எழுதுகிறார்.
“ரஷ்யாவெங்கும் நடந்த மாபெரும் மே தின வேலை நிறுத்தங்களும், அதையொட்டிய பெருந்திரளான தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டமும், புரட்சிகர பிரகடனங்களும், பேச்சுகளும் ரஷ்யா மீண்டும் வளந்து வரும் ஒரு புதிய புரட்சிகர சூழ்நிலைக்கு சென்று விட்டதை தெளிவாக காட்டுகிறது”.
முதல் உலகப்போரின் போது மே தினம்
போரின் போது சமூக ஜனநாயக கட்சித் தலைவர்கள் செய்த துரோகம் 1915-ம் ஆண்டு மே தினத்தின் போது வெளிப்படையாக தெரிந்தது. இது 1914 ஆகஸ்டில் ஏகாதிபத்திய அரசாங்கங்களோடு அவர்கள் செய்து கொண்ட சமரசத்தின் தத்துவார்த்த வளர்ச்சியாகும். ஜெர்மன் ஜனநாகயகவாதிகளோ தொழிலாளிகளை வேலை செய்யுமாறு கூறினார்கள். பிரெஞ்சு சோஷலிஸ்டுகளோ ஒரு பிரத்தியேக அறிக்கையில் அதிகார வர்க்கத்திடம் மே தினம் குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என்று கூறுகிறார்கள். போர் நிகழ்ந்த மற்ற நாடுகளிலும் பெரும்பாலான சோஷலிஸ்டுகளிடையே இதே நிலைதான் காணப்பட்டது. ரஷ்யாவில் போல்ஷ்விக்குகளும், மற்ற நாடுகளில் சிறுபான்மையாய் இருந்த புரட்சி சக்திகளுமே சோஷலிசத்திற்கும், சர்வதேசியத்திற்கும் உண்மையாக இருந்தனர். லெனின், ல்கஸம்பர்க், லீப்ஹனெட் ஆகியோர் குருட்டுத்தனமான சமூக வெறிக்கு எதிராக குரல் கொடுத்தனர். 1916, மே தினத்தன்று நடந்த சிறு திரளான தொழிலாளர் ஊர்வலமும், தெருவில் நிகழ்ந்த வெளிப்படையான சிறு சண்டைகளும் போர் நிகழும் நாடுகளில் தொழிலாளர்கள் துரோகத் தலைவர்களின் விஷப்பிடியிலிருந்து தானாகவே வெளியேறி வருகின்றனர் என்பதை காட்டுவதாய் இருந்தது. லெனினும் மற்ற எல்லா புரட்சிவாதிகளும் சந்தர்ப்பவாதத்ததின் அழிவு (இரண்டாம் அகிலத்தின் அழிவு: ஆர்) தொழிலாளர் இயக்கத்திற்கு நன்மை பயக்கும் என்று நம்பினர். துரோகிகளிடமிருந்து மீள்வதற்கும் புதிய அகிலத்துக்கான லெனினுடைய அழைப்பிற்கும் ஏற்ற நேரமாக அது இருந்தது.
ஜிம்மர்வால்டு (1915), கிந்தால் (1916) ஆகிய இடங்களில் நடந்த சோஷலிச மாநாடுகள், லெனினுடைய முழக்கமான ஏகாதிபத்திய போரை உள்நாட்டுப் போராக மாற்றுவோம் என்பதற்கு ஆதரவாக சர்வதேச புரட்சிகர கட்சிகள் மற்றும் சிறு சக்திகள் திரளுவதற்கு வழிவகுத்தன. 1916 மே தினத்தன்று கார்ல் லீப் ஹ்னெட்டும் மற்ற அவரது சோஷலிச இயக்க ஆதரவாளர்களும் சேர்ந்து பெர்லினில் போலிஸின் தடையுத்தரவையும் கட்சியின் அதிகாரபூர்வ தலைமையையும் மீறி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி தொழிலாளி வர்க்கம் உயிருள்ள சக்தி என்பதை நிரூபித்தனர்.
1917-ம் ஆண்டு அமெரிக்காவில் போர் பிரகடனப்படுத்தப்பட்ட போது அதனால் மே தினம் நிறுத்தப்படவில்லை. அப்போது ஏப்ரலில் நடந்த செயின்ட் லூயிஸ் அவசர மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட யுத்த எதிர்ப்பு தீர்மானத்தை முழுமூச்சுடன் எடுத்துக் கொண்டு மே தினத்தை அதற்காக பயன்படுத்தினர். பின்னர் 1919 மே முதல் நாள் கிலிவலேண்டில் சார்லஸ் ரத்தன்பர்க் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டம் குறிப்பிடும் படியான போர்க்குணத்தோடு இருந்தது. இவர் உள்ளூர் சோஷலிஸ்டு கட்சி ஸ்தாபகர்களில் ஒருவருமாவார்.
2013-ம் ஆண்டு கம்போடியாவில் ஆயத்த ஆடை மே தின தொழிலாளர்களின் பேரணி
அப்போது பொது சதுக்க வீதியிலே 20,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணிவகுத்து சென்றனர். பின்னர் இன்னும் பல்லாயிரக்கணக்கானவர் அத்தோடு சேர்ந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தை போலிஸ் காட்டுமிராண்டித் தனமாக தாக்கியது. அதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். இன்னொரு தொழிலாளி கடுமையாக காயப்படுத்தப்பட்டார்.
1917-ம் ஆண்டு மே தினமும், ஜுலை மாதத்து நாட்களும் இறுதியாக அக்டோபர் மாதத்து நாட்களும் ரஷ்யப் புரட்சிக்கு படிப்படியாக ஒரு நினைவைக் கொடுத்தது. மனிதகுல வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கிய ரஷ்ய புரட்சியானது, மே தினத்திற்கு புதிய உத்வேகத்தையும் முக்கியத்துவத்தையும் தந்தது. 1890-ம் ஆண்டு மே தினத்தின் போது நியூயார்க் யூனியன் சதுக்கத்தில் அமெரிக்க தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களிடையே பின்வருமாறு முழங்கினர். “8 மணி நேர வேலை நாளுக்காக போராடும் இதே நேரத்தில் தமது இறுதி லட்சியமான இந்த கூலி (முதலாளித்துவ) அமைப்பை தகர்த்தெறிவதிலிருந்து விலக மாட்டோம்”. இந்த முழக்கம் முதன் முறையாக உலகின் ஆறில் ஒரு பகுதியில் பாட்டாளி வர்க்க சக்தியின் வெற்றியாக நினைவாக்கப்பட்டது.
இந்த லட்சியத்தை அடைந்ததிலே முதலானவர்கள் என்பதை ரஷ்ய தொழிலாளர்கள் நிரூபித்துக் காட்டினர். ஆனால் 1917-ம் ஆண்டின் போது, அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர்கள், தாங்கள் 1890-ல் முழங்கிய குறிக்கோளிலிருந்து வெகுதூரத்தில் இருந்தார்கள். அவர்களின் முக்கிய நோக்கம் முதலாளித்துவ அமைப்பை பாதுகாப்பதும், அமெரிக்க ஏகாதிபத்திய வளர்ச்சிக்கு சுலபமான வழிவகுப்பதுமாக இருந்தது. உலகத் தொழிலாளர் ஒற்றுமை, முதலாளித்துவ அமைப்பிலிருந்து விடுதலை போன்ற பிரகடனங்களை முழங்கிய மே தினத்திற்கு புதிய சக்தியை வழங்கிய ரஷ்ய புரட்சியினால் அமெரிக்க தொழிலாளர்கள் உத்வேகம் பெறுவதை அந்த தலைவர்கள் விரும்பவில்லை.
1923ம் ஆண்டு மே தினத்தின் போது ‘தொழிலாளி’ என்ற வார பத்திரிகையின் ஆசிரியர் சார்லஸ் ரத்தன்பர்க் பின் வருமாறு எழுதுகிறார். “மே தினம் உலகெங்கிலுமுள்ள முதலாளிகளின் உள்ளத்திலே அச்சத்தையும், தொழிலாளிகளின் உள்ளத்திலே நம்பிக்கையும் உருவாக்கும் தினம். வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அமெரிக்காவில் கம்யூனிஸ இயக்கம் பலமாக இருக்கும். மாபெரும் சாதனைகளுக்கான பாதை தெரிவாக இருக்கிறது. அமெரிக்காவிலும், உலகின் மற்ற பகுதிகளிலும் எதிர்காலம் என்பது கம்யூனிஸத்திற்கே உரியதாய் இருக்கும்”.
அதே ‘தொழிலாளி’ பத்திரிகையில் ஒரு தலைமுறைக்கு முன் 1907-ம் ஆண்டு ஏப்ரல் 27-ம் நாள் மே தினம் குறித்து யூகின் டெப்ஸ் என்பவர் பின்வருமாறு எழுதுகிறார். “இந்த தினம்தான் முதலாவதும், ஒன்றேயுமான உலகத் தொழிலாளர் தினம். இந்த நாள் புரட்சிக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட தொழிலாளி வர்க்கத்துக்குரிய நாளாகும்”
மே தினத்தின் வளர்ந்து வரும் போர்க்குண பாரம்பரியத்தை எதிர்க்கும் வகையில், செப்டம்பர் முதல் திங்கட்கிழமையை மே தினத்துக்கு பதிலான தொழிலாளர் தினமாக கொண்டாடுவதாக அமெரிக்க கூட்டமைப்பின் தலைவர்கள் ஊக்குவித்தனர். இந்த தினம் முதன் முதலில் 1885-ல் உள்ளூர் அளவில் கொண்டாட்டங்களை முறியடிக்கும் வகையில் நடத்தப்பட்டது.
இதே போன்று மே தினத்துக்கு எதிராக, ஹூவர் நிர்வாகம் அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்போடு சேர்ந்து மே முதல் நாளை குழந்தைகள் நல தினமாக அறிவித்தது. குழந்தைகள் நாளில் திடீரென்று பிறந்த இந்த அக்கறையின் உண்மையை நாம் 1928-ம் ஆண்டு அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பின் மாநாட்டில் நிர்வாகக்குழு சமர்ப்பித்த அறிக்கையிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அந்த அறிக்கை பின்வருமாறு சொல்கிறது.
“கம்யூனிஸ்டுகள் மே முதல் நாளை தொழிலாளர் தினமாக கொண்டாடுகிறார்கள். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இனிமேல் மே முதல் நாளை, அமெரிக்க மக்கள், குழந்தைகளை தினமாக கொண்டாடும்படி அழைக்க வேண்டும் என்று தலைவரைக் கேட்டுக் கொள்கிறது. ஆண்டு முழுவதும் குழந்தைகள் நலனை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கம். இதுதான் மிகுந்த பயனுள்ள நோக்கமாகும். அதே நேரத்தில் இனி மே தினம் கம்யூனிஸ்டு தினமாகவோ அல்லது வேலை நிறுத்த தினமாகவோ அறியப்படமாட்டாது.”
1929-ல் ஏற்பட்ட நெருக்கடி
முதல் உலகப் போருக்குப் பத்தாண்டுக்குப் பின்னும் லட்சோபலட்ச மக்கள் முதலாளித்துவ அழிவுப் பாதையில் சிக்கியிருந்தார்கள். அனுபவங்களிலிருந்து பாடம் பெற மறுத்த பிற்போக்கு தொழிற்சங்கத் தலைவர்களோ இந்த மக்களைத் திரட்டுவதற்கு பதிலாக முதலாளித்துவத்தின் கீழ் நிரந்தர செழுமை என்ற மாயையை பரப்புவதில் தீவிரமாய் இருந்தார்கள். 1929 இறுதியில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டது. அப்போது சொத்துடையவர்களும், ஏகபோகவாதிகளும் எல்லா சுமையையும் தொழிலாளர்கள் தலையின் மீது சுமத்தப் பார்த்தார்கள். அப்போது தொழிலாளர்களுக்கு ஒரே பாதுகாப்பாக இருந்தது வேலை நிறுத்தமும், வேலையில்லாதவர்களின் வெகுஜனப் போராட்டமுமேயாகும். கம்யூனிஸ்டுகள் இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கினர். இதனால் அமெரிக்கத் தொழிலாளர்கள் பெரும் அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டனர். அவர்களின் ஜனநாயக உரிமைகள் விரிவுப்படுத்தப்பட்டன. என்றுமில்லாத அளவுக்கு அமெரிக்க தொழிலாளர் வரலாற்றில் 1930-களில் புதிய முன்னேற்றங்களை ஏற்படுத்த முடிந்தது. 1935-ம் ஆண்டு சி.ஐ.ஓ. துவக்கப்பட்டது. பெரும் தொழிற்சாலைகள் வேகமாக ஸ்தாபனப்படுத்தப் பட்டன. இவையெல்லாம் அமெரிக்க முக்கியத்துவத்தை தந்தது. அமெரிக்க தொழிலாளர்களின் இந்த எழுச்சியால் நீக்ரோ மக்களின் சம உரிமைக்கான போராட்டம் நடத்துவதற்கான காலம் ஏதுவானது. அதன் காரணமாக அமெரிக்க ஜனநாயக முன்னணி மேலும் வலுவடைய முடிந்தது.
ஏகாதிபத்திய யுத்தம், புரட்சி முன்னெப்போதும் இருந்திராத பொருளாதார நெருக்கடி இவைகள் பதினைந்து ஆண்டுகளுக்குள் முதலாளித்துவத்தை ஆட்டங்காண வைத்தன. இதனால் அது பெரும் நெருக்கடிக்குள்ளானது. முதல் உலகப் போருக்கு காரணமாய் இருந்த ஏகாதிபத்திய போட்டிகள் இப்போது இன்னும் தீவிரமாயின. மேலும் உலகின் ஆறில் ஒரு பகுதியில் முதலாளித்துவம் துடைத்தெறியப்பட்டதும், காலனி நாடுகளில் நடந்த விடுதலைப் போராட்டங்களின் அதிகரிப்பும், வளர்ந்து விட்ட முதலாளித்துவ நாடுகளில் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும் ஜனநாயக உரிமைக்காகவும் தீவிரமாக போராடியதும் இந்த பொதுவான முதலாளித்துவ நெருக்கடியை மேலும் அதிகப்படுத்தியது. இதனால் தங்கள் அரசியல் பொருளாதார வாழ்வை காத்துக் கொள்ளவும் தவிர்க்க முடியாத வரலாற்று வளர்ச்சியினை தடுத்து நிறுத்தவும் வேறு வழியின்றி முதலாளிகளும் ஏகபோக வாதிகளும், பாசிச பயங்கர சர்வாதிகாரம் என்ற ஆயுதத்தை கையிலெடுத்தார்கள். தோற்கடிக்கப்பட்ட ஜெர்மனி, மற்ற நாடுகளில் தொழிலாளர் மற்றும் முற்போக்கு சக்திகளிடையே இருந்த பலவீனம் மற்றும் ஒற்றுமையின்மையாலும், ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள், இந்த நாடுகளில் இருந்த பாசிச சக்திகளை ஊக்குவித்தாலும், இந்த நாடுகளில் பாசிசம் வெற்றி பெற ஏதுவாகிறது. நூற்றாண்டு காலமாய் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற ஜனநாயக உரிமையை அழிப்பதற்கு உலகம் முழுவதுமான ஏகபோக மூலதனத்தின் முயற்சியை இது காட்டுவதோடு, இரண்டாவது உலகப் போருக்கான பாதையையும் இது தெளிவாக்குகிறது.
பாசிசத்திற்கு எதிரான யுத்தம்
1933-லிருந்து 1939 வரை ஜெர்மன் பாசிசம் உலகெங்குமுள்ள பிற்போக்குத்தனத்தின் முன்னோடியாய் திகழ்ந்தது. சோஷலிச நாடுகளுக்கு எதிராக ஆங்கில அமெரிக்க ஏகாதிபத்தியங்கள் நாஜி ஜெர்மனியை ஆதரித்தன. ஜெர்மனி பாசிசமோ உலகம் முழுவதையும் தன் கீழ் கொண்டு வர எண்ணியது. இதன் காரணமாக இரண்டாம் உலக யுத்தத்துக்கான தயாரிப்புகள் முறைப்படி செய்யப்பட்டன. அதே நேரத்தில் ஜப்பானிய ஏகபோகவாதிகளும் தங்கள் சொந்த நலனுக்காக இந்த சதியில் கை கோர்ந்து நின்றனர். இந்த யுத்தம் அதன் சொந்தத் தன்மை காரணமாக ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டின் சுதந்திரத்திற்கு எதிராக திருப்பப்பட்டது. இச்சூழ்நிலையில் மனித குல முன்னேற்றத்தின் விதி மற்ற இடங்களில் உள்ள விவசாய மற்றும் ஒடுக்கப்பட்ட காலனி மக்களோடு இணைகின்ற தொழிலாளர்களின் கையிலேதான் உள்ளது என்பது மிகத் தெளிவாக தெரிய ஆரம்பித்தது. ஏகபோக முதலாளிகள் வளர்ந்து வரும் அழிவு சக்தியை தடுக்கும் பொருட்டு ஜனநாயக மற்றும் தேசிய சக்திகளை திரட்டுவது என்பது இவர்களின் முயற்சி, ஒற்றுமை, எதிர்பு ஆகியவற்றின் அடிப்படையில்தான் இருந்தது. எனவே முப்பதுகள் முழுவதும் நடந்த மே தினம், புதிய உலக அழிவை தடுக்கும் பொருட்டு, பாசிச ஆக்ரமிப்புக்கு எதிராக, உலக மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் ஒற்றுமைக்காக குரல் கொடுப்பதாக இருந்தது.
2013-ம் ஆண்டு பிரான்சில் மே தின பேரணி
உழைக்கும் வர்க்கம் நாட்டின் முதுகெலும்பு என்பதை சந்தேகத்திற்கிடமின்றி இரண்டாவது உலக யுத்தம் நிரூபித்தது. உழைக்கும் மக்கள் மட்டும் பிளவுபட்டிருந்தால், பாசிசம் தனது அதிகாரத்திற்கு உலகையே நாசகர யுத்தத்தில் மூழ்கடித்திருக்கும். ஆனால் பாசிசத்தால் ஜனநாயகம் மற்றும் முன்னேற்றத்தை பாதுகாக்க உலகம் முழுவதிலுமுள்ள பெரும்பான்மையான ஜனநாயக சக்திகளை திரட்டும், போராடக்கூடிய உழைக்கும் வர்க்கத்தை வெற்றி கொள்ள முடியவில்லை.
சுதந்திரம் ஜனநாயகம், வளர்ச்சி இவற்றிற்காக இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம் இருந்தது. இந்தப் போராட்டத்தின் முன்னணியில் சோவியத் யூனியன், மற்ற நாடுகளின் உழைக்கும் மக்கள் இருந்ததை உலகெங்கிலுமுள்ள ஜனநாயக சக்திகள் கண்டனர். யுத்தத்தின் போது வேலை நிறுத்தம் மூலமும், பாசிச படையை அழிப்பதற்கான ஆயுதங்களை தயாரிப்பதன் மூலமும் எல்லா இடங்களிலும் உழைக்கும் வர்க்கம் மே தினத்தை அனுஷ்டித்தது. 1945-ல் யுத்தம் முடிவுற்றபோது பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் விடுதலையும், வெற்றியும் அடைந்த ஐரோப்பிய நாடுகளில் மே தினங்களின் போது திரண்டதை எல்லா நாடுகளும் கண்டன. அந்த ஆர்ப்பாட்டங்களின் போது, பாசிசத்தின் மிச்ச சொச்சங்களை வேரோடு அழிக்க தொடர்ந்து போராடுவது என்றும், பாசிச ஆயுதத்தை மீண்டும் கையிலெடுக்காத வண்ணம் ஏகபோகத்தை அழித்தொழிக்க மற்ற முற்போக்கு சக்திகளோடு தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையை பூரணமாக்குவது என்றும், ஜனநாயகத்தை பாதுகாத்து விரிவுபடுத்தவும், மக்கள் சக்தியை ஆட்சியாக்கவும், நிலையான அமைதியை உருவாக்கவும், சுரண்டலும் ஒழுங்கு முறையும் அற்ற சோஷலிச உலகை நிர்மாணிக்க பாதை வகுக்கவும் தொழிலாளி வர்க்கம் உறுதி பூண்டது.
மனித குலத்தின் அமைதி மற்றும் மகிழ்வான எதிர்காலத்திற்காக போராடுவதன் மூலமும் எல்லா நாட்டிலுள்ள தொழிலாளி வர்க்கம், சர்வதேச ஐக்கியம் மற்றும் தோழமையுணர்வு அடிப்படையில் மே தினத்தன்று உலக மக்களை வணக்கம் செய்கிறது.
– அலெக்சாண்டர் ட்ராச்டென்பர்க் எழுதிய மே தின வரலாறு (தமிழில் எம். சிவகுமார்)
மே தினத்தை முன்னிட்டு மே 1, 2019 அன்று வினவு தளத்தில் பதிவிடப்பட்ட “சிலந்தியும் ஈயும்!” சிறுகதையை மீள்பதிவு செய்கிறோம்.
***
வில்ஹெல்ம் லீப்னெஹ்ட் (1826-1900) ஜெர்மன் சமூக ஜன நாயகக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினருள் ஒருவர். பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரமான போராட்டத்தின் வெற்றிக்கு மனப்பூர்வமாகப் பாடுபடும் தொழிலாளி வர்க்கத் தலைவர்கள் தமது வாழ்வு மற்றும் பணி மூலம் உதாரணமாக விளங்குவதைப் போன்று அவர் இருந்தார்.
“லீப்னெஹ்ட்டின் பெயர் ஜெர்மன் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து இரண்டறக் கலந்ததாகும்” என்று எழுதினார் லெனின். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் லீப்னெஹ்ட் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சிக்குத் தலைமை தாங்கினார். கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்ஸ் இவர்களது நண்பராய், சக தோழராய் இருந்தார். தலைசிறந்த பாட்டாளி வர்க்க நிறுவன ஒழுங்கமைப்பாளராகவும் சங்கநாதமென ஒலித்த குரலாகவும் ஜெர்மனியின் எல்லைகளுக்கு அப்பாலும் முற்போக்குத் தொழிலாளர்களின் அன்புக்குப் பாத்திரமாகி அவர்களிடையே செல்வாக்கு பெற்றிருந்தார். தொழிலாளி வர்க்க இயக்கத்தின் தலைசிறந்த போராட்டத் தலைவராக இருந்த அவர் ஆற்றல் மிகுந்த பிரசாரகராயும் விளங்கினார்.
சிலந்தியும் ஈயும் ஐரோப்பிய நாடுகளில் அது வெளிவந்த காலத்தில் வெகுவாய் வரவேற்கப்பட்ட பிரசுரமாய்த் திகழ்ந்தது. பாட்டாளிகளிடையே அரசியல் உணர்வை உயர்த்துவதற்கு அருஞ்சேவை புரிந்தது. சுரண்டும் சிலந்திக்கும் சுரண்டப்படும் ஈக்கும் இடையிலே நிலவும் பகை முரண்பாடுகளை லீப்னெஹ்ட் தெளிவான, எளிய நடையில் புலப்படுத்துகிறார். ஒடுக்குமுறைத் தளைகளை முறிக்க வேண்டுமாயின் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு ஒருசேரப் பாடுபடுவது ஒன்றே வழி என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.
