privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககாவிரியும் பா.ஜ.க-வின் துரோகமும் - கரூர் கருத்தரங்கம்

காவிரியும் பா.ஜ.க-வின் துரோகமும் – கரூர் கருத்தரங்கம்

-

காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு மத்திய அரசு செய்யும் துரோகம், கர்நாடக அரசின் அடாவடித்தனமான நடவடிக்கை, தற்போது காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என திமிராக நடந்துகொள்ளும் மத்திய அரசின் செயல்பாடு, எதையும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் உச்சநீதிமன்றம், ஆகமொத்த ஒட்டுமொத்த இந்த அரசு கட்டமைப்பே மக்களை ஆள தகுதியிழந்துவிட்டது; இதனை விளக்கும் வகையில் “காவிரி பிரச்சினையில் எதிரி யார்? செய்யவேண்டியது என்ன? ” என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் கோவை மண்டலம் சார்பாக கரூரில் 09-10-2016 அன்று மாலை 4.00 மணியளவில் திருநீலகண்டர் சத்திரத்தில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

karur-meeting-water-bodies-protestion-01இந்தக் கூட்டத்தில் கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் சக்திவேல் தலைமை வகித்தார். விளக்க உரையாக கரூர் மாவட்ட நிலத்தடிநீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட சங்கத்தின் தலைவர் மு.ராமசாமி, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் தோழர் ளு.சண்முகசுந்தரம், ஆதித்தமிழர் பேரவையின் கரூர் மாவட்ட செயலாளர் இரா.முல்லையரசு, கரூர் மக்கள் அதிகாரம் தோழர் இராமசாமி, மக்கள் அதிகாரம் கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆனந்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டு விளக்க உரையாற்றினார்கள்.

கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் சக்திவேல் தனது தலைமை உரையில், “தமிழகத்திற்கு தண்ணீர் தருவதில் கர்நாடகா அரசு அடாவடித்தனமாக நடந்து கொள்கிறது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல லட்சம் தண்ணீர் தரும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் தருவதற்கு தொடர்ந்து பிரச்சனை செய்து வருகிறது. இருமாநில பிரச்சினைகளை சுமூகமாக பேசி தீர்க்காமல், ஓரவஞ்சனை செய்கிறது மோடி அரசு. எனவே தேசிய கட்சிகளை விரட்டிவிட்டு, மக்களே அதிகாரத்தை கைபற்றும் வகையில் திரண்டு போராட வேண்டும்” என்று அறைகூவி அழைத்தார்.

karur-meeting-water-bodies-protestion-08கரூர் மாவட்ட நிலத்தடிநீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட சங்கத்தின் தலைவர் மு.ராமசாமி, “அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக மக்களுக்கு குவாட்டரும் பிரியாணியும் கொடுத்து மக்களை சீரழித்துள்ளனர். அரசியல் கட்சிகள் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று எண்ணியிருப்பதில் எந்த பயனுமில்லை. கரூர் மாவட்டத்தில் நீரின் நிறம் மாறி சாக்கடையாக ஓடுகிறது. அமராவதி ஆறு இன்று பொய்த்துப் போய் பொட்டல்காடாகவும், சுடுகாடாகவும் மாறிவருகிறது. பொதுப் பணித்துறை நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் உள்ளிட்ட அனைத்து அரசு நிர்வாகமும் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் எதிராகவே உள்ளன. குடிக்க நீர் இல்லாமல் சாக்கடை நீரை குடிப்பதற்கும் விவசாயத்திற்கும் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மாசுபடுகிறது. இதற்கு எதிராக சங்கத்தின் சார்பில் நாங்கள் பல போராட்டங்களை நடத்தியும் இருக்கிறோம். அரசியல் கட்சிகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம். முதலாளிகளுக்கு சேவை செய்யும் இக்கட்சிகளை விரட்டுவோம்” என்று ஆதங்கத்துடன் பேசினார்.

