privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்மூடு டாஸ்மாக்கை ! சட்டமன்றம் முற்றுகை - ஆவுடையார் கோவில் ஆர்ப்பாட்டம்

மூடு டாஸ்மாக்கை ! சட்டமன்றம் முற்றுகை – ஆவுடையார் கோவில் ஆர்ப்பாட்டம்

-

மூடு டாஸ்மாக்கை ! மக்கள் போராட்டங்களை ஒடுக்குமுறையால் தடுக்க முடியாது! – மக்கள் அதிகாரம்

1. சென்னை – பேரணி சட்டமன்ற முற்றுகை

29-09-2015 காலை  11 மணி பாரிமுனை பேருந்து நிலையம் அருகில்

தலைமை
தோழர்.அமிர்தா,
தலைமைக்குழு உறுப்பினர், மக்கள் அதிகாரம்

மக்களின் குடிகெடுக்கும் டாஸ்மாக்கை மூட முடியாது என்று திமிர்த்தனமாக சட்டமன்றத்தில் அறிவித்துள்ள அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை கண்டித்து

அருகதை இழந்தது அரசுக்கட்டமைப்பு !
இதோ, ஆள வருகுது மக்கள் அதிகாரம் !

டாஸ்மாக்கை “மூட முடியாதாம் !” சட்ட மன்றத்தில் நத்தம் விஸ்வநாதனின் திமிர்த்தனம் !

அரசு ஆளும் அருகதை இழந்ததற்கு இதுவே உதாரணம் !
மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம் !
டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடுவோம் !

என்ற முழக்கங்களை வலியுறுத்தி 29-09-2015 அன்று காலை 11 மணியளவில் பாரிமுனை பாரிமுனை பேருந்து நிலையம் அருகில் இருந்து  பேரணியாக சென்று  மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.

தகவல்

தோழர்.அமிர்தா
தலைமைக்குழு உறுப்பினர்,
மக்கள் அதிகாரம்.

2. ஆவுடையார்கோவிலில் ஆர்ப்பாட்டம்

  • குடிபோதையால் கெட்ட குடும்பம் கோடியைத் தாண்டுது! டாஸ்மாக்தான் கொள்கை என அரசு சொல்லுது!
  • கடையை மூடுனு போராடினா போலீசு உதைக்குது! கடைக்குக் கடை காவல் போட்டு கண்காணிக்குது!
  • ஊர்தாலியை அறுத்துத்தான் அரசு கஜானாவை நிரப்பணுமானு கேட்டா கள்ளச்சாராயம் பெருகிடுமே, பழகின குடிகாரனுக்கு பாதிப்பு வருமேன்னு அரசு பாசாங்கு செய்யுது!
  • பொறுக்கி செய்யும் வேலையெல்லாம் அரசு செய்யுது! இதைப் பொறுப்போடு செய்வதற்கே அதிகார வர்க்கம் இருக்குது!
  • இது உருப்படும் வழியா தெரியலை! வாங்க ஊரோடு சேர்ந்து போராடலாம்!

டாஸ்மாக்கிற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தமிழகத்தை அதிரச் செய்துள்ளன. மாணவர்கள், மக்கள், வழக்குரைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மாற்றுத் திறனாளிகள் என அனைதுதப் பிரிவு மக்களும் மூடு டாஸ்மாக்கை என விண்ணதிர முழங்குகின்றனர். சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், கோவை மாணவர்கள், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தோழர்கள், மக்கள் அதிகாரம் அமைப்பினர் மதுக்கடைகளை முற்றுகையிட்டும், மலக்கழிவுகளை வீசியும், மதுக்கடைகளை அடித்து நொறுக்கினர். இதன் விளைவாக சென்னை, கோவை, விருத்தாச்சலம், உசிலை போன்ற பகுதிகளில் உள்ள மாணவர்கள், பு.மா.இ.மு தோழர்கள், மக்கள் அதிகார அமைப்பினர் போலீசாரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பச்சையப்பன் கல்லூரி மாணவ-மாணவிகள் அரசு தம்மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறும்வரை பிணையில் வருவதில்லை என்ற முடிவுசெய்து தங்கள் போராட்டத்தை சிறையிலும் தொடர்ந்தனர். விருத்தாசலத்தில் டாஸ்மாக் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் C. ராஜூ டாஸ்மாக் ஊழியர்களைக் கொலை செய்ய முயன்றதாக இரண்டு பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறை சென்ற மது ஒழிப்பு போராளிகளுக்கு நீதிமன்றம் தொடர்ந்து பிணை வழங்க மறுத்தது. வழக்குரைஞர்களின் சட்ட போராட்டத்தால் பிணை வழங்க முன்வந்த நீதிமன்றம் பிணையில் விட விதித்த நிபந்தனைகள் வஞ்சகமானவை. மேலப்பாளையூர் விவசாயிகள் பிணை பெறுவதற்கு ரூபாய் 10,000 டெபாசிட் கட்ட வேண்டும் என்றும், விருத்தாசலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவன் 50,000 ரூபாய் டெபாசிட் கட்ட வேண்டும் என்றும், உத்தரவிட்டது நீதிமன்றம். ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு நான்கு ஆண்டு சிறையும், 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு 10 ரூபாய்கூட டெபாசிட் விதிக்காமல் பிணை தருகிறது உச்சநீதிமன்றம். 20 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு செய்த நோக்கிய நிறுவனம் வெறும் 200 கோடி டெபாசிட் செய்துவிட்டு ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலைநீக்கம் செய்து ஆலையை மூடுவதற்கு தோதுவாக தீர்ப்பளிக்கின்றது நீதிமன்றம். ஆனால், சாராய பாட்டிலை உடைத்த குற்றம் நிரூபிக்கப்படும் முன்பாகவே அட்வான்சாக 50 ஆயிரம் அபராதம் விதித்து ஒரு மாணவனுக்கு நீதி வழங்கப்படுகின்றது.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய போலீசாமூடு டாஸ்மாக்கைர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிராக சத்தியமூர்த்தி பவனை அ.தி.மு.க குண்டர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தியபோது காவல் நிற்கிறார்கள்.

