Monday, August 4, 2025
முகப்பு பதிவு பக்கம் 590

பா.ஜ.கவின் ராய்ப்பூரில் ஏழைகளுக்கு இடமில்லை !

0

90 சதவீத மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நிர்மல்கர் குடும்பத்திடமிருந்து ஒரு கடிதம்

ரூ 5,000-க்கும் குறைவான மாத வருமானம் பெறும் குடும்பம் எப்படி வாழ்கிறது. என்று ஆஷூதோஷ் பரத்வாஜ் கண்டறிகிறார். சமூக, பொருளாதார, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சத்தீஸ்கரில் கிட்டத்தட்ட அனைத்து கிராமப்புற குடும்பங்களும் அவ்வளவுதான் சம்பாதிக்கின்றன.

மூக, பொருளாதார, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கிராமப் புற இந்தியாவின் 4-ல் 3 குடும்பங்களின் முக்கிய பணமீட்டும் உறுப்பினரின் மாத வருமானம் ரூ 5,000-க்கு குறைவானது. சத்தீஸ்கரில் 90 சதவீத குடும்பங்களில் இதுதான் நிலைமை.

ராஷ்மி - தான்யா
மகள் தான்யாவுடன் ராஷ்மி. காது கேட்காத, வாய் பேசாத அந்தக் குழந்தைக்கு செயற்கை காது சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால், அது தங்களுக்கு எப்போதும் கட்டுப்படியாகப் போவதில்லை என்று அவளது அப்பா, அம்மாவுக்கு தெரியும். (படம் நன்றி : ஆஷூதோஷ் பரத்வாஜ், எக்ஸ்பிரஸ் போட்டோ)

ஈஷ்வர் நிர்மல்கரின் 5 பேர் கொண்ட குடும்பம் இந்த வரையறைக்குள் வருகிறது. ஆனால், அவர்களைப் பொறுத்தவரை, மாதம் ரூ 5,000 சம்பாதிப்பது கூட இழுபறியாகத்தான் இருக்கிறது. அவர்கள் வாழும் போரியா கலன்  கிராமம் சத்தீஸ்கர் அரசு உருவாக்கி வரும் புதிய தலைநகரான நயா ராய்பூரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது.

9 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மகன், மகள் திருமணத்துக்கு ஒரு பெருந்தனக்காரரிடமிருந்து ரூ 60,000 கடன் வாங்கியது அந்தக் குடும்பம். அவரிடம்தான் நிர்மல்கர் மாடு மேய்த்து வந்தார்.

ஐந்து, ஆறு ஆண்டுகள் முறையாக தவணை கட்டியபிறகு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு   “இது வரை கட்டியது வட்டி மட்டும்தான், அசல் இன்னும் அப்படியே இருக்கிறது” என்று கடன் கொடுத்தவர் சொல்லியிருக்கிறார். நிர்மல்கரின் மனைவி பிர்ஜா பாய் தனது தம்பியிடமிருந்து ரூ 20,000 கடன் வாங்கினார், குடும்பத்தின் மருமகள் ராஷ்மி தனது தாய் வீட்டிலிருந்து ரூ 10,000 வாங்கி வந்தார். அந்தத் தொகைகளை கடன் அடைக்க கொடுத்த பிறகும், இப்போது ரூ 20,000 பாக்கியிருக்கிறது.

“கடன் கொடுத்த பெருந்தனக்காரருக்கு இதுவரை மொத்தம் எவ்வளவு பணம் கொடுத்திருக்கிறோம் என்ற கணக்குக் கூட மறந்து போச்சு” என்கிறார் பிர்ஜா பாய்.

நிர்மல்கர் குடும்பத்துக்கு என்று சொந்தமாக நிலம் இல்லை. அவர்கள் வாங்கியது இந்தக் கடன் மட்டும் இல்லை; ஒரு கடனுக்கான வட்டியை கட்ட இன்னொரு கடன் வாங்குவதும் இது முதல்முறை அல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது மகன் நவுகர் லால் நிர்மல்கர் ஒரு கூட்டுறவு வங்கியிடமிருந்து ரூ 10,000 கடன் வாங்கி ஒரு பான் கடை திறந்தார். மாதா மாதம் ரூ 300 தவணை கட்டிய பிறகும் அந்தக் கடனில் இன்னும் ரூ 1,000 மீதியிருக்கிறது.

ஒரு பசு வாங்குவதற்கான கடனால் ஒரு குடும்பமே அழிந்தது பற்றி எழுத்தாளர் பிரேம் சந்த் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு தனது “கோதான்” என்ற கதையில் எழுதியிருந்தார். அதேதான் தங்களது குடும்பத்தின் கதையும் என்றால் பிர்ஜா பாய் ஒத்துக் கொள்வார். காய்கறிகாரருக்கு ரூ 300, மளிகைக் கடைக்கு ரூ 500, கிராமத்து டாக்டருக்கு ரூ 900 என அனைத்துக் கடன்களையும் பட்டியலிடும் 55 வயதான பிர்ஜா பாய், “எல்லாக் கடனும் நான் செத்தால்தான் தீரும்” என்று பெருமூச்சு விடுகிறார்.

37 வயதான நவுகர் 12-ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். அவர் தனது கும்டி (பான் கடை) யில் மாதம் ரூ 4,000 வரை சம்பாதிக்கிறார். இதுதான் அக்குடும்பத்தின் முதன்மையான வருமானம். இதற்கு மேல் 57 வயதான பிர்ஜாவும், 65 வயதான நிர்மல்கரும் அறுவடை காலத்தில் விவசாய வேலைக்குப் போவார்கள். அப்படி வேலை கிடைத்தால் கூடுதல் வருமானம் வரும்.

அவர்கள் வீட்டில் கழிவறை இல்லை; அந்த குடும்பத்துக்கு வறுமைக்கோட்டுக்கு கீழானவர்களுக்கான குடும்ப அட்டை இல்லாததால் அரசு நலத்திட்டங்களும் கிடைப்பதில்லை. பெரும்பான்மை மக்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்திருப்பதாக சத்தீஸ்கர் அரசு கூறினாலும், “பல தடவை போய் பார்த்துட்டோம். வறுமைக் கோட்டு அட்டை கிடைக்க மாட்டேங்குது. அந்த அட்டை இருந்தாலாவது, அரசு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஏதாவது உதவி கிடைத்திருக்கும்” என்கிறார் நவுகர்.

மழைக்காலம் ஆரம்பித்து விட்டதால், மண்ணும், சாணமும் சேர்த்து கட்டப்பட்ட அவர்களது வீடு எப்போது இடிந்து விழுமோ என்ற பயத்திலேயே இருக்க வேண்டும். போன ஆண்டுதான் ஒரு பக்கச்சுவர் இடிந்தது என்கிறார் ராஷ்மி.

நவுகரின் மூத்த மகள் 6 வயது தான்யாவுக்கு காது கேட்டல், பேச்சு குறைபாடு உள்ளது.  தனது அம்மாவின் மடியில் உட்கார்ந்திருக்கும் தான்யா, இருண்ட வானத்தை வெறித்துக் கொண்டிருக்கிறாள். சுவரில் ராணி லட்சுமி பாயின் ஒரு பழைய போஸ்டர் தொங்குகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு நவுகர் அதை வாங்கியிருந்தார். “அப்போதெல்லாம், என் மூத்த மகள் பற்றி பெரிய கனவுகள் வைத்திருந்தேன். ஆனால்….”

அவளுக்கு செயற்கைக் காது அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும். “இந்த அறுவை சிகிச்சைக்கு பல லட்சம் செலவாகும்” என்று ராய்ப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நவுகரிடம் கூறியிருக்கிறார்கள். அவ்வளவு பணத்தை தன்னால் ஒருபோதும் ஏற்பாடு செய்ய முடியாது என்று அவருக்கு தெரிகிறது.

3 வயதான அவரது இளைய மகள் பிரக்யா, அங்கன்வாடிக்கு போகிறாள். பிர்ஜா ஒரு பேரன் பிறப்பான் என்று நம்பிக் கொண்டிருக்கிறார். ஆனால், ராஷ்மி கருத்தடை சிகிச்சை செய்து கொண்டு விட்டார் என்பதை நவுகர் இன்னும் தனது பெற்றோரிடம் சொல்லவில்லை. இரண்டு குழந்தைகளுக்கு மேல் வளர்ப்பது தனக்கு கட்டுப்படியாகாது என்கிறார் நவுகர்.

நேரம் மாலை 7 மணியை தாண்டி விட்டிருக்கிறது. நிர்மல்கர் இன்னும் திரும்பி வரவில்லை. அவர்  ஏதாவது கட்டிட வேலை கிடைக்குமா என்று தேட காலையிலேயே ராய்பூர் போயிருந்தார். அவர் சம்பாதித்துக் கொண்டு வரும் பணத்தில் இன்று இரவு ஏதாவது காய் சமைக்க முடியும் என்று நவுகர் கிண்டல் செய்கிறார். ஆனால், மற்ற நாட்களிலிருந்து இன்று எதுவும் மாறி விடப் போவதில்லை என்று பிர்ஜாவுக்கு தெரிகிறது. அவர்கள் வேலை தேடி நாள் தவறாமல் ராய்ப்பூருக்கு போகத்தான் செய்கிறார்கள். ஆனால், சத்தீஸ்கரில் அவர்களைப் போன்ற உடல் உழைப்பு தொழிலாளர்கள் எண்ணிக்கை பெருமளவு இருப்பதால் வேலை கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாகவே உள்ளது.

நவுகர் முன்பு ஒரு முறை ராய்ப்பூரில் வேலை செய்ய முயற்சித்திருக்கிறார். நிர்மல்கர்கள் பாரம்பரியமாக துணி வெளுக்கும் பிரிவைச் சேர்ந்தவர்கள். நவுகர் ராய்ப்பூரில் துணி தேய்க்கும் வண்டி ஏற்பாடு செய்து வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறார். ஆனால், அந்த பகுதியில் இருந்த பிற துணி வெளுக்கும் தொழிலாளர்கள் சில நாட்களுக்குள்ளாகவே அவரை துரத்தி விட்டனர்.

அதனால், நகரத்தை விட கிராமத்தையும், அக்கம் பக்கத்தவரின் ஆதரவையும் நிர்மல்கர் குடும்பம் விரும்புகிறது. சென்ற ஆண்டு ஒரு விபத்துக்குப் பிறகு நவுகர் படுக்கையில் இருந்த கால கட்டத்தை நினைத்தாலே கஷ்டமாக இருக்கிறது அவர்களுக்கு. அவர்களை போலவே ஏழ்மையில் உள்ள சக கிராமத்தினர்தான் தங்களால் இயன்ற எல்லா உதவியையும் செய்தார்கள் என்கிறார் ராஷ்மி.

“எங்களைப் போன்றவர்களுக்கு ராய்ப்பூரில் இடம் இல்லை” என்று உறுதியாக சொல்கிறார் அவர்.

8 மணி வாக்கில் நிர்மல்கர் வந்து சேர்கிறார். 60 வயதான அந்த முதியவர் மெதுவாக நடந்து வருகிறார். அவரது தயக்கமான காலடிகள் பிர்ஜாவின் அச்சத்தை உறுதி செய்கின்றன. கடந்த சில மாதங்களின் பல நாட்களைப் போலவே இன்றும் ராய்ப்பூரில் வேலை தேடிப் போன அவரது நாள் வீணாகவே போனது.

பிர்ஜாவின் நெற்றிச் சுருக்கங்கள் ஆழமாகின்றன. அடுத்த மாதம் அந்தக் குடும்பத்தின் மிகப்பெரிய பண்டிகை ஹரியாலி தீஜ் வருகிறது. திருமணமான பெண்கள் தமது தாய்வீட்டுக்கு வருவார்கள், அவர்களுக்கு பரிசுகள் தரப்பட வேண்டும். பிர்ஜாவுக்கு 4 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு பரிசு கொடுக்க பிர்ஜாவுக்கு அவரது தாய் வீட்டிலிருந்தும், ராஷ்மிக்கும் வரும் பொருட்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். “இப்படித்தான் வண்டி ஓடுது” என்று புன்னகைக்கிறார் ராஷ்மி.

பதில் உதவியாக, இன்னமும் பாரம்பரிய துணி வெளுக்கும் தொழில் செய்யும் ஒரு சில குடும்பங்களில் ஒன்றான நவுகரின் அக்கா கல்யாணி, தமக்குக் கிடைக்கும் எஞ்சிய துணிகளில் சிலதை தனது தம்பி குடும்பத்துக்கு கொடுத்து உதவுகிறார்.

எதைப் பேசினாலும், பேச்சு பெருந்தனக்காரருக்குக் கொடுக்க வேண்டிய  ரூ 20,000-க்கு திரும்புகிறது. அவர் கிராமப் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோற்று விட்டார். ஆனாலும் அவரது செல்வாக்கு குறித்து நிர்மல்கர் குடும்பத்துக்கு எந்த சந்தேகமும் இல்லை.

அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களது “பரம்பரை வீட்டை” விற்பதுதான் கடனை அடைக்க ஒரே வழி என்று தெரிகிறது. மூன்று ஓலைக் குடிசைகளும் ஒரு முற்றமும் கொண்ட அந்த வீட்டுக்கு ரூ 50,000 விலை கிடைக்கும். 10 ஆண்டுகளுக்கு முந்தைய 2 திருமணங்களுக்கான கடனை அடைத்த பிறகு வாழ்வதற்கு ஒரு குடிசை போட பணம் எஞ்சியிருக்கும்.

மாதம் ரூ 5,000 சம்பாதிப்பதற்கான அவர்களது போராட்டம் அதன்பின்னும் தொடரும்.

–    தமிழாக்கம்: அப்துல்

ஆங்கிலத்தில் : Letter from the Nirmalkars: The 90 per cent – Ashutosh Bhardwaj (நன்றி இந்தியன் எக்ஸ்பிரஸ்)

குற்றம், பின்னடைவு, வம்புமணி – கேலிச்சித்திரம்

2

முதலமைச்சர் ஆவது…

ஐயாவின் ஆணை
சின்னைய்யாவின் ஆசை
வன்னியனின் கடமை
தமிழனின் பெருமை
ஊடகங்களுக்கு விளம்பரம்
உங்களுக்கு காமடி
எங்களுக்கு எரிச்சல்……..

vambu-mani

நெஸ்லே : ஒரு குழந்தைக் கொலையாளியின் வரலாறு !

3

நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் மீதான தடையை ஒட்டி எழுந்த பரபரப்பு அதே வேகத்தில் வடிந்து விட்டது. உடல் நலன், உணவுப் பாதுகாப்பு, நுகர்வோர் பாதுகாப்பு என்றெல்லாம் கவலைப்பட்ட ஊடகங்கள், இப்போது சுதி இறங்கி ’நெஸ்லே போன்ற ஒரு பாரம்பரிய பெருமை மிக்க நிறுவனம் இப்படிச் செய்யலாமா?’ என்று வருத்தப்படுகின்றன. நுகர்வோர் மீதான கவலையை கார்ப்பரேட் மீதான பக்தி வென்று விட்டது.

மேகி பிரச்சினையின் போது நெஸ்லே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) தில்லிக்கு வந்திறங்கினார். அதன் பிறகு ஊடகங்கள் கவலையை மாற்றிய சக்தி எது என்பதை ‘துப்பறிந்து’ கண்டுபிடிக்க வேண்டியதில்லை.

ஒருபுறம்ம், நெஸ்லேவின் வணிக சின்னம் (Brand image) மீதான கருணைக் கட்டுரைகள்; மறுபுறம் நெஸ்லே மேகியில் உள்ள அதிகமான காரீயத்திற்கு அதில் பயன்படும் வெங்காயம் விளையும் மண்னின் தன்மையே என்பதை விளக்கும் அறிவியல் கட்டுரைகள். நீ மட்டும் யோக்கியமா போன்ற கிரிமினல்களின் மொழியில், மேகியில் மட்டுமில்லை, பல பொருட்களிலும் கலப்படம் உள்ளதை விவரிக்கும் தந்திரமான கட்டுரைகள், ‘அந்தக் காலம் மாதிரி வருமா’ என்று குற்றவாளியைத் தேடாமல் சுகத்தை அசைபோடும் கட்டுரைகள், இவைதான் மக்களின் சிந்தனை எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றன.

நெஸ்லேவை ஆதரிக்கும் வாதங்களின் சாரம் என்ன? மேகியில் காரீயமும் மோனோசோடியம் க்ளூட்டமைட்டும் இருந்தது என்னவோ தப்பு தான், ஆனா பாருங்க நம்ம பாரம்பரிய பெருமை மிக்க நெஸ்லே பங்குச் சந்தையில் சரிந்து கிடக்கிறது; இது இந்தியா தொழில்களுக்கு நண்பன் என்ற பிம்பத்தை சிதைக்க கூடியது, எல்லாவற்றுக்கும் மேல் ஒரு வணிக பிம்பத்தைக் கட்டமைப்பது சாதாரமாணதில்லை – என்பதே இந்த வாதங்களின் உட்கிடை.

அப்பேற்பட்ட நெஸ்லே நிறுவனத்தின் பாரம்பரிய பெருமைதான் என்ன?

”குழந்தைக் கொலையாளி” நெஸ்லே
”குழந்தைக் கொலையாளி” நெஸ்லே

நெஸ்லே நிறுவனத்தின் வரலாறு 1830-ம் ஆண்டு துவங்குகிறது. டானியேல் ஆல்பர் நெஸ்லே என்ற ஜெர்மானியர் அந்த வருடம் தான் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு குடியேறி தனது ஆராய்ச்சியைத் துவங்குகிறார். தாய்ப்பாலுக்கான ஒரு மாற்று பானம் குறித்ததே அந்த ஆராய்ச்சி. சுமார் 36 ஆண்டுகளுக்குப் பின் 1866-ம் ஆண்டு நெஸ்லே பால் பவுடரைக் கண்டு பிடிக்கிறார். இப்படித்தான் 1867-ம் ஆண்டு நெஸ்லே நிறுவனம் துவங்கப்படுகிறது.

அடுத்து வந்த நூறாண்டுகளில் நெஸ்லே நிறுவன பால் பவுடருக்குப் போட்டியாக டூமிகோ மற்றும் மீட் ஜோன்சன் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் உருவாகியிருந்தாலும் பால் பவுடர் வர்த்தகத்தில் சுமார் 40 சதவீதம் நெஸ்லே வசம் தான் இருந்தது. இரண்டு உலகப் போர்களுக்குப் பின் பெண்கள் வேலைக்குச் செல்வது அதிகரிக்கவே, பால் பவுடருக்கான தேவை அதிகரித்திருந்தது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், காலனிய நாடுகள் விடுதலையடைந்து வந்தன. குறிப்பாக இந்த வகை மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரம் அப்போது தான் மெல்லத் தவழத் துவங்கியிருந்தது. பல ஆசிய, ஆப்ரிக்க மற்றும் தென்னமெரிக்க நாடுகளின் சுகாதாரக் குறியீடு மிகவும் பின்தங்கியிருந்தது. இந்த சந்தர்பத்தை நெஸ்லே மிகத் திறமையாக பயன்படுத்திக் கொண்டது.

ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த இந்நாடுகளின் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதற்கு பதில் புட்டிப்பால் புகட்டுவதே நல்லது என்கிற பிரச்சாரத்தை நெஸ்லே முன்னெடுத்தது. பல நாட்டு அரசாங்கங்களின் சுகாதார அமைச்சகங்களை கைக்குள் போட்டுக் கொண்டு அரசு செலவிலேயே இந்த பிரச்சாரம் செய்யப்பட்டது.

அறுபதுகளின் இறுதியிலும் எழுபதுகளின் துவக்கத்திலும் புட்டிப்பால் புகட்டுவதால் ஆண்டொன்றுக்கு சுமார் பதினைந்து லட்சம் குழந்தைகள் மரணிக்கிறார்கள் என்று ஐ.நாவின் உலக சுகாதார நிறுவனம் கணக்கெடுப்பு ஒன்றை வெளியிட்டது. அச்சமயத்தில் பால்பவுடர் சந்தையில் முன்னணி உற்பத்தியாளராக நெஸ்லே இருந்தது தற்செயலானதல்ல. எழுபதுகளின் மத்தியில் இருந்து நெஸ்லே நிறுவனத்திற்கு எதிரான பிரச்சாரங்கள் உலகம் முழுவதும் வேகமெடுத்தன.

“நெஸ்லேவைப் புறக்கணிப்போம்”
“நெஸ்லேவைப் புறக்கணிப்போம்”

இன்றைக்கு ”நல்ல உணவு; நல்ல வாழ்க்கை” (Good Food, Good life) என்பதைத் தனது வர்த்தக முழக்கமாக கொண்டிருக்கும் நெஸ்லேவை அன்றைக்கு மக்கள் எப்படி அழைத்தார்கள் தெரியுமா? ”குழந்தைக் கொலையாளி” (Baby Killer)!

தனது லாபவெறிக்காக குழந்தைகளின் உயிர்களோடு விளையாடுவது நெஸ்லே புதிதாக வரித்துக் கொண்ட வணிக கொள்கையல்ல – அது தான் அதன் வரலாறே!

1977-ம் ஆண்டு சர்வதேச அளவில் நெஸ்லேவுக்கு எதிரான மக்களின் அதிருப்தி உச்சமடைந்த பல்வேறு நாடுகளில் “நெஸ்லேவைப் புறக்கணிப்போம்” என்ற பிரச்சார இயக்கம் துவங்கப்பட்டது. இன்றளவும் பல்வேறு நாடுகளில் இந்த பிரச்சார இயக்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அடிப்படை மனித விழுமியங்களும் முதலளித்துவ சந்தை நலனும் கார்ப்பரேட் லாப வெறியும் எந்தக் காலத்திலும் ஒரே நேர்க்கோட்டில் சந்தித்துக் கொள்ள முடியாது என்பதைப் புரிந்து கொள்ள நெஸ்லே ஒரு எடுப்பான உதாரணம்.

அதை நேரடியாகவே நெஸ்லே நிறுவனத்தின் தலைவர் பீட்டர் ப்ரெபெக் நமக்கு காட்டியருளுகிறார்.

பீட்டர் ப்ரெபெக்கின் தண்ணீர் குறித்த தத்துவத்தை அவரது வார்த்தைகளிலேயே கேட்க

https://www.youtube.com/watch?v=SEFL8ElXHaU.

அவரது வாதப்படி தண்ணீர் ஒரு முக்கியமான கச்சாப் பொருள். அதனால் மற்ற பண்டங்களுக்கு இருப்பது போல் இதற்கும் ஒரு சந்தை மதிப்பு இருக்க வேண்டும். எனவே, ஒரு மனிதனுக்கு குடிநீர் கிடைக்க வேண்டும் என்பது அடிப்படை மனித உரிமைகளில் சேராது. ஆக தண்ணீர் என்பது மற்ற உணவுப் பண்டங்களைப் போல் விற்பனைச் சரக்காக மாற்றப்பட வேண்டும்.

பீட்டர் ப்ரெபெக்கின் ’தண்ணீர் தத்துவம்’ என்ற சோழியன் குடுமி சும்மா ஆடவில்லை – வருடாந்திரம் சுமார் 10 பில்லியன் சுவிஸ் பிராங்குகளை (சுமார் 10.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) சம்பாதித்துக் கொடுக்கும் நெஸ்லேவின் தண்ணீர் வர்த்தகப் பிரிவின் லாபம் சமீபத்திய ஆண்டுகளில் லேசாக ஆட்டம் கண்டுள்ளதே அதற்குக் காரணம்.

”புட்டியில் அடைபட்ட வாழ்க்கை” (Bottled life) என்ற தலைப்பில் நெஸ்லே நிறுவனம் குறித்து சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆவணப் பட இயக்குனர் அர்ஸ் ஷென்னெல் மற்றும் பத்திரிகையாளர் ரெஸ் கெரிகர் ஆகியோர் இணைந்து ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளனர்.

பீட்டர் ப்ரெபெக்
பீட்டர் ப்ரெபெக்கின் ’தண்ணீர் தத்துவம்’ என்ற சோழியன் குடுமி சும்மா ஆடவில்லை

இருவரும் நெஸ்லேவின் இரத்தக் கவிச்சி வீசும் பாதையில் ஆப்ரிக்க கண்டம் துவங்கி ஆசியாவின் பாகிஸ்தான் வரை பயணித்துள்ளனர். சென்ற இடங்களில் எல்லாம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் நெஸ்லேவின் தண்ணீர் திருட்டைச் சொல்லிக் குமுறியுள்ளனர். பாகிஸ்தானின் பாத்தி தில்வான் கிராமத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள நெஸ்லேவின் தண்ணீர் தொழிற்சாலை அந்த கிராமத்தின் நிலத்தடி நீரை 100 அடியில் இருந்து 400 அடி ஆழத்திற்கு விரட்டியுள்ளது.

பெரியர், விட்டல், ப்யூர் லைஃப் உள்ளிட்ட சுமார் 60 வணிகப் பெயர்களில் நெஸ்லே தண்ணீர் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் வளர்ந்த நாடுகளில் உள்ள தமது கிளைகளின் லாபம் குறைவதைப் பற்றி கவலை தெரிவித்த நெஸ்லே நிறுவனத்தின் தண்ணீர் வர்த்தகப் பிரிவின் தலைவர் “ஐரோப்பாவைச் சேர்ந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் விளைவாக மக்கள் குழாய்த் தண்ணீருக்கு மாறி வருவது எங்களுக்குக் கவலையளிக்கிறது. ஒருவேளை பொருளாதாராம் மீண்டாலும், குழாய்த் தண்ணீருக்குப் பழகிய மக்கள் மீண்டும் பாட்டில் தண்ணீருக்கு மாறுவது சந்தேகமே” என்று வருந்தியுள்ளார்.

ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளில் இருந்து கிடைத்து வந்த லாபம் குறையத் துவங்கியதை அடுத்து நெஸ்லே ஆப்ரிக்க, ஆசிய மற்றும் தென்னமெரிக்க நாடுகளைக் குறிவைத்துக் களமிறங்கியுள்ளது.

மலேரியா, எய்ட்ஸ் நோய், போர்கள் மற்றும் போக்குவரத்து விபத்துகளில் நேரும் குழந்தை மரணங்களின் எண்ணிக்கையை விட நாளொன்றுக்கு அதிகமான குழந்தைகள் சுகாதாரமற்ற குடிநீரைக் குடிப்பதாலேயே மரணிக்கிறார்கள். இந்நிலையில் நெஸ்லே போன்றதொரு நிறுவனம் ’சுகாதார மற்ற குடிநீரால் ஏற்படும் இறப்புகளுக்குத் தீர்வு சுத்தமான குடிநீரும் சுத்தமான வாழ்க்கையும் (Pure life) தான் விடை என்று சொன்னால் அதன் பொருள் என்ன?” என்று கேட்கும் ஐ.நா சபையின் முன்னாள் அலோசகர் மௌடீ பார்லோ, அதற்கான விடையை அளிக்கிறார்.

“உங்கள் ஊற்றுக்களின் நீரை வறண்டு போகச் செய்து உங்கள் தண்ணீரை உங்களுக்கே விற்போம்” என்பதே நெஸ்லே போன்ற நிறுவனங்களின் வாதம் என்று விளக்கும் பார்லோ, இது பொறுப்பற்றத்தனம் மட்டுமல்ல, எதார்த்தத்தில் ஒரு கொடுமையான கிரிமினல் அடக்குமுறை என்கிறார்.

மூன்றாம் உலக நாடுகளின் அரசாங்கங்கள் தங்கள் குடிமக்களுக்கு சுகாதாரமான குடிநீரை வழங்கும் கடமையைச் செய்வதைத் தடுக்கும் நெஸ்லே போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், குடிநீர் வழங்கல் மற்றும் சுத்தமான குடிநீர் உற்பத்தியில் ஈடுபட்டு கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன. காசிருந்தால் சுத்தமான குடிநீரை வாங்கிக் குடித்து பிழைத்துக் கிடக்கலாம் – காசில்லாதவர்கள் சுகாதாரமற்ற விஷத்தைக் குடித்து செத்துப் போக வேண்டும் என்பதே நெஸ்லே வழங்கும் Good food, good life என்ற மந்திரத்தின் பொருள்.

நெஸ்லே சாக்லேட்
கார்ப்பரேட்டுகளின் லாப வேட்டையின் முன் மனித சமூகம் மட்டுமல்ல, ஒட்டு மொத்த இயற்கையும் அதன் பல்லுயிர்ச் சூழலின் எதிர்காலமும் சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்டு வருகிறது.

கார்ப்பரேட்டுகளின் லாப வேட்டையின் முன் மனித சமூகம் மட்டுமல்ல, ஒட்டு மொத்த இயற்கையும் அதன் பல்லுயிர்ச் சூழலின் எதிர்காலமும் சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்டு வருகிறது. அடிப்படை மனித அறம், விழுமியங்கள் என்பதற்கெல்லாம் என்ன தான் பொருள்? எளிமையான இந்தக் கேள்வியை நீங்கள் அடுத்த முறை மொறுமொறுப்பான கிட் கேட் சாக்லேட்டைக் கடிக்கும் போது கேட்டுப் பாருங்கள் – உங்கள் கடைவாய்ப் பற்களின் இடையில் நொறுங்கும் கிட்கேட் சாக்லேட்டின் ”க்ரஞ்சி” சப்தங்களுக்கிடையே மெல்லியதாய்க் கேட்கும் உராங்குட்டான் குரங்குகளின் மரண ஓலங்கள் ஒருவேளை பதில் சொல்லலாம்.

நெஸ்லே கிட்கேட் சாக்லேட்டின் தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படும் பாம் மரத்தின் எண்ணெய் மலேசியாவில் இருந்து தருவிக்கப்படுகிறது. இதற்காக பல லட்சம் ஏக்கர் மழைக்காடுகள் அழிக்கப்பட்டு பாம் மரங்கள் பயிரிடப்படுகின்றன. மழைக்காடுகளின் அழிவு அந்தக் காடுகளையே நம்பி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்த உராங்குட்டான் குரங்குகளை அழிவின் விளிம்புக்குத் தள்ளியிருகின்றது.

உராங்குட்டான் குரங்குகள் அழிவதைத் தடுக்கவும், கிட்கேட் சாக்லேட்டுக்கு எதிராகவும் க்ரீன்பீஸ் வெளியிட்ட விளம்பரப்படம் யூட்யூப்பில் வெளியிடப்பட்டு நெஸ்லே நிறுவனத்தின் வற்புறுத்தலுக்குப் பின் நீக்கப்பட்டது. தற்போது அந்த விளம்பரம் விமியோ தளத்தில் காணக்கிடைக்கிறது

நெஸ்லே நிறுவனத்தின் லாபவெறியின் வரலாறு மிக நீண்ட நெடிய பாரம்பரியத்தைக் கொண்டது. குழந்தைகளுக்கு தாய்ப்பாலை மறுத்தது, ஆப்ரிக்க கிராமங்களின் கிணறுகளில் விஷத்தைக் கலந்தது தொடங்கி இன்று தனது கிளை நிறுவனமான லோரியல் நிறுவனத்தின் முகப்பூச்சு கிரீம்களில் இன்னும் அனுமதிக்கப்படாத நானோ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது வரை மரபீணி மாற்றப் பயிர்கள், விதைகள் என்று அதற்கு பல்வேறு பரிமாணங்கள் உள்ளன.

முதலாளித்துவ கார்ப்பரேட்டுகள் என்ற பெரும் சாகரத்தின் ஒரு சிறு துளி தான் நெஸ்லே என்பதை மறந்து விடக்கூடாது. நெஸ்லேவுக்கு ஒப்பான – அதையும் விஞ்சும் பகாசுர கார்ப்பரேட்டுகளில் விற்கும் பொருட்களோடு தான் நமது ஒவ்வொரு நாளும் விடிகிறது; பின் அடைகிறது. ”பல்லுக்குள்ளே ஊடுருவிச் செல்லும்” பற்பசையில் இருக்கும் நானோ துகள்களோடும், கல்லீரலுக்குள் ஊடுருவிச் செல்லும் பூச்சி மருந்தைக் கொண்ட கோலா பானங்களோடும் தான் நமது ஒவ்வொரு நாளும் நகர்கின்றது.

இதனால்தான் கார்ப்பரேட்டுகளின் தண்ணீர் தனியார்மய நடவடிக்கைக்கு எதிராக “தண்ணீர் மக்களின் அடிப்படை உரிமை” என்பதை நிலைநாட்டிய கொலம்பியா, தென்னாப்ரிக்க மக்களின் கலகங்கள் மற்ற நாடுகளிலும் பரவுகின்றன. முதலாளித்துவ கார்ப்பரேட்டுகள் என்பவை பேரழிவை ஏற்படுத்தும் வெட்டுக்கிளி கூட்டங்கள் என்பதை உலக மக்கள் உணரத் துவங்கியுள்ளனர். அதை நாம் வால் வீதியிலும், லண்டன், கிரேக்கம் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தெருக்களில் கண்டோம்.

இந்த நச்சுக் கிருமிகளைத் தடை செய்யக் கோரி அரசாங்கங்களிடம் கெஞ்சுவதில் பொருளில்லை – அரசாங்கங்களும் முதலாளித்துவ கார்ப்பரேட்டுகளும் ஈருடல் ஓருயிர் என்பதை எப்போதும் மறைத்துக் கொண்டதேயில்லை. அதைத் தான் கோக் மற்றும் பெப்சியில் கலந்திருந்த பூச்சிமருந்தும், காட்பரீஸ் சாக்லேட்டில் நெளிந்த புழுக்களும் அவற்றின் மேல் அரசாங்கம் எடுத்த “நடவடிக்கைகளும்” நமக்கு உணர்த்துகின்றன.

மேகியில் கலந்திருக்கும் மோனோ சோடியம் குளூட்டமைட் மற்றும் காரீயம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கிய நிலையில் அவர்கள் மீண்டும் வருவார்கள் – அவர்களை நாம் தான் எதிர்கொள்ள வேண்டும். எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்பதை நாமக்கு கொலம்பியர்களும் தென்னாப்ரிக்கர்களும் ஏற்கனவே கற்பித்துள்ளனர்.

– தமிழரசன்

கடலூர்: எங்கள் மண், எங்கள் மக்கள், சைமா கும்பலே வெளியேறு !

1

கடலூர் சைமா சாயப்பட்டறை: போராட்டம்
ஊரை விக்குது ஊராட்சி மன்றம்! நாட்டை விக்குது நாடாளு மன்றம்!

டலூரிலிருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ளது பெரியப்பட்டு எனும் சிறு நகர கிராமம். இங்கு ‘ஜவுளி தொழில் நுட்பப் பூங்கா அமைக்கப்போகிறோம், நிறைய பேருக்கு வேலை கிடைக்கும்’ என்ற பொய்யைச் சொல்லி 400 ஏக்கருக்கு மேல் வளைத்துப்போட்டு அதை சைமா எனும் தென்னிந்திய ஜவுளி முதலாளிகள் சங்கத்தின் சாயப்பட்டறைக்கு தாரை வார்த்துள்ளது கடலூர் சிப்காட் அலுவலகம்.

இவ்வட்டாரம் எங்கும் 5 அடியில் பள்ளம் வெட்டினாலே அற்புதமாக சுரக்கும் ஊற்று நீரைக் கொண்டு, கத்தரி, வெள்ளரி, தர்பூசணி, சவுக்கை நாத்து பயிரிடுதல், வெட்டிவேர் பயிரிடுதல் போன்றத் தொழில்களை செய்து தங்களின் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர் விவசாயிகள்.

அரங்கக் கூட்டம்
மே மாதம் சைமா திட்டத்தை எதிர்த்த கண்டன ஆர்ப்பாட்டம், பேரணி அரங்கக் கூட்டமாக மாற்றப்பட்டது (கோப்புப் படம்)

இந்நிலையில் சைமா சாயப்பட்டறையில் ஏற்படவிருக்கும் அபாயத்தை உணர்ந்து கடந்த 2008-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வந்த மக்கள் கடந்த ஏப்ரல்-15-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டு இருந்தனர். காவல்துறையின் அனுமதி மறுப்பால் அரங்க நிகழ்ச்சியாக மாற்றப்பட்டது.

இதற்கிடையில் ஆர்ப்பாட்டத்திற்கு உயர் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு மனுப்போடப்பட்டதுடன் மக்கள் வாழ்வாதாரப் பாதுகாப்பு இயக்கம் எனும் அமைப்பின் சார்பிலும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பிலும் ஆர்ப்பாட்டத்திற்கு மக்களை அணிதிரட்டும் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த போது திருட்டுத்தனமாக போர்வெல் வேலையைத் துவங்கியது சைமா நிறுவனம். இதைக் கண்டு ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் கடந்த மே-16-ம் தேதி அன்று அதிகாலையில் ஆயிரக்கணக்கில் திரண்டு கட்டுமானப் பணி செய்த பொருட்களை சேதப்படுத்தினார்கள். ஏற்கனவே போடப்பட்டு இருந்த 2 ஆழ்துளை குழாய்களையும் மூடினார்கள்.

சிமா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
சைமா திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

இதன் பின் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலிசின் குவிப்பாலும், மிரட்டலாலும் இப்போராட்டம் அடக்கப்பட்டு போராட்ட முன்னணியாளர்கள் மீது வழக்கு போட்டு கைது செய்ய கிராமம், கிராமமாகத் தேடியது போலீசு.

மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கமும், பு.மா.இ.மு-வும் இவ்வட்டாரம் எங்கும் இப்போராட்டத்தை ஆதரித்தும், பொய் வழக்கை வாபஸ் வாங்கக் கோரியும் சுவரொட்டி பிரச்சாரம் செய்து போராடிய மக்களை சந்தித்து மீண்டும் அடுத்த கட்டப் போராட்டத்திற்கு ஆயத்தப்படுத்தி ஜுலை 4-ம் தேதி அன்று உயர்நீதி மன்ற அனுமதியின் பேரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆண்களும், பெண்களுமாய் ஆயிரத்து ஐநூறு பேர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து கிராமம் தோறும் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து போராட்ட அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

சைமா திட்டம்
பேரழிவைக் கொண்டு வரும் சைமா திட்டம் (கோப்புப் படம்)

இந்நிலையில் கடந்த 11-07-2015 அன்று காலையில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் சார்பில் கண்டன ஊர்வலம் நடத்த திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு போலிசிடம் அனுமதிக்கு கொடுத்தபோது “மேலாதிகாரியப் பார்க்கனும், கீழ் அதிகாரியப் பார்க்கனும்” என்று அலையவிட்டது போலிசு. முன்னணியாளர்கள் “தடை செய்தால் கைதாவோம்” என்ற முடிவுடன் மக்களை அணிதிரட்டத் தீவிரம் காட்டினார்கள். இதன் அடிப்படையில் சுமார் 1000 பேருக்குமேல் மக்கள் திரண்டு விட்டதால் போலிசு திகைத்து வாயடைத்துப் போய் நின்றது.

ஊர்வலமாய் வந்த மக்கள் ஒவ்வொருவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து, கையில்

  • எங்கள் ஊரு! எங்கள் வீடு! சைமா நாயே வெளியேறு!
  • ஊரை விற்க ஊராட்சி மன்றம்! நாட்டை விக்குது நாடாளுமன்றம்!
  • ஓட்டுப்போட்டது கிராம மக்கள்! ஊரை விற்கவா தலைவரு!

என்ற முழக்கப் பதாகைகளுடன் அணிவகுத்தனர்.

விண்ணதிரும் முழக்கங்களுடன் நீண்ட நெடுந்தூரம் வரை நடந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஆங்காங்கே மக்கள் கோசமிட்டு கொண்டு நின்றனர். சுமார் 9 மணிக்கு தொடங்கிய இப்போராட்டம் 12.30 மணிவரை நடந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

போராட்டம் துவங்கிய போது, “நாங்கள் உங்கள் போராட்டத்தை ஆதரிக்கிறோம்” என்றவாறு உள்ளே நுழைந்தனர் ஆம் ஆத்மி கட்சியினா 8 பேர். போராட்டத்தை அறுவடை செய்ய ஆம் ஆத்மி என அச்சிடப்பட்ட குல்லாக்களை போட்டு வந்ததோடு வந்திருந்த மாணவர்களுக்கும் குல்லாய் போட்டு விடுவதைப் பார்த்து எச்சரித்தனர் உள்ளுர் மக்கள். பிறகு குல்லாக்கள் நழுவிக் கொண்டன.

இறுதியாக பெரியப்பட்டுத் திடலில் அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்த முன்னணியாளர்கள் ஒருமணி நேரம் ஆர்ப்பாட்ட முழக்கமிட்டு பேசினார்கள். இதில் உள்ளுர் தலைவர்களும் வழக்குரைஞர் செந்தில் குமாரும் உரையாற்றினார்கள்.

“அடுத்த கட்டப்போராட்டம் என்பது அரசை அச்சுறுத்தும் வகையில் அமைய வேண்டும் சைமா சாயப்பட்டறைத் திட்டத்தை ரத்து செய்யும் வரை இந்தப் போராட்டம் ஓயாது. அதற்கு உங்களை தயார்படுத்தி கற்றுக் கொள்ளுங்கள். வரும் ஆகஸ்ட்-15 அன்று சுதந்திர தினத்தில் வீடு தோறும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடைபெறும். அதைத் தொடர்ந்து அடுத்த கட்டப் போராட்டத்திற்கு நாம் தயாராவோம்” என்ற அறைகூவலுடன் போராட்டம் நிறைவு பெற்றது.

குறிப்பு:

ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த ஆம் ஆத்மியினர் “நாம் வெற்றி பெற கோர்ட்டில் ஸ்டே போட்டு விட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 100 பேர் சாகும்வரை உண்ணாவிரதம் செய்யனும். நம் உயிரைப் பறித்து விட்டு இத்திட்டத்தை அரசு செய்யுமா என்று பார்ப்போம். காந்தி வழியில், அமைதி வழியில், அகிம்சை வழியில் போராடுவோம்” என்றனர்.

இடையில் ஒருவர் எழுந்து, “சோறு தின்னாம நாம ஏன் சாகணும், மசிறு அவன் சாகட்டும்” என்றார்.

கடைசியாக, “நம் தமிழகத்தில் நடைபெறும், செயில் போராட்டம், கெயில் போராட்டம், மீத்தேன் போராட்டம், கிரானைட் போராட்டம், தாதுமணல் போராட்டம், கூடங்குளம் போராட்டம், டாஸ் மார்க் எதிர்ப்பு போராட்டங்கள் அனைத்தும் மனுபோட்டும், மண்டியிட்டும், சட்டத்தின் படியும் நடத்தி பார்த்தாச்சி. இனி இந்த அரசையும், நீதித்துறையையும், சட்டத்தையும், கட்சிகளையும் நம்பிப் பலனில்லை. மக்களைத் திரட்டி (5,000 பேர் வரை) சாயப்பட்டறை முன் குடியேறி சமைத்து சாப்பிட்டு நாள் கணக்கில் தொடர்ச்சியாக போராடும்போது மட்டுமே தீர்வு கிடைக்கும்” என்று தோழர்கள் விளக்கினர்.

மக்களும் கைதட்டி வரவேற்று இதுதான் தீர்வு. அதற்காக உடன் தயாராவோம், இனிவரும் போராட்டங்கள் பயிற்சி எடுக்கும் பள்ளிக் கூடங்களாகட்டும் என்றனர்.

தகவல்

மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம்,
கடலூர் – சிதம்பரம் வட்டம்

சுயதம்பட்ட மோடியின் இன்னுமொரு ஆக்ஷன் சினிமா!

1

மியான்மரில் புகுந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல்: சுயதம்பட்ட மோடியின் இன்னுமொரு ஆக்ஷன் சினிமா!

பாசிச மோடியைப் புதிய ரட்சகனாக,செயல்வீரனாக, வளர்ச்சியின் நாயகனாக விளம்பரப்படுத்தி, பல விதங்களிலும் பில்ட் -அப் கொடுத்து ஊடகங்களும் இந்துத்துவப் பரிவாரங்களும் தூக்கி நிறுத்தியபோதிலும், அத்தனையும் சரிந்து விழுந்து, நாடு முழுவதும் கடும் அதிருப்தியையும் வெறுப்பையும்தான் மோடி அரசு எதிர் கொண்டிருக்கிறது. கார்ப்பரேட் அடியாளும் பாசிசக் கோமாளியுமான மோடி கும்பலின் பராக்கிரமங்களைச் சித்தரிக்கும் பல விளம்பரப் படங்களை அடுத்தடுத்து வெளியிட்ட போதிலும், அவையனைத்தும் புஸ்வாணமாகிவிட்டன. இந்நிலையில் அனைத்து அரங்குகளிலும் தோல்வியடைந்துள்ள மோடி கும்பல், இவற்றை மூடிமறைக்கவும், மக்களின் கவனம் எப்போதும் தன்னை நோக்கியே இருக்கவும் கிரிமினல்தனமாக யோசித்து, “எல்லை தாண்டிய தீவிரவாத எதிர்ப்பு” என்ற புத்தம் புது ஆக்ஷன் சினிமாவை அண்மையில் வெளியிட்டது.

வடகிழக்கு தாக்குதல்
கடந்த ஜூன் 4 அன்று வடகிழக்கிந்திய தேசிய இன ஆயுதக் குழுக்களின் குண்டுவீச்சுத் தாக்குதலில் 18 சிப்பாய்களைப் பலி கொண்டு சிதிலமடைந்து கிடக்கும் இந்திய இராணுவத்தின் வாகனம்.

கடந்த ஜூன் 9 அன்று அதிகாலை நேரத்தில் இந்திய ராணுவப் படையினர், இந்திய-மியான்மர் எல்லையை தாண்டிச் சென்று மியான்மரில் பதுங்கியிருந்த தீவிரவாதக் குழுக்களின் இரண்டு முகாம்கள் மீது அதிரடித் தாக்குதல் நடத்தியதாகவும், தீவிரவாதிகளில் ஏறத்தாழ 50 பேர் கொல்லப்பட்டு 50 பேர் படுகாயமடைந்து காட்டுக்குள் தப்பியோடிவிட்டதாகவும் மோடி அரசும் ஊடகங்களும் பரபரப்பூட்டும் செய்திகளை வெளியிட்டன.

இந்திய ராணுவத்தின் டோக்ரா ரெஜிமெண்ட்டைச் சேர்ந்த வாகனத்தின் மீது வடகிழக்கிந்திய தேசிய இன ஆயுதக் குழுக்கள் கடந்த ஜூன் 4 அன்று நடத்திய தாக்குதலில் 18 சிப்பாய்கள் கொல்லப்பட்டு 14 பேர் படுகாயமடைந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத்தின் கமாண்டோ படையினர் ஜூன் 9 அன்று மியான்மருக்குள் புகுந்து ஆயுதக் குழுக்களின் முகாம்கள் மீது இந்த அதிரடித் தாக்குதல் நடத்தியதாகத் தொடர்ந்து ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள், இதனைத் தீவிரவாதத்துக்கு எதிரான மோடி அரசின் உறுதியான நடவடிக்கையாகச் சித்தரித்தன.

மோடி கும்பலின் காமெடி பீசாகிய மத்திய இராணுவத்துறை இணையமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், நாடெங்கும் பரபரப்பாக வெளியிடப்பட்ட இந்த சினிமாவுக்குப் பிரமோஷன் கொடுக்கக் கிளம்பினார். மோடி அரசின் உறுதியான துணிச்சலான முடிவினால்தான் இத்தகைய சாதனை நிகழ்ந்துள்ளது என்றும், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்களை ஊக்குவிக்கும் அண்டை நாடுகளுக்கு இது ஒரு எச்சரிக்கை என்றும், நட்பு நாடான மியான்மருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது போன்றே எந்த நாடாக இருந்தாலும் உள்ளே புகுந்து தீவிரவாதிகளை ஒழிக்க தயங்கமாட்டோம் என்றும் பாகிஸ்தானை எச்சரித்து வீராவேச உதார் விட்டார்.

ஆனால், “இந்திய அரசும் ஊடகங்களும் கூறுவது அப்பட்டமான பொய். எங்களது முகாம்கள் மீது எந்தவிதத் தாக்குதலும் நடத்தப்படவில்லை. அப்படி தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால், எமது தரப்பில் கொல்லப்பட்ட ஒருவரது உடலையாவது பகிரங்கமாகக் காட்டத் தயாரா?” என்று நாகா தேசிய விடுதலை கவுன்சிலின் கப்லாங் குழுவினர் தங்களது மறுப்பு அறிக்கையின் மூலம் இந்திய அரசுக்குச் சவால் விட்டுள்ளனர். இந்திய அரசுடன் போடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டதாக கடந்த மார்ச் 27 அன்று அறிவித்துள்ள இக்குழுவும், அசாமின் உல்ஃபா சுதந்திரக் குழு, காம்டபூர் விடுதலை அமைப்பு, போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி – ஆகிய குழுக்களும் இந்திய அரசுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராட, தென்கிழக்காசியாவின் மேற்குப் பிராந்திய ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி [United National Liberation Front of Western SouthEastAsia (UNLFW)] என்ற கூட்டமைப்பை உருவாக்கியுள்ளதாக கடந்த ஏப்ரல் 17 அன்று அறிவித்துள்ளன.

இந்திய ராணுவ புகைப்படம்
2009-ல் ராணுவச் சிப்பாய்கள் தங்களுக்குள் எடுத்துக் கொண்ட குரூப் போட்டோவை, இவர்கள்தான் மியான்மரில் புகுந்து தீவிரவாதிகள் மீது அதிரடித் தாக்குதல் நடத்திய அதிரடிப்படையினர் என்று ஊடகங்கள் பரபரப்பாக வெளியிட்ட “உல்டா” படம்.

இதுவொருபுறமிருக்க, இத்தாக்குதல் எங்கள் நாட்டிற்குள் நடக்கவேயில்லை என்றும், எந்த வெளிநாட்டுச் சக்தியும் எங்கள் மண்ணைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் மியான்மர் அதிபர் மாளிகை அலுவலக இயக்குநரான ஷாவ் ஹித்தே என்பவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மோடி கும்பலின் ஆஸ்தான கோயபல்சாகிய “துக்ளக்” சோ கூட, இது இந்திய எல்லைக்குள் நடந்ததா, அல்லது அதைக் கடந்து மியான்மர் எல்லையினுள் நடந்ததா என்பது தெளிவாகாத நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது என்று இந்த நடவடிக்கையின் சந்தேகத் தன்மையைத் தனது தலையங்கத்தில் போகிற போக்கில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

இருப்பினும் மோடி கும்பலின் ராம்போ பொய்யை மூடிமறைத்துவிட்டு, காங்கிரசு அரசை விஞ்சும் வகையில் மோடி அரசானது எல்லை தாண்டிச் சென்று தீவிரவாதிகளைத் தாக்கத் துணிந்துள்ளதாக ‘தேசிய’ ஊடகங்கள் உடுக்கையடித்தன. இந்தியாவுக்கான இஸ்ரேலியத் தூதர் டேனியல் கார்மனிடம் பேட்டி எடுத்து தனது வீரதீரத்தை மோடி கும்பல் பறைசாற்றிக் கொண்ட போதிலும், மோடி கும்பலின் பொய்யும் மோசடியும் அடுத்தடுத்து அம்பலமாகியதால், அது இன்னுமொரு கேலிக்கூத்தாகிப் போனது. அதன் பிறகு, குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக, எல்லை தாண்டிச் சென்று தாக்குதல் நடத்தினாலும் இப்படி தண்டோரா போட்டு விளம்பரப்படுத்துவது ராஜதந்திரம் அல்ல என்றும், மோடி அரசு நிதானத்துடனும் முதிர்ச்சியுடனும் செயல்பட வேண்டுமென்றும் இப்போது ‘தேசிய’ ஊடகங்கள் அடக்கி வாசிக்கின்றன.

