privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅ.தி.மு.க மகளிர் அணியோடு போட்டி போடும் நீதிமன்றம்

அ.தி.மு.க மகளிர் அணியோடு போட்டி போடும் நீதிமன்றம்

-

judicial corruption (2)சசி பெருமாள் ஏறியிருக்க வேண்டியது செல்போன் கோபுரமல்ல, உயர்நீதிமன்றக் கோபுரம் !

ன்பார்ந்த நண்பர்களே,

சசி பெருமாள் செய்த தவறுசசி பெருமாளை மரணத்துக்குத் தள்ளியது தமிழக அரசுதான் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. ஆனால் உயர் நீதிமன்றமும் சேர்ந்துதான் அவரை மரணத்துக்குத் தள்ளியது என்ற உண்மையை யாரேனும் மறுக்க முடியுமா? சட்டத்தின் மீதும், நீதிமன்றத்தின் மீதும் நம்பிக்கை வைத்து மூன்றாண்டு காலம் அவர் போராடினார். “உண்ணாமலைக் கடை டாஸ்மாக்கை அகற்ற வேண்டும்” என்று ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே உயர்நீதிமன்றம் உத்தரவும் பிறப்பித்து விட்டது. “நீதிமன்ற உத்தரவை அமல்படுத்து” என்றுதான் சசி பெருமாளும் அந்த ஊர் மக்களும் போராடினார்கள்.

தனது உத்தரவு அமலாகவில்லை என்பது நீதிமன்றத்துக்குத் தெரியாதா? தெரியும். விதியை மீறி நெடுஞ்சாலைகள், பள்ளிகள் அருகில் அமைக்கப்பட்டிருக்கும் கடைகளை அகற்றுமாறு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு எதையும் தமிழக அரசு அமல்படுத்தவில்லை என்பது எல்லா நீதிபதிகளுக்கும் தெரியும். தனக்குத் தேவையென்றால், தானாக முன்வந்து (suo motu) நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கும் நீதிபதிகள், டாஸ்மாக் விவகாரத்தில் ஒரு இடத்தில் கூட அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவில்லை. இது நீதிமன்றம் தெரிந்தே செய்திருக்கும் குற்றம்.

சசி பெருமாள் உயிர் துறந்த பிறகாவது, தன்னுடைய குற்றத்தை உயர்நீதிமன்றம் ஒப்புக் கொண்டிருக்கிறதா? சசி பெருமாளை மரணத்துக்குத் தள்ளிய அரசைக் கண்டித்து உயர்நீதிமன்றம் ஒரு வார்த்தையாவது பேசியதா? சசி பெருமாளின் மரணத்துக்குப் பின்னராவது, சட்டவிரோதமான கடைகள் அனைத்தையும் மூடுமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியதா? எதுவும் இல்லை. அதனால்தான் சொல்கிறோம். நீதிமன்றத்தை நம்பிக் கெட்ட சசி பெருமாள், உயர்நீதிமன்றக் கோபுரத்தின் மீது ஏறியிருந்தால், அவரைச் சாவுக்குத் தள்ளிய குற்றத்தில் உயர் நீதிமன்றம் தமிழக அரசின் கூட்டாளி என்பது அம்பலமாகியிருக்கும்.

♦ ♦ ♦ ♦

ற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களை கவனித்துப் பாருங்கள். பெண்கள் திரண்டு வந்து கடைகளை மறிக்கிறார்கள், பூட்டுகிறார்கள், சாணி அடிக்கிறார்கள். மாணவர்களும் இளைஞர்களும் மதுப்புட்டிகளை நொறுக்குகிறார்கள். அதிகாரிகளிடம் மனுக்கொடுத்தோ, நீதிமன்றத்தில் வழக்குப் போட்டோ ஒருக்காலும் நியாயம் கிடைக்காது என்பதுதான் இப்போராட்டங்களின் வாயிலாக மக்கள் கூறும் செய்தி.