– பதிப்பாளர், மாஸ்கோ பதிப்பகம்
சிலந்தியும் ஈயும்
நீங்கள் எல்லோரும் அதை நன்கு அறிவீர்கள் – அந்தப் பூச்சி சால் போன்ற வயிறுடையது. முடிகள் மண்டிய பிசுபிசுப்பான உடல் கொண்டது. பகலின் ஒளியிலிருந்து தூர விலகி இருண்ட இடங்களில் பதுங்கியிருக்கிறது. கொலைகார வலையைப் பின்னி வைக்கிறது. கவனக் குறைவான அல்லது சிந்தனையில்லாத, பரிதாபத்துக்குரிய ஈ இந்த வலையிலே அகப்பட்டுக் கொலையுண்டு போகிறது. அருவருப்பான அந்தக் கொடூரப் பூச்சி கண்ணாடி போன்ற உருண்டைக் கண்களுடையது. தன்னிடம் அகப்பட்டுக் கொள்ளும் ஈயைக் கெட்டியாய் பற்றிக் கொண்டு அழுத்தி நெரிப்பதற்கு வசதியாய் கோணமாய் மடங்கிக் குச்சி போலமைந்த நீண்ட முன்கரங்களைக் கொண்டது. அந்தக் கொலைகாரப் பூச்சிதான் சிலந்தி.
அதோ அந்த மூலையில், இரை எப்பொழுது தன் பிடியில் வந்து சிக்குமென்று ஆடாமல் அசையாமல் உணர்ச்சியற்றுக் காத்திருக்கிறது. அல்லது மெல்லிய ஈயைச் சிக்க வைத்துத் தப்ப முடியாதபடிக் கட்டுண்டு போகச் செய்யும் தனது கொலைகார இழைகளை பேய்த்தனமாய் நெய்து கொண்டிருக்கிறது! வெறுக்கத்தக்க கொடும் பிறவியான அது அளவிலா முயற்சியெடுத்து வேலை செய்கிறது. தன்னிடம் வந்து சிக்கும் இரை தப்புவதற்குச் சிறிதும் வழியின்றி கடைசி இழை வரை யாவற்றையும் செவ்வனே அமைத்துத் தனது வலையைக் குற்றம் குறையற்றதாய் நெய்கிறது. முதலில் ஓர் இமையைப் பின்னியமைக்கிறது. பிறகு இரண்டாவது, மூன்றாவது – இப்படி மேலும் மேலும் அமைத்துச் செல்கிறது. சிக்கும் இரை சாகுமுன் எவ்வளவு தான் துடியாய்த் துடித்தாலுங்கூட வலை பிய்ந்து போகாமல், அதிரவுங்கூட இல்லாமல் கெட்டியாய் இருக்கும் பொருட்டு, இழைகளைக் குறுக்கில் இழுத்துச் சுற்றுகிறது, மறுமுறையும் இழுத்துக் கெட்டியாய்ச் சுற்றுகிறது.
முடிவில் வலை தயாராகிவிடுகிறது, கண்ணி வைக்கப்பட்டு விட்டது, இனி தப்ப வழி ஏதுமில்லை – சிலந்தி இப்பொழுது அதன் உறைவிடத்தில் பதுங்கிக் கொள்கிறது. சூதறியாத ஈ பசியால் உந்தப்பட்டு உணவு தேடிக் கொண்டு எப்பொழுது வருமென்று சிலந்தி காத்திருக்கிறது.
ஈ வந்து சேர சிலந்தி அதிக நேரம் காத்திருக்க நேர்வதில்லை. பாவம், அப்படியும் இப்படியுமாய்ப் பார்த்தவாறு ஈ ஓடி வந்து விரியப் பறந்திருக்கும் இழைகளை அடைந்து துணுக்குற்று நடுங்குகிறது. சிக்குண்டுத் துடிக்கிறது, பெரு முயற்சி செய்கிறது – அவ்வளவுதான், இனி ஒன்றும் செய்வதற்கில்லை.
வில்ஹெல்ம் லீஃப்னெஹ்ட்
ஈ அகப்பட்டுக் கொண்டுவிட்டதைக் கண்டதும் சிலந்தி தனது பதுங்கிடத்தை விட்டு மெள்ள முன்னே வருகிறது. பசி வெறி கொண்ட கண்களுடன் குச்சிக் கரங்களை அசைத்துக் கொண்டு தனது இரையை நோக்கி முன்னேறுகிறது. அது அவசரப்படத் தேவையில்லை, தன் வலையில் அகப்பட்டுக் கொள்ளும் அபாக்கியசாலி தப்ப முடியாது என்பது அந்தப் பயங்கர பைசாசத்துக்குத் தெரியும். அது மேலும் மேலும் நெருங்கிச் செல்கிறது, துருத்திக் கொண்டிருக்கும் மங்கலான கண்களால் தனது இரையை ஏறிட்டுப் பார்த்து எடை போடுகிறது, அதைத் தவிக்கச் செய்து திணறடிக்கிறது. ஈ தன்னை நெருங்கி வரும் பயங்கர அபாயத்தைக் கண்டு நடு நடுங்குகிறது, பிசுபிசுப்பான அந்த இழைகளிலிருந்து பிய்த்துக் கொள்ள முயலுகிறது, தப்பிப்பதற்கு அரும்பாடுபடுகிறது. இந்த மூர்க்கமான இறுதி முயற்சிகளில் அது தனது பலத்தை இழந்து விடுகிறது.
ஆனால் அதன் முயற்சிகள் பயனளிக்கவில்லை, அதன் பிரயத்தனங்கள் வீணாகின்றன! வலையில் அது மேலும் மேலும் கடுமையாய்ச் சிக்கிக் கொள்கிறது. இதற்கிடையில் சிலந்தி அதை மேலும் மேலும் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. சிலந்திக் கூட்டின் வலைப் பின்னல்கள் மெல்லியனவாய் இருப்பினும் தப்ப வழியின்றி ஈயை இறுகப் பற்றிக் கொண்டுவிட்டன. இவற்றிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக ஈ மேற்கொள்ளும் முயற்சி ஒவ்வொன்றும் மேலும் அதிகமான இழைகளில் அதை மாட்ட வைத்து. மேலும் அதிகமான வலைப் பின்னல்களில் சிக்கச் செய்கிறது. முடிவில், எதிர்க்கும் ஆற்றல் அனைத்தையும் இழந்து ஓய்ந்து போய் மூர்ச்சித்துவிடும் ஈ, அதன் பகைவனின், வெற்றியாளனின் அந்தப் பயங்கரச் சிலந்தியின் காலடியில் கிடக்கிறது!
பிறகு அந்தப் படுபயங்கரப் பிராணி முடிகள் மண்டிய தனது கொடுங்கரங்களை நீட்டி ஈயைப் பிடித்துத் தனது கொலைகார அரவணைப்பிலே கெட்டியாய் அழுத்துகிறது. அடுத்து அது பலமிழந்து போய் நடுங்கும் ஈயின் உடலைக் கடிக்கிறது. ஒரு தரம், இரண்டு தரம், மூன்று தரம் என்று தனது வெறிக்கும் பசிக்கும் ஏற்ப அத்தனை தரம் விழுந்து பிடுங்குகிறது. அதன் இரத்த வெறி தற்போதைக்கு அடங்கியதும் பாதி உயிர் போன நிலையில் அந்த ஈயை விட்டுவிட்டு விலகுகிறது. பிறகு திரும்பி வந்து மீண்டும் உறிஞ்சுகிறது. இப்படித் திரும்பித் திரும்பி வந்து ஈயின் உடலிலுள்ள இரத்தம் அனைத்தையும், சத்து அனைத்தையும் உறிஞ்சி இழுத்து விழுங்குகிறது. பாவம் அந்த ஈ, எளிதில் அது உயிரை இழப்பதில்லை, குத்துயிரும் கொலையுயிருமாய் நெடு நேரம் திணறுகிறது.
இரத்த வெறி கொண்ட அந்தப் பைசாசம் தனது இரையிடம் இம்மியளவு உயிர்த் துடிப்பு எஞ்சியிருக்கும் வரை அதை விடுவதில்லை. ஈயின் உயிரை உள்ளுக்கு இழுக்கிறது, அதன் பலத்தை உறிஞ்சியிழுக்கிறது, இரத்தத்தைக் குடிக்கிறது. ஈயிடமிருந்து பருக எதுவுமே இல்லாமற் போன பிறகு தான் அதை விடுகிறது.
முற்றும் உறிஞ்சப்பட்டு சாகடிக்கப்பட்ட ஈ மெல்லிறகையும் விட இலேசாகியபின் வலையிலிருந்து தள்ளிவிடப்படுகிறது. சிறிதளவு காற்று வீசியதுமே காற்றோடு காற்றாய் அடித்துச் செல்லப்படுகிறது. யாவும் முடிவுற்றுவிட்டன.
வயிற்றை நிரப்பிக் கொண்டு திருப்தியோடு சிலந்தி மட்டும் தனது உறைவிடத்துக்குத் திரும்புகிறது. தன்னையும் தனது உலகையும் நினைத்து மன நிறைவு கொள்கிறது. தரமானவர்கள் உலகில் இனியும் நல்லபடியாகவே காலங்கழிக்க முடிகிறதென அகமகிழ்ந்து கொள்கிறது….
***
நகரத்தையும் கிராமத்தையும் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தினர்களே, உறிஞ்சியிழுக்கப்பட்டுக் கொல்லப்படும் இந்த ஈ, விழுங்கப்படும் இந்த ஈ நீங்களேதான்! ஏனையோர் வாழ்வது உங்களுடைய இரத்தத்தைக் குடித்துத்தான்! ஒடுக்கப்பட்ட மக்களே, அறிவுத் துறையினரே, ஆலைத் தொழிலாளர்களே, உங்கள் உரிமைகளுக்காக எதிர்த்து நிற்கத் துணியாதோரான அஞ்சி நடுங்கும் இளம் மகளிர்களே, பலமற்றோராய் இருந்து மிதிபடும் பெண்டிர்களே, யுத்த வேந்தர்களுக்குப் பலியாகும் அப்பாவிகளே! சுருங்கக் கூறின் ஏழைகளும் சுரண்டப்படுவோருமானோரே, உங்களுடைய இரத்த நாளங்களிலிருந்து உறிஞ்ச ஏதும் இல்லாமற் போனதும் உதறியெறியப்படுவோரே!
எல்லாச் செல்வங்களின் உற்பத்தியாளர்களே, தேசத்தின் இதயமும் மூளையும் ஜீவ சக்தியுமானோரே, அடி பணிந்து ஓசையின்றி எங்கோ மூலையில் அவலமான முறையில் மடியும் உரிமையன்றி வேறு உரிமை ஏதும் இல்லாதவர்களே! உங்களுடைய இரத்தத்தை, வியர்வையை, உழைப்பை, உங்களுடைய சிந்தனைகளை, உங்களுடைய உயிரைக் கொடுத்து உங்கள் எஜமானர்களாகவும் ஒடுக்குமுறையாளர்களாகவும் இருப்போரை – அருவருக்கத்தக்க சிலந்திகளை – பெரியவர்களாக்குகிறீர்கள், வலியவராக்குகிறீர்கள்.
எஜமானன், பணமூட்டை, சுரண்டலாளன், ஊகவாணிபன், முதலாளி, ஆசை காட்டி மோசம் செய்கிறவன், சமயச்சபை மேலவர்கள், எல்லா வகையான புல்லுருவிகள், நம்மை வருத்தும் கொடுங்கோலன், படுமோசமான ஒடுக்குமுறைச் சட்டங்களை இயற்றுகிறவன், நம்மை அடிமைப்படுத்தும் மூர்க்கன் ஆகிய இவர்கள் தான் சிலந்தி. மக்கள் செலவில் உண்டு வாழும் ஒவ்வொருவனும், நம்மைக் காலால் மிதித்துத் துவைக்கும், நமது துன்ப துயரங்களையும் பயனற்றுப் போகும் நமது முயற்சிகளையும் எள்ளி நகையாடும் ஒவ்வொருவனும்தான் இந்தச் சிலந்தி.
ஏழைத் தொழிலாளிதான் ஈ. வேலை வாங்கும் எஜமானன் பிறப்பிக்க விரும்பும் கொடிய சட்டங்களுக்கு எல்லாம் இந்த ஏழைத் தொழிலாளி அடங்கி நடக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் வாழ வழியற்ற நிலையிலுள்ள அபாக்கியவானான இந்தத் தொழிலாளி தனக்கும் தன் குடும்பத்துக்கும் ஜீவனோபாயம் தேடிக் கொள்ள வேண்டியிருக்கிறது. பெரிய ஆலை முதலாளிதான் சிலந்தி.
தனது தொழிலாளர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் நாள் ஒன்றுக்கு 6-லிருந்து 8 மார்க்(1) வீதம் சம்பாதிக்கும் இந்த முதலாளி, அதே போது 12-லிருந்து 14 மணி நேர வேலைக்கு இத்தொழிலாளர்களுக்கு மனம் துணிந்து, இல்லை அருள் கூர்ந்து 2-லிருந்து 3 மார்க் வரையிலான அரைப் பட்டினிக் கூலி தருகிறான்.
சுரங்கத்தின் நச்சுக் காற்றில் தன் உயிரைப் பலி கொடுக்கிறானே, தான் அனுபவிக்கப் போகாத செல்வங்களைத் தரைக்கு அடியிலிருந்து வெட்டியெடுக்கிறானே, அந்தச் சுரங்கத் தொழிலாளிதான் ஈ. திருவாளர் பங்கு முதலாளிதான் சிலந்தி. இந்த ஆளின் பங்குகள் மதிப்பில் இரட்டிப்பாகவும் மும்மடங்காகவும் உயர்ந்து செல்கின்றன.
ஆயினும் இவர் திருப்தியடைவதே இல்லை, மேலும் மேலும் உயர்ந்த லாப விகிதங்கள் வேண்டுமென்கிறார், தொழிலாளர்களுடைய உழைப்பின் பயன்களை அவர்களிடமிருந்து சூறையாடிக் கொண்டு விடுகிறார். தொழிலாளர்கள் சொற்ப அளவு கூலி உயர்வு கேட்கத் துணிவார்களாயின் ராணுவத்தை அழைத்துக் கலகக்காரர்களுக்குத் துப்பாக்கிக் குண்டுகளின் சுவையைத் தெரியப்படுத்துகிறார்.
சின்னஞ் சிறு வயதில் அறியாப் பருவத்தில் ஆலையிலும் பட்டறையிலும் பிறகு வீட்டிலும் மாடாய் வேலை செய்து குடும்பச் செலவுக்கு, வரவை இணையாக்க உதவ வேண்டியிருக்கும் சிறு பிள்ளை தான் ஈ. போதாமையால் தம் குழந்தைகளைக் காவு கொடுக்கும்படி பலவந்தம் செய்யப்படும் ஏழைப் பெற்றோர்களல்ல சிலந்தி; இயற்கை உணர்ச்சிகளின் இந்த வக்கரிப்புகளை, தனது சொந்தக் குடும்பம் இப்படி நாசமாவதை மாறாத மூர்க்க விதியாக்கும் இன்றைய அடாத நிலைமைகளே தான் சிலந்தி.
மக்களுடைய மகளாய்ப் பிறந்த மதிப்புக்குரிய மங்கை நேர்மையாய் வாழ வழி தேடுகிறாள், ஆனால் ஆலை முதலாளி அல்லது டைரக்டரின் காமவெறிக்குப் பணியாவிடில் வேலை பெற முடியாதவளாய்த் திண்டாடுகிறாள். அவளைக் கெடுக்கும் அந்த ஆள் பிற்பாடு – பல சந்தர்ப்பங்களில் பிள்ளையும் பிறக்கப் போகும் நிலையில் – “மானத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக” ஈவிரக்கமின்றி மெத்தனமாய் அவளை நடுத்தெருவில் விடவே நிற்கதியாகிறாள் – அவள் தான் ஈ.
தளுக்கு இளைஞன், “உயர் குடும்பத்தில்” பிறந்த வீணன், கூத்தடித்துத் திரிந்து அறியாப் பெண்களைச் சீரழித்துச் சாக்கடையிலே தள்ளுகிறானே, இப்படித் தன்னால் சீரழிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தன் மதிப்பும் உயர்வதாய்க் கருதுகிறானே அவன் தான் சிலந்தி.
நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைக்கும் உழவர்களே, செல்வந்தர்களான நிலப்பிரபுக்களுக்காக நிலத்தை உழுது நீங்கள் அறுத்தெடுத்துக் கொள்ளப் போகாத பயிரை விதைத்தும், நீங்கள் சுவைக்கப் போகாத கனிகளை வளர்த்தும் வரும் நீங்கள் தான் ஈ. தான் சொகுசாய்ச் சுகபோக ஆடம்பர வாழ்க்கை நடத்துவதற்காகத் தனது ஏழைச் சாகுபடியாளர்களையும் பண்ணையடிமைகளையும் கூலியாட்களையும் கணப்பொழுதும் ஓய்வின்றி வேலை வாங்கும் அந்த நிலப்பிரபுதான், ஆண்டுக்கு ஆண்டு வாரத்தை(2) உயர்த்தியும் நேர்மையான உழைப்புக்குரிய கூலியைக் குறைத்தும் செல்லும் அந்த நிலப்பிரபுதான் சிலந்தி.
ஏழையும் எளியோருமான நாம் எல்லோரும் தான் ஈ. நீண்ட நெடுங்காலமாய் வழிபாட்டு மேடையின் படிகளில் நின்று நடுங்கியும், சமயக் குருமார்களது சாபச் சொற்களுக்குத் தலைவணங்கியும், சமயச் சபையின் கீர்த்திக்காகவும் உல்லாச விளையாட்டுக்காகவும் போராடியும் ஒருவரையொருவர் அடிமை செய்தும் வந்திருக்கும் நாம் தான், அவர்களுடைய சமயப் போதனையின் நலிவுறச் செய்யும் செல்வாக்குக்கு உட்பட்டு ஆன்மீக முடவர்களாகிவிட்டோம். ஆதலால், நமது முதுகு ஓடிய வளைந்தும் மண்டியிட்டும் வந்துள்ள நாம் தான், நமது ஒடுக்குமுறையாளர்களை அவர்களது அநீதியின் பலன்களை அனுபவிக்கும்படி விட்டு வந்துள்ள நாம் தான் ஈ.
கறுப்பு அங்கி அணிந்து நயவஞ்சகமும் பேராசையும் நிறைந்த பார்வை கொண்டுள்ள அந்த குருமார் தான், இழிநிலையிலே இருத்தும் தனது போதனையின் மூலம் தனது பக்த கோடிகளின் எளிய உள்ளங்களை மயக்கங் கொள்ளச் செய்து பணிந்து ஒடுங்கும் அடிமைப் புத்தியை வளர்த்தும், இதன் மூலம் மக்களது ஆன்மாவை மாசுபடுத்தியும், போலந்தின் விவகாரத்தில்(3) நடைபெற்றது போல் தேசங்களையே பாழ்பட வைத்தும் செல்லும் அந்த சமயக் குருமார் தான் சிலந்தி.
சுருங்கக் கூறினால் ஒடுக்கப்பட்டோரும் அடிமைப்பட்டோரும் சுரண்டப்படுவோரும் தாம் ஈ. கேடுகெட்ட ஊக வாணிபக்காரர் என்றோ, சட்ட முறையற்ற கொடுங்கோலர் என்றோ எப்படி வேண்டுமாயினும் அழைக்கப்படத் தக்கவராயுள்ள அவரேதான் சிலந்தி.
சிலந்தி முன்னொரு காலத்தில் அரண்கள் செய்யப்பட்ட பெரிய கோட்டைகளிலும் நிலப்பிரபுத்துவப் பண்ணைகளிலும் தனது வலையைப் பின்னி வந்தது. இன்று அது பெரிய தொழில் மையங்களில், இக்காலத்துப் புண்ணியவான்களது செல்வமனைகளில் தன்னை இருத்திக் கொள்ள முனைகிறது. பெரும்பாலும் ஆலை நகரங்களில் தான் அதை அதிகமாய்க் காண்கிறோம்.
ஆயினும் கிராமப்புறங்களிலும் சிறு ஊர்களிலும் அது வலை பின்னிக் கொண்டுதான் இருக்கிறது. எங்கே சுரண்டல் தாண்டவமாடுகிறதோ, எங்கே தொழிலாளியும் சொத்தில்லாத பாட்டாளியும் சிறு கைவினைஞரும் நாட்கூலியாரும் கடன் சுமை தாங்காமல் வருந்தும் சிறுவிவசாயியும் ஊகவாணிபர்களது வரைமுறையற்ற லாப வெறிக்கு ஈவிரக்கமின்றி உட்படுத்தப்படுகிறார்களோ அங்கெல்லாம் அது இருக்கக் காணலாம்.
அது எங்கே இருப்பினும், நகரமாயினும் கிராமமாயினும், அங்கே பேதைகளான ஈக்கள் பகைவரது வலைகளில் சிக்கிக் கொண்டு தப்ப முடியாமல் தவிப்பதைக் காணலாம், துடிதுடித்துப் பலமிழந்து ஓய்ந்து உலர்ந்து போய் மடிவதைக் காணலாம்.
பல மில்லாத மெல்லிய ஈக்கும் இரத்த வெறி கொண்ட கொடூரச் சிலந்திக்கும் இடையே எத்தனையோ நூறு ஆண்டுகளாய் நடைபெறும் இந்தப் போரில் புரியப்பட்டுள்ள சொல்லொணாத படுபயங்கரங்களுக்கு அளவே இல்லை! இந்தக் கதை கொடுமையிலும் கொடுமையானது. அதைத் திரும்பவும் சொல்ல வேண்டியதில்லை. நடந்தது நடந்து விட்டது, கடந்த காலம் போகட்டும், நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பற்றிப் பேசுவோம்.
சிலந்திக்கும் ஈக்கும் இடையே நடைபெறும் இன்றைய போராட்டத்தை நெருங்கிச் சென்று உற்று நோக்குவோம். நிலைமையை உள்ளது உள்ளபடி நாம் உணர்ந்து கொண்டாக வேண்டும். ஈக்களாகிய நாம் நமது பகைவர்கள் நமக்காக மீண்டும் எப்படிப்பட்ட கண்ணிகளை வைத்தமைத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் கண்டு கொண்டாக வேண்டும். யாவற்றுக்கும் மேலாய் நாம் ஒன்றுபட்டாக வேண்டும்.
நாம் தனித்து நிற்கும் வரை நம்மைக் கட்டியிருத்தி வைக்கும் வலைப் பின்னல்களைப் பிய்த்தெறியப் பலமற்றோராகவே இருப்போம். நமக்கு விலங்குகளிடும் சங்கிலிகளை உடைத்தெறிவோம், நமது பகைவர்களை அவர்களது பதுங்கு இடங்களிலிருந்து விரட்டியடிப்போம், எங்கும் அறிவின் பிரகாச ஒளியைப் பரப்புவோம், பேய்த் தனமான இந்தச் சிலந்தி இனி எந்நாளும் இருண்ட மூலையில் இருந்து தனது கொலைகாரக் கைங்கரியத்தைச் செய்ய வழியில்லாதபடி செய்வோம்!
ஈக்களே, நீங்கள் விரும்பினால், மெய்யாகவே விரும்பினால், யாராலும் உங்களை வெல்ல முடியாதபடி நீங்கள் பெரும் பலம் படைத்தோராகிவிட முடியும்! மெய் தான், இன்றும் சிலந்திகள் பலமுடையதாகவே இருக்கின்றன, ஆனால் எண்ணிக்கையில் அவை மிகமிகச் சொற்பம். ஈக்களான நீங்கள் சின்னஞ் சிறியவர்களாய் இருப்பினும், செல்வாக்கு இல்லாதிருப்பினும், எண்ணிக்கையில் அதிகமாய் இருப்பவர்கள்; வாழ்வே நீங்கள் தான், உலகமே நீங்கள் தான் – மெய்யாகவே நீங்கள் விரும்புவீர்களாயின் எல்லாமே நீங்கள்தான்!
