privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்போலீசுவிழுப்புரம் : போலீஸ் உதவியோடு தோழர்களைத் தாக்கிய ரவுடிகள்

விழுப்புரம் : போலீஸ் உதவியோடு தோழர்களைத் தாக்கிய ரவுடிகள்

-

விழுப்புரத்தில் போலீஸ் ஆசியுடன் கள்ளச்சாராய விற்பனை!

விழுப்புரத்தின் நகரப் பகுதியான வி.மருதூரில் சில ஆண்டுகளாகவே போலீசின் ஆசியோடு சாராய விற்பனை நடந்து வருகிறது. இதனை தட்டிக்கேட்ட பகுதி பொதுமக்கள் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் மீது ரௌடிகள் கொலைவெறியோடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வி.மருதூர் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த ரவுடிகள் பத்து, ஜாக்கி சரத் குமார் இவர்களின் அம்மா முனியம்மா மற்றும் பெருமாள் நகர் பகுதியை சார்ந்த பவுல் வெங்கடேசன், இவனின் அம்மா விஜயா, மாமா அ.தி.மு.க. வார்ட் கவுன்சிலர் பெரியவர் கண்ணன், இன்னொரு மாமா கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய இந்த கும்பலின் வேலையே கள்ளச் சாராயம் விற்பது ரேஷன் பொருட்கள் கடத்துவதுதான். இவைதான் அவர்களின் குடும்பத்தொழிலாக இருந்து வருகிறது.

இவர்கள் அளிக்கும் மாமூல் தொகை காரணமாக காவல் துறை தரும் செல்வாக்குடன் இவர்கள் பல வருடங்களாக சாராய விற்பனையை நகரம் முழுவதும் நடத்தி வருகிறார்கள். பகுதியில் செயல்படும் பு.மா.இ.மு இதை பலமுறை கண்டித்துள்ளது. சென்ற மாதம் கூட நகர காவல் நிலையத்திற்கு புகார் அளித்தது.

இந்நிலையில் மேற்கண்ட ரௌடி கும்பலின் உறவினரான பிரபாகர் மற்றும் பாட்டில் ஆனந்த் இருவரும் 29-06-2015- திங்கள் அன்று இரவு 11 மணிக்கு வி.மருதூர், பிள்ளையார் கோயில் இறுதி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து கள்ளச்சாரயத்தை விற்றுக் கொண்டு இருந்துள்ளனர். அவ்வழியாக மலம் கழிக்கச் சென்ற மணி என்ற இளைஞனை தாக்கியுள்ளனர். இதைத் தட்டிக் கேட்ட பிரகாஷ் என்ற நபரை ஆபாசமாகத் திட்டி சராமரியாக தாக்கியுள்ளனர். இதனை கேள்விப்பட்ட அப்பகுதி இளைஞர்கள் சாராய ரவுடிகளை திருப்பித் தாக்கியுள்ளனர். அடிபட்ட சாராய ரவுடிகள் அவர்களின் தலைமையான பத்து மற்றும் பவுல் வெங்கடேசன் கும்பலுக்கு தகவல் தந்துள்ளனர்.

அவர்களோடு 10 பேர் அடங்கிய கும்பல் பு.மா.இ.மு பொறுப்பில் இருக்கும் தோழர்.செல்வகுமார் வீட்டின் அருகே வந்து கலாட்டா செய்து கொண்டும் வருவோர் போவோர் எல்லோரையும் மிரட்டிக் கொண்டும் இருந்துள்ளனர். சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியில் வந்த தோழரின் அக்கா காஞ்சனாவை ஆபாசமாக திட்டி, தடியால் தாக்கத் தொடங்கியுள்ளனர். இதைக்கண்ட அவரது மகன்கள் சதீஷ், ஆனந்த்ராஜ், தம்பி ராஜ்குமார், உறவினர் அருள் ஆகியோர் தடுக்க முயன்றுள்ளனர். இந்த கும்பல் பெரிதாக இருந்ததாலும், கையில் இரும்புக்கம்பி, தடி போன்ற ஆயுதங்கள் வைத்திருந்ததாலும் காப்பாற்ற வந்தவர்களும் சேர்ந்து அடிவாங்கி ஓட ஆரம்பித்துள்ளனர். மயங்கி விழும் வரை காஞ்சனாவை தாக்கிய கும்பல் கத்திக் கொண்டே கலைந்துள்ளனர்.