இதனைக் கண்ட பிறகாவது நீதிமன்றம் சட்டத்தை அமல் படுத்த முயற்சிக்கிறதா? இல்லை. போராடும் மக்களுக்கு எதிராக, பொதுச்சொத்துக்கு சேதம், கொலை முயற்சி என்று போலீசு போடும் பொய் வழக்குகளை எந்த விதத்திலும் கேள்விக்குள்ளாக்காமல், அநீதி என்று தெரிந்தே அனைவரையும் சிறைக்கு அனுப்புகிறது. எந்தக் கடைகளையெல்லாம் அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் கூறியதோ அந்தக் கடைகள் போலீசு பாதுகாப்புடன் நடத்தப்படுவதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த அரசாங்கம் நீதிமன்ற உத்தரவை மதிப்பது இருக்கட்டும்; உயர் நீதிமன்றம் தான் போட்ட ஆணையை தானே மதிப்பதில்லை. உயர் நீதிமன்றத்துக்கு சுயமரியாதையும் இல்லை, சட்டத்தின் ஆட்சி என்ற கருத்தாக்கத்தின் மீதும் அதற்கு மரியாதை இல்லை.

“சட்டத்தை மீறும் உரிமை” என்பது சட்டம் ஒழுங்கின் காவலர்கள் என்று கூறப்படும் போலீசுக்கும், சட்டத்தை இயற்றும் அரசுக்கும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டப் பொறுப்பேற்றிருக்கும் தங்களுக்கும் மட்டும்தான் உண்டு. “குடி மக்களுக்கு மட்டும் சட்டத்தை மீறும் உரிமை கிடையாது” என்பதுதான் ‘சட்டத்தின் ஆட்சி’ குறித்து மாட்சிமை தங்கிய நீதி அரசர்கள் கொண்டிருக்கும் கருத்து. இதற்கும் மக்களை மிரட்டி லஞ்சம் வசூலிக்கும் ஒரு கான்ஸ்டபிளின் கருத்துக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

பச்சையப்பன் கல்லூரியின் வாசலிலேயே டாஸ்மாக் கடை இருக்கிறது. இந்த சட்ட மீறல் தலைமை நீதிபதிக்கு அதிர்ச்சியூட்டவில்லை. அந்தக் கடை மீது மாணவர்கள் கல்லெறிந்தால் உடனே அவர் அதிர்ச்சியடைகிறார். போராட்டக் களத்தில் கீழே விழுந்து கிடந்த ஒரு மாணவியின் வயிற்றில் ஒரு போலீசு அதிகாரி எட்டி உதைப்பதை தொலைக்காட்சியில் கண்ட அனைவரும் கண்டிக்கின்றனர். “மாணவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது” என்று எச்சரித்த தலைமை நீதிபதிக்கு, ‘சட்டத்தைத் தனது காலில் எடுத்துக் கொண்டு’ அந்த போலீசு அதிகாரி நடத்திய தாக்குதல் தவறாகவே தெரியவில்லை.

உயர்நீதிமன்றத்தின் நிலையே இதுவென்றால் மாஜிஸ்டிரேட்டுகளைப் பற்றி சொல்லவும் வேண்டுமா? இப்போதெல்லாம் போலீசு காவலுக்கும் நீதிமன்றக் காவலுக்கும் இடையில் எந்த வேறுபாடும் தெரிவதில்லை. கைதியை ரத்தம் சொட்டச் சொட்ட கொண்டு வந்து நிறுத்தினாலும், “இபிகோ 12345” என்று இல்லாத சட்டப்பிரிவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தாலும் நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டு கைதிகளை ரிமாண்டுக்கு அனுப்புகிறார்கள் மாஜிஸ்டிரேட்டுகள்.

மாணவர்களுடைய காவல் 15 நாட்களுக்கு மேல் நீட்டிக்கப்படுவதை ஆட்சேபித்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பை எடுத்துக்கூறி, கேஸ் டயரியைப் பரிசீலிக்குமாறு வழக்குரைஞர் கேட்டதற்கு, “போலீசை எதற்கு கேட்கவேண்டும், நானே ரிமாண்டை நீட்டிக்கிறேன்” என்று ஆணவமாகப் பேசுகிறார் கயல்விழி என்ற எழும்பூர் மாஜிஸ்டிரேட். அபத்தமும் உளறலுமாக எழுதப்பட்டிருக்கும் அந்த அம்மையாரின் ரிமாண்டு உத்தரவைப் பார்த்த மாத்திரத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்றம் சிபாரிசு செய்திருக்க வேண்டும். மாறாக, அந்த கேலிக்கூத்தான உத்தரவு “செல்லத்தக்கதே” என்று தீர்ப்பளிக்கிறார் உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேந்திரன்.