நீங்கள் ஒன்றுபட்டால், உங்களுடைய இறக்கைகளின் ஒரேயொரு வீச்சாலேயே எல்லா இழைகளையும் அறுத்தெறிந்துவிடலாம், இன்று உங்களைக் கெட்டியாய்க் கட்டி, அடக்கி வைத்திருக்கும் சிலந்தி வலைகளை எல்லாம், உங்களைத் திணற வைத்துத் துடிக்கச் செய்து பட்டினியால் சாகடிக்கும் இந்த வலைகளை எல்லாம் அடியோடு துடைத்தெறிந்துவிடலாம், வறுமையையும் அடிமை வாழ்வையும் நீங்கள் ஒழித்துக் கட்டிவிடலாம். மெய்யாகவே நீங்கள் விரும்புவீர்களாயின் எல்லாம் செய்யலாம்!
ஆகவே விரும்பக் கற்றுக் கொள்ளுங்கள்!
அடிக்குறிப்புகள்:
மார்க் – ஜெர்மன் மார்க் – ஜெர்மன் நாணய முறை.
வாரம் – நிலவாரம் – நிலவுடைமையாளர்கள் மற்றும் நிலப்பிரபுக்களுக்கு விவசாயிகள் கொடுக்க வேண்டிய நிலவாடகை, நிலத்துக்கான குத்தகை.
ஆஸ்திரிய மற்றும் பிரஷ்யவுக்கு எதிரான போலந்தின் தேசிய விடுதலை எழுச்சியில் சமயகுருமார்கள் அடிமைச் சிந்தனையை பரப்பி தேசத்தின் ஆன்மாவை சீரழித்தனர்.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுத்து நிறுத்துவது என்ற பொய்யான காரணத்தைக் கூறி, கடந்த பிப்ரவரி 28, 2026 அன்று அமெரிக்காவும் அதன் பிராந்திய அடியாளான இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது மாபெரும் இராணுவத் தாக்குதல்களைத் தொடங்கின. சரிந்து வரும் தனது உலக மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், ஈரானின் எண்ணெய் வளங்களைக் கொள்ளையடிக்கவுமே அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்த அநீதியான போரைத் தொடுத்திருக்கிறது. இந்த அடாவடியான போரால், உலக எரிசக்தி விநியோகச் சங்கிலியில் பெரும் உடைப்பு ஏற்பட்டு, பல நாடுகள் நெருக்கடியில் சிக்கியுள்ளன.
இப்போரின் தொடக்கத்திலேயே, ஈரானின் அதியுயர் தலைவரான அயத்துல்லா அலி கமேனியும், பல மூத்த தலைவர்களும் அமெரிக்காவால் படுகொலை செய்யப்பட்டனர். இரத்தத்தை உறையவைக்கும் இந்த அரச பயங்கரவாதத்தின் உச்சமாக, மினாப் பள்ளிக்கூடத்தில் நடத்தப்பட்ட கொடூரமான குண்டுவீச்சில் குறைந்தது 168 பெண் குழந்தைகள் துடிதுடிக்கக் கொல்லப்பட்டனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்தச் சட்டவிரோதமான, அறமற்ற தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் தனது எதிர் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியது. இதன் ஓர் அங்கமாக, உலக எரிசக்தி வர்த்தகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) முடக்குவதாக ஈரான் அறிவித்துள்ளது.
பாரசீக வளைகுடாவிற்கும், ஓமன் வளைகுடாவிற்கும் இடையே உள்ள 33 கி.மீ. அகலம் கொண்ட மிகக் குறுகலான கடல்பரப்புதான் இந்த ஹார்முஸ் நீரிணை. இதுதான் எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஆசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பிற நாடுகளுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாகத் திகழ்கிறது. உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவிகிதமும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) வர்த்தகத்தில் 20 சதவிகிதமும், கடல்வழி உர வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கும் இந்த நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. குறிப்பாக, இந்தியாவிற்குத் தேவையான 40 சதவிகித கச்சா எண்ணெயும், 50 சதவிகித இயற்கை எரிவாயுவும் இப்பாதை வழியாகவே வரவேண்டும்.
மார்ச் மாதத் தொடக்கத்தில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்கள் இப்பாதையைக் கடக்க ஈரான் தடை விதித்ததோடு, பல வணிகக் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. இதனால் 97 சதவிகித அளவிலான கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான சரக்குக் கப்பல்கள் ஓமன் வளைகுடா பகுதியிலேயே தேங்கின. இதன் விளைவாக, சர்வதேசச் சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent crude oil) விலை பீப்பாய் ஒன்றுக்கு 119 முதல் 120 டாலர்கள் வரை உயர்ந்து, பல ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது.
ஈரானைப் பணிய வைக்க வேண்டும் என்பதற்காக, அதன் ஆற்றல் வளங்களான மின் நிலையங்கள், எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் குறிவைத்துத் தாக்குதல் நடத்துகின்றன. அந்த வகையில், கடந்த மார்ச் 18 அன்று ஈரானின் இயற்கை எரிவாயு நிலையமான “தெற்கு பார்ஸ்” (South Pars) மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதற்குப் பதிலடியாக, அமெரிக்க பன்னாட்டு ஏகபோகங்களின் முதலீடுகளையும் நலன்களையும் கொண்டுள்ள சவுதி அரேபியா, குவைத் மற்றும் கத்தார் நாடுகளின் எண்ணெய்-எரிவாயு நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தியது. மேலாதிக்க வெறிபிடித்த அமெரிக்கா-இஸ்ரேலின் இப்போர்வெறி ஒரு மாபெரும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை தோற்றுவித்துள்ளது.
இந்த உற்பத்தி நிலையங்களை மறுகட்டமைப்பு செய்து உற்பத்தியை மீட்க 3 முதல் 5 ஆண்டுகள் ஆகலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. எரிசக்தி உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தும் இந்த நிலை நீடித்தால், கொரோனா பேரிடர் காலத்தைவிட தீவிரமான விவசாய-தொழிற்துறை முடக்கம், வாழ்வாதார-வேலையிழப்பு என ஒரு மிகப்பெரும் சமூக நெருக்கடியை உலகம் சந்திக்கும் அபாயம் தலைமேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது.
சமையல் எரிவாயுத் தட்டுப்பாடும் விறகடுப்பிற்குத் திரும்பும் மக்களும்
மத்திய கிழக்கில் நடக்கும் போர், இந்தியாவின் கடைக்கோடி கிராமங்களில் உள்ள அடுப்பங்கரைகளையும் பாதிக்கும் என்று சாதாரண மக்கள் கற்பனை செய்துகூடப் பார்த்திருக்க மாட்டார்கள். ஏகாதிபத்தியமும் அதன் உலகமயக் கொள்கையும் உலக நாடுகளை ஒற்றைச் சங்கிலியில் இணைத்துள்ளன; இதில் ஏற்படும் எந்தவொரு பாதிப்பும் மற்ற நாடுகளையும் பாதிக்கும் என்பதைத்தான் இந்த மத்திய கிழக்குப் போர் எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்தச் சமையல் எரிவாயுத் தேவையில் சுமார் 50 சதவிகிதத்தை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே இந்தியா இறக்குமதி செய்கிறது. எனவே, இப்பகுதியில் நிலவும் விநியோக முடக்கம் இந்தியாவில் கடுமையான எரிவாயுத் தட்டுப்பாட்டை உண்டாக்கியுள்ளது.
ஈரானில் போர் தொடங்கிய சில நாட்களிலேயே, இந்தியாவில் சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு பூதாகரமாகியது. சமையல் எரிவாயு உடனுக்குடன் கிடைக்கும் என்ற நிலை மாறி, முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளி நகர்ப்புறங்களுக்கு 25 நாட்களாகவும் கிராமப்புறங்களுக்கு 45 நாட்களாகவும் அதிகரிக்கப்பட்டது. முன்பதிவு செய்வதற்கான தொலைத்தொடர்பு சேவைகளும் முடங்கியதால் மக்கள் நிலைகுலைந்துப் போயினர். டெல்லி, உத்தரப்பிரதேசம் எனப் பல மாநிலங்களில் மக்கள் காலி சிலிண்டர்களுடன் விநியோக நிறுவனங்களின் முன் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கும் அவலம் அரங்கேறியது.
சிலிண்டருக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்.
இந்த அவலத்தின் உச்சமாக சிலிண்டர் வாங்குவதற்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த சங்கர்ராவ் சிர்சாத், பஞ்சாப்பைச் சேர்ந்த பூஷன் குமார் மிட்டல், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த வீரேந்திர குமார் ஆகிய மூன்று பேர் மயங்கி விழுந்தும் மாரடைப்பாலும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும், சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்கள், கேன்டீன்கள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டதாலும், வாழ்வாதாரம் முடங்கியதாலும் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். மீண்டுமொரு கொரோனா ஊரடங்கை எதிர்கொள்ளப் போகிறோமா என்ற அச்சம் அவர்களை சூழ்ந்துள்ளது.
மறுபுறம், இந்த சிலிண்டர் தட்டுப்பாட்டால் பதுக்கலும் கள்ளச்சந்தையும் பெருகியுள்ளது. குறிப்பாக, வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் தட்டுப்பாட்டால், சிறு உணவகங்கள், தேநீர்க் கடைகளை நடத்துவோர் தங்களது தொழிலைத் தக்கவைத்துக் கொள்வதற்காக வேறுவழியின்றி வீட்டு உபயோக சிலிண்டர்களைக் கள்ளச்சந்தையில் தேடிச் செல்கின்றனர். இவ்வாறு வணிகத் தேவைக்காக வீட்டு உபயோக சிலிண்டர்கள் சட்டவிரோதமாகத் திசைதிருப்பப்படுவதால், அதன் கள்ளச்சந்தை விலை ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை எட்டியுள்ளது. திருப்பூரில் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதற்காகப் பதுக்கப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றால், இந்தியா முழுவதும் எந்த அளவுக்கு மாஃபியாக்கள் செயல்படுகின்றன என்பதைக் கற்பனை செய்தால் நெஞ்சம் பதறுகிறது.
சாதாரண உழைக்கும் மக்களோ, இத்தகைய கள்ளச்சந்தை விலையைக் கொடுத்து வாங்க முடியாமல் விறகடுப்பிற்கு மாற வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நகர்ப்புறங்களில் விறகடுப்பைப் பயன்படுத்த வாய்ப்பில்லாத நிர்பந்தத்தில் இருக்கும் மக்கள், பசியிலும் பட்டினியிலும் வாடும் சூழல் உருவாகியுள்ளது. இவ்வாறு, போர் தீவிரமடைந்து மக்கள் தவிக்கும் வேளையில், ஒன்றிய மோடி அரசோ “தட்டுப்பாடு இல்லை” எனப் பொய்களை ஓயாமல் பரப்பிக் கொண்டிருக்கிறது.
நாடாளுமன்றத்தில் நின்றுகொண்டு, “இந்தியாவில் எரிவாயுத் தட்டுப்பாடே இல்லை; உற்பத்தியை 25 சதவிகிதம் அதிகரித்துத் தடையின்றி விநியோகிக்கிறோம்” என்று முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிறார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இன்னொருபுறம், தமிழ்நாட்டு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனோ, “சிலிண்டர் தட்டுப்பாடெல்லாம் இல்லை; நானே சிலிண்டர் ஏஜென்சி நடத்துகிறேன், எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன்” என்று மக்களின் துயரத்தை எள்ளி நகையாடுகிறார்.
சமூக வலைதளங்களில் பா.ஜ.க. ஆதரவாளர்கள், மின்சார அடுப்புகளுக்கு மாறுங்கள் என்று ‘அறிவுரை’ சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், கோடிக்கணக்கான மக்கள் ஒரே சமயத்தில் மின்சார அடுப்புகளைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற மின்கட்டமைப்பு வசதி இந்தியாவில் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. இந்தியாவின் மின்சாரக் கட்டமைப்புகள் ஒரு சில மின்விளக்குகள் எரிவதற்கான தேவைக்காகவே வடிவமைக்கப்பட்டவை என்று துறை சார்ந்தவர்கள் கூறுகிறார்கள். மொத்தத்தில், எவ்வித உண்மையான மாற்று வழியுமின்றி, உழைக்கும் மக்களைக் கையறு நிலையில் நிறுத்தியிருக்கிறது பாசிச மோடி அரசு.
வணிக எரிவாயுத் தட்டுப்பாடும் முடங்கிய சிறு உணவகங்களும்
சமையல் எரிவாயுத் தட்டுப்பாட்டின் அடுத்தகட்டப் பாதிப்பு, வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு உருளை விநியோகத்தில் எதிரொலித்தது. எந்தவித முன்னறிவிப்புமின்றி உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான வணிக சிலிண்டர்களின் விநியோகம் முடக்கப்பட்டதால், தெருவோரக் கடைகள் முதல் பெரிய உணவகங்கள் வரை சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளாகியுள்ளன. அன்னபூர்ணா, அடையாறு ஆனந்தபவன், சரவணபவன் போன்ற பெரிய உணவகங்களிலும் கூடத் தட்டுப்பாடு நிலவுவதால், இத்தகைய பெரிய நிறுவனங்கள் தங்களது வருவாயில் 40 முதல் 45 சதவிகிதம் வரை இழப்பைச் சந்தித்து வருகின்றன; பல உணவு வகைகளைத் தவிர்த்து வருகின்றன. பெரிய உணவகங்களுக்கே இந்த நிலைமை என்றால், பல தெருவோரக் கடைகளோ எரிவாயுத் தட்டுப்பாட்டால் தொழில் நடத்த முடியாமல், வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றன.
இந்த நெருக்கடியின் கோரமுகத்தை நொய்டாவில் உள்ள ஒரு உணவகம் அப்பட்டமாகக் காட்டுகிறது. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களால் நடத்தப்படும் “சான்வ் ஃபவுண்டேஷன்” (Chhanv Foundation) உணவகம், எரிவாயு இல்லாததால் தனது சமையல் பணிகளை முழுமையாக நிறுத்தியுள்ளது. “எரிவாயு இல்லை என்றால் வருமானம் இல்லை; வருமானம் இல்லை என்றால் நாங்கள் எங்கே போவது?” என்ற அந்தப் பெண்களின் கேள்வி, மாற்று வழியின்றித் தவிக்கும் உழைக்கும் மக்களின் கையறு நிலையைக் காட்டுகிறது.
தங்களது வாழ்வாதாரத்தைத் தக்கவைக்கப் போராடும் சிறு உணவகங்கள், அதிக எரிவாயு தேவைப்படுகிற சப்பாத்தி, வறுவல், பூரி மற்றும் “சாட்” வகைகளைத் தங்களது உணவுப் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளன. ஏழைத் தொழிலாளர்களின் பசியாற்றும் மலிவு விலைத் தேநீர் கூட இன்று பல இடங்களில் கிடைக்காத அரிய பொருளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டு வேலையில்லா இளைஞர்களைப் “பக்கோடா” போட்டுப் பிழைக்கச் சொன்ன ஒன்றிய மோடி அரசு, இன்று அந்தப் பிழைப்பிற்கும் உலை வைக்கும் விதமாக எரிசக்தி நெருக்கடியை மோசமாகக் கையாண்டு, உழைக்கும் மக்களின் வயிற்றில் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறது.
எரிவாயுத் தட்டுப்பாட்டினால் ஏற்பட்ட உற்பத்திச் செலவு உயர்வு, நேரடியாக உணவுப் பொருட்களின் விலையேற்றத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. சாதாரண கடைகளில் தேநீர், போண்டா, பஜ்ஜி போன்றவற்றின் விலையும் கணிசமான அளவு கூடியிருக்கிறது. ஆட்டோ ஓட்டுநர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் எனப் பசியைத் தேநீரிலும் மலிவு விலை உணவிலும் போக்கிக் கொள்ளும் உழைக்கும் வர்க்கத்தையே இந்த விலையேற்றம் மிகக் கடுமையாக வாட்டுகிறது.
இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி, சில பெரிய உணவகங்கள் “எரிவாயு நெருக்கடிக் கட்டணம்” அல்லது “எரிபொருள் மீட்புக் கட்டணம்” என்ற பெயரில் நுகர்வோர் மீது கூடுதல் கட்டணங்களைச் சட்டவிரோதமாக விதிக்கின்றன. இது நியாயமற்ற வர்த்தக நடைமுறை எனவும், வழிகாட்டுதல்களுக்கு முரணானது எனவும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அறிவித்திருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, சென்னையில் 30 சதவிகித உணவகங்களும், மும்பை மற்றும் பெங்களூருவில் 20 சதவிகித உணவகங்களும் மூடப்பட்டிருக்கின்றன. உணவகங்களின் மின்சாரப் பயன்பாட்டிற்கு ரூ.2 மானியம் அளித்துள்ள தமிழ்நாடு அரசு, வேலையிழந்த பல லட்சம் தொழிலாளர்களுக்கு எந்தவித நிவாரணத்தையும் அறிவிக்கவில்லை. எரிவாயுத் தட்டுப்பாடு குறித்துக் கணக்கெடுக்கிற ஒன்றிய அரசும், தொழிலாளர்கள் குறித்து எந்த அக்கறையையும் காட்டவில்லை. இது அரசுகளின் வர்க்கச் சார்பு என்னவாக உள்ளது என்பதை பளிச்சென அம்பலப்படுத்துகிறது.
தொழிற்துறை டீசல் விலை உயர்வும் முடங்கும் சிறு தொழில்களும்
கச்சா எண்ணெய் விலையேற்றத்தைக் காரணமாகக் காட்டி, சில்லறை விலையை உயர்த்தினால் மக்கள் கொந்தளிப்பார்கள் என்ற அச்சத்தில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஒரு தந்திரத்தைக் கையாண்டுள்ளன. பொதுமக்களுக்கான சில்லறை விலையைத் தொடாமல், தொழிற்சாலைகள் மற்றும் சரக்குப் போக்குவரத்திற்குத் தேவையான மொத்தக் கொள்முதல் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.22 வரை ஒரே நாளில் உயர்த்தியுள்ளன. இந்த 25 சதவிகித விலை உயர்வானது, உற்பத்தி மற்றும் சரக்குப் போக்குவரத்துச் செலவைப் பன்மடங்காக்கி, மக்கள் மீது மறைமுகமாகப் பணவீக்கத்தைச் சுமத்துகிறது. மேலும், ஏற்கெனவே ஜி.எஸ்.டி., மூலப்பொருட்கள் விலை உயர்வு மற்றும் மின்சாரத் தட்டுப்பாட்டால் தத்தளித்து வரும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) மீது இந்த டீசல் விலையேற்றம் பேரிடியாக இறங்கியுள்ளது.
குறிப்பாக, பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், மிதிவண்டி மற்றும் கனரக இயந்திர உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடியில் உள்ளனர். இதுகுறித்து வர்த்தகம் மற்றும் தொழில்துறை நிறுவனங்களின் சங்கத்தின் தலைவர் பங்கஜ் சர்மா கூறுகையில், “கடந்த 20 நாட்களில் லேசான டீசல் எண்ணெய் (Light diesel oil), பர்னஸ் ஆயில் (Furnace oil) மற்றும் பெட்கோக் (Petroleum coke) விலைகள் 25 சதவிகிதம் உயர்ந்துள்ளன. இது உலோக வடித்தல் (Forging) துறையைக் கடுமையாகப் பாதித்துள்ளது” என வேதனை தெரிவித்துள்ளார். பஞ்சாபில் ஜெனரேட்டர்களையும், ஃபர்னஸ்களையும் இயக்க முடியாமல் 30 முதல் 35 சதவிகித தொழிற்சாலைகள் முடங்கியுள்ளன. இதே அவலநிலைதான் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் குஜராத்தின் தொழில் மண்டலங்களிலும் நிலவுகிறது.
இந்தப் போரின் மற்றுமொரு நேரடிப் பாதிப்பாக, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பல லட்சம் பெண்களின் வாழ்வாதாரமாக விளங்கும் தீப்பெட்டித் தொழில் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தீப்பெட்டித் தயாரிப்பிற்கு மிக முக்கியமான மூலப்பொருளான பாரஃபின் மெழுகு (Paraffin wax), ஈரானிலிருந்துதான் பெருமளவில் (ஆண்டுக்கு 1 முதல் 1.5 லட்சம் மெட்ரிக் டன்கள்) இறக்குமதி செய்யப்படுகிறது. போர் காரணமாக இறக்குமதி தடைப்பட்டுள்ளதால், அதன் விலை ஒரு கிலோ ரூ.80-லிருந்து ரூ.130-ஆக எகிறியுள்ளது. ஏற்கெனவே ஜி.எஸ்.டி. மற்றும் பிளாஸ்டிக் லைட்டர்களின் ஆதிக்கத்தால் நலிந்து வரும் இத்தொழில், இப்போது மூலப்பொருள் தட்டுப்பாட்டால் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் பெண் தொழிலாளர்கள் வேலையிழப்பைச் சந்திக்கும் பேராபத்து உருவாகியுள்ளது.
இது தவிர, சேலத்தின் கொலுசுப் பட்டறைகள், கோயம்புத்தூரின் வார்ப்படத் தொழில்கள் (Foundry industry), குஜராத்தின் செராமிக் நிறுவனங்கள் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் கண்ணாடித் தொழிற்சாலைகள் உள்ளிட்டவை எரிசக்தி நெருக்கடியில் சிக்கித் தத்தளிக்கின்றன.
நெருக்கடியில் இந்திய விவசாயமும் உரத் தட்டுப்பாடும்
ஏற்கெனவே ஏகாதிபத்தியப் போரின் விளைவாக உலகளாவிய உரப் பற்றாக்குறை மற்றும் விலையேற்றத்தால் தத்தளித்து வரும் இந்திய விவசாயத்திற்கு, இந்தப் போர் மற்றுமொரு பேரிடியாக விழுந்துள்ளது. உலகின் மிகப்பெரிய யூரியா ஏற்றுமதி நாடான கத்தார், தனது ஆலைகள் முடங்கியதால் உற்பத்தியைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதனால் சர்வதேசச் சந்தையில் யூரியா விலை ஒரே மாதத்தில் 50 சதவிகிதம் உயர்ந்து, ஒரு மெட்ரிக் டன் 700 டாலரைத் தாண்டியுள்ளது.
உரத் தயாரிப்புக்குத் தேவையான இயற்கை எரிவாயு இறக்குமதி முற்றிலுமாகத் தடைப்பட்டதால், இந்தியாவில் உள்ள 3 உர ஆலைகளும், வங்கதேசத்தில் உள்ள 4 ஆலைகளும் உற்பத்தியை முழுமையாக நிறுத்தியுள்ளன. மார்ச் 19-ஆம் தேதியிட்ட புள்ளிவிவரப்படி, இந்திய அரசிடம் வெறும் 6.2 மில்லியன் டன் உரம் மட்டுமே கையிருப்பாக உள்ளது. இந்த மாபெரும் நெருக்கடியான சூழலில் இந்தக் கையிருப்பு சிறிதும் போதாது.
