தொலைக்காட்சித் தொடர்களை விடாது பார்த்து தமிழகத்துப் பெண்கள் அழுவாச்சிகளாக மாறிவிட்டார்கள் என்பதாய் சலித்துக் கொள்வார்கள் நமது ‘அறிஞர்’ பெருமக்கள். அவர்களில் நமது பதிவுலகப் பிரபலங்களும் அடக்கம். ‘பா’ வரிசைப்படங்கள் காலத்திலிருந்து சன் டிவியின் பிரைம் டைம் சித்தி வரை இந்த அழுகை சென்டிமெண்ட் வசூலை அள்ளுகிறது என்றும் அவர்கள் ‘ஆய்வு’ செய்வது வழக்கம். இதில் உண்மையில்லாமல் இல்லை. ஆனால் உண்மையை பேசுபவர்கள் அந்த உண்மைக்கு பொருத்தமாக இருக்கிறார்களா என்பது நம் எளிய கேள்வி.

அதை கூகிள் பஸ்ஸில் போட்ட ஒரு பதிவு மூலம் உரைத்துப் பார்க்கும் வசதியை கிழக்கு பதிப்பகம் அதிபர் பத்ரி நமக்கு இலவசமாகவே வழங்கியிருக்கிறார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குப் போன பத்ரிக்கு ஒரு மேக்கப்மேன் அலங்காரம் செய்கிறார். அவரிடம் உரையாடுகிறார் பத்ரி. நிரந்தரமில்லாத வருமானத்தையும் வாழ்க்கையையும் கொண்ட சினிமா உலகை விட்டு விலகி வந்தவர் அந்த முகப்பூச்சுக் கலைஞர். ரஜினி, கமல், விக்ரம், அஜித் என பல பிரபலங்களிடம் வேலை பார்த்திருக்கிறார். அந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் போது குறிப்பாக அஜித்தை மட்டும் மனதாரப் பாராட்டுகிறார். என்ன காரணம்?

பின்னி மில் ஆலையில் ஷூட்டிங் நடக்கும் போது தூசி படிந்த தொழிலாளியிடம் சுத்தமான தனது கையால் கை குலுக்கியது, புரடக்ஷன் சாப்பாடு சரியில்லை எனத் தெரிந்து தொழிலாளர்களுக்கு தானே வீட்டிலிருந்து பொருட்கள் கொண்டு வந்து தன் கைப்பட மட்டன் பிரியாணி செய்து போட்டது (அரிசி ஒரு கிலோ ரூ. 190), அதையும் புரடக்ஷன் ஆட்கள் லவட்டிக்கொள்வதை கேள்விப்பட்டு, அடுத்த நாள் முதல் அனைவரும் ஒரு சேர அமர்ந்து சாப்பிட ஏற்பாடு செய்தது, ஷூட்டிங் முடியும் வரை அஜித்தே எல்லா நாட்களுக்கும் மட்டன் பிரியாணி செய்து போட்டது, பின்னர் ஹைதராபாத் செல்லும் போது சமையலுக்கு வசதி இல்லை என்பதால் ஒரு பிரபல ஓட்டலிலிருந்து பிரியாணி ஏற்பாடு செய்து தினமும் அளித்தது, தீபாவளி, பொங்கலுக்கு கால் பவுனில் மோதிரம் போட்டது, 3000 ரூபாய்க்கு பட்டாசு, ரொக்கமாக ரூ.500 என எல்லா தொழிலாளிகளுக்கும் கொடுத்தது, உடல் சுகவீனம் என்றால் தேவைக்கேற்ப உதவி செய்வது, எல்லா தொழிலாளிகளையும் அண்ணே என்று மரியாதையுடன் விளிப்பது……….

மனிதனை மதிப்பதில் மற்ற நடிகர்கள் மோசமில்லை என்றாலும் அஜித் போல இல்லை என்று அந்த முகப்பூச்சுக் கலைஞர் பாராட்டுப் பத்திரம் தருகிறார். இவையனைத்தும் விளம்பரமின்றி தற்செயலாக நடந்திருப்பதாக வேறு தெரிகிறது என்கிறார்கள் சிலர்.

போதாதா? நமது பதிவுலக பெருமக்கள் அதிலும் மனிதாபிமானத்தை வறண்ட பாலையில் இருக்கும் சோலையாக வழிபடுபவர்கள் தாங்களும் சளைத்தவர்களில்லை என்று தலயை போற்றும் வழிபாட்டில் உண்டு இல்லை என்று பின்னி எடுத்து விட்டார்கள்.