♦ ♦ ♦ ♦

ச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வீதியிலும், போலீசு காவலிலும், சிறையிலும் தாக்கப்பட்டிருக்கிறார்கள். உளவுத்துறை அதிகாரி ஒருவர் பெண்கள் சிறைக்குள் அத்துமீறி நுழைந்து மாணவிகளை மிரட்டியிருக்கிறார். நீதிமன்றக் காவலில் இக்குற்றங்கள் நடந்திருப்பதால், அந்த மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று “ஆட்கொணர்வு மனு” போட்டோம். காதல்-கள்ளக்காதல் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்களில் சம்மந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து மிகுந்த ஈடுபாட்டுடன் விசாரிக்கும் உயர்நீதிமன்றம், போலீசால் துன்புறுத்தப்பட்ட மாணவ மாணவிகளை மட்டும் அழைத்து விசாரிக்க மறுத்துவிட்டது.

ஆனால் நீதிபதிகள் தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோரைக் கொண்ட அமர்வுதான், மதுரை வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளை வரச்சொல்லி குற்றவாளிகளைப் போல அவமானப்படுத்தியது. இதை எதிர்த்த மதுரை வழக்குரைஞர்கள் “நீதிபதி சி.டி.செல்வம் கிரானைட் மாபியாவிடம் சோரம்போனதையும், சர்வதேச உப்புமா பல்கலைக் கழகத்தில் நீதிபதி தமிழ்வாணன் டாக்டர் பட்டம் பெற்றதையும் அம்பலப்படுத்தி நீதிமன்ற வாசலிலேயே முழக்கமிட்டனர். நீதித்துறை ஊழலுக்கு எதிரான இயக்கத்தைத் தொடங்கி, ஊழல் நீதிபதிகளின் பட்டியலை வெளியிடவிருப்பதாகவும் அறிவித்தனர்.

ரசமைப்புச் சட்டத்தின் விதி 47, “மதுவிலக்கை அமல்படுத்துவது அரசின் கடமை” என்கிறது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 324, “தெரிந்தே மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் இத்தகைய குற்றங்களுக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை” என்று கூறுகிறது. இவையெல்லாம் நீதிபதிகளுக்குத் தெரியாதவையல்ல. அரசமைப்புச் சட்டத்தின் மீதான நம்பிக்கையை விட, அரசு அதிகாரத்துடனும் ஆளும் கட்சியுடனும் அனுசரித்துப் போவதால் கிடைக்கக்கூடிய ஆதாயங்களின் மீதுதான் நீதிபதிகளுக்கு நம்பிக்கை இருக்கிறது.

அதனால்தான், “டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுவுக்கு தரக்கட்டுப்பாடு இல்லை” என்று ஆதாரங்களுடன் ஒருவர் பொதுநல வழக்கு போட்டால் அதனை அலட்சியப்படுத்துகிறது உயர் நீதிமன்றம். “கடைகளின் விற்பனை நேரத்தைக் குறைக்க வேண்டும்” என்று மனுப்போட்டால் அப்படியெல்லாம் தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை” என்கிறார் தலைமை நீதிபதி.

ஆனால், 7 கோடி மக்களுடைய மண்டையின் மீது தலையிடுவதற்கு மட்டும் அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறதாம். தலைக் கவசத்தைத் திணிப்பதற்கும், அணியத் தவறுகிறவர்களுடைய வாகனங்களைப் பிடுங்குவதற்கும், இந்தத் தீர்ப்பை விமரிசித்த மதுரை வழக்குரைஞர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பதற்கும் நீதிபதிகள் தயங்குவதில்லை.

தங்களுடைய நேர்மையின்மையையும் கோழைத்தனத்தையும் கண்டு வழக்குரைஞர்களும் வழக்காடிகளும் கைகொட்டிச் சிரிக்கிறார்கள் என்று தெரிந்தும், ஆளும் கட்சியின் நிழலில் ஒண்டிக்கொண்டு, 23 ஆம் புலிகேசியைப் போல கூச்சமே இல்லாமல் கம்பீரமாக வலம் வருகிறார்கள் இந்த நீதியரசர்கள்.

