பக்தர்களே சிந்தியுங்கள்!

சிவனடியார் ஆறுமுகசாமி

தொண்ணூறு வயதில் போராடும் சிவனடியார் ஆறுமுகசாமி.

தொண்ணூறு வயது… தள்ளாத முதுமை… ஆனால் தன்மான மனது, சுயமரியாதை உணர்வை தள்ளாத உறுதியுடன் கொட்டும் மழையில் சிவனடியார் ஆறுமுகசாமி தமிழ் மக்களின் குறிப்பாக பக்தர்களின் உரிமையை நிலைநாட்ட தில்லையம்பலத்திலே ”தேவாரம் பாடியே உயிர்துறப்பேன், கோயில் மக்களின் பொதுச்சொத்து!” எனப் போராடும் காட்சி, வரலாற்றில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று! தமிழ்ச் சுவடிகளையே அழித்து, பெற வந்த சோழனையே எதிர்த்து, தொழ வந்த நந்தனையே எரித்து வெறியாடும் தீட்சிதர்களின் குகைக்குள் நுழைந்து கோயிலின் பொது உரிமைக்காகப் போராடுவது என்பது சாதாரண விசயமல்ல. தமிழுக்கும், சைவத்திற்காகவும் ‘மடம்’ வளர்ப்பதாகச் சொல்லும் எந்தத் தொந்திகளும் முன் வராத நிலையில், தமிழுக்காகவே உயிர் வளர்ப்பதாகச் சொல்லும் எந்தத் ‘தலைகளும்’ சுரணையற்ற நிலையில் ”சிதம்பரம் நடராஜர் கோயில் பொதுச்சொத்து, தீட்சிதர்களின் கொள்ளைக்கு அரசே துணை போகாதே!” என ஆறுமுகச்சாமி எழுப்பும் உரிமைக் குரல் பக்தர்களுக்கு அப்பாற்பட்ட விசயமா என்ன?

கோயிலை அரசு நிர்வாகம் செய்ய போராடிப் பெற்ற உரிமைகளை அனுபவிக்காத பக்தர்கள் உண்டா? அரசு நிர்வாகம் ஏற்ற குறுகிய காலத்திலேயே உண்டியல் வசூலின் லட்சங்களும், முறையான தரிசனம், விழாக்களும் கொள்ளைக் கூடாரத்தின் இருட்டை விலக்கி வெளிப் பிரகார வெளிச்சங்களும்… இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பக்தர்கள் பெற்று வந்த பலனை, தனி ஒரு தீட்சிதர் கும்பலுக்கு தர வேண்டிய அவசியமென்ன?

சிவனடியாரும், அவரோடு சேர்ந்து போராடுபவர்களும் முன் வைக்கும் கோரிக்கை என்ன? கோயிலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கேட்டார்களா? இல்லையே! இல்லை கோயில் தொடர்பான பூஜை, நைவேத்யங்கள், நடராச தரிசனங்களை நாங்கள் மட்டும்தான் செய்வோம் என்று வம்புக்கு வந்தார்களா? இல்லையே! அவர்கள் முன் வைப்பது கோடிகளில் புரளும் கோயிலின் நிர்வாகத்தை மட்டும் மக்களின் அதிகாரத்திற்கு உட்பட்ட ஒரு அரசு அமைப்பிடம் மேற்பார்வையிடச் செய்வது, கோயில் நகைகள் உட்பட வரவு செலவு கணக்கை தணிக்கை செய்து ஒழுங்குபடுத்த அதிகாரிகளை நியமிப்பது என்ற ஜனநாயகமான, நியாயமான கோரிக்கைகளைத்தானே முன் வைக்கிறார்கள், இது பக்தர்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாம்தானே! இதற்கு தீட்சிதர்கள் ஏன் முரண்டு பிடிக்கவேண்டும்! நெடுநாள் கோயில் பணி செய்வதாலேயே கோயில் எனக்குத்தான் சொந்தம் என்றால்? இந்த நியாயத்தை எல்லா இடத்துக்கும் பொருத்த ‘அவாள்’ தயாரா? சட்டப்படியும், ஆதாரப்படியும் உரிமையில்லாத ஒரு கோயிலை தங்களது ‘தனிச்சொத்து’ என்று தீட்சிதர்கள் வாது செய்வதை நியாய உணர்வுள்ள எந்த பக்தனும் ஏற்க முடியுமா?