பத்ரியின் இந்த பதிவை 42 பதிவர்கள் லைக்கியிருக்க, 21 பதிவர்கள் பகிர்ந்து பாராட்டியிருக்கிறார்கள். பத்ரியின் வலைப்பதிவிலும் தனது உணர்ச்சிகளை பதிவு செய்திருக்கின்றனர். கருவளையத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் அந்த மூகப்பூச்சுக் கலைஞர் ஈடுபடும் போது பேசிய உரையாடல் இந்த அளவுக்கு வரவேற்பு பெறும் என்று ”தோற்கடிக்க முடியாதவன்” என இப்பதிவுக்கு பெயரிட்ட பத்ரிக்கு தெரியாமல் இருந்திருக்காது. ஆனாலும் இதற்காகவே தன்னை சினிமா ப்ரியன், தலயின் ரசிகன் என்று அஜித்தின் இரசிகர்கள் நம்புவது உண்மையில்லையென சற்று வெட்கத்துடன் என்றாலும் வெளிப்படையாகவே மறுக்கிறார் பத்ரி. என்ன இருந்தாலும் இரசிகர்கள் எனப்படுவோர் பெஞ்ச் டிக்கெட் வர்க்கம்தானே? ஒரு சினிமா நடிகனின் இரசிகன் என்ற அடையாளத்தை நமது அறிஞர் பெருமக்கள் மலிவாகவே கருதுவதை தவறு என்று சொல்ல முடியாதில்லையா?

திரையில் காட்டும் வித்தைகளை வைத்து ஒரு நடிகனை ஒரு இரசிகன் வழிபடுகிறான் என்றால் திரைக்கு வெளியே அந்த நடிகனின் நல்லனவற்றை வியந்தோதும் திருப்பணியை இதே அறிஞர் பெருமக்கள்தான் செய்கிறார்கள் என்றால் அது முரணில்லையா? வெளிப்படையான இரசிகர்களை விட மர்மத்தோடு மறைந்திருந்து பார்த்து இரசித்து அதை மனிதாபிமான காக்டெயிலில் கலந்து பொது வெளியில் முன்வைக்கும் போது இவர்களும் இரசிகர்கள் என்று அழைத்தால் என்ன குடிமுழுகிப் போகும்?

அஜித் வெறுமனே பிரியாணி போட்டார் என்றால் பத்ரி அதை புறந்தள்ளியிருப்பார். ஆனால் வீட்டிலிருந்தே பொருட்களை கொண்டு வந்து தன் கைப்படவே சமைத்து, படப்பிடிப்பு நாட்கள் முழுவதற்கும் பிரியாணி போட்டார் என்பதில்தான் பத்ரி அடித்து செல்லப்பட்ட இரகசியம் புதைந்திருக்கிறது.

தமிழக ‘அறிவுலகமே’ வியந்து போற்றும் ஒரு பதிப்பகத்தை நடத்தும் ஒரு அறிஞரே தலயின் மனிதாபிமான வெள்ளத்தில் முக்குளிக்கும் போது மற்ற பதிவர்கள் எம்மாத்திரம்? அவர்களெல்லாம் பதிவர்கள், பத்திரிகையாளர்கள், பிறகு எழுத்தாளர்கள், இறுதியில் சினிமா என்று நீண்ட ஏணிப்படியில் இன்பமான இம்சையூட்டும் கனவுடன் ஏறிக் கொண்டிருப்பவர்கள். தலயைப் போல ஒரு வள்ளலை சந்தித்தால் அவர்களும் மூச்சுவாங்கும் ஏணியை தாண்டி முடித்து மாடி வீட்டில் செட்டிலாகிவிடலாம் அல்லவா?

mutton_biryani 700 pix

எது மனிதாபிமானம்? தொழிலாளர்களுக்கு செய்ய வேண்டிய உதவி எது? தான தருமத்துக்கு அளவு கோல் என்ன?

இதற்கு நாம் மெனக்கெட வேண்டிய அவசியமில்லை. பத்ரியின் பதிவிலேயே பதில் இருக்கிறது. அந்த முகப்பூச்சுக் கலைஞர் சினிமாவை தலைமுழுகி தொலைகாட்சி வேலைக்கு ஏன் வந்தார்?