♦ ♦ ♦ ♦

டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட “மக்கள் அதிகாரம்” அமைப்பைச் சேர்ந்தவர்களுக்குப் பிணை வழங்குவதற்கு நீதிபதி வைத்தியநாதன் விதித்திருக்கும் நிபந்தனைகள் குற்றவியல் நீதி வழங்கு நெறிகளுக்கே (criminal jurisprudence) எதிரானவை. பிணை பெறுவதற்கு மேலப்பாளையூர் விவசாயிகள் 10,000 ரூபாய் டெபாசிட் கட்ட வேண்டுமென்றும், விருத்தாசலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவன் 50,000 ரூபாய் டெபாசிட் கட்ட வேண்டுமென்றும், இந்தத் தொகையை புகார்தாரரான டாஸ்மாக் நிர்வாகத்திடம் இப்போதே கொடுத்துவிட வேண்டுமென்றும் உத்தரவிட்டிருக்கிறார் நீதிபதி வைத்தியநாதன்.

குற்றம் சாட்டப்பட்ட நபர் குற்றவாளிதானா என்பதும், இழப்பு என கூறப்படும் தொகை உண்மைதானா என்பதும் விசாரைணக்குப் பின்னர் தீர்ப்பில்தான் தெரியவரும். சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு நான்காண்டு சிறையும், 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு பத்து ரூபாய் கூட டெபாசிட் விதிக்காமல் பிணை தருகிறார் தலைமை நீதிபதி தத்து. 20,000 கோடி வரி ஏய்ப்பு செய்த நோக்கியா நிறுவனம் வெறும் 200 கோடியை டெபாசிட் செய்து விட்டு, ஆயிரக்கணக்கான தொழிலாளிகளை வேலைநீக்கம் செய்து ஆலையை மூடுவதற்குத் தோதாக தீர்ப்பளிக்கிறார் நீதிபதி ராஜேந்திரன்.

ஆனால் சாராய பாட்டிலை உடைத்த குற்றம் நிரூபிக்கப் படுவதற்கு முன்னரே, அட்வான்சாக 50,000 ரூபாய் அபராதம் விதித்து ஒரு மாணவனுக்கு நீதி வழங்கப்படுகிறது. இது மனுநீதி அல்லாமல் வேறென்ன?

♦ ♦ ♦ ♦

judicial corruption (4)ச்சையப்பன் கல்லூரி மாணவ மாணவிகள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய போலீசார், சத்தியமூர்த்தி பவன் மீது அதிமுக குண்டர்கள் கல்வீச்சு நடத்தும்போது காவல் நிற்கிறார்கள். ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிராக நடக்கும் காலித்தனங்களை முன்னாள் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் தலைமையேற்று நடத்துகிறார். அண்ணா சாலையும் பூந்தமல்லி நெடுஞ்சாலையும் மணிக்கணக்கில் மறிக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் காங்கிரசு அலுவலகங்கள் தாக்கப்படுகின்றன.

இவற்றையெல்லாம் “அறப்போராட்டம்” என்று வருணிக்கிறார் முதலமைச்சர். அது தலைமை நீதிபதியின் காதில் விழவில்லை. “சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது” என்று மாணவர்களை எச்சரித்த தலைமை நீதிபதியின் காதுகளில், ‘சட்டத்தை வாயில் எடுத்துக் கொண்டு’ அதிமுக காலிகள் பொழியும் வசைமாரியும் விழவில்லை.

காங்கிரசு தலைவர் இளங்கோவனுக்கு எதிராக வேண்டுமென்றே தொடுக்கப்பட்ட ஒரு பொய்வழக்கில், அவரை மதுரையில் தங்கி கையெழுத்துப் போடச்சொல்கிறார் நீதிபதி வைத்தியநாதன். அங்கே போலீசு பாதுகாப்புடன் அவர் மீது தாக்குதல் நடக்கிறது. அதனைக் கண்டிக்காத நீதிபதி வைத்தியநாதன், “அடக்கமாக நடந்துகொள்ளுமாறு” இளங்கோவனுக்கு அறிவுரை கூறுகிறார்.

