privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅன்னலட்சுமி - திருவோட்டுத் தமிழன் !

அன்னலட்சுமி – திருவோட்டுத் தமிழன் !

-

தமிழர் கூட்டம்
‘அம்மா’ உணவகத்தில் தமிழர் கூட்டம்! திருவோட்டுத் தமிழர்களை உருவாக்கிய அன்னலட்சுமி!

சென்னை நகரில் அம்மாவின் அரசு தற்போது ஐம்பதுக்கும் மேற்பட்ட மலிவு விலைச் சிற்றுண்டிக் கடைகளைத் திறந்திருக்கிறது. அடுத்த சில மாதங்களில் வார்டுக்கு ஒன்று என சென்னைக்குள் மட்டும் இருநூறு கடைகள் திறக்கப்பட இருக்கின்றன. இந்தக் கடைகளில் காலை ஏழு மணி முதல் பத்து மணி வரை காலைச் சிற்றுண்டியாக இட்லியும், மதியம் பணிரெண்டு மணி முதல் மூன்று மணி வரை தயிர் சோறும், சாம்பார் சோறும் வழங்கப்படுகின்றன முறையே ஒரு ரூபாய், மூன்று ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் விலையில்.

எல்லா இடங்களிலும் காலை ஏழு மணிக்கே கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் நாணயங்களை உள்ளங்கைகளில் வைத்து உருட்டியபடியே நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சரியாக பத்து மணிக்கு உணவுச் சீட்டு வழங்கும் அறை மூடப்படுகிறது. அதே போல மதியம் மூன்று மணிக்கும் சடாரென்று சாத்தப்படுகிறது. அதற்கு அடுத்த நொடியே வந்தாலும் அவர்கள் துரதிர்ஷ்டசாலிகள் தான். இப்படிக் கடைசி நொடிகளில் ஏமாந்து திரும்புபவர்களே நூற்றுக்கணக்கில் இருக்கிறார்கள். கடை திறப்பதற்கு முன்னதாக காத்திருப்பவர்களும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.

ஆட்டோ டிரைவர், வாட்ச் மேன், கார்பெண்டர், பெயிண்டர், கொத்தனார், மூட்டை தூக்குபவர்கள், அலைந்து திரிந்து விற்பனை செய்பவர்கள், பல்வேறு கூலி வேலைகளுக்கு செல்பவர்கள் என்று உதிரி வேலை செய்பவர்கள் தான் இங்கு எழுபது சதவீதத்திற்கும் அதிகமாக வருகின்றனர். இவர்களைத் தவிர அரசுக் கல்லூரி மாணவர்கள், படித்துவிட்டு வேலை தேடுபவர்கள், மாநகராட்சி பள்ளிச் சிறுவர்கள், கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெற்றோருடன் வரும் தனியார் பள்ளிகளில் படிக்கும் சிறுவர் சிறுமியர், சிறிய நிறுவனங்களில் பனியாற்றும் ஊழியர்கள், பெண்கள், உழைத்து நைந்து போன நடுத்தர வர்க்கம், கொஞ்சம் ஐ.டி துறை ஊழியர்கள் என்று பல்வேறு தரப்பினரையும் இங்கு பார்க்க முடிகிறது.

கடந்த பத்தாண்டுகளில் தனியார்மய, தாராளமயக் கொள்கை பிரம்மாண்டமான அளவில் இந்திய கிராமங்களை நகர்ப்புறங்களுக்கு பெயர்த்தெடுத்திருக்கிறது. கிராம மக்களில் கணிசமான பகுதியினரை நகர்ப்புற வேலைகளைச் சார்ந்து வாழும்படி நிர்ப்பந்தித்திருக்கிறது. இவர்களின் உணவுத் தேவைகளுக்காக கடந்த 5,6 ஆண்டுகளில் மட்டும் பல்லாயிரக்கணக்கில் கையேந்தி பவன்கள் என்று அழைக்கப்படும் தள்ளுவண்டிக் கடைகள் பல்கிப் பெருகியுள்ளன.

அன்னலட்சுமிசுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர், இத்தகைய சாலையோரத் தள்ளுவண்டிக் கடைகளில், கைகளில் தட்டை ஏந்தி நின்று சாப்பிடுபவர்கள் அடிப்படை உழைக்கும் வர்க்கத்தினராகத்தான் இருந்தனர். இன்றோ வளர்ச்சி, வல்லரசு ஆகியவற்றின் அடையாளமாகக் சித்தரிக்கப்படும் ஐ.டி துறை, பன்னாட்டு நிறுவனங்கள், விமானக் கம்பெனிகள் உள்ளிட்ட நிறுவனங்களில் வெள்ளைக்காலர் பணிகளில் அமர்ந்திருக்கின்ற, நாக்கில் ஆங்கிலம் புழங்குகின்ற இளைஞர்களும் பெண்களும் கையேந்தி பவன் இட்லிக்கு காத்திருப்பதை சென்னையில் மிகச் சாதாரணமாக காணமுடிகிறது.