“சினிமால ஹீரோ, கேமராமேன், டைரெக்டர் இப்படி கொஞ்சம் பேருக்கு மட்டும்தான் சார் பணம். மத்தவங்களுக்கு, தினசரி பேட்டா இல்லாட்டி வாழ்க்கை ஓடாது சார். அதுவும் பேட்டாகூடக் கட்டாயமாக் கிடைக்கும்னு சொல்லமுடியாது. குடும்பம்னு வந்தாச்சு சார், இனிமேயும் சினிமால லோல்பட முடியாதுன்னு விட்டுட்டேன்.”

இந்த வரிகளை கட்டுடைத்தோ, உற்றுப் பார்த்தோ, உட்கார்ந்து யோசித்தாலோ இல்லை போகிற போக்கில் பார்த்தால் கூட மேற்கண்ட கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

ஆனால் இந்த வரிகளை பத்ரியும் சரி, பத்ரி போட்ட பதிவால் மனிதாபிமான ஆட்டம் போட்டவர்களுக்கும் சரி ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. புறங்கையால் தள்ளிவிட்டு நேரே பிரியாணி மேட்டருக்கு போய்விட்டார்கள்.

முப்பது வருடங்கள் சினிமா உலகில் கை வலிக்க மேக்கப் போட்ட அந்த கலைஞனுக்கு அல்லது தொழிலாளிக்கு நிர்ணயிக்கப்பட்ட தினசரி பேட்டா கூட உத்திரவாதமில்லை. இவ்வளவிற்கும் அவர் பிரபலமான அனைத்து தமிழ் ஹீரோக்களுக்கும் வேலை செய்திருக்கிறார். இறுதியில் இங்கே நீடித்தால் குடும்பத்தை பராமரிக்க முடியாது என்று தொலைக்காட்சிக்கு மாறிவிட்டார். எனில் அவர் இத்தனை வருடங்கள் ஆற்றிய பணிக்கு என்ன பயன்? என்னதான் பலன்?

இதை ஒரு ஹீரோவாவது ஒரு பேச்சுக்காகவாவது கண்டித்திருப்பார்களா? அல்லது ஒரு அறிக்கைதான் விட்டிருப்பார்களா?

சிநேகா, பிரசன்னா காதல் திருமணமாக நடக்கப் போகிறது என்பதை தினமணியின் வைத்தி மாமா முதல், தினமலரின் அந்துமணி மாமா வரை தலைப்புச் செய்திகளில் கொண்டாடுவதை கண்டிருப்பீர்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தமது ஊதியம் அதாவது தினசரி பேட்டா உயர்த்தப்படாத நிலையில் போராடப் போவதாக பெப்சி அதாவது தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் அறிவித்திருந்ததை எத்தனை பேர் அறிவீர்கள்?

கோடி கோடியாக சுருட்டும் எந்த ஹீரோவாவது தங்களது கெட்டுப் போகும் உடலை, திரையில் பிரிஜ்ஜில் வைத்த ஃபிரஷ்ஷான தக்காளி போல காட்டுவதற்கு, தங்களது உடலை வதைக்கும் லைட்மேனுக்கோ, சண்டை நடிகர்களுக்கோ, துணை நடிகர்களுக்கோ, முகப்பூச்சு கலைஞர்களுக்கோ குரல் கொடுத்தார்களா? தொழிலாளர்களின் சம்பளத்தை நியாயமாக உயர்த்தாமல் நான் நடிக்கமாட்டேன் என்று தலயோ, தளபதியோ, உலக நாயகனோ, சூப்பரோ பேசினார்களா? இல்லை அவர்கள் ஏன் பேசவில்லை என்று பதிவுலகம்தான் துள்ளிக் குதித்ததா? சினிமாத் தொழிலாளர்களின் துயரத்தை நேரில் அறிந்த அண்ணன் உண்மைத்தமிழன் கூட, புவனேஸ்வரியின் ஒரு கோடி ரூபாய் வராக் கடன் குறித்து கவலைப்படுபவர், தொழிலாளிகளுக்காக ஒரு நீண்ட பதிவு வேண்டாம், ஒரு  குறும்பதிவு கூட போடவில்லையே?