முதல்வரைப் பற்றி இளங்கோவன் பேசிய வார்த்தைகள் அதிமுகவினரிடம் அறச்சீற்றத்தை தோற்றுவித்திருக்கும் என்ற காரணத்தினால் உயர் நீதிமன்றம் அடக்கி வாசிப்பதாக யாரும் எண்ணிவிட வேண்டாம். குன்ஹாவின் தீர்ப்பைத் தொடர்ந்து அதிமுக குண்டர்கள் அரங்கேற்றிய ரவுடித்தனத்துக்கும், நீதிபதி குன்ஹாவுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்புக்கும் எதிராக சென்னை உயர்நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை என்ன? ஹெல்மெட் விவகாரத்தில் நீதிமன்றம் அவமதிக்கப்பட்டுவிட்டதாகத் துடிக்கும் நீதிபதிகள், ‘மதிப்பு’ என்ற சொல்லின் பொருளை ஆங்கில அகராதியைப் படித்தாவது புரிந்து கொள்வது நல்லது.

♦ ♦ ♦ ♦

திமுகவினர் அண்ணாசாலையை மறித்து வெறியாட்டம் போடுவதை கண்டுகொள்ளாத உயர்நீதிமன்றம், தே.மு.தி.க சாலையோரமாக நின்று மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினால் மக்களுக்கு ஏற்படக்கூடிய சிரமம் குறித்து ஆராய்ச்சி நடத்துகிறது. விசாரணையை கடைசி நேரம் வரை இழுத்தடித்து போராட்டத்துக்கு அனுமதி மறுத்த போலீசின் நோக்கத்தை நிறைவேற்றித் தருகிறது.

சட்டவிரோதமான டாஸ்மாக் கடைகளை மூடத் துப்பில்லாத உயர்நீதிமன்றம், நெய்வேலி தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் போராட்டத்தை ‘சட்டவிரோதம்’ என்று தீர்ப்பளிக்கிறது. ஸ்ரீரங்கம், ஆர்.கே நகர் இடைத்தேர்தல்கள் முதல் பச்சையப்பன் கல்லூரி வாயில் வரையில் எல்லா இடங்களிலும் அதிமுக வினரின் கிரிமினல் குற்றங்களும் போலீசின் அத்துமீறல்களும் தொலைக்காட்சி காமெராக்களின் முன் துணிச்சலாக அரங்கேற்றப்படுகின்றன. அனைத்தையும் மவுனமாக அங்கீகரிக்கிறது உயர்நீதிமன்றம்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னால், உயர்நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே அதிமுக மகளிர் அணி அரை நிர்வாண நடனம் நடத்தியது. இன்று உயர்நீதிமன்றமே அப்படி நடனமாடுவதைக் காண்கிறோம்.

ற்று மணல், கிரானைட், தாது மணல் கொள்ளை வழக்குகளைக் கையாண்ட நீதிபதிகள் பலர் கனிமவளக் கொள்ளைக்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்கிறார்கள். “இந்த தீர்ப்புகள் பற்றி சகாயம் குழு பரிசீலிக்க வேண்டும்” என்று முன்னாள் நீதிபதி சந்துரு நாளேடு ஒன்றில் கட்டுரை எழுதிய பின்னரும் நீதிபதிகள் யாருக்கும் கோபம் வந்ததாகத் தெரியவில்லை. மாறாக, “முழுதும் நனைந்தவனுக்கு முக்காடு எதற்கு” என்று வெளிப்படையாகவே இறங்கிவிட்டார்கள்.

மதுரையில் கடந்த மார்ச் மாதம் கிரானைட் கொள்ளைக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த நீதிபதி ராஜா சென்னையில் ஜூலை மாதம் வைகுண்டராஜனுக்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்கிறார். ஆகஸ்டு மாதம் மதுரைக்கு வந்த இந்த நீதிபதிக்கு மீண்டும் கனிமவளத்துறையே ஒதுக்கப்படுகிறது. வைகுந்தராசனின் கனிம வளக்கொள்ளை தொடர்பாக பேடி குழு அளித்த பரிந்துரையை அப்படியே நிராகரித்து, வினோத் குமார் சர்மா என்ற தமிழே தெரியாத பஞ்சாப் மாநில ஒய்வு பெற்ற நீதிபதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப் படுகிறார். 9 மாதங்களாக கனிமவளத்துறை என்ற ஒரு துறையை ஒரு குறிப்பிட்ட நீதிபதிக்கு மட்டுமே ஒதுக்கித் தந்திருப்பவர், சட்டத்தின் ஆட்சி பற்றி பெரிதும் கவலைப்படும் தலைமை நீதிபதிதான் என்பதை சொல்லத்தேவையில்லை.