தாங்கள் எல்லை தாண்டினால் அதனை சாதனையாக சவடால் அடித்துக் கொள்ளும் மோடி கும்பல்தான், தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்படுவதை, “நீ எல்லை தாண்டுவதால்தான் சுடுகிறார்கள்” என்று இக்கொலைகளையும் தாக்குதல்களையும் நியாயப்படுத்துகிறது. 2001 இறுதியில் நடந்த இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாக். எல்லையில் 5 லட்சம் படைகளைக் குவித்த பா.ஜ.க. அரசு, அமெரிக்காவின் கட்டளைப்படி படைகளைத் திருப்பியழைத்து, தனது சரணாகதியை மூடிமறைத்துக் கொண்டு வெற்று சவடால் அடிக்கத்தான் முடிந்துள்ளது. இந்த லட்சணத்தில் குடிகாரன் தெருவில் உதார் விடுவதைப் போல, இந்தப் பாசிசக் கோமாளிகள் பாகிஸ்தானுக்கு எதிராக இப்போது சவுண்டு விடுகின்றனர்.

“நாங்கள் ஒன்றும் மியான்மர் கிடையாது, பகல்கனவு காண்பதை நிறுத்துங்கள்; மியான்மரிலிருந்து பாகிஸ்தான் முற்றிலும் வேறுபட்டது” என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சவுதாரி நிசார் அலி கான் இந்தியாவைப் பகிரங்கமாகவே எச்சரித்தார். எல்லை தாண்டிய தீவிரவாத எதிர்ப்பு என்று பகட்டு ஆரவார வீரவசனம் பேசிய மோடி கும்பல், அதன் பிறகு வாயே திறக்கவில்லை. குறுகிய தேசிய வெறியையும் போர்வெறியையும் கிளறிவிட்டு, மட்டரகமான வெற்றுச் சவடால்களால் தன்னைத் தேசபக்த நாயகனாகச் சுயதம்பட்டம் அடித்துக் கொண்ட மோடியை, சூரப்புலியாகக் காட்டிய எல்லை தாண்டிய “தீவிரவாத எதிர்ப்பு” சினிமாவும் வந்த வேகத்திலேயே டப்பாவுக்குள் சுருண்டுவிட்டது.

இதுவும் போதாதென்று, நேபாள நிலநடுக்கத்தில் சிக்கிய மக்களை மீட்க வந்த புதிய ரட்சகனாக, ஐந்து பைசா கொடுத்துவிட்டு ஐந்து ரூபாய்க்கு விளம்பரம் செய்து கொள்ளும் அற்பவாதியான மோடி கும்பலையும் அதன் விசுவாச ஊடகங்களையும் நேபாள மக்கள் விரட்டியடித்த கதை சந்தி சிரிக்கிறது. இந்நிலையில், மோடி கும்பலும் ‘தேசிய’ ஊடகங்களும், இப்போது உள்ளூர் ரட்சகனாக இருந்த மோடி, உலக ரட்சகனாக அவதாரம் எடுத்துள்ளதாக சாமியாடிக் கொண்டு,உலக அமைதிக்காக மோடியின் “யோகசனம்” எனும் இன்னுமொரு கேவலமான கூத்தை வெட்கமின்றி விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

– மனோகரன்
_____________________________
புதிய ஜனநாயகம், ஜூலை 2015
_____________________________

இந்தியா: தடை செய்யப்பட்ட பொருட்களின் சொர்க்கம்

1

மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்ட பிறகு மழைக்கால ஈசல்களைப் போல் வேறு சில துரித உணவு வகைகளையும் ஆய்வு செய்யப் போவதாக விறைப்புக் காட்டுகிறது இந்திய அரசு. இந்த வீராப்புகளுக்கும் அதே மழைக்கால ஈசல்களின் ஆயுள் தான். கூடுதலாக மேகியை தடை செய்த ‘கடுமையான’ நடவடிக்கைகளின் யோக்கியதையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு முதலாளியின் கண்ணோட்டத்தில் லாபத்திற்கு உட்பட்டதுதான் அறநெறி. லாபம் எழுப்பும் மக்கள் விரோத பிரச்சினையை முதலாளியின் கஷ்டமாக இவர்கள் மடை மாற்றுவார்கள். இந்நிலையில் ஒரு பன்னாட்டு நிறுவனம், மூன்றாம் உலகநாடு ஒன்றில் தொழில் வர்த்தகத்தில் ஈடுபடும் போது அந்நாட்டு மக்களை என்னவாக கருதும்?

இந்தக் கேள்விக்கான சரியான விடையை போபால் விஷவாயு புகழ் ஆண்டர்சன் உயிரோடு இருந்தால் சொல்லியிருப்பார். ஓரளவுக்கு சரியான விடையை இந்திய தரகு முதலாளிகளாலும் கூட சொல்ல முடியும்.

மேகி நூடுல்ஸ் தடை
நெஸ்லே மேகியில் காரீயமும், மோனோ சோடியம் க்ளூட்டமைட்டும் அதிகளவில் உள்ளதாக சோதனையில் கண்டறியப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது

இந்தியச் சந்தையில் விற்கப்படும் நெஸ்லே மேகியில் காரீயமும், மோனோ சோடியம் க்ளூட்டமைட்டும் அதிகளவில் உள்ளதாக சோதனையில் கண்டறியப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது. உடனடியாக தனது நாட்டில் விற்கப்படும் மேகி பாக்கெட்டுகளை பரிசோதனைக்கு அனுப்பிய சிங்கப்பூர், பரிசோதனை முடிவுகளின் படி தமது நாட்டில் விற்கப்படும் மேகி பாக்கெட்டுகளில் காரீயமும் மோனோ சோடியம் க்ளூட்டமைட்டும் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளுக்கு உள்ளே இருப்பதாக அறிவித்துள்ளது.

கோக்கோ கோலா மற்றும் பெப்சி நிறுவனங்களின் தயாரிப்புகளான கோலா பானங்களில் ஐரோப்பிய ஒன்றியம் நிர்ணயித்த அளவை விட 36 மடங்கு அதிகமாக பூச்சி மருந்து கலந்திருப்பதை 2003-ம் ஆண்டு தில்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் என்ற தன்னார்வ அமைப்பு அம்பலப்படுத்தியது. இவ்விரு கோலா நிறுவனங்களும் தமது பூச்சி மருந்து வியாபாரத்தை இந்தியர்களோடு நடத்தி வந்த அதே நேரம் தமது மேற்கத்திய வாடிக்கையாளர்களுக்கான தயாரிப்புகளுக்கு மட்டும் ஓரளவு தரக்கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்றி வந்தன.

ஒருபக்கம் இந்தியர்களுக்கும் வெள்ளை வாடிக்கையாளர்களுக்கு இருவேறு அளவுகோல்களை இவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்றால், இன்னொரு பக்கம் வெளிநாடுகளில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் இந்தியச் சந்தையில் தாராளமாக அனுமதிக்கப்படுகிறது.

தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்கள்
வெளிநாடுகளில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் இந்தியச் சந்தையில் தாராளமாக அனுமதிக்கப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை (FDA) இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஹல்திராம் நொறுவை வகைகளுக்கு தடை விதித்துள்ளது. ஹல்திராமின் தயாரிப்புகளில் அதிகளவில் பூச்சிக் கொல்லி மருந்துகள் இருந்ததால் அவை உட்கொள்ளத் தகுதியற்றவை என்று FDA சான்றளித்துள்ளது.

அமெரிக்காவின் தடை குறித்து ஹல்திராம் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஒருவரிடம் இந்தியா டுடே பத்திரிகை கேட்ட போது, “ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான பாதுகாப்பு தரநிர்ணயம் உள்ளது, நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டுள்ளார்.

போலவே இங்கே சாதாரணமாக பெட்டிக் கடைகளில் கிடைக்கும் டாபர் சவன்ப்ராஷ் லேகியத்தை கனேடிய அரசாங்கம் அதிகளவிலான காரீயம் மற்றும் மெர்குரி கலந்திருப்பதால் 2005-ம் ஆண்டு முதல் தடை செய்துள்ளது. அதே போல் “மணல் மணலான’ சுத்தமான நெய் என்று விளம்பரப்படுத்தப்படும் ஜி.ஆர்.பி நெய் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளது.

மேற்கத்திய நாடுகளில், மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களின் மேல் தனிவகைக் குறியீடுகள் இடம் பெறுவதை கட்டாயமாக்கியுள்ள அதே நேரம் இந்தியாவைப் பொருத்தவரையில் பல்வேறு விவசாய உற்பத்திப் பொருட்களில் மரபணு மாற்ற விதைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதோடு அவை குறித்த விவரங்களையும் ரகசியமாகவே வைத்துள்ளனர். அரிசி, தக்காளி, மக்காச் சோளம், கத்தரி போன்றவற்றில் மரபணு மாற்றப்பட்ட ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. எனினும் அவை என்ன ரகங்கள் எந்தப் பகுதிகளில் பயிரிடப்படுகின்றன என்பது போன்ற விவரங்கள் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுவதில்லை.

மேகி தடை
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள் மேற்கத்திய சந்தையில் தடைசெய்யப்படுவது அல்லது திருப்பியனுப்பப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. எனினும், இவையனைத்தும் உள்நாட்டுச் சந்தையில் எந்தத் தடையுமின்றி நுகர்வோருக்குக் கிடைத்து வருகிறது.

மருந்துப் பொருட்களை எடுத்துக் கொண்டால், Novalgin, Baralgan, Nise, D’cold, Vicks action 500, Ciza, Droperol, Furoxone, Lomofen, Furacin, Emfurazone, Helmazan, Enteroquinol, Ibsinorm, Tagon, Ridazin, Thioril, Pacentrex உள்ளிட்ட ஏராளமான மருந்து வகைகள் உலகில் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. இதே மருந்துப் பொருட்கள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதைக் கடந்து இவற்றை மருத்துவரின் பரிந்துறை இல்லாமலே கூட நுகர்வோரால் வாங்க முடியும் என்ற அளவில் தான் இங்கே ‘கட்டுப்பாடு’ உள்ளது.

மேலே பட்டியலிடப்பட்டுள்ள பிற நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகளில் Furoxone, Lomofen, Furacin மற்றும் Emfurazone ஆகிய மருந்துகள் புற்றுநோயை உண்டாக்கக் கூடியவை என்றும், D’cold மற்றும் Vicks action 500 ஆகியவை மூளைச்சிதைவை (Brain hemorrhage) ஏற்படுத்தக் கூடியவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் சில மருந்துப் பொருட்கள் மாரடைப்பை ஏற்படுத்தும் என்றும் கண் பார்வையையே பறிக்கக் கூடியவை என்பதால் தடை செய்யப்பட்டவை.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள் மேற்கத்திய சந்தையில் தடைசெய்யப்படுவது அல்லது திருப்பியனுப்பப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. எனினும், இவையனைத்தும் உள்நாட்டுச் சந்தையில் எந்தத் தடையுமின்றி நுகர்வோருக்குக் கிடைத்து வருகிறது. போலவே இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களின் பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடு உள்ளதென்றும், அவை சாலையில் பயன்படுத்தத் தக்கவையல்ல என்றும் கடந்தாண்டு ஐரோப்பிய ஒன்றியத்தால் நிராகரிக்கப்பட்டன.

இது தவிர பல நாடுகளில் தடை செய்யப்பட்ட Carbaryl, Malathion, Acephate, Dimethoate, Chlorpyrifos, Lindane, Quinalphos, Phosphomidon, Carbandizm, Captan, Tridamorph, Practilachlor, 2.4–D and Glyphosate உள்ளிட்ட 67 வகையான பூச்சிக் கொல்லி மருந்துகள் இந்திய நிலங்களில் கொட்டப்பட்டு மொத்த நாட்டின் விளை நிலங்களும் விசமாக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு உரக்கம்பெனிகள் மேற்கில் தடை செய்யப்பட்ட பூச்சி மருந்துகளை வகை தொகையின்றி இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் மட்டுமின்றி எதார்த்தத்தில் மொத்த இந்தியாவும் உலகின் குப்பைத் தொட்டியாக விளங்குகிறது.

உலகின் மின்னணுக் கழிவுகளுக்கான குப்பைத் தொட்டியாக விளங்குகிறது தில்லியில் உள்ள சீலம்பூர். 2007-ம் ஆண்டு கணக்கின் படி சுமார் 11594 டன் அளவாக இருந்த மின்னணுக் கழிவுகளின் வரத்து, 2014-ம் ஆண்டு 30,000 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கழிவுகளின் மொத்த கணக்கைச் சேர்த்தால் சுமார் 13 லட்சம் மெட்ரிக் டன் மின்னணுக் கழிவுகள் தில்லியில் கொட்டப்படுகின்றன.

தலைநகர் தில்லியில் உள்ள மாயாபுரி தொழிற்சாலைக் கழிவுகளுக்கான குப்பைத் தொட்டியாக பராமரிக்கப்பட்டு வந்தது. பல லட்சம் டன்கள் இரும்பு மற்றும் உலோகக் கழிவுகள் மாயாபுரியில் கொட்டப்பட்டு அந்தப் பிராந்தியமே மாசுபட்டு சீரழிந்தது.

காடுகளையும் ஆறுகளையும் மலைகளையும் அழித்தும், ஆற்றுநீரையும் நிலத்தடி நீரையும் வரைமுறையின்றி உறிஞ்சியும், நச்சுக் கழிவுகளைக் கொட்டி சுற்றுச்சூழலை நாசமாக்கியும் வரும் கார்ப்பரேட் நிறுவனங்களால் இந்தியாவின் 13 நகரங்கள் மிக மோசமாக மாசடைந்துள்ளன. 150 ஆறுகளில் 76 ஆறுகள் கழிவுநீர் கால்வாய்களாக மாறிவிட்டன. கப்பல் உடைக்கும் தொழில் நடக்கும் குஜராத்தின் அலாங் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான டன்கள் அளவுக்கு நச்சுக் கழிவுகள் குவிந்து ஆண்டுக்குச் சராசரியாக 60 பேர் கொல்லப்பட்டு வருகின்றனர்.

மேற்கில் காலாவதியாகிப் போன சாதாரண தொழில்நுட்பம் முதல் அணுத் தொழில்நுட்பம் வரை இந்தியாவின் தலையில் கட்டுகிறார்கள் பன்னாட்டு முதலாளிகளும் ஏகாதிபத்திய நாடுகளும். இந்த சூறையாடலுக்கு எந்த இடையூறும் வந்து விடக்கூடாது என்பதில் இந்திய ஆளும் வர்க்கம் முனைப்பாக உள்ளது. அதற்காகவே, சுற்றுச்சூழல் சட்டம், வனப் பாதுகாப்புச் சட்டம், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் என்று சகல விதமான கட்டுப்பாடுகளையும் தளர்த்துகிறது, மோடியின் அரசு.

பன்னாட்டு நிறுவனங்கள் சந்தைப்படுத்தும் உணவுப் பொருட்களுக்கும் மருந்துப் பொருட்களுக்குமான கட்டுப்பாட்டு முறை என்பதே இந்தியாவில் பெயரளவில் தான் உள்ளது. மேற்கத்திய நாடுகளில் சந்தைக்குச் செல்லும் முன் மற்றும் சந்தைக்குச் சென்ற பின் என சோதனை மற்றும் எதிர்வினை என்று இரண்டு அம்சங்களிலும் பரிசோதனை மற்றும் தரக்கட்டுப்பாட்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன.

மேற்கத்திய நாடுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு முதலாளித்துவ சமூக அமைப்பு ஏற்படுத்தியுள்ள நுகர்வோர் விழிப்புணர்வு ஒரு காரணம் என்றாலும், தங்கள் சொந்த நாட்டு வளங்களைப் பாதுகாத்துக் கொண்டு மூன்றாம் உலக நாடுகளின் வளங்களை வரைமுறையின்றி சீரழிக்கலாம் என்ற ஏகாதிபத்திய சுரண்டல் நலனே பிரதான பாத்திரமாற்றுகிறது. இதன் காரணமாகத் தான் அதிக கழிவுகளை வெளிப்படுத்தும் உற்பத்தித் தொழில்கள் மற்றும் ஆலைத் தொழில்களை இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்குத் தள்ளி விடுகின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை மக்களின் மேலும், இயற்கை வளங்களின் மேலும் செய்யப்படும் கூட்டு வல்லுறவை தொழில் வளர்ச்சி என்கின்றனர் முதலாளித்துவ ’அறிவுஜீவிகள்’. பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணின் உயரம் முதலாளிகளுக்கு ஏற்படுத்தும் உவகையின் முன் அழிந்து கொண்டிருக்கும் நாடும் நாட்டு மக்களும் இவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. இந்த மனித குல விரோதிகளின் ஒட்டுமொத்த குறியீடாக வந்திருப்பவர் தான் மோடி.

நம்மைச் சுற்றிலும் மலையைத் திருடி, ஆற்றை உறிஞ்சிக் களவாடி, காடுகளை அழித்து, நிலத்தை நஞ்சாக்கி, காற்றில் விஷத்தை பரப்புகிறார்கள் உள்நாட்டுத் தரகு முதலாளிகளும் பன்னாட்டு முதலாளிகளும். இந்தச் சூழலில் நீங்கள் ப்ராணாயாமம் செய்தாலும் உள்ளே செல்லப் போவதென்னவோ காற்றில் கலந்துள்ள கார்பன் மோனோ ஆக்சைடு தான். பாதுகாப்பட்ட தண்ணீரைக் குடித்தாலும் டவ் கெமிக்கல்சின் இரசாயன பூச்சிக் கொல்லி மருந்திலிருந்து தப்ப முடியாது.

நெஸ்லே மேகியின் மீதான கண்துடைப்பு தடை எத்தனை காலத்திற்கு இருக்கும் என்று நமக்குத் தெரியாது – கோலா பானங்களின் மீதான ’தடைக்கு’ என்ன நேர்ந்ததோ அதே தான் இந்த ‘தடைக்கும்’ நேரும். நிரந்தரத் தடை வேண்டுமென்றால் அது மக்கள் கையில் மட்டுமே உள்ளது.

– தமிழரசன்

கிரீஸ் மக்கள் மீது தொடரும் ஏகாதிபத்திய தாக்குதல்

6

டன்களை புதுப்பிக்க வேண்டுமானால், ‘சிக்கன’ நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தவும், ஆழப்படுத்தவும் வேண்டும் என்ற ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களின் நிபந்தனையை, ஜூலை 5-ம் தேதி நடத்தப்பட்ட நாடு தழுவிய கருத்துக் கணிப்பில் பெரும்பான்மை கிரீஸ் மக்கள் நிராகரித்திருந்தனர். இப்போது, கிரீஸ் மக்கள் நிராகரித்த அதே நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாக ஐரோப்பிய நிதி நிறுவனங்களின் கால்களில் விழுந்திருக்கிறார் அந்நாட்டின் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ்.

அலெக்சிஸ் சிப்ராஸ்
கிரீஸ் மக்கள் நிராகரித்த அதே நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாக ஐரோப்பிய நிதி நிறுவனங்களின் கால்களில் விழுந்திருக்கிறார் அந்நாட்டின் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ்.

வாக்கெடுப்பின் முடிவை பயன்படுத்தி ஐரோப்பிய கடன் நிறுவனங்களிடம் புதிய வலுவுடன் பேச்சு வார்த்தை நடத்தப் போவதாக அறிவித்திருந்தார், அலெக்சிஸ் சிப்ராஸ். அதன்படி ஜூலை 7-ம் தேதி அவர் முன்வைத்த கடன் கோரிக்கையை ஐரோப்பிய மத்திய வங்கி, ஐ.எம்.எஃப் மற்றும் ஐரோப்பிய நாடுகள் அவர் முகத்திலேயே தூக்கி எறிந்து விட்டன. மாறாக, அடுத்த 48 மணி நேரத்துக்குள் கிரீஸ் மக்களால் நிராகரிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளை அம்மக்கள் மீது சுமத்துவதற்கான புதிய திட்டத்தை வகுத்துத் தருமாறு உத்தரவிட்டிருந்தன.

அதாவது, ஜூலை 9-ம் தேதிக்குள் கடன் கொடுத்தவர்களுக்கு உகந்த ஒப்பந்தத்தை போட்டுக் கொள்ளா விட்டால், ஜூலை 12-ம் தேதி மற்ற ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் ஒன்று கூடி கிரீசை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்றுவது குறித்து முடிவெடுப்பார்கள். இதில், கிரீஸ் மக்களின் விருப்பம், முடிவு, ஜனநாயகம் எதற்கும் இடமில்லை. இதற்குப் பணிந்து சிப்ராஸ் கடன் நிறுவனங்கள் முதலில் சொன்ன நிபந்தனைகளையே ஏற்றுக் கொள்ளும் திட்டத்தை சமர்ப்பித்திருக்கிறார்.

இந்தச் சூழலில், கிரீஸ் ஐரோப்பாவுக்குள் தொடர்வது உலக நிதித் துறை கட்டமைப்புக்கு தேவையானது என்று ஒரு புறமும், கிரீஸ் போன்ற ஊதாரி, பொறுப்பற்ற நாட்டை வெளியேற்றுவதுதான் சரியானது என்று இன்னொரு புறமும் வாதங்கள் வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு பொருளாதார நெருக்கடியின் போதும் முதலாளிகளின் தவறுகளை மக்கள் மேல் சுமத்துவது ஒரு தந்திரம். உண்மையில் கிரீஸின் இன்றைய நெருக்கடிக்கும் அதன் கடன் சுமைக்கும் யார் பொறுப்பு?

கிரீஸ்
முன்னேறிய வடக்கு ஐரோப்பிய நாடுகளுடன் பொருளாதார ரீதியாக இணைக்கப்பட்ட பிறகு கிரீஸின் சுயசார்பு பொருளாதாரம் அழிக்கப்பட்டது.

ஐரோப்பிய பொருளாதார சமூகத்திலும் (1962), ஐரோப்பிய ஒன்றியத்திலும் (1981), யூரோ ஒற்றை நாணய அமைப்பிலும் (2001) ஆரம்பத்திலிருந்து உறுப்பினராக ஆன நாடு கிரீஸ். தெற்கு ஐரோப்பாவில் உள்ள அந்நாட்டின் இப்போதைய மக்கள் தொகை சுமார் 1 கோடி, அதன் பரப்பளவு தமிழ்நாடு அளவுக்கு சமமானது. மத்திய தரைக் கடல் பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருக்கும் கிரீசின் வரலாற்றுப் பெருமையும் அனைவரும் அறிந்ததே.

பாரம்பரிய விவசாய நாடான கிரீஸ், விவசாயத்துடன் மீன்பிடித் தொழில், கப்பல் கட்டும் தொழில் ஆகியவற்றை சார்ந்திருந்தது. முன்னேறிய வடக்கு ஐரோப்பிய நாடுகளுடன் பொருளாதார ரீதியாக இணைக்கப்பட்ட பிறகு கிரீஸின் சுயசார்பு பொருளாதாரம் அழிக்கப்பட்டு விவசாயத்தின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது; அதன் தொழில் துறை, ஏற்றுமதி சார்புடையதாக மாற்றப்பட்டது; அதன் தீவுகளும், பொருளாதாரமும் சுற்றுலாத் துறையை சார்ந்திருக்கும் படி மாற்றப்பட்டன. இன்று கிரீஸின் உழைக்கும் மக்களில் 5-ல் ஒருவர் சுற்றுலாத் துறையில் நேரடியாக பணிபுரிகின்றனர்.

கிரீஸ் நிதி கடத்தல்
கிரீஸ் (சட்ட விரோத நிதி கடத்தல்)

ஐரோப்பிய ஒற்றை நாணய யூரோவை ஏற்பதன் மூலம் லாப வேட்டையாட காத்திருந்த வங்கிகளும், முதலாளிகளும் கிரீஸின் நிதி நிலைமை அதற்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத நிலையில் மோசடி கணக்கு தயாரித்தனர். நாட்டின் நிதி பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% என்று குறைத்துக் காட்டி யூரோவில் சேர்வதற்கான நிபந்தனையை நிறைவு செய்தனர். இதற்கு அமெரிக்காவின் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் ஆலோசகராக இருந்து வழிகாட்டியது.

கிரீஸ் அரசின் கடன் பத்திரங்கள் யென், டாலர் நாணயப் பெறுமதிக்கு மாற்றப்பட்டன. அரசாங்கம் கொடுக்க வேண்டிய கடன் நிலுவைகளை எதிர்காலத்தில் கொடுப்பதாக வேறொரு கணக்கில் குறித்தார்கள். மேலதிகமாக கோல்ட்மேன் சாக்ஸ் வங்கியே 100 கோடி யூரோ ரகசியக் கடனாக கொடுத்து சரிக்கட்டியது. 2001-லிருந்து இந்த மோசடி நடந்து வந்திருப்பது 2010-ல் கண்டுபிடிக்கப்பட்டது.