அடுத்த நாள் மலமாக சிதறப்போகும் ஒரு மட்டன் பிரியாணிக்கு இத்தனை ஆர்ப்பாட்டமா? கூச்சமாக இல்லை? ஷூட்டிங்கில் தல போட்ட பிரியாணியை முழுங்கி விட்டு வீட்டில் தனது குடும்பத்தினர் கஞ்சி குடிப்பதற்கு பேட்டா வந்தால்தான் முடியும் என்ற நிலையில் எந்த தொழிலாளி அந்த மணமணக்கும் பிரியாணியை மகிழ்ச்சியுடன் முழுங்க முடியும்?

களை பறிக்கும் பெண் விவசாயத் தொழிலாளிக்கோ, இல்லை நாற்று நடும் ஆண் தொழிலாளிக்கோ அன்றாடக் கூலியை ஒரு சிறுவிவசாயி அன்றே கொடுத்து விடுகிறார். அவரும் அவருக்கு முடிந்தபடி தேநீர், வடை, சாப்பாடு என்று தொழிலாளிகளுக்கு அளிக்கிறார். ஆனால் ஒரு சிறு விவசாயிக்கு இருக்கும் நேர்மை கூட கோடிகளில் புரளும் இந்த சினிமா கயவாளிகளுக்கு இல்லையே?

அன்றாடம் உழைத்தாலும் அதற்கென்ற கூலி வராது என்ற நிலைதானே அந்த முகப்பூச்சுக் கலைஞரை, சினிமா உலகை விட்டே வெளியேறச் செய்திருக்கிறது. அந்த சினிமா உலகில் சில கோடிகளை சம்பளமாக வாங்கும் அஜித் இல்லையா? அவரும் அதற்கு காரணமில்லையா? கேட்டால் அதற்கு அவர் என்ன செய்வார், அதெல்லாம் தயாரிப்பாளரது பிரச்சினை என்று நமது புத்திசாலி பதிவர்கள் கேட்பார்கள். அதையும் பார்த்து விடுவோம்.

“ஒரு திரைப்படத்தின் தயாரிப்புச் செலவில் கதாநாயகன், நாயகி மற்றும் முன்னணி நட்சத்திரங்களின் சம்பளம் சுமார் 30 சதவீதம்; இயக்குநருக்கு 10 சதவீதம்; தயாரிப்பு செலவு 50 சதவீதம்; தொழிலாளிகளின் அனைவரின் சம்பளம் 10 சதவீதம் – இதுதான் உத்தேசமாக தமிழ் சினிமா ஒன்றின் தயாரிப்புச் செலவு என்று கூறப்படுகிறது.”

“கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நட்சத்திரங்களும், நட்சத்திர இயக்குநர்களும் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளத் தயாராக இல்லை; கங்காருவை முத்தமிடுவதற்காக ஆஸ்திரேலேயாவிற்கும், ரங்க ராட்டினம் சுற்றுவதற்காக அமெரிக்காவுக்கும் ‘அவுட்டோர்’ சென்று காசை அழிப்பதை நிறுத்த இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தயாராக இல்லை.”

இருந்தாலும் தயாரிப்புச் செலவை குறைக்க வேண்டும், வெட்டியாக செலவழித்த பணத்திற்கு இலாபம் பார்க்க வேண்டும். என்ன செய்கிறார்கள்? இலாபத்திற்கு இரசிகர்கள் தலையில் கை வைக்கிறார்கள். ரிலீசாகும் புதிய படத்தின் டிக்கெட்டிற்கு என்ன விலை வேண்டுமானாலும் வைக்கலாம் என்று அரசு என்றோ அறிவித்து விட்டது. இதற்கு மேலும் முதல் ஒரு வாரத்திற்கு திரையரங்க உரிமையாளர்களே பிளாக்கில் ஆள் வைத்து 500, 1000 என்று விற்பனை செய்கிறார்கள். இதன்படிதான் மங்காத்தாவோ, ஏழாம் அறிவோ, எந்திரனோ முதல் பத்து நாட்களில் கணிசமாக இலாபத்தை எடுத்து விடுகின்றது.

ஒரு வேளை எனது படம் அரசு நிர்ணயித்த கட்டணத்தில்தான் ஓட வேண்டும் என்று அஜித் அறிவித்து அமல்படுத்தினார் என்றால் மங்காத்தா தமிழகம் முழுவதும் உள்ள எல்லா திரையரங்குகளிலும் நூறுநாட்கள் ஓடினாலும் போட்ட காசை எடுக்க முடியாது. அதன்படி தலயின் வருமானம் என்பது இரசிகர்களை பிக்பாக்கட் அடித்து சம்பாதித்ததுதான். அது ஒரு இரத்தப் பணம். அந்தப் பணத்தில்தான் அவர் தனது படங்களில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு பிரியாணி செய்து போடுகிறார். இந்த பிரியாணி அவரே கைப்பட செய்திருந்தாலும் அதன் செலவு என்னவோ அவர் வழிப்பறி செய்ததுதான்.