நம்முடைய ஆவுடையார்கோவில் பகுதியில் மூடு டாஸ்மாக்கை என்ற தலைப்பில் ஆகஸ்ட் 31, 2015 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் யார் யார் கலந்து கொள்ளச் செல்கிறார்கள் என மது ஒழிப்புப் போராட்டத்திற்கு ஆதரவாள உள்ளவர்களின் வீடுகளில் சென்று விசாரித்து உளவுத் துறையினர் பீதி ஊட்டினர். ஆனால், பெருமருதூர், கரூர், அடம்பூர் போன்ற பகுதிகளில் டாஸ்மாக் சரக்குகளை ஆவுடையார்கோவில், மீமிசல் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக சரக்குகளை வாங்கி வந்து ஆதிக்க நில பண்ணையார்கள் தங்களது ஊர்களில் தனியாக கடை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனை தட்டிக் கேட்க துப்பில்லாத போலீசும், உளவுத் துறையும் சமூகத்தை சீரழிக்கும் டாஸ்மாக்குக்கு எதிராக போராடுபவர்களையும், ஆதரவாளர்களையும் உளவுபார்த்து மிரட்டுவதன் மூலம், தாங்கள் மக்கள் விரோதிகள் என்பதையும், கிரிமினல் குற்ற கும்பல்களுக்கு தோளோடு தோள் நிற்பவர்கள் என்பதையும் பறைசாற்றுகின்றார்கள்.

ஆவுடையார்கோவிலில் மூன்று இடங்களில் டாஸ்மாக் கடைகள் உள்ளன. அதில் கீழவீதியில் உள்ள கடை மக்கள் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ளது. இதனால் இங்கு குடியிருக்கும் மக்கள் தெருவை விட்டு வெளியில் வர அஞ்சி நடுங்கி, வீட்டுக்குள்ளேயே இருக்கும் நிலை உள்ளது. இதற்கு எதிராக கீழவீதி டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி இப்பகுதி மக்கள் அதிகாரியிடன் பலமுறை மனு கொடுத்தும் அந்த மனுக்கள் கழிப்பறை காகிதமாகக் கிடக்கின்றன. ஆவுடையார்கோவிலில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகிலேயே டாஸ்மாக் கடை இருப்பதினால், மாணவர்கள் போதைக்கு அடிமை ஆவதும் – மாணவிகள் குடிமகன்களின் கேலி கிண்டலுக்கு ஆளாவதும் தினம், தினம் தொடர்கதையாகி விட்டன.

இது ஒருபுறம் இருக்க ஆவுடையார்கோவில், அறந்தாங்கி, மணமேல்குடி, மீமிசல் பகுதிகளுக்கு எந்த ஆற்றுப்பாசன வசதியும் கிடையாது. மழையை நம்பியே விவசாயமும், குடிநீர் ஆதாரமும் உள்ளது. ஆனால், ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் புறம்போக்கு நிலங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகள், விவசாய நிலங்களை ஆக்கிரமித்து வீட்டுமனைகளாக்கி விற்பனை செய்து வருகின்றனர். மணல்கொள்ளையர்கள் வெள்ளாற்றில் மணலை வரைமுறையின்றி திருடுவதால் வெள்ளாறே கோரமுகத்துடன் காட்சியளிக்கிறது. இதனைத் தடுக்க வேண்டிய மாவட்ட ஆட்சித்தலைவர் டாஸ்மாக் விற்பனையை அதிகரித்து அரசின் கல்லாவை நிரப்புவதைப் பற்றி திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றார்.