கிரீஸ் ஐரோப்பிய ஒற்றை நாணயத்தை பயன்படுத்த தொடங்கியது, வெளியிலிருந்து பாய்ந்த மூலதனமும், கடன்களும் ரியல் எஸ்டேட், 2004 ஒலிம்பிக் போட்டி கட்டுமானங்கள் (€2,000 கோடி) என்று கிரீஸ் கிரேக்க நாட்டு முதலாளிகளின் பைகளை நிரப்பியது. மேலும், கிரேக்க முதலாளிகள் அந்நாட்டு வரிகளை தவிர்க்க தமது நிறுவனங்களை வெளிநாடுகளில் பதிவு செய்து கொண்டனர். உதாரணமாக, கிரேக்கர்களுக்கு சொந்தமான 3,760 கப்பல்களில் 2,898 கப்பல்களை வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்டு கிரீஸ் நாட்டு வரிகளை ஏய்க்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளில் கிரீஸ் கப்பல் முதலாளிகளுக்கு 58 வெவ்வேறு வகையான வரி வெட்டுகள் வழங்கப்பட்டன.

கிரீஸ் கடன் வகைகள்
நாட்டின் கடன்கள் குறித்து ஆய்வு செய்ய கிரீஸ் நாடாளுமன்றம் நியமித்த குழு வெளியிட்டிருக்கும் கடன்கள் பற்றிய விபரம்.

1980 முதல் 2010 வரை கார்ப்பரேட் வரி விதிப்பு 49% -லிருந்து 20% ஆக குறைக்கப்பட்டது. இருந்தாலும், முதலாளிகள் மோசடி மூலமும், லஞ்சம் மூலமும் பெருமளவு வரிகளை ஏய்த்தனர். 2000-க்கும், 2007-க்கும் இடையே கார்ப்பரேட் வரி விதிப்பு வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.1%-லிருந்து 2.6% ஆக வீழ்ச்சியடைந்தது. மாறாக, பெரும்பான்மை உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்படும் மறைமுக வரிகள் மொத்த வரி வருவாயில் 60%-ஐ விட அதிகமாக உள்ளது. (ஐரோப்பிய சராசரி 36.2%).

கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து கிரீஸ் $2,140 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்தது. அந்நாட்டுக்குத் தேவையற்ற, பன்னாட்டு நிறுவனங்களுக்கு பணத்தை கடத்தும், உள்நாட்டு தரகர்களின் பையை நிரப்பும் இந்த இறக்குமதிகள் மூலம் கிரீஸ் மக்கள் கொள்ளையடிக்கப்பட்டனர்.

கிரீஸ் வங்கிகளும், மற்ற ஐரோப்பிய நாட்டு வங்கிகளும் கிரீஸ் அரசின் கடன் பத்திரங்களை வாங்கி வரி வசூல் பற்றாக்குறை, ஆயுத இறக்குமதி, ஆடம்பர கட்டுமானப் பணிகள், முதலாளிகளுக்கு வரிச் சலுகைகள் ஆகியவற்றை சாத்தியமாக்கின.

நிதி பயன்பாடு
2010 முதல் 2015 வரை பெறப்பட்ட நிதி பயன்பாட்டு வீதம்.

இந்நிலையில் 2008-ம் ஆண்டு அமெரிக்காவில் வெடித்த உலகளாவிய நிதி நெருக்கடி ஐரோப்பிய நாடுகளையும் தாக்கியது; கிரீஸ் அரசு திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டது. அப்போது கிரீஸ் அரசு கடன் பத்திரங்களுக்கு பணம் கொடுக்க முடியாத நிலையில் ஐரோப்பிய, அமெரிக்க வங்கிகள் திவாலாகியிருக்கும். உடனே, ஐரோப்பிய மத்திய வங்கியும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், ஐ.எம்.எஃப்-ம் தலையிட்டனர். அதன்படி €11,000 கோடி கடன் வசதி கிரீஸ் அரசுக்குக் கொடுக்கப்பட்டது. அதில் பெரும்பகுதியை, ஐரோப்பிய வங்கி நிறுவனங்கள், வணிக வங்கிகளிடமிருந்து கடன் பத்திரங்களை வாங்கிக் கொண்டு செலவை கிரீஸ் அரசின் கணக்கில் எழுதிக் கொண்டன. 2012-ல் கிரீஸ் அரசின் கடன்களில் 80% தனியார் வங்கிகள் வாங்கிய கடன் பத்திரங்கள் வடிவில் இருந்தது, 20% பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்தது. இப்போது அந்த நிலைமை நேர் எதிராக மாறியிருக்கிறது.

கிரீஸ் அரசு கடன் கட்ட முடியாமல் போனதற்குக் காரணம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பொதுத்துறை செலவுகள், ஓய்வூதியங்கள், மக்கள் மீதான வரி விதிப்பை அதிகரிக்காதது இவைதான் காரணம் என்று கூறி அவற்றை சரி செய்யும்படி உத்தரவிட்டன. அதே ஒப்பந்தத்தில் அமெரிக்காவிடமிருந்தும் ஜெர்மனியிடமிருந்தும் வாங்கத் திட்டமிட்டிருந்த ஆயுதங்களை வாங்கத் தவறி விடக் கூடாது என்றும் கூறின. திவாலாகிப் போன கிரீஸ் அரசு மக்கள் மீது நிதிச் சுமையை அதிகரிக்க வேண்டும், ஆனால் அமெரிக்கா ஆயுதம் வாங்குவதை நிறுத்தி விடக் கூடாது. இதுதான், இவர்களது ‘சிக்கன’ நடவடிக்கைகளின் யோக்கியதை.

கார்ப்பரேட்டுகள் மீதான வரி விதிப்பை அதிகப்படுத்துவது, வரி ஏய்ப்பை கட்டுப்படுத்துவது, கிரீஸ் முதலாளிகள் சுவிஸ் வங்கியிலும், லண்டன் ரியல் எஸ்டேட்டிலும் குவித்திருக்கும் பணத்தை திரும்ப கொண்டு வருவது பற்றியும் அந்த ‘சிக்கன’ நடவடிக்கை எதுவும் பேசவில்லை.

கிரீஸ் மக்கள் போராட்டம்
கிரேஸில் உழைக்கும் மக்களில் நான்கில் ஒரு பகுதியினர் வேலையின்றி இருக்கின்றனர். இளைஞர்களில் பாதிக்கும் மேல் வேலை இல்லை.

கிரீஸின் 1 கோடி மக்கள் தொகையில் பாதிப் பேர் சம்பளம் பெறும் தொழிலாளர்கள். அவர்களது சராசரி நிகர ஆண்டு வருமானம் €9,000 யூரோ மட்டுமே. இது அந்நாட்டின் தனிநபர் சராசரி வருமானத்தில் பாதியை விடக் குறைவு. பெரும்பான்மை மக்கள் சுரண்டப்பட்டு மிகச் சிறுபான்மை கிரேக்க முதலாளிகள் கொழுக்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இப்போது கிரேஸில் உழைக்கும் மக்களில் நான்கில் ஒரு பகுதியினர் வேலையின்றி இருக்கின்றனர். இளைஞர்களில் பாதிக்கும் மேல் வேலை இல்லை. அவர்கள் ஓய்வூதியம் வாங்கும் தமது பெற்றோர் அல்லது தாத்தா/பாட்டியை சார்ந்து வாழ்கின்றனர். 2010-க்குப் பிறகு கிரீஸின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 25% வீழ்ச்சியடைந்துள்ளது. மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர்.

இத்தகைய கடும் நெருக்கடியினால் அழுத்தப்பட்ட கிரீஸ் ஆசிரியர்கள், மாணவர்கள், மருத்துவத்துறை ஊழியர்கள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் என்று நாடு முழுவதும் லட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து போராடினர். இத்தகைய போராட்டங்களுக்கு மத்தியில் அடுத்தடுத்து ஐரோப்பிய வங்கிகளுக்கு கிரேக்க மக்களின் நலன்களை பலி கொடுத்துக் கொண்டிருந்த இடது, வலது சாரி கட்சிகளை எதிர்த்து சிக்கன நடவடிக்கைகளை நிராகரிப்போம், கடன்கள் ரத்து செய்யக் கோருவோம் ஆகிய முழக்கங்களை முன் வைத்து போட்டியிட்ட சிரிசா என்ற ‘தீவிர’ இடது சாரி கூட்டணி 2015 ஜனவரி மாதம் நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது.

கிரீஸ் கருத்துக் கணிப்பு
ஆளும் வர்க்கங்களின் அச்சுறுத்தல்களுக்கும், பயமூட்டும் பிரச்சாரங்களுக்கும் மத்தியில் 61% மக்கள் ஐரோப்பிய கடன் நிறுவனங்களின் நிபந்தனைகளை நிராகரித்திருக்கின்றனர்.

தனது வாக்குறுதிப்படி, கடன் வசூலிக்கும் மும்மூர்த்திகளின் நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்யக் கோருவதாக அறிவித்தது, பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் தலைமையிலான சிரிசா அரசு. அதைத் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன. கடன் கொடுத்த நிறுவனங்கள், ஐரோப்பிய வங்கிகள், உலக நிதி நிறுவனங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்கள், கடன் வாங்கினால் கட்டுவதுதான் சரி என்று கண்டிப்பு காட்டினர். தாங்கள் சொல்லும் நிபந்தனைகளே ஏற்றே தீர வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர்.

இது குறித்து, தான் முடிவு செய்ய முடியாது என்றும், கிரீஸ் மக்கள் மத்தியில் கருத்துக் கணிப்பு நடத்தி ஐரோப்பிய கடன் கொடுத்த நிறுவனங்களின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதா நிராகரிப்பதா என்று கேட்கப் போவதாக ஜூன் 27-ம் தேதி அறிவித்தார் கிரேக்க பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ்.

அதைத் தொடர்ந்து நிதி பற்றாக்குறை காரணமாக கிரீஸில் வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டன. ஏ.டி.எம் எந்திரங்களில் அதிகபட்சம் ஒரு நாளைக்கு €60 மட்டுமே எடுக்க முடியும் என்று வரம்பு விதிக்கப்பட்டது. “கிரீஸ் கடன் நிபந்தனைகளை ஏற்கத் தவறினால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்றப்படும், கடந்த 5 ஆண்டுகளில் அனுபவித்த (வேலை இழப்பு, ஓய்வூதிய இழப்பு, கல்வி/மருத்துவ வெட்டு) கஷ்டங்கள் ஒன்றுமில்லை என்று தோன்றுமளவு பேரழிவு காத்திருக்கிறது” என்று கிரேக்க முதலாளிகள் கைவசம் இருந்த தொலைக்காட்சிகளும், ஊடகங்களும் பிரச்சாரம் செய்தன. ஆம் தரப்பும், இல்லை தரப்பும் சரிக்கு சமமாக உள்ளன என்று மோசடி கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன.

மறுபுறம், பார்சிலோனா, மாட்ரிட், லிஸ்பன், டப்ளின், பாரிஸ், பிரஸ்ஸல்ஸ் போன்ற நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கிரீஸ் மக்களுக்கு ஆதரவாக பேரணியாகச் சென்றனர். ஜூலை 3-ம் தேதி ஏதென்சின் சின்டாக்மா சதுக்கத்தில் இல்லை தரப்பு ஆர்ப்பாட்டத்தில் 1.5 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர்.

ஆளும் வர்க்கங்களின் அச்சுறுத்தல்களுக்கும், பயமூட்டும் பிரச்சாரங்களுக்கும் மத்தியில் 61% மக்கள் ஐரோப்பிய கடன் நிறுவனங்களின் நிபந்தனைகளை நிராகரித்திருக்கின்றனர். 18 முதல் 25 வயது இளைஞர்களில் 85% ஏகாதிபத்திய நிதிக் கொடுங்கோன்மையை எதிர்த்து வாக்களித்திருக்கின்றனர்.

கிரீஸ் போராட்டம்
“கடனை வெட்டு, ஐ.எம்.எஃப் திரும்பிப் போ” – ஜூலை 3-ம் தேதி ஏதென்சின் சின்டாக்மா சதுக்கத்தில் இல்லை தரப்பு ஆர்ப்பாட்டத்தில் 1.5 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர்.

ஆனால், மீண்டும் கடன் கொடுத்த நிறுவனங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப் போவதைத் தவிர மாற்று திட்டம் எதுவும் இல்லாத போலி இடது சாரி கூட்டணிதான் சிரிசா என்பது நிரூபணமாகியிருக்கிறது.

  1. தனியார் மயத்தை நிறுத்துவதாக கூறிய சிரியா, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்று நிதி திரட்டப் போவதாக அறிவித்திருக்கிறது..
  2. கிரீஸ் விமானப்படையை மேம்படுத்துவதற்கான நிதி உட்பட பெருமளவு நிதியை ராணுவத்துக்கு ஒதுக்கியிருகிறது.
  3. தேசிய ஓய்வூதிய நிதி மற்றும் நகராட்சி நிதியிலிருந்து மும்மூர்த்திகளுக்கு கடன் அடைத்திருக்கிறது, சிரிசா.
  4. வேலை வாய்ப்புகளை உருவாக்கும் பொது முதலீடுகளை வெட்டி, மும்மூர்த்திகளின் கடன் கட்டும் இலக்குகளை நிறைவேற்ற முயற்சிக்கிறது, சிரிசா.
  5. மக்கள் பணத்தை மேலும் கொள்ளையடித்து தற்போது 0.7% பற்றாக்குறையில் இருக்கும் கிரீஸ் பட்ஜெட்டை 0.6% மிகை பட்ஜெட்டாக மாற்றுவதாக சிரிசா வாக்களித்திருக்கிறது.
  6. அத்தியாவசியப் பொருட்கள் மீதான மதிப்புக் கூட்டு வரியை குறைப்பதாக வாக்களித்த சிரிசா இப்போது 23% வரியை ஏற்றுக் கொண்டிருக்கிறது.
ஐரோப்பிய எஜமான்கள்
‘கடன் எப்படி வந்திருந்தால் என்ன, அதை எதிர்த்து கிரீஸ் மக்கள் வாக்களித்தால் என்ன, நாங்கள் சொன்ன நிபந்தனைகளை எப்படி அமல்படுத்தப் போகிறீர்கள்’ என்று சொல்லும்படி உத்தரவு.

பிரதமர் சிப்ராஸ் ஐரோப்பிய கடன்காரர்களுக்கு எதிராக பேசிய முன்னாள் நிதி அமைச்சர் யானிஸ் வரோஃபகிஸ்-ஐ நீக்கி விட்டு இங்கிலாந்தில் படித்த மேற்கத்திய அடிமை சாக்கலோடோஸ்-ஐ நிதி அமைச்சர் ஆக்கி ஐரோப்பிய ஈட்டிக்காரர்களை சமாதானப்படுத்த முயன்றார்.

ஆனால், “என்ன நடந்தாலும் சரி, பூரா தொகையையும் ஒரு பைசா விடாம எண்ணி கீழ வைக்கணும்” என்று சொல்கின்றன கிரீஸுக்கு கடன் கொடுத்த ஐரோப்பிய மத்திய வங்கியும், ஜெர்மனி, பிரான்ஸ் முதலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் சர்வதேச நாணய நிதியமும்.

‘கடன் எப்படி வந்திருந்தால் என்ன, அதை எதிர்த்து கிரீஸ் மக்கள் வாக்களித்தால் என்ன, நாங்கள் சொன்ன நிபந்தனைகளை எப்படி அமல்படுத்தப் போகிறீர்கள்’ என்று சொல்லும்படி கிரீஸ் பிரதமருக்கு உத்தரவிட்டன. அதை சிரமேற்கொண்டு அத்தகைய ஒரு திட்டத்தை முன் வைத்திருக்கிறார் அலெக்சிஸ் சிப்ராஸ். ஆனால், சிரிசா கட்சிக்குள்ளேயே சிப்ராசின் இந்த சரணடைவு கடும் எதிர்ப்பை சந்திக்கும். மக்கள் போராட்டங்களையும் எதிர்கொள்ள வேண்டி வரும்.

2-ம் உலகப் போருக்குப் பின் ஜெர்மனியும், பிரான்சும் செய்ததைப் போல கடன்களை கட்ட முடியாது என்று கடன் கொடுத்த நாடுகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி கடன் தள்ளுபடி அல்லது குறைப்பு செய்ய வேண்டும். கிரீசுக்கு அத்தகைய சலுகையை செய்ய மறுக்கின்றன இப்போது கடன் கொடுத்த நாடுகளாக இருக்கும் ஜெர்மனியும், பிரான்சும்.

தனியார் வங்கிகள்
2012-ல் கிரீஸ் அரசின் கடன்களில் 80% தனியார் வங்கிகள் வாங்கிய கடன் பத்திரங்கள் வடிவில் இருந்தது, 20% பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்தது. இப்போது அந்த நிலைமை நேர் எதிராக மாறியிருக்கிறது.

அல்லது, அந்நாட்டு நாணய மதிப்பை குறைப்பதன் மூலம் கடன் சுமையை கையாளலாம். அதன் மூலம் ஒன்று உள்நாட்டு கடன்களை குறைந்த மதிப்பில் திருப்ப முடியும், மேலும் குறைந்த மதிப்பு நாணயத்தை பயன்படுத்தி ஏற்றுமதியை அதிகரித்து வெளிநாட்டுக் கடன்களை கட்ட செலாவணி ஈட்ட முடியும்.

யூரோ ஒற்றை நாணயத்தில் தன்னை இணைத்துக் கொண்ட கிரீஸ் அதையும் செய்ய முடியவில்லை. யூரோ மீதான கட்டுப்பாடு ஐரோப்பிய மத்திய வங்கியிடம் இருக்கிறது. கிரீஸ் மத்திய வங்கியிடம் இல்லை. யூரோவிலிருந்து வெளியேறி, தனி நாணயத்தை உருவாக்கி கிரீஸ் மத்திய வங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கிரீஸின் நிதித்துறையை கொண்டு வர முடியும்.

உலக நிதிக் கட்டமைவில் நெருக்கமாக பிணைக்கப்பட்டு விட்ட, சுயசார்பு பொருளாதாரம் முழுவதும் அழிக்கப்பட்டு விட்ட நிலையில் கிரீஸ் என்ன செய்ய முடியும்? ஐரோப்பிய ஒற்றை நாணயத்தையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் விட்டு வெளியேறினால் அந்நாட்டு பொருளாதாரம் என்ன ஆகும்? இந்த விலகல் ஐரோப்பிய பொருளாதாரத்தை எப்படி பாதிக்கும்?

கிரீஸ் யூரோவை விட்டு விலகுவது ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கும் கடும் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும். இந்த நிதிப் பிணி நெருக்கடியில் சிக்கி, கடும் சிக்கன நடவடிக்கைகளில் அவதிப்படும் போர்ச்சுக்கல், அயர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி மக்களும் கிரீஸின் வழியில் போகும்படி கோரும் போராட்டங்கள் பரவும். அந்நாடுகளும் யூரோவை விட்டு விலகினால் அது ஐரோப்பிய ஒன்றியத்தை பலவீனப்படுத்துவதுடன், யூரோ திட்டத்தை சீர்குலைத்து, ஐரோப்பிய ஐக்கியத்தை இல்லாமல் செய்து விடும்.

பன்னாட்டு முதலீட்டாளர்கள் தமது ஐரோப்பிய கடன் பத்திரங்களை விற்க ஆரம்பித்தால் யூரோவின் மதிப்பு பெருமளவு சரியும். வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்குள் (மத்திய தரைக்கடல் வழியாக) நுழையும் அகதிகளை கிரீஸ் நாட்டின் உதவியின்றி ஐரோப்பா கையாள முடியாது.

GreekCrisisImageமாறாக, கிரீஸ் சீனா, ரசியா போன்ற நாடுகளுடன் வர்த்தக உறவை மேம்படுத்திக் கொள்ள முடியும். ரசியாவிலிருந்து துருக்கி வழியாக எண்ணெய்/எரிவாயு குழாய் அமைத்து ஐரோப்பாவுக்கு கொண்டு செல்வதற்கான மையமாக கிரீஸ் செயல்பட முடியும். பிரேசில், ரசியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா இணைந்து ஏற்படுத்திய புதிய வளர்ச்சி வங்கி (நியூ டெவலப்மென்ட் பேங்க்) மற்றும் சீனாவின் ஆசிய உள்கட்டமைப்பு வங்கியிலும் கிரீஸ் நாடு இணையலாம்.

எப்படியானாலும், தீர முடியாத, நிரந்தரமான, ஆழமான நெருக்கடியில் சிக்கியிருக்கும் உலக முதலாளித்துவ பொருளாதாரக் கட்டமைப்பின் பலவீனமான கண்ணிகளில் ஒன்றான கிரேக்க நாட்டில் ஏகாதிபத்திய நிதிக் கட்டமைப்பு நொறுங்கிக் கொண்டிருக்கிறது. அதை தக்க வைத்துக் கொள்ளும் ஆளும் வர்க்கங்களின் முயற்சிகள் உழைக்கும் மக்களின் எதிர்ப்புக்கு முன்பு திணறிக் கொண்டிருக்கின்றன. பெரும்பான்மை மக்களுக்கு எதிரான இந்த முதலாளித்துவ கட்டமைப்பை தூக்கி எறிந்து மக்களுக்கான அமைப்பை கட்டியமைப்பதற்கான போராட்டத்தில் கிரீஸ் மக்களுக்கு துணை நிற்க வேண்டியது உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின் கடமை.

– அப்துல்

தொடர்பான செய்திகள்

தனியார் வங்கிகள் வளர பொதுத்துறை வங்கிகளை ஒழிக்கும் மோடி

4

“தனியார் வங்கிகள் வளர பொதுத்துறை வங்கிகளை ஒழித்துக் கட்டு” – இதுதான் மோடி பிராண்டு “வளர்ச்சி”!

ன்மோகன் சிங் அரசு மிச்சம் வைத்துவிட்டுப் போன துறைகளை, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இந்தியத் தரகு முதலாளிகளுக்கும் ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கும் படையல் போடும் வேலையை வெளிப்படையாகவும் கமுக்கமாகவும் என இரண்டு வழிகளிலும் நிறைவேற்றி வருகிறது, மோடி அரசு. காப்பீடு துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை 49 சதவீதமாக உயர்த்துவது; இராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் இந்தியத் தரகு முதலாளிகளை அனுமதித்திருப்பதோடு, பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் அத்துறையில் 49 சதவீதம் அளவிற்கு முதலீடு செய்வதற்கும், சில குறிப்பிட்ட இனங்களில் 100 சதவீதம் அளவிற்கு அந்நிய முதலீட்டை அனுமதிப்பது; பல்வேறு உயிர் காக்கும் மருந்துப் பொருட்களைக் காப்புப் பட்டியலில் இருந்து விடுவித்து, அவற்றின் விலைகளைத் தீர்மானிக்கும் உரிமையை ஏகபோக நிறுவனங்களுக்கு அளிப்பது என்பவையெல்லாம் வெளிப்படையாக நடந்திருக்கும் அதேசமயம், பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கும் திட்டம் மிகவும் கமுக்கமாகவும் சதித்தனமாகவும் அரங்கேறி வருகிறது.

ராஜன், சுப்பிரமணியன், நாயக்
அரசு வங்கிகளைக் கொல்வதற்குத் தயாராகிவரும் தனியார்மயக் கோடாரிகள் : ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், பிரதமரின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் மற்றும் நாயக் கமிட்டியின் தலைவர் பி.ஜே.நாயக்.

கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நடைபெற்று வந்த சமயத்தில், அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள சர்வதேச பொருளாதாரத்திற்கான பீட்டர்சன் இன்ஸ்டிட்யுட் என்ற சிந்தனைக் குழாம்-குடிமைச் சமூக அமைப்பில் உயர் பொறுப்பிலிருந்த இந்தியரான அரவிந்த் சுப்பிரமணியன் இந்திய பொதுத்துறை வங்கிகளை ஒழித்துக்கட்ட வேண்டியதை வலியுறுத்தி கட்டுரையொன்றை எழுதியிருந்தார். பொதுத்துறை வங்கிகளை, இந்திய அரசின் கழுத்தில் தொங்கும் தேவையற்ற சுமையாகச் சாடியிருந்த அவரைத்தான், தனது தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமித்துக் கொண்டார், மோடி. இதனைத் தொடர்ந்து பொதுத்துறை வங்கிகளைச் சீரமைப்பது தொடர்பான வழிகளை ஆராவதற்காக மன்மோகன் சிங் அரசால் நியமிக்கப்பட்ட நாயக் கமிட்டி, தனது அறிக்கையை பிரதமர் மோடியிடம் அளித்தது. இவையிரண்டும் பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்க மோடி அரசு வெறித்தனமாக முயலும் என்பதை எடுத்துக் காட்டின என்றால், மோடி அரசின் இரண்டு பட்ஜெட் (2014-15, 2015-16) அறிக்கைகளும் அதனைத் தெட்டத்தெளிவாக உறுதிப்படுத்தின.

பொதுத்துறை வங்கிகளின் அழிவில்தான் தனியார் வங்கிகள் வளர முடியும் எனக் கூறும் அரவிந்த் சுப்பிரமணியத்தின் கட்டுரை, அதற்காகப் பொதுத்துறை வங்கிகளை நைச்சியமான முறையில் கொன்றுவிட வேண்டும் என வெளிப்படையாகவே பரிந்துரைக்கிறது. “இந்திய வங்கித் தொழிலில் 75 சதவீத பங்கு இன்னமும் பொதுத்துறை வங்கிகளிடம்தான் உள்ளன. மேலும் மேலும் தனியார் வங்கிகளைத் திறப்பதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் இந்த செல்வாக்கைக் குறைத்துவிட முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. பொதுத்துறை வங்கிகளின் இந்தச் செல்வாக்கைச் சுருக்காமல், தனியார் வங்கிகள் வளர்வதற்கான வாய்ப்பே இல்லை. நல்ல இலாபமீட்டும் பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவதை இந்திய அரசியல் சூழல் அனுமதிக்காது. அதற்குப் பதிலாக, வாராக் கடன் பிரச்சினையால் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள பொதுத்துறை வங்கிகளைக் கவிழ்ப்பதன் மூலம்தான் ஒட்டுமொத்த பொதுத்துறை வங்கிகளின் செல்வாக்கைக் குறைக்க முடியும்” என்கிறது, அவரது கட்டுரை.

இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்க மறுத்த இந்திய அரசு வங்கி நிர்வாகத்தைக் கண்டித்து கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இந்திய மாணவர் சங்கத்தால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

பொதுத்துறை வங்கிகளைக் கொல்லைப்புற வழியில் தனியார்மயமாக்க ரிசர்வ் வங்கியை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைக்கும் அவரது கட்டுரை, “வாராக் கடன் பிரச்சினையால் தடுமாறும் பொதுத்துறை வங்கிகளைக் கைதூக்கிவிடும் நோக்கில் அரசு அந்த வங்கிகளில் மேலும் மூலதனமிட முயலும்பொழுது, அத்தகைய ‘பெயில் அவுட்’ நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி தலையிட்டுத் தடுக்க வேண்டும். பொருளாதார மந்த நிலையில் இத்தகைய பெயில் அவுட் நடவடிக்கைகள் நிதிப்பற்றாக்குறையை மேலும் அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது; திறமையற்ற வங்கிகள் அரசின் ஆதரவோடு உயிர் பிழைத்திருப்பதை அனுமதிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி அரசிடம் உறுதியாக எடுத்துச் சொல்ல வேண்டும். நாட்டின் பொருளாதார நிலை எந்தளவிற்கு மோசமாக உள்ளதோ, அந்தளவிற்கு ரிசர்வ் வங்கி கவர்னருக்கு பொதுத்துறை வங்கிகளை பெயில் அவுட் செய்வதற்கு எதிராகப் பேச வாப்புகள் கிடைக்கும். மோசமடைந்த பொதுத்துறை வங்கிகளைத் தீர்த்துக் கட்டுவதை ஒருபுறமும், இலாபகரமான வங்கிகளைத் தனியாருக்குக் கைமாற்றிவிடுவதை இன்னொருபுறமும் செய்வதற்கு இந்த வாப்புகளை ரிசர்வ் வங்கி கவர்னர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றவாறு பொதுத்துறை வங்கிகளைத்
தனியார்மயமாக்கும் திட்டத்தை விவரிக்கிறது, அரவிந்த் சுப்பிரமணியத்தின் கட்டுரை. பொதுத்துறை வங்கிகளுக்கு “சைலண்டாக” சங்கு ஊதச் சொல்லும் இந்தக் கட்டுரைக்கு அவர் வைத்திருக்கும் தலைப்பு – “சாகடித்துச் சீர்திருத்துவோம் (Reform by Death)”

நாயக் கமிட்டி அறிக்கையும் வாராக் கடன் பிரச்சினையை முன்வைத்து பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கக் கோருகிறது. “பொதுத்துறை வங்கிகளின் நிதி நிலைமை கவலைக்கிடமாக இருப்பதற்கு அரசின் தலையீடும் நிர்வாகத் திறமையின்மையும்தான் காரணம்” எனக் கூறும் நாயக் கமிட்டி, இதற்குத் தீர்வாக, “மைய அரசு பொதுத்துறை வங்கிகளில் உள்ள தனது பங்கு மூலதனத்தை 50 சதவீதமாகக் குறைத்துக் கொள்வதோடு, வங்கி முதலீட்டு கம்பெனி என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கி, அதனிடம் இப்பங்கு மூலதனத்தையும் வங்கிகளை நிர்வகிக்கும் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டும். முதலீட்டாளர் என்ற முறையில் அரசு பொதுத்துறை வங்கிகள் மூலம் கிடைக்கும் இலாபத்தை எண்ணிக் கொண்டிருப்பதைத் தாண்டி வேறெந்த வகையிலும் வங்கி நடவடிக்கைகளில் தலையிடக் கூடாது” எனப் பரிந்துரைக்கிறது.

வங்கி ஊழியர் ஆர்ப்பாட்டம்
வங்கிப் பணிகள் அவுட்சோர்சிங் முறையில் தனியார்மயமாக்கப்படுவதைக் கண்டித்து பொதுத்துறை வங்கி ஊழியர் சங்கம் டெல்லியிலுள்ள இந்திய அரசு வங்கியின் தலைமை அலுவலகத்தின் முன் நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

அரவிந்த் சுப்பிரமணியன் போலவே பி.ஜே.நாயக்கும் அமெரிக்க இறக்குமதி சரக்குதான். 2008-ல் அமெரிக்காவில் வெடித்த சப்-பிரைம் (வீட்டுக் கடன்) மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களுள் ஒன்றான மார்கன் ஸ்டான்லியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான அவர், இந்தியாவில் செயல்படும் தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கியின் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார். இரத்த வெறி கொண்டு அலையும் செந்நாய் கூட்டம் போல, ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், பி.ஜே.நாயக் உள்ளிட்ட ஏகாதிபத்திய அடிவருடி நிபுணர்கள் கும்பல் இந்தியாவின் நிதித்துறையை முற்றிலுமாகத் தனியார்மயமாக்கத் துடிக்கிறார்கள்.

***

2000-ஆம் ஆண்டின் முதல் எட்டு ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் கண்ட வளர்ச்சிக்கும், அம்பானி சகோதரர்கள், அதானி, ரூயா உள்ளிட்ட இந்தியத் தரகு முதலாளிகள் உலகக் கோடீசுவரர்களாக வளர்ந்ததற்கும் அடிப்படையாக இருந்தது பொதுத்துறை வங்கிகள் வழங்கிய கடன்கள்தான். 1999-ல் அடிக்கட்டுமானத் துறைக்குப் பொதுத்துறை வங்கிகள் வழங்கிய கடன் வெறும் 724 கோடி ரூபாய்தான். இது 2012-13-ல் 78,605 கோடி ரூபாயாக அதிகரித்தது. அரசு-தனியார் கூட்டு அடிப்படையில் (Public Private Partnership) தொடங்கப்பட்ட அடிக்கட்டுமான திட்டங்களில் தனியார் பங்களிப்பு என்பது பூஜ்யம்தான். அத்திட்டங்கள் அனைத்தும் வங்கிகளின் கடனைப் பெற்று உருவாக்கப்பட்ட அரசு திட்டங்கள்தான் என்கிறார், ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் கே.சி.சக்கரவர்த்தி.

பொருளாதார வளர்ச்சி என்ற போர்வையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்பட்ட இத்தகைய கடன்கள்தான் பொதுத்துறை வங்கிகளைப் பெரும் நெருக்கடிக்குள் தள்ளின. பொதுத்துறை வங்கிகளை நிதி நெருக்கடிக்குள் தள்ளியிருக்கும் வாராக் கடனில் பெரும் பகுதி ஒரு முப்பது நிறுவனங்களிடம் தேங்கியிருப்பதாக செப்டம்பர் 2013-ல் மையப் புலனாய்வு துறை வெளிப்படையாகக் குற்றஞ்சுமத்தியது. அரசியல் செல்வாக்குமிக்க கிங்ஃபிஷர் உள்ளிட்ட 406 நிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய கடன் நிலுவை 70,300 கோடி ரூபாயாகும் என அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கம் கடந்த ஆண்டு அம்பலப்படுத்தியிருக்கிறது. 36 தனியார் அனல் மின்சார உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட 2,09,000 கோடி ரூபாய் கடன் வசூலிக்க இயலாத சிக்கலில் இருப்பதாக கிரெடிட் சூயிஸ் என்ற ஏகாதிபத்திய தர மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

டெல்லி பாலம் விமான நிலையம்
உமி கொண்டுவந்தவன் அவல் தின்ற கதையாக அரசுப் பணத்தில் நவீனமான முறையில் சீரமைக்கப்பட்ட டெல்லி பாலம் சர்வதேச விமான நிலையம் ஜி.எம்.ஆர் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வாராக் கடன்கள் ஒருபுறமிருக்க, கடனைக் கட்டாமல் ஏய்த்து வரும் தரகு முதலாளிகள் வாங்கிய கடனுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்து, கடன் தொகையிலும் ஒரு பகுதியைத் தள்ளுபடி செய்து, திருப்பிக் கட்டுவதற்கான தவணை முறைகளை நீட்டிப்புச் செய்து தரும் அயோக்கியத்தனத்தைக் கடன் மறுசீரமைப்பு என வங்கி நிர்வாகங்கள் அழைக்கின்றன. இவ்வாறு மறுசீரமைக்கப்பட்ட கடன்களின் பட்டியலை எடுத்துக் கொண்டால், அது இன்னொரு கொள்ளையாக விரிகிறது.

2008-ல் வெடித்த பொருளாதார நெருக்கடிக்குப் பிந்தைய ஐந்தாண்டுகளில் வாராக் கடன் பட்டியலுக்குள் கொண்டு வராமல் தந்திரமாக மறுசீரமைக்கப்பட்ட கடன் தொகை ஐந்து இலட்சம் கோடி ரூபாயாகும் என சி.பி.ஐ. குற்றஞ்சுமத்தியிருக்கிறது. அந்த ஐந்தாண்டுகளில் அரசுடமை வங்கிகளின் இலாபத்திலிருந்து 1.41 இலட்சம் கோடி ரூபாய் வாராக் கடனுக்காக ஒதுக்கப்பட்டு, கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக அம்பலப்படுத்தியிருக்கிறது, வங்கி ஊழியர் சங்கம்.

இப்படி பொதுத்துறை வங்கிகளில் உள்ள மக்களின் சேமிப்பை தொழில் கடன்கள் என்ற பெயரில் கொள்ளையடித்து, அதன் மூலம் தங்களின் சொத்து மதிப்புகளை உயர்த்திக் கொண்டுள்ள இந்தியத் தரகு முதலாளிகள் கும்பல், வாராக் கடனால் வங்கிகள் நொடித்துப் போயிருப்பதால், அவற்றைத் தனியார்மயமாக்கித் தங்களிடம் ஒப்படைக்குமாறு கோருகிறார்கள். இது மாட்டை இரண்டு முறை தோலுரிப்பதற்கு ஒப்பானது. இம்மாபாதகத்தைக் கச்சிதமாகவும் விரைவாகவும் முடித்துக் கொடுக்க முனைந்துள்ளது, மோடி அரசு.

தனது பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்பிரமணியன் பொதுத்துறை வங்கிகளைச் சத்தமில்லாமல் தனியார்மயமாக்குவதற்கு என்ன வழியை முன்வைத்தாரோ, அதே வழியை, பொதுத்துறை வங்கிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியைக் கடுமையாக வெட்டுவதன் மூலம், போதுமான அளவிற்கு இலாபம் ஈட்டாத பொதுத்துறை வங்கிகளைச் சந்தையை நோக்கித் தள்ளிவிடும் (தனியார்மயமாக்கும்) முதல்கட்ட நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறது, மோடி அரசு.

மன்மோகன் சிங் ஆட்சியிலும்கூடப் பொதுத்துறை வங்கிகளில் மறுமூலதனமிடுவதற்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி வெட்டப்படுவது வாடிக்கையாக இருந்தாலும், மோடி ஆட்சியில் இந்த வெட்டு கடுமையாகியிருப்பதோடு, ‘திறமையாகச் செயல்படாத’ பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கும் சதித்தனத்தையும் உள்ளடக்கியதாகப் புதிய பரிணாமத்தை எட்டியிருக்கிறது. மோடி அரசின் முதல் பட்ஜெட்டில் (2014-15) பொதுத்துறை வங்கிகளில் மறுமூலதனமிடுவதற்கு 11,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக கணக்குக் காட்டப்பட்டது. இந்தத் தொகை அதற்கு முந்தைய பட்ஜெட்டைக் காட்டிலும் 2,800 கோடி ரூபாய் குறைவானது என்பது ஒருபுறமிருக்க, ஒதுக்கப்பட்ட நிதியும் பொதுத்துறை வங்கிகளுக்கு முழுமையாகத் தரப்படவில்லை. பட்ஜெட்டில் 11,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக அறிவித்துவிட்டு, வெறும் 6,990 கோடி ரூபாய்தான் பொதுத்துறை வங்கிகளுக்குத் தரப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட்டிலோ, கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியைவிட மிகக் குறைவாக 7,940 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டுள்ளது.

மோடி அரசுக்கு முந்தைய ஆட்சிக் காலங்களில் பொதுத்துறை வங்கிகளில் மறுமூலதனமிடுவதற்குக் குறைவாக நிதி ஒதுக்கப்பட்டாலும், அந்த நிதி அனைத்து வங்கிகளுக்கும் கிடைப்பதற்கு ஏற்றவாறு, அவற்றின் தேவை கணக்கில் கொள்ளப்பட்டு பகிர்ந்தளிக்கப்படும் நடைமுறை பின்பற்றப்பட்டது. ஆனால், மோடி அரசோ பொதுத்துறை வங்கிகளுக்கு நிதியைப் பகிர்ந்தளிப்பதற்கு அவற்றின் இலாபத்தை மையமாகக் கொண்ட புதிய விதியைப் புகுத்தியது. இந்த விதியும்கூட ஒரு நியாயமான முறையில் உருவாக்கப்படாமல், வாராக் கடனால் நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டுள்ள வங்கிகளைப் புறக்கணிக்கும் தீய நோக்கத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விதியின்படி 22 பொதுத்துறை வங்கிகளுள் 9 வங்கிகளுக்கு மட்டுமே மறுமூலதன நிதியைப் பெறும் தகுதியிருப்பதாகக் கூறப்பட்டு, மீதமுள்ள 13 வங்கிகளும் நட்டாற்றில் விடப்பட்டன.

அரசின் நிதி கிடைக்காத இந்த 13 வங்கிகளுள் ஏழு வங்கிகள் தங்களுக்குத் தேவையான மூலதனத்தைச் சந்தையிலிருந்து திரட்டிக் கொள்ள அனுமதித்திருப்பதன் மூலம், அவற்றைக் கொல்லைப்புற வழியில் தனியார்மயத்தை நோக்கித் தள்ளிவிட்டுள்ளது, மோடி அரசு. இப்படி அனுமதி அளிக்கப்பட்ட அதே சமயத்தில், ஏகாதிபத்திய தரநிர்ணய நிறுவனமான மூடி, சென்ட்ரல் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய இரண்டும் மூலதனமிடுவதற்கு ஏற்றவையல்ல என அறிவித்திருக்கிறது. அரசும் நிதி ஒதுக்காது, சந்தையிலிருந்தும் நிதி திரட்ட முடியாது என்ற நிலையில் இந்த இரண்டு வங்கிகளும் தமது கடையை மூடிவிட்டு, வேறொரு பெரிய வங்கியோடு இணைய வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளன.

ஒருபுறம் வாராக் கடன் நெருக்கடி, இன்னொருபுறம் அரசின் நிதியுதவி மறுக்கப்படுவது என்ற இரட்டை இடியைப் பொதுத்துறை வங்கிகள் சந்தித்து வரும் இந்த நிலையில்தான், ஏகாதிபத்திய நாடுகளாலும் பன்னாட்டு வங்கிகளாலும் வரையறுக்கப்பட்டுள்ள “பாசல் 3” விதிகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தையும் பொதுத்துறை வங்கிகள் எதிர்கொண்டுள்ளன. “பாசல் 3” விதிகள் அமலுக்கு வரும்பொழுது இந்திய வங்கிச் சட்டங்கள் செல்லாக்காசாகிவிடும்.

வங்கிகள் வழங்கும் கடன்களின் மதிப்புக்கு ஏற்ற விகிதத்தில் அவற்றின் மூலதன/சொத்து மதிப்பு இருக்க வேண்டும் என வரையறுக்கிறது, “பாசல் 3” விதிகள். இதன் பொருள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் புதிய பணக்கார நடுத்தர வர்க்கத்திற்கும் கடன்களை வாரிக் கொடுப்பதற்கு ஏற்றவாறு வங்கிகள் தமது மூலதனத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பது தவிர வேறல்ல. இதன்படி 2018-ம் ஆண்டுக்குள் மேலும் 2,40,000 கோடி ரூபாயை மூலதனமானத் திரட்டிக் கொள்ள வேண்டிய இக்கட்டை எதிர்கொண்டுள்ளன பொதுத்துறை வங்கிகள்.

அனைத்துப் பொதுத்துறை வங்கிகளையும் ஒரேவீச்சில் தனியார்மயத்தை நோக்கித் தள்ளிவிடுவதற்குக் கிடைத்த வாப்பாக “பாசல் 3” விதிகளைப் பயன்படுத்திக் கொள்ள முனைகிறது, மோடி அரசு. இந்தியத் தரகு முதலாளி வர்க்கம் செலுத்த வேண்டிய வாராக் கடன்களையும் மறுசீரமைக்கப்பட்ட கடன்களையும் வசூலித்தாலே பொதுத்துறை வங்கிகளின் மூலதனத் தேவையை ஈடுகட்டிவிட முடியும். ஆனால், அரசோ தரகு முதலாளிகள் மீது கைவைப்பதற்கு மாறாக, தன் வசமுள்ள பொதுத்துறை வங்கிகளின் பங்குகளைச் சந்தையில் விற்று “பாசல் 3” விதிகளை நிறைவேற்றத் திட்டமிடுகிறது.

மொத்தமுள்ள 27 பொதுத்துறை வங்கிகளுள் 22 பொதுத்துறை வங்கிகள் மைய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலும், 5 பொதுத்துறை வங்கிகள் இந்திய அரசு வங்கியின் (ஸ்டேட் பாங்கி ஆஃப் இந்தியா) கட்டுப்பாட்டிலும் உள்ளன. இந்த வங்கிகளில் 65 முதல் 80 சதவீதப் பங்குகள் மைய அரசு மற்றும் இந்திய அரசு வங்கிக்குச் சொந்தமாக உள்ளன. இதனைத் தடாலடியாக 52 சதவீதமாகக் குறைப்பதன் மூலம், 1,60,825 கோடி ரூபாயைச் சந்தையிலிருந்து திரட்டத் திட்டமிடும் மோடி அரசு, இது தொடர்பான அறிவிப்பையும் கடந்த டிசம்பரில் வெளியிட்டிருக்கிறது.

இதற்கு ஏற்ப பொதுத்துறை வங்கிகளின் தலைமைப் பதவிகளைத் தனியார்மய ஆதரவாளர்களைக் கொண்டு நிரப்பும் வேலையையும் தொடங்கிவிட்டது, மோடி அரசு. குறிப்பாக, பஞ்சாப் நேஷனல் வங்கி, பரோடா வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி மற்றும் இந்தியத் தொழில்வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் தலைமை நிர்வாக இயக்குநர் பதவிகளை நிரப்புவது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வேலைவாப்பு விளம்பரங்களில் கூறப்பட்டுள்ள தகுதிகள் பொதுத்துறை வங்கி அதிகாரிகளுக்குப் பொருந்தாதவாறு, கொட்டைபோட்ட பங்குச்சந்தை சூதாட்ட நிபுணர்களை, தனியார் வங்கியாளர்களை அப்பதவிகளில் உட்கார வைப்பதற்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளன.

விவசாய நிலங்களை அபகரிக்க நிலம் கையகப்படுத்தும் சட்டம், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்க தொழிலாளர் சீர்திருத்த சட்டம் என்ற வரிசையில் பொதுமக்களின் சேமிப்புகளைத் தங்கு தடையின்றிச் சூறையாடப் பொதுத்துறை வங்கிகளை முற்றிலுமாகத் தனியார்மயமாக்க முயலுகிறது, மோடி அரசு. விவசாயிகளாலும், தொழிலாளர்களாலும், வங்கி ஊழியர்களாலும் கடுமையாக எதிர்க்கப்படும் இவற்றைத்தான் மோடி அரசு ‘வளர்ச்சி’ என அழைக்கிறது.

– செல்வம்
_____________________________
புதிய ஜனநாயகம், ஜூலை 2015
_____________________________

அறிவுத்துறையினரை வதைக்கும் அரசு பயங்கரவாதம்!

2

புரட்சியாளர்களைச் சிறையில் அடைத்து, அடிப்படை வசதிகளையும் மருத்துவ உதவிகளையும் திட்டமிட்டே புறக்கணித்து நோயையும் மன உளைச்சலையும் தீவிரப்படுத்துவதன் மூலம் மரணத்துக்குள் தள்ளி, அவர்கள் இயற்கையாகவே மரணமடைந்ததாக் காட்டும் சதியை திட்டமிட்டு ஆட்சியாளர்கள் அரங்கேற்றத் துடிக்கின்றனர். முனைவர் ஜி.என்.சாய்பாபாவும், தோழர் கோபட் காந்தியும் அண்மையில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டங்களே இதனை நிரூபித்துக் காட்டுகின்றன.

முனைவர் ஜி.என்.சாய்பாபா
முனைவர் ஜி.என்.சாய்பாபா

புரட்சிகர அமைப்புகளின் உருவாக்கத்திலும் செயல்பாடுகளிலும் முக்கிய பங்கு வகித்ததோடு, காட்டு வேட்டை என்ற பெயரிலான பழங்குடியின மக்களின் மீதான அரசு பயங்கரவாத அடக்குமுறையை எதிர்த்து கருத்தியல் தளத்திலும் போராடி வந்த டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியரான முனைவர் ஜி.என்.சாய்பாபா, கடந்த 2014 மே 9 அன்று மகாராஷ்டிர மாநில பயங்கரவாதத் தடுப்புப் போலீசாரால் சட்டவிரோதமாகக் கடத்திச் செல்லப்பட்டார். பின்னர் மாவோயிஸ்டு பயங்கரவாதி என்று குற்றம் சாட்டப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் எனும் பயங்கரவாத “ஊபா” சட்டத்தின் கீழ் அவர் நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சக்கர நாற்காலியின் உதவியுடன் இயங்கிவரும் மாற்றுத் திறனாளியான அவர், இதய நோய், ரத்தக் கொதிப்பு, சிறுநீரகக் கோளாறு முதலானவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறை மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்து – மாத்திரைகளைக்கூட தராமல், சிறை அதிகாரிகள் அவரைப் புறக்கணித்திருக்கின்றனர். மருத்துவர் பரிந்துரைத்துள்ள உணவும் சிகிச்சையும் முறையாக அவருக்கு அளிக்கப்பட வேண்டுமென நாக்பூர் செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும், சிறை நிர்வாகம் அதை அலட்சியப்படுத்தியுள்ளது. தொடரும் இக்கொடுமைக்கெதிராக, கடந்த ஏப்ரல் 11 முதலாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்ட அவர், ஏப்ரல் 14 அன்று நினைவிழந்த நிலையில் நாக்பூர் மருத்துவமனையில் கிடத்தப்பட்டார். அங்கு அவருக்கு இதய நோக்கான ஆன்ஜியோகிராம் சோதனை செய்யப்பட்ட போதிலும், மருத்துவர்களை நிர்பந்தித்து சிகிச்சையை போலீசார் தாமதப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் சாய்பாபாவை மரணத்துக்குள் தள்ளுவதே அவர்களின் நோக்கமாக இருந்துள்ளது.

பல்வேறு மனித உரிமை அமைப்பினரும், அறிவுத்துறையினரும் வழக்குரைஞர்களும் இக்கொடுஞ்செயலை எதிர்த்தும், முனைவர் சாய்பாபாவை நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரியும் கடந்த மே மாதத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் தொடங்கினர். இதுபற்றிய பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மொகித் ஷா, ஏ.கே.மேனன் ஆகியோர் தாமே இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, மாநில அரசும் சிறைத்துறையும் சாய்பாபாவின் உடல் நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும், அவர் விருப்பப்படும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்குமாறும் ஜூன் 22 அன்று உத்தரவிட்டனர். அதன் பிறகு, மரணத்தின் விளிம்பில் நிற்கும் அவரது உடல்நிலை காரணமாக, நாக்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தால் தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட அவரது பிணை மனுவை மறு பரிசீலனை செய்ய வேண்டுமெனவும், இவரைப் பிணையில் விடுவிக்க வேண்டுமென்ற கருத்துக்கு தாங்கள் வந்துள்ளதாகவும், இதுபற்றி மாநில அரசு கருத்து கூறுமாறும் கடந்த ஜூன் 26 அன்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சாய்பாபா மூன்று மாத கால பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தோழர் கோபட் காந்தி
தோழர் கோபட் காந்தி

முனைவர் சாய்பாபாவைப் போலவே, மாவோயிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரான தோழர் கோபட் காந்தி, கடந்த 2009-ல் டெல்லியில் கைது செய்யப்பட்டு, இந்திய அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய தாக்குதல் நடவடிக்கைக்கு சதித் திட்டம் தீட்டினார் என்று பொய்வழக்கு சோடிக்கப்பட்டு “ஊபா” சட்டத்தின் கீழ் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே இதய நோய், இரத்த அழுத்த நோய், இடுப்பு எலும்பு நகர்வினால் ஏற்பட்ட பாதிப்பு, மூட்டுவலி, சிறுநீரக நோய் மற்றும் இதர தொல்லைகளால் அவதிப்படும் 68 வயதான அவருக்கு, கடந்த ஐந்தரை ஆண்டுகளாக படுக்கையும் கழிப்பறை வசதியும் செய்து தராமல், குறுகிய கால இடைவெளியில் துப்புரவு செயப்படாத வெவ்வேறு வார்டுகளுக்கு சிறிதும் மனிதாபிமானமின்றி சிறை அதிகாரிகள் அடுத்தடுத்து மாற்றியதன் காரணமாக, அவரது உடல்நிலை மோசமாகியது. அவருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு கடந்த மார்ச் மாதத்தில் டெல்லி செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், சிறை அதிகாரிகள் அதைத் தொடர்ந்து புறக்கணித்து வந்தனர்.