ஜூன் மாதம் தொடங்கும் “காரீஃப்” (Kharif) எனப்படும் மழைக்காலச் சாகுபடி பருவம் மற்றும் அக்டோபரில் தொடங்கும் “ரபி” (Rabi) எனப்படும் குளிர்காலச் சாகுபடி பருவம் ஆகிய இரண்டிலும் பயிர் விளைச்சலுக்குத் தேவையான யூரியா, பொட்டாஷ் மற்றும் டி.ஏ.பி. போன்ற உரங்கள் கிடைக்காமல் போனால் மகசூல் பாதியாகக் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சீனாவும் தனது உள்நாட்டுத் தேவைக்காக உர ஏற்றுமதியைத் தடை செய்துள்ள நிலையில், உலகளாவிய உரப் பற்றாக்குறை இந்தியாவில் மாபெரும் உணவுப் பஞ்சத்திற்கு வழிவகுக்கும். ஏற்கெனவே இடுபொருட்களின் விலை உயர்வால் கடனாளியாகி நிற்கும் இந்திய விவசாயிகள், இப்போது உரத் தட்டுப்பாட்டினால் விவசாயத்தையே கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் போர்வெறிக்காக, இந்திய உழைக்கும் மக்களின் உணவுப் பாதுகாப்பையும் அடகு வைத்திருக்கிறது மோடி அரசு. இந்தத் தட்டுப்பாடானது உணவுப் பொருட்களின் விலையேற்றத்தை உண்டாக்கி, கோடிக்கணக்கான ஏழை மக்களைப் பசிக்கும் பட்டினிக்கும் இட்டுச் செல்லும் ஒரு பேராபத்து நம் கண்முன்னே தெரிகிறது.
ஏகாதிபத்தியச் சரணாகதி
எரிசக்தி மற்றும் மூலப்பொருள் தட்டுப்பாட்டால் இந்தக் குறுகிய காலத்தில் மட்டும் இந்தியாவில் கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் தங்களது வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடிக்கு மோடி அரசின் மறுகாலனியாக்கக் கொள்கைகளின் அடிப்படையிலான வெளியுறவுக் கொள்கையும், அமெரிக்க ஏகாதிபத்திய அடிமைத்தனமுமே மூலகாரணமாகும். அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்குப் பயந்து, ஈரானிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதை முன்கூட்டியே நிறுத்திய இந்தியாவின் சரணாகதிக் கொள்கையே இன்று பெரும் நெருக்கடியில் நம்மைச் சிக்க வைத்துள்ளது.
இந்த நெருக்கடியான சூழலிலும்கூட, மாற்று வழியான ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு ஒரு இறையாண்மையுள்ள நாடாகத் தன்னிச்சையாக முடிவெடுக்க மோடி அரசுக்குத் துப்பில்லை. மாறாக, அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தனது சுத்திகரிப்பு ஆலைகளின் லாபத்திற்காக அமெரிக்காவிடம் 30 நாட்களுக்கு தற்காலிக விலக்கு பெற்றுத் தரும்வரை மோடி அரசு கைகட்டிக் காத்திருந்தது.
பெட்ரோலியத் துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி அளித்த தகவலின்படி, இந்தியாவின் கச்சா எண்ணெய் மூலோபாய இருப்பு தற்போது 64 சதவிகிதம் மட்டுமே உள்ளது; முடக்கம் தொடர்ந்தால் இது 5 முதல் 9.5 நாட்களுக்கு மட்டுமே தாக்குப் பிடிக்கும். இவ்வளவு பெரிய ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையிலும், ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியபோது முதல் ஆளாகக் கண்டித்த ‘விஸ்வகுரு’ மோடி அரசு, ஈரானின் அதியுயர் தலைவர் படுகொலை செய்யப்பட்டதற்கோ அல்லது மினாப் பள்ளியில் 168 குழந்தைகள் கொல்லப்பட்டதற்கோ ஒரு சிறு கண்டனத்தைக் கூடத் தெரிவிக்கவில்லை. மாறாக, ஐ.நா. சபையில் ஈரானுக்கு எதிரான தீர்மானத்திற்கு ‘இணை ஸ்பான்சராகவும்’ (Co-sponsor) நின்றது.
இந்தியக் கடற்படையுடன் பயிற்சியில் பங்கேற்க விருந்தினராக வந்த ஈரான் கப்பலை நயவஞ்சகமாக தாக்கிய அமெரிக்காவை கண்டிக்க வக்கற்று போனது பாசிச மோடி அரசு. மேலும், பிப்ரவரி மாதத்தில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சென்ற ஈரான் கப்பல்களை அமெரிக்க அடியாளாகச் செயல்பட்டு இடைமறித்துக் கைது செய்தது பச்சையான அடிமைத்தனமாகும். இவ்வளவையும் செய்துவிட்டு, இந்தியாவின் கச்சா எண்ணெய், எரிவாயுக் கப்பல்களை அனுமதிக்கும்படி ஈரானிடம் கெஞ்சிக் கூத்தாடிக் கொண்டிருப்பதையே இராஜதந்திரம் என பீற்றிக்கொள்வதை விடக் கேவலம் வேறு இருக்க முடியுமா?
இந்த நெருக்கடிக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் பின்பற்றப்படும் தனியார்மய-தாராளமய-உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கையே முக்கியக் காரணமாகும். இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 90 சதவிகிதம் இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. எரிசக்தித் துறையில் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டமைப்பு சிதைக்கப்பட்டு, அம்பானி-அதானி போன்ற கார்ப்பரேட் கும்பலின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டு வருகிறது.
அதேபோல், உள்நாட்டில் எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் தவிக்கும் இந்த இக்கட்டான சூழலிலும், அம்பானி-அதானி போன்ற கார்ப்பரேட்டுகளின் கொள்ளை லாபத்தைப் பாதுகாப்பதிலேயே பாசிச மோடி அரசு குறியாக உள்ளது. உள்நாட்டில் மக்கள் தவிக்கும்போது, அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஐரோப்பாவிற்கு எரிபொருளை ஏற்றுமதி செய்து பல்லாயிரம் கோடி ரூபாய்களைக் கொள்ளையடிக்க மோடி அரசு அனுமதிக்கிறது. மற்றொருபுறம், சிலிண்டர் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, 2034-ஆம் ஆண்டிற்குள் ஒரு கோடி குழாய் இணைப்புகளைக் கொடுத்து ஒட்டுமொத்த சமையல் எரிவாயு சந்தையையும் அதானிக்குத் தாரைவார்க்கும் வேலை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
நாட்டில் எவ்வளவு நெருக்கடி நிலவினாலும் கார்ப்பரேட்டுகளின் லாபத்தை உத்தரவாதப்படுத்துவது மட்டுமே பாசிஸ்டுகளின் உத்தியாகும். ஜெர்மனியில் தேசியவெறி மற்றும் யூத இனவெறியை ஊட்டிய ஹிட்லரும் கார்ப்பரேட்டுகளின் லாபத்தைத்தான் உத்தரவாதப்படுத்தினான்; இந்தியாவிலும் பாசிஸ்டுகளின் நோக்கம் கார்ப்பரேட் சேவையே என்பதை இந்த எரிசக்தி நெருக்கடி உணர்த்துகிறது. எனவே, ஏகாதிபத்திய அடிமையாகவும், அம்பானி – அதானிகளின் சேவகனாகவும் உள்ள மோடி அரசைத் தூக்கியெறியும் வீரியமிக்க வர்க்கப் போராட்டத்தைக் கட்டியெழுப்புவது ஒன்றே உழைக்கும் மக்களுக்கான ஒரே மாற்று வழியாகும்!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மாலேகானில், 2006 செப்டம்பர் 8 “ஷப்-இ-பராத்” எனும் இஸ்லாமியர்களின் புனித நாளன்று, இஸ்லாமியர்கள் தொழுகைக்காக கூடியிருந்த மூன்று இடங்களில் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. இதில் 31 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதுடன், 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இப்படுபாதகச் செயல் மீதான விசாரணையானது மாநில பயங்கரவாதத் தடுப்புப் படை, சி.பி.ஐ., என்.ஐ.ஏ. என சுமார் இருபது ஆண்டுகளாக இவ்வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 22 அன்று (புதன்கிழமை) குற்றத்தை நிரூபிக்க நம்பகமான ஆதாரம் இல்லையென கூறி இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேரையும் விடுவித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் இந்திய நீதித்துறை இஸ்லாமிய மக்களுக்கு மீண்டுமொரு துரோகத்தை இழைத்திருக்கிறது. இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
2006 மாலேகான் குண்டுவெடிப்பு போன்று, 2008 இரமலான் மாதத்தில் செப்டம்பர் 29 அன்று மாலேகானிலுள்ள மசூதியருகே குண்டுவெடிப்பு நடத்தப்பட்டு ஆறு இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இவ்வழக்கை விசாரித்த பயங்கரவாதத் தடுப்புப் படை, 2006 மற்றும் 2008 மாலேகான் குண்டுவெடிப்புகள், 2007-இல் சம்ஜௌத்தா விரைவு ரயில் குண்டுவெடிப்பு, அதே ஆண்டு மே மாதத்தில் ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு, நவம்பரில் ராஜஸ்தானின் அஜ்மர் தர்கா குண்டுவெடிப்பு என பல குண்டுவெடிப்புகளை ஆர்.எஸ்.எஸ்-உடன் தொடர்புடைய காவி பயங்கரவாதிகள் திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளனர் என்ற அதிர்ச்சிகர உண்மையை வெளிக்கொணர்ந்தது.
மேலும், மேற்குறிப்பிட்ட குண்டுவெடிப்புகளுக்கு இலக்குகளை தீர்மானித்துக் கொடுத்த ஆர்.எஸ்.எஸ்-இன் முழுநேர ஊழியரான சுவாமி அசீமானந்த் அளித்த ஒப்புதல் வாக்குமூலமானது இக்குண்டுவெடிப்புகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மற்றும் இந்துத்துவ அமைப்புகளுக்கும் இடையிலான தொடர்பை அம்பலப்படுத்தியது. இது, “இஸ்லாமிய பயங்கரவாதம்” என்ற ஒருதலைபட்ச பார்வைக்கு மாறாக, இந்தியாவில் உருவெடுத்துள்ள “காவி பயங்கரவாதத்தை” தோலுரித்ததுடன், இதன் பின்னாலிருந்த சர்வதேச வலைப்பின்னலையும் இந்திய இராணுவ அதிகாரிகளின் கூட்டையும் அம்பலப்படுத்தியது.
இஸ்லாமிய மக்கள் அடர்த்தியாக வசிக்கும் இடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதல்களில் அம்மக்கள் கொன்று குவிக்கப்பட்டதுடன், இஸ்லாமிய வெறுப்பு தீவிரப்படுத்தப்பட்டு, எவ்வித ஆதாரமுமின்றி இஸ்லாமியர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். 2006 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையிலும் முதலில் இஸ்லாமிய இளைஞர்களே கைது செய்யப்பட்டனர். அசீமானந்த் அளித்த வாக்குமூலத்திற்கு பிறகே தற்போது விடுதலையாகியுள்ள நான்கு காவி பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
ஆனால், இத்தகைய திருப்புமுனையை ஏற்படுத்திய இவ்வழக்கை விசாரித்துவந்த பயங்கரவாதத் தடுப்புப் படை அதிகாரி ஹேமந்த் கர்காரே, 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் காவி கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். அதன் பிறகு காவி கும்பலின் ஆதிக்கத்தால் பயங்கரவாதத் தடுப்பு படையின் விசாரணை நிறுத்தப்பட்டு, 2011-இல் இவ்வழக்கு என்.ஐ.ஏ-க்கு மாற்றப்பட்டது. 2014-இல் பாசிச பா.ஜ.க. கும்பல் ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தவுடன், மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு குண்டுவெடிப்பு வழக்குகளிலும் போதிய ஆதாரம் இல்லையென கூறி என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தாலும் பிற நீதிமன்றங்களாலும் காவி பயங்கரவாதிகள் ‘குற்றமற்றவர்களாக’ விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்தாண்டில் 2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் காவி பயங்கரவாதி பிரக்யா சிங் தாக்கூர் உட்பட ஏழு பேரும் “சந்தேகத்தின் பலனில்” விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில்தான், 2006 மாலேகான் குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பானது இக்குண்டுவெடிப்புகளை நடத்தி இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து இந்தியாவெங்கும் காலூன்றுவதற்கான சதியை அரங்கேற்றியது.
இந்த சதி பொதுவெளியில் வெட்டவெளிச்சமாகிவிட்ட போதிலும் இந்திய நீதித்துறை குற்றவாளிகளை விடுவித்து காவி பயங்கரவாதத்திற்கு பல்லக்குத் தூக்குகிறது. இது, இந்திய நீதித்துறை ‘இந்துராஷ்டிரத்திற்கான நீதித்துறை’யாக மறுவார்ப்பு செய்யப்பட்டு வருவதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பாசிச கும்பலை வீழ்த்தி அமைக்கப்படும் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசிலேயே காவி பயங்கரவாதிகளை தண்டித்து உண்மையான நீதியை நிலைநாட்ட முடியும் என்பதை நிரூபிக்கிறது.
தோழமையுடன் தோழர் சி. வெற்றிவேல் செழியன், மாநிலப் பொதுச் செயலாளர், மக்கள் அதிகாரக் கழகம், தமிழ்நாடு – புதுவை. 9962366321
நாடு முழுவதும் தீவிரமடைந்துவரும் மக்கள் போராட்டங்களின் விளைவாக தோல்வி முகத்தை சந்தித்துள்ள பாசிச பா.ஜ.க. கும்பல் அதன் விளைவாக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பின்னடைவை சந்தித்தது. எப்படியேனும் இந்தத் தோல்வி முகத்திலிருந்து மீள வேண்டுமென்பதற்காக பல்வேறு தகிடுதத்தங்களை அரங்கேற்றிவரும் பாசிச கும்பல், அதிகார வர்க்கத்தின் துணையுடன் பட்டவர்த்தனமான தேர்தல் மோசடிகளின் மூலம் மாநிலங்களின் ஆட்சியைக் கைப்பற்றி வருகிறது.
குறிப்பாக, நடைபெறவிருக்கும் தமிழ்நாடு, கேரளம், மேற்குவங்கம், அசாம் ஆகிய நான்கு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத் தேர்தல்களில் வெற்றி பெறுவதையும் தனது அடித்தளத்தை பலமாக்கிக் கொள்வதையும் 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஒரு முக்கியமான படியாக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பல் கருதுகிறது. அந்தவகையில், மேற்குவங்கத்தில் மம்தா பேனர்ஜி தலைமையிலான 15 ஆண்டுகால திரிணாமுல் காங்கிரசு ஆட்சியை வீழ்த்திவிட்டு ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு பா.ஜ.க. தனது ஒட்டுமொத்த பாசிச பலத்தையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
மேற்குவங்க மக்களின் அவலநிலையும் மக்கள் போராட்டங்களும்
மேற்குவங்க மக்களின் பிரதான பிரச்சினையாக வேலைவாய்ப்பின்மை உள்ளது. படித்த இளைஞர்கள், முறைசாரா தொழிலாளர்கள், பட்டதாரிகள் மத்தியிலும் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது. இதன் விளைவாக, உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களின் வரிசையில் அண்டை மாநிலங்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்களாக வெளியேறும் மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலமாக மேற்குவங்கம் உள்ளது. அரசின் தரவுகளின்படியே, அம்மாநிலத்தைச் சேர்ந்த 22.40 லட்சம் பேர் பிற மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்களாக உள்ளனர். ஆனால், உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே உள்ளது.
குறிப்பாக, மேற்குவங்கத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் (நூறு நாள் வேலைத்திட்டம்) கீழ் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயனடைந்து வந்தனர். ஆனால், அதில் ஊழல், முறைகேடுகள் நடப்பதாகக் கூறி கடந்த 2021 டிசம்பரிலிருந்து அத்திட்டத்திற்கான நிதியை மோடி அரசு எதேச்சதிகாரமாக நிறுத்தியுள்ளது. இது அம்மாநில மக்களை புலம்பெயர் தொழிலாளர்களாக விரட்டியடிப்பதைத் தீவிரப்படுத்தியுள்ளதோடு, தங்களின் வாழ்வாதாரத்திற்காக நூறு நாள் வேலைத்திட்டத்தை மட்டுமே சார்ந்திருந்த இலட்சக்கணக்கான பெண்களை நிர்கதியாக்கியுள்ளது.
மறுபுறம், வெளிமாநிலங்களுக்கு பிழைப்புத் தேடிச் செல்லும் மேற்குவங்க இஸ்லாமிய தொழிலாளர்கள் ஒடிசா, டெல்லி, மகாராஷ்டிரா போன்ற பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ‘சட்டவிரோத வங்கதேசத் குடியேறிகள்’ எனப் பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்டு அடித்துப் படுகொலை செய்யப்படுவதும், சிறையிலடைக்கப்படுவதும், வங்கதேசத்திற்கு சட்டவிரோதமாக நாடுகடத்தப்படுவதும் புதிய இயல்புநிலையாக்கப்பட்டுள்ளது. இதனால், தங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்திலேயே வாழும் நிலைக்கு அத்தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். உயிர் பயத்தினால் மேற்குவங்கத்திற்கே திரும்பிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பும் வாழ்வாதாரமுமின்றி வறுமையில் வாடி வருகின்றனர்.
அதேபோல், அரசின் அலட்சியத்தாலும் தனியார் – கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபவெறியாலும் மேற்குவங்கத் தொழிலாளர்கள் காவு வாங்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஜனவரியில் ஆனந்தபூரின் நசிராபாத்தில் முறையான பாதுகாப்பு வசதியின்றி இயங்கி வந்த “வாவ் மோமோ” நிறுவனத்தின் உணவுக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 27 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இவ்வாறு, தொழில் நிறுவனங்கள், பட்டாசு ஆலைகள், சுரங்கங்களில் அவ்வப்போது விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் படுகொலை செய்யப்படுவது மேற்குவங்கத்தில் தொடர் நிகழ்வாக மாறியுள்ளது.
மேற்குவங்கம் சாதிய முரண்களற்ற மாநிலமாக பொதுவெளியில் சித்தரிக்கப்பட்டாலும் அப்பட்டமான சாதிய ஏற்றத்தாழ்வு அம்மாநிலத்தில் நிலவுகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம், பொருளாதாரம் ஆகியவற்றில் தாழ்த்தப்பட்ட – பழங்குடியின மக்கள் தொடர் புறக்கணிப்புகளை சந்தித்து வருகின்றனர். சமீப ஆண்டுகளாக அம்மாநில தலித் மக்கள் முன்னெடுத்துவரும் ஆலைய நுழைவுப் போராட்டங்கள் மேற்குவங்கத்தில் கடைபிடிக்கப்பட்டுவரும் சாதியத் தீண்டாமையைத் தோலுரித்துக் காட்டுகிறது. ஆனால், ஆளும் மம்தா பேனர்ஜி அரசு இதனை மூடிமறைப்பதிலேயே குறியாக உள்ளது. அம்மாநிலத்தில் பார்ப்பனர்கள் – ஆதிக்கச் சாதியினரின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் அரசியலை மேற்கொண்டுவரும் பா.ஜ.க-வின் வளர்ச்சியானது தலித் மக்களுக்கு அச்சுறுத்தலாக மாறி வருகிறது.
இவை மட்டுமின்றி, மேற்குவங்கம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக உருவாகி வருகிறது. கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவமனை முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொலை செய்யப்பட்டது நாட்டையே உலுக்கியது. அதன்பிறகு 2025 ஜூனில் தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை, 2025 அக்டோபரில் ஐ.க்யூ. நகர மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை என கல்லூரி வளாகங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், இச்சம்பவங்களில் குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கத்தில் பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளியாக்கும் வகையில் மம்தா அரசு செயல்பட்டது. மேலும், பெண்கள் மீது அதிகளவில் ஆசிட் வீச்சு நடைபெறும் மாநிலங்களில் மேற்குவங்கம் முதலிடத்தில் உள்ளது. அதேசமயம், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் குறைந்த தண்டனை விகிதம் கொண்ட மாநிலங்களில் நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது.
அதேபோல், மேற்குவங்கம் ஆண்டுதோறும் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்படும் இந்திய மாநிலங்களில் ஒன்றாகும். மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 42 சதவிகிதம் (37,660 சதுர கிலோமீட்டர்) வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதன் விளைவாக, வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதியாவது, இடம் பெயர்வது உள்ளிட்ட கொடுமைகளுக்கு மேற்குவங்க மக்கள் தொடர்ந்து உள்ளாகின்றனர்.
அதேபோல, அரசுத்துறைகளில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அத்துறைகள் திட்டமிட்டு படிப்படியாக கார்ப்பரேட்-காண்ட்ராக்ட்-டிஜிட்டல் மயமாக்கப்படுகின்றன. அதற்கெதிராகவும் தங்களின் உரிமைகளுக்காகவும் போராடும் அரசு ஊழியர்கள் மீது திரிணாமுல் காங்கிரசு அரசு மிருகத்தனமான ஒடுக்குமுறையை செலுத்துகிறது. சான்றாக, கடந்த ஜனவரி 21-ஆம் தேதி மாதாந்திர ஊதியத்தை ரூ.5,250-லிருந்து ரூ.15,000-ஆக உயர்த்துவது; தங்களை நிரந்தர அரசு ஊழியர்களாக அங்கீகரிப்பது உள்ளிட்ட எட்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து மாநில சுகாதாரத் துறையின் தலைமையகத்தை ஆயிரக்கணக்கான ஆஷா தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். ஆனால், பெண்கள் என்றும் பாராமல் அவர்கள் மீது போலீசின் மூலம் மம்தா அரசு ஒடுக்குமுறை செலுத்தியது.
மேற்குவங்க மாநில மம்தா பேனர்ஜி அரசின் இந்த மக்கள் விரோதத் தன்மையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அம்மாநிலத்தில் வேரூன்றுவதற்கும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கும் பாசிச பா.ஜ.க. கும்பல் மூர்க்கமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
பா.ஜ.க. – தேர்தல் ஆணையத்தின் கள்ளக் கூட்டு
பீகாரில் தேர்தல் ஆணையத்தின் துணையுடன் எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் பல்வேறு மோசடிகளை அரங்கேற்றி வெற்றிபெற்றதைப்போல மேற்குவங்கத்திலும் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க. முயற்சித்து வருகிறது. எஸ்.ஐ.ஆர். எனும் பாசிச நடவடிக்கை மூலம், அதிகாரப்பூர்வமாகவே 61.7 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், உண்மையில் 1.20 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக ஆளும் மம்தா அரசு குற்றஞ்சாட்டுகிறது.
குறிப்பாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 89 சட்டமன்றத் தொகுதிகளில் 10,000-க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே பா.ஜ.க-வை விட திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை பெற்றிருக்கிறது. தற்போது அவற்றில் கணிசமான தொகுதிகளில் 10,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்களை பா.ஜ.க. நீக்கியுள்ளது.
மேலும், பிப்ரவரி 28-ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில், பெயர்களில் உள்ள எழுத்துப் பிழைகள், வயது முரண்பாடுகள் உள்ளிட்ட சிறு காரணங்களுக்காக 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் “தீர்ப்பளிக்கப்பட வேண்டியவர்கள்” (Under adjudication) என்று குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும், நீதித்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு அனுமதியளித்த பிறகே, அவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 20-ஆம் தேதி நிலவரப்படி, 22 லட்சம் பேரின் விசாரணைகள் முடிவடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள போதிலும், துணை வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படாமல் இருப்பது அம்மக்களில் கணிசமானோரின் வாக்குரிமையை பறிக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் சதித்தனத்தையே வெளிக்காட்டுகிறது.
அதிலும், இவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய மக்களாகவே உள்ளனர். சான்றாக, மால்டா மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு வாக்குச்சாவடியில் உள்ள 1,300 வாக்காளர்களில் 1,200 பேருக்கு விசாரணைக்கு ஆஜராக அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு வாக்குச்சாவடியில் உள்ள 1,279 வாக்காளர்களில் 73 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நீக்கங்கள் அனைத்தும் இஸ்லாமிய மக்களின் வாக்குரிமை-குடியுரிமையைப் பறிக்கும் வகையிலும் திரிணாமுல் காங்கிரசு கட்சியின் அடித்தளத்தை சரிக்கும் வகையிலுமே உள்ளது. இது வருங்காலங்களில் வாக்குரிமை பறிக்கப்பட்டவர்கள் மீது ‘வங்கதேச ஊடுருவிகள்’, ‘சட்டவிரோதக் குடியேறிகள்’ என்றுப் பொய் குற்றஞ்சாட்டி, அவர்களின் குடியுரிமையைப் பறித்து பாசிச தாக்குதலை தொடுப்பதற்கான ஏற்பாடாகும்.