அக்கம் பக்கம் இருப்பவர்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தூக்கி கொண்டு போய் அனுமதித்துள்ளனர். இன்னொரு புறம் அமைப்பு வேலையாய் வெளியூர் சென்றிருந்த தோழர். செல்வகுமார்க்கு பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஊருக்குள் வந்த செல்வகுமார் நகர காவல் நிலையத்திற்கு தோழர்களுடன் சென்று புகார் தர முயன்றுள்ளார். ஆனால் அதைப் பெற அங்கு யாருமில்லை. கேட்டால் “எங்களுக்கே பாதுகாப்பில்லை” என்று தோழர்களை திருப்பி அனுப்பி உள்ளனர்.

தோழர்கள் செல்வதற்கு முன்பே தோழரின் அக்கா மகன் சதீஷ் தன் நண்பர்களோடு புகார் தரச் சென்றுள்ளார். அங்கிருந்த காவலர்கள் முன்பே ரவுடிகளில் ஒருவனான ஜாக்கி சரத்குமார் “இரண்டே நாளில் உன்னை வெட்டிக் கொல்வேன்” என மிரட்டி உள்ளான்.

“என்ன சார் உங்க முன்னாடி இப்படி பேசறான் நடவடிக்கை எடுங்க” என்றதற்கு,

“விடுங்க தம்பி. அவன் ஏதோ ஆதங்கத்துல பேசறான். இதையெல்லாம் பெருசா எடுத்துகிட்டு” என்று வெட்டுக்கிளி முருகேசன் பாணியில் வெட்கமில்லாமல் பதிலளித்துள்ளனர்.

பிறகு தோழர்கள் அந்த நடு இரவில் DSP அலுவலகம் செல்ல அங்கும்  யாருமில்லை. “வெஸ்ட் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை உள்ளார் அங்கு சென்று புகார் தாருங்கள்” என்று மாற்றி விட்டார்கள். அதனால் வெஸ்ட் போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் தந்துள்ளனர். இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை உள்ளயே இருந்து கொண்டே ஏட்டுகளை வைத்தே சதீஷ் தந்த புகாரை பெற்றுக்கொண்டார்கள்.

அந்த ஸ்டேஷனில் இருந்து கூப்பிடும் தூரத்தில்தான் அரசு மருத்துவமனை உள்ளது. அங்கு சென்று அக்கா காஞ்சனாவை பார்ப்பதற்காக தோழர்கள் சென்றுள்ளனர். அதே இடத்தில் பகுதியில் சாராயம் விற்று இளைஞர்களிடம் சண்டை போட்டு அடிவாங்கிய அந்த பொறுக்கி கும்பலும் சிகிச்சை என்ற நாடகத்திற்காக போலீஸ் வழி காட்டுதலுடன் அங்கு சேர்ந்துள்ளனர்.

நம் தோழர்கள் மருத்துவமனையில் நுழைந்ததும் அந்த அடியாள் கும்பல் சதீஷ் மற்றும் செல்வகுமார் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். எஸ்.ஐ அருணாச்சலம், ஸ்பெஷல் பிரான்ச் ஜெயச்சந்திரன், ஏட்டுகள் உள்ளிட்ட ஏழு போலிசார் முன்பு தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

மேலும் அங்கு உள் சிகிச்சையில் இருந்த காஞ்சனா மீதும் பத்து, பவுல் வெங்கடேசன், ஆனந்த். பிரபாகரன், ஜாக்கி சரத்குமார் உள்ளிட்ட கும்பல் மீண்டும் தாக்கியது. வெட்கங்கெட்ட போலீஸ் அதையும் வேடிக்கை தான் பர்ர்த்தனர்.

கள்ளச்சாராய பொறுக்கிகளிடம் கைநீட்டி வாங்கித்தின்று வயிறு வளர்க்கும் காக்கி சீருடை கிரிமினல்களிடம் இதுதான் நடக்கும் என்று உணர்ந்த தோழர்களே தலையிட்டு காயம் பட்டவர்களை மீட்டனர். பிறகு காயங்களுடன் அக்காவை அழைத்துக் கொண்டு இரவு ஒரு மணிக்கு எஸ்.பி அலுவலகம் சென்றனர்.

அங்கே எதையும் விசாரிக்காமலேயே நம் மீது எரிந்து விழுந்தார்கள். காரணம் கள்ளச் சாராய பணம் தான் என்பது நமக்கு புரிந்தது. மீண்டும் அந்த அயோக்கிய சிகாமணி இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை இடமே பரிந்துரை செய்தார்கள். முடியாது என்று மறுத்த நாம் முண்டியம் பாக்கம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று அக்காவை அட்மிட் செய்தோம்

இந்த சாராய வியாபாரிகளின் பெயரால் போலீசே, தோழர் செல்வகுமார், சதீஸ் உள்ளிட்ட 8 பேர் மீது கள்ளச்சாராய ரவுடிகளிடம் நன்கொடை கேட்டு மிரட்டியதாக எதிரிகள் கூட கூறத் தயங்கும் அவதூறை, பொய் வழக்கை கேவலமான முறையில் பதிவு செய்துள்ளது..