இனி தயாரிப்புச் செலவை குறைக்க வேண்டுமென்றால் இந்தக் கயவாளிகள் தொழிலாளிகளின் தலையில் கை வைக்கிறார்கள். இன்று தமிழ் சினிமாவில் வேலை செய்யும் தொழிலாளிக்கு ஒரு கொத்தனார் அல்லது பெயிண்டரின் சம்பளம் கூடக் கிடையாது. அப்படியே ஒரு சினிமாவிற்கு வேலை செய்யச் சென்றாலும் அந்த பேட்டா கிடைக்கும் என்ற நிச்சயம் கிடையாது. ஆக திரைப்படத் தயாரிப்பின் பத்து சதவீதம்தான் தொழிலாளிகளுக்குச் செல்கிறது என்றாலும் அதைக்கூட தருவதற்கு இந்த முதலைகளுக்கு மனமில்லை. ஆனால் இந்த முதலைகளுக்காக கண்ணீர் வடிப்பதற்கு பதிவுலகில் பஞ்சமில்லை.

எனில் நமது மனிதாபிமானம் எதன்பால் இருக்க வேண்டும்? பேட்டா  கூலி குறித்தா, மட்டன் பிரியாணி குறித்தா?

தமிழ் சினிமா நட்சத்திரங்களின் வள்ளல் கதைகள் குறித்து எம்.ஜி.ஆர் தொட்டு விஜயகாந்த் வரை ஏராளமுண்டு. ராமாவரம் தோட்டத்தில் புரட்சித் தலைவர் போடாத விருந்தா, சாப்பிடாத ஆட்களா? விஜயகாந்த் கொடுக்காத அயர்னிங் மிஷினா, மூன்று சக்கர வண்டியா? இல்லை அகரம் பவுண்டேஷனுக்கு அழைத்தால் ஸ்விட்சுடு ஆஃப் (ஆதாரம் அண்ணன் உண்மைத் தமிழன்) என்று வந்தாலும் சூர்யாவின் வள்ளல்தனத்தை வியக்காத பதிவர்களா? எழுதாத பத்திரிகையாளர்களா? யாரிடம் கதை விடுகிறீர்கள்?

கோடிகளில் புரளும் நட்சத்திரங்கள் சில ஆயிரங்களை விட்டெறிவதை, அவர்களது கைகளுக்குத் தெரியாத தருமம், விளம்பர நோக்கமற்ற உதவி என்று ஆயிரத்தெட்டு முறை இந்தக்கதைகளை கேட்டிருந்தாலும், இன்று ஏதோ அஜித் மட்டும் விளம்பரமில்லாமல் பிரியாணி செய்து போடுகிறார் என்று குதூகலிக்கிறார்களே? ஒரு மொக்கை மனிதாபிமானத்தை பாராட்டும் கருத்து கூட அப்படியே அட்சரம் மாறாமல் அதே தரமான மொக்கையுடன் இருப்பதை என்னவென்று சொல்ல?

சினிமாவில் சம்பாதிப்பது என்பது ஒரு சூதாட்டத்தில் ஜாக்பாட் அடிப்பதற்கு ஒப்பானது. அதில் இழந்தவர்கள் இருப்பது போல சுருட்டியவர்களும் இருக்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்தைப் பொறுத்து இந்தச் சுருட்டலை தயாரிப்பாளர்களோ இல்லை அவர்களால் திட்டமிட்டு உருவாக்கப்படும் நட்சத்திரங்களோ, விநியோகஸ்தர்களோ, திரையரங்க உரிமையாளர்களோ, பைனான்சு கொடுக்கும் சேட்டுக்களோ அள்ளிக் கொள்கிறார்கள். அள்ளிய கோடிகளில் சில ஆயிரங்களை கிள்ளி எறிவதுதான் இந்த விளம்பரமற்ற வள்ளல் குணத்திற்கு சான்றாக வியந்தோதப்படுகிறது.