ஒரு அரசியல் கைதியைப் போலல்லாமல், தண்டிக்கப்பட்ட கிரிமினல் குற்றவாளியைப் போல நடத்தப்படுவதையும், சிறை நிர்வாகத்தின் அடிப்படை மனித உரிமை மீறல்களையும் எதிர்த்து அவர் கடந்த மே 30 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். 18 நாட்களாக அவர் தொடர்ந்து போராடிய நிலையில், நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் சிறை நிர்வாகம் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவும், அவரது நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கவும் ஜூன் 19 அன்று முன்வந்துள்ளது.

அரசாங்கத்தின் கருத்துக்கு மாறுபட்ட கருத்தை முன்வைத்து நாட்டின் மீதும் மக்களின் மீது அக்கறை கொண்டு இலட்சியத்துடன் செயல்படும் கோபட் காந்தி போன்ற அறிவுத்துறையினரும் புதிய சமுதாயச் சிந்தனையாளர்களும் சிறையில் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். சிறையில் ராஜ உபச்சாரம் செய்ததோடு, ஊழல் குற்றவாளி ஜெயலலிதா – சசிகலா கும்பலை விடுதலை செய்யும் அரசும் நீதித்துறையும் சிறைத்துறையும், மாற்றுத் திறனாளியான பேராசிரியர் சாய்பாபாவை கிஞ்சித்தும் மனிதாபிமானமின்றி சிறையலடைத்து வதைக்கிறது.

ஒருவர் மீது பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்டுவிட்டால், எல்லாவகை மனித உரிமை மீறல்களும் அவமானப்படுத்தல்களும் நியாயப்படுத்தப்படுகின்றன. பா.ஜ.க.வின் மைய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி சட்ட அமைச்சர் ஜிதேந்திர சிங் தோமர், மகாராஷ்டிரா கல்வி அமைச்சர் வினோத் டாங்டே, கோவா பொதுப்பணித்துறை அமைச்சர் சுவின் தவாலிகர் ஆகியோர் பட்டபடிப்பு சான்றிதழ் மோசடி செய்து அமைச்சராகி நாட்டை வழிநடத்துகிறார்கள். ஆனால் கல்வியாளர்களும் புரட்சிகர சிந்தனையாளர்களும் அரசு பயங்கரவாதத்தை எதிர்ப்போரும் கைது செய்யப்பட்டு சிறையில் வதைபட்டுக் கொண்டிருக்கின்றனர். அவசர நிலை பாசிச ஆட்சிக் காலத்தைவிட கொடுமையான இருண்ட காலத்தில் நாடும் மக்களும் தள்ளப்பட்டிருப்பதையே இது மீண்டும் நிரூபித்துக் காட்டுகிறது.

– குமார்
_____________________________
புதிய ஜனநாயகம், ஜூலை 2015
_____________________________

சின்ன மோடி பெரிய மோடி

1

லித் மோடி – சுஷ்மா சுவராஜ், லலித் மோடி – வசுந்தரா ராஜே உறவு விவகாரங்களில் அம்பலத்துக்கு வந்திருக்கும் திரைமறைவு இரகசியங்கள் பா.ஜ.க.வோடு, ஊழலுக்கு எதிரானவராகவும், வலிமையான தலைவராகவும் முன்நிறுத்தப்பட்ட நரேந்திர மோடியின் டவுசரையும் உருவிவிட்டன. லலித் மோடி, சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே – இந்த மூவரில் யார் மீது நடவடிக்கை எடுத்தாலும், அது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொரிந்து கொண்டது போன்ற நிலையை உருவாக்கிவிடும் என்ற நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டுவிட்ட மோடி, வழக்கமாக காது வரை கிழியும் தன் வாய்க்குப் பூட்டுப்போட்டு “மன்மோகன் சிங்” ஆகிவிட்டார். அவரது அமைச்சர்களெல்லாம் ஊடகங்களின் கண்ணில் படாமல் தப்பித்து ஓடுகின்றனர்.

லலித் மோடி, சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே.
அப்பாடக்கராக முன்நிறுத்தப்பட்ட மோடியின் டவுசரை உருவிய மும்மூர்த்திகள் : லலித் மோடி, சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே.

“பொதுப் பணத்தை நானும் தின்னமாட்டேன், மற்றவர்களையும் தின்னவிட மாட்டேன்” என்று ஊழலுக்கு எதிராக உதார்விட்டு ஆட்சிக்கு வந்தவர் மோடி. ஆனால், அவரது அமைச்சரே – சுஷ்மா சுவராஜ் – பல்லாயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு, மோசடிகளில் ஈடுபட்ட குற்றவாளிக்கு நெருக்கமாக இருந்து உதவி புரிந்திருக்கிறார். “நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை நூறு நாட்களில் மீட்டுக் கொண்டு வருவோம்” எனச் சவடால் அடித்த மோடி, கருப்புப்பணக் குற்றவாளியான மோடியைக் காப்பாற்றுவதா, தனது அமைச்சர்களைக் காப்பாற்றுவதா, காற்றுப் போன பலூனாகிவிட்ட தனது இமேஜைக் காப்பாற்றுவதா என்று தெரியாத நகைக்கத்தக்க கேவலமான நிலைக்கு ஆளாகியிருக்கிறார்.

***

லித் மோடியின் மீது 16 பொருளாதாரக் குற்றங்கள் நிலுவையில் இருப்பதால், அவரது கடவுச்சீட்டை வெளியுறவுத்துறை அமைச்சகம் (காங்கிரசு ஆட்சியின் போது) முடக்கிவைத்திருப்பதை எதிர்த்து லலித் மோடி தொடுத்த வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கின்ற அதே நேரத்தில், தனது அமைச்சகத்தின் நிலைக்கு எதிராகவும், வெளியுறவுத் துறை செயலர் சுஜாதா சிங்கிற்குத் தெரியாமலும், லலித் மோடிக்கு ஆதரவாக பிரிட்டிஷ் அரசிடம் பரிந்துரை செய்திருக்கிறார். மேலும், இந்தியாவிற்கான பிரிட்டன் தூதரைத் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அழைத்து லலித் மோடிக்கு உதவும்படிக் கோரியிருக்கிறார். இது குறித்து நிதியமைச்சருக்கும் சுஷ்மா தெரிவிக்கவில்லை. காரணம், சுஷ்மாவுக்கும் அருண் ஜெட்லிக்குமிடையிலான கோஷ்டி தகராறு மட்டுமல்ல, ஐ.பி.எல். இலிருந்து லலித் மோடியை விரட்டிய முக்கிய எதிரி அருண் ஜெட்லி என்பதும்தான்.

லலித் மோடி, சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே.லலித் மோடிக்கு உதவியது குறித்து கடந்த ஒரு வருடமாக வாய் திறக்காமலிருந்த சுஷ்மா, பூனைக்குட்டி வெளியே வந்தவுடன், “லலித் மோடி மனைவிக்கு போர்ச்சுகல் மருத்துவமனையில் புற்றுநோ அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததாகவும், அதற்கு லலித் மோடி மருத்துவமனைக்கு நேரில் சென்று கையெழுத்திட வேண்டியிருந்ததால், மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவியைச் செய்ததாகவும்” விளக்கம் அளித்திருக்கிறார். ஆனால், இந்த விளக்கம் வெளிவந்தவுடனேயே இது பொய் என்பது அம்பலமாகிவிட்டது.  மனைவியின் அறுவை சிகிச்சைக்கு கணவனின் கையெழுத்து தேவை என்று போர்ச்சுகல் நாட்டு சட்டங்கள் கூறவில்லை. கையெழுத்துப் போடுபவர்கள் அதனை இணையத்தின் வழியாக அனுப்பலாம் என்றும் அந்நாட்டின் விதிகள் அனுமதிக்கின்றன என்ற விவரங்களை ஊடகங்கள் அம்பலப்படுத்தி விட்டன. மேலும் லலித் மோடிக்கு சுஷ்மா செய்திருக்கும் ‘மனிதாபிமான’ உதவியின் விளைவாக, போர்ச்சுகலுக்கு சென்று வருவதற்கு மட்டுமல்ல, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உலகின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் சென்று வருவதற்கான பயண ஆவணம் பிரிட்டிஷ் அரசால் லலித் மோடிக்கு வழங்கப்பட்டிருப்பதும் அம்பலமாகியிருக்கிறது.

மனைவியின் அறுவை சிகிச்சை நடந்ததாகக் கூறப்பட்ட மூன்றாவது நாளே, போர்ச்சுகலுக்கு அருகிலுள்ள இபிஸா என்ற உல்லாசத் தீவில் தனது குடும்பத்தாரோடு கேளிக்கை விருந்தைக் கொண்டாடியிருக்கிறார் லலித் மோடி. இதுமட்டுமல்ல, இங்கிலாந்திலிருந்து வெளியேற அனுமதி கிடைத்த இந்த ஓராண்டுக்குள் லலித் மோடி உலகெங்குமுள்ள 25-க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களுக்கும் தீவுகளுக்கும் சென்றிருக்கிறார். அங்கெல்லாம் கேளிக்கை விருந்துகளில் கும்மாளமடித்திருக்கிறார்; வியாபார பேரங்களை நடத்தி முடித்திருக்கிறார். மேற்கண்ட காரியங்களுக்காக இங்கிலாந்திலிருந்து வெளியேறுவதற்கு லலித் மோடிக்கு அனுமதி வாங்கிக் கொடுப்பதுதான் சுஷ்மா சுவராஜின் நோக்கமென்பதும், புற்றுநோய் என்பதெல்லாம் மட்டரகமான செண்டிமெண்ட் நாடகம் என்பதும் அம்பலமாகியிருக்கின்றன.

விசயம் இத்தோடு முடியவில்லை. மேற்கண்ட மனிதாபிமான உதவியின் பின்புலமும் அம்பலமாகியிருக்கிறது. சுஷ்மாவின் உறவினர் ஒருவருக்கு இலண்டனில் உள்ள ஸஸ்ஸெக்ஸ் கல்லூரியில் இடம் வாங்கித் தந்திருக்கிறார் லலித் மோடி. சுஷ்மா சுவராஜின் கணவர் சுவராஜ் கௌசல் கடந்த 22 ஆண்டுகளாக லலித் மோடியின் வழக்குரைஞர். சுஷ்மாவின் கணவரும் மகள் பான்சுரி சுவராஜும் லலித் மோடிக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் கடவுச்சீட்டு முடக்கப்பட்ட வழக்கில் டில்லி உயர்நீதிமன்றத்தில் வாதாடியவர்கள். இன்டோபில் என்ற தனது நிறுவனத்தின் இயக்குநராகப் பதவி ஏற்குமாறு ஏப்ரல்-15, 2015 அன்று சுஷ்மாவின் கணவருக்கு லலித் மோடி கடிதம் அனுப்பியிருக்கிறார். தான் அந்தப் பதவியை வேண்டாமென்று மறுத்துவிட்டதாக தற்போது சுவராஜ் கவுசல் விளக்கமளித்த போதிலும், லலித் மோடிக்கும் சுஷ்மாவுக்கும் இடையிலான கொடுக்கல் – வாங்கல் உறவுகளை இவை அம்பலமாக்குகின்றன.

***

சுஷ்மா – லலித் மோடிக்கு இடையேயான உறவைவிட, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கும் லலித் மோடிக்கும் இடையேயான உறவு அசாதாரணமானது. பனியா தரகு முதலாளியான கே.கே.மோடியின் மகனும், படிப்புக்காக அமெரிக்கா அனுப்பப்பட்டு அங்கே போதை மருந்து வழக்கில் சிக்கி, தந்தையின் செல்வாக்கினால் இந்தியாவுக்குத் தப்பித்து வந்தவனுமான, பணக்கார வீட்டு உருப்படாத பிள்ளைதான் லலித் மோடி. அடையாளம் தெரியாமல் கிடந்த லலித் மோடி இந்திய கிரிக்கெட் அரங்கையே ஆட்டிப்படைக்கும் அளவிற்கு வளர்ந்ததற்கு அடித்தளமிட்டுக் கொடுத்ததே வசுந்தரா ராஜேதான். பத்தாண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநில முதல்வராக இருந்த வசுந்தரா ராஜே, ஒரு அவசரச் சட்டத்தின் மூலம் அம்மாநில கிரிக்கெட் சங்கத்தின் தேர்தல் விதிகளை மாற்றி, 2005-ல் லலித் மோடியை அதன் தலைவராக்கினார். சூப்பர் சீஃப் மினிஸ்டர் என்று ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் கூறும் அளவுக்கு அரசு நிர்வாகத்தில் மட்டுமின்றி, ராஜஸ்தான் பா.ஜ.க. விலும் மோடியின் அதிகாரம் கொடி கட்டிப் பறந்தது.

இதனைத் தொடர்ந்து லலித் மோடி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் பதவியைப் பெற்றதும், அதற்கு இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன், காங்கிரசின் ராஜீவ் சுக்லா, பா.ஜ.க.வின் அருண் ஜெட்லி மற்றும் சரத் பவார் உதவியதும், இந்த கோஷ்டி இந்திய கிரிக்கெட் வாரியத்தில் தமக்கு எதிரான டால்மியா கோஷ்டியைத் தோற்கடித்ததும், 2008-ல் லலித் மோடி ஐ.பி.எல். என்ற பெயரில் மாபெரும் சூதாட்டத்தை அறிமுகப்படுத்தியதும், ஒரு கட்டத்தில் சீனிவாசன்-லலித் மோடி கோஷ்டிகளுக்குள் தகராறு ஏற்பட்டு, லலித் மோடி ஓரங்கட்டப்பட்டு, அவரது தில்லுமுல்லுகளும் மோசடிகளும் அம்பலப்படுத்தப்பட்டதும், காங்கிரசு ஆட்சியில் மோடியின் மீது அந்நியச் செலாவணி மோசடி வழக்குகள் பாய்ந்ததும், மோடி நாட்டைவிட்டுத் தப்பியோடியதும், அருண் ஜெட்லி அங்கம் வகித்த கமிட்டியே லலித் மோடிக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ஆயுட்காலத் தடை விதித்ததும் இந்திய கிரிக்கெட் சூதாட்ட வரலாற்றில் கல்வெட்டுகளாகப் பதிவாகியிருக்கின்றன.

ஊழல் –
மோடியின் ஸ்டைல்!

த்தனை குறைகள் இருந்த போதிலும், மோடியின் ஓராண்டு ஆட்சி ஊழலற்ற ஆட்சி என்று கார்ப்பரேட் முதலாளிகள் கொண்டாடுகின்றனர். அவர்கள் கொண்டாடக் காரணம் இருக்கிறது. இறக்குமதிப் பொருட்களின் மதிப்பைக் கூட்டி பல ஆயிரம் கோடி மோசடி செய்ததாக அதானி மீது தொடரப்பட்ட வழக்கு நிதியமைச்சகத்தில் தூங்குகிறது. சில ஆயிரம் கோடி மதிப்புள்ள வர்த்தக சாம்ராச்சியத்தை நடத்தும் பாபா ராம்தேவ் மீது 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கத்தக்க கருப்புப்பண வழக்கு இருந்தது. அதனை மோடி அரசு ரத்து செய்து விட்டது. அலைக்கற்றை வழக்கில் ராசா மீதான வழக்கு தீவிரமாக நடத்தப்படுகின்ற அதே நேரத்தில், அலைக்கற்றை விற்பனையிலும், பின்னர் நிலக்கரி வயல் ஏலத்திலும் ஆதாயமடைந்த தரகு முதலாளிகள் பலர் மீதான கருப்புப் பண வழக்குகள் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. பொதுத்துறை வங்கிகளுடைய வாராக்கடன் 5 இலட்சம் கோடியில் பெரும்பகுதியைத் தரவேண்டிய 12 தரகு முதலாளிகளின் பிடியில்தான் சாலை, மின்சாரம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட கேந்திரமான பல துறைகள் இருக்கின்றன. இந்த ஊழல்களுக்குப் பொறுப்பான குற்றவாளி சின்ன மோடி அல்ல, பெரிய மோடி.

லலித் மோடியுடனான இத்தகைய நீண்டகால உறவின் அடிப்படையில்தான் மோடி இலண்டனில் தங்குவதற்கு அனுமதி கேட்டு பிரட்டிஷ் அரசுக்கு விண்ணப்பம் செய்தபொழுது, அவருக்குச் சாட்சியம் அளித்து பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறார், வசுந்தரா ராஜே. இந்தப் பிரமாண பத்திரத்தை அவர் ராஜஸ்தான் மாநில எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் பிரிட்டிஷ் அரசிடம் தாக்கல் செய்ததோடு, இது இந்திய அரசுக்குத் தெரியக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். லலித் மோடி இலண்டனை விட்டு வெளியேற முடியாத நிலையில் இருந்தபொழுது, ராஜே அவரது மனைவியைப் புற்றுநோய் சிகிச்சைக்காக போர்ச்சுகலுக்கும் அழைத்துச் சென்றிருக்கிறார். அடுத்த இரண்டு மாதங்களுக்குள், ராஜஸ்தான் மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் சிகிச்சை வழங்குவதற்காக என்று கூறிக்கொண்டு, மோடிக்கு சிகிச்சை அளித்த போர்ச்சுகல் மருத்துவமனை ஜெய்ப்பூரில் ஒரு கிளையைத் தொடங்குவதற்கு 96,000 சதுரமீட்டர் நிலத்தை ஒதுக்கியிருக்கிறார் ராஜே. அதே சமயத்தில் சிகரெட் மீது முந்தைய காங்கிரசு அரசு விதித்திருந்த வரியை 20% குறைத்து, மோடியின் சிகரெட் கம்பெனிக்கு கோடிக்கணக்கில் ஆதாயத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறார்.

வசுந்தரா ராஜேயின் மகனும் பா.ஜ.க.வின் எம்.பி.யுமான துஷ்யந்த், தனது மனைவியைப் பங்குதாரராகக் கொண்டு நிகந்த் ஹெரிடேஜ் என்ற ஆடம்பர விடுதியை நடத்தி வருகிறார். இது ஜெயாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் காட்டப்பட்ட உப்புமா நிறுவனங்களைப் போன்றது. இந்த நிறுவனத்தில் வரவு-செலவு எதுவுமே நடந்ததில்லை எனக் கூறப்படுகிறது. இப்படிபட்ட உப்புமா நிறுவனத்தின் 10 ரூபாய் பெறுமான பங்கை 96,160 ரூபாய் கொடுத்து வாங்கி, அந்நிறுவனத்தில் 11 கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருக்கிறார், லலித் மோடி. இந்த முதலீட்டிற்கான பணம் கருப்புப் பண சோர்க்கமான மொரிஷியஸிலிருந்து வந்திருக்கிறது. இது மட்டுமல்ல, அரசுக்குச் சொந்தமான தோல்பூர் அரண்மனை கட்டிடத்தை வசுந்தராவின் மகனும் லலித் மோடியும் தங்களுடையதாக்கிக் கொண்டு விட்டனர். ராஜஸ்தானில் இவர்கள் நடத்தியிருக்கும் கூட்டுக்கொள்ளையின் ஒரு சிறிய பகுதிதான் இது என்று தெரிகிறது.

சுவராஜ் கவுசல், பான்சுரி சுவராஜ், துஷ்யந்த்
சுஷ்மா சுவராஜின் கணவரும் லலித் மோடியின் வழக்குரைஞருமான சுவராஜ் கௌசல்; லலித் மோடியின் கடவுச்சீட்டு வழக்கில் அவருக்காக வாதாடிய சுஷ்மாவின் மகள் பான்சுரி சுவராஜ்; லலித் மோடியின் வியாபாரக் கூட்டாளியும் வசுரந்தரா ராஜேயின் மகனும் பா.ஜ.க எம்.பி.யுமான துஷ்யந்த்.

கிரிக்கெட் தொடர்பான விவகாரங்களில் மட்டும், லலித் மோடி மீது அந்நியச் செலாவணி மோசடி உள்ளிட்டு 16 பொருளாதாரக் குற்றங்கள் விசாரணையில் உள்ளன; 1,680 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக அவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டிருக்கிறது. மோசடிக் குற்றத்துக்காக சென்னையில் ஒரு கிரிமினல் வழக்கு 2010-இல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எல்லாக் கட்சிகளிலும் மோடிக்கு கூட்டாளிகள் இருப்பதாலும், இந்த கொள்ளைக்கூட்ட வலைப்பின்னலில் அங்கம் வகிக்கும் காங்கிரசு, பா.ஜ.க. தலைவர்கள் முதல் பவார் உள்ளிட்ட அரசியல்வாதிகள், பாலிவுட் நடிகர்கள், தரகு முதலாளிகள், கிரிக்கெட் பிரபலங்கள் போன்ற பலரும் இந்த விவகாரம் கிளறப்படுவதை விரும்பவில்லை என்பதாலும்தான் மோடிக்கு எதிரான குற்றங்கள் எதுவும் விசாரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன.

இப்படிபட்ட குற்றவாளிக்குத்தான் சுஷ்மா சுவராஜும், வசுந்தரா ராஜேயும் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி உதவியிருக்கிறார்கள். இந்த அதிகார துஷ்பிரயோகம்தான் 2 ஜி ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொண்டுவரும் ஆ.ராசாவின் மீது உள்ள குற்றச்சாட்டு, ராசா கையூட்டு வாங்கினார் என்பதல்ல. ஆ. ராசா தனது அதிகாரத்தைப் பயன்படுத்திக் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் அலைக்கற்றையை ஏலம் எடுக்க உதவினார் என்பதுதான். ஆனால் சுஷ்மா, வசுந்தரா ராஜேவுக்கு எதிரான குற்றங்களோ மிகக்கடுமையானவை. ஒவ்வொரு வழக்கிலும் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கத்தக்க கருப்புப்பணத்தை வெள்ளையாக்கும் குற்றங்கள் பலவற்றை செய்து விட்டு, எல்லா கட்சிகளிலும் அதிகார வர்க்கத்திலும் தனக்கு இருக்கும் செல்வாக்கினால் தண்டிக்கப்படாமல் தப்பி வரும் ஒரு கிரிமினலுக்கு இவர்கள் உதவியிருக்கிறார்கள். இந்த உதவிக்காக, சுஷ்மாவும் ராஜேவும் மோடியின் மூலம் பெற்றிருக்கும் ஆதாயங்களும் நாள்தோறும் அம்பலமாகி வருகின்றன.

ஆனாலும், ஆ.ராசாவுக்கு எதிராகப் பெருங்கூச்சல் போட்ட பார்ப்பன இந்து மதவெறிக் கும்பல் இவர்களுக்கு வக்கீலாக நின்று வாதாடுகிறது. ஆர்.எஸ்.எஸ். பத்திரிகை தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்ம ராவ், சுஷ்மா சுவராஜின் ‘மனிதாபிமான உதவி’யை நியாயப்படுத்துகிறார். லலித் மோடி மீதான வழக்குகள் கிடப்பில் போடப்பட்டிருப்பதை சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டு, மோடி மீது நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டிருக்கிறதா, அவர் தேடப்படும் குற்றவாளியா என்று லலித் மோடியின் வக்கீலாகவே கேள்வி எழுப்புகிறார்கள் பா.ஜ.க. வின் பிரதிநிதிகள்.

***

அருண் ஜெட்லி, சீனிவாசன், ராஜீவ் சுக்லா, சரத் பவார்.
ஐ.பி.எல் போட்டிகளைத் தொடங்கியதில் லலித் மோடிக்கு ஆதரவாக நின்ற பா.ஜ.க.வின் அருண் ஜெட்லி, இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன், காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ராஜீவ் சுக்லா மற்றும் தேசியவாத காங்கிரசு கட்சியின் நிறுவனத் தலைவர் சரத் பவார்.

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மற்றும் மோடி அரசு – இம்மூன்றும் ஒரே குரலில் சுஷ்மாவையும் ராஜேவையும் ஆதரிப்பதாகக் காட்டிக் கொண்டாலும், நாளுக்கொன்றாக வெளிவரும் ரகசியங்களும் சங்க பரிவாரத்தை பீதிக்குள்ளாக்குகின்றன. பிள்ளையைக் கிள்ளிவிட்டது யார் என்ற கேள்வி பா.ஜ.க.விற்குள்ளேயே எழுப்பப்படுகிறது. டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்க விவகாரத்தில் அருண் ஜெட்லியிடம் மண்ணைக் கவ்விய முன்னாள் கிரிக்கெட் வீரரும் பா.ஜ.க.வின் தர்பங்கா தொகுதி எம்.பி.யுமான கீர்த்தி ஆசாத், “இவை போன்ற பிரச்சினைகளைக் கட்சிக்குள் ஏற்படுத்தி, மோடி அரசுக்குத் தலைவலி ஏற்படுத்தி வருவது அருண் ஜெட்லிதான். அவர் தன்னை மிஞ்சி யாராவது கட்சியிலும் ஆட்சியிலும் வளர்ந்துவிட்டால், அவர்களைக் காலி செய்ய தந்திரமான காரியங்களைச் செய்யத் தொடங்கி விடுவார்” என வெளிப்படையாகக் குற்றஞ்சுமத்தியிருப்பதோடு, அருண் ஜெட்லியைப் புல்தரையில் மறைந்திருக்கும் பாம்பு எனச் சாடியிருக்கிறார்.