அடுத்த நாள் மீண்டும் எஸ்.பி-யைச் சந்தித்து புகார் அளிக்க சென்றோம். எஸ்.பி வரவில்லை என்று ஏ.டி.எஸ்.பி யை சந்தித்து முறையிட்டோம். அந்தம்மாவோ “நடந்தது நடந்து விட்டது, இனிமேல் இதுபோன்று நடக்காமல் நடவடிக்கை எடுக்கிறேன்” என்று கூலாக பதில் கூறி தோழர்களை மேற்கு காவல் நிலையத்திற்கு அதே அண்ணாதுரையிடம் அனுப்பி வைத்தார்.

அங்கு சென்றால் “இன்ஸ்பெக்டர் வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகிவிடும். நீங்கள் நகர காவல்நிலையம் சென்று விடுங்கள். ஐயா நேராக அங்கே வந்துவிடுவார்” என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.

தோழர் செல்வகுமார் வீட்டின் மீது தாக்குதல்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மீண்டும் நகர காவல் நிலையம் சென்றனர். அங்கும் இன்ஸ்பெக்டர் வரவில்லை. 3 மணி நேரம் கழித்து தான் வந்தார். அவரிடம் புகார் அளித்து விட்டு வீடு செல்வதற்குள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்ததாக போலீசால் சொல்லப்பட்ட மேற்படி அதே ரௌடி கும்பல் தோழர் செல்வகுமார் வீட்டையும், அருள் என்பவரது வீட்டையும் அடித்து நொறுக்கி, பொருட்களை எல்லாம் சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தோழரின் அக்காவையும் மிரட்டியுள்ளனர்.

அருள் வீட்டின் மீது தாக்குதல்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இவை அனைத்தும் க்யூ பிரிவு போலீசு கார்த்தி மேற்பார்வையில் நடந்தவைகள்தான்.

இந்தப் பொறுக்கி கும்பலின் அராஜகம் பற்றி கேள்விப்பட்ட மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு தலைமையில் உண்மை அறியும் குழு இரவே வந்து டி.எஸ்.பி-ஐ சந்தித்து புகார் தந்தனர்.

டி.எஸ்.பி-ன் விசாரணையில் பேசிய நகர காவல் நிலைய ஆய்வாளர் அண்ணாதுரையோ, “வீடுகள் அடித்து உடைக்கப்பட்ட சம்பவமே நடக்கவில்லை” என்று ரவுடி கும்பலின் குரலில் பேசினார். ரவுடி கும்பலிடம் வாங்கியதாக கூறப்படும் 50,000 ரூபாய் காசுக்கு மேலேயே விசுவாசம் காட்டினர். நிர்ப்பந்தம் காரணமாக டி.எஸ்.பி-ன் உத்தரவின் பேரில் 30-06-2015 அன்று இரவே மீண்டும் அண்ணாதுரை தலைமையிலான டீம் உடைக்கப் பட்ட வீடுகளை பார்வையிட்டு ரௌடிகள் மீது PPD வழக்கு பதிந்துள்ளார்.

தொடர்ச்சியாக கள்ளச்சாராய கும்பலுக்கு ஆதரவாக போலீசு துணை நிற்பதை அம்பலப்படுத்தி சுவரொட்டி நகரம் முழுவதும் ஒட்டியுள்ளோம்.

vmp-rsyf-posterகேவலம் வயிற்றுப் பிழைப்புக்காக ஊர் தாலியறுக்கும் பொறுக்கி கும்பலுக்கு திமிரும் தெனாவட்டும் இருக்கிறதென்றால் அதனுடன் போலீசும் கூட்டு சேர்ந்து கொண்டு பொறுக்கி தின்று கொண்டு அலைகிறதென்றால் இதை அப்படியே சகித்துக் கொள்ள முடியுமா? சட்டம் ஒழுங்கை காப்பாற்றப் போவதாகவும், மக்களை பாதுகாக்கப் போவதாகவும் கூறிக்கொண்டு திரியும் மக்கள் விரோத கட்டமைப்பு நெருக்கடிக்குள்ளாகி விட்டது என்பதை மேற்கண்ட நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.

பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மக்களின் நலனுக்காக போராடும் பு.மா.இ.மு, இந்தப் பொறுக்கி கும்பலின் அராஜகத்துக்கும், சாராய சாம்ராஜ்யத்துக்கும் முடிவு கட்டும் நாள் நெருங்கி விட்டது என்பதே உண்மை….

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
விழுப்புரம்.
தொடர்புக்கு; 99650 97801

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க