கடந்த 20 ஆண்டுகளாக வைகுண்டராஜனுக்கு வழக்கறிஞராக இருந்த சோமையாஜி, இன்று அரசின் தலைமை வழக்கறிஞராகி விட்டார். ஜெயலலிதாவின் வருமானவரி வழக்கில் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்த நீதிபதி தட்சிணாமூர்த்திக்கும், விசுவாச உளவுத்துறை அதிகாரி ராமானுஜத்துக்கும் விதிகளை மீறி தகவல் ஆணையர் பதவி வழங்கப்படுகிறது. பாட்டில்கள் நொறுங்கும் சத்தம் கேட்டவுடன், சட்டத்தின் ஆட்சியே நொறுங்கி விட்டதாகத் துடித்துப்போகும் உயர்நீதிமன்றம், இவற்றுக்கெல்லாம் மவுனம் காக்கிறது.

♦ ♦ ♦ ♦

யர்நீதிமன்றத்தின் ‘ஊழல் நீதிபதிகள்’ என்று அறியப்படுவோர், கனிமவளக் கொள்ளையர்கள், ரியல் எஸ்டேட் முதலைகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் தங்களது தீர்ப்பை விலை பேசி விற்கிறார்கள். ‘நேர்மையான நீதிபதிகள்’ என்று கூறிக் கொள்பவர்களோ, சதாசிவத்தையும், சம்பத்தையும் போல தங்களையே நல்ல விலைக்கு விற்றுக்கொள்ள போயஸ் தோட்டத்திடம் தவமிருக்கிறார்கள்.

ஒரு கீழ்நிலை அதிகாரி லஞ்சம் வாங்கும்போது அது அந்தத் தனிநபரின் குற்றமாக முடிந்து விடுகிறது. ஆனால் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி லஞ்சம் வாங்கிக் கொண்டு கனிமவளக் கொள்ளையை நியாயப்படுத்தி தீர்ப்பெழுதும்போது, குற்றத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்கப்பட்டு விடுகிறது. அந்தத் தீர்ப்பைக் காட்டி சட்டபூர்வமாகவே கொள்ளையிடும் வாய்ப்பு எல்லோருக்கும் திறந்து விடப்படுகிறது.

ஏற்கெனவே, போராடும் மக்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பொய் வழக்குகளைப் போட்டு சிறைக்கு அனுப்புகிறது போலீசு. குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யாமல், விசாரணைக் கைதியாக சிறை வைத்தே தண்டனை வழங்கும் போலீசின் இந்த சதிக்கு உடந்தையாக இருந்து வரும் நீதிமன்றம், இப்போது மக்களை ஒடுக்குவதற்கு போலீசுக்கு வழி சொல்லிக் கொடுக்கிறது. நீதிபதி வைத்தியநாதனின் தீர்ப்பு விசாரணையே இல்லாமல் தண்டனை விதிக்கும் “அட்வான்ஸ் அபராதம்” என்ற கொலைக்கருவியை போலீசின் கையில் கொடுத்திருக்கிறது.

மொத்தத்தில் ஜெ அரசுக்கு எதிராகப் பேசுபவர்களை ஒடுக்குகின்ற போலீசு அவுட் போஸ்ட்டாகவே மாறிக் கொண்டிருக்கிறது உயர்நீதிமன்றம். நாம் பெரிதும் கவலை கொள்ள வேண்டிய அசாதாரணமான சூழல் இது.

குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் காவலன் என்று கூறிக்கொள்ளும் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள், தங்கள் சொந்த ஆதாயத்துக்காக தமிழ் மண்ணையும் தமிழ் மக்களின் உரிமைகளையும் சூறையாடுவதுடன், வழக்குரைஞர் தொழிலுக்குரிய மாண்பையும் சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

நீதிபதிகள் நம் மீது திணிக்கும் இந்த அவமதிப்பை நாம் சகித்துக் கொள்ளப் போகிறோமா?

– மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.
150-E ஏரிக்கரை சாலை, கே.கே.நகர், மதுரை -20
கை பேசி : 94434 71003

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க