பா.ஜ.க-வின் இந்துமுனைவாக்க அரசியல்
மேற்குவங்க மாநிலம் வங்கதேசத்துடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் மாநிலமாகும். மேலும், இந்தியாவிலேயே அதிக இஸ்லாமியர்கள் வசிக்கும் மாநிலங்களில் ஒன்றாக மேற்குவங்கம் உள்ளது. இவற்றை தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொண்டு ‘சட்டவிரோத குடியேற்றம்’ என்ற இஸ்லாமிய வெறுப்பு – இந்துமதவெறி – தேசவெறி பூதத்தைக் கிளப்பிவிட்டு அம்மாநில மக்களை இந்துமுனைவாக்கம் செய்யும் அரசியலை பா.ஜ.க. கும்பல் கையிலெடுத்துள்ளது.
சான்றாக, கடந்த மார்ச் 2-ஆம் தேதி மால்டா மாவட்டத்தின் இஸ்லாம்பூரில் கட்சியின் பேரணியைத் தொடங்கி வைத்து உரையாற்றிய பா.ஜ.க-வின் தேசிய தலைவர் நிதின் நபின், “மேற்குவங்கத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், சந்தேகிக்கப்படும் வங்கதேச ஊடுருவல்காரர்களை அடையாளம் கண்டு வெளியேற்றுவதற்காக, அசாமின் “கண்டறி, அழி, நாடு கடத்து மாதிரியைப் பின்பற்றுவோம்” என்று வெளிப்படையாகவே இஸ்லாமியர்கள் மீதான இனப் படுகொலைக்கு அழைப்பு விடுத்தார். இது வங்க மொழி பேசும் இஸ்லாமியர்கள் மேற்குவங்கத்திற்குள்ளும் மாநிலத்திற்கு வெளியிலும் இனப்படுகொலை அபாயத்தை எதிர்கொண்டிருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஏற்கெனவே, “ஆபரேஷன் புஷ் பேக்” என்ற பாசிச திட்டத்தின் மூலம் ’சட்டவிரோத குடியேறிகள்’ என்ற பெயரில் சொந்த நாட்டு இஸ்லாமிய மக்களையே பாசிச கும்பல் நாட்டைவிட்டு வெளியேற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இதில் மேற்குவங்க புலம்பெயர் தொழிலாளர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்.
மேலும், ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரக் குண்டர் படைகள் இஸ்லாமிய மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியும் கலவரங்களை கட்டவிழ்த்துவிட்டும் வருகிறது. கடந்த மார்ச் 27-ஆம் தேதி கூட, முர்ஷிதாபாத் மாவட்டத்தின் ரகுநாத்கஞ்ச் பகுதியில் ராம நவமி ஊர்வலத்தின் மூலம் இஸ்லாமிய மக்கள், அவர்களின் கடைகள் மீது தாக்குதல் தொடுத்து ஏற்படுத்திய கலவரத்தில் 45 பேர் காயமடைந்து இருக்கின்றனர். இத்தகைய வன்முறை வெறியாட்டங்களின் மூலம் மேற்குவங்கத்தில் இந்துக்கள் ஆபத்தில் இருப்பதாக பிரச்சாரம் செய்தும், இந்துக்களின் பாதுகாவலர்களாக தங்களை முன்னிறுத்திக் கொண்டும் அம்மக்களின் வாக்குகளை பா.ஜ.க. கவரத் துடிக்கிறது.
அதேபோல, வங்கதேசத்திலிருந்து மேற்குவங்கத்திற்கு இடம்பெயர்ந்து வந்த மத்துவா சமூக இந்துக்களை தன்னுடைய முக்கிய அடித்தளமாக பா.ஜ.க. மாற்றியிருக்கிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 77 சட்டமன்றத் தொகுதிகளை கைப்பற்றியதில் இம்மக்களின் வாக்குவங்கி முக்கியப் பங்காற்றியுள்ளது.
அதேபோல், மேற்குவங்க மக்களின் உணவின் மீதான உரிமையைப் பறிக்கும் வகையில் இறைச்சிக் கடைகளின் மீது ஆர்.எஸ்.எஸ். குண்டர் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்தாண்டு டிசம்பரில் கொல்கத்தாவின் பிரிகேட் பரேட் மைதானத்தில் இறைச்சி பட்டீஸ்களை (பஜ்ஜி) விற்பனை செய்துகொண்டிருந்த இரண்டு இஸ்லாமிய தெருவோர வியாபாரிகளை ‘வங்கதேசக் குடியேறிகள்’ எனப் பொய் குற்றஞ்சாட்டி ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் கடுமையாகத் தாக்கினர். மேலும், வடக்கு 24 பர்கானாஸ் மற்றும் நாடியா போன்ற எல்லைப்புற மாவட்டங்களிலும், இந்துப் பண்டிகைகள், அரசியல் பேரணிகளின் போது இறைச்சிக் கடைகளை மூடுமாறு ஆர்.எஸ்.எஸ். கும்பல் அட்டூழியங்களை செய்து வருகிறது. மீன் உள்ளிட்ட இறைச்சிகளை தங்களது பாரம்பரிய உணவாகக் கொண்டுள்ள மேற்குவங்க மக்களிடையே சங்கி கும்பலின் இந்நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு கிளப்பியதையடுத்து, தாங்கள் ‘சட்டவிரோத பசுக் கொலைக்கு’ மட்டுமே எதிரானவர்கள் என்று கூறி கையில் மீன்களுடன் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைக்கு பா.ஜ.க-வினர் தற்காலிகமாகத் தள்ளப்பட்டுள்ளனர்.
மேற்குவங்கத்தில் எஸ்.ஐ.ஆர் பணிச்சுமையைத் தாங்க முடியாமல் பி.எல்.ஓ-க்கள் நடத்திய போராட்டம்.
முடக்கப்படும் மேற்குவங்க அரசு
டெல்லியில் பத்து ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த ஆம் ஆத்மி அரசுக்கு துணைநிலை ஆளுநர் மூலம் குடைச்சல் கொடுத்து, அரசுத் திட்டங்களுக்கான நிதியை முடக்கி, ஆட்சியதிகாரத்தை பறித்து, ஒன்றிய அரசின் அதிகாரத்தை கேள்விக்கிடமின்றி குவித்து, பொய்யான ஊழல் குற்றஞ்சாட்டி ஆம் ஆத்மி தலைவர்களை சிறையிலடைத்து, ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பையும் முடமாக்கி கடந்தாண்டு டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றியது, பாசிச பா.ஜ.க. கும்பல். இதற்கு டெல்லி யூனியன் பிரதேசமாக இருப்பதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது.
தற்போது இம்மாதிரியை ஒரு மாநிலத்திற்கு பொருத்தும் வகையில் மேற்குவங்கத்தில் பாசிச பா.ஜ.க. கும்பல் செயல்பட்டு வருகிறது. அமலாக்கத்துறை, சி.பி.ஐ., ஆளுநர் மூலம் அரசிற்கு நெருக்கடி கொடுப்பது மட்டுமின்றி, குடியரசுத் தலைவர், நீதிமன்றம், தேர்தல் ஆணையம், என்.ஐ.ஏ., மத்தியப் படைகள் என ஒட்டுமொத்த அதிகார வர்க்கத்தின் துணையுடன் திரிணாமுல் காங்கிரசு அரசின் மீது தனது அஸ்திரங்களை ஏவி வருகிறது.
சான்றாக, 2023-ஆம் ஆண்டு தொடக்கப்பள்ளி ஆசிரியர் நியமனங்களில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி 32,000 ஆசிரியர் நியமனங்களை ஒரேயடியாக இரத்து செய்து கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யா உத்தரவிட்டார். இது ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு மம்தா ஆட்சியின் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால், அந்த உத்தரவைப் பிறப்பித்த நீதிபதி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. சார்பாக போட்டியிட்டு தம்லுக் தொகுதியின் மக்களவை உறுப்பினரானது பா.ஜ.க. மற்றும் அதிகார வர்க்கத்தின் கூட்டுடன் நடந்தேறிய சதி நடவடிக்கையை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
அதேபோல், மார்ச் மாதத்தில் மேற்குவங்கத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகைபுரிந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை முதலமைச்சர் மம்தா பேனர்ஜியும் அமைச்சர்களும் நேரில் சென்று வரவேற்கவில்லை. இதனையடுத்து, மம்தா குடியரசுத் தலைவரையும் பழங்குடி சமூகத்தையும் அவமதித்துவிட்டதாக பிரதமர் மோடியிலிருந்து ஒட்டுமொத்த சங்கிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டது இதுவரை வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத ஒன்று.
மேலும், இந்தியாவிலேயே வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து மேற்குவங்கத்தில் 483 நிர்வாக மற்றும் போலீசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது, ஆளும் திரிணாமுல் காங்கிரசு அரசை முடக்குவதற்கும், ஆர்.எஸ்.எஸ். கைக்கூலி அதிகாரிகளை குவித்து தேர்தல் முறைகேடுகள் மூலம் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கும் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டமிட்ட சதி நடவடிக்கையாகும்.
அதேபோல், மேற்குவங்க மாநிலம் சர்வதேச எல்லைகளை பகிர்வதை சாதகமாகக் கொண்டு அம்மாநிலத்தில் மத்தியப் படைகளை குவித்து வருகிறது. சான்றாக, எஸ்.ஐ.ஆர். மூலம் தங்களது வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதற்கு எதிராக மாநிலம் முழுவதும் போராடிவரும் இஸ்லாமிய மக்கள், கடந்த ஏப்ரல் 1 அன்று மால்டாவின் காலியாச்சக் பகுதியில் எஸ்.ஐ.ஆர். சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஏழு நீதித்துறை அதிகாரிகளை எட்டு மணி நேரத்திற்கும் மேலாக சிறைப்பிடித்தனர். இது, பாசிச கும்பலுக்கு கிலியூட்டிய நிலையில், உச்சநீதிமன்றத்தின் துணையுடன் மேற்குவங்கத்தில் என்.ஐ.ஏ., மத்தியப் படைகளை குவித்தும், இஸ்லாமிய இளைஞர்களையும் தலைவர்களையும் கைது, சிறை என வேட்டையாடி வருகிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது மால்டாவில் மத்தியப் படையால் மூன்று அப்பாவி இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதன் வடுவே இன்னும் ஆறாத நிலையில், இப்படைக் குவிப்பானது இஸ்லாமிய மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவை மட்டுமின்றி, ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளாக நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை முடக்கி வைத்து மேற்குவங்க உழைக்கும் மக்களின் வயிற்றில் அடித்திருப்பது; தேசிய கல்வி கொள்கை, பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்காததற்காக மேற்குவங்கத்தின் பத்தாயிரம் கோடி ரூபாய் கல்வி நிதியை முடக்கியிருப்பது; 2022-ஆம் ஆண்டிலிருந்து பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – கிராமின் (PMAY–G) திட்டத்திற்கான நிதியை முடக்கியிருப்பது என மேற்குவங்க அரசை முடமாக்கி மாநில அரசின் மீது மக்களின் எதிர்ப்பைக் கிளப்பி வருகிறது.
திரிணாமுல் காங்கிரசின் கவர்ச்சிவாத – மிதவாத இந்துத்துவ அரசியல்
பொதுவில், ஒன்றிய மோடி அரசின் பாசிச சட்டத் திட்டங்களை எதிர்ப்பதில் மற்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை ஒப்பிடும்போது மேற்குவங்க மம்தா அரசு கடுமையான போராட்டம் நடத்துவதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, எஸ்.ஐ.ஆர்-க்கு எதிரான வழக்கில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக வாதாடியது; எஸ்.ஐ.ஆர். மூலம் இஸ்லாமியர்களின் வாக்குரிமை பறிக்கப்படுவதற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருவது; பேரணிகள், தர்ணா வடிவங்களிலான போராட்டங்களை கட்டியமைப்பது; பா.ஜ.க-வின் இந்துத்துவ அடையாளத்திற்கு மாற்றாக மேற்குவங்கத்தின் அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் முன்னிறுத்துவது ஆகியவை அதற்கான சான்றுகளாக முன்வைக்கப்படுகின்றன.
பா.ஜ.க-வை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் பிற ‘இந்தியா’ கூட்டணிகளுடன் ஒப்பிடும் போது திரிணாமுல் காங்கிரசு பா.ஜ.க-வை காத்திரமாக எதிர்த்தாலும், அது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் பாசிசத்தை பலவீனப்படுத்துவதாக இல்லை. குறிப்பாக, எஸ்.ஐ.ஆர். உள்ளிட்ட பாசிச சட்டத்திட்டங்களுக்கு எதிராக களத்தில் நடக்கும் போராட்டங்களை பாசிச மோடி அரசை நிர்பந்திக்கும் வகையிலான போராட்டங்களாக வளர்த்தெடுத்து மோடி அரசை பின்வாங்கச் செய்யாமல் வரம்புக்குட்பட்ட எதிர்ப்புடன் நிறுத்திக்கொள்கிறது மம்தா அரசு. பாசிச எதிர்ப்பு மாற்று திட்டம் – சித்தாந்தமின்றி பா.ஜ.க-வின் அரசியலுக்கு பலியாகி கவர்ச்சிவாதம் – மிதவாத இந்துத்துவத்தை முன்வைத்தும் பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை கவர்வதற்குமே முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
மேற்குவங்க மக்கள் வேலைவாய்ப்பின்மையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில், அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்காமல், கவர்ச்சிவாதத் திட்டங்கள் மூலம் இளைஞர்களின் வாக்குகளைக் கவர முயல்கிறது. 21 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கும் வங்காளர் யுபா சாத்தி (Banglar Yuva Sathi) என்ற திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருக்கிறது.
அதேபோல, மேற்குவங்கப் பெண்கள் நுண்கடன் நிறுவனங்களின் பிடியில் அவதிக்குள்ளாகும் நிலையில், மம்தா அரசானது அதனை சரிசெய்யாமல் கவர்ச்சிவாதத் திட்டங்கள் மூலமே பெண்களின் வாக்குகளை கவரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. 2.42 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் (பட்டியல், பழங்குடியினப் பெண்களுக்கு மாதம் ரூ.1,200) லட்சுமி பண்டார் திட்டத்திற்கான மாதாந்திரத் தொகையை ரு.500 அதிகரிப்பதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது. பெண்களுக்கு வழங்கப்படும் இந்த சொற்ப நிதியும் நுண்கடன் நிறுவனங்களால் பறிக்கபடுகிறது. இவை மட்டுமின்றி, புலம்பெயர் தொழிலாளர்கள், மதகுருக்கள் என பலதரப்பட்ட பிரிவினருக்கும் கவர்ச்சிவாதத் திட்டங்களை மம்தா அரசு அறிவித்திருக்கிறது.
அதேபோல், திரிணாமுல் காங்கிரசு இஸ்லாமியர்களை திருப்திப்படுத்தும் கட்சி என்ற பா.ஜ.க-வின் பிரச்சாரத்திற்கு பலியாகி இந்து கோயில்களை கட்டுவது, நேரடியாக பூஜைகளில் ஈடுபடுவது, மதச் சுற்றுலாவை ஊக்குவிப்பது போன்றவற்றின் மூலம் தன்னை இந்துக்களுக்கு ஆதரவான கட்சியாக காட்டிக்கொள்கிறது. சான்றாக, கடந்த ஆண்டு ஏப்ரல் 30 அன்று தீகா நகரத்தில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஜெகன்நாதர் கோயில் மம்தா அரசால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கொல்கத்தாவின் நியூ டவூன் பகுதியில் ரூ.262 கோடி முதலீட்டில் துர்கா கோயில் மற்றும் கலாச்சார வளாகத்திற்கும், டார்ஜிலிங் மாவட்டம் சிலிகுரிக்கு அருகே உள்ள மதுகாராவில் ரூ.344.2 கோடி மதிப்பீட்டில் சிவன் கோயிலுக்கும் அடிக்கல் நாட்டியிருக்கிறது.
மேற்கு வங்க முதல்வர் – மம்தாவின் மிதவாத இந்துத்துவ முகம்.
அதேபோல, இந்துராஷ்டிரத்திற்கான கடவுளாக இந்துத்துவ கும்பலால் முன்னிறுத்தப்படும் ராமன் பிறந்த நாளான ராம நவமி கொண்டாட்டத்தை மேற்குவங்கத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் திணித்து வருகிறது. முன்னர் இதற்கு மாற்றாக மேற்குவங்கத்தின் துர்கை, காளி போன்ற கடவுள்களை முன்னிறுத்திவந்த மம்தா அரசு, பா.ஜ.க-வின் நிகழ்ச்சிநிரலுக்குப் பலியாகி சமீப ஆண்டுகளாக பா.ஜ.க-வுடன் போட்டி போட்டுக்கொண்டு ராம நவமியை ‘கோலாகலமாக’ கொண்டாடி வருகிறது. இஸ்லாமியர்கள் மீதான கலவரத்தை தூண்டுவதற்கான ஆயுதமாக பா.ஜ.க. கும்பல் கையிலெடுத்துள்ள ராம நவமி பேரணிகள், மத ஊர்வலங்களைத் தடை செய்வதற்குப் பதிலாக அதனை தானும் கடைப்பிடிப்பது என்பது அப்பட்டமாக பா.ஜ.க.வின் கலவர நிகழ்ச்சி நிரலுக்கு துணைபோகும் நடவடிக்கையே ஆகும்.
ஒடிசாவை ஆட்சி செய்த நவீன் பட்நாயக் அரசு, இந்து மக்களின் வாக்குகளை கவர்வதற்காக “ஜெய் ஸ்ரீராம்”-க்கு மாற்றாக “ஜெய் பூரி ஜெகன்நாதர்” என்ற முழுக்கத்தை முன்வைத்தது. இறுதில் அது பா.ஜ.க-விற்கே ஆதரவாக சென்று ஒடிசாவில் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியது. எனவே, கோயில்களை கட்டி இந்து மக்களின் வாக்குகளை கவர எத்தனிப்பது, பா.ஜ.க-விற்கு போட்டியாக இந்துப் பண்டிகளை கொண்டாடுவது போன்ற திரிணாமுல் காங்கிரசு அரசின் மிதவாத இந்துத்துவ அரசியல் பா.ஜ.க. கும்பலுக்கே சாதகமாக அமையும்.
இருமுனைப் போராட்டமே தீர்வு!
மேற்குவங்கத்தின் கள எதார்த்தத்திலிருந்து பார்க்கையில், அம்மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரசு கட்சியே மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகளே உள்ளன. ஆனால், பா.ஜ.க-வின் எஸ்.ஐ.ஆர். தேர்தல் மோசடி, இந்துமுனைவாக்க நடவடிக்கைகள், திரிணாமுல் காங்கிரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள அதிருப்தி, காங்கிரசு, சி.பி.ஐ(எம்) ஆகிய கட்சிகள் ஏறக்குறைய களத்திலிருந்து அகற்றப்பட்டு இருமுனை போட்டி நிலவுவது ஆகியவற்றால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. பெற்ற 77 தொகுதிகளை விட அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மேலும், 2011 சட்டமன்றத் தேர்தலில் 4.06 சதவிகித வாக்குகளுடன் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத பா.ஜ.க., 2021 சட்டமன்றத் தேர்தலில் 37.97 சதவிகித வாக்குகளுடன் 77 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக உருவெடுத்ததற்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் குண்டர் படை அமைப்புகள் மம்தாவின் ஆட்சிக்காலத்தில் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்ததே காரணமாகும். சான்றாக, 2011-ஆம் ஆண்டில் மேற்குவங்கத்தில் ஆர்.எஸ்.எஸ்-இன் அலகுகள் (ஸ்தான்கள், கிளைகள், மிலன்கள், மண்டலிகள்) 830-ஆக இருந்த நிலையில், 2025-ஆம் ஆண்டில் 4,540 அலகுகளாக அதிகரித்துள்ளது என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக அவற்றை 8,000 அலகுகளாக அதிகரிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் மே 26, 2025 தேதியிட்ட “தி டெலிகிராஃப்” பத்திரிகை கூறுகிறது.
இவ்வாறு ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் மம்தா ஆட்சிக்காலத்தில் வளர்ச்சியடைந்துள்ள போதிலும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு மம்தா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இஸ்லாமியர்களின் மக்கள் தொகை 27 சதவிகிதமாக உள்ள நிலையில், இஸ்லாமிய வெறுப்பை விதைத்து இந்துமதவெறியைத் தூண்டுவதற்கான சிறு சிறு நடவடிக்கைகளைக் கூட ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ளன. மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மிதவாத இந்துத்துவா மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகளும் அவைகளின் வளர்ச்சிக்கு உதவியுள்ளன.
ஒருவேளை, மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரசு 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் மிக வேகமாக வளர்ச்சியடையும்; முன்பை விட மூர்க்கத்தனமான தாக்குதல்களில் ஈடுபடும்.
எனவே, மேற்குவங்கத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலின் பாசிச சர்வாதிகாரம் நிலைநாட்டப்படுவதை தடுத்துநிறுத்த வேண்டும் என்பதை விரும்பும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் அக்கும்பலின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களை கட்டியமைப்பதோடு, திரிணாமுல் காங்கிரசின் மக்கள் விரோத, கவர்ச்சிவாத, அடையாள, மிதவாத இந்துத்துவ நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களையும் கட்டமைக்க வேண்டும். அதாவது, இருமுனைப் போராட்டம் காலத்தின் கட்டாயமாகும். இத்தகைய போராட்டங்கள் மூலம் மக்கள் மத்தியில் உருவாகும் பாசிசத்திற்கு எதிரான விழிப்புணர்வே மேற்குவங்கத்தில் பாசிச சர்வாதிகாரம் நிலைநாட்டப்படுவதை தடுத்து நிறுத்தும்.
கம்யூனிசப் பேராசான் தோழர் லெனின் 156 ஆவது பிறந்தநாளையொட்டி வினவு தளத்தில் ஏப்ரல் 22, 2025 அன்று வெளியான கட்டுரையை மீள்பதிவு செய்கிறோம்.
***
கம்யூனிசப் பேராசான் தோழர் லெனின் 155 ஆவது பிறந்தநாள்!
பாசிசத்தை வீழ்த்தும் போராட்டத்தில் கலைப்புவாதத்தையும் திரிபுவாதத்தையும் முறியடிப்போம்!
ஏப்ரல் 22 – உலகின் ஆறில் ஒரு பங்கு நிலப்பரப்பில் புரட்சியின் மூலம் முதலாளித்துவத்தை வீழ்த்தி, சோசலிசத்தை நிறுவிக் காட்டிய தோழர் லெனினின் 155வது பிறந்தநாள்.
ரசியாவில் 1905 இல் நடைபெற்ற புரட்சியானது ரசிய மக்களுக்கு தங்களின் விடுதலைக்குத் தலைமையேற்கப் போவது போல்ஷ்விக்குகள் தான் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியது. 1917 நவம்பர் புரட்சியில் அதுதான் நடந்தது.