நெடுநாள் ஒரு காலை உயர்த்திக் காட்டி கால் கொலுசு களவாடப்பட்டதை அம்பலவாணன் குறிப்பாக அம்பலப்படுத்திக் காட்டியும், மது, மாமிசம், மர்டர் என தீட்சித லீலைகள் ‘காவல்’ புராணத்தில் பதிவான நிலையிலும்… கேட்பதற்கே நாதியற்ற நிலையில் கோயிலின் ‘இறைப் புனிதத்தையும்’ நிலைநாட்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையமும், சிவனடியார் ஆறுமுகச்சாமியும் வாராது வந்தது பக்தர்களுக்கு அந்த நடராசனே தந்த வரமல்லவா? அரசிடம் போனால் கோயில் அவ்வளவுதான் என்று புரளி கிளம்பிய தீட்சிதர்களின் குரலில் குழப்பமடைந்த பக்தர்களே… இந்த இடைப்பட்ட காலத்தில் முன்னை விட கோயிலின் தரிசனங்களும், விழா விமர்சைகளும், கோயில் பராமரிப்பும் நீங்கள் கண்ணாரக் கண்ட போராட்ட தரிசனங்கள் அல்லவா!

தீட்சிதர்கள்

போராடியவர்கள் யாரும் தீட்சிதர்களின் வேலை வாய்ப்பை பறிக்கவுமில்லை, அவர்களின் மந்திர ஒலியை மறைக்கவுமில்லை.

போராடியவர்கள் யாரும் தீட்சிதர்களின் வேலை வாய்ப்பை பறிக்கவுமில்லை, அவர்களின் மந்திர ஒலியை மறைக்கவுமில்லை, இல்லை இவ்வளவு நாள் பக்தர்களின் நிதியை கொள்ளையடித்து, கோயிலுக்கு ஒரு வெள்ளை கூட அடிக்காத ‘அவாளை’ விரட்டிடவுமில்லை, இப்படியிருக்க, கோயில் அரசு நிர்வாகத்திற்குப் போனால் பூலோகமே இருண்டு விடும் என்பது போல் தீட்சிதர்கள் அலறுவதும், அதை நாம் நம்பும்படி அவர்கள் பிரச்சாரம் செய்வதும் எவ்வளவு பொய் என்பதை உணரமுடியாத அளவுக்கு பக்தர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல! இறைவன் தாள் பணிவதுதான் பக்தி உணர்வு, திருட்டு தீட்சிதனின் காலில் விழ வேண்டிய அவசியம் பக்தர்களுக்கில்லை!

யோசித்துப் பாருங்கள், இறைப் பணியாளர்களாய் தங்களை அலங்கரித்துக் கொள்ளும் தீட்சிதர்களின் கவனம் இறைவனின் அருள் வேண்டி நிற்கிறதா? ஏக்கரா கணக்கில் உள்ள கோயிலின் பொருள் வேண்டி நிற்கிறதா? பூஜை பண்ண எனக்கு இன்னும் பூ கொடு, நெய் கொடு, ஆலயத்தை சுத்தப்படுத்து, குளத்தை தூர்வாரு, கொடி மரத்துக்கு தகடு சுற்று, வரும் பக்தர்களுக்கு வசதியை ஏற்படுத்திக் கொடு, கட்டணம் இல்லாத தரிசனம் கொடு என்றெல்லாம் தீட்சிதர்கள் வாயிலிருந்து ஒரு நாளும் ஒரு வார்த்தை உண்டா? இப்படி கோயில் நலன் சார்ந்து ‘அவாள்’ குரல் கொடுத்தால், அடடா! பக்தி பரவசம் என்று தீட்சிதர்களை நாமும் கொண்டாடலாம், இதையெல்லாம் பற்றி குடுமிக்கும் கவலைப்படாமல், கோயிலை எங்களுக்கு சொத்தாக்கு, நகைகளை நாங்களே வைத்திருப்போம், தேவாரம் பாடக்கூடாது, உண்டியல் கூடாது… என்று பொருள் நோக்கிலேயே குதியாட்டம் போடுபவர்கள் குருக்களா இல்லை கொள்ளைக் கும்பலா? பக்தர்களே அர்ச்சனை தட்டை அவாளிடம் கொடுத்ததோடு நம் வேலை முடிந்துவிட்டது என்று கண்ணை மூடிக்கொள்ளாமல், சன்னதியில் நடக்கும் விவகாரங்களை கொஞ்சம் கண்னைத் திறந்து பாருங்கள்! போராடுபவர்களின் குரல் பக்தர்களின் நலனுக்கானது என்ற உண்மை தரிசனமாகும்.