இது மட்டுமின்றி, “ஐ.பி.எல். போட்டிகளை ஆப்பிரிக்காவுக்குக் கொண்டுபோனதில் நடந்துள்ள முறைகேடுகளுக்காக லலித் மோடியைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியுள்ள அமைப்புகள், ஐ.பி.எல். போட்டிகளை ஆப்பிரிக்காவில் நடத்த அனுமதி கொடுத்த இந்திய கிரிக்கெட் வாரிய கமிட்டியில் உறுப்பினர்களாக இருந்த அருண் ஜெட்லியை, சரத் பவாரை, ராஜீவ் சுக்லாவை ஏன் விசாரணைக்கு உட்படுத்தவில்லை?” எனக் கேட்டு, இந்த விவகாரத்தின் இன்னொரு பக்கத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

ஸ்மிருதி இரானி, பங்கஜா முண்டே
கல்வித் தகுதி மோசடி வழக்கில் சிக்கிக் கொண்டுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் 200 கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கிக் கொண்டுள்ள மகாராஷ்டிரா மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் பங்கஜா முண்டே

சுஷ்மா, வசுந்தரா ராஜே தொடர்பான செய்தியை வெளியிட்ட இங்கிலாந்தின் சண்டே டைம்ஸ் பத்திரிகை ரூபர்ட் முர்டோக்கிற்கு சொந்தமானது என்றும், ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமையைத் தனக்குத் தரவில்லை என்பதற்குப் பழிவாங்கத்தான் முர்டோக் இந்த விவகாரத்தை வேண்டுமென்றே கிளறியிருப்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார் லலித் மோடி.

“காங்கிரசு ஆட்சியில் அமைச்சராக இருந்த சசிதரூர் தனது மனைவி சுனந்தா பெயரில் ஐ.பி.எல். கொச்சி அணியை ஏலம் எடுத்ததை அன்று நான் அம்பலப்படுத்தியதனால்தான், அன்று நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி அடுக்கடுக்காக என்மீது வழக்கு போட்டார். தற்பொழுது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் தனிச் செயலர் ஓமிதா பாலுக்கு சர்வதேச ஹவாலா கடத்தல் பேர்வழி நாக்பாலுடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இந்தியாவிலிருந்து கருப்புப் பணம் வெளியேறி, அது சுவிஸ் வங்கிகளில் போடப்படுவதற்கு நிதியமைச்சகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளே உடந்தையாக உள்ளனர். மறுக்க முடியுமா?” என்று இன்னொரு குண்டையும் வீசியிருக்கிறார் லலித் மோடி.

சுஷ்மா-லலித் மோடி உறவு அம்பலமான அடுத்த நாளிலேயே, லலித் மோடிக்கும் வசுந்தரா ராஜேக்கும் இடையேயான முப்பது ஆண்டு கால நட்பும், வர்த்தக உறவுகளும் வெளிச்சத்திற்கு வந்தன. இதனைத் தொடர்ந்து லலித் மோடியைத் தேசியவாத காங்கிரசு கட்சித் தலைவர் சரத் பவார், இந்தி திரைப்பட நடிகர் ஷாருக் கான், மும்ப போலீசு கமிஷனர் ராகேஷ் மிஷ்ரா உள்ளிட்டுப் பலரும் இலண்டனில் சந்தித்திருப்பது வெளியானது. லலித் மோடிக்கு ஆதரவாக பத்திரிகையாளர் பிரபு சாவ்லா, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போன்றோர் பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்திருப்பதும் அம்பலமாகியிருக்கிறது.

ஒருவகையில் லலித் மோடியை ஜெயலலிதாவுடன் ஒப்பிடலாம். கட்சிகள், ஊடகங்கள், அதிகார வர்க்கம், நீதித்துறை ஆகிய அனைத்திலும் உள்ள பிரமுகர்களைத் தனக்காக அணிவகுத்து நிற்க வைத்திருக்கிறார். தன் மீது தாக்குதல் வரும் பட்சத்தில் யாருடைய இடுப்புத் துணியை உருவுவதற்கும் அவர் தயங்கமாட்டார்.

***

03-modi-captionலித் மோடி மலத்தொட்டிக்குள் கிடக்கும் குண்டு. அவர் மீதான விசாரணையை மன்மோகன் சிங் ஆட்சியும், மோடி ஆட்சியும் கிடப்பில் போட்டிருப்பதற்கு தனிப்பட்ட காரணங்கள் பல இருக்கக் கூடும். எனினும், அந்த குண்டு வெடித்தால் அத்தனை பேரும் மக்கள் மத்தியில் நாறி விடுவோம் என்ற காரணத்தினால், ‘பொது நன்மை கருதியே’ யாரும் அவரை சீண்டத் தயங்குகிறார்கள். கெடு வாய்ப்பாக சின்ன மோடி என்ற இந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் பொறுப்பு பெரிய மோடியின் தலையில் விடிந்துவிட்டது.

பிரதமர் பதவியையும் கட்சித்தலைவர் பதவியையும் சதித்தனமாக கைப்பற்றியிருக்கும் மோடி – அமித் ஷா கும்பல், ஒரே ஆண்டில் இப்படி சிக்கித் தவிப்பது குறித்து காங்கிரசை விடவும் மகிழ்ச்சியில் திளைப்பவர்கள் பா.ஜ.க. தலைவர்களாகத்தான் இருப்பர் என்பதில் ஐயமில்லை. அத்வானி, ராஜ்நாத்சிங், சுஷ்மா, சவுகான், ராஜே போன்ற பலரும் தங்களது எதிரிகள் என்று மோடி-ஷா கும்பலுக்கு தெரியும். ராஜஸ்தான் மாநில பா.ஜ.க.வைத் தன் செல்வாக்கின் கீழ் வைத்துக் கொண்டுள்ள வசுந்தரா ராஜே, “நானாகப் பதவி விலக மாட்டேன்” என்று மோடிக்கு தண்ணி காட்டுகிறார். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ராஜேவை நீக்கலாம். ஆனால் அவர் மோடிக்கு வெளிப்படையான சவாலாகி விடுவார். கட்சியும் கலகலத்து விடும்.

ராஜேவை நீக்கினால் சுஷ்மாவை நீக்காமலிருக்க முடியாது. இரண்டு பேரை மட்டும் நீக்கினால், பிறகு வியாபம் ஊழல் சவுகான், மகாராஷ்டிராவில் பங்கஜா முண்டே என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இராணி, மகாராஷ்டிரா கல்வியமைச்சர் வினோத் டாவ்டே, கோவா பொதுப்பணித்துறை அமைச்சர் சுவின் தவாலிகர் ஆகிய மூவரும் தமது கல்வித் தகுதி குறித்து பொய்த்தகவல்களையும், போலிச்சான்றிதழ்களையும் தந்திருப்பது அம்பலமான பிறகும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. காங்கிரசு கூட்டணி ஆட்சியிலாவது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆ.ராசா, பவன் குமார் பன்சால், அஸ்வின் குமார் ஆகியோரை நீக்க முடிந்தது. மோடியின் தனிப்பெரும்பான்மை ஆட்சியோ தடுமாறுகிறது. ஏற்கெனவே மோடியைப் பயந்தாங்கொள்ளி என்று காங்கிரசு கேலி பேசுகிறது. கட்சிக்குள்ளேயும் எதிர்ப்புக் குரல்கள் கிளம்புகின்றன.

ல. மோடியை இலண்டனுக்குத் துரத்திய ந.மோடி!

ன்று லண்டனில் இருக்கும் சின்ன மோடியைப் பிடித்துக் கொண்டுவர வேண்டிய பொறுப்பு பெரிய மோடியின் தலையில் விழுந்திருக்கிறது. ஆனால், லலித் மோடி இலண்டனுக்கு ஓட நேர்ந்ததற்கு காரணமே நரேந்திர மோடிதான் என்ற விவகாரம் எத்தனை பேருக்குத் தெரியும்?

2008-ல் ஐ.பி.எல். சூதாட்டம் லலித் மோடியால் தொடங்கப்பட்டு, ஷாருக்கான், பிரீத்தி ஜிந்தா போன்றோரெல்லாம் ஆளுக்கு ஒரு டீமை விலைக்கு வாங்கி கம்பீரமாக உலா வந்து கொண்டிருந்த நிலையில், தானும் ஒரு டீமை விலைக்கு வாங்கவேண்டுமென அதானி ஆசைப்பட்டார். எனவே, நரேந்திர மோடியும் அவ்வண்ணமே ஆசைப்பட்டார். ந.மோடிக்கு ஒரு அணியை வாங்கித்தருவதாக ல.மோடி வாக்களித்திருந்த நிலையில், அதனை கொச்சி அணி என்ற பெயரில் லவுட்டிக் கொண்டு போய் விட்டார் சுனந்தா புஷ்கர். ஆத்திரமடைந்த ல.மோடி, ஐ.பி.எல். நிர்வாகக் குழுவின் விதிகளை மீறி, ஏலம் தொடர்பான உள் விவகாரங்களைப் போட்டு உடைத்ததுடன், புஷ்கருக்குப் பின்னால் இருந்தது அன்றைய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசிதரூர் என்றும் குற்றம் சாட்டினார். சசி தரூர் பதவி இழந்தார். அதன் தொடர் விளைவாக லலித் மோடி ஐ.பி.எல் இலிருந்து வெளியேற்றப்பட்டார். அதானி விவகாரத்துக்காக அன்று ல.மோடி மீது நடவடிக்கை எடுத்தவர்களில் முக்கியமானவர் அருண் ஜெட்லி.

தோல்வியைச் சீரணிக்க முடியாதவரான அன்றைய குஜராத் முதல்வர் ந.மோடி, சசி தரூரின் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள கேர்ல் பிரண்டு என்று சுனந்தா புஷ்கரை கீழ்த்தரமான முறையில் ஏசினார். இன்று சுனந்தா புஷ்கரின் சந்தேக மரணத்துக்காக சசிதரூர் விசாரிக்கப்படுகிறார்.

பெரிய மோடியின் ஆசையை நிறைவேற்ற முனைந்து, அதன் விளைவாக பதவி இழந்து இலண்டனுக்கு ஓட நேர்ந்த சின்ன மோடியின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய துர்ப்பாக்கியமான சூழலில் இருக்கிறார் பெரிய மோடி.

அலட்சியப்படுத்தப்பட்டு குமுறிக் கொண்டிருந்த அத்வானி அதனை தொடங்கிவைக்கிறார். தன் மீது ஹவாலா குற்றச்சாட்டு வந்தபோது, தான் உடனே ராஜினாமா செய்ததை நினைவு கூர்ந்து, “பொதுவாழ்வில் நேர்மையைக் கடைப்பிடிப்பது அவசியம்” என்று கூறி, மோடிக்கும் தன்னைக் கைவிட்ட ஆர்.எஸ்.எஸ். தலைமைக்கும் சேர்த்து அல்லையில் ஒரு குத்து குத்துகிறார். மோடியை பேசச்சொல், அமித் ஷாவைப் பேசச்சொல் என்று ஆளாளுக்கு தொலைக்காட்சிகளில் சவால் விடுகிறார்கள்.

இதற்கு மேலும் பேசாமலிருக்க முடியாது, பேசவும் முடியாது என்ற நிலையில் இருக்கும் சங்க பரிவாரத்தின் தலைமை, கோவிந்தாச்சார்யாவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு தனது மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறது. “சுஷ்மாவும் ராஜேவும் ராஜினாமா செய்யவேண்டும். இந்த அரசு மதிப்பீடுகளை இழந்து விட்டது. தன்னுடைய கவுரவம் போக்கொண்டிருக்கிறது என்பதை நரேந்திர மோடி உணரவேண்டும்” என்று பேட்டி கொடுக்கிறார் கோவிந்தாச்சார்யா.

ஊழல் இல்லை என்பதுதான் ஒரு ஆண்டு ஆட்சியின் முக்கிய சாதனை என்று சொல்லி வாய் மூடுவதற்குள் கிளம்பி விட்டது சின்ன மோடி விவகாரம். பதினைந்து நாட்களுக்கும் மேலாக எல்லாத் திசைகளிலிருந்தும் அன்றாடம் அடி விழுந்து கொண்டே இருக்கிறது. யார் மீது யார் கல்வீசினாலும் அந்தக்கல் கடைசியில் பிரதமரின் மண்டையைத்தான் பதம் பார்க்கிறது. சர்வதேச யோகா தினம், பெண் குழந்தைகள் தினம், மன் கி பாத், “டிஜிட்டல் இந்தியா” என்று எத்தனை நாட்கள்தான் வடிவேலு கணக்காக வலிக்காதது போல நடிக்க முடியும்?

தன்னுடைய இமேஜைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில், உறுதியான நடவடிக்கையாக எதையாவது செய்ய வேண்டும். இறுதியில் பார்த்தால், எதுவும் செய்திருக்கக்கூடாது. இதை எப்படிச் செய்வது என்பதுதான் நரேந்திர மோடியின் முன் உள்ள கேள்வி.

-திப்பு
_____________________________
புதிய ஜனநாயகம், ஜூலை 2015
_____________________________

தனியார் பள்ளியில சேக்காதீங்க – பாடல்

0

தனியார் கல்வி, ஆங்கில மோகத்தை அம்பலப்படுத்தி மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழு தோழர்கள் பாடியிருக்கும் பாடல்….

சர்வதேச யோகா தினம்: “ஷாகா”வுக்குப் பதிலாக யோகா !

6

பொய் புரட்டுகளால் கட்டமைக்கப்பட்ட இந்து பாரம்பரியம் குறித்த பார்ப்பன பாசிஸ்டுகளின் பெருமிதமும், தன்னை தேசத்தின் மீட்பனாகக் கற்பித்துக் கொண்ட மோடி என்ற வெட்கங்கெட்ட அற்பவாதியின் சுய விளம்பர மோகமும் கூடிப் பெற்றெடுத்திருக்கும் கேலிக்கூத்துக்குப் பெயர் – “சர்வதேச யோகா தினம்.

“கழிவறைக்கு ஒரு ஐ.நா. தினம் இருக்கும்போது, யோகாவுக்கு ஒரு தினம் இருக்கக்கூடாதா?” என்று கேட்டிருக்கிறார் ரவி சங்கர்ஜி. பொருத்தமான கேள்விதான்!

மோடியின் செல்ஃபி ஆசனம்வருடம் 365 நாட்களுக்கும் ஏதாவது ஒரு தினம் என்று ஐ.நா. அறிவிக்கத்தான் செய்கிறது. இப்படி ஐ.நா. அறிவிக்கும் தினங்கள் குறித்து யாரும் பெருமை கொள்வதில்லை. ஆனால், மோடி பெருமை கொள்கிறார். “இது உலக அரங்கில் இந்தியா பெற்றிருக்கும் அங்கீகாரம்” என்றும், “இதன்மூலம் பாரதம் உலகத்துக்கே வழிகாட்டுகின்ற விசுவ குரு” ஆகிவிட்டதாகவும் பீற்றிக் கொள்கிறார். காஞ்சி சங்கராச்சாரி தன்னைத்தானே ஜெகத்குரு என்று கூறிக்கொள்வதைப் போல!

விவகாரம் இத்துடன் முடியவில்லை. பிரதமர் பதவியை கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிப்பதற்குக் கிடைத்த குறுக்கு வழியாகப் பயன்படுத்துகிறார் மோடி. ஜூன் 21 அன்று டில்லியில் ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் யோகாசனம் செய்தார்களாம்; 84 நாடுகளைச் சேர்ந்தோர் இந்நிகழ்வில் பங்கேற்றார்களாம்; இப்படி இரண்டு கின்னஸ் சாதனைகள் யோகா தினத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றனவாம். உலகிலேயே “பெரிய மீசை”, “பெரிய நகம்” வளர்த்து கின்னஸில் இடம்பிடித்த இந்தியர்கள் இருக்கிறார்கள். அவர்களாவது இச்சாதனைகளுக்காக சோந்த முறையில் ‘முயற்சி’ செய்திருக்கிறார்கள். பிரதமர் மோடியோ பயில்வான் படத்தின்மீது தனது மூஞ்சியை வரைந்து கொண்ட 23-ஆம் புலிகேசியைப் போல, அரசு எந்திரத்தை ஏவி வரலாறு படைத்திருக்கிறார்.

இத்தகைய கேலிக்கூத்துகள் ஒரு புறமிருக்க, யோகாவின் வரலாறு என்ற பெயரில் பல வரலாற்றுப் புரட்டுகளை சங்க பரிவாரத்தினர் பரப்பி வருகின்றனர். சிறுபான்மை மதத்தினர் மீது யோகாவைத் திணிக்கும்போது, “யோகா என்பது மதச்சார்பற்றது, உடல், மன ஆரோக்கியத்துக்கானது” என்று கூறுகின்றனர். அதே நேரத்தில், மத்திய அரசின் “ஆயுஷ்” இணையதளம், யோகா சிவபெருமானிடமிருந்து தோன்றியதென்றும், பதஞ்சலி போன்ற முனிவர்களின் பாரம்பரியத்தினூடாக வளர்ந்ததென்றும் வேறொரு ‘வரலாற்றை’ கூறுகிறது.

“சூரிய நமஸ்காரம் தங்களது மத நம்பிக்கைக்கு எதிரானது” என்று முஸ்லிம்கள் கூறியவுடன், “சூரிய நமஸ்காரத்தை ஒப்புக்கொள்ளாதவர்கள் கடலில் குதிக்கட்டும்” என்று நஞ்சைக் கக்குகிறார் ‘யோகி’ ஆதித்யநாத். தினமணியோ, “இந்தியாவின் தேசியப் பண்பாட்டுப் பெருமையை இந்து மத நம்பிக்கையாக மாற்ற முற்படுவதாக” யோகா தினத்தை விமரிசிப்பவர்களைச் சாடுகிறது. யோகா தினத்தை விமரிசிப்பவன் தேச விரோதி என்று கைது செய்யப்பட வேண்டியது மட்டுமே பாக்கி இருக்கிறது.

உடல் ஆரோக்கியத்தைப் பேணும் வழிமுறையாக யோகாசனப் பயிற்சிகள் இன்று பரவலாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதால், மரபு, தேசியம் என்ற பெயரில் இந்துத்துவக் கண்ணோட்டத்தைப் பரப்புவதற்கு ஷாகாவைக் காட்டிலும் யோகா பயனுள்ளதாக இருக்கும் என்று கணக்கு போட்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். எனவே, யோகா குறித்த வரலாற்றுப் புரட்டுகளை அடையாளம் காண்பது அவசியமாகிறது.

இன்று புழக்கத்திலிருக்கும் யோகாசனங்களுக்கும், வேதம், உபநிடதம், கீதை போன்றவற்றில் பயன்படுத்தப்படும் ‘யோகா’ என்ற சொல்லுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை. “ரிக் வேதத்தில் வண்டியுடன் குதிரையைப் பிணைப்பது – கட்டுப்படுத்துவது” என்ற பொருளில் பயன்படுத்தப்பட்ட யோகா என்ற சொல்,  உபநிடதங்களில் மனதைக் கட்டுப்படுத்துவது என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. யோகா என்ற தத்துவ மரபோ, வேத மரபுக்கு எதிரான சார்வாகம், உலகாயதம், சுபாவவாதம் போன்ற பொருள்முதல்வாத தத்துவப் போக்குகள் சார்ந்ததாக இருந்திருக்கிறது.

கீதையில் கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் என்று கூறப்படுபவை பார்ப்பனியத்தின் முக்திக் கோட்பாட்டின் அடிப்படையிலான “வழிமுறைகள்” என்ற பொருளைத் தருகின்றன. யோகாவின் மூலநூலாகக் கூறிக்கொள்ளப்படும் பதஞ்சலியின் யோக சூத்திரத்தில் (கி.பி 3-ம் நூற்றாண்டு என கருதப்படுகிறது) காற்றில் பறப்பது, தண்ணீரின் மீது நடப்பது – என்பன போன்ற வித்தைகளாக யோகா என்பது விளக்கப்படுகிறது.

பொதுவாக யோகிகள் எனப்படுவோர் ஊனுடலை வெறுத்தவர்கள் என்றே கூறப்படுகின்றனர். ஆனால், இன்று புழக்கத்தில் இருக்கும் யோகாவோ, இதற்கு நேரெதிரான பொருளில், மூட்டு வலி, முதுகு வலி போன்ற ஊனுடல் சார்ந்த பிரச்சினைகளுக்கான மருந்தில்லா வைத்தியமாகவும், உடல் பருமனைக் குறைத்து அழகைப் பேணும் கலையாகவும் பயன்பட்டு வருகிறது.

மூச்சுப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி சார்ந்த இந்த யோகாசன முறை 5000 ஆண்டுகளுக்கு முன்னரோ அல்லது பதஞ்சலி காலத்திலோ தோற்றுவிக்கப்பட்டது என்று கூறுவது கலப்படமற்ற பொய். ஐரோப்பிய உடற்பயிற்சி மற்றும் ஜிம்னாஸ்டிக் மரபுகளுடன் இந்தியாவில் நிலவிய உடலைப் பேணுகின்ற பாரம்பரிய முறைகளை இணைத்து 20-ஆம் நூற்றாண்டில் மைசூரில் கிருஷ்ணமாச்சாரி என்பவரால்தான் இது உருவாக்கப்பட்டது என்பதை சிங்கிள்டன் என்ற ஆய்வாளரின் நூல் (Yoga Body : The Origins of Modern Posture Practice, Mark Singleton, Oxford University Press) வரலாற்று பூர்வமாக விளக்குகிறது.

இதேபோன்று இந்தியாவில் பல்வேறு மக்கட்பிரிவினரிடமும் புழக்கத்திலிருக்கும் உடற்பயிற்சி மரபுகளைத் தேடித் திரட்டி, நவீன அறிவியலின் துணையுடன் அவற்றைத் தொகுத்து ஒருங்கிணைந்த வடிவில் சிறந்தவொரு உடற்பயிற்சி முறையை உருவாக்கியிருக்க முடியும். அப்படி உருவாக விடாமல் யோகாசனத்துடன் உபநிடதம், பிரம்மம், வெங்காயம் என்று கலர் கலராக மசாலா சேர்த்து, ராம்தேவ் முதல் ஜக்கி வரையிலான சாமியார்கள் வணிகம் நடத்துகின்றனர். சுதர்சனக் கிரியா என்றொரு மூச்சுப் பயிற்சி தன்னால் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறி, அதற்கு அமெரிக்காவில் காப்புரிமையும் வாங்கியிருக்கிறார் ரவி சங்கர்ஜி.

தத்தம் சந்தைப் பிரிவினர்க்கு (market segment) ஏற்ப, “ஆத்தும சரீர சுகமளிக்கும்” யோகா பேக்கேஜ்களை, இந்தச் சாமியார்கள் மார்க்கெட்டிங் செய்கின்றனர். அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் பாரம்பரியமாக இந்த வேலையைச் செய்து வந்த பாதிரிகள் செல்வாக்கிழந்து விட்டதாலும், மதச்சார்பற்ற தூய தத்துவஞானத்தைப் போலத் தங்கள் சரக்கை கடைவிரிப்பதில் கைதேர்ந்தவர்களாக இந்த சாமியார்கள் இருப்பதாலும், அமெரிக்காவில் மட்டும் பல ஆயிரம் கோடி டாலர் புரளும் தொழிலாக வளர்ந்திருக்கிறது யோகா.

பல கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த சாமியார்களை வரவழைத்து தமது செலவில்  ஊழியர்களுக்கு யோகா வகுப்பு நடத்துகின்றனர். கடுமையான சுரண்டல், வரம்பில்லாத வேலை நேரம், மேலாளர்களின் வசவுகள், வேலை உத்திரவாதமின்மை-என்பன போன்ற கொந்தளிப்பைத் தோற்றுவிக்கின்ற பணிச்சூழலிலும், மனப்பதற்றத்துக்கோ கோபத்துக்கோ ஆட்படாமல் வேலை செய்வதற்கேற்ப, தங்களது ஊழியர்களின் உடலையும் மனதையும் படியவைக்கும் ஆன்மீக அயன்பாக்ஸ்களாக இந்தச் சாமியார்களின் யோகா வகுப்புகள் பயன்படுகின்றன.

இன்று சங்க பரிவாரத்தினாலும் சாமியார் கும்பலாலும் சந்தைப்படுத்தப்படும் யோகாவின் அரசியல் நோக்கம் இந்துத்துவம் என்றால், அதன் பண்பாட்டு நோக்கம், முதலாளித்துவக் கொடுங்கோன்மைக்கு இணங்கி வாழ்வதற்கு மக்களின் மனதைப் பதப்படுத்தும் பார்ப்பனியம்.
______________________________
புதிய ஜனநாயகம், ஜூலை 2015
______________________________

புனே: சவுஹான் ஒரு செக்ஸ் நடிகர் – அஜயன் நேர்காணல்

1

புனே திரைப்படக் கல்லூரியில் வினவு

றுநாள் இந்தியா முழுவதும் நடக்கவுள்ள போராட்டங்களுக்கான தயாரிப்பு வேலைகளில் அந்த மாணவர்கள் மும்முரமாயிருந்தனர். சில நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அந்த ஆலமரத்தின் அடியில் மாணவர்கள் கூடி விவாதம் செய்து கொண்டிருந்தனர். ஒரு மாணவன் தன்னைச் சுற்றியிருந்த சூழலில் பரவியிருந்த விவாதச் சூட்டை தாளமாகக் கொண்டு கண்களை மூடி தம்போலின் இசைக்கருவியை வாசித்துக் கொண்டிருந்தான். போராட்டச் சூழலும் அந்த இனிமையான இசையும் சேர்ந்து ஒரு இசை ஓவியமாக காற்றில் பரவிக் கொண்டிருந்தது.

ajayan-adat“வாங்க காம்ரேட். பயணம் எப்படி இருந்தது? இவங்க தான் எங்க போராட்ட கமிட்டித் தோழர்கள். இதோ இந்த மரம் தான் எங்களோட விவாத அரங்கம் – நாங்க இதை போதி மரம் (Wisdom Tree) என்று சொல்வோம்” அஜயன் உற்சாகமான வார்த்தைகளில் வரவேற்றார்.