1905 ஆம் ஆண்டு, ஜனவரி 3 அன்று, செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் உள்ள மிகப்பெரிய தொழிற்சாலையான புடிலோவ் ஒர்க்ஸில் தொழிலாளர்களின் மாபெரும் வேலைநிறுத்தம் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக, போலீசின் கைக்கூலியான கோபன் என்ற பாதிரியாரின் தலைமையில் ஜனவரி 9 அன்று ஒரு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, குளிர்கால அரண்மனைக்குப் பேரணியாகச் சென்று, ஜார் மன்னனிடம் கையேந்துவது என்ற துரோகத் திட்டம்தான் அது. இதன் மூலம் தொழிலாளி வர்க்கப் புரட்சியை ஒழித்துக் கட்டுவதுதான் நோக்கம்.
அவ்வாறு சென்ற தொழிலாளர்கள், ஜாரின் படைகளால் ஆயிரக்கணக்கான பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்துயரச் சம்பவம் ‘இரத்த ஞாயிறு’ என்று அழைக்கப்படுகிறது. இச்சம்பவத்தின் மூலம் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை போராட்டத்தின் மூலம் மட்டுமே, புரட்சியின் மூலம் மட்டுமே அடைய முடியும் என்பதை நடைமுறையிலிருந்து உணர்ந்தார்கள். “ஜார் நமக்கு துப்பாக்கிக் குண்டுகளைக் கொடுத்தான், இப்போது நாம் அவனுக்கு அதைத் திருப்பிக் கொடுப்போம்” என்று முழங்கினார்கள்.
இச்சம்பவத்திற்குப் பின் ரசியாவில் புரட்சி பற்றிப் பரவத் தொடங்கியது. போல்ஷ்விக்குகள்தான் தொழிலாளி வர்க்கத்தின் பக்கம் உறுதியாக நின்று வழிகாட்டினார்கள். ஆனால் மென்ஷ்விக்குகளோ, தொழிலாளிகளைக் குறை கூறிக் கொண்டிருந்தார்கள்.
1905 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கிய புரட்சிப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு, ஜாரின் மந்திரி ஸ்டாலோபின் நாடெங்கும் தூக்குமேடைகளைத் தீர்மானித்தான். பல்லாயிரக்கணக்கான புரட்சியாளர்கள் கொல்லப்பட்டனர். ஸ்டாலோபின் பிற்போக்குக் காலத்திலும் தோழர் லெனினின் தலைமையில் போல்ஷ்விக்குகள் மட்டுமே உறுதியாகப் புரட்சியைப் பற்றி நின்றனர்.
மென்ஷ்விக்குகளோ சந்தர்ப்பவாத நிலையெடுத்து தொழிலாளி வர்க்கத்துக்கும், புரட்சிக்கும் துரோகமிழைத்தனர். மார்க்சியத் தத்துவ அடிப்படைகளின் மீதே போர் தொடுத்தனர். அத்துடன் கட்சி கலைப்புவாதத்தையும் முன்வைத்தனர்.
மென்ஷ்விக் கும்பலின் சந்தர்ப்பவாதத்தை சித்தாந்த ரீதியாக முறியடிக்கும் வரலாற்றுக் கடமை லெனின் தலைமையிலான போல்ஷ்விக்குகளையே சார்ந்திருந்தது. 1909 இல் “பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்ற நூலை எழுதி, சித்தாந்த ரீதியாக சந்தர்ப்பவாதத்தை முறியடித்தார்.
தொழிலாளி வர்க்கம் புரட்சியில் போல்ஷ்விக்குகளின் தலைமையை ஏற்றுக் கொள்வதற்கு, 1905 புரட்சி மற்றும் ஸ்டோலோபின் அடக்குமுறை ஆகிய காலகட்டங்களில், தோழர் லெனின் தலைமையிலான போல்ஷ்விக்குகள் சித்தாந்த ரீதியாகவும், நடைமுறையிலும் தொழிலாளி வர்க்கத்தின் பக்கமும், புரட்சியின் பக்கமும் உறுதியாக நின்றதே அடிப்படைக் காரணமாகும்.
இதனை இன்றைய சூழலோடு நாம் பொருத்திப் பார்க்க வேண்டும். இந்தியாவில் பாசிசத்தை எதிர்த்துப் போராடுவதற்கு, பாசிச எதிர்ப்பு ஜனநாயகப் புரட்சியைச் சாதிப்பதற்கு நாம் ஆசான் லெனினிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
பாசிஸ்டுகளை நாடாளுமன்றத்தில் வீழ்த்தி விட முடியும் என்றோ, பாசிச எதிர்ப்பு என்றால் நிபந்தனையின்றி தி.மு.க-வை ஆதரிக்க வேண்டும் என்றோ, இந்தியாவில் பாசிசத்தை மென்மைப் போக்கு கொண்டதாக வரையறுக்கும் சி.பி.எம்-இன் சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளைக் கொண்டோ ஒருபோதும் பாசிசத்தை வீழ்த்த முடியாது. இவையனைத்தும் முதலாளித்துவ சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளே.
பாசிசத்தை நேருக்கு நேர் களத்தில் மட்டுமே, மாபெரும் மக்கள் எழுச்சியின் மூலமே வீழ்த்த முடியும் என்பதை இந்தியா முழுவதும் பாசிசத்திற்கு எதிராகப் போராடும் மக்களின் போராட்ட அனுபவங்கள் உணர்த்துகின்றன.
ஸ்டாலோபின் பிற்போக்கு அடக்குமுறைக் காலத்தில் கட்சியை விட்டு ஓடிய கலைப்புவாதிகளிடம் இருந்தும், திரிபுவாதிகளிடம் இருந்தும் மார்க்சியத் தத்துவத்தைப் பாதுகாத்தார் தோழர் லெனின்.
தோழர் லெனின் காட்டிய பாதையில், கலைப்புவாதத்தையும் திரிபுவாதத்தையும் தோலுரிப்போம். உழைக்கும் மக்களின் நலனைச் சார்ந்து உறுதியான நிலைப்பாட்டில் ஊன்றி நிற்போம். மக்கள் எழுச்சியை உருவாக்குவோம்! ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசத்தை வீழ்த்துவோம்!
சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறைகளைத் தொடர்ச்சியாக நிறுவனமயமாக்கிவரும் பாசிச மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, திருநர் மக்களின் சிற்சில முன்னேற்றங்களையும் உரிமைகளையும் ஒட்டுமொத்தமாக பறிக்கும் “திருநர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்த சட்டம், 2026”-ஐ நிறைவேற்றியுள்ளது.
இம்மசோதாவை திரும்பப்பெறக் கோரி திருநர் மக்கள் களத்தில் தீவிரமாக போராட்டங்களை முன்னெடுத்த போதிலும், ஜனநாயகமற்ற முறையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இம்மசோதாவை மோடி அரசு நிறைவேற்றியது. தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்று இப்பாசிச மசோதா சட்டமாகிவிட்டது.
நால்சா தீர்ப்பின் உரிமைகள் பறிப்பு
இந்தியாவின் பார்ப்பனிய – சாதிய – ஆணாதிக்கச் சமூகத்தில் திருநர் மக்கள் பன்னெடுங்கால ஒடுக்குமுறைக்கும் தீண்டாமை கொடுமைகளுக்கும் அப்பட்டமான உழைப்புச் சுரண்டலுக்கும் உள்ளாகி வருகின்றனர். அதிலும், ஒவ்வொரு குழந்தையையும் அதன் வெளித்தோற்றத்திலிருந்து ஆண், பெண் என்ற இருமைக்குள் இறுத்துவதற்கு ஆயிரமாயிரம் சடங்குகள், வழக்கங்களை கொண்டுள்ள இந்தியப் பார்ப்பனிய சமூகத்தில், தங்களின் பாலினத்தை தாங்களே தீர்மானிக்கும் உரிமைக்காகவே திருநர் மக்கள் நூற்றாண்டுக்கும் மேலாக போராடி வந்துள்ளனர். இப்போராட்டத்தின் விளைவாகவே கடந்த 2014-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தின் நால்சா தீர்ப்பு வெளிவந்தது.
ஏப்ரல் 15, 2014 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய “தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு (NALSA) எதிர் இந்திய ஒன்றியம்” வழக்கின் தீர்ப்பு, திருநர்களைச் சட்டப்பூர்வமாக ‘மூன்றாம் பாலினம்’ என அங்கீகரித்தது. பாலினம் என்பது பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் வெறும் உடல் சார்ந்த காரணி மட்டுமல்ல; அது ஒருவரின் மனம், உளவியல் மற்றும் சுய-உணர்வு சார்ந்தது என்பதை இத்தீர்ப்பு நிலைநிறுத்தியது. எந்தவொரு மருத்துவ அறுவைச் சிகிச்சையோ அல்லது உளவியல் சான்றிதழோ இன்றி, ஒருவர் தன்னை ஆண், பெண் அல்லது மூன்றாம் பாலினமாக சுயமாகத் தீர்மானிக்கும் உரிமை அவருக்கு உண்டு; இது அரசியலமைப்புச் சரத்துகள் 14, 19 மற்றும் 21 (வாழும் உரிமை)-இன் கீழ் ஓர் அடிப்படை உரிமை என்பதை இத்தீர்ப்பு உறுதி செய்தது. இதனடிப்படையில், திருநர் சமூகத்தின் சட்டப்பூர்வ அங்கீகாரத்தையும் நலனையும் உறுதி செய்யும் பொருட்டு உரிய சட்டம் இயற்றுமாறு ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், பாசிச மோடி அரசோ நால்சா தீர்ப்பு உத்தரவாதப்படுத்திய திருநர் மக்களின் சுய-பாலின அடையாள உரிமையைப் பறிக்கும் வகையில் 2016-ஆம் ஆண்டில் சட்டம் இயற்றியது. இதற்கெதிராக இந்தியா முழுவதும் கடும் போராட்டம் எழுந்த நிலையில் மோடி அரசு வேறு வழியின்றி அம்மசோதாவை திரும்பப்பெற்றுவிட்டு, திருநர் சட்டம் 2019-ஐ நிறைவேற்றியது. திருநர் சமூகத்தினரின் ஆலோசனையின்றி உருவாக்கப்பட்ட இச்சட்டம் நால்சா தீர்ப்பை முழுவதுமாக நடைமுறைப்படுத்துவதாக இல்லையெனினும், ஒப்பீட்டளவில் முற்போக்கான வரையறையையும் அம்சங்களையும் கொண்டிருந்தது.
இதனடிப்படையிலேயே, அனைத்து அதிகாரப்பூர்வ படிவங்களிலும் மூன்றாம் பாலினம் (மற்றவை) என்ற அம்சம் சேர்க்கப்பட்டது. மேலும், திருநர் மக்களுக்கு திருநர் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைகள் வழங்குவதற்கான வழிமுறையை உருவாக்கியது; இவை திருநர் மக்கள் அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கின (ஏறக்குறைய 4.88 லட்சம் திருநர்கள் உள்ள இந்தியாவில் 32,424 அடையாள அட்டைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன என்பது தனிக்கதை). அதனைத் தொடர்ந்து ஒன்றிய சமூக நீதி அமைச்சகமும் மாநிலங்களும் திருநங்கைகள் நல வாரியத்தை அமைத்தன.
இத்தகைய தொடர் போராட்டங்களின் விளைவாகவே சமூகப் புறக்கணிப்புகள், அவமானங்கள், ஒடுக்குமுறைகளை கடந்து திருநர் மக்களில் மிகச் சிறு பிரிவினர் கல்வி கற்றுள்ளனர். தங்களை அமைப்பாக்கிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டே திருநர் சமூக முன்னேற்றத்திற்காகக் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், திருநர் மக்கள் போராடிப் பெற்ற சிற்சில உரிமைகளையும் முன்னேற்றங்களையும் ஒரேயடியாகப் பறித்து அவர்களை 200 ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்லும் நோக்கில் திருநர் சட்டம், 2026-ஐ நிறைவேற்றி அவர்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது பாசிச மோடி அரசு.
திருநர்கள் வரையறை மாற்றமும் உரிமைப் பறிப்பும்
திருநர் சட்டம் 2019-இன் பிரிவு 2(k), பிறப்பின்போது நிர்ணயிக்கப்பட்ட பாலினமும் (Assigned Sex at Birth), அந்த நபரின் தற்போதைய உணர்வுப்பூர்வமான பாலினமும் பொருந்தாத எவரையும் திருநர் எனப் பரந்த நோக்கில் வரையறுத்தது. இதன் மூலம் திருநம்பிகள் மற்றும் திருநங்கைகள், இடைப்பாலினத் தன்மை கொண்டவர்கள் (Intersex), பாலினப் புதுமையினர் (Gender queer), கின்னர், ஹிஜ்ரா, அரவாணி மற்றும் ஜோக்தா போன்ற சமூக-பண்பாட்டு அடையாளங்களைக் கொண்டவர்கள் அனைவரையும் திருநர் எனக் குறிப்பிட்டு அவர்களை சட்ட வரையறைக்குள் கொண்டுவந்தது.
ஆனால், 2026 சட்டமானது, மிகவும் பிற்போக்குத்தனமான மற்றும் அறிவியலுக்கு முரணான புதிய வரையறையைத் திணிக்கிறது. திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் பாலினப் புதுமையினர் ஆகிய வார்த்தைகளை சட்டத்தின் வரையறையிலிருந்தே முற்றிலுமாக நீக்கிவிட்டு, சமூக-பண்பாட்டு அடையாளங்களைக் கொண்டவர்களையும் (கின்னர், ஹிஜ்ரா, அரவாணி, ஜோக்தா, அலி), குறிப்பிட்ட “பாலினப் பண்பு மாறுபாடுகள்” (Intersex variations) அல்லது “பிறவி பாலின வேறுபாடுகளுடன்” (Congenital variations) பிறந்தவர்களையும் மட்டுமே திருநர் என்று வரையறுக்கிறது.
கின்னர், ஹிஜ்ரா போன்றவை வட மாநிலங்களில் வசிக்கின்ற, பண்பாட்டு மத சடங்குகளுடன் பிணைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட திருநர் சமூகத்தினர் ஆவர். ஆனால், இவ்வாறான சமூகத்தினருக்கு வெளியே, சுயமாகப் படித்து நகர்ப்புறங்களில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான திருநர்கள் இந்தியாவெங்கும் வசிக்கின்றனர். அவர்களை எல்லாம் திருநர் என்ற வரையறைக்குள்ளிருந்து வெளியேற்றி அவர்களை மீண்டும் பழைய பிற்போக்கு நிலைக்குத் தள்ள எத்தனிக்கிறது மோடி அரசு. இது திருநர் சமூகத்திற்குள் புதிய அதிகாரப் படிநிலைகளையும் முரண்பாடுகளையும் உருவாக்கி, ஒற்றுமையைக் குலைக்கும் சதியாகும். மேலும், திருநங்கைகளை இழிவுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ‘அரவாணி’, ‘அலி’ போன்ற சொற்களை மீண்டும் சட்டப்பூர்வமாகப் பயன்படுத்த அனுமதியளிக்கிறது.
மறுபுறம், ஏற்கெனவே சட்டத்திலும் சமூகத்திலும் இருட்டடிப்பு செய்யப்பட்டுவரும் திருநம்பி சமூகத்தினரை இச்சட்டம் சட்ட வரையறையிலிருந்தே முற்றிலுமாக நீக்கியுள்ளது. இது திருநம்பிகள் மீதான இன அழிப்பு – பாசிசத் தாக்குதல் என இச்சட்டத்திற்கு எதிராகப் போராடிவரும் திருநம்பிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல், பல்வேறு பாலின அடையாளங்கள் (various gender identities), சுய-உணர்தல் அடிப்படையிலான பால் (self perceived sex), நிலையற்ற பாலின அடையாளம் (gender fluidities) கொண்டவர்கள் ஒருபோதும் திருநர்கள் என்ற வரையறைக்குள் வரமாட்டார்கள் என இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 2019 சட்டத்தின் மூலம் சட்ட வரையறைக்குள் கொண்டுவரப்பட்டிருந்த பால் புதுமையினரை (LGBTQ+) இப்புதிய சட்டம் வெளியேற்றியுள்ளது.
மேலும், இடைப்பாலினத் (Intersex) தன்மை கொண்டவர்களின் உடற்கூறியல் மாற்றங்களையும், திருநர்களின் மனநிலை சார்ந்த பாலின அடையாளத்தையும் இச்சட்டம் அறிவியல் அடிப்படையின்றி ஒன்றாகக் குழப்புகிறது. இதன் மூலம் திருநர் அடையாளத்தையே சிதைக்க முற்படுகிறது. திருநர்கள் என்பவர்கள் உயிரியல் ரீதியான குறைபாடுகளால் உருவானவர்கள் என்ற பழைய பிற்போக்கு மருத்துவக் கண்ணோட்டத்தையே இது மீண்டும் திணிக்கிறது.
தனியுரிமை மீறலும் அதிகாரக் குவிப்பும்
2019 சட்டத்தின்படி திருநர் அடையாள அட்டையைப் பெற ஒருவர் நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து திருநர் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். ஆனால், புதிய சட்டமானது திருநர்களில் ஒரு பெரும் பிரிவினரை சட்ட வரையறையிலிருந்து வெளியேற்றி இருப்பதால், அவர்கள் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு மருத்துவக் குழுவின் முன் தங்களை நிர்வாணப்படுத்தி பாலினத்தை ‘நிரூபித்து’ சான்றிதழ் பெற வேண்டிய இழிநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது திருநர் மக்களின் கண்ணியத்தை பறித்து சட்டப்பூர்வமாகவே அவர்களை பாலியல் மற்றும் உளவியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் தாக்குதலாகும்.
புதிய சட்டத்தின் படி, இந்தச் சான்றிதழைப் பெற ஒவ்வொரு திருநரும், தலைமை மருத்துவ அதிகாரி அல்லது துணை மருத்துவ அதிகாரி தலைமையிலான ஒரு மருத்துவக் குழுவின் முன் நேரில் சென்று தங்களை ‘நிரூபிக்க’ வேண்டும்; அந்த மருத்துவக் குழுவின் பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்குவது குறித்து தீர்மானிப்பார்; அறிக்கை ‘திருப்திகரமானதாக’ இல்லையெனில் “பெயர் குறிப்பிடப்படாத” ‘மருத்துவ நிபுணரிடம்’ பரிந்துரைக்கப்படும். ஒரு அடையாள சான்றிதழை வாங்குவதற்கு இத்துணை இழிவான – இக்கட்டான நடைமுறையை உருவாக்குவதே சமூக – பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள திருநர் மக்களை அரசின் சில நலத்திட்டங்களிலிருந்து கூட வெளியேற்றி ஒடுக்குவதற்கே ஆகும்.
மேலும், ஒடுக்கப்பட்ட மக்களைக் கண்காணித்து அடக்கிவைக்கும் கருவியாகச் செயல்படும் அரசு இயந்திரத்திடமே திருநர்களின் அடிப்படை உரிமைகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தைக் கொடுத்து, அவர்களைக் கையேந்தி நிற்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது இச்சட்டம். அதிலும், இந்தியா முழுவதும் அதிகார வர்க்கத்திலும் உயர் பொறுப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளும் அதன் அடிவருடிகளுமே புகுத்தப்பட்டுள்ள நிலையில் இது திருநர்களை அப்பட்டமான வன்கொடுமைக்கு உள்ளாக்கும்.
மேலும், திருத்தப்பட்ட பிரிவு 7, பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் எவரின் விவரங்களையும் மருத்துவ நிறுவனங்கள் நேரடியாக மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகிறது. மருத்துவ இரகசியத்தன்மையையும் தனியுரிமையையும் அப்பட்டமாக மீறும் இச்சட்டப்பிரிவு திருநர்களை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவந்து ஒடுக்குவதற்கு வழிவகைச் செய்கிறது.
மேலும், இந்தியாவில் மருத்துவ அறிவியல் முறைகளுக்கு புறம்பான முறையில் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டதால் எண்ணிலடங்கா திருநர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால், இச்சட்டமானது திருநர் சான்றிதழுக்காக பெரும் எண்ணிக்கையிலான திருநர்களை அறுவைச் சிகிச்சை நடைமுறைக்குள் தள்ளுவதன் மூலம் இப்பேராபத்தை மீண்டும் உருவாக்கியுள்ளது. மேலும், இந்த அறுவை சிகிச்சைக்கான வசதிகள் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் இல்லாததால் கார்ப்பரேட்-தனியார் மருத்துவமனைகள் மிகப்பெரிய கொள்ளையில் ஈடுபடும்.
இது வெறும் சான்றிதழ் நடைமுறை மாற்றம் மட்டுமல்ல, திருநர் சமூகத்தின் அடித்தளத்தையே சிதைக்கும் மீளமுடியாத பாதிப்புகளை உருவாக்கக் கூடியதாகும். ஏனெனில், 2019 சட்டத்தின் கீழ் சுய-உணர்தல் அடிப்படையில் சான்றிதழ் பெற்றவர்களின் நிலையும் புதிய சட்டத்தின் மூலம் கேள்விக்குறியாகியுள்ளது. பழைய சான்றிதழ்களை இரத்து செய்துவிட்டு, மீண்டும் மருத்துவக் குழு முன் தங்களை நிரூபிக்க நிர்பந்திப்பது, அவர்கள் ஏற்கெனவே கடந்து வந்த உளவியல் சித்திரவதையை மீண்டும் தூண்டும். திருநர்களின் உடல்களை மருத்துவர்கள் ‘சோதிப்பது’ என்பது மனித உடலின் மீதான சுயாட்சி மற்றும் தனிமனித உரிமை மீதான தாக்குதலாகும். மேலும், திருநர் மக்களின் சட்டப் பாதுகாப்பை பறித்து கண்ணியமான வாழ்வை மேற்கொள்வதைத் தடுத்து விபச்சாரம், பிச்சை எடுத்தல் போன்ற தொழிலிலேயே இறுத்துவதற்கான பாசிச கும்பலின் சதித்திட்டமாகும்.
மூடிமறைக்கப்படும் அறிவியல் உண்மை!
இவை அனைத்திற்கும் மேலாக ஒருவர் தன்னை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ உணர்வதை, அரசு நியமிக்கும் மருத்துவக் குழு எவ்வாறு அளவிட முடியும்?
இதுகுறித்து இந்தியாவின் முதல் திருநங்கை மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் பிராச்சி ரத்தோர் கூறுகையில், “ஒருவர் திருநங்கையா என்பதை மருத்துவ ரீதியாக நிரூபிப்பது என்பது சாத்தியமற்றது. திருநங்கைகள் நோயாளிகள் அல்ல, அவர்கள் எந்த மருத்துவப் பரிசோதனைகள் மூலமும் கண்டறியப்பட வேண்டிய எந்த நோயாலும் பாதிக்கப்படவில்லை” என்று கூறுகிறார். ஸ்வதந்த்ரா அமைப்பின் நிறுவனரும் திருநர் உரிமைச் செயற்பாட்டாளருமான சனா சுமன், “மரபான வகைப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள், பாலின மாற்று அறுவைச் சிகிச்சைகளைச் செய்து கொள்ளாதவர்கள் அல்லது அதற்கான செலவை ஏற்க முடியாத ஏழை, எளியவர்கள் என்ன செய்வார்கள்?” என்ற நியாயமான கேள்வியை எழுப்புகிறார்.