விருதகிரீஸ்வரர் கோயில்

விருத்தாசலத்தில் விருதகிரீஸ்வரர் கோவிலில் பார்ப்பன சிவாச்சாரியர்களுக்கு ஆப்பு வைத்த போராட்டம் (2012-ம் ஆண்டு)

பக்தர்கள் கேள்வி கேட்க கூடாதென்று எந்தக் கடவுளும் சொன்னதில்லை! நக்கீரரை கேள்வி கேட்க வைத்து, அஞ்சாமல் உண்மை பேசிய அவருக்கு அருள் கொடுத்தவர்தான் சிவன், பக்தனுக்கு பகுத்தறிவு தப்பு என்றும் எந்தக் கடவுளும் சொன்னதில்லை. பஸ்சுக்கும், செலவுக்கும் காசை வைத்துக்கொண்டு உள்ள நிலைமைக்கு ஏற்ற மாதிரி உண்டியலில் காசு போடும் பகுத்தறிபவர்கள்தான் பக்தர்களும். கும்பிட நமக்கொரு கோயில் வேண்டும் என்பதுதான் பக்தர்களின் எதிர்பார்ப்பாய் இருக்க முடியுமே ஒழிய, அந்தக் கோயிலை தீட்சிதனுக்கு சொந்தமாக்க வேண்டும் என்பது எந்த பக்தனின் வேண்டுதலுமல்ல! பக்தர்களே உங்கள் மவுனத்தை தீட்சிதர்கள் தங்களுக்குச் சாதகமாக்க அனுமதிக்காமல், பொதுக்கோயில் உரிமைக்காக உங்கள் பக்திக்கடனை வெளிப்படுத்துங்கள்! தீட்சிதர்களின் அநீதிகளுக்கு எதிராக பக்தர்களிடம் நியாயம் கேட்டு போராடுபவர் இன்றைய சிவனடியார் ஆறுமுகசாமி மட்டுமல்ல, அன்றைக்கு வடலூர் ராமலிங்க அடிகளார் சிதம்பரம் கோயில் தீட்சிதர்களின் முறைகேடுகளையும், அநீதிகளையும் தட்டிக்கேட்டு இவர்கள் தகாத கும்பல் என்று எட்டிச் சென்றவர்தான். இந்த வரலாற்றின் வரிசையில் பக்தர்களே தீட்சிதர்களின் அக்கிரமங்களுக்கு எதிராக உங்கள் காணிக்கையாக போராட்ட உணர்வை தாருங்கள்! குருக்களுக்கே கோயில் சொந்தம் என்று தீட்சிதர்கள் சொல்லும் போது இதெல்லாம் ரொம்ப அநியாயம் என்று ஆர்த்தெழவேண்டாமா?

பல்லாயிரம் உழைக்கும் மக்கள் கட்டியெழுப்பிய கோயிலை, தமிழக உழைக்கும் மக்களின் பணத்தாலும், அரிசி, பருப்பாலும் நைவேத்திய மணம் கமழும் தமிழகத்தின் கோயிலில், தமிழுக்கும், தமிழனுக்கும் தீண்டாமை என்ற கொடுங் குற்றம் மட்டுமன்றி, தமிழக மக்களின் பாரம்பரிய சொத்தான கோயிலை, பிட்சைக்கு வந்த தீட்சிதர்கள் தங்கள் தனிப்பட்ட சொத்தாக்குவது என்ன நியாயம்? ஓமம் வளர்க்க வீட்டுக்குள் நுழைந்தவன் ஒட்டு மொத்த சொத்தையும் எழுதிக் கேட்டால் எந்த பக்தனும் எழுதித் தருவானா? நாம் பக்தர்களாக இருக்கலாம், அது தனிப்பட்ட விவகாரம், அதற்காக தீட்சினுக்கு அடிமையாயிருக்க வேண்டிய அவசியம் இல்லை!

போராடிப்பெற்ற சிறு உரிமைகளால் பலன் பெற்ற பக்தர்களே, சிந்தியுங்கள்! சிதம்பர ரகசியம் எளிமையானது! நமக்குத் தேவை பொது தீட்சிதர்களா? பொதுக் கோயிலா? இரண்டில் ஒன்றுதான் சிதம்பர ரகசியம்! பக்தர்களே பதில் சொல்லுங்கள்!

– துரை.சண்முகம்