வினவு செய்தியாளராகிய நாங்கள் பூனாவில் இயங்கி வரும் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சிக் கல்லூரியின் வளாகத்தில் இருந்தோம். கல்லூரி மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவரும், தற்போது போராட்டக் குழுவின் மையக் கமிட்டியின் உறுப்பினரான அஜயன் அதாத் கேரளத்தைச் சேர்ந்தவர்.

அஜயன்: “வாங்க நாம் தனியே கொஞ்சம் சத்தமில்லாத இடத்திலிருந்து பேசுவோம்” போதி மரத்திலிருந்து சில பத்து மீட்டர்கள் தள்ளி ஒரு பெரும் புல்வெளியில் அமர்ந்தோம்.

வினவு: ”அஜயன், எங்களோட இணையதளத்தில் உங்கள் போராட்டம் பற்றி ஒரு செய்தியை வெளியிட்டுள்ளோம். இதன் மற்ற விசயங்கள் குறித்து பேசும் முன், உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லி விடுங்கள்.

அஜயன்: ”கேரளாவின் கன்னூர் மாவட்டம் தான் எனது சொந்த ஊர். அப்பாவுக்கு இடதுசாரி இயக்கங்களோடு தொடர்பு உண்டு. சில காலம் எம்.எல் இயக்கங்களோடும் தொடர்பில் இருந்துள்ளார். அந்த வகையில் நான் இடது ’வாசனையை’ சின்ன வயதிலேயே முகர்ந்திருக்கிறேன். அப்புறம்… கல்லூரி நாட்களில் இந்திய மாணவர் பெருமன்றம் (SFI) அப்படித்தானே இருக்க முடியும்? அந்த அமைப்பில் மாவட்ட அளவிலான பொறுப்பில் இருந்திருக்கிறேன். சில காலம் சி.பி.எம் கட்சியின் கலாச்சார அமைப்பான புரோகமன கலா சாகித்ய சங்கம் அமைப்பில் தோழர் எம்.என் விஜயனோடு இணைந்து செயல்பட்டேன். அப்போது கட்சிக்குள் என்.ஜி.ஓ அரசியல் குறித்த சித்தாந்த போராட்டத்தை எம்.என் விஜயன் முன்னெடுத்திருந்தார். நாங்கள் அவரோடு இருந்தோம்”

“சங்கத்தின் மீது விஜயன் முன்வைத்த குற்றச்சாட்டுகளை சித்தாந்த ரீதியில் எதிர்கொள்ளாமல் மானநஸ்ட வழக்குத் தொடர்ந்தார்கள். அந்த வழக்கின் தீர்ப்பு இறுதியில் தோழர் விஜயனுக்கு சார்பாக வந்தது. அதைத் தொடர்ந்து நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் தோழர் விஜயன் பத்திரிகையாளார்களோடு பேசிக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பில் இறந்து போனார். நான் அந்த செய்தியாளர் சந்திப்பில் இருந்தேன். பின்னர் சில காலம் புரட்சிகர மார்க்சிய கட்சி என்ற அமைப்பில் செயல்பட்டேன். பிறகு இங்கே படிக்க இடம் கிடைத்ததும் கேரளத்தை விட்டு வந்து விட்டேன். இப்போது நேரடி அரசியலில் இல்லை”

ftiiவினவு : சரி அஜயன், நீங்கள் இடதுசாரி அரசியல் அறிமுகம் உள்ளவர் என்பதால் இந்த முதல் கேள்வி. உங்கள் போராட்டம் குறித்து பத்திரிகைகளில் வரும் செய்திகளில் “நாங்கள் அரசியல் தொடர்பற்ற சங்கம்” என்பதை வலியுறுத்திச் சொல்கிறீர்கள் அல்லவா? அது அரசியல் கட்சிகளின் மேலான ஒவ்வாமையில் இருந்து சொல்லப்படுகிறதா அல்லது அரசியலின் மீதே உள்ள நம்பிக்கையின்மையா?

அஜயன்: எங்கள் மாணவர் சங்கத்தில், அதன் பொறுப்புகளில் உள்ளவர்களில் என்னைப் பொறுத்தவரை முந்தைய காலத்தில் கட்சி ரீதியிலான இடதுசாரி அரசியல் பரிச்சயம் உண்டு என்பது சரி தான். இன்னும் சிலர் இடது சாய்வுக் கண்ணோட்டம் கொண்டவர்களாக உள்ளனர். இடது சாய்வு என்று நான் சொன்னதை கவனியுங்கள். மற்றபடி, இவர்கள் கலைஞர்கள். கலைஞர்கள் என்பதாலேயே வலது சாரி கண்ணோட்டத்திற்கு முற்றிலும் மாறான கருத்து நிலை கொண்டவர்கள். அப்படித்தானே இருக்க முடியும்? வலதுசாரிகளால் கலைஞர்களாக இருக்க முடியுமா என்ன? பொதுவாகவே இவர்கள் முற்போக்காக சிந்திக்க கூடியவர்கள். என்றாலும், நீங்கள் ஒரு கட்சி ரீயிலான வேலைத்திட்டம் போன்ற முறைகளுக்குள் இவர்களைக் கொண்டு வர முடியாது. இது ஒரு விசயம்

மற்றபடி நாங்கள் கட்சி சாயம் இல்லாதவர்கள் என்பதாலேயே எங்களது குரலுக்கு ஒரு கவனம் கிடைக்கிறது. இப்போது நடக்கும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் இந்த கல்லூரியின் வரலாற்றில் நாற்பதாவது போராட்டம். இந்த நாற்பது போராட்டங்களில் இது தான் பெரியது. இன்றோடு நாங்கள் வகுப்பைப் புறக்கணிக்கு முடிவெடுத்து இருபது நாட்களாகிறது. இப்போது அரசாங்கம் பேச்சு வார்த்தைக்கு முன்வந்துள்ளது. முன்னாள் மற்றும் தற்போதைய மாணவர்கள் சார்பாக ஒரு குழு அமைச்சர் அருண் ஜேய்ட்லியைச் சந்திக்கச் செல்கிறார்கள்.

வினவு : அமைச்சரை சந்தித்து பேசுவதன் மூலம் உங்கள் கோரிக்கையை வெல்ல முடியும் என்று கருதுகிறீர்களா?

அஜயன் : ஆம் சந்தேகமின்றி.

ftiiவினவு : உங்கள் கோரிக்கையின் மையமாக கஜேந்திர சவுஹான் இருக்கிறார்…

அஜயன் (இடைமறிக்கிறார்) : அவ்வாறு பத்திரிகைகள் சொல்கின்றன. நாங்கள் கஜேந்திராவை மட்டுமில்லை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மொத்த ஆட்சிக்குழுவையும் நிராகரிக்கிறோம்.

வினவு : ஆனால், கஜேந்திர சவுஹான் குறித்த உங்கள் குற்றச்சாட்டுகளே ஊடகங்களில் பிரதான இடம் பிடிக்கின்றனவே?

அஜயன் : இருப்பதில் அவர் கொஞ்சம் ஆபத்தில்லாத கோமாளி என்பதால் ஊடகங்கள் அவர் மேலான எங்கள் விமர்சனங்களுக்கு ஊடகங்கள் அதிக அழுத்தம் கொடுக்கின்றன என்று கருதுகிறேன்.

வினவு : சரி. மற்றவர்கள் பற்றிய உங்கள் குற்றச்சாட்டுகளுக்கு பின்னர் வருவோம். அதற்கு முன் கஜேந்திர சவுஹான் குறித்து உங்கள் மதிப்பீடு என்ன?

அஜயன் : என்னவென்று சொல்வது? உங்களுக்கு அவர் மகாபாரத தொடரில் தருமராக நடித்தவர் என்று தெரிந்திருக்கும். ஆனால், அவர் ஒரு செக்ஸ் பட நடிகர் என்பது தெரியுமா? அவர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்தாள் காசு கொடுத்தால் எதற்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்யக் கூடியவர். இணையத்தில் தேடிப்பாருங்கள் தோழரே… ஆசாராம் பாபுவோடு சேர்ந்து டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார்… அப்புறம் இந்த ராசிக்கல் விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சுருக்கமாக சொன்னால், இந்தக் கல்லூரியை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்தாளை எங்கள் தலையில் கட்டப் பார்க்கிறார்கள்.

குறிப்பு : கஜேந்திராவைக் குறித்து அஜயன் ஒரு சிறிய வீடியோவைத் தயாரித்துள்ளார்

வினவு : ஆக, உங்களுடைய பிரச்சினை எல்லாம் நியமிக்கப்பட்டவர்களின் தகுதி தொடர்புடையது மட்டுமே என்கிறீர்களா?

அஜயன் : இது வெறும் தகுதி குறித்து மட்டுமில்லை என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். இது மத்தியில் அதிகாரத்திற்கு வந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் காவிமயமாக்கல் திட்டத்தின் ஒரு அங்கம் தான். எனினும் நியமிக்கப்பட்டுள்ளவர்கள் எல்லாம் யார்? நாங்கள் ஒட்டுமொத்தமாக இந்தப் புதிய நிர்வாக குழுவையே நிராகரிக்கிறோம் என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த நிர்வாக குழுவில் இருப்பவர்கள் யார்?

அனகா கெய்சாசின் கணவர் ஒரு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக். நரேந்திர பதக் மகாராஷ்டிர மாநில முன்னாள் ஏ.பி.வி.பி தலைவர் ராகுல் ஷோலாபூர் பாரதிய ஜனதாகாரர், பங்கஜ் ஷாய்க்கியா ஆர்.எஸ்.எஸ்சின் முகமூடி அமைப்பான சம்ஸ்கார் பாரதியின் பொறுப்பாளர்.

அனகா தன்னை ஒரு ஆவணப்பட இயக்குனர் என்று சொல்லிக் கொள்கிறார். ஆனால், எடுத்த சில மொக்கையான ஆவணப்படத்தில் வேறு நபர்கள் தான் பெயர் குறிப்பிடப்படாமல் வேலை செய்து கொடுத்திருக்கிறார்கள். தனக்காக ஆவணப்பட வேலை செய்து கொடுத்தவருக்கு சரியாக ஊதியம் கொடுக்காத விவகாரத்தில், நீதிமன்ற வழக்கொன்று நடந்துள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பில் அனகாவுக்கு ஆவணப்படம் என்றால் என்னவென்றே தெரியாது என்று நீதிபதியே குறிப்பிட்டுள்ளார். இதோ இது தான் அந்த வழக்குத் தீர்ப்பின் நகல் – இதை நான் சில நாட்களுக்கு முன்பு தான் செய்தியாளர்கள் முன் அம்பலப்படுத்தினேன்.

அடுத்து யார் இந்த நரேந்திர பதக்? 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இதே வளாகத்தில் நாங்கள் ஆனந்த் பட்வர்த்தனின் “ஜெய்பீம் காம்ரேட்” திரையிட்டோம். அப்போது நான் எனது நண்பர்களோடு வெளியே வந்தபோது சில ஏ.பி.வி.பி குண்டர்கள் என்னையும் எனது நண்பர்களையும் வழிமறித்து தாக்கினர். அந்த தாக்குதலுக்கு உத்தரவிட்டதே இந்த நரேந்திர பதக் தான். மாணவர்களைத் தாக்கிய ஒரு ரவுடி இந்த வளாகத்திற்குள் அடியெடுத்து வைக்க நாங்கள் அனுமதிப்போமா? அந்தளவுக்கு நாங்கள் வெட்கம் கெட்டவர்களா சொல்லுங்கள்?

(அஜயன் தாக்கப்பட்டது குறித்து இந்து பத்திரிகையில் வெளியான செய்தி)

வினவு : தற்போதைய விவகராங்களுக்குள் தனியார்மயமாக்கல் என்ற ஒரு கோணம் இருக்கும் என்று சந்தேகிக்கிறீர்களா?

அஜயன் : தனியார்மயமாக்கலுக்கான முயற்சியை முன்பு யு.ஆர்.அனந்தமூர்த்தி தலைவராக இருந்த போது காங்கிரசு அரசு செய்து விரலைச் சுட்டுக் கொண்டது. அப்போது நாங்கள் ஸ்ட்ரைக் அடித்தோம். இதே போதி மரத்தினருகில் யு.ஆர்.அனந்தமூர்த்தியை நாங்கள் கெரோ செய்தோம். காங்கிரசு பின்வாங்கி விட்டது. பின்வாங்கியது மட்டுமல்ல, சில கட்டணப் பிரிவு பாடத்திற்கான கட்டணங்களை குறைக்கவும் செய்தது.

இப்போது நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் பேசும் போது இந்தக் கல்லூரியை நாட்டிலேயே ஒரு ப்ரீமியம் கல்வி மையமாக – அதாவது ஐ.ஐ.டி – ஐ.ஐ.எம் போன்று – உயர்த்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அவர் சொல்வதன் பொருள் என்னவென்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆக, தற்போதைய நடவடிக்கைகளின் பின்னே தனியார்மயத்தைப் புகுத்தும் ஒரு உள்நோக்கம் இருக்கிறதா என்றால் – உத்திரவாதமாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் இது காவிமயமாக்கலின் அங்கம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

வினவு: காவிமயமாக்கல் குறித்து சொன்னீர்கள். அது எந்த அளவில் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்:?

அஜயன் : நாங்கள் இதே வளாகத்தில் கபீர் கலா மன்ச்சை அழைத்து நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம். இந்த வளாகமே முற்போக்கான சிந்தனைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கான இடமாக இருந்து வந்துள்ளது. இப்போது அவர்கள் அதிகாரமிக்க கமிட்டிகளில் பின்வாசல் வழியே நுழைந்து விட்டால் என்னவாகும்? இந்த போதி மரத்தைச் சுற்றி ஆர்.எஸ்.எஸ் ஷாகா நடத்துவார்கள். வலதுசாரிகள் உள்ளே நுழைந்து விட்டால் அதன் பின் கலைகளுக்கும் கலைஞர்களுக்கு என்ன கதியாகும் என்று நீங்கள் புரிந்து கொள்ள நிர்வாக குழு உறுப்பினராக தற்போது நியமனம் வாங்கியிருக்கும் சைலேஷ் எடுத்த ‘மோடியின் சபதம்’ என்ற குறும்படத்தைப் பாருங்கள் உங்களுக்கே விளங்கும். சப்ளாக்கட்டையோடு பஜனை பாடுவதே சங்கீதம் என்கிற ஒரு நிலை ஏற்படும். பின்னர் கலைகள் என்றால் அது ராமாயணமும் மகாபாரதமும் தான் என்றும், அதன் கதைகளை சீரியல்களாக எடுத்து மக்களை முட்டாள்களாக்குவதே கலைஞனின் கடமை என்றும் நிலைநிறுத்தப்படும். காவி செயல்திட்டத்தை மேலும் மேலும் மக்களிடம் கொண்டு செல்ல அவர்களிடம் ஊடகங்கள் உள்ளன; அதில் செயல்பட இங்கிருந்து இனிமேல் கலைஞர்களை உருவாக்குவார்கள்.

ஆனால், இந்த மாணவர்கள் இருக்கும் வரை அதை அவர்களால் நிறைவேற்றிவிட முடியாது. நாங்கள் என்ன செய்தாவது அதைத் தடுத்து நிறுத்தியே தீருவோம்.

வினவு : அஜயன், நீங்கள் ஒரு மிகப் பெரிய செயல்திட்டத்தின் ஒரு சிறிய பகுதி அமல்படுத்தப்படுவதை எதிர்க்கிறீர்கள். ஆனால், உங்கள் பிரச்சாரங்களில் ஊடக பேட்டிகளில் இந்த ‘காவிமயமாக்கல்’ என்ற பதம் கொஞ்சம் அமுக்கிவாசிக்கப்படும் தொனியில் தெரிகிறதே?

அஜயன்: நீங்கள் கேட்பது புரிகிறது. நாங்கள் வெளிப்படையாக காவிமயமாக்கலுக்கு எதிரான போராட்டமாக இதை முன்னெடுக்கவில்லை. நிர்வாக கவுன்சில் நியமனங்களை எதிர்ப்பது என்ற அளவில் தான் இந்தப் போராட்டம் நகர்கிறது. நாங்கள் ஏன் காவிமயமாக்கலை வெளிப்படையாக எதிர்க்கவில்லை? இந்தக் கேள்விக்கான பதிலும் உங்கள் முதல் கேள்விக்கான பதிலும் ஏறக்குறைய ஒன்று தான். ஆனால், நியமன எதிர்ப்பு என்பதன் உள்ளடக்கம் காவிமயமாக்கலுக்கான எதிர்ப்பு தானே? தவிற எங்கள் முழக்கங்களில் காவிமயமாக்கல் முக்கிய இடத்தைப் பிடிக்கவில்லை என்றாலும், பிற சந்தர்ப்பங்களில் குறிப்பிடப்படுகிறது.

வினவு : அரசு தனது காவிமயமாக்கல் திட்டத்தை முணுமுணுப்புகளை நசுக்கியவாறே முன்னெடுத்துச் செல்கிறது. அறிவியல் கழக தலைமைப் பதவி, கல்வி அமைச்சகம், தொல்பொருள் துறை என்று எல்லா இடங்களிலும் தான் நினைத்ததை இந்த அரசாங்கம் சாதித்துள்ளது. தமது நோக்கத்தை அவர்கள் மறைத்துக் கொள்ளவிலை. ஆனால், அதற்கெதிரான தற்காப்பு நடவடிக்கைகள் மட்டும் ஏன் சுற்றி வளைத்து இருக்க வேண்டும்? தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள மோடி அரசு எந்த தயக்கமும் தடுமாற்றமும் இன்றி செயல்பட்டு வருகிறது. அரசின் வேகத்தையும், உங்களது எதிர்ப்பையும் கணக்கிலெடுத்துக் கொண்டு சொல்லுங்கள் – நீங்கள் வெல்வீர்கள் என்று சந்தேகமற நினைக்கிறீர்களா?

அஜயன் : சந்தேகம் தான். ஆனால், அவர்கள் வெற்றி பெறுவதும் அத்தனை சுலபமல்ல என்றே கருதுகிறேன். அல்லது அவ்வாறு நம்பவே விரும்புகிறேன்.

வினவு : சரி அஜயன். பாரதிய ஜனதாவின் அரசியலுக்கு எதிர்தரப்பில் உள்ள வேறு தேர்தல் கட்சிகளிடம் நீங்கள் உதவி கேட்க முயற்சிக்கவில்லையா?

அஜயன் : ஹ ஹ ஹ… யாரிடம் கேட்கச் சொல்கிறீர்கள் காம்ரேட்? ஒரு பாதி மகாராஷ்டிரா சிவசேனையிடமும், மறுபாதி தேசியவாத காங்கிரசிடமும் (சரத்பவார்) உள்ளது. இவர்கள் இருவருமே வலதுசாரிகள். சி.பி.ஐ சி.பி.எம்…… முன்னொரு காலத்தில் இருந்தார்கள். விடுங்கள்….புதைபொருள் ஆராய்ச்சி செய்யும் விருப்பம் எங்களுக்கு இல்லை.

வினவு : நமது பேட்டி முடிவுக்கு வந்து விட்டது. ஒரே ஒரு கடைசி கேள்வி. உங்கள் பேட்டியில் இடையிடையே இந்தக் கல்லூரியின் பாரம்பரிய பெருமை குறித்தும் இது தயாரித்தளித்த கலைஞர்கள் குறித்தும் நிறையச் சொன்னீர்கள். அவர்கள் செய்த சமூகப் பங்களிப்பு என்ன? இங்கிருந்து சென்றவர்கள் யாரும் பாலிவுட்டுக்குச் செல்லவில்லை என்று நான் புரிந்து கொள்ளலாமா?

அஜயன் : மைய நீரோட்ட சினிமாவுக்கு வெளியே சிலர் செயல்பட்டு வருகிறார்கள். பலரை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கிரீஷ் காஸரவல்லி போன்ற சிலரின் பெயர்களை என்னால் சொல்ல முடியும்.. ஆனாலும், இவர்கள் சிறுபான்மையினர் என்பதை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.

பாலிவுட்..? நான் பாலிவுட்டை வெறுக்கிறேன். ஆனால் நானே கூட யாஷ்ராஜ் நிறுவனத்திற்கு வேலை செய்து கொடுத்திருக்கிறேன். சில தமிழ்படங்களுக்கும் கூட வேலை பார்த்துக் கொடுத்திருக்கிறேன். இவர்களெல்லாம் கார்ப்பரேட்டுகள் என்றும், சினிமா கலைக்கு எதிரிகள் என்றும் எங்களுக்குத் தெரியும். எமது தனிப்பட்ட கலையார்வமும் விருப்பத் தேர்வுகளும், இவர்களது தொழில் ஆர்வங்களும் (Business interest) எந்தக் காலத்திலும் சந்தித்துக் கொள்ள முடியவே முடியாது. என்றாலும் இங்கிருந்து சென்ற பலரும் – சந்தோஷ் சிவன், ரசூல் பூக்குட்டி உள்ளிட்டு – பாலிவுட்டில் கொடி நாட்டியுள்ளனர். நாளை நானும் கூட கார்ப்பரேட் சினிமா உலகில் தான் செயல்பட்டாக வேண்டும்; அது எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது என்றே நினைக்கிறேன்.

வினவு : ஏன்?

அஜயன் : பிழைப்பு தான் வேறென்ன?

வினவு : உங்கள் நேரத்தை ஒதுக்கியதற்காக நன்றி அஜயன். உங்கள் போராட்டம் வெல்ல வினவு இணையதளத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

– வினவு செய்தியாளர்கள், பூனாவிலிருந்து…

புதிய ஜனநாயகம் – ஜூலை 2015 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

0

புதிய ஜனநாயகம் ஜூலை 2015

புதிய ஜனநாயகம் ஜூலை 2015 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. மூடு டாஸ்மாக்கை! குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சியது போதும்! கெடு விதிப்போம் ஆகஸ்டு 31!
“அருகதை இழந்தது அரசு கட்டமைப்பு! இதோ ஆள வருகுது மக்கள் அதிகாரம்!!” – மக்கள் அதிகாரம், தமிழ்நாடு

2. சர்வதேச யோகா தினம் : “ஷாகா”வுக்குப் பதிலாக யோகா!

3. சின்ன மோடி, பெரிய மோடி
ஊழலை ஒழிக்க வந்த உத்தமர் என்று பீற்றிக் கொள்ளும் மோடியின் ஆட்சி, கருப்புப் பண கிரிமினல் லலித் மோடியைக் காப்பாற்றினால்தான் கட்சி, ஆட்சி இரண்டின் மானத்தையும் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற நகைக்கத்தக்க நிலையில் தடுமாறுகிறது.

4. மேகி நூடுல்ஸ், பால வித்யா மந்திர் போராட்டம், செம்மரக் கடத்தலில் டி.எஸ்.பி
மூன்று சம்பவங்கள், ஒரு உண்மை!
தனக்குத்தானே விதித்துக்கொண்ட கடமைகளைக் கூட நிறைவேற்றாத இந்த அரசுக் கட்டமைவை இனியுமா நாம் முதுகில் சுமக்க வேண்டும்?

5. “பிணந்தின்னிகள்
அரசு அதிகாரத்தில் உள்ள மாஃபியாக்கள் பொதுச் சொத்துக்களை கொள்ளையடிப்பதை அம்பலப்படுத்திய இரு பத்திரிகையாளர்கள் துடிதுடிக்கக் கொல்லப்பட்டனர்.

6. அறிவுத்துறையினரை வதைக்கும் அரசு பயங்கரவாதம்!

7. மியான்மரில் புகுந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் : சுயதம்பட்ட மோடியின் இன்னுமொரு ஆக் ஷன் சினிமா!
வெற்றுச் சவடால்களால் தன்னை தேசபக்த நாயகனாகச் சுயதம்பட்டம் அடித்துக் கொண்ட மோடியின் “எல்லை தாண்டிய தீவிரவாத எதிர்ப்பு” சினிமா வந்த வேகத்திலேயே டப்பாவுக்குள் சுருண்டு விட்டது.

8. “தனியார் வங்கிகள் வளர பொதுத்துறை வங்கிகளை ஒழித்துக் கட்டு” – இதுதான் மோடி பிராண்டு “வளர்ச்சி”!
அரசு வங்கிகளுக்குத் தேவையான நிதியைத் தர மறுப்பதன் மூலம், அவற்றைக் குறுக்கு வழியில் தனியார்மயமாக்க முயலுகிறது, மோடி அரசு.

9. பகற்கொள்ளைக்குப் பச்சைக் கொடி
ரயில்வே துறையை தனியார் முதலாளிகள் விழுங்குவதற்கும், இனி காசு உள்ளவனுக்கு மட்டுமே ரயில் என்று மாற்றவும் மாமா வேலை செய்கிறார் மோடி.

10. “ஆகா அரசுப் பள்ளி! ஐயோ… தனியார் பள்ளி!”
– கல்வியில் தனியார்மயத்தை ஒழிக்கக் கோரும் கல்வியுருமை மாநாட்டின் அறைகூவல்!

11. “நம்ம கை உசரணும், முதலாளி கை கீழே போகணும்!
குட்டக் குட்ட குனிந்து கொண்டிருந்த கோவை – சி.ஆர்.ஐ தொழிலாளர்களின் வர்க்கச் சீற்றம்

12. அரசு : அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல!

13. எல்லை மீறுவதுதான் தீண்டாமைக் கொடுமையா?

புதிய ஜனநாயகம் ஜூலை 2015 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.