திருநர் அல்லது மாற்றுப் பாலின அடையாளம் என்பது மனித சமூகத்தில் மட்டுமே நிலவும் ஒரு செயற்கையான கூறு என்ற பொதுப்புத்தி நம் சமூகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே, இதுபோன்ற சட்டங்கள் இவர்களை இயற்கைக்கு முரணானவர்களாக சித்தரித்துக் குற்றவாளிகளாக்க முனைகின்றன. பாலினப் பன்முகத்தன்மை என்பது ஒட்டுமொத்தப் பல்லுயிர்ப் பெருக்கத்திலும் இயல்பாகவே ஊடுருவியிருக்கும் இயற்கையின் பிரிக்க முடியாத அங்கமாகும். க்ளோன் மீன்கள், கடல் குதிரைகள், நத்தைகள், மண்புழுக்கள் உள்ளிட்ட 1,500-க்கும் மேற்பட்ட உயிரினங்களில் தன்பாலின ஈர்ப்பும், பாலினம் மாறும் தன்மையும் இயற்கையாகவே நிகழ்வது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. திருநர் என்பது ஏதோ மேற்கத்திய கலாச்சாரத்தின் விளைவோ, நோயோ அல்லது ஒருவரால் மூளைச்சலவை செய்து கட்டாயப்படுத்தி உருவாக்கப்படும் ஒன்றோ அல்ல; அது மனிதக் குலமும் உள்ளடங்கிய இயற்கையின் பரிணாமத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான உயிரியல் சாத்தியங்களில் ஒன்று. இந்த அடிப்படையான அறிவியல் மற்றும் இயற்கை உண்மையை முற்றிலுமாக நிராகரித்துவிட்டுத்தான், இச்சட்டம் திருநர் சமூகத்தை ஒடுக்குகிறது.
குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் திருநர் சமூகம்
திருநர் மக்கள் தங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு ஆகியவற்றை உத்தரவாதப்படுத்தித் தர வேண்டும்; தங்கள் மீதான உடல் – உளவியல் – பாலியல் தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். ஆனால், திருநர் மக்களின் நலன், பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து இச்சட்டத்தில் மோடி அரசு வாய்திறக்கவில்லை. அவர்கள் மீதான வன்முறைகளுக்கு ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரையே தண்டனை விதிக்கிறது. மாறாக, இச்சட்டம் திருநர்களை சமூகக் குற்றவாளிகளாக சித்தரிப்பதிலேயே முனைப்புக் காட்டுகிறது.
ஒருவரை வற்புறுத்தியோ, கடத்தியோ அல்லது அறுவைச் சிகிச்சை மற்றும் ஹார்மோன் ஊசிகள் மூலமாகவோ ‘கட்டாயப்படுத்தி’ திருநர் அடையாளத்தை ஏற்க வைத்தால், பாதிக்கப்பட்டவர் 18 வயதிற்கு மேற்பட்டவர் எனில் 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனையும் கடும் அபராதமும் விதிக்கவும், குழந்தை எனில் ஆயுள் தண்டனையுடன் குறைந்தபட்சம் 5 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது.
இது குழந்தைகளையும் இளைஞர்களையும் மூளைச்சலவை செய்தும், வற்புறுத்தி, கடத்தி அறுவைச் சிகிச்சை செய்தும் திருநர்களாக மாற்றுகிறார்கள் என்ற உண்மைக்கு மாறான பொதுபுத்தியிலிருந்தே முன்வைக்கப்படுகிறது. ஆனால், அவ்வாறு நடப்பதாக அரசிடம் எந்த புள்ளிவிவரமும் இல்லை. ஒருவரின் பாலின மாற்றம் என்பது பல ஆண்டுகள் நீடிக்கும் உளவியல் மற்றும் மருத்துவ ஆலோசனைக்கு உட்பட்ட ஒரு தொடர் செயல்முறையே தவிர, யாரோ ஒருவரால் ஒரே இரவில் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும் அறுவைச் சிகிச்சை நிகழ்வு அல்ல.
எனவே, கட்டாயப் பாலின மாற்றம் என்ற பெயரில் கொண்டுவரப்படும் இந்தக் கடுமையான பிரிவுகள், வீட்டை விட்டு வெளியேறி வரும் இளம் திருநர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் தனியார் அமைப்புகள், திருநர் தங்குமிடங்கள் மற்றும் குரு-சிஷ்ய அமைப்பு போன்ற திருநர் சமூகத்தின் பாரம்பரியமான ஆதரவு அமைப்புகளுக்கும், திருநர்களுக்குப் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய முன்வரும் மருத்துவர்களுக்கும் நேரடி அச்சுறுத்தலாக அமையும். தம்மைத் திருநராக உணர்பவருக்கு உதவுபவர்கள் மீது கட்டாய மதமாற்றம் அல்லது பாலின மாற்றம் என்ற பெயரில் பொய்க் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து, ஆயுள் தண்டனை பெற்றுத்தர இந்தச் சட்டப் பிரிவு வழிவகுக்கும்.
இது திருநர் சமூகத்தின் சொந்தப் பாதுகாப்பு வலைப்பின்னலை அறுத்தெறிந்து, அவர்களை முழுமையாக முடக்கும் சதியாகும்.
கிடைமட்ட இடஒதுக்கீடே திருநர் சமூகத்தின் இன்றைய தேவை!
திருநர் சமூகத்தின் கோரிக்கைகளில் முக்கியமானது தங்களின் கண்ணியமான வாழ்க்கையை மேற்கொள்ளத் தேவையான கிடைமட்ட இடஒதுக்கீடு ஆகும். சாதியப் படிநிலைகளுள்ள இந்திய சமூகத்தில் ஆதிக்கச் சாதி மற்றும் தலித் திருநர்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைகள் வெவ்வேறானவை என்பதால், செங்குத்து இடஒதுக்கீடு வழங்கப்பட்டால் ஒரு தலித் திருநரால் பட்டியல் பிரிவினர் மற்றும் திருநர் இடஒதுக்கீட்டை ஒரே நேரத்தில் பெறமுடியாமல் ஆதிக்கச் சாதியினரே ஆக்கிரமிக்க நேரிடும். மாறாக, கிடைமட்ட இடஒதுக்கீடு என்பது, பெண்களுக்கு வழங்கப்படுவதைப் போல, ஒவ்வொரு சாதிப் பிரிவுக்குள்ளும் (பட்டியல் பிரிவு, இதர பிற்படுத்தப்பட்ட, பொதுப்பிரிவு) திருநர்களுக்கென ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை (உதாரணமாக 1 சதவிகிதம்) வழங்குவதாகும். திருநர்களின் இந்தக் குறைந்தபட்ச பொருளாதார மேம்பாட்டிற்கான கோரிக்கைகளைக் காதுகொடுத்துக் கேட்காத பாசிச பா.ஜ.க, பிற்போக்கான சட்டங்களை இயற்றுவதிலேயே குறியாக உள்ளது.
திருநர் உரிமைகளும் கார்ப்பரேட் சுரண்டலும்: பிங்க் முதலாளித்துவத்தின் பின்னணி
அரசு வேலைவாய்ப்புகளில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாததாலும், பிச்சை எடுப்பது மறைமுகமாகக் குற்றமாக்கப்பட்டுள்ளதாலும் திருநர் சமூகம் வேறு வழியின்றி தனியார் துறையைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தரவுகளின்படி, 92 சதவிகித திருநர்களால் முறையான பொருளாதார அமைப்பிற்குள் வரமுடியவில்லை. திருநர்களுக்கான பாலின மாற்று அறுவைச் சிகிச்சைகள் மற்றும் ஹார்மோன் சிகிச்சைகளை வழங்க வேண்டிய பொறுப்பு அரசிற்கு உள்ளது. ஆனால், ஒரு சில அரசு மருத்துவமனைகளைத் தவிரப் பெரும்பாலான இடங்களில் இதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால் தனியார் மருத்துவமனைகளை நாடும் திருநர்கள், ஒரு அறுவைச் சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை செலவழிக்க வேண்டியுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள அரசின் காப்பீட்டுத் திட்டங்களும் இலாபகரமான பிங்க் மருத்துவச் சந்தையை பெருக்கியுள்ளதே தவிர, திருநர்களின் அடிப்படை மருத்துவ உரிமையை முழுமையாக உறுதி செய்யவில்லை.
இந்தியாவின் நகர்ப்புற மேல்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க பால் புதுமையினர் சமூகத்தினரின் வாங்கும் சக்தியானது சுமார் ரூ.13.94 லட்சம் கோடியாக உள்ளது. இது பிங்க் பொருளாதாரம் (Pink Economy) என்று குறிப்பிடப்படுகிறது. குடும்பம், குழந்தை வளர்ப்பு போன்ற பெருஞ்செலவுகள் இல்லாத இப்பிரிவினரின் உபரி வருமானத்தை வேட்டையாடவே கார்ப்பரேட் நிறுவனங்கள் துடிக்கின்றன. மறுபுறம், 92 சதவிகித விளிம்புநிலைத் திருநர்கள் முறையான வேலைவாய்ப்போ, பொருளாதாரப் பாதுகாப்போ இன்றி வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர். இந்த அடித்தட்டுத் திருநர்களின் துயரங்களைக் கண்டுகொள்ளாத பெருநிறுவனங்கள், அந்த ரூ.13.94 லட்சம் கோடி சந்தையைச் சுரண்டுவதற்காக மட்டுமே ரெயின்போ முதலாளித்துவம் (Rainbow Capitalism) என்ற பகட்டான நாடகத்தை அரங்கேற்றுகின்றன. இது விளிம்புநிலை மக்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி லாபம் ஈட்டும் அப்பட்டமான கார்ப்பரேட் சுரண்டலாகும்.
டியூரக்ஸ் (Durex), டாபர் (Dabur), ஃபாஸ்டிராக் (Fastrack), ஹெச்&எம் (H&M), லெவிஸ் (Levi’s) போன்ற பல நிறுவனங்கள், ஜூன் மாதத்தில் மட்டும் தங்களின் நிறுவனச் சின்னங்களை வானவில் நிறத்திற்கு மாற்றுவதும், சமூக வலைத்தளங்களில் விளம்பரம் தேடுவதும் வாடிக்கையாக உள்ளது. மேலும், சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் அரசின் “ஸ்மைல்” (SMILE – Support for Marginalized Individuals for Livelihood and Enterprise) மற்றும் “கரிமா க்ரே” தங்குமிடத் திட்டங்கள் மூலம் திருநர்களுக்குப் பயிற்சியளித்து, வேலைவாய்ப்பு முகாம்களில் குறைந்த ஊதியத்திற்குத் தங்களது நிறுவனங்களிலேயே பணியமர்த்திக் கார்ப்பரேட்டுகள் இரட்டிப்பு லாபம் அடைகின்றன. இப்போது 2026 சட்டத்தில் முற்போக்கான வரையறையை நீக்குவதால், அரசு கொள்கைகளின் கீழ் பல தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்துவரும் பல்லாயிரக்கணக்கான திருநர்கள் தங்கள் வேலையையும் காப்பீட்டையும் இழக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.
பாசிஸ்டுகளின் உலகளாவிய சதி
இந்தியாவில் பாசிசத்தின் அடித்தளமாக இருப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் பார்ப்பனியச் சித்தாந்தமாகும். இது சாதியத் தூய்மையைக் கட்டிக்காக்கத் தன் சாதிக்குள்ளேயே திருமணம் செய்யும் அகமண முறையையும், அதைத் தாங்கிப்பிடிக்கும் மரபான ஆணாதிக்கக் குடும்ப அமைப்பையும் தீவிரமாக வலியுறுத்துகிறது. தற்போதுவரை, இந்தியாவில் திருமண உறவுக்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமை (Marital Rape) சட்டப்படி குற்றமாக அங்கீகரிக்கப்படவில்லை என்பதும் இதன் அடிப்படையிலேயே ஆகும். பெண்கள் உடலின் மீது அதிகாரம் செலுத்துவதற்கு ஆணுக்கு முழுயுரிமை உள்ளது என்பதுதான் பார்ப்பனியச் சித்தாந்தம்.
பாலின இருமையையும் (ஆண்-பெண்), இந்த மரபான குடும்ப அமைப்பையும் தங்களின் வாழ்வியலால் நிராகரிக்கும் திருநர்களும் குயர் (Queer) சமூகத்தினரும், இந்தப் பார்ப்பனியச் சுரண்டல் கட்டமைப்பின் ஆணிவேரை அசைக்கிறார்கள். அதனால்தான், சாதியத் தூய்மையைப் பாதுகாக்கப் பாசிசம் திணிக்கும் பார்ப்பனிய ஆணாதிக்கக் கட்டமைப்பைத் தகர்க்கும் குயர் சமூகத்தினரைப் பாசிசம் தனது நேரடிச் சித்தாந்த எதிரிகளாகவே கருதி ஒடுக்கத் துடிக்கிறது. திருநர்கள், பால் புதுமையினரின் உடலின் மீது அதிகாரம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்ட இச்சட்டம் பாலினம் என்பது ஒருவரின் உள்ளார்ந்த உணர்வு அடிப்படையிலானது என்பதை மூடிமறைக்கிறது.
சொந்த தம்பியால் ஆணவப் படுகொலை செய்ய முயற்சிக்கப்பட்ட திருநங்கை சமந்தா.
நாட்டில் நிலவும் வேலையின்மை, விலைவாசி உயர்வு, விவசாய நெருக்கடி, அம்பானி-அதானி போன்ற பெருமுதலாளிகளுக்கான பொதுத்துறை கார்ப்பரேட்மயமாக்கல் மற்றும் கார்ப்பரேட் கொள்ளை போன்ற கள நெருக்கடிகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப, மத, இன, மொழி, சாதி அடிப்படையிலான வெறுப்பு அரசியலைப் பயன்படுத்துவதை போல தற்போது பாலின சிறுபான்மையினர் மீது பண்பாட்டுப் போர் தொடுத்து பலிகடாவாக்கி வருகிறது மோடி கும்பல்.
இது ஏதோ இந்தியாவில் மட்டும் நடக்கும் தனித்த நிகழ்வல்ல; மாறாக முதலாளித்துவ நெருக்கடியை மூடிமறைக்க, சர்வதேச ஏகாதிபத்திய அரசுகள் திட்டமிட்டு அரங்கேற்றும் உலகளாவிய வலதுசாரித் திட்டத்தின் இந்தியப் பதிப்பே இச்சட்டமாகும். அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான பாசிச கும்பல், மரபான குடும்ப அமைப்பைக் காப்பதாகக் கூறிக்கொண்டு திருநர்களின் மருத்துவ உரிமைகளை அப்பட்டமாகப் பறிப்பதும், இங்கிலாந்து ஏகாதிபத்திய அரசு பால் புதுமையினரின் சுய-அடையாள உரிமையைச் சட்டப்பூர்வமாகத் தடுப்பதும் இதே பாசிச அச்சில் வார்க்கப்பட்டவைதான். ஹங்கேரியின் விக்டர் ஓர்பன் மற்றும் இத்தாலியின் நவ-பாசிச ஜார்ஜியா மெலோனி ஆகியோரின் அரசுகள் ‘பாலினச் சித்தாந்தம்’ என்ற கற்பனைப் பூதத்தை உருவாக்கி மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்புவது போல, இங்கும் திருநர்களைச் சமூக விரோதிகளாகச் சித்தரித்து இந்துத்துவ முலாம் பூசி மோடி அரசு தாக்குகிறது.
பாசிசம் எந்த வடிவத்தில் வந்தாலும் அது மத, இன, சாதி மற்றும் பாலினம் என அனைத்து விதமான சிறுபான்மையினருக்கும் எதிரானதே என்பதை இந்த உலகளாவிய நிகழ்ச்சிநிரல் அம்பலப்படுத்துகிறது.
வீதிகளில் எழும் விடுதலையின் முழக்கம்
ஒடுக்கப்பட்ட மக்களின் மாண்பைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, அவர்களின் உடல்களைக் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் லாப வேட்டைக்கும், வாழ்வாதாரத்தை மலிவான உழைப்புச் சுரண்டலுக்கும் தாரைவார்க்கும் கள்ள ஒப்பந்தமே இந்த திருநர் சட்டம் – 2026.
இதன் மூலம் திருநர்கள் பல ஆண்டுகால இரத்தக்களரியான போராட்டங்களின் வழியே ஈட்டிய குறைந்தபட்ச உரிமைகளையும் பறித்தெறிந்து, அடையாள அழிப்பை நிகழ்த்தத் துடிக்கிறது. அரசே உருவாக்கியுள்ள திருநர்களுக்கான தேசிய கவுன்சில் (NCTP) உறுப்பினர்களிடம் கூட எவ்வித ஆலோசனையும் நடத்தாமல் எதேச்சதிகாரமாகக் கொண்டுவரப்பட்ட இச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதலே நாடு முழுவதிலும் உள்ள திருநர் சமூகத்தினர், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் முற்போக்குச் சிந்தனையாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
“எங்கள் உடல்கள் உங்கள் அதிகாரத்தின் பரிசோதனைக் கூடங்கள் அல்ல!” என்ற முழக்கத்தோடு இச்சட்டத்தை முழுமையாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, சென்னை, புனே, ஹைதராபாத், டெல்லி என நாடு முழுவதும் தொடர் வீதிப் போராட்டங்களை முன்னெடுத்துவரும் திருநர் அமைப்புகளின் போர்க்குரல் நமக்கு உணர்த்துவது ஒன்றைத்தான்: இச்சட்டத்தில் சிறுசிறு திருத்தங்களைக் கோருவது என்பது நச்சு மரத்தின் கிளைகளை நறுக்குவதற்குச் சமம், அதை வேரோடு பிடுங்கி எறிவது ஒன்றே தீர்வு. ஆனால் பா.ஜ.க-வை கடுமையாக எதிர்ப்பதாகக் கூவிவரும் எதிர்க்கட்சிகளோ, மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பாதது ஒன்றையே பெரும் தவறாக விமர்சித்து, வழக்கம் போல் வெறும் வெளிநடப்பு நாடகத்தை மட்டும் அரங்கேற்றிவிட்டு ஒதுங்கிக் கொள்கின்றன.
எனவே இனியும் எதிர்க்கட்சிகளை நம்பியிராமல், திருநர் சட்டம் 2026-ஐ திரும்பப் பெறு! எவ்வித அதிகாரத்துவத் தலையீடுகளும் இல்லாத சுய-அடையாள நிர்ணய உரிமை மற்றும் கல்வி, வேலைவாய்ப்பை உறுதி செய்யும் கிடைமட்ட இடஒதுக்கீட்டு நடைமுறையை உடனடியாக அமல்படுத்திடு! உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து திருநர் சமூகத்தினர் களப்போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும்.
திருநர்களின் இந்தப் போராட்டம் தனித்ததல்ல; இது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலால் தொழிலாளர்கள், தலித்துகள், மற்றும் சிறுபான்மையினர் மீது ஏவப்படும் ஒட்டுமொத்தப் பாசிச தாக்குதலின் ஒரு பகுதியே. எனவே, இந்தப் போராட்டங்களை ஒன்றிணைத்து வீரியமிக்க வெகுசனப் பேரியக்கமாக மாற்றுவதே இன்றைய தேவை.
எச்சரிக்கையுடன் எவர் கவனத்தையும் ஈர்க்காதபடி அச்சு ஊடகத்தில் ஓர் ஓரத்திலும் காட்சி ஊடகத்தில் சட்டென்று மறையும் வகையிலும் இந்தியாவில் பெய்த ஆலங்கட்டி மழை குறித்தான செய்திகள் கடந்த மாதத்தில் பதிவாகின. ஆனால், வழக்கத்திற்கு மாறாக பெய்த இந்த ஆலங்கட்டி மழையினால் விவசாயிகள், மக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
இந்தியா முழுவதும் மார்ச் 16 முதல் 30 வரை தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் பல இடங்களில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது.
அருணாச்சல பிரதேசத்தின் பந்தர்தேவா பகுதியில் மார்ச் 24 மற்றும் 25 தேதிகளில் பெய்த ஆலங்கட்டி மழையால் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்திலுள்ள மச்சபூர் கிராமத்தில் பெய்த ஆலங்கட்டி மழையால் அப்பகுதியின் மாந்தோப்பு மற்றும் சோயாபீன் பயிர்கள் பெரும் அழிவைச் சந்தித்துள்ளன.
தமிழ்நாட்டில் மதுரை, சேலம், தென்காசி, கோயம்புத்தூர், ஓசூர் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் சுமார் 850 ஹெக்டேர் விவசாய நிலங்கள் நாசமாகியுள்ளன. குறிப்பாக மதுரையில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் ஆலங்கட்டி மழையாலும், பலத்த காற்றாலும் நிலத்தில் சாய்ந்தன. ஓசூருக்கு அருகில் உள்ள தேன்கனிக்கோட்டை, தளி, ஜவளகிரி ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த தக்காளி, முட்டைகோஸ் மற்றும் பூச்செடி நாற்றுகள் ஆலங்கட்டி மழையினால் நசுங்கி அழிந்தன.
கோவை மாவட்டம் அன்னூர், சரவணம்பட்டி, சூலூர் ஆகிய பகுதிகளில் பயிர்கள் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளன. குறிப்பாக, அன்னூர் வட்டத்தில் மட்டும் சுமார் 15,000 ஏக்கர் விளைநிலங்கள் இம்மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன. பயிரிட்டிருந்த வாழை மரங்கள், பாக்கு மரங்கள் நாசமடைந்துள்ளன. இரண்டு நாட்களில் வெட்ட காத்திருந்த வாழைத்தார்கள் ஆலங்கட்டியால் முற்றிலும் நாசமடைந்திருப்பதாகவும் தங்கள் வாழ்நாளில் இவ்வாறான பாதிப்பை சந்தித்ததில்லை எனவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இவையில்லாமல், கோடைக்கால விளைச்சலை எதிர்நோக்கியிருந்த தர்பூசணி, தென்னை மற்றும் தக்காளி பயிர்களும் நாசமாகியிருக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஆலங்கட்டி மழையால் மிகக் கடுமையான பாதிப்புகளை கோவை மாவட்டம் சந்தித்துள்ளது.
பொதுவாக வட இந்தியாவில்தான், குறிப்பாக மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் போன்ற மாநில விவசாயிகள்தான் ஆலங்கட்டி மழையால் பயிர் நாசத்தையும் அதன் விளைவாக வருமான இழப்பு, கடன் சுமை போன்ற நெருக்கடிகளையும் சந்தித்து வந்தனர். இந்த நெருக்கடியை தற்போது தமிழ்நாடு விவசாயிகளும் சந்திக்கத் தொடங்கியுள்ளனர்.
அதேபோல், நிலத்தில் விழுந்த ஆலங்கட்டிகள் அதிகபட்சம் 3 முதல் 4 மணி நேரத்திற்குள் உருகிவிடும். ஆனால், தமிழ்நாட்டில் கோவை போன்ற பகுதிகளில் பெய்த ஆலங்கட்டிகள் 38 மணி நேரத்திற்கும் மேலாக உருகாமல் நிலத்திலேயே கிடந்தது விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்குதான் காலநிலை மாற்றம் (Climate Change) என்ற அபாயம் முக்கியத்துவம் பெறுகிறது.
இலாபவெறிப்பிடித்த ஏகாதிபத்திய முதலாளித்துவக் கட்டமைப்பின் கட்டற்ற இயற்கைவளச் சுரண்டல் காரணமாக புவி வெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஏற்பட்டிருக்கும் காலநிலை மாற்றம் என்பது இயல்பான வானிலை நிகழ்வுகளை அசாதாரணமானதாகவும், இயல்புக்கு மாறான பேரிடர்களாகவும் மாற்றி வருகிறது. நூற்றாண்டுகளுக்கு ஓரிரு முறை நிகழ்ந்துவந்த பேரிடர்கள் இனி அடிக்கடி நிகழும் என்ற “புதிய இயல்பு நிலை” உருவாகியிருக்கிறது.