இதன் மறுபக்க நாணயமாகத்தான் சினிமா தொழிலாளர்கள் வர்க்க உணர்வற்ற அடிமைகளாக காலம் தள்ளுகிறார்கள். முதலில் அவர்களை தொழிலாளர்கள் என்று வழமையான பொருளில் அழைக்க முடியாது. அது ஒரு உதிரியான வேலை, உத்திரவாதமற்ற ஊதியம், கம்பெனிகளைப் பொறுத்து நல்ல சாப்பாடு இல்லையென்றால் மோசமான சாப்பாடு, என்று உதிரிப்பாட்டாளி வர்க்கத்திற்குரிய நிலைமைகளே அவர்களின் பணிச்சூழலில் நிலவுகின்றன. அவர்களை ஒரு தொழிலாளி வர்க்கம் என்ற முறையில் அணிதிரட்டுவதும், உணரவைப்பதும், அமைப்பாக்குவதும் சிரமம்.

1950களுக்கு பிறகு ஒளிப்பதிவாளர் நிமாய் கோஷ், இசையமைப்பாளர் எம்.பி சீனிவாசன் போன்ற தலைவர்கள் அவர்களை அமைப்பாக்கி போராடினார்கள். அப்போது அவர்களை ஒழிப்பதற்கு ஏவி.எம் முதலான முதலாளிகள் துடித்ததும் வரலாறு. அந்த வகையில் குறைந்த பட்ச உரிமைகளையாவது பெற்றுத்தரும் அமைப்பாகத்தான் பெப்சி உருவெடுத்தது. அதுவும் இப்போது அம்மா, அய்யா ஆட்களின் தயவில் ஏதாவது கிடைக்காதா என்ற அவல நிலையில் காலம் தள்ளுகிறது.

1997-ஆம் ஆண்டு அவர்களது ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்ற பிரச்சினை வந்த போது பெப்சி தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்தார்கள். முதலாளி, தொழிலாளி பிரச்சினையை படைப்பாளிகள் என்ற போர்வைக்குள் நின்று கொண்டு திசைதிருப்பும் வேலையை முதலாளிகளான பாலச்சந்தர், பாரதிராஜா போன்றோர் செய்தனர். அப்போது ம.க.இ.க சார்பாக இதில் தலையிட்டு படைப்பாளி முகமூடியில் இருக்கும் முதலாளிகளை தோலுரித்து தீவிர பிரச்சாரம் செய்தோம். பெப்சி தலைவர்களை சந்தித்து ஆதரவை தெரிவித்தோம். அவர்களும் உண்மையான சினிமா உலகையும், அதில் அல்லல்படும் தொழிலாளர்களின் கதைகளையும் விரிவாக எடுத்துச் சொன்னார்கள்.

அதே ஆண்டு ஆகஸ்டு 6-ம் தேதி சென்னை கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் எதிரே தொழிலாளர்களை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்காக கோடம்பாக்கம், வடபழனி பகுதிகளில் உள்ள சினிமா தொழிலாளர் குடியிருப்புகளில் விரிவான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அந்தக் கூட்டத்திற்கு கிட்டத்தட்ட 5000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வந்தனர். கூட்டத்தில் தோழர்கள் பேசும் போதும், கலைக்குழுத் தோழர்கள் பாடும் போதும் விசில் சத்தம் அலை அலையாய் வந்தது இப்போதும் நினைவில் நிற்கிறது.

படைப்பாளிகளான முதலாளிகளின் யோக்கியதையை தோலுரித்து ரூ.2 விலையில் ஒரு சிறு வெளியீடு கொண்டு வந்து கிட்டத்தட்ட 10,000 பிரதிகள் தொழிலாளிகளிடம் விற்பனை செய்யப்பட்டன (வினவிலும் விரைவில் வெளியிடுகிறோம்). கூட்டம் முடிந்ததும் துணை நடிகைகள், ஏனைய தொழிலாளர்கள், பெப்சி நிர்வாகிகள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்ததும் நினைவுக்கு வருகிறது. அதற்கு அடுத்தபடியாக அவர்களே நடத்திய கூட்டங்களிலெல்லாம் எமது கருத்துக்கள் அவர்களது கருத்துக்களாக உணர்ந்து பேசப்பட்டன.

எனினும் இதற்கு மேல் இந்தத் தொழிலாளர்களை அமைப்பாக்குவதும், போராடவைப்பதும் சாத்தியமில்லை. ஏற்கனவே குறிப்பிட்டபடி நிலையில்லாத சூழலில் காலம் தள்ளும் அவர்களை ஒரு தொழிற்சாலை தொழிலாளி போல உணரவைப்பது கடினமான ஒன்று.