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் தோழர் சண்முகசுந்தரம், “காவிரியில் விவசாயம் செய்து வரும் டெல்டா மாவட்டங்கள் இன்று அதற்கான வாய்ப்புகள் இல்லாமல் குறைந்த அளவிலேயே விவாசயம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் விவசாய சங்கங்கள் சார்பில் பல போராட்டங்கள் நடத்தியுள்ளோம். மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும் வேலைகளை செய்து வருகிறது. கர்நாடக அரசு பல கம்பெனிகளுக்கு காவிரி நீரை தருகிறது. ஆனால் தமிழகத்திற்கு தண்ணீர் தருவதற்கு மட்டும் பிரச்சினை செய்து வருவது நாடகமே. இவற்றையெல்லாம் சரிசெய்யாமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது. எனவே காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் வரை, தொடர்ந்து போராட வேண்டும்” என்று கூறினார்.

karur-meeting-water-bodies-protestion-03ஆதித்தமிழர் பேரவையின் கரூர் மாவட்ட செயலாளர் இரா.முல்லையரசு, “காவிரி பிரச்சனையை எப்பொழுது மக்கள் அதிகாரம் கையில் எடுத்ததோ, அப்பொழுதே இந்த அரசின் குலை நடுங்க ஆரம்பித்துவிட்டது. ஆமாம் தோழர்களே மக்கள் அதிகாரம் ஒரு பிரச்சினையில் தலையிட்டால் முடிவு காணும்வரை பின்வாங்க மாட்டார்கள் என்று எங்களுக்கும் தெரியும், அரசு நிர்வாகத்திற்கும் தெரியும். மக்கள் அதிகாரம் சுவரொட்டி ஒட்டினாலே அடுத்து என்ன செய்வது என்று தூங்காமல் கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு தனது பணியை செய்கின்றனர் காவல் துறையினர். அதனால்தான் கடந்த வாரம் சுவரொட்டி ஒட்டிய தோழர் சக்திவேல், விக்னேஷ்வரன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தது காவல் துறை. இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாது மக்கள் அதிகாரம் என்பது அவர்களுக்கும் தெரியும். இன்று தமிழகத்தில் 2 மணிநேரம் டாஸ்மாக் கடையின் வேலை நேரம் குறைக்கப்பட்டதற்கு முழுமையாக காரணம் மக்கள் அதிகாரம்தான் என பெருமையாக கூறுகிறேன். மக்கள் அதிகாரம் பேராட்டம் நடத்தி ஆதித்தமிழர் பேரவை எப்பொழுதும் துணைநிற்கும்” என்று கூறி தனது விளக்கவுரையை நிறைவு செய்தார்.

மக்கள் அதிகாரம் கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆனந்தராஜ், “காவிரி பிரச்சினையில் தேசிய கட்சிகள் மாநிலத்திற்கு ஒரு நிலைப்பாட்டை முன்வைக்கின்றன. இயற்கை வளங்களை அழித்தும், காடு மலைகளை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்த்துவிட்டு, முதலாளிகளுக்கு எப்படி இயற்கை வளங்களை அள்ளித் தரலாம் என்று இந்த அரசு திட்டம் தீட்டுகிறதே தவிர மக்களின் உயிராதாரமான பிரச்சனை என்ன? அதனை எவ்வாறு சரி செய்யலாம் என்று எண்ணாமல், அதைப்பற்றி அக்கறை கொள்ளாத யோசிக்காத அரசு நிச்சயமாக மக்களுக்காக அரசகாக இருக்க முடியாது” என்று பல சான்றுகளுடன் விளக்கி பேசினார்.