ஆலங்கட்டி மழையும் காலநிலை மாற்றமும்
வெப்பச் சலனம் காரணமாக மேகங்களுக்குள் வீசும் பலமான மேலேற்ற காற்று (Updrafts), நீர்த்துளிகளை வளிமண்டலத்தின் 0 டிகிரிக்கு (உறை நிலை) குறைவான குளிர் நிலவும் பகுதிகளுக்குத் தூக்கிச் செல்கிறது. இவ்வாறு தொடர்ச்சியாக காற்று நீர்த்துளிகளை தூக்கிச் செல்லும்போது ஒரு கட்டத்தில் அவை உறைந்து அளவில் பெரிதாகி, எடை காரணமாக கீழே விழுகின்றன. இதைத்தான் ஆலங்கட்டி மழை என்கிறோம். ஆனால், காலநிலை மாற்றம் இந்த ஆலங்கட்டி மழையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
பூமியின் வளிமண்டலத்தில் மிக உயரத்தில் “ஜெட் காற்றோட்டம்” (Jet Streams) என்ற ஒரு வேகமான காற்று வீசும். ஒரு ரயில் பாதை போல நேராகச் செல்லக்கூடிய இக்காற்றோட்டம் காலநிலை மாற்றத்தால் வழக்கமான பாதையிலிருந்து விலகி “அலை அலையாக” (Wavy or U-shaped) மாறுகின்றன. இதனால், “மேலைநாட்டு இடையூறுகள்” (Western Disturbances – மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து கிளம்பிவரும் ஒரு வகையான ஈரப்பதமான காற்று) தெற்கு நோக்கித் தள்ளப்பட்டு, தமிழ்நாடு போன்ற தாழ்ந்த அட்சரேகை பகுதிகளிலும் கடுமையான ஆலங்கட்டி மழையை உருவாக்குகிறது.
அதேபோல், வழக்கமாக இந்த மேலைநாட்டு இடையூறுகள் வளைந்த சுழற்சி வடிவத்தைக் கொண்டிருக்கும். ஆனால் இம்முறை, ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வரை சுமார் 1,000 கிலோமீட்டர் நீளத்திற்கு ஒரு நேர்க்கோட்டு காற்றழுத்த மண்டலமாக (Linear Trough) உருவெடுத்தது. ஒரு சிறிய வாளியில் தண்ணீர் ஊற்றுவதற்கும், ஒரு நீண்ட குழாய் (Pipe) வழியாகத் தண்ணீர் பாய்ச்சுவதற்கும் வித்தியாசம் உண்டு அல்லவா? அதுபோலத்தான் இந்த நேர்க்கோடு அமைப்பு, குறுகிய நேரத்தில் அதிக மழையைக் கொட்டச் செய்துள்ளது.
மேலும், வழக்கமாக இந்த மேலைநாட்டு இடையூறுகள் டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர் காலத்தில்தான் தீவிரமாக இருக்கும். மார்ச் மாத இறுதியில் இவை படிப்படியாக வலுவிழந்துவிடும். ஆனால், “சூப்பர் எல் நினோ” (Super El Nino – பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் அதீத வெப்பம்) காரணமாக, கோடை காலம் தொடங்கும் ஏப்ரல் மாதத்திலும் இவை நீடிக்கின்றன.
அதேபோல், ஆலங்கட்டிகள் 38 மணி நேரத்திற்கும் மேலாக உருகாமல் இருந்தது வளிமண்டலத்தில் நிலவும் “அதிதீவிரக் குளிர்” நிலையை (Super – cooled stage) உணர்த்துகிறது.
மேலும், வெப்பமயமாதல் காரணமாக வளிமண்டலத்தின் 0 டிகிரி செல்சியஸ் உயர எல்லை (Freezing Level) தொடர்ந்து அதிகரித்து வருவதோடு, மேலேற்றக் காற்றிலும் மாற்றம் ஏற்படுகிறது. இது ஆலங்கட்டிகள் அளவில் பெரியதாக உருவாவதற்கு வித்திடும். இவ்வாறு உருவாகும் ஆலங்கட்டிகள் நிலத்தை வந்தடையும் போது அளவில் பெரியதாகவும் அதிக அழிவை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும். இதனால் வீடுகளின் கூரைகள் உடைவது, பயிர்கள் நாசமடைவது, கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் கூட காயங்கள் ஏற்படுவது போன்ற அபாயம் உள்ளது.
முன்பெல்லாம் ஆலங்கட்டி மழை என்பது அரிதான, அழகான நிகழ்வு. இனி அது பயிர்களையும் வீடுகளையும் சேதப்படுத்தும் ஒரு இயற்கைப் பேரிடராக மாறப்போகிறது. ஆலங்கட்டிகள் சிறிய கட்டிகளாக விழுந்த காலம் போய், இனி பெரிய பாறைகளாக விழும் அபாயம் காத்திருக்கிறது.
சூழலியல் நெருக்கடியை தீவிரப்படுத்தும் பாசிச மோடி அரசு
காலநிலை மாற்றம் என்பது வெறுமனே பூமியின் வெப்பம் அதிகரிப்பது மட்டுமல்ல; அது இயற்கையின் சுழற்சியையே தலைகீழாக மாற்றுகிறது என்பதை இந்த சமீபத்திய ஆலங்கட்டி மழை உணர்த்துகிறது.
ஆனால், இவ்வாறான காலநிலை மாற்ற பேரிடர்களால் அதிகம் பாதிப்படைவது விளிம்புநிலை மக்களே ஆவர். அதிலும் விவசாயிகளின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. தற்போது பெய்த ஆலங்கட்டி மழையினால் கூட அதிகளவு பாதிப்பை சந்தித்தது சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளே ஆவர்.
காரணம், பெருமளவு இந்திய விவசாயம் இன்னும் சிறு நிலப்பரப்பில் துண்டுத் துண்டான அளவிலேயே நடைபெறுகிறது; பருவத்தை எதிர்பார்த்தே விதைக்கப்படுகின்றன; கடன் வாங்கியே விவசாயம் நடைபெறுகிறது. சிறு, குறு, நடுத்தர விவசாயிகளுக்குத் தேவையான காப்பீடு, மானியம் அரசால் வழங்கப்படுவதில்லை. பேரிடர்கள் ஏற்படும்போது நாசமடைந்த பயிர்களுக்கான உரிய இழப்பீடுகளை விவசாயிகள் பெறுவது என்பது முடியாத காரியம். அற்பத் தொகையை நிவாரணம் என்ற பெயரில் கொடுத்துவிட்டு கைகழுவி விடுவதையே அரசுகள் வாடிக்கையாக வைத்திருக்கின்றன.
இந்நிலையில், அந்த அற்பத் தொகையை கொடுப்பதிலிருந்தும் அரசு விலகிக்கொண்டு மக்களை தனியார்-கார்ப்பரேட் காப்பீட்டு நிறுவனங்களிடமும் அதிகார வர்க்கத்திடமும் தாரைவார்ப்பதற்காக “பேரிடர் மேலாண்மை (திருத்த) சட்டம் 2025”-ஐ மோடி அரசு நிறைவேற்றியுள்ளது. இச்சட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது சட்டப்பூர்வ உரிமை என்பது பறிக்கப்பட்டுள்ளது.
மேலும், இச்சட்டத்தின்படி, தேசிய மற்றும் மாநில அளவில் “பேரிடர் தரவுத்தளம்” உருவாக்கப்பட்டு, இதில் மக்களின் சொத்து விவரங்கள், இடர் மதிப்பீடு ஆகிய தரவுகள் சேகரிக்கப்படும். இவ்வாறு சேகரிக்கப்படும் தரவுகள் தனியார்-கார்ப்பரேட் காப்பீட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கப்படும். இதன் மூலம், பேரிடர் அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் அதிக “பிரீமியம்” வசூலிக்கும் வேலையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஈடுபடும்.
அதாவது, அரசு வழங்கும் நேரடி நிவாரணத்தைக் குறைத்துவிட்டு, தேசிய பேரிடர் காப்பீட்டு நிதி மூலம் மக்களைத் காப்பீட்டு நிறுவனங்களை நோக்கித் தள்ளுவதே பாசிச மோடி அரசின் சதித்திட்டம். மக்களுக்கு கிடைக்க வேண்டிய சட்டப்பூர்வ உரிமையான நிவாரணம், இப்போது மக்கள் முன்கூட்டியே பிரீமியம் கட்டிப் பெறும் காப்பீட்டு ஒப்பந்தமாக மாற்றப்பட்டுள்ளது. விவசாயிகளாலும் ஏழைகளாலும் அதிக பிரீமியம் கட்ட முடியாது. பேரிடர் வந்தால், ‘இது கடவுளின் செயல்’ என்று கூறி காப்பீட்டு நிறுவனங்கள் நட்ட ஈட்டைத் தட்டிக் கழிக்கும். இது மக்களை மேலும் வறுமையில் தள்ளும்.
இயற்கைப் பேரிடர்கள் புதிய இயல்பு நிலையாகியுள்ள சூழலில் மோடி அரசு இச்சட்டத்தை நிறைவேற்றியது ஏழை எளிய மக்கள், சிறு குறு, நடுத்தர விவசாயிகள் மீது தொடுக்கப்படும் பாசிச தாக்குதலே ஆகும்.
அதேபோல், நவம்பர் 2025-இல் “இந்தியத் தர நிர்ணய அமைப்பு” (BIS) நிலநடுக்க மண்டல வகைப்பாட்டில் கொண்டுவந்த புதிய தரநிலைகளை பாசிச மோடி அரசு கடந்த மார்ச் மாதத்தில் திடீரென ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய 1983 தரநிலையே தொடரும் என அறிவித்துள்ளது.
2025 நவம்பரில் பி.ஐ.எஸ். வெளியிட்ட புதிய தரநிலையின்படி, இந்திய நிலநடுக்க வரைபடத்தில் “மண்டலம் 6” (Zone 6) என்ற மிக ஆபத்தான புதிய பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் இமயமலை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையின் சில பகுதிகள் அதிக ஆபத்துள்ள மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டன. இதனால், இப்பகுதிகளில் கட்டப்படும் கட்டடங்கள் நிலநடுக்கத்தின் போது சிதையாமல் இருக்கும் வகையில் வலிமையான கட்டுமானப் பொருட்கள் மூலம் கட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியது.
இப்புதிய விதிகளால் கூடுதல் செலவு ஏற்படும் என்பதால் தனியார்-கார்ப்பரேட் கட்டுமான நிறுவனங்களும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமும் இப்புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபம் குறைவதை பொறுத்துக்கொள்ள முடியாத மோடி கும்பல் உடனடியாக இவ்விதிகளை இரத்துச் செய்திருக்கிறது. டெல்லி போன்ற நகரங்களில் ஏற்கெனவே 80 சதவிகித கட்டடங்களுக்கு அடிப்படைப் பாதுகாப்பு விதிகளையே பின்பற்றப்படாத நிலையில், புதிய மேம்படுத்தப்பட்ட விதிகளைத் திரும்பப் பெறுவது மக்களின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.
ஒருபுறம், வன (பாதுகாப்பு) திருத்தச் சட்டம், 2023, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2023, அந்தமான் நிக்கோபார் மெகா திட்டம் என பல்வேறு சட்டத்திட்டங்கள் மூலம் இந்தியாவின் இயற்கை வளங்களைக் கார்ப்பரேட் வேட்டைக்கு பாசிச மோடி அரசு திறந்துவிடுகிறது. மறுபுறம், இத்தகைய தீவிரமான இயற்கைவள சூறையாடல் காரணமாக உருவாகியிருக்கும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடர்களிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்கு பதிலாக அவர்களை மேலும் சுரண்டிக்கொழுப்பதற்கு கார்ப்பரேட்டுகளுக்கு பாதை அமைத்துக் கொடுக்கிறது. சூழலியல் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்துகிறது. இலாபவெறி பிடித்த ஏகாதிபத்திய முதலாளித்துவமும் பாசிச அரசும் ஒன்றிணைந்து உழைக்கும் மக்கள் மீது தொடுத்துள்ள போராகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது. இந்தப் போரில் நமது நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் அடுத்த தலைமுறையையும் இயற்கையையும் காக்க வேண்டிய கடமை நமது கைகளில் உள்ளது.
நேபாளத்தில் நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், பாலேந்திர ஷா தலைமையிலான ராஷ்ட்ரிய சுதந்திரக் கட்சி (RSP), மொத்தமுள்ள 275 இடங்களில் 182 இடங்களைக் கைப்பற்றித் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வாறு தனிப்பெரும்பான்மையுடன் ஓர் ஆட்சி அமைக்கப்படுவது இதுவே முதல்முறை. அதிலும், ஊழல் எதிர்ப்பை முன்னிறுத்தி ஐந்தாண்டுகளுக்கு முன்னர்தான் ஆர்.எஸ்பின் எனும் இக்கட்சி புதிதாகத் தொடங்கப்பட்டது. ஆகையால், நேபாள அரசியல் வரலாற்றில் 2026 மார்ச் 5 அன்று நடைபெற்ற பொதுத்தேர்தல் ஒரு முக்கியமான திருப்புமுனையாக ஆளும் வர்க்க ஊடகங்களால் சித்தரிக்கப்படுகிறது.
பல தசாப்தங்களாக நேபாளத்தை மாறிமாறி ஆண்டுவந்த நேபாள காங்கிரஸ் (NC) 38 இடங்களையும், நேபாள கம்யூனிஸ்ட் ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (CPN-UML) 25 இடங்களையும், மாவோயிஸ்ட் மையம் 17 இடங்களையும் பெற்று படுதோல்வி அடைந்துள்ளன. நேபாள மக்களை வஞ்சித்து வந்த இப்பிழைப்புவாத அரசியல் கட்சிகளுக்கு மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர்.
குறிப்பாக, மன்னராட்சியை வீழ்த்தி அதிகாரத்திற்கு வந்த பிரசந்தா தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்), மக்களுக்குத் துரோகமிழைத்து புரட்சியைக் கைவிட்டு பிழைப்புவாதத்தில் மூழ்கியது; பிற பிழைப்புவதக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு நாடாளுமன்ற சீரழிவில் சிக்கியது. இதனால், நீண்டகாலமாக, நேபாளத்தில் நிலவிய அரசியல் நெருக்கடி தீர்க்கப்படாமல் போனது; பாதாளத்திற்குச் சென்று கொண்டிருந்த நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் மேலும் மோசமடைந்தது, வேலையின்மை தீவிரமடைந்தது. இத்துடன் ஊழல் மோசடிகளில் அனைத்து கட்சிகளும் அம்பலமாகி நாறத் தொடங்கின.
இந்நிலையில், கடந்த 2025 செப்டம்பர் மாதம், சமூக வலைத்தளங்கள் மீதான தடையை எதிர்த்து எழுந்த “ஜென்-சி” (Gen-Z) இளைஞர்களின் போராட்டம், வேலையின்மைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டமாக வளர்ந்தது. இப்போராட்டத்திற்கு எதிராக ஏவப்பட்ட அரசு வன்முறையில் 70-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டபோதும் போராட்டம் மிகப்பெரும் அளவில் மக்கள் ஆதரவைப் பெற்றது. அப்போராட்டத்தைக் கண்டு அஞ்சிய சி.பி.என்.-யு.எம்.எல். கட்சியின் கே.பி. சர்மா ஒலி பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.
நேபாளத்தில் பாரம்பரியமாக ஆண்டுவந்த கட்சிகள் மிகக் கேவலமாக அம்பலப்பட்டு, மக்களிடமிருந்து தனிமைப்பட்டுள்ள இத்தகைய சூழலில், மக்களின் குமுறலையும் கொந்தளிப்பையும் தமக்குச் சாதமாகப் பயன்படுத்தி, வழக்கம் போல, ஊழல் எதிர்ப்புகளை முன்னிறுத்தி ஆர்.எஸ்.பி கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.
நேபாளத்தில் வெடித்த ஜென்சி போராட்டம்
கவர்ச்சிகரமான திட்டங்கள் மூலமும், சில நிர்வாக ‘சீர்திருத்தங்கள்’ மூலமும் மக்களின் சீற்றத்தையும், குமுறலையும் தணித்து சாந்தப்படுத்தி மக்களின் போராட்ட உணர்விற்கு வடிகால் வெட்டுவதற்கான ஏற்பாடாகவே பாலேந்திர ஷா தலைமையிலான இந்த ஆட்சியைப் பார்க்க வேண்டியுள்ளது.
பாலேந்திர ஷா அறிவித்துள்ள 100-அம்ச நிர்வாகச் சீர்திருத்தம்; பொதுச் சேவைகளை டிஜிட்டல்மயமாக்குவது; தலித் மற்றும் நீண்டகாலமாக ஒடுக்கப்பட்ட சமூகங்களிடம் பொது மன்னிப்பு கோருவது போன்ற நடவடிக்கைகள் கவர்ச்சிவாத, கார்ப்பரேட்மயக் கொள்கைகள் அடிப்படையிலானதே. இக்கொள்கைகளின் மூலம், நேபாள சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள வர்க்க முரண்பாடுகளையோ, ஆதிக்கச் சாதிகளின் (காஸ்-ஆர்யா) ஒடுக்குமுறையையோ ஒருபோதும் தீர்க்க முடியாது.
நேபாளத்தின் பிரதமர் பாலேந்திர ஷா
மறுபுறம், இந்தப் ஜனரஞ்சக (populism) ஆர்.எஸ்.பி. அரசு, ‘நிர்வாகத் தூய்மை’ என்ற பெயரில் கல்வி நிறுவனங்களில் இயங்கி வரும் அனைத்து மாணவர் சங்கங்களையும் கலைக்க உத்தரவிட்டுள்ளது; அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் அரசு சார்ந்த பிற ஊழியர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல் கட்சிகளுடன் தொடர்பில் இருப்பதைத் தடை செய்துள்ளது. அதாவது, மக்களையும் இளைஞர்களையும் அரசியலிலிருந்து விலக்கி, அவர்கள் இனி போராட்டக் களத்திற்கு வரவிடாமல் தடுக்கும் கடுமையான ஒடுக்குமுறையாகும்.
மேலும், நேபாளம் தற்போது அமெரிக்க மற்றும் சீன ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்கப் போட்டியில் சிக்கித் தவிக்கிறது. சீனாவின் பட்டுப்பாதை (BRI) திட்டம் மற்றும் போக்ரா சர்வதேச விமான நிலையம் போன்ற ‘கடன் வலை’ திட்டங்களால் நேபாளத்தின் இறையாண்மை கேள்விக்குறியாகியுள்ளது. மறுபுறம், அமெரிக்காவின் பாசிச ட்ரம்ப் அரசு யூ.எஸ்.எய்ட் (USAID) நிதியுதவிகளையும் நிறுத்தி, நேபாளத்தைத் தனது இராணுவ-அரசியல் பிடிக்குள் கொண்டுவர மிரட்டி வருகிறது. இந்நிலையில், “வளர்ச்சி ராஜதந்திரம்” (Development diplomacy) என்ற ’அணிசேரா கொள்கை’யைப் பின்பற்றப் போவதாக அறிவித்துள்ளதன் மூலம் பாலேந்திர ஷா அரசு ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாக நேபாளத்தை மாற்றப்போகிறது.
அதேபோல், பாலேந்திர ஷா பிரதமர் பதவியேற்ற பிறகு, முதலில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தது இந்தியப் பிரதமர் மோடி என்பது கவனிக்கத்தக்கது. ‘அகண்ட பாரத’ கனவை நிலைநாட்டுவதை நோக்கி நகரும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல், நேபாளத்தில் வீழ்த்தப்பட்ட இந்து மன்னராட்சியை மீண்டும் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. வி.எச்.பி., பஜ்ரங் தளம் போன்ற தனது காவி பயங்கரவாத அமைப்புகள் மூலம் மதவெறுப்பு அரசியலைத் தூண்டிவிட்டு, ராஷ்ட்ரிய பிரஜாதந்திரக் கட்சி (RPP) போன்ற பிற்போக்கு சக்திகளுக்குப் பின்புலமாக இந்தியா செயல்படுகிறது. இந்த ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்புகள் ஊடுருவலைத் தடுக்கும் திராணி ஆர்.எஸ்.பி அரசிடம் இல்லை.
மொத்தத்தில், பாலேந்திர ஷா தலைமையிலான ஆர்.எஸ்.பி.யின் ஆட்சியானது, மக்களின் கொந்தளிப்பைத் தடுப்பதற்கான, ஜனரஞ்சக ஆட்சியாகும். இது ஆளும் வர்க்கத்தின் கொடூர முகத்தை மறைத்து, கவர்ச்சித் திட்டங்களையும் அடக்குமுறைகளையும் ஒருசேர ஏவி ஒடுக்குவதாக அமைந்துள்ளது. இவ்வாறு, தமது நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான கொள்ளைப்புற வழியைக் கண்டடைந்திருப்பதாக நேபாள ஆளும் வர்க்கம் மகிழ்ச்சி கொள்கிறது. எனினும், தமக்கு ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார நெருக்கடிகளை எந்தவகையிலும் ஆளும் வர்க்கத்தால் தீர்த்துக் கொள்ள முடியாது. மாறாக, அனைத்து ஜனநாயக முகமூடிகளையும் தூக்கிவீசிவிட்டு ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவு, மக்கள்மீது கொடூர அடக்குமுறைகளை ஏவுவதற்கான பாசிச ஆட்சியை நிலைநாட்டுவதற்கே வழிவகுக்கும். இதற்கேற்பவே, ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலும் நடந்தேறி வருகிறது.
எனவே, பாசிச ஆட்சி அரங்கேறுவதற்கு பாதையைச் செப்பனிட்டுக் கொடுக்கும் பாலேந்திர ஷாவின் ஆர்.எஸ்.பி. கட்சியின் ஜனரஞ்சக ஆட்சியைத் தோலுரித்து அம்பலப்படுத்துவது; உழைக்கும் மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான மாற்று, அரசியல் பொருளாதாரத் திட்டத்தை முன்வைத்து, மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பது புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.
மதி
***
சுயவிமர்சனம் — திருத்த அறிவிப்பு:
இக்கட்டுரையில், நேபாளத்தில் புதிதாக அமைந்துள்ள பாலேந்திர ஷாவின் ஆட்சியை ஜனரஞ்சகவாத (பாப்புலிச) ஆட்சி என்று குறிப்பிடுவதற்கு பதிலாக “பாசிபிச ஆட்சி” என்று தவறாக குறிப்பிட்டிருந்தோம். வார்த்தை பயன்பாட்டில் ஏற்பட்ட இத்தவறு பாரிய பொருள் தவறை ஏற்படுத்தியுள்ளது என்பதை உணர்கிறோம்.
பாலேந்திர ஷாவின் ஆட்சியானது நேபாளின் இளைஞர்கள், மக்களின் எதிர்ப்பை தணிப்பதற்காக ஆளும் வர்க்கத்தால் முன்னிறுத்தப்பட்டிருந்தாலும், அது அமைதிவாதக் கொள்கைகளைப் பின்பற்றுகின்ற பாசிபிச ஆட்சியாக இல்லை. மாறாக, ஊழல் எதிர்ப்பு, கவர்ச்சிவாதத் திட்டங்களை முன்வைக்கும் ஜனரஞ்சக ஆட்சியாகவே இருக்கிறது. கட்டுரையிலும் இது ஒரு ஜனரஞ்சக ஆட்சிதான் என்பதற்கான அடிப்படைகளையே விளக்கியுள்ளோம்.
எனவே, பாலேந்திரா ஷாவின் ஜனரஞ்சக (பாப்புலிச) ஆட்சியை பாசிபிச ஆட்சி என்று குறிப்பிட்டிருந்தது பாரிய தவறாகும். இனி இத்தகைய தவறுகள் நேராமல் இருக்க உறுதியேற்கிறோம்.
இக்கட்டுரை இடம்பெற்றுள்ள மே மாத அச்சிதழ் ஏற்கெனவே வெளிவந்துவிட்டதால், அதில் இத்தவறைத் திருத்த இயலவில்லை. இணையதளப் பதிப்பில் மட்டும் தற்போதைக்கு சரிசெய்துள்ளோம்.