இந்தப் பின்னணியில்தான்  தமக்கு பேட்டா வழங்காத சூழலை எதிர்த்து பேச முடியாத அந்த தொழிலாளி தனக்கு மட்டன் பிரியாணி போட்ட தலயின் மனிதாபிமானத்தை பாராட்டுவதை கணக்கில் கொள்ளவேண்டும். இது போராட இயலாத ஒரு அடிமையின் அவல நிலை.

வர்க்கம் என்ற முறையில் அணிதிரண்டு சினிமா முதலாளிகளை எதிர்கொள்வதற்கு நிமாய்கோஷ், சீனிவாசன் போன்ற தலைவர்கள் இன்று இல்லை. இருப்பவர்களெல்லாம் அ.தி.மு.க, தி.மு.கவின் பினாமிகளாகவும், குறிப்பிட்ட அளவு முதலாளிகளாகவும் இருக்கிறார்கள். இது போக அரசிடம் வீடுகட்ட இடம் வாங்குவது, இதர சலுகைகள் வாங்குவது என்பதாகத்தான் அவர்களது சிந்தனை இருக்கிறது. நம்மைச் சுரண்டும் முதலாளிகளிடம் போராடிப் பெறுவது தமது உரிமை என்ற சிந்தனை அங்கே இல்லை.

இதனால் இவர்களை கைவிட வேண்டுமென்று பொருளில்லை. ஆனால் அவர்களாகவே இந்தச் சுரண்டலை உணராத வரை, நாம் வெளியிலிருந்து என்னதான் உதவி செய்தாலும் அதனால் பெரிய பலனில்லை. அதே நேரம் திட்டவட்டமான பணிச்சூழல், ஊதியம், என்ற நிலைமை வரும்போது அங்கே நிச்சயம் உணர்வு பெற்ற தொழிலாளிகளும், தொழிலாளிகளின் தலைவர்களும் உருவாவார்கள்.

ஏவி.ஏம் கம்பெனியில் சைவச்சாப்பாடு நன்றாக இருக்கும், கவிதாலாயா கம்பெனியில் பால்பாயாசம் சுவையாக இருக்கும், படப்படிப்பு முடிந்த பிறகு ரஜினி எல்லோருக்கும் சட்டை எடுத்துக் கொடுத்தார், கமலஹாசன் பேன்ட் வாங்கிக் கொடுத்தார், அஜித் பீஸ் உள்ள மட்டன் பிரியாணி போட்டார் என்று தொழிலாளிகள் பேசுவது ஏனென்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் சினிமா உலகில் தொழிலாளிகள் உணர்வற்று அடிமைகளாக இருப்பதற்கு இத்தகைய சினிமாக் கம்பெனி கலாச்சாரங்கள் காரணமென்பதையும் நாம் அறியவேண்டும். பிரியாணியைத் தூக்கி எறிந்து பேட்டாவிற்காக போராடும் நிலை வரும்போது அவர்களது இந்த சீரழிவு கலாச்சாரம் அழியும்.

ஆனால் தொழிலாளிகள் கூட என்றாவது ஒரு நாள் திருந்துவார்கள். ஆனானப்பட்ட நுகர்வு கலாச்சாரத்தில் மூழ்கிக் குளித்த அமெரிக்க மக்களே திருந்தவில்லையா என்ன? அதே நேரம் பத்ரியோ இல்லை பதிவர்களோ இந்த மட்டன் பிரியாணி மனிதாபிமானத்திலிருந்து திருந்துவார்கள் என்பதற்கு உத்திரவாதம் இருக்கிறதா? தெரியவில்லை!

பத்ரிக்கு முக அலங்காரம் செய்த அந்த தொழிலாளி சினிமா உலகை விட்டு துரத்தப்பட்ட நிகழ்வு எதுவும் நமது பதிவர்களுக்கு துயரமாக தெரியவில்லை. ஆனால் அந்தத் துயரத்திற்கு காரணமான உலகைச் சேர்ந்த ஒரு நடிகன் பிரியாணி போட்டது மட்டும் மாபெரும் மனிதாபிமானமாகத் தெரிகிறது என்றால் “நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்?”. (தத்துவ உபயம்: தமிழ்ப் பதிவர்கள்).