ஆங்கிலம் பேசினாலும், தமிழ் பேசினாலும், இந்தி பேசினாலும், டை கட்டியிருந்தாலும், லுங்கி கட்டியிருந்தாலும், கையில் கரணை பிடித்தாலும், மவுஸ் பிடித்தாலும், பேனா பிடித்தாலும், யாராயிருந்தாலும் அன்றாட சராசரி ஊதியம் ரூ.200 என்று உழைப்பின் சந்தை விலையை நிர்ணயித்திருக்கிறது மன்மோகன் சிங்கின் பொருளாதாரக் கொள்கை. சித்தாள் முதல் ஐ.டி துறை ஊழியர்கள் வரை மட்டுமின்றி, எம்.பி.பி.எஸ் முடித்த மருத்துவர்களுக்கும் கூட தனியார் மருத்துவமனைகள் வழங்கும் ஊதியம் கிட்டத்தட்ட இதுதான்.

விலைவாசி உயர்வு என்று கூறப்படுகின்ற முதலாளித்துவக் கொள்ளையும், தீவிரமடைந்து வரும் உழைப்புச் சுரண்டலும், உழைப்பாளிகளின் உண்மை ஊதியம் மற்றும் வாங்கும் சக்தியில் ஏற்படுத்தியிருக்கும் இந்த வீழ்ச்சி, உட்கார்ந்து சாப்பிடுவதைக் கூட மக்களின் கைக்கு எட்டாத ஒரு ஆடம்பரமாக்கி விட்டது.

இத்தகைய கையேந்தி பவன்கள் பெருகியிருக்கும் அதேநேரத்தில், மெக்டொனால்ட்ஸ், கெ.எப்.சி கடைகளும், சைனிஸ்,மெக்சிகன், தாய் உணவு வகைகளுக்கான தனித்தனி கடைகளும், 30,40 வகை காப்பிகளை வழங்குகின்ற காபி பார்களும், சரவண பவன், சங்கீதாஸ் போன்ற உயர்தர சைவ உணவகங்களும் இதே சென்னையில் பெருகியிருப்பதைப் பார்க்கிறோம். உணவுத் திருவிழாக்கள் நடக்கின்றன. சென்னையின் எந்தக் கடையில் என்ன உணவு சிறப்பு என்பதைப் பற்றி, “நாவன்மை” கொண்ட வல்லுநர்கள் எச்சில் ஊறவைக்கும் எழுத்துகளை நாளேடுகளிலும், வார ஏடுகளிலும் துப்புகிறார்கள். மாதம் ஒரு நாளாவது இத்தகைய கடையொன்றில் அமர்ந்து சாப்பிடுவது மக்களின் வாழ்க்கை இலட்சியங்களில் ஒன்றாக வடிவெடுத்திருக்கிறது.

உணவு விடுதிகளில் சாப்பாடு மற்றும் சிற்றுண்டி உணவு வகைகளை ஒரு குறிப்பிட்ட விலைக்கு மேல், அடாத விலைக்கு விற்கக் கூடாது என்ற கட்டுப்பாடு முன்னர் பெயரளவிலாவது இருந்தது. புதிய பொருளாதாரக் கொள்கையின் படி, இது சுதந்திரச் சந்தையில் தலையிடும் நடவடிக்கை. அதாவது ஒரு இட்டிலி 20 ரூபாய் என்ற விலைக்கு விற்று, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பை உயர்த்த ஒரு தொழிலதிபர் முயற்சிக்கும்போது, இட்டிலியின் அதிகபட்ச விலை 10 ரூபாய் என்று அரசு உச்ச வரம்பு நிர்ணயிக்குமானால், அது நாட்டின் வளர்ச்சி வீதத்தை பாதியாக முடக்கும் பயங்கரவாத நடவடிக்கை ஆகிவிடுகிறது. மேலும் 20 அல்லது 30 ரூபாய் கொடுத்து உயர்தரமான இட்டிலியை வாங்கிச் சாப்பிடும் ஜனநாயக உரிமையை வசதியுள்ளவர்களிடமிருந்து பறிக்கின்ற அரசியல் சட்டத்துக்கு விரோதமான நடவடிக்கையும் ஆகிவிடுகின்றது. எனவேதான் 30 ரூபாய் இட்டிலி சாப்பிடுவோரின் உரிமையைப் பறிக்காமலேயே ஒரு ரூபாய் இட்டிலியையும் அறிமுகப் படுத்தியிருக்கிறார் அம்மா.