கரூர் மக்கள் அதிகாரம் தோழர் இராமசாமி, “டெல்டா பகுதிகளில் பெரும்பாலான விவசாய நிலங்கள் பொட்டல் காடுகளாகவே காட்சியளிக்கிறது. கரூர் அருகில்உள்ள வாங்கல், தளவாபாளையம், வேலாயுதம்பாளையம் போன்ற பகுதிகளில் இன்று கோரை பயிரிட்டு விவசாயம் செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். வெறும் 150 ஆண்டுகளே விவசாயம் செய்து வருகிறது கர்நாடக அரசு. ஆனால் தமிழகமோ 1000 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி நீரில் விவசாயம் செய்து வருகிறது. காவிரி நீர் விவசாய நிலங்களை சென்றடைவதற்குள் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மக்களை ஆள்வதற்கு இந்த அரசு தகுதி இழந்த நிலையில், மக்களே அதிகாரம் படைத்தவர்களாக களம் இறங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது” என்றுகூறி தனது உரையை நிறைவு செய்தார்.

சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரம் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன், “மக்கள் தேவை என்ன என்பதை புரிந்துகொள்ளாத ஒரு அரசு நிச்சயமாக அது மக்களுக்கானதாக இருக்க முடியாது. காவிரி நீரில் தமிழகத்திற்கு உரிமை உள்ளது என்று வரலாற்று ஆதாரங்கள் இருந்தும், தண்ணீரை பிச்சை போடுவது போல கர்நாடக அரசு செய்வதும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என அரசியல் லாபத்திற்காக தமிழக மக்களுக்கு ஓரவஞ்சனை செய்கிறது மத்தியில் ஆளும் மோடி அரசு. அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் உச்சநீதிமன்றம், இவை அனைத்துமே இன்று மக்களுக்கு எதிராக நிற்கின்றது என்பதை நம் கண்முன்னே பார்க்கிறோம். இயற்கை வளங்கள், காடுகள், மலைகள், ஆறுகள், நதிகள் என்று சர்வதேச அளவில் பிரித்து கையாள பல விதிகள் இருந்தும், அவற்றையெல்லாம் சட்டவிரோதமாக, இயற்கை விதிகளுக்கு முரணாக இந்த அரசாங்கம் கார்ப்பரேட் முதலாளிகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு கோடான கோடி உழைக்கும் மக்களின் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளை செய்து வருகின்றது. வெளிநாடுகளில் நீதிமன்றங்களில் மக்கள் நலனுக்கு எதிராக இருக்கும் நீதிமன்ற தீர்ப்புகளை, மக்களே அதிகாரத்தை நிறுவி நீதிமன்றங்களின் தீர்ப்புகளை செல்லா காசாக்கி இருக்கிறார்கள். ஆகவே மக்களை திறம்பட ஆளுகின்றோம் என்று இந்த அரசு, நீதிமன்றம், காவல்துறை, மற்றும் அனைத்து அரசு நிர்வாகமும் எப்படி மக்களுக்கு எதிராக உள்ளது என்பது மட்டுமல்லாமல் முழுமையாக மக்களுக்கு எதிராக வேலையை செய்துகொண்டிருக்கிறது. மக்களே அதிகாரத்தை கைப்பற்றி இந்த அரசை தூக்கி வீசும் காலம் வெகு தொலைவில் இல்லை” என்று சிறப்புரையாற்றினார்.

இறுதியாக புரட்சிகர மாணவ இளைஞர் முன்னணியின் மாவட்ட செயலாளர் தோழர் பாக்கியராஜ் அரங்க கூட்டத்தில் பேசிய அனைத்து பேச்சாளர்களுக்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட மாற்றுக்கட்சி நண்பர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். ம.க.இ.க.வின் புரட்சிகர பாடல்களோடு கூட்டம் நிறைவு செய்யப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மக்கள் அதிகாரம் கோவை மண்டலம் சார்பாக நடந்த மேற்கண்ட அரங்க கூட்டத்தில் கோவை, கரூர், உடுமலைப்பேட்டை, கோத்தகிரி உள்ளிட்ட பகுதி தோழர்கள் கலந்துகொண்டனர்.

தகவல்:
மக்கள் அதிகாரம், கரூர்
செல்: 9791301097

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க