ஆவுடையார் கோவில் அருகே உள்ள பேயாடிக் கோட்டை கிராமத்தில் தலித் மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபடவும், மண்டகப்படி வேண்டியும் போராடினால் திருவிழாவை தடைசெய்து 144 தடை உத்தரவு போடப்படுகிறது. மக்கள் டாஸ்மாக் கடை வேண்டாம் என்று போராடினால் கடைக்கு போலீஸ் பாதுகாப்பு போட்டு சாராயம் விற்கப்படுகிறது. மக்கள் உரிமைக்காக போராடினாலோ, சமூதாய சீரழிவுக்கு எதிராக போராடினாலோ அரசு எதிராக வருகிறது. மக்கள்நல அரசு என்ற மாயையை கழற்றிவிட்டு இப்போது போராடும் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளிரகள், ஜனநாயக அமைப்பினரை நேரடியாக ஒடுக்கி வருவதன் மூலம் பாசிச அரசு என்பதை அரசு அம்மணமாகவே நிரூபித்து வருகிறது.

அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் மக்களுக்கு எதிராக செயல்படுகின்றார்கள். சுதந்திரமான நீதித்துறையிடம் முறையிட்டு நியாயம் பெறலாம் என்றால் அதன் யோக்கியதை படுகேவலமாக உள்ளது. டாஸ்மாக் போராட்டத்திற்கு ஜாமீன் வழங்க மறுக்கும் நீதிமன்றம்தான் தண்டனை பெற்ற ஜெயலலிதாவிற்கும், சல்மான்கானுக்கும் உடனே ஜாமீன் வழங்குகிறது. சசிபெருமாள் என்ற காந்தியவாதி சட்டத்தின் மீதும் நீதித்துறையின் மீதும் நம்பிக்கை வைத்து மூன்றாண்டு காலம் போராடினார். உண்ணாமலை என்ற இடத்தில் உள்ள டாஸ்மாக்கை அகற்ற வேண்டும் என்று ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து விட்டது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்து என்றுதான் சசிபெருமாளும், அந்த ஊர்மக்களும் செல்போன் டவரில் ஏறி போராடினார்கள். செல்போன் டவரில் ஏறி போராடியபோதுதான் சசிபெருமாள் உயிரிழந்தார். சசிபெருமாளை மரணத்தில் தள்ளியது உயர்நீதிமன்றமும், தமிழகஅரசும்தான் என்பதை யாரும் மறுக்கமுடியுமா?

டாஸ்மாக் சாராயத்தை ஊற்றிக் கொடுத்து மக்களை போதையில் மூழ்கடித்து விடலாம்; போலீசின் காட்டுமிராண்டித் தாக்குதல்களை ஏவி போராடும் மக்களை ஒடுக்கி விடலாம்; போதை, போலீசு இரண்டையும் வைத்து தமிழக மக்களை அடக்கி ஆண்டுவிட முடியும் என்ற ஆட்சியாளர்களின் எத்தனிப்புகள் தகர்ந்து வருகின்றன.

தடி அடிபட்டு முகத்தில் இரத்தம் வழிந்த நிலையலும், போலீசை எதிர்த்து நின்ற மாணவர்களையும், கீழே தள்ளி மிதிக்கப்பட்ட பின்னரும் எழுந்து நின்று போலீசுடன் மோதிய மாணவிகளையும், தமிழக மக்கள் பாராட்டுகிறார்கள். மதுப்புட்டிகளைக் காப்பாற்றுவதற்காக மாணவர்களின் மண்டையை உடைத்த போலீசின் மீதும், இந்த அரசின் மீதும் காறி உமிழ்கிறார்கள்.

தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் டாஸ்மாக்கிற்கு எதிராக பொங்கியெழுந்துள்ளார்கள். டாஸ்மாக் கடைகளை நொறுக்கியுள்ளார்கள். பெட்ரோல் குண்டுகள் வீசிக் கொளுத்தியுள்ளார்கள். சாராயப் பெட்டிகளைத் தெருவில் வீசி எறிந்துள்ளார்கள். டாஸ்மாக் கடைகள் மீது சாணியும், மனிதமலமும் வீசியடிக்கப்பட்டுள்ளன.

ஆனால், சாராய அதிபர்களும், ஆட்சியாளர்களும், போலீசும் இதையெல்லாம் அவமானமாகக் கருதவில்லை. சாராய வியாபாரம் அவர்களுக்கு கோடி,கோடியாகக் கொட்டுகிறது. அவர்களுக்கு எப்படியாவது சாராயாக் கொள்ளையை தொடர்ந்து நடத்த வேண்டும். அதனால் போலீசை ஏவி போராளிகளை கொலை வெறியோடு கொடூரமாக தாக்கியுள்ளார்கள்.

ஆவுடையார்கோவில் பகுதியில் நடக்கும் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய உளவுத்துறையைச் சேர்ந்தவர்கள், மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த ஆவுடையார்கோவில் பகுதி உறுப்பினர்களிடம், “நீங்கள் படித்து வேலைக்குச் செல்ல வேண்டும். அதனால், அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடாதீர்கள். இந்த மக்கள் அதிகாரத்தில் உறுப்பினராக இருக்க வேண்டாம்” என்ற நயமாகப் பேசியும், மீறி ஆர்ப்பாட்டத்திற்கு வருபவர்களை “வீடியோ எடுத்து மேலே அனுப்புவோம்” என மிரட்டியும் வருகின்றனர். ஆனால், மக்கள் அதிகாரம் இளைஞர்கள், “சமூகத்தை சீரழிக்கும் டாஸ்மாக்கை ஏற்றுக் கொண்டால்தான் இந்த அரசு எங்களுக்கு வேலை தரும் என்றால் அந்த மானங்கெட்ட வேலை எங்களுக்கு வேண்டாம்” என்று காறி உமிழ்ந்து சொல்லிவிட்டு சமுதாயத்தை சீரழிக்கும் டாஸ்மாக்கை மூட மக்களை தமது பிரச்சாரத்தின் மூலம் அணிதிரட்டி வருகின்றனர்.

உளவுத்துறை கூறுவது போல் டாஸ்மாக்குக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது சட்ட விரோதமோ, சமூக விரோதமோ அல்ல. அது அரசியல் அமைப்புச் சட்ட அடிப்படை உரிமை. அரசியல் அமைப்புச் சட்டம் ஷரத்து 47-ன்படியும் சாராயம் உட்பட போதை பொருட்களின் விற்பனையை தடை செய்வது மாநில அரசின் கடமை. அரசோ தடை செய்வதற்குப் பதிலாக விற்பனை செய்கிறது. போலீசு அதற்கு காவல் நிற்கிறது. கடைகளில் கண்காணிப்பு கேமரா வைத்தால்கூட மக்கள் பார்வையில் படும்படி, “இங்கு கண்காணிப்பு வீடியோ கேமரா பொருத்தப்பட்டுள்ளது” என்று எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால், உளவுத்துறை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டத்தை அனுமதியில்லாமல் வீடியோ எடுப்பேன் என மிரட்டுவது உட்பட அனைத்தும் சட்டவிரோதமானது.

‘டாஸ்மாக் சாராயக் கடையை மூடிவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும்; அண்டை மாநிலங்களில் சாராய ஆறு ஓடும்போது இங்கு மட்டும் சாராயக் கடைகளை மூடுவதால் பயனில்லை; 3500 டாஸ்மாக் பணியாளர்கள் வேலை பறிபோய் விடும்; டாஸ்மாக் சாராய வருமானத்தை நம்பியுள்ள அரசுக்கு அதன் இலவசத் திட்டங்களுக்கு என்ன செய்வது. ஆகவே, மதுவிலக்கு சாத்தியமில்லை. அதுவும் உடனடியாக மூடுவது முடியாது’ என்ற சொத்தை வாதங்களை சாராயக் கொள்ளையர்களின் எடுபிடிகள் பிரச்சாரம் செய்கிறார்கள்.

கள்ளச் சாராயத்தின் மட்டுமா சாவுகள்? டாஸ்மாக் சாராயம் நல்ல சாராயமா? கள்ளச் சாராயத்தால் சில இலட்சம் பேருக்கு உடனடி சாவு! டாஸ்மாக் படிப்படியாக குடல் வெந்து, ஈரல் வீங்கி, சர்க்கரை நோய் தாக்கி படிப்படியாக கோடிக்கணக்கான மக்களின் சாவு நிச்சயம் நடக்கின்றது. கஞ்சா விற்பனையும், விபச்சாரமும் கூட ஆங்காங்கே நடக்கின்றன. இவை உலகின் பல நாடுகளில் மொத்த வருவாய் வளர்ச்சித் தொகையில் சேர்க்கப்படுகின்றன. அதே போல் இங்கேயும் கஞ்சா விற்பனையிலும், விபச்சாரத்திலும் வருவாய் வருகிறது என்பதற்காக ஏற்கச் சொல்வார்களா? நியாயவிலை உணவகங்களையும், மருந்தகங்களையும் அதிகமாக திறந்து டாஸ்மாக் ஊழியர்களை பணி அமர்த்தலாமே! சாராய விற்பனையை நம்பிதான் ஜெயலலிதா அரசு நடக்கிறது என்றால் ஜெயலலிதா அரசின் கேடுகெட்ட நிலையைத்தான் அது குறிக்கிறது.

டாஸ்மாக்கினால் குடும்பங்கள் சீரழிகின்றன, பள்ளிப் பிள்ளைகள் அனாதையாகிறார்கள். நல்ல மாணவர்கள் பலர் நாசமாகிறார்கள். ஆகவே, அரசின், போலீசின் அடக்குமுறைகளை முறியடித்து டாஸ்மாக்கை மூடுவோம்.

டாஸ்மாக்கால் நமது வாழ்க்கை பறிபோவதை அரசுக்கு மனுபோட்டோ, அரசிடம் கெஞ்சியோ, நீதிமன்றத்தில் வழக்குபோட்டோ தடுக்க முடியாது. டாஸ்மாக்கால் நமது வாழ்க்கை பறிபோவதற்கு எதிராக நாம்தான் போராட வேண்டும். நமது வயிற்றுப்பசிக்கு நமது கையில் அள்ளி சாப்பிட்டால்தான் பசி அடங்கும். நமது உரிமைக்காக நாமே அதிகாரம் செய்ய வேண்டும். அதுதான் மக்கள் அதிகாரம்.

டாஸ்மாக்கை மூடு!
மக்கள் அதிகாரத்தை நிறுவு!
குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே!
தடுக்க வரும் போலீசுக்கு அஞ்சாதே!

ஆவுடையார்கோவிலில் ஆர்ப்பாட்டம்

நாள் 29-09-2015 நேரம்  மாலை 04.00 மணி

தலைமை

தோழர் MSK பழனி
மக்கள் அதிகாரம்,
ஆவுடையார்கோவில்

கண்டன உரை;
திரு. ஏம்பல் டாக்டர் M.பழனிவேல்ராஜா, MBBS ஆ.கோவில்

திரு. பூ. ஞானசிவம் ஊராட்சி மன்ற தலைவர், தே.மு.தி,க, மாவட்ட பிரதிநிதி, ஆ.கோவில்.

திரு. தென்றல் M. நீலகண்டன், சமூக ஆர்வலர், ஆ.கோவில்.

திரு. K. சதிஸ்குமார், தி.மு.க. இளைஞரணி ஒன்றிய செயலாளர், ஆ.கோவில்.

திரு. உ. மாரிமுத்து, ஊர் அம்பலம், வடநகர், ஆ.கோவில்.

தோழர். P. கண்ணன், ஒன்றியச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஆ.கோவில்.

திரு. P.பாலபூமி, ஒன்றியச் செயலாளர், தே.மு.தி.க. ஆ.கோவில்.

தோழர். மாரிமுத்து, மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

திரு. அருள்மேரி உலகநாதன், சமூக ஆர்வலர், ஆ.கோவில்.

வழக்குரைஞர் தோழர் G.ராமலிங்கம், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், புதுகை,

வழக்குரைஞர் தோழர் SP. லோகநாதன் CPI, அறந்தாங்கி.

வழக்குரைஞர் தோழர் கோ.நவமணி CPM, அறந்தாங்கி.

வழக்குரைஞர் தோழர் L.அலாவுதீன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், அறந்தாங்கி.

தோழர். க. பழனி, மக்கள் அதிகாரம், ஆ.கோவில்.

திரு. ரமேஷ் MBA, DCP மக்கள் அதிகாரம், ஆ.கோவில்.

திரு. கா. சோனமுத்து சமூக ஆர்வலர், களபம்.

கவிஞர் தோழர் கவிகார்த்திக், அறந்தாங்கி.

நிறைவுரை

தோழர். காளியப்பன், மாநில தலைமைக்குழு உறுப்பினர், மக்கள் அதிகாரம்.

நன்றியுரை

தோழர். K. கண்ணன் BBA., மக்கள் அதிகாரம், ஆ.கோவில்.

தகவல்

மக்கள் அதிகாரம் – தமிழ்நாடு
ஆவுடையார்கோவில் பகுதி
தொடர்புக்கு – 7502607819

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க