00

அன்னலட்சுமிநாடு வல்லரசாகிறது என்ற கூச்சல் எந்த அளவுக்கு எழுகிறதோ அதே அளவுக்கு சமூகத்தில் வர்க்கப் பிளவும் ஆழமாவதை தான் முப்பது ரூபாய் இட்லியும் ஒரு ரூபாய் இட்லியும் காட்டுகின்றன. கையேந்தி பவன்களிலேயே முந்தின நாள் வரை சாப்பிட்ட கடையை விட்டு அடுத்த, தரம் சற்றுக் குறைவானாலும் விலை குறைவான கடைக்கு நகரும் அளவுக்கு மக்களின் வாழ்க்கை வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த வீழ்ச்சியின் எல்லைதான் அம்மா தொடங்கியிருக்கும் ஒரு ரூபாய் இட்டிலி கடை.

முன்னர் எம்.ஜி. ஆரின் சத்துணவுத் திட்டம் தொடங்கியபோது, “பெத்தவனால் பிள்ளைக்கு சோறு போட முடியாதா? இது மக்களை இழிவு படுத்தும் செயல் அல்லவா? ” என்ற விமரிசனம் எழுந்தது.

ஆனால் மக்களின் வாங்கும் திறன் குறையக் குறைய, கையேந்துகின்ற நிலைக்குத் மிகப் பெரும்பான்மையான மக்கள் தள்ளப்பட்டிருந்தனர். நாளடைவில் இதை மக்களும் அங்கீகரித்து எம்.ஜி.ஆரை ஏழைப்பங்காளன் ஆக்கினர். இந்த ‘பொறுப்புமிக்க’ செயலை உலக வங்கி உடனே பாராட்டியது. புரட்சித்தலைவர் மகனுக்கு உணவளித்தார், புரட்சித்தலைவியோ தந்தைக்கும் உண்டியளிக்கும் உயர்ந்த நிலைக்குச் சென்றிருக்கிறார்.

ஆடு, மாடுகளுக்கும், முதுமலையில் யானைகளுக்கும் உணவிடும் அம்மாவின் ‘கருணை’ உள்ளம், அதே வகையில் மனிதர்களுக்கும் உணவிடுவது, அம்மாவை உயர்த்துகிறதா, மனிதர்களைத் தாழ்த்துகிறதா? பெரும்பான்மையான மக்களால் இது அம்மாவின் கருணை என்றே அங்கீகரிக்கப்படுகிறது.

இறந்த பின் சொர்க்கம் செல்ல விரும்பிய செல்வந்தர்கள், பட்டினியில் வாடிய ஏழை மக்களுக்கு சோறிடுவதற்காக சோழ வளநாட்டில் அறக்கூழ்ச் சாலைகள் அமைத்திருந்ததை பட்டினப்பாலை குறிப்பிடுகின்றது. ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னரும் நிலைமை மாறிவிடவில்லை. அன்று ஆற்றுப்படை பாடிய பாணர்களைப் போல, ஒரு ரூபாய் இட்டிலிக்கு வரிசையில் நிற்பவர்கள் அம்மாவின் கருணையைப் போற்றுகிறார்கள்.

இது மனிதர்களுக்குரிய நிலை அல்ல, எதுவுமற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட மனிதர்களை நடைப்பிணங்களாகப் பராமரிக்கும் நிலை. இது வாழ்வதற்குரிய ஏற்பாடல்ல உடலில் உயிர் ஒட்டிக் கொண்டிருப்பதற்கான ஏற்பாடு. இது கோசாலைகளில் மாட்டைக்கட்டி தீனி போடுவதைப் போன்ற விலங்கு நிலைக்கு மக்களைத் தாழ்த்துவது.

அன்னலட்சுமி திருவோடுஅரசின் இது போன்ற ’மனிதாபிமான’ நடவடிக்கைகளை மக்கள் ஏழைகள் மீதான அக்கறை, இரக்கத்தால் செய்யப்படுகிறது என்று அறியாமையால் கருதுகிறார்கள், மக்கள் அவ்வாறு கருதுவதாலேயே இவையெல்லாம் மனிதாபிமானச் செயல்களாகிவிடாது. சோறு போடுவது மனிதாபிமான நடவடிக்கை என்றால் குடிநீர் கேட்டு போராடும் போது எலும்பை முறிப்பது என்ன வகையான நடவடிக்கை ?

இலவச அரிசியோ, ஒரு ரூபாய் இட்டிலியோ இவையனைத்துமே மக்களின் கோபம் எல்லை மீறாமல் இருப்பதற்காக வீசப்படும் எலும்புத் துண்டுகள், கொந்தளித்துவிடாமல் தடுப்பதற்கான வடிகால்கள், உரிமைகளை கேட்கும் மனித நிலைக்கு உயர்ந்து விடாமல் இருத்தி வைக்கும் தடைகள்.

நிதி மூலதனக் கும்பல்களால் பொருளாதார திவால் நிலைக்கு ஆளாக்கப்பட்ட கிரீஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளில், பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் மக்களின் ஓய்வூதியத் தொகை வெட்டப்பட்டது, சுரங்கத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் வேலை நீக்கம் செய்யப்பட்டு சுரங்கங்கள் தனி உடைமை ஆக்கப்பட்டன. ஊதியங்கள் குறைக்கப்பட்டன. கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துக்குமான மானியங்கள் வெட்டப்பட்டன..

இந்த நடவடிக்கைகள் தோற்றுவித்த கோபம் எரிமலையாய் வெடித்து கிரீஸ் எங்கும் தீப்பிழம்பாய் ஓடியது. இருப்பினும் அரசும் ஆளும் வர்க்கமும் பின்வாங்கவில்லை. தாங்களத் திட்டமிட்டிருந்த சிக்கன நடவடிக்கைகள் அனைத்தையும் அமல் படுத்தினார்கள். மக்கள் போராட்டங்களை ஒடுக்கினார்கள்.

இப்போது முற்றிலுமாக வாங்கும் சக்தி இழந்து பட்டினிச் சாவை நோக்கித் தள்ளப்படும் மக்களுக்கு இலவச ரொட்டித் துண்டுகளும், காய்கறிகளும் வழங்குகிறார்கள். ஜெயலலிதாவின் மலிவு விலைச் சிற்றுண்டி ரகம் தான். இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் இங்கே விலை, அங்கே இலவசம்.

ஜெயலலிதா இப்படி ஒரு கடையைத் திறந்த மறுகணமே ஆயிரக்கணக்கான மக்கள் ஏன் கூடுகிறார்கள், என்பது புரிந்து கொள்ள முடியாததல்ல. மக்களின் வாழ்நிலையில் ஏற்பட்டுவரும் இந்த வீழ்ச்சியைப் புரிந்து கொண்டுதான் ஜெ அரசு இந்த சிற்றுண்டிச் சாலைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

ஆளும் வர்க்கங்கள் எதிர்பார்க்கும் சமூக அமைதி நாளுக்கு நாள் குலைந்து வருகிறது. உடமையை இழந்த, ஓட்டாண்டி நிலையிலுள்ள, வாங்கும் சக்தியற்ற வர்க்கங்களின் அதிருப்தியை, கலக உணர்வை, கொந்தளிப்பை மட்டுப்படுத்தும் வடிகால்களாகவே இத்தகை இலவச திட்டங்களும், மலிவு விலை சிற்றுண்டிகளும் பயன்படுகின்றன. இதனை, மக்களை மயக்கத்தில் ஆழ்த்தும் இன்னொரு டாஸ்மாக் என்றும் சொல்லலாம்.

வறுமையின் காரணமாக தனது குடும்பத்தினரின் பசியைப் போக்குவதற்கு, வேறு வழியில்லாமல் குப்பைக் கீரையைக் கொணர்ந்து, அதை உப்பு போட்டு வேக வைப்பதற்குக் கூட வழியில்லாத காரணத்தினால், வெறுமனே வேகவைத்து உணவு தயாரிக்கும் பெண்ணைப் பற்றி சிறு பாணாற்றுப்படை கூறுகிறது. அது மட்டுமல்ல, தனது குடும்ப வறுமை வெளியே தெரிந்தால் கேலி செய்வார்களே என்று கூச்சப்பட்டுக் கொண்டு கதவையும் தாளிட்டுக்கொள்கிறாள் அந்தப் பெண் என்கிறது சிறு பாணாற்றப் படை. இது சங்க இலக்கியம்.

பல நூற்றாண்டுகள் தாண்டி, இன்று நவீன தொழில் வளர்ச்சியும், உற்பத்தியும் பெருகியிருக்கும் சூழலில், ஒரு ரூபாய் இட்டிலிக்காக, “அன்ன லட்சுமி தாயே” என்று திருவோட்டைக் கையிலேந்தி குரல் கொடுக்கிறது தமிழகம்.

– வையவன்
________________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – மார்ச் 2013
________________